சந்திரன்,பானுமதி மற்றும் வில்சன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 11, 2013
பார்வையிட்டோர்: 9,746 
 

சந்திரன்-

சிறையினில் யாருடனும் ஒட்டாமலே இருந்தான் சந்திரன். அவன் நினைவில் பத்திலக்க எண் ஒன்றினைத் தவிர வேறு எதுவுமே இல்லாமல் போனது. அறையில் இருந்த சக கைதி ஒருவன் வில்சனைப் போலவே ஜாடையில் இருந்ததில் அவனிடம் மட்டும் எப்போதாவது பேசுவான். அவனிடம் பேசும் பேச்சில் வில்சனின் ஞாபகங்கள் மட்டுமே இருக்கும். சிறையில் கொஞ்சம் செல்வாக்கான கைதி ஒருவனிடம் இருந்த செல்போனில் ஒருமுறை வில்சன் எண்ணுக்கு முயற்சித்ததில் ‘ தாங்கள் அழைக்கும் நபர் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்‘ என்ற பதில் வந்தது. நிமிர்ந்து பார்த்த சந்திரன் கண்களில் சிறையின் மதில்சுவர் தாண்டி வானம் மட்டுமே இருந்தது.சுதந்திர தினம், காந்தி ஜெயந்தியின் போதெல்லாம் பரோலில் வெளிவரும் சந்திரன் தன் வீட்டுக்குக் கூடப் போகாமல் வில்சனைப் பார்க்கச் செல்வான். ஒரே ஒரு கேள்விதான் அவனிடம் இருந்தது. சிறையில் இருந்த இந்த இரண்டு வருடங்களில் ஏன் ஒருமுறை கூட தன்னைப் பார்க்க வரவில்லை. வில்சன் தனது லாட்ஜ் சூபர்வைசர் வேலையிலிருந்து விலகியிருந்தான். எங்கிருக்கிறான் என்றேத் தெரியவில்லை. கேள்வியின் வடிவம் சந்திரனின் மனதில் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போனது. அடுத்த மூன்று வருடங்கள் சிறையில் நரக வேதனை அனுபவித்தான் சந்திரன். உறக்கம் என்பது கிஞ்சித்தும் இல்லாமல் போயிற்று. கண்களை மூடினால் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் வந்து முத்தமிட்டான் வில்சன். கத்தரிக் கோலினால் சந்திரனை இரண்டாய்ப் பிளந்தாள் பானுமதி. நள்ளிரவில் எழுந்து அழுது கொண்டிருக்கும் சந்திரனை அணைத்து ஆறுதல் சொன்ன சக கைதியின் மூச்சில் நெருப்பு இருந்தது. சந்திரன் எரிந்து கொண்டேயிருந்தான்.

ஐந்தே வருடங்களில் தண்டனைக் காலம் முடிந்து விடுதலையானான் சந்திரன் நன்னடத்தைக் காரணமாக. ஊருக்கு வந்தவன் தன் வீட்டுக்கு சென்றான். இத்தனை வருடங்களாக பூட்டித்தான் கிடந்தது பானுமதியுடன் அவன் இருந்த வீடு. பக்கத்து தெருவில் வசித்து வந்த அப்பா,அம்மா,தம்பியுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு தன் வீட்டு சாவியினை வாங்கி வந்து கதவு திறந்து உள்ளே நுழைந்தான். சாவு நிகழ்ந்த வீடு என்பதால் அந்த வீட்டுக்கு வேறு யாரும் குடிவரவில்லை. இருந்தாலும் வீடு சுத்தமாகத்தான் இருந்தது. அறையினுள் வந்து அமர்ந்தான். கண்களை மூடினான். பானுமதியின் அலறல் கேட்டது. இனி எல்லா இரவுகளிலும் தன்னிடம் கேட்கும் அவள் அலறலின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது? ஏன் கொன்றாய் என்னை?

இந்த கேள்விக்கு பதில் தெரிந்த ஒரே நபர் வில்சன்தான். அவனைப் பற்றிய நினைவுகளில் சந்திரனிடம் மிச்சமிருப்பது அந்த பத்திலக்க எண் மட்டும்தான். கையிலிருந்த செல்போனில் வில்சனின் என்னை அழுத்தினான். எதிர்முனையில் ரிங் போனது. நான்கு ரிங்குகளுக்குப் பிறகு எதிர்முனை எடுக்கப்பட்டது. ‘ ஹல்லோ‘ என்றது பெண்குரல். ‘ நான் சந்திரன் பேசுறேன். வில்சன் இருக்கானா?’ என்றான். ‘ நான் பானுமதி பேசுறேன். உங்களுக்கு யார் வேணும்?. அன்றிலிருந்து பத்தாம்நாள் நள்ளிரவில் தன் வீட்டின் தனியறையில் துளி அலறலின்றி பானுமதியுடன் எரிந்து கொண்டிருந்தான் சந்திரன். அவன் பாக்கெட்டிலிருந்த செல்போன் விடாமல் அடித்துக் கொண்டிருந்தது.

பானுமதி-

வயது 25. படிப்பு பி.காம். ஒல்லியான உடல்வாகு. சிவப்பு நிறம். பெரிய விழிகள்.கருகருவென்ற நீளமான தலைமுடி. பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டதில் சந்திரனுக்கு இன்று காலை மனைவியானவள். பாயினில் படுத்தபடி சந்திரன் காத்திருக்க 11 மணி போல் பால் கொண்டு வந்த பானுமதி காலையிலிருந்து பூட்டியிருந்த ஒப்பனைகளை உதிர்த்திருந்தாள். சாதாரண காட்டன் புடவையில் எளிமையான அழகுடன் இருந்தவள் அங்கிருந்த விளக்குக்கு நிறைய எண்ணெய் ஊற்றினாள். திரி பிரகாசித்தது. மோகமாய் தன் மேல் கவிழ்ந்த சந்திரனை பானுமதி இறுக்கியதில் கண்ணாடி வளையல்கள் உடைந்தன. மூச்சிரைக்க பெரும் வியர்வையுடன் நிமிர்ந்த சந்திரனின் முகத்தில் புதிரான குழப்பத்தினை அணிந்திருந்தான். திரியின் வெளிச்சத்துக்கு கண்கள் சுருக்கியவன் ‘ வெளக்கு எதுக்கு…அணைச்சிடலாமே…’ என்றான் மெல்லிய குரலில். ‘ இல்லைங்க…அத்தைதான் சொன்னாங்க. விடியிற வரைக்கும் திரி அணையாம பாத்துக்கன்னு…அதனாலதான்…’ என்ற பானுமதியின் கண்கள் சந்திரனின் கண்களை உற்றுப் பார்த்தன. ‘ கொஞ்ச தூரம் தள்ளி வையி…தலமாட்ல வெளிச்சம் . எரிச்சலா இருக்கு.’ என்ற சந்திரனின் முகம் காலையில் இருந்தது போல் இல்லாததை வியப்பாய் கவனித்த பானுமதியின் மனதில் ஆச்சரியம் கேள்வியாய் மாறிப் படர்ந்தது. மறுமுறை சந்திரன் பானுமதியின் நெற்றியில் முத்தமிட்டபோது செல்போன் ரிங்கியது. எடுத்து உடனே கட் செய்தான். ‘ யாருங்க இந்நேரத்துல‘ என்ற பானுமதிக்கு பதில் சொல்லாத சந்திரன் பாயில் சம்மணமிட்டு அமர்ந்த நொடியில் மெசஜ் ஒலி. திரை பார்த்து படித்து உடனே டெலிட் செய்தான். இரு கைகளாலும் தலையை பிடித்துக் கொண்டான்.பானுமதியின் கண்களில் விளக்குத்திரி சுடர்விட்டு பிரகாசித்தபோது சாம்பல் நிறத்துக்கு மாறியிருந்த இரவு தன் கொட்டாவி விலக்கி சோம்பல் முறித்தது.

‘ உங்க பொறந்த நாளுங்கிறதால நேத்து மதியம் வடை பாயாசம் செஞ்சேன். நேத்து முழுக்க நீங்க வரல. நல்ல நாளும் அதுவுமா வீட்ல இருக்கக் கூடாதா?’ என்றாள் பானுமதி தட்டில் சாதம் போட்டபடி. சூடான சோற்றிலிருந்து புகை எழுந்து சந்திரன் முகத்தில் கேள்விகளை எழுதியது. சோற்றினுள் கைவிட்டு அளைந்தவாறே பதில் சொன்னான் சந்திரன். ‘ எப்பவும் பொறந்தநாளைக்கு வேளாங்கண்ணி கோயிலுக்குப் போயிடறது. நேத்து புல்லா அங்கதான் இருந்தேன்.’ என்ற சந்திரனிடம் ‘ நான் இங்க பக்கத்துல விநாயகர் கோயில்லதான் உங்க பேர்ல அர்ச்சனை பண்ணிட்டு வந்தேன்‘ என்ற பானுமதியின் கண்களை எதிர்கொள்ள முடியாமல் திணறினான் சந்திரன்.

பானுமதிக்கு காலையிலிருந்தே மயக்கமாயிருந்தது. சாப்பிட்ட இட்லியை அடுத்த அரைமணி நேரத்தில் வாயில் எடுத்தாள். காலண்டர் தேதி பார்த்து கணக்கு போட்டாள். மாதவிலக்கு பத்துநாள் தள்ளி போயிருந்தது. மதியத்துக்கு மேல் மளிகைக் கடையை மூடிவிட்டு எங்கோ புறப்படும் அவசரத்தில் இருந்த சந்திரனிடம் தயங்கி தயங்கிச் சொன்னாள். சந்திரனுக்கு உற்சாகம் ஒரு மின்னல் கீற்றென படிந்து விலகியது. ‘ சந்தோசமான விஷயத்தை சாதாரணமா சொல்றே‘ என்றபடி சிரித்த சந்திரனின் குரலில் குதூகலம். மீரா மகப்பேறு மருத்துவர் என்று பலகை மாட்டியிருந்த கிளினிக் உள்ளே கூட்டம். விதவிதமான வயிறுகளுடன் தாய்மை நடமாடிக்கொண்டிருக்க சந்திரனும் பானுமதியும் காத்திருந்தனர். செல்போன் மணி அடித்தது. திரையினை பார்த்து கட் செய்தான். ‘ ஏன்…பேசுங்களேன்…’ என்ற பானுமதியிடம் ‘ ப்ச்…போர்…’ என்ற சந்திரனின் குரலில் செயற்கை அலட்சியமிருந்தது. கிளினிக்கை விட்டு வெளியேறியபோது ‘ இன்னைக்கு வீட்ல டிபன் பண்ண வேணாம். ஹோட்டல்ல சாப்பிடலாம்‘ என்றான் சந்திரன். பானுமதியின் நெஞ்சுக்குள் ஐஸ்கிரீம் பரவியது. திருமணமாகி இந்த ஒரு வருடத்தில் முதன்முறையாய் கணவனுடன் ஒன்றாய் ஓட்டலில் சாப்பிடப் போகிறாள். சர்வரிடம் ஆர்டர் சொல்லும்போது மறுபடியும் ரிங்கியது. கட். ஆட்டோவில் வீடு திரும்பிய அன்று இரவு பானுமதியை அணைத்தபடி உறங்கிப் போனான் சந்திரன். சந்திரனின் கையை தன் வயிற்றின் மேல் வைத்தபடி நீண்டநேரம் தூங்காமல் விழித்துக் கிடந்தாள் மனம் நிறைந்திருந்த பானுமதி. சந்திரனுடைய செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

அன்றிலிருந்து பத்து மாதங்கள் உள்ளங்கையில் வைத்து தாங்கினான் பானுமதியை. மாதாமாதம் டாக்டர் செக்கப், வேளா வேளைக்கு மருந்துகள், பழங்கள், குங்குமப் பூ, என்று சந்திரனின் பார்வையில் மூச்சுத் திணறிப் போனாள் பானுமதி. தான் அனீமிக்காக இருக்கிறோம் என்பதாலே கருவுற்ற செய்தியறிந்த நாளிலிருந்தே உடல் ரீதியாகவும் தன்னை தொந்தரவு செய்யாத கணவனின் பெருந்தன்மையினை எண்ணி எண்ணி பூரித்துப் போனாள்.

குழந்தை தொட்டிலில் தூங்கிக் கொண்டிருக்க கட்டிலில் படுத்திருந்த பானுமதிக்கு தூக்கம் வரவில்லை. குழந்தை பிறந்ததிலிருந்தே தன்னைவிட்டு உடல் ரீதியாக விலகி இருக்கிறான் கணவன் என்று அறிந்து தூக்கம் தொலைத்தாள் பானுமதி. எட்டு மணிக்கெல்லாம் மளிகைக் கடையினை மூடிவிட்டு வெளியேறுபவனின் இரவு சாப்பாடும் இப்போதெல்லாம் வீட்டிலில்லை. மிகத் தாமதமாகத்தான் கட்டிலுக்கு வருகிறான். நடு இரவில் வந்து படுக்கும் கணவனிடம் சிகரெட் மிச்சம். ஆச்சர்யமாயிருந்தது பானுமதிக்கு. தன் கணவன் சிகரெட் பிடிப்பானா? குழந்தை பிறப்பதற்கு முன்பெல்லாம் இப்படியில்லையே. கருவுற்றிருந்த காலங்களில் தன் கண்ணுக்குள் வைத்துப் பாதுகாத்த கணவனா இப்படி தன்னை விட்டு விலகிச் செல்வது. ஆண்களின் உளவியலே இதுதானா. ஒரு குழந்தை பெற்றவுடனே அவன் மனைவி அவனுக்கு அலுத்துவிடுவாளா.பிரச்சனையின் வேர் வேறு எங்கோ எனக் குழப்பமுற்ற பானுமதி குழந்தையின் சூட்டில் பெருகிய தாய்மையில் தன்னைக் கரைத்துக் கொண்டாள்.

ஓர் இரவு சந்திரனிடம் தன்னை விலக்க என்ன காரணமென்று மிக நிதானமாகக் கேட்டபானுமதியை நிமிர்ந்து பார்க்காமலே பதில் சொன்னான் சந்திரன். ‘ குழந்தைக்கு பால் குடுத்துக்கிட்டிருக்க…உனக்கு எதுக்கு சிரமம்னுதான் ராத்திரி வெளியில சாப்புடுறேன்…’ பலவீனமாய் உதிர்ந்தன வார்த்தைகள். பானுமதி சிரித்தாள். ‘ நான் ஒங்க பொண்டாட்டிங்க…அது ஞாபகம் இருக்குல்ல….’ அடிபட்ட பார்வையுடன் நிமிர்ந்து பார்த்தான் சந்திரன். கண்களில் நடுக்கம் தொடங்கியிருந்தது. காட்சி எதுவும் மாறவில்லை. அதே போன்ற இரவுகள். நாட்கள் வாரங்களாகி மாதங்களாக பானுமதி காத்திருந்தாள்.

அன்று இரவு சந்திரனிடம் அந்தப் புகைப்படத்தை நீட்டினாள். கல்யாண மாலையுடன் கேமிராவைப் பார்த்து பெரிதாய் சிரித்துக் கொண்டிருந்த சந்திரனின் அருகில் வில்சன் நின்றிருந்தான். போட்டோவில் சந்திரனை ஒட்டியிருந்தப் பகுதி கத்திரிக்கோலால் கத்தரிக்கப்பட்டிருந்தது நன்றாகவேத் தெரிந்தது. சட்டென்று சிரித்தான் சந்திரன். ‘ இதுவா…தனியா ஒரு பிரின்ட் போட்டு வில்சனுக்குத் தரணும்னு பீரோவுல வச்சிருந்தேன். ஒன் சைடு மட்டும் கரையான் அரிச்சிடுச்சி…போட்டோ முழுக்க வந்திடக் கூடாதுன்னு கொஞ்சம் கட் பண்ணிட்டேன். வேறதான் பிரின்ட் போடணும்‘ பேசிக்கொண்டே போட்டோவை வாங்கி பீரோவில் வைத்தான். நிராதரவாய் நின்றிருந்த பானுமதிக்குள்ளிருந்த சொற்கள் தன் ஊமை நாவினை மடக்கி உள்ளே செருகின. பீரோவில் எந்த இடத்திலும் இல்லாத கரையான் அந்தக் குறிப்பிட்ட போட்டோவில் மட்டும் வந்தது எப்படி? ஏன் ரகசியமாய் பீரோவின் அடித்தட்டில் சந்திரனின் உடைக்கு அடியில் அந்தப் புகைப்படம் மறைத்து வைக்கப்படவேண்டும்? மறுநாள் அந்தப் புகைப்படம் காணாமல் போனது எப்படி? கரையான்கள் பானுமதியின் மனதில். ஒரே வீடு . ஒரே படுக்கை. ஆனாலும் விருந்தாளி போல் இருந்தது சந்திரனின் இயக்கம். கணவனின் வாசனைக்கு ஏங்கினாள் பானுமதி.

கனவு போல் இருந்தது. கண்விழித்த பானுமதி கடிகாரம் பார்த்தாள் விடிய இன்னும் நேரமிருந்தது. தாகமெடுத்தது. அருகில் சந்திரனைக் காணவில்லை. எழுந்து அறையிலிருந்து வெளியே வர சந்திரன் வீட்டுக்குள் நுழைவது தெரிந்தது. அறையில் நுழைந்து கட்டிலில் அமர்ந்தவன் எதுவும் பேசாமல் படுத்தான். ‘ இந்நேரத்துக்கு எங்க போயிட்டு வர்றீங்க?’ என்ற பானுமதியிடம் கண்களைத் திறக்காமலே பதில் சொன்னான். ‘ போன் வந்தது.போய் பேசிட்டு வர்றேன்…’ ‘ நடுராத்திரி ரெண்டு மணிக்கு போன் வந்தா வெளியில போய் பேசிட்டு வர்ற அளவுக்கு பிரெண்டு….கொஞ்ச நாளா எதுவுமே சரியில்லைங்க…கெட்ட கெட்டக் கனவா வருது. ஏதோ கடமைக்கு வாழுற மாதிரியிருக்கு…நம்ம ரெண்டுபேருக்கு நடுவுல யாரோ இருக்குற மாதிரி தோணுது…என்ன பிரச்சனைன்னு தெரியல.’ தொண்டையடைத்தது பானுமதிக்கு. நேருக்கு நேராக நிமிர்ந்து பார்த்தான் சந்திரன் ‘ பிரெண்டு போன் பண்ணினான். போய் பேசிட்டு வந்தது தப்பா?’ சொற்களில் கோபம் கலந்திருந்தன. ‘ பிரெண்டு…பிரெண்டு… பிரெண்டு… எப்பபார்த்தாலும் பிரெண்டுன்னா என்ன ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க…ஒங்க பிரெண்டையே பண்ணிக்க வேண்டியதுதானே…’ வெடித்தாள் பானுமதி. இரவு விளக்கின் மெலிதான நீலத்தில் வியர்வை ஊறியது சந்திரனின் நெற்றியில். ‘ நான் பண்ணின தப்பு அதுதாண்டி. கொஞ்சம் படிச்சவளாப் பார்த்து கட்டுனேன் பாரு…அடங்காமத்தான் திரிவே…என்னை கேள்விமேல கேள்வி கேக்காத…பொம்பளையா அடக்க ஒடுக்கமா இரு…’ தடுமாறி வெளிவந்தன வேகமாய் படபடத்தவனின் வார்த்தைகள். உதடுகள் துடித்தன பானுமதிக்கு. ‘ மொதல்ல நீங்க ஆம்பளையா நடக்கப் பாருங்க…’ முதுகுத்தண்டு அதிர நிமிர்ந்தான் சந்திரன். அசந்தர்ப்பமாய் செல்போன் அழைக்க எழுந்து அறையை விட்டு வெளியேறினான்.

அன்றிலிருந்து மூன்றுநாள் சந்திரன் வீட்டுக்கே வரவில்லை. சமைக்காமல் கண்ணீருடனே கிடந்தாள் பானுமதி. பக்கத்து தெருவிலிருந்த சந்திரனின் அம்மா ஒருமுறை வீட்டுக்கு வந்து போனார். சந்திரனுடனான தனது பிரச்சனையைப் பற்றி பானுமதி எதுவும் சொல்லவில்லை. நான்காம் நாள் வீட்டுக்குள் நுழைந்தவுடனே பானுமதி கத்தினாள். ‘ ஒங்க மனசுல என்ன நெனச்சிக்கிட்டு இருக்கீங்க…இதென்ன சத்திரமா வீடா…ஒங்க இஷ்டத்துக்கு வர்றீங்க போறீங்க…என்கூட வாழ விருப்பம் இருக்கா இல்லையா…நான் ஒரு மனுஷியா ஒங்க கண்ணுக்குப் படலியா…’ கண்ணீர் சிதறக் கேட்டவளிடம் மிக நிதானமாய் செல்போனை ஆராய்ந்தபடி பதில் சொன்னான்.’ உள்ள நுழைஞ்சவுடனே ஏன் பிசாசு மாதிரி கத்துற…மூணு நாள் நிம்மதியா இருந்தேன் எந்தத் தொந்தரவும் இல்லாம…’ ‘ அப்போ நான் இருக்கிறதுதான் ஒங்களுக்குத் தொல்லையா இருக்கு…’ அவனிடமிருந்து பானுமதி விலகிய பத்தாவது நிமிடம் அந்த அலறல் கேட்டது.
சமையலறையிலிருந்து எரிந்தபடி வந்து சந்திரனைக் கட்டிப்பிடித்தாள் பானுமதி. சுள்ளென்று தீ உறைக்க வேகமாய் பானுமதியை உதறினான். வீட்டுச் சுவரெங்கும் எதிரொலித்து மோதியது பானுமதியின் வலி நிறைந்த கதறல். தரையில் விரித்திருந்த சாக்கினை எடுத்து பானுமதியின் மீது விசிறியடித்தான். தீ அடங்காமல் எரிய…சந்திரன் ஆம்புலன்சுக்குப் போன் செய்து வீட்டுக்கு வேன் வருவதற்குள் முக்கால்வாசி எரிந்து முடித்திருந்தாள் பானுமதி.

ரப்பர் ஷீட்டில் படுக்கவைக்கப்பட்டிருந்த பானுமதியின் உடம்பெங்கும் தீ தன் ஆவேச நடனத்தினை அரங்கேற்றியிருந்தது. தீ அணைக்க முயற்சி செய்த சந்திரன் உடம்பிலும் அங்கங்கே காயங்கள். முதல் உதவி எடுத்திருந்தான். உயிருக்குப் போராடும் பானுமதியை ஒருமுறை சென்று பார்த்தவன்தான். புருவங்கள் எரிந்து இமைகள் உருகி வழிந்திருக்க வெறித்த விழியில் பொசுங்கிய கேள்விகள் சந்திரனைச் சாகடித்தன. போலிசிடம் மரண வாக்குமூலத்தில் தெள்ளத் தெளிவாக சொல்லிவிட்டு இறந்து போனால் பானுமதி. சந்திரன் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் நிறுத்தப்பட்டான். அவன் சார்பாக வாதாட வக்கீல் ஏற்பாடு செய்திருந்தும் உயிர்போகும் நிலையில் ஒருவர் கூறும் வாக்குமூலத்தில் இருக்கும் உண்மையின் அடிப்படையில் நடந்த வழக்கின் முடிவில் சந்திரனுக்கு ஏழுவருடம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. தீர்ப்பு வழங்கப்பட்ட அன்று கையில் விலங்குடன் வேனில் ஏறுவதற்கு முன் சந்திரனின் கண்கள் நீதிமன்ற வளாகம் முழுதும் வில்சனைத் தேடி ஓய்ந்தன.

வில்சன்-

கெட்டிமேளம் முழங்க பானுமதியின் கழுத்தில் சந்திரன் தாலி கட்டியதை நிறைந்த திருமண மண்டபத்தின் கடைசி இருக்கையில் அமர்ந்தவாறு பார்த்துக் கொண்டிருந்தான் வில்சன். கையில் ஒரு கிப்ட் பார்சல் இருந்தது. மணமக்களிடம் கவர் தந்து, பரிசு கொடுத்து, கை குலுக்கி அனைவரும் விடை பெற்றுக் கொண்டிருக்க மேடையேறிய வில்சனைப் பார்த்து பெரிதாய் சிரித்தான் சந்திரன். இதழின் கடைக்கோடியில் சிறு புன்னகை மட்டும் உதிர்த்த வில்சன் இருவரிடமும் பொதுவாய் பார்சலை நீட்டினான். பெற்றுக்கொண்டு போட்டோவுக்கு போஸ் தர தன் அருகில் வில்சனை நிற்கவைத்த சந்திரன் போட்டோகிராபரை பார்த்து மிக சந்தோசமாய் சிரித்துக் கொண்டிருந்தான். ‘கிளிக்‘

கரையோரமாய் ஒதுங்கியிருந்த கட்டுமரம் ஒன்றில் அமர்ந்திருந்தான் சந்திரன். அவன் மடியில் தலைவைத்து படுத்திருந்தான் வில்சன். கட்டுமரமெங்கும் விரவியிருந்த மீன் கவுச்சியுடன் கடல்காற்று விளையாடிக் கொண்டிருந்தது. ‘ வீட்டுக்குப் போகவே புடிக்கலடா…எதுக்குடா கல்யாணம் பண்ணினோம்னு இருக்கு…எரிச்சலா வருது…பக்கத்துல படுத்தாலே அவ்ளோ கொதிப்பா இருக்கு…ஏண்டா சாப்புடுறோம், ஏண்டா படுக்குறோம்னு இருக்கு…சுத்தமா தூக்கமே கெடையாது இப்பல்லாம். விடிய விடிய முழிச்சிக்கிட்டு இருக்க வேண்டியதாயிருக்கு….ஏண்டா இப்பிடி… எப்படா முடியும் இதெல்லாம்…’ சந்திரனின் குரலில் இயலாமை பெருகி வழிய. ‘ முத்தம் குடுறா‘ என்றான் வில்சன் நேரான பார்வையில். சந்திரனின் விரல்கள் வில்சனின் தலையைக் கோதியவண்ணமிருக்க அலையின் மீதான நிலவின் நிழல் சிறு சலனமுமின்றி உறைந்து நின்றிருந்தது.

மிக வியர்வையுடன் நிமிர்ந்தான் சந்திரன். பானுமதி களைத்திருந்தாள். அவளை விட்டு விலகி அறையிலிருந்து வெளியேறினான். வாசல் கதவைத் திறந்து தெருவில் இறங்க சோடியம் வேபர் வெளிச்சத்தில் படுத்திருந்த தெரு நாய் ஒன்று விருட்டென்று எழுந்து ஓடியது. செல்போன் எடுத்து பெயர் தேடி அழுத்தினான். எதிர்முனையில் சுவிட்ச் ஆப் என்று பதில் வந்தது. தெருவில் நடந்து கொண்டிருந்தான் சந்திரன். செகண்ட் ஷோ சினிமா முடிந்து மக்கள் சலசலத்து பேசியபடி திரும்பிக் கொண்டிருந்தனர். பஸ் ஸ்டாண்ட் வந்தான். ஒரு கதவு மட்டும் திறந்திருந்த டீக்கடையில் டீக்குடித்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த பயணிகளைக் கவனித்தவாறே அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான். மறுபடியும் செல்போன் எடுத்து பெயர் தேடி அழுத்த சுவிட்ச் ஆப்.நீளப் பெருமூச்சுவிட்டவன் கண்களில் கண்ணீர் கசிய துடைத்துக்கொண்டான். நிசிக்காற்றில் சன்னமான குளிர் ஊசியாய் இறங்கிக் கொண்டிருந்தது. விடியற்காலையில் எழுந்து குளித்து ஈரக்கூந்தலில் சுற்றிய டவலுடன் வீட்டுவாசலில் சாணம் கரைத்து தெளித்துக்கொண்டிருந்த பானுமதி, சிவந்த கண்களுடன் வீட்டுக்குள் நுழைந்த தன் கணவனை புருவ முடிச்சோடு பார்த்தாள்.

அறையெங்கும் வெப்ப அலையடித்தது. சுவரில் வில்சனின் முகம் மோதி மோதித் திரும்பிக் கொண்டிருந்தது. இந்த இரவுக்குள் இது நிகழாவிட்டால் விடிகாலையில் நாம் இறந்துவிடுவோம் என்பதுபோல் இயங்கிக்கொண்டிருந்தான் சந்திரன். நாசித்துளைகளில் வில்சனின் வாசனையைத் தேக்கி வைத்திருந்தான்.வில்சனின் சிரிப்பு மின்னி மின்னி கண்களில் இறங்கிக் கொண்டிருக்க இறுகியிருந்த விரல்களின் நுனிகளில் வில்சனின் மார்பு ரோமங்கள் படம் வரைந்து கொண்டிருந்தன. கண்கள் செருகி உதடு கடித்திருந்த பானுமதி தன்மேல் கவிழ்ந்து இயங்கிக் கொண்டிருந்த கணவனின் கண்கள் அத்தனை இருட்டிலும் அவ்வளவு இறுக்கமாய் மூடியிருந்ததை கவனியாமல் கிடந்தாள்.

அவர்கள் அமர்ந்திருந்த டேபிளுக்கு மட்டும் வெளிச்சம் தெரியும்படி மிகத் தாழ்வாக ஒரு லைட் தொங்கவிடப்பட்டிருந்தது. ஆழமாக புகையை உள் இழுத்தான் வில்சன். சந்திரனின் முகத்தில் ஊத புகையினை சுவாசித்தவன் வெடித்து சிரித்தான். மூன்றாவது பியர் பாட்டிலைக் காலிசெய்து முடித்திருந்தான் வில்சன். டேபிள் எங்கும் நிறைந்திருந்த பக்கத் தீனிகளைக் கொறித்துக் கொண்டிருந்த சந்திரனின் முகத்தில் சந்தோசம் ஊறியிருந்தது. லேசான தள்ளாட்டத்துடன் எழுந்த வில்சன் சந்திரனின் தோளில் கை வைத்து கன்னத்தில் முத்தமிட்டு ‘ சியர்ஸ் மை பர்த்டே பேபி‘ என்றான் குழறலாய். அன்றிரவு வில்சனின் அறையில் புத்தம் புதிதாய் சந்திரன் பிறந்தபோது அடிவயிற்றில் இரு கைகளையும் கோர்த்துக்கொண்டு சுருண்டு படுத்திருந்தாள் பானுமதி தன் படுக்கையில் விரிக்கப்பட்டிருந்த போர்வையின் ஒரு பகுதி கசங்காமல் இருந்ததைக் கவனித்துக் கொண்டே.

வில்சன் வேலை பார்க்கும் லாட்ஜில் உள்ள அறை ஒன்றின் கட்டிலில் படுத்திருந்தான் சந்திரன். அருகில் தலை குனிந்து இரு கைகளையும் கோர்த்தபடி வில்சன் அமர்ந்திருக்க, ‘ நேத்து ஒரு முக்கியமான இன்ஜெக்சன் போடணும்டா….அதுக்காகத்தான் போனோம். இல்லைன்னா நேத்தி வந்துருப்பேன்‘ என்றான் ஏக்கமான குரலில் சந்திரன். வில்சன் எதுவும் பேசாமல் மௌனமாய் சிகரெட்டைப் பற்றவைத்தான். படுத்திருந்த சந்திரன் எழுந்து மண்டியிட்டவாறே வந்து வில்சனை அணைத்துக் கொண்டான். ‘ நான் மாறல….நான் மாறனும்னா அதுக்கு நான் சாகனும்…புரிஞ்சிக்கடா…கொஞ்ச நாள் பொறுத்துக்கோ…’ அறையெங்கும் புகைப்பாம்புகள் நெளிந்து இணைந்து வளைந்து பிரிந்து கலைந்து கொண்டிருந்தன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *