கோயில் கொடை

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 24, 2013
பார்வையிட்டோர்: 11,146 
 

கதிரவன் தன் கண்களை விழித்துக் கொள்ளும் நேரம், கதிரேசனின் கைபேசி ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. தூக்கக் கலக்கத்தில் கதிரேசன் வேண்டா வெறுப்புடன் அழைப்பை ஏற்றான். கைபேசியில் அழைத்தது அக்காள் தெய்வநாயகிதான். தெய்வநாயகி கிராமத்து நடுநிலை பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறாள். கைபேசி அழைப்பை ஏற்ற தம்பியிடம், டேய் அப்பாவுக்கு ஒன்னை பார்க்கணுமாம்டா… ஒரு எட்டு செட்டிகுளத்துக்கு வந்துட்டு போப்பா என்றாள். என்ன விஷயம் என்ற கதிரேசனிடம், அப்பாவுக்கு ஒடம்புக்கு முடியலடா.. ஒன்னை பார்த்து கோயில் விஷயமா பேசணும்கிறார். எப்படிக்கா, உடனே வரமுடியும்ன்னு சொன்ன கதிரேசனிடம், அக்காள் கடிந்து கொள்ள ஒரு வழியாக, வார இறுதியில் வருவதாக உறுதி அளித்தான்.

கதிரேசன் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறான். மாத ஊதியம் 80000 ரூபாய். மனைவி லலிதா பட்ட மேற்படிப்பு படித்தவள். மென்பொருள் பொறியாளராக பணியாற்றுகிறாள். இரண்டு குழந்தைகள். மூத்தவன் அஜீஸ் ஆறாம் வகுப்பு. இளையவள் அமலா மூன்றாம் வகுப்பு. லலிதா, அப்பாவுக்கு முடியலையாம்.. நீயும் வர்றியா.. பார்த்துட்டு வந்துடலாம்.இரண்டு மாசத்துக்கு முன்னாடியும் உங்க அக்கா இதையேதான் சொன்னாங்க. நீங்க வேணா போய் பாருங்க என்றவள், கணவனின் பதிலை எதிர்பாராமல் குளியலறைக்குள் போய்விட்டாள்.

சனிக்கிழமை. அலுவலகத்தில் வாடிக்கையாளரை பார்க்கப் போவதாக சொல்லி விட்டு மதியமே கிளம்பி விட்டான். முன்னெல்லாம் சென்னையில இந்த அளவுக்கு போக்குவரத்து நெரிசல் கிடையாது. ஆனால் இப்ப, விடுமுறை நாட்களிலும் போக்குவரத்து நெரிசலுக்கு குறைச்சல் இல்லை. ஒரு வழியாக எழும்பூர் வந்து சேர்ந்தான். இது என்னடா கொடுமை, அரசுப்பேருந்து கோயம்பேடிலும், தனியார் பேருந்து எழும்பூரிலிருந்தும் போகுது என தன்னைத் தானே நொந்து கொண்டான். இந்த அரசாங்கங்கள்.. கொஞ்சம் கூட மக்கள் மன நிலையை புரிந்து செயல்படுதான்கிற கேள்வி அவனுக்குள் எழுந்தது.

கதிரேசன், செட்டிக் குளம் போகும் பேருந்தில் ஏறினான். பேருந்து, தாமரை காதலன் மலைகளுக்குள் புகும் நேரத்தில் கிளம்பியது.கதிரேசனுக்கு வயதுதான் நாற்பத்தி நாலு ஆகிறதே ஒழிய, எந்த பேருந்தில் ஏறினாலும் சன்னலோர இருக்கை கிடைத்தால் மட்டுமே சந்தோசப் படுவான். சில நேரங்களில் சில பேருந்துகளை சன்னல் இருக்கை இல்லைன்னா ஏறாமல் விட்ட அனுபவமும் உண்டு. சன்னல் இருக்கை வெறும் சாதாரண இடமல்ல. அது ஒரு மனிதனை, பேருந்தில் பயணம் செய்வதை மறந்து பல கனவுகளோடு பயணிக்க வைக்கிறது.

மெல்லிய பூங்காற்று முகத்தில் வருடியது .. கதிரேசனுக்கு , அப்பா கோயில் விசயமா பேசணும்னு சொன்னது, அவனுக்கு தன் பால்ய வயதுக்கு இழுத்து சென்றது. கதிரேசன் அப்போ பதினொண்ணாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அப்பாதான், கோயில் தர்மகர்த்தா. கோயில் கொடைக்கு 63 வீடுகள் வரி கட்டும். ஒரு வீட்டுக்கு ஒரு வரி. ஒருவேளை பையனுக்கு கல்யாணம் ஆகிட்டா, ரெண்டு வரி. இருபத்தி ரெண்டு வயசுக்கு மேல பையன் இருந்தா ஒன்றரை வரி. அப்பா ரொம்ப கறார். அப்பாவுக்கு அடர்ந்த மீசை. ஆறடி. வெள்ளை வெட்டி, வெள்ளை சட்டை. சட்டையை மடக்கி அரைக்கை மாதிரி போட்டிருப்பார். அப்பாவை பார்த்தாலே ஒருவித மரியாதையும் பயமும் எல்லோருக்கும் தொற்றிக் கொள்ளும்.

அப்போது கோயில் கொடை ஆடி மாசம்தான் நடக்கும். அஞ்சு நாள் கொடை. கொடைக்கு ஊர் முழுக்க பந்தல் போட்டிருக்கும். ஒவ்வொரு கம்பத்துக்கு இடையிலும் வண்ண குழல் விளக்குகளாலும், தொடர்சிறு மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப் பட்டிருக்கும். ஊர் வாயிலிலும் கோயில் அருகேயும் கோபுர அளவிற்கு தொடர் சிறு மின்விளக்குகள் மின்னிக் கொண்டிருக்கும். கோயில் கொடை நாட்களில், அப்பொழுதைக்கான கடைகள் இருக்கும். சாயக் கலர், முறுக்கு,சவ்வு மிட்டாய், இன்னும் சில இனிப்புகளும் காரப் பண்டங்களும் கிடைக்கும். வில்லுப் பாட்டு மூணு நாள். கரகாட்டம், குறவன் குறத்தி ஆட்டம் ரெண்டு நாள். ஒருநாள் திரைப் படம். குறவன் குறத்தி ஆட்டம் பார்க்க, பக்கத்து கிராமத்தில் இருந்தெல்லாம் ஆட்கள் வரும். கொடை நாட்களில் ராத்திரி எட்டு மணிக்கு எல்லாம் கட்டை அடிக்கிற சூதாட்ட விளையாட்டு சூடு பிடிக்கும். அதாங்க, பிதாமகன் படத்தில லைலா சூர்யா கிட்ட காசு வச்சு விளையாடுவாங்களே … அதே விளையாட்டுதான். எப்போது தொலைக்காட்சி வந்ததோ அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக பக்கத்து ஊர்கள்ல இருந்து ஆட்கள் வர்றதும் கொறஞ்சு போச்சு.

திங்கள் கிழமை பூக்குழித் திருவிழா. மொத்த சாதி சனமும் ஒட்டு மொத்த ஊரும் அதை பார்க்க தவறாம வந்துரும். ஒருஆள் கழுத்து வரை குழி தோண்டி, காலையில் இருந்து சாயங்காலம் வரை கட்டைகளை வைத்து தீ போடுவார்கள். கிட்டத்திட்ட பத்து அடி நீளம் இருக்கும். தீ போட, வெகு சிலரால் மட்டுமே முடியும். அது பக்கத்தில கூட போக முடியாது. அந்த அளவுக்கு அனல் அடிக்கும். சாமி பூக்குழி இறங்கும் போது துண்டு அதுல விழுந்தால் ஊர்ல ஏதோ கெட்டது நடக்கும்னு ஐதீகம். சாமி அஞ்சு மணிக்கு இறங்கி முடிச்ச உடனே குழியை மூடுவார்கள். மூடுவதற்கு முன்னால், எல்லோரும் சொம்புல அந்த தண்ணியை கோரிட்டு போய் குடிச்சா நல்லதுன்னு ஊரே நம்பும்.

சாமக் கொடைக்கு நல்ல கூட்டம் வரும். கிராமத்தில் ஆண்களும் பெண்களும் இரவு பத்து மணிக்கு மேலகூட நல்ல முக ஒப்பனை செய்து புது ஆடையில் வருவார்கள். வில்லுப் பாட்டை வயசான கிழங்கள் மட்டும் பார்க்கும். சாமி ஆடும் போது கணியன் பாட்டும் பாடுவாங்க.. சாமி இடை இடையே ஆட்டத்தை நிப்பாட்டி குறி சொல்வார். ஒருமுறை தன் நண்பன் கேட்ட ஒரு கேள்வியை நினைவு கூர்ந்தான். ஏல.. சாமி உங்க சாதிக்கு மட்டும்தான் குறி சொல்லுமோல.. எங்களை எல்லாம் சாமி கண்ணுக்கு, ஏம்ல தெரியல என்று கேட்டான். அதுக்கு கதிரேசன், சாமி வரி கட்டுறவங்களுக்கு மட்டும்தான்ல குறி சொல்லும் என்றது நினைவுக்கு வந்தது. சாமி குறி சொல்லும் போது பெரும்பாலோர் சாமி சொல்வதை பயபக்தியுடனும் இளவட்டங்கள் ஒரு வித கிண்டலுடனும் பார்ப்பார்கள். வயசுப் பொண்ணுங்க 41 நாட்கள் விரதம் இருந்து, சாமக் கொடை அன்னைக்கு ராத்திரி முளைப்பாரி எடுப்பார்கள். தூரத்தில இருந்து, தான் ஆளு எப்படி கொளவை பாடுறான்னு பார்ப்பானுங்க. இப்படி ஆடி மாசம் நடந்த கோயில் கொடையை வைகாசிக்கு மாற்ற, சில வருடங்களுக்கு முன்னால் சாமிகிட்டே குறி பார்க்க சொன்னார்கள். அப்பதான் பட்டணத்தில வேலைக்கு போனவகளும் வரமுடியும்னு கோரிக்கை வைத்தார்கள்.

சாமியும் குறி பார்த்து கடைசியில் சரி சொன்னது என்று கதிரேசன் நினைவுகளில் மூழ்கிய போது , நடத்துனர் கனவைக் கலைத்தார். விக்கிரவாண்டி வந்துருச்சி.. பேருந்து 10 நிமிடம் நிற்கும் என்றார். கதிரேசனுக்கு ஏனோ பேருந்தை விட்டு இறங்க மனமில்லை.. கண் அயர்ந்தான். விடிகாலை, வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

அப்பா, எப்படி இருக்கீங்க என்றான். ஏதோ இருக்கேன்பா.. என்றவர், லலிதா மற்றும் பிள்ளைகளை பற்றி நலம் விசாரித்தார். மெல்ல பேச்சு கோயில் கொடைப் பக்கம் சென்றது. ஏம்பா.. இந்த வருசமாவது கோயிலுக்கு பிள்ளை குட்டிகளை கூப்பிட்டு வர்ற, திட்டம் இருக்கா? இல்லையா என்றார். அது இல்லப்பா விடுமுறை கிடைக்கிறது ரொம்ப கஷ்டமப்பா.. என்றான். மேலும் தான் கோயில் கொடைக்கு வரி
கட்டுறதுல எப்பவும் எந்த பிரச்னையும் இருக்காதுப்பா என்றான். அப்பாவுக்கு கோபம் தலைக்கேறியது. ஏம்பா.. கோயில்கொடைக்கு வரி கொடுத்துட்டா போதுமா. ஏல.. இது வெறும் கொடை இல்லைல.. நம்ம சொந்தக்காரன் அத்தனை பேரையும் கூட்டி மகிழ்ச்சியை பகிர்ந்துகிறதுல.. ஏல.. சாதி சனம் சண்டையை மறந்து முகம் கொடுத்து பார்க்கத்தாம்ல.. கோயில் கொடை. வெறும் வரி கட்டிட்டு மயிரே போச்சுன்னு பட்டணத்துல வேலை பார்க்கிறது இல்லல… ஏல.. ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன் பதில் சொல்லுல.. வருஷம் வருஷம், பள்ளிக்கூடம் விடுமுறையில பொண்டாட்டி பிள்ளைகளை கூட்டிட்டு கொடைக்கானல், ஊட்டிக்கு போக மட்டும் விடுமுறை கிடைக்கு.. இங்க சொந்த ஊருல நடக்கிற திருவிழாவுக்கு வர மனசு வரமாட்டேங்குது. இனி சொந்த ஊரு எதுன்னு எவன் கேட்டாலும், நாடோடின்னு சொல்லுல பாப்போம். கோயில் கொடைக்கு வர்றதா இருந்தா, பணத்தை அக்காகிட்ட கொடுத்திட்டு போ.. இல்லைன்னா கொடையை உன்னை மாதிரி ஆளை நம்பி நடத்திலல.. மனுஷன் சொந்த மண்ணு பெருமையை சொல்லியும், காண்பிச்சும் பிள்ளையை வளர்க்கனும்ல.. என்று தன் ஆதங்கத்தைக் கொட்டி தீர்த்தார். கதிரேசனுக்கு அப்பா சொல்ல சொல்ல கண்களில் நீர் முட்டியது. சொல்ல வார்த்தைகள் இல்லாமல் திரும்பிப் போனான். இன்று வைகாசி பதினாறு. கோயில் கொடைக்கு குழந்தைகளோடு வந்து சேர்ந்தான். கொடையின் அருமை தன் இரு குழந்தைகளும் மகிழ்ச்சியோடு கழிப்பதை பார்த்த போது உணர்ந்தான். அப்பா.. எல்லா வருசமும் விடுமுறையில தாத்தா வீட்டுக்கு வருவோம்பா.. கோயில் கொடியை பார்க்கனும்பா என்ற போது தான் சிறு வயதில் தந்தையிடம் கோயில் கொடையப்போ போடுற படத்தைப் பார்க்க அடம்பிடித்தது நினைவுக்கு வந்தது.

Print Friendly, PDF & Email

1 thought on “கோயில் கொடை

  1. மிகவும் அருமயான கதை. சாதிகள் என்பவை குலங்கள். அந்தந்த கிராமத்தில் பாரம்பரியமாக வரும் விழாக்களையும் சொந்தபந்தங்கள், உறவுகளையும் மதிக்கக் கற்றுக்கொடுக்கும் குல அமைப்பு மிக முக்கியமானது. நல்ல குடும்பங்கள் தங்கள் பூர்வீகப் பண்பாட்டை அடுத்த தலைமுறைக்கு கற்பிக்க வேண்டும். அப்படிச் செய்யாதவர்களை கதாசிரியர் சொல்வதுபோல் நாடோடிகள் என்றுதான் அழைக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *