கோடையின் ஆற்றுப்படுகை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 30, 2012
பார்வையிட்டோர்: 7,414 
 

எலே! கிடைக்கு ரெண்டு சாத்துங்கலே புளிய மிளாற எடுத்துக்குட்டு… என்று உள்ளே உக்காந்திருந்த அமராவையும், அம்மாவையும் பார்த்துச் சொன்னார் அப்பா. இருக்கிற சோலிக்கழுதய விட்டுப்போட்டு…ஊரு சுத்திக்கிட்டுத் திரியற… மடத்தாயோளி! ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆகியிருந்தா ஆருலே பதில் சொல்லுதது… அரைக்காசு புத்தியாவது இருக்காலே… என்ன நெஞ்சழுத்தம் இருந்தா அந்தப்பக்கம் பொயிருப்ப… அதுலயும் சோடி போட்டுக்கிட்டு… சோடி… தீப்பெட்டி ஆபீஸ்க்காரரு மகனோட… அதல்லாம் ஒரு பிள்ளையா, அவென் செம்பட்டத் தலையும் ஆளும், அதப்பாத்தாலே தெரிய வாணாம்… வீட்டுக்கு அடங்காத பிள்ளை அதுன்னு… அவென் ஒனக்கு சேக்காளியாடே… பல்லக்கடிச்சுட்டு அவென் தலை மயித்த பிடிச்சு ஆட்டுதாரு அப்பா… சின்னக்கடை வீதிலருந்து வாரேன்… மைனர் கணக்கா முக்குல நின்னுட்டு பீடி பிடிக்கான்…தறுதலப்பய…அவென், அவனோட சுத்தறான் இவன்…காலிப்பய… பன்னியோட சேர்ந்தா பீதான் திம்ப… அடங்காத பய… மேலுக்கும் கீழுக்குமாய் நின்றார் உத்தரம் தாண்டி.

வஞ்சு கொண்டே அவனை அடித்தும் கொண்டிருந்தார், மேல்மூச்சு, கீழ் மூச்சு வாங்க கையில் பிடித்திருந்த புளியங்குச்சில விடாம…சளைக்காம வாங்கிக் கொண்டிருந்தான்… ராமரு. பாதி அடி சுவத்திலயும் தரையிலயும் விழுந்தாலும் அவெங் கத்துற கத்துல எதுத்த வீடு பக்கத்து வீடுல தீப்பெட்டி ஒட்டிக்கிட்டிருக்கிற பிள்ளைகெல்லாம் வந்து நின்னு வேடிக்கை பாத்துக்கிட்டிருக்க, அது ராமருக்கு மேலும் அவமானமாகி மேலும் சத்தமாய் அழுதான்… ஒரு கையால் டவுசரை பிடித்துக் கொண்டே, மூக்கிலிருந்து ஒழுகிக்கொண்டிருந்த சளியை இடது புறங்கையால் இழுவிக் கொண்டே… பட்டாசால் போட்டிருந்த மரபீரோவுக்கும் சுவற்றுக்கும் அணைவில் ஒடுங்கினான்…இந்தளவுக்கு ஏன் அடிக்கணும் இவனை என்று அமராவுக்கு புரியவில்லை.

தடுக்கப் போனா தனக்கும் உதை விழும் என்பது நிச்சயம்… ஆனா ராமர இவ்வளவு அடிச்சதில்ல அவரு… வேற எங்கியோ இருக்க கோவத்தை இங்க காட்டுறா மாதிரி தான் இருக்கு… ஆனாலும் கேக்க பயமாய் இருக்கு… அமராவிடம் அன்பாய் தான் இருப்பார், கோவத்தில என்ன பண்ணுவார்னு யாருக்குத் தெரியும். அம்மாவுக்கு பொங்கி பொங்கி வந்தது, அடுப்பங்கரைக்கும், பட்டாசாலுக்கு வந்து வந்து பார்த்துக் கொண்டிருந்தாள், கையில் பருப்புக் கடையும் மத்தும் இருந்தது… பருப்பு மத்த கோபமாய் ஆட்டிக்கொண்டே, இந்தா போதும் இவன கொன்னு குழில தள்ளுனது… என்று அப்பாவின் கையில் இருந்த புளியமிளாற இன்னொரு கையால் ஆவேசமாய் பிடுங்கிக்கொண்டே வஞ்சாள் அம்மா… அம்மாவுக்கு… ராமரின் மேல் அத்தனை பிரியம்… ரெண்டும் பொண்ணா போயிட்டதாலே… கடைசிக் கொழுந்தா வந்த பய எல்லாத்திலயும் உசத்தி அம்மாவுக்கு.

இந்த மனுஷனுக்கு கொஞ்சமாவது ஈவு இரக்கம் இருக்கா… என் ஈரக்குலைய உருவிப்போட்டிருக்கலாம், ஒத்த ஆம்பிள புள்ளை தவமா தவமிருந்து பெத்துட்டு… போட்டு வதைக்காரு… இவ்வளவு அடி வாங்குதானே…என்ன பண்ணான் இந்த பயன்னு தெரியுமா… ஒரு மண்ணும் இல்லை… கொலைக்குத்தம் பண்ணாப்ல… ஆம்பிளப்பிள்ளை இது கூட செய்யாதா, யாருமே செய்யாததையா செஞ்சுபுட்டான். இந்தாளு சின்ன வயசுல பண்ணாத அலும்பா, ஆடாத ஆட்டமா… இவுக ஆத்தா எம்புட்டு பட்டிருக்கும்… இவன் பண்ணதப்போயி குத்தம்ண்ட்டு என்னமோ தேவையில்லாம திங்கு திங்குன்னு குதிக்காரு… பேசாம பிள்ளைகளக் கூட்டிட்டு ஆத்தா இருக்கு, அண்ணங்காரன் இருக்கான்னு எங்கேயாவது போயி நிம்மதியா இருந்து தொலையலாம்னா, அதுக்கும் நாதியத்து தானே… இங்கேயே கெடந்து அல்லாடுறோம்… அம்மா இப்படி பேசினாலும் அப்பாவை விட்டு எங்கேயும் போகாது… என்று அமராவுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் தெரியும்.

தீவாளி முடிஞ்சும் விடாத அடமழையா கார்த்திக பொறந்தும் பெய்ஞ்ச மழல… பத்து வருஷத்து பிற்பாடு இப்பத்தான் திருமுக்குளத்துக்கு தண்ணி வந்திருக்கு… பெரிய குளம் கம்மாயும் நெறஞ்சு போச்சு போல… அதப்பாக்க கூட்டாளிக்கள்லாம் கூப்பிட்ட உடனே பயலுக்கு ஆசை வந்து தொத்தியிருக்கான். அவென் நேரம் கூட வந்த சின்னத்தாயி பய… அதான் அந்த சின்னவன்… அவனும் கூட பொயிருக்கான்… எல்லாம் சேந்து தான் விளாடிட்டு இருந்திருக்காஹ… அந்த பயலுக்கு நீச்ச தெரியாததால்.. இவங்க டின்ல சைக்கிள் டியுப்ப கட்டி நான் கத்து தாரேன் நீ கத்து தாரேன்னு அவனுக்கு கத்து குடுக்க, கூட இருந்த யாரோ ஒரு பய உள்ள தள்ளி விட்டுட்டானாட்டமா இருக்கு… டியுப் கழண்டு போயி… பய தடவி தடவி உள்ள போயிட்டிருக்கான்… விளாட்டு மும்முரத்துல இந்த பயலுக யாரும் பாக்கல… நம்ம சோலமல நாயினா பொண்ணு பெரியவ தான் பாத்து, மயித்தப் பிடிச்சு தூக்கியாந்திருக்கா… இத இந்த மனுஷன்கிட்ட யாரோ சொல்லிட்டாக அது தான் சாமி வந்து ஆடுறாரு… என்று பக்கத்து வீட்டிலிருந்து வேடிக்க பாக்க வந்தா டெய்லர் அக்காவிடம் புலம்பிக் கொண்டிருந்தாள் அம்மா.

அப்பா ஒருவழியா தம்பிய அடிக்கிறத நிப்பாட்டி அமராவும், பவுனும் ஒக்காந்திருக்கிற முன் நடைப்பக்கம் பார்த்தார். ஏலே பவுனு இங்க வா… போய் ஒரு சொம்புல தண்ணியக் கொண்டா…இந்த பயல கத்தி கத்தி என் தொண்டத்தண்ணி தான் வத்திப்போச்சு… எவ்வளவு அடிச்சாலும் இவன் உருப்படப்போறதில்ல… எல்லாத்தியும் ஒக்காந்து புள்ளய சிங்காரிச்சு சீரழிக்க இருக்காளே ஒங்க ஆத்தா… போதும் விளங்கிடுவான்… என்று அங்கிருந்த மரத்தூணில் சாய்ந்து கொண்டு… எத்தனை கொட்டான்டி போட்ருக்கீக என்று தண்ணிச்சொம்பு கொண்டு வந்தவளிடம் கேட்டார்…. பன்னெண்டு முடிஞ்சுப் போச்சுப்பா என்றாள் பவுனும். அமராவும், பவுனும் வயதுக்கு வந்தவுடன் பள்ளிக்கூடம் போக வேணாம்னுட்டார் அப்பா. அதிலும் அமரா ஏழாவது படிக்கையில வயசுக்கு வந்தா, சின்னவ இன்னும் சீக்கிரமா… ஆறாவது படிக்கையிலேயே வயசுக்கு வந்துட்டா… தலைல தண்ணிய ஊத்தி… போதுந்தாயிகளா நீங்க பள்ளிக்கூடம் போனது என்று வீட்டிலே இருக்க வைத்து விட்டார்.

சின்னவ பவுனுக்கு படிக்காமல் போனது சந்தோஷம் தான். அமராவதிக்கு தான் படிக்க கொள்ள ஆசை… ஒரு புஸ்தகம் விட மாட்டா… ராமகிருஷ்ண அண்ணன்ட்ட சொல்லி லெனின் வாசகப்பேரவையில இருந்து எல்லாம் புஸ்தகங்களையும் கொண்டு வரச்சொல்லி படிச்சுடுவா… சின்னவ பவுனுக்கு சினிமா நடிகர், நடிகைகளைப்பத்தின கதையும், கிசுகிசுவும் மட்டும் போதும்… ரெண்டு பிள்ளகளும், வீட்ல ஒக்காந்து தீப்பெட்டி ஒட்டுறது தான்… பக்கத்து வீட்ல இருந்து வார பிள்ளகளும், வரிசையா பலகைய போட்டுக்கிட்டு… சினிமாக்கதை, ஊர்ப்பொரனின்னு பேசிட்டே ஒட்டுவது, வாரமானா போய் தீப்பெட்டி ஆபீஸில போய் மொத்தத்தையும் போட்டு காசு வாங்குறது தான் பொழுது போக்கு வருமானம், எல்லாம். அப்பாவுக்கு வருமானம் குறைவா இருக்கும்போது… அமராவும், பவுனும் தீப்பெட்டி ஒட்டிய காசில் தான் சாப்பாடும், மத்தசெலவும்… பவுனுக்குத் தான் வருத்தம்… சினிமாவுக்கு அம்மாவிடம் காசு வாங்குவது அந்த வாரம் கெட்டுப்போகும்… மேத்தீனிக்கு காசு இருக்காது… அமராவுக்கு அதைப்பற்றிய வருத்தம் ஏதுமில்லை.

வாரத்துக்கொருமுறை கணபதி டாக்கீஸ் அல்லது ஜெயகிருஷ்ணால போடற ஏதோ ஒரு படத்தைப் பார்க்க போயிடுவா… அம்மாவுக்கு தெரியாமல் அடைக்கும் பெட்டிக்கணக்காய் தனியாய் பிரித்து விடுவாள், அதுதான் அவளுக்கு மேத்தீனியும், சிலசமயம் அவளோட சேக்காளி பங்காரம்மாவுக்கு சினிமா டிக்கெட்டுக்கும். அமராவதிக்கு சினிமா போக விருப்பமில்லை என்பதால்… புஸ்தகமும், சாந்தி அக்காவுடன் பேசிக்கொண்டு இருந்தால் மட்டுமே போதும் எப்போதும்… சாந்தி அக்காவுக்கு முப்பத்திரண்டு வயசாச்சு… இன்னும் கல்யாணம் ஆகலை… எல்லாக்கதையும் பேசும் சினிமா பத்தி, அரசியல் பத்தி, நாவல் பத்தின்னு… அக்காவுக்கு ராமகிருஷ்ணன் அண்ணன்னா ரொம்ப பிடிக்கும்… எப்பப் பார்த்தாலும், அண்ணனப்பத்தி தான் கேக்கும்… அண்ணன் குடுக்கிற புஸ்தகமெல்லாம் படிச்சு… அதப்பத்தி நிறைய பேசும்… சாந்தி அக்கா படிச்சு முடிச்ச புஸ்தகத்திற்க்குன்னு ஒரு அடையாளம் இருக்கும்… ஏதாவது ஒரு பக்கத்தில் பென்சிலில் சின்ன சின்ன இலைமாதிரி போட்டு… பூவரைந்திருக்கும்… ராமகிருஷ்ணன் அண்ணனுக்கு அது பிடிக்காது… சத்தம் போடும்…வாசகப்பேரவையில வைவதாய்ச் சொல்லும், அக்காவிடம் சொன்னா… எங்கிட்ட சொல்லச்சொல்லு அமரா… எங்கிட்ட பேச பயம் என்று லேசாக்கண்ணடிக்கும் அக்கா, அது பார்க்க நல்லாயிருக்கும்.

அப்பா, அமரா என்று கூப்பிட யோசனை அறுபட்டு என்னப்பா என்றவளை, மகராசி கொஞ்சம் தலைய பிடிச்சு விடு தாயீ!… மண்டையடி தாங்க முடியலை… என்று தலையப்பிடித்துக் கொண்டு உட்கார்ந்தார்… அமராவுக்கு அப்பாவ பாக்கவும் கஷ்டமா இருந்துச்சு… தம்பி இப்ப அழுது ஓய்ஞ்சு அடுப்பங்கரையிலேயே ஒக்காந்து பருப்பு சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். தொட்டுக்க அப்பா வாங்கி வந்த வெங்காய பக்கோடாவும் இருந்தது… அப்பாவுக்கு தங்கவேலை பார்க்க சுத்தமாத் தெரியாது, தாத்தாகிட்ட குண்டிய அமுக்கிகிட்டு ஒழுங்கா இருந்திருந்தா வேலை கத்திட்டிருக்கலாம்… அதவிட்டுட்டு வயசுல எல்லாம் ஊர்ல அடிக்கிற வெயிலெல்லாம் இந்தாளு மேல காய ஊரச்சுத்திட்டு, இப்ப நம்ம பொழப்பே ஒக்குட மாட்டாமக் கிடக்கு என்று அம்மா புலம்புவாள். ஏதோ என் புள்ளக இருக்கங்கண்டி இந்த மனுஷன் கொண்டு வந்து கொடுக்குறது பத்தாமப் போனாக்கூட அவளுக காசுல மிச்சம் வச்சு பொங்கி போடறதாலே அய்யா பொழப்பு மணத்து போயி கிடக்கு… என்பாள் அம்மா.

அப்பாவிற்கு ஒரே மாதிரி எல்லா நேரத்திலும் காசு வருவதில்லை. நகை வேலை தெரியாததால பழைய தங்கத்த வாங்கி அத மூசு போட்டு… கடையிலேயே அல்லது பட்டறையிலேயே கைமாத்தி விடுற வேலை பாக்காரு… புரோக்கர் மாதிரி… எப்பப் பார்த்தாலும், நல்லா வெள்ள வேஷ்டி கட்டிக்கிட்டு கழுத்துல ஒரு கர்சீப் போட்டுக்கிட்டு… ஒரு மஞ்சப்பையில் சுத்தின மாதிரி ஒரு சின்ன நோட் இதுல தான் எல்லா வரவு செலவையும் கணக்கு வச்சுப்பாரு… இன்னைக்கு அப்பாவுக்கு பணம் தரவேண்டிய கிராக்கி யாராவது கொடுக்காம போயிருக்கலாம் அல்லது எந்த கிராக்கியுமே கிடைக்காம போயிருக்கலாம் என்று தோன்றியது அமராவுக்கு. இந்த மாதிரி கோபம் வரும்போதெல்லாம் அப்பா இப்படி தான் சம்பந்தமில்லாம கோபப்படுறது, அமராவைத் தவிர… என்னவென்று அப்பாவிடம் கேட்கவும் பயம், தலையை லேசாத் தடவி விட்டுக்கொண்டிருந்தாள்… அம்மா தேங்காய் எண்ணெய லேசா சூடுபண்ணி அதுல ரெண்டு சூடத்தை போட்டு கொண்டு வந்தா… இந்தாடீ உங்கப்பனுக்கு இதப்போட்டு தேயீ என்று அடுப்பங்கரைக்குள் போயிவிட்டாள். தலைய அமுக்கும் அமராவின் கைகளை பிடித்த போது அப்பாவுக்கு அழுகை வந்தது, தேம்பி தேம்பி அழத் தொடங்கினார், ராமரு அங்கே இருந்து அப்பாவிடம்… நான் இனிமே எங்கேயும் போகமாட்டேன்பா… என்று சொல்லிக்கொண்டிருந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *