கைக்கடிகாரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 28, 2013
பார்வையிட்டோர்: 7,462 
 

சரவணனுக்கு ஏக்கமாக இருந்தது யாராவது ‘மணி என்னவாகிறது?’ என்று கேட்கும் பொழுது இடது கையை உயர்த்திப் பார்த்து மணி சொல்லும் மற்ற மாணவர்களை பார்க்கும்பொழுது அவனுக்கு ஏக்கமாக இருக்கும்.

அவன் வகுப்பில் அவனைப் போல் ஒன்றிரண்டு பேரைத் தவிர மற்ற மாணவர்கள் எல்லோருமே வசதி படைத்தவர்கள் அப்படி ஒன்றும் எதைப்பார்த்தாலும் தனக்கு அதுவேண்டும் என்று நினைக்கும் குணமுடையவன் அல்ல சரவணன்.

இருப்பினும் கைக்கடிகாரத்தின் மீது அவனுக்குத் தீராத ஆசை. ஓர் எலக்ட்ரானிக் கடிகாரம் இன்றைக்கெல்லாம் முப்பத்தைந்து ரூபாய்தான். அதை வாங்கிக் கொடுக்கும் அளவுக்குக் கூடவா அப்பாவிடம் பணம் இல்லை?

தேவையில்லாமல் இந்தச் சின்ன விஷயத்தில் அப்பா ஏன் அழுத்தம் பண்ணுகிறார் என்று அவனுக்குப் புரியவில்லை.

ஒருநாள் பொறுக்கமுடியாமல் அப்பாவிடம் சென்று கேட்டான், கடிகாரம் வாங்கித்தரச்சொல்லி.

“நீ நல்ல பிள்ளையாக எல்லோரிடமும் நடந்து கொள். நான் கடிகாரம் வாங்கித்தருகிறேன்” என்று அப்பா சொன்னார்.

சரவணனுக்கு அது போதாதா? மிகவும் பிரயத்தனப் பட்டு நல்லபெயர் வாங்கினான்.

பெரியவர்களிடம் மரியாதையாக நடந்துகொண்டான். தெருவில் வயதானவர்கள் சென்றால் வலுக்கட்டாயமாக அவர்களைக் கைகளைப்பிடித்து அழைத்துச்சென்று தெருவைக் கடக்க உதவுவான்.
இப்பொழுதெல்லாம் அம்மாஅப்பா சொல்லும் வேலைகளைத் தட்டாமல் செய்தான்.

இரண்டு வாரங்கள் சென்றன.

அப்பா கடிகாரம் வாங்கித்தரவில்லை. அவனுக்கு ஆத்திரமாக வந்தது.
நேராக அப்பாவிடம் சென்றான்.

பேப்பர் படித்துக் கொண்டிருந்த அப்பா, அருகில் நிழலாடவே நிமிர்ந்து பார்த்தார்.

“என்னப்பா சரவணா, என்ன வேண்டும்?” என்று கேட்டார்.

“அப்பா, இந்த இரண்டு வாரங்களில் என்னிடம் மாற்றம் எதுவும் காணவில்லையா நீங்கள்?” மறைமுகமாக கைக்கடிகாரத்தை ஞாபகமூட்டினான்.

“இல்லையே! எப்பொழுதும் போல்தான் நீ இருக்கிறாய்” என்றார் அப்பா.
ஆத்திரமுற்ற சரவணன் “ஆமாம், நான் நல்லவனாக இருந்து என்ன லாபம்? நல்லவனாக இருந்தால் கடிகாரம் வாங்கித் தருகிறேன் என்று சொன்னீர்கள் ஆனால் வாங்கித் தரவில்லை. பின் ஏன் நான் நல்லவனாக இருக்க வேண்டும் நல்லவனுக்குக் காலமில்லை” என்று படபடவென்று பேசிவிட்டு வெளியேறினான்.

அப்பா சிரித்துக் கொண்டார்.

கடிகாரம் கிடைக்காத ஏமாற்றத்தில் வகுப்பில் கூட அவன் யாரிடமும் அதிகம் பேசவில்லை அவன் முகவாட்டத்தைக் கண்ட ஆசிரியர், “சரவணா, உன் உடம்புக்கு என்ன?” என்று கேட்டார்.

“தலையை வலிக்கிறது சார்!” என்று பொய் சொன்னான் சரவணன்.

“அப்படியானால் ஓய்வு எடுத்துக் கொள்” என்று ஆசிரியர் சொல்ல, புத்தகத்தை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டான் சரவணன்.
வரும் வழியில் ஒரு வயதான கிழவி அவனைக்கூப்பிட்டு “தம்பி மயக்கமா வருது அந்தக் கடையிலே என் பேரன் நிற்கிறான் அவனைக் கூப்பிடேன்” என்று சொன்னாள்.

சரவணன் முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டான். ‘ஆமாம் இந்த உதவியைச் செய்வதால் எனக்கு என்ன நன்மை விளையப்போகிறது’ மனதுக்குள் எண்ணியவாறே “முடியாது, வேறு ஆளைப் பாருங்க” என்று கொடூரமாகச் சொல்லி விட்டுச் சென்றான்.
பழக்கப்பட்டவர்கள் கூட இவன் குணமாற்றத்தைக் கண்டு வியப்படைந்தார்கள்.

சரவணன் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. இந்த இரண்டு வாரங்களில் அவன் கற்றுக்கொண்ட பாடம் ‘நல்லவனாக இருந்து ஒரு லாபமுமில்லை’ என்பது தான்.

சிந்தித்தபடியே நடக்கையில் தான் அது நடந்தது.

ஒரு சின்னப் பெண் குழந்தை, மூன்று வயதிருக்கும். கடையில் சாமான் வாங்கிக் கொண்டிருக்கும் அம்மாவை விட்டு விட்டு தளர்நடை போட்டு மெயின்ரோட்டில் வந்து கொண்டிருந்தது. எதிரே வெகுவேகமாக ஒரு பஸ் வந்து கொண்டிருந்தது.

ஒரு நிமிடம் அவன் தன்மனசுக்குள் வைத்திருந்த வைராக்கியமெல்லாம் மறந்து போனவனாய், தன் உயிரையும் மதிக்காமல் ஓடிச் சென்று அந்தக் குழந்தையைத் துhக்கிக் கொண்டு சாலை ஓரமாகத் தாவிச் சென்றான். அப்போது அவன் நிலைதடுமாறிக் கீழே விழுந்தான்.

பயத்தில் குழந்தை அலற, சரவணனும் பயத்தில் மயக்கமுற்றான்.
கண்விழித்த போது அவனைச் சுற்றி அவனது அப்பா, அம்மா, அந்தக் குழந்தையின் பெற்றோர் ஆகியவர்கள் நின்றிருந்தனர்.

சரவணன் தன் கையைத் தூக்கிப் பார்க்கையில் புத்தம்புதுக் கடிகாரம் பளபளத்தது.

அப்பா சொன்னார் “ஆமாம் சரவணா, நீ குழந்தையினுடைய உயிரைக் காப்பாற்றியதால் அந்தக் குழந்தையின் அப்பா உனக்கு இந்தக் கைக்கடிகாரத்தை அன்பளிப்பாக வழங்கியிருக்கிறார். இப்ப திருப்திதானே?”

“அப்பா, என்னை மன்னிச்சுடுங்க அப்பா, நல்லவனா நடந்தா ஏதாவது பரிசு கிடைக்கும், அப்படின்னு நினைச்சு நான் நல்லவனா நடக்க முயன்றேன். அது சரியில்லைதான். ஆனால், இப்போது என்னையும் அறியாமல், ஓடிப்போய்க் குழந்தையைக் காப்பாத்தினேன். கடிகாரம் கிடைக்குமென்று நான் இதைச் செய்யவில்லை அப்பா” கண்களில் நீர் வழிய அவன் இப்படிக் கூறினான்.

அப்பா அருகில் வந்து அவனைத் தட்டிக்கொடுத்தார். “கவலைப்படாதே சரவணா. உன் நல்ல மனசு எனக்குப் புரியுது. தன்னலமற்ற சேவைதான் உயர்ந்தது. அதை என்றைக்குமே நீ மறக்கக் கூடாது” என்றார்.

இப்பொழுதெல்லாம் சரவணன் எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் எல்லோருக்குமே உதவி செய்கிறான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *