கூடை பிண்ணும் தொழிலாளி – ஒரு பக்க கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2020
பார்வையிட்டோர்: 15,678 
 

ஒரு ஊரில் இளம் வயது கணவனும் மனைவியும் வாழ்ந்து வந்தனர். காட்டிலே சென்று மூங்கிலை வெட்டி வந்து, அதை துண்டு துண்டாக நறுக்கி கூடை, புட்டி, முறம், நாற்காலி போன்றவைகளைச் செய்வார்கள். இருவரும் மூங்கிலை வைத்து கூடை பின்னுவதில் கைத்தேர்ந்வர்கள்.

ஊரில் உள்ளோரும் புதியதாக வாங்குவதென்றாலும், பழையது உடைந்துபோய் விட்டது என்றாலும் இவர்களிடத்தில்தான் வந்து கொடுப்பார்கள். அந்த அளவிற்கு வேலையில் சுத்தமும் ஒழுக்கமும் இருந்தது.

இந்நேரத்தில் இளம் மனைவி கர்ப்பமுற்றாள். தன்னுடைய மனைவியைத் தாங்கு தாங்கென்று உள்ளங்கையில் தாங்கினான். பிரசவத்திற்கு பணம் நிறைய தேவைப்படும் என்பதற்காக இரவுபகல் என்று பாராமல் உழைத்தான். அதன்விளைவாக அதிகப் பொருட்கள் உண்டாகின.

“இதை ஊரில் இவையெல்லாம் விற்றுவிட முடியாது. வெளியூருக்குச் சென்று விற்றால்தான் பணம் பார்க்க முடியும்” என்று தன்னுடைய மனைவியிடம் சொன்னான்.

ஒருநாள் பிண்ணியக் கூடையை எடுத்துக்கொண்டு வெயியூர்க்குச் சென்று விற்று வருவதாகவும் ஒருவாரத்திற்கு மேல் ஆகும் என்றும் அதுவரை நீயும் பிள்ளையும் பாதுக்காப்பாக இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

கணவன் வருகின்ற நாட்களை எண்ணி எண்ணி மனம் வெதும்பினாள். இன்று வருவான் என்று எதிர்ப்பார்த்தவள் ஒருமாதமாகியும் வரவே இல்லை. இருக்கின்ற கூடையைப் பிண்ணியும் விற்றும் பிழைப்பை நடத்தி வந்தாள். அவளுக்கு அழகான ஆண் குழந்தையும் பிறந்து விட்டது. குழந்தையை வைத்துக்கொண்டும் வேலை செய்து கொண்டும சாப்பிடுவது அவளுக்கு ரொம்ப சிரமமாகவே இருந்தது. அந்த நேரத்தில் ஊர்க்காரப் பெண் ஒருத்தி, கூடை வாங்குவதற்காக வந்திருந்தாள்.

“அம்மாடி… உன் புருஷனை அசலூருல பாத்தன். அவன் பணக்கார பெண் ஒருத்தியை கல்யாணம் செஞ்சிகிட்டு அங்கையே வாழ்றான். உன்ன பாக்க வர்றானா… இல்லை…” என்றாள்.

அவளின் தலையில் இடி இறங்கியது. மகனை மார்போடு அணைத்து கண்ணீர் வடிய அழுதாள். விடிய விடிய தூக்கம் இல்லாமல் மனம் நொந்து போனாள்.

எப்படியோ கண்டுபுடித்து அந்த ஊருக்கே சென்று விட்டாள். அந்தப் பணக்கார வீட்டின் வாசலில் போய் நின்றாள். வீட்டுக்குள்ளிருந்து ஒருபெண் வந்தாள்.

“கூடை புட்டி முறம் வேணுமாம்மா”

“எங்க வீட்டுலேயே நிறைய இருக்கு. ஆனா, சிலதுகள் உடைஞ்சி இருக்கு. மாத்தி போட்டுக்கொடுக்கிறியா” என்று வீட்டின் பின்வாசலுக்கு வரச்சொன்னாள்.

இவளும் சம்மதம் தெரிவித்தாள். பெரிய வீடாயிருந்தது. வீட்டின் பின்வாசலுக்குச் சென்றாள். பின்வாசலில் கணவனைப் பார்த்தாள். விக்கித்து நின்றாள். கணவன் பயந்து போனான். நடுங்கினான்.

வீட்டுக்காரி உடைந்த சில சாமான்களைக் கொண்டு வந்தாள். ஒவ்வொன்றாய்ப் பிரித்துச் சரியாகக் கட்டிக்கொடுத்தாள். வேலை முடிந்து இரவு நேரம் ஆனது.

வீட்டுக்காரியிடம் வேலைக்கான செய்த கூலிக்காப் பணம் பெற்றுக்கொண்டாள். பையன் வேற அழுது கொண்டிருந்தான். தன்னுடைய ஊருக்குப் போக எத்தனித்தாள்.

“இந்நேரம் எங்கிட்டு போவ… இங்கேயே இரு.. விடிஞ்சதும் போவ. குழந்தை வேற அழுவுறான். சாப்பாடு கொடுக்கிறன். இங்கையே தங்கிடு” என்றாள்.

அவன் ஒருவார்த்தைக் கூட பேசவில்லை. மௌனமாகவே நின்றான். ஏமாற்றிய விரக்தியில் கோபமாய்ப் பார்த்தாள் அவள். ஆனால் அவனுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது.

ஆசிரியர் குறிப்பு:
கொரோனா வைரஸ் காரணமாகக் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. சொந்த ஊருக்கு வந்துள்ளேன். பல மாதங்களுக்குப் பிறகு அம்மா அப்பாவுடன் நீண்டதொரு உறவு. அப்போதுதான் அம்மாவிடம் கதை கேட்க ஆரமித்தேன். சின்ன வயசில் நிறைய கதைகள் சொல்லுவார்கள். ஒவ்வொரு நாள் இரவும் ஒரு கதையென கடந்த பத்து நாட்களிலும் பத்துக் கதைகள் கேட்டேன். இந்தக் கதைகள் யாவும் என்னுடைய கற்பனையில் உருவானவை அல்ல என்பதைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இக்கதைகள் முழுவதும் சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சொல்லக்கூடிய கிராமத்துக் கதைகளே ஆகும். கதைகள் பெரும்பாலும் சின்னச்சின்ன கதைகளைக் கொண்டே அமைந்துள்ளன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *