கொய்யாப்பழக் கிழவி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 7, 2012
பார்வையிட்டோர்: 6,540 
 

வாசலில் குரல் கேட்க எட்டிப் பார்த்தேன். அந்தக் கிழவிதான் நின்று கொண்டிருந்தாள். ‘க்கும்…இவளுக்கு இதே வேலையாப் போச்சு… வீட்டு மரத்திலிருந்து விழற கொய்யாப் பழங்களைப் பொறுக்கி ஒரு கவர்ல போட்டுட்டு வந்து ‘இந்தாங்க”ன்னு குடுக்க வேண்டியது… அப்புறம் ‘ஒரு பத்து ருபா குடு சாமி கொய்யா பழத்துக்கு”ன்னு கையை நீட்ட வேண்டியது… குழந்தைகளுக்குத்தானே? மனசார சும்மா குடுக்கலாமே… இதிலே கூட ஒரு வியாபாரமா?”

“என்ன பாட்டி கொய்யாப் பழமா?” கேட்டபடியே வாசலுக்குச் சென்று திரும்பிய என் மனைவி ராணியின் கையில் கொய்யா பழங்கள்.

“ஏங்க… ஒரு பத்து ருபா குடுங்க”

என்னிடம் வந்து கேட்டவளை முறைத்தேன். “காசு குடுத்து வாங்கிட்டு வந்தா தர்றா?… வீட்டு மரத்திலிருந்து விழற பழங்கதானே?… அதைக்கூட குழந்தைகளுக்குச் சும்மா குடுக்க மாட்டாளா கெழவி?”

“ப்ச்.. சீக்கிரம் குடுங்க… பாட்டி நின்னுட்டிருக்கா!”

முனகிக் கொண்டே குடுத்தேன்.

கிழவியை அனுப்பி விட்டு வந்த ராணியிடம் கேட்டேன். ‘போன தடவ இந்தக் கிழவி வந்தப்ப… “காபி சாப்படறியா பாட்டி”ன்னு நீ ஒரு வார்த்தைக்குக் கேட்டெ…அதுவும்…’சரி”ன்னு சொல்லி வாங்கிக் குடிச்சுட்டுப் போயிடுச்சு…அந்தக் காபிக்கு நீ காசு வாங்கியிருக்கலாமல்ல?”

நெற்றியைச் சுருக்கிக் கொண்டு என்னை மேலும் கீழும் பார்த்த ராணி “போங்க…எனக்கு அடுப்படில வேலையிருக்கு” சொல்லி விட்டு நகர்ந்தாள்.

அடுத்த வாரத்தில் ஒரு நாள்,

அந்தக் கிழவி வீட்டிலிருந்து கூச்சல் கேட்டது. கிழவியின் மருமகள் குரல். “அய்யோ… யாராவது வாங்களேன்… கெழவி பேச்சு மூச்சில்லாமக் கெடக்கறாளே!”

நான் வெளியே வந்து தெருவைப் பார்த்தேன். எல்லா வீட்டுக் கதவுகளும்… ஜன்னல்களும் திறந்திருந்தும் யாரும் வெளியில் எட்டிக் கூடப் பார்க்கவில்லை.

“ராணி….ராணி…” உள் பக்கம் திரும்பி அழைத்தேன்.

வந்தவளிடம், “யாரது… கத்தறது… கெழவி மருமகதானே?” கேட்டேன்.

“ஆமாங்க… அய்யய்யோ… கெழவிக்கு என்னமோ ஆயிடுச்சு போலிருக்கே… பாவம்… ஆம்பளையில்லாத வீடாச்சே” கிழவி மகன் ரெண்டு வருடங்களுக்கு முன் ஒரு சாலை விபத்தில் இறந்த பின் மாமியாரும் மருமகளும் மட்டும்தான் அந்த வீட்டில்.

“அக்கம் பக்கத்துல இருக்கறவங்களுக்கு அவ கத்தல் காதுல விழலையா?…இல்லை விழுந்தும் விழாதது மாதிரி இருக்காங்களா?”

“அதெல்லாம் நல்லாவே விழும்…ஆனாலும் யாரும் வர மாட்டாங்க”

“ஏன்?…ஏன் அப்படி?”

“அது செரி… அக்கம் பக்கத்துக்காரங்களோட அப்படி இப்படிக் கொஞ்சம் அனுசரிச்சுப் போனாத்தானே ஆகும்? தொட்டது தொண்ணூறுக்கும் சண்டைக்கே நின்னா யாரு வருவாங்க அவசர ஆத்திரத்துக்கு? சொல்லப் போனா நான் ஒருத்திதான் அதுக ரெண்டோடவும் சண்டை போடாம பேசிட்டிருக்கேன்”

எனக்கு மனசு கனத்துப் போனது. “என்னடி இது?…சக மனுஷி ஒருத்தி கஷ்டப் படும் போது… உதவி செய்யாம இப்படி வன்மம் பேசுறது சரியாடி?”

“அப்படியா?… அப்ப ஒண்ணு செய்யங்க!… நீங்க போங்க… போய் உதவி செய்யுங்க”

ராணி நக்கலாய் சிரித்தபடி சொல்ல, காத்திருந்தவன் போல் சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பினேன்.

என் வேகத்தைப் பார்த்து ராணியே வியந்து போனாள். “பரவாயில்லையே….கெழவி வந்தாலே என்னைத் திட்டித் தீர்ப்பீங்க… இப்ப “பொசுக்”குன்னு உதவி செய்யக் கிளம்பிட்டீங்களே”

கிழவி வீட்டிற்குச் சென்று நிலைமையை ஆராய்ந்தேன். உடனடியாகக் கிழவியை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டிய அவசியத்தை உணர்ந்து கிழவியின் மருமகளிடம் சொன்னேன்.

“அய்யய்யோ… அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடுற ஆம்பளையில்லாக் குடும்பமாச்சே இது… ஆசுபத்திரிக்குப் போனா ஐநூறு ஆயிரம்னு இல்ல கேப்பாங்க…” இப்பவே ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள்.

சட்டைப் பாக்கெட்டிலிருந்த பணம் தைரியத்தை வரவழைக்க நானே ஒரு டாக்சியை ஏற்பாடு செய்து, கிழவியைத் தூக்கிப் போட்டுக் கொண்டு மருமகளையும் உடன் அழைத்துக் கொண்டு மருத்துவ மனையை நோக்கிப் பறந்தேன். மருத்துவ மனையில் அவர்களுடனேயே இருந்து கிழவிக்குத் தேவையான சிகிச்சைகளை ஏற்பாடு செய்து… முடித்து… கிழவிக்கு ஓரளவுக்கு நினைவு திரும்பியதும் இரவு வாக்கில் வார்டில் கொண்டு சேர்த்து விட்டு “தைரியமா இருங்க… நான் போயிட்டு காலைல வர்றேன்…” என்று சொல்லி கிழவியின் மருமகள் கையில் ஐநூறு ரூபாயைத் திணித்து விட்டு வந்தேன்.

மறுநாள் கிழவியைப் பரிசோதித்த டாக்டர் “ஷி இஸ் ஆல்ரைட் நவ்… நீங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகலாம்” என்று சொல்ல, மீண்டும் ஒரு டாக்ஸி ஏற்பாடு செய்து கிழவியையும் அவள் மருமகளையும் வீட்டில் கொண்டு வந்து சேர்த்து விட்டு “அப்பாடா…” என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். மனசுக்குள் இனம் புரியாத ஒரு சந்தோஷம் நிரம்பியிருந்தது. அது எனக்கு ஒரு புதுவித அனுபவமாயிருந்தது. சகமனிதனுக்கு உதவி செய்யும் போது இப்படியொரு அற்புதமான சந்தோஷ உணர்வு நம்முடைய மனசுல…உடம்புல….நாடி நரம்புகள்ல ஊடுருவி ஒரு புதிய சுகானுபவத்தைக் கொடுக்கும் என்கிற ரகசியம் இந்த மனித சமுதாயத்திற்கு இன்னும் புரியாமலேயிருப்பது எனக்கு அதிசயமாயிருந்தது.

பத்து நாட்களுக்குப் பிறகு,

வாசலில் குரல் கேட்க எட்டிப் பார்த்தேன். கிழவிதான்.

எழுந்து வாசலுக்குச் சென்று “என்ன பாட்டி… இப்ப எப்படியிருக்கு பரவாயில்லையா?” கேட்டேன்.

என் பின்னாடியே வந்த ராணி என் குசல விசாரிப்பை புன்முறுவலோடு ரசித்தபடி நின்றாள்.

“ம்…ம்… பரவாயில்ல சாமி… எங்க மறுபடியும் எந்திரிச்சு நடக்க முடியாமப் போயிடுமோன்னு பயந்தேன்… எஞ்சாமி புண்ணியத்துல எந்திரிசுட்டேன்.” சொன்னபடியெ கொய்யாப் பழக் கவரை நீட்டினாள் கிழவி.

ராணி முன் வந்து வாங்கிக் கொண்டாள்.

‘சரி… சரி… எந்திரிச்சுட்டோம்கற தைரியத்துல பழைய மாதிரி நடந்திட்டிருக்க வேண்டாம்… பாத்து பத்திரமா இருந்துக்க… என்ன?” சொல்லி விட்டுத் திரும்பினேன்.

“ஒரு பத்து ரூவா குடு சாமி…கொய்யாப் பழத்துக்கு” கிழவி கேட்க,

நொந்து போய் ராணியைப் பார்த்தேன். அவள் கையில் தயாராய் வைத்திருந்த பத்து ரூபாயை அவளிடம் தந்து அவளை அனுப்பி விட்டு ‘இப்பத் தெரியுதுங்களா… அக்கம் பக்கத்துக்காரங்க… ஏன் அன்னிக்கு அத்தனை சத்தம் கேட்டும் கேட்காதது மாதிரி இருந்தாங்கன்னு…” என்றாள்.

நான் சுத்தமாய் வாயடைத்துப் போனேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *