கைக்கு எட்டிய தாத்தா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 1, 2013
பார்வையிட்டோர்: 9,597 
 

அதிகாரிக்குரிய நாற்காலியில் உட்காராமல் தட்டச்சருக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த மரப்பெட்டியின் மீது ரகு உட்கார்ந்திருந்தான். தட்டச்சர் வாசு முதலில் தட்டச்சு செய்யவேண்டிய கடிதத்தை தேர்வு செய்வதில் முனைப்பாக இருந்தான். மரப்பெட்டியின் மீது உட்கார்ந்து அலுவலகத்திற்கு வெளியிலும் பார்வையைச் செலுத்துவதற்கு அந்த இடம் ரகுவுக்கு சற்று வசதியாக இருந்தது.

அலுவலகம் பத்து மணிக்குத்தான் என்றாலும் ரகுவும் வாசுவும் தினந்தோறும் தவறாமல் ஒன்பதரைக்கே அலுவலகம் வந்துவிடுவார்கள். தாமதம் ஆகிவிடக் கூடாதே என்று அரக்க பரக்க பதற்றத்தோடு கடைசி நேரத்தில் அலுவலகத்திற்குள் நுழைவது இருவருக்கும் கொஞ்சமும் பிடிக்காது.

“லீவுலட்டர்தான் கொடுத்தாச்சே, புறப்பட்டுப் போக வேண்டியதுதானே சார்! இன்னும் ஏன் ஆபிஸ்லயே உட்கார்ந்திருக்கீங்க?”தட்டச்சு இயந்திரத்தின் பட்டன்களை விரல்களால் தட்டியபடி வாசு ரகுவின் முகம் பார்த்து ஆச்சர்யமாகக் கேட்டான்.

“காலைல தம்பி பேசுனதுல இருந்து மனசே சரியில்ல வாசு, ஒரே குழப்பமா இருக்கு” என்றான் ரகு.

“என்னங்க சார் சொன்னாரு உங்க தம்பி”

“கிராமத்துல தாத்தாவைக் காணலயாம். வீட்டு திண்ணையில உட்கார்ந்து சாப்பாட முடிச்சிட்டு, இராத்திரி வழக்கமா சொல்லிட்டுப் போகிற மாதிரி படுத்துக்க கொல்லிக்குப் போறேன்னு சொல்லிட்டுப் போனவர்தானாம்.”

“அய்யய்யோ! அப்புறமா.. சார்?

“காலையில கலப்பையை தூக்கிக்கிட்டு ஏர் கட்ட போன தம்பி, நிலம் காடெல்லாம் தேடிப் பார்த்திருக்கான். தாத்தா… தாத்தான்னு கத்தி கூப்பாடும் போட்டுப் பார்த்திருக்கான். அவரை எங்கும் காணோமாம். என்ன ஆயிற்றுன்னு தெரியாம எல்லாரும் அலையுராங்களாம். கிராமத்தில இருக்கிற எல்லா கிணத்துலயும் மூழ்கி தேடியும் பாத்துட்டாங்களாம். ஒன்பது மணிவரைக்கும் எந்த தகவலும் கிடைக்கலன்னு தம்பி காலையில போன் செய்தான்.” கண்ணாடியை கழற்றி கைகர்ச்சீப்பால் துடைத்து விட்டு மீண்டும் கண்களில் மாட்டிக்கொள்கிற அதிகாரியை வாசு இமைக்காமல் பார்த்தான்.

“என்னங்க சார் இது? தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு ஒங்க தாத்தாவுக்கு ஏதாவது பிரச்சினையா சார்?” தட்டச்சு இயந்திரத்தின் பட்டன்களை மீண்டும் தட்டத் தொடங்கி நிசப்தமாக நீண்ட அந்த இடைவெளியை தற்காலிகமாக குறைக்க முற்பட்டான் வாசு.

“இல்லை வாசு. தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு அவர் ஒன்றும் கோழை இல்லை. மண்ணும் மண்ணில் சுரக்கின்ற தண்ணீரும் உள்ளவரை தனக்கு சாவு வரக்கூடாதுன்னு கடவுளை வேண்டுகிற வித்யாசமான மனிதர் அவர். அப்படிப்பட்ட அவருபோய் வாழ்க்கையைத் தொலைத்து தற்கொலை பண்ணிக்கிறதாவது! .சேச்சே! வாய்ப்பே கிடையாது!! ரகுவின் குரலில் அளவிடமுடியாத உறுதி இருந்தது.

“அப்படின்னா ஊர்ல இருக்கிற எல்லா கிணத்துலயும் மூழ்கி தேடிட்டோம்னு உங்க தம்பி வாயில எப்படி சார் வரும்? அதுக்கு என்னங்க சார் அர்த்தம்?”

“அதை நெனைச்சாதான் எனக்கு அடிவயிறு கலங்குது வாசு. பயமாவும் இருக்கு, ஏதோ விபரீதம்னு தோணுது. இந்த தாத்தா கிழவருக்கு திடீர்னு என்ன ஆகியிருக்கும், எங்க போயிருப்பார்? ஒன்னுமே புரியல எனக்கு” ரகுவின் மனக்குழப்பம் வார்த்தைகளிலும் பளிச்சென வெளிப்பட்டது.

எப்போதும் உணர்ச்சியைக் கட்டுப்படுத்தியே பேசும் தன்னுடைய அதிகாரியின் குரல் அவரையும் மீறி தடுமாறுவதைக் கண்ட வாசுவின் மனசுக்குள்ளும் துயரம் வந்து உட்கார்ந்து கொண்டது. ஆறுதல் சொல்ல ஆசைப்பட்ட அவன் சிறிது யோசனைக்குப் பிறகு “வயசு எவ்ளோ சார் அவருக்கு?” என்றான்.

“தொண்ணூறுக்கு மேலதான் இருக்கும்” வார்த்தைகள் ரகுவிடமிருந்து சோகமாக வெளிப்பட்டன.

“சார் வயசானவர்தான? நடக்கறது நடக்கட்டும் விடுங்க சார். மனச தேத்திக்கிங்க. அவருக்கு ஒன்னும் ஆகக்கூடாதுன்னு வேண்டிக்குவோம். அனேகமா பாருங்க, உங்க தம்பி மறுபடியும் தாத்தா வந்துட்டார்னு போன் செய்யப் போறாரு.” என்று ஆறுதலாகப் பேசி, ரகுவை அந்த துயரச் சிக்கலில் இருந்து மீட்க முயன்றான் வாசு.

தற்செயலாய் கிளைத்த வாசுவின் சொற்களால் ரகுவின் முகத்தில் துயரம் குறைந்தது போலத்தான் தோன்றியது. எண்ணம் எதையோ நினைத்து வட்டமிடுவதை ரகுவின் முகத்தோற்றம் காட்டியது.

சென்னை அலுவலகத்திலிருந்த ரகுவின் உள்ளம் அலுவலகம் தாண்டி, நகரத்துத் தார்ச்சாலைகளில் ஓடி, சாணம் மெழுகிய கிராமத்துத் தெருக்களை ஊடுருவி சிலிர்த்துக் கிளை பரப்பிக் கிடக்கும் மரங்களுக்கிடையில் அமைந்திருக்கும் மாட்டுக் கொட்டகையில் போய்நின்றது. உலகின் கவலைகள் மற்றும் களங்கங்களற்ற சிரிப்புக்குச் சொந்தக்கார தாத்தாவின் முகத்தைத் தேடி மானசீகமாக சரண் அடைந்தது. தனிமையிடம் இருந்து விடுபட்டவன் போலான ரகு தன் தாத்தாவைப் பற்றி வாசுவிடம் சொல்லத் தொடங்கினான்.

“வாசு, என் தாத்தா ஒரு பக்கா விவசாயி. அந்த காலத்துலயே நாலெழுத்து படித்து சுவாரஸ்யமா வாழ்ந்தவர். அவருக்கு நான் மூத்த பேரன். நான் என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும்.‘அப்பு அப்பு’ அப்படின்னுதான் என்னை அன்போடு கூப்பிடுவார். அவர் டேய் அப்புனு என்று கூப்பிட்டார்னா நான் அவ்ளோதான். கைல இருக்கறதல்லாம் அப்படியே போட்டுட்டு, வந்துட்டேன் தாத்தான்னு ஓடிப்போய் நிப்பேன். அழைப்புல அப்படி ஒரு பாசத்தை எங்கயும் கேட்கமுடியாது. கனிவு, பண்பட்ட உள்ளம், உதாரண குணம் என்று எவ்வள்வோ தாத்தாவைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்”

ரகு தாத்தாவின் கதையை சொல்ல ஆரம்பித்ததும் வாசு விரல்களுக்கு ஒய்வு கொடுத்து விட்டு கைகளை பிசைந்தபடி ஆர்வமாக கதை கேட்க ஆரம்பித்தான்.

கண்களைச் சுருக்கிக் கொண்டு தலையை சற்று மேலாக உயர்த்தி சிந்தித்தபடியே ரகு மேலும் சொன்னான். “தாத்தா கடினமான உழைப்பாளி. தோட்டம் தொறவு தான் அவருக்கு எல்லாமே. போன வருஷம் நான் ஊருக்குப் போயிருந்த போதுகூட வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு வயலில் பயிர் வேலைகளை தீவிரமாக செய்துகிட்டிருந்தார். தான் உயிரோடு இருக்கும் வரை தன்னுடைய மண்ணை எவருக்கும் குத்தகைக்குக் கூட விட அனுமதிக்கமாட்டேன் என்ற கொள்கையில் பிடிவாதமாகவே இருந்தார்.”

வாசு எதிர்ப்பேச்சு ஏதும் பேசாமல் மெளனமாக கேட்டுக் கொண்டிருந்தான்.

“வாசு சார், உங்களுக்கு இன்னொரு விஷயம் தெரியுமா? நேதாஜிக்கு பிறகு தனக்குப் பிடித்த ஒரே தலைவன் தம்பி பிரபாகரனே என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கம்பீரமாய் வாய் நிறைய்ய சொல்லிக் கொண்டிருப்பார் எந்தாத்தா தெரியுமா?” கண்களில் நீர்மல்க சொல்லிக்கொண்டிருந்த ரகு உடலோடு உள்ளமும் சிலிர்க்க அலுவலக கடிகாரத்தில் நேரம் பார்த்தான். பத்து மணியாக பத்து நிமிடங்கள் பாக்கியிருந்தது.

கேட்டுக்கொண்டிருந்த வாசுவின் பார்வையில் வியப்பு, கருணை, பயம் மூன்றையும் ஒருசேரக் காணமுடிந்தது.

காம்பவுண்ட் கேட்டைத் திறந்துகொண்டு ஊழியர்கள் ஒவ்வொருவராக அலுவலகத்திற்குள் வரத்தொடங்கினர். பெட்டிக்கடை வாசலில் நின்று ‘தம்’ அடித்துவிட்டு உள்ளே நுழைந்த அலுவலக உதவியாளன் ரகுவை நோக்கி “என்னங்க சார் இங்க உட்கார்ந்திருக்கீங்க?” என்றான் ஒன்றும் புரியாமல்.

“சும்மா ஒரு ஜாலிக்குத்தான்” உணர்ச்சிகளை மறைத்துக் கொண்டு அலுவலக உதவியாளனுக்கு பதில் சொன்ன ரகு, வாசுவை நோக்கி “காப்பி சாப்பிடலாமா வாசு?” எனக் கேட்டான்.

“ம்ம்… சாப்பிடலாங்க சார்” என்று தயக்கத்துடன் பதிலளித்தான் வாசு.

“கண்ணன் இந்தாங்க, போய் மூனு காப்பி வாங்கிட்டு வந்துடுங்க” வாசுவின் பதிலை எதிபார்க்காமல், ரகு இருபது ரூபாய் தாளை எடுத்துக் கொடுத்து அலுவலக உதவியாளனை கடைக்கு அனுப்பி வைத்தான்.

“சார் உங்க தாத்தா கதைய மேல சொல்லுங்க சார்” நிஜமான எதிர்பார்ப்புடன் வாசு ரகுவை நோக்கினான்.

“வயசானவர்களுக்கும் இளையவர்களுக்குமான கருத்து வேறுபாட்டுக்கு காரணங்கள் வீட்டுக்கு வீடும் ஊருக்கு ஊரும் மாறுபடுகிறதுன்னு நினைக்கிறேன் வாசு” என்றான் தீவிர சிந்தனையுடன் ரகு.

“உண்மை தான் சார். உலகத்துல இருக்கிற பெரும்பாலான முதியோர்கள் வயசான காலத்துல பிள்ளைகளின் அன்பு கிடைக்காமல் அவதிப்படுவதற்கு அடிப்படைக் காரணமே இந்த கருத்து வேறுபாடுகள்தான் சார்” என்றான் வாசு.

“ஆமாம் வாசு! மாலை வேளைகளில் கிண்டலும் கேலியுமாக மைதானத்துல விளையாடும் சிறுவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பது தாத்தாவுக்கு மிகவும் பிடிக்கும். அதற்காகவே நிலபுலன்களை சிறிது நேரம் மறந்துட்டு ஊருக்குள்ள காலாற நடந்து வருவார். ஒடிப்பிடித்து விளையாடும் பிள்ளைகளின் விளையாட்டை ரசித்து அனுபவிப்பார். அது கிழவிக்கும் என்னுடைய அத்தைகளுக்கும் அறவே பிடிக்காது. கொட்டாய்ல இருக்கிற மாடுங்களைப் பிடிச்சு மேய்க்காம இந்த வயசுல கிழத்துக்கு ஊருக்குள்ள என்ன வேலை? அதுவும் சின்னப் பசங்களோட…?” என்று தாத்தா காது படவே ஏசுவாங்க. தாத்தா தள்ளாடி தள்ளாடி வயக்காட்டுக்கு திரும்பிப் போவதைப் பார்க்க பாவமா இருக்கும்”

“அச்சச்சோ கொடுமை சார் முதுமை “என்றான் வாசு.

“பொம்பிளைங்க மட்டுந்தான் இப்படி இரக்கமில்லாம பேசுதுங்கன்னு இல்லை வாசு. பெரியவருக்கு வயசாயிடுச்சு. அடிக்கடி நிதானம் தவறிப்போகுது. அதனால ஊர்ல நடக்குற நல்லது கெட்டதுக்கெல்லாம் அவரைக் கூப்பிட்டு தொல்லை பண்ணாதீங்கன்னு வீட்டு ஆம்பிள்ளைகளும் அவரை ஒதுக்கி வச்சுட்டாங்க. அதை அப்படியே ஏத்துக்கிட்டு ஊர் இளவட்டப் பசங்களும் அவரை எதுக்கும் கூப்பிடுறதை நிறுத்திட்டாங்க. அதான் தாத்தா நொறுங்கிப் போயிட்டார்.” சிறிது நேரம் மூச்சு விட்டுக்கொள்வதற்காக ரகு பேச்சை நிறுத்தினான்.

“கேக்குறதுக்கே எனக்கு கஷ்டமா இருக்குங்க சார். தாத்தா மனசு என்ன பாடுபட்டிருக்கும்? எப்படி சார் அவரால அங்க இருக்க முடியும்” வாசுவின் குரல் முகம் தெரியாத தாத்தாவிற்காக பரிதாபப்பட்டது.

“தனிமைப் பேய்தான் அவரை பிடிச்சுடுச்சி வாசு. அது மென்மையானதுதான்; ஆனால் தாத்தாவின் இதயத்தை வலிமையாகத் தாக்கி பதம் பார்த்துடிச்சு போல. திண்ணையில் உட்கார்ந்திருக்கும் வேளைகளிலும், மாடு மேய்க்கிற பொழுதுகளிலும் அவரைக் கடந்து போகும் மனிதர்களிடம் எல்லாம், ஏம்பா நீங்க சென்னைக்கா போறீங்க? அங்க என்பேரன் அப்பு இருக்கான். உங்களுக்கு ஏதாவது தேவைன்னா அவங்கிட்ட போய் பேசுங்க. எம்பேர சொன்னீங்கன்னா உங்களுக்கு எல்லாம் முடிச்சுக் கொடுப்பான். அப்படியே அவன ஊருக்கு ஒரு நடை வந்துட்டு போகச்சொல்லுங்க என்று சொல்லிக்கொண்டிருப்பாராம்.” ரகு சொல்லச் சொல்ல பக்கத்திலிருந்த வாசுவால் தாத்தாவின் வேதனையை ஊணர முடிந்தது.

பழைய நினைவுகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட ரகு, என்னப்பா வாசு காப்பிக்கு போனவன் ஆளையே காணோம்? என்றான்.

தாத்தா கதையிலிருந்து மீள முடியாத வாசு “ப்ச்..வாங்கிட்டு வருவான் சார்” என்றான் சலிப்புடன். பிறகு “நீங்க தாத்தவைப் போய் பார்க்கவே இல்லையா சார்?” என்று கதைக்கு மீண்டும் வித்திட்டான்.

“போன பொங்கலுக்கு போய் பார்த்துட்டு வந்தேன் வாசு. அப்பதான் இந்த விவரமெல்லாம் எனக்கு சொன்னாங்க.”

“உங்க கிட்ட தாத்தா அவங்களைப் பற்றி ஏதும் புகார் சொல்ல்லையா சார்?”

“இல்லை வாசு தாத்தா எதும் சொல்லவில்லை, ஆனால், ஆபிஸ் சென்னைல எங்க இருக்குன்னு என்னைக் கேட்டார்”

“சொன்னீங்களா சார்?” வாசு ஆவலுடன் கேட்டான்.

ஆமாம், அலுவலக முகவரியை எழுதிக்கொடுத்துட்டு அவரிடம் “ஏன் தாத்தா உங்களுக்கு இது” என்றேன்.

அதற்கு அவர், “இல்லடா அப்பு, அரசாங்க நாற்காலில நீ உட்கார்ந்து வேலை செய்யுறத ஒரு தடவையாவது கண்ணால பார்த்துட்டேன்னா போய்ச் சேர்ந்துடலாம் பாருன்னு சொல்லி சிரிச்சார்” என்றான் ரகு கண்ணீர் மல்க.

கண்ணீர் பொங்கும் ரகுவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த வாசு, “சார் நீங்க ஏன் லீவு கொடுத்துட்டும் ஊருக்குப் போகலைன்னு இப்பதான் எனக்குப் புரியுது” என்றான்.

“ஆமாம் வாசு. ஒருவேளை தாத்தா இங்க தேடிகிட்டு வந்தார்னா…?” ரகு வார்த்தைகளை முடிப்பதற்கு முன் கதவு திறக்கும் சப்தம் கேட்டது.

கண்ணன் கையில் காப்பி கோப்பைகளுடன் உள்ளே நுழைந்தான்.

“என்ன கண்ணா இவ்ளோ லேட்டு” என்றான் வாசு.

“அது ஒன்னுமில்லைங்க சார், நம்ப ஆபிஸ் அட்ரஸ வச்சுக்கிட்டு சின்ன இரும்பு கேட்கிட்ட ஒரு பெரியவர் யாரோ ‘அப்பு’ன்றவர பார்க்கனும்னு நின்னுகிட்டிருந்தார். கடந்த இருபது வருஷமா நான் இங்கதான் வேலை செய்யுறேன், ‘அப்பு’ன்ற பேர்ல இங்க யாரும் வேலை செய்யலன்னு சொல்லி அனுப்பறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சிங்க சார்.” என்று அவன் சலித்துக் கொண்டான்.

சலித்துக்கொண்ட அவன் பதிலைக்கேட்டு ரகுவும் வாசுவும் கிளர்ச்சி அடைந்தார்கள். இரயில் நிலையத்தில் நிற்காமல் தடதடக்கும் விரைவுவண்டி போல புதியதாக உயிர்பெற்று அலறியடித்துக்கொண்டு அலுவலகத்திற்கு வெளியே ஒடினார்கள். காரணம் புரியாத அலுவலக உதவியாளனும் அவர்கள் பின்னே ஓடத்தொடங்கினான். மனித மனோபாவங்களால் தாழிடப்பட்டிருந்த இரும்பு கேட்டை எட்டி உதைத்து வெளியேறிய இருவரும் கண்களில் ஏமாற்றத்துடன் நின்றனர்.

அவர்கள் இருவரையும் பின்தொடர்ந்து ஓடிவந்த அலுவலக உதவியாளன் “கெழம் இந்தப் பக்கம்தான்சார் போச்சு” என்றான் கைகளை நீட்டி கண்களில் குழப்பத்தோடு. வெய்யில் கடுமையாக இருந்தது

அலுவலக உதவியாளன் சொன்ன திசையில் விரைந்து சென்று தாத்தாவை தேடுவது என முடிவு செய்து ஓர் ஆட்டோவை கைதட்டி அழைத்த கணத்தில் அலுவலகத்திற்குள் தொலைபேசி விடாமல் அடித்துக் கொண்டிருந்தது.

– டிசம்பர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *