கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 11,145 
 

பூந்தமல்லி வரதர் கோயில் தாயார் சந்நிதி பின்னால், ‘பிள்ளையார் பந்து’ ஆட்டத்தின் சுண்டல் இடைவேளையின்போது தான் ரங்கன் அந்த எக்குத்தப்பான கேள்வியைக் கேட்டான்…

‘‘டேய் சீனு, கொழந்தைங்க எப்பிடிடா பொறக்குது?’’

எல்லாம் தெரிந்தவன்போல், சீனு சட்டென்று பதில் சொன்னான்… ‘‘இது தெரியாதா? ஆகாசத்திலேர்ந்து தொப்புனு விழும்டா!’’

‘‘ஆ…ஆ… கதை… கதை உட்றே! ஆகாசத்திலேர்ந்து மழைதாண்டா விழும்!’’

வாசலில், பெருமாள் புறப்பாட்டை அறிவிக்க அதிர்வேட்டு போடத் தொடங்கிவிட்டார்கள்.

‘சர்ர்ர்ர்ர்ர்ர்… ட-மா-ல்!’

‘‘ரங்கா, சரியாத் தெரியலேடா! ஆனா ஒண்ணு… எல்லாக் கொழந்தைங் களும் சொல்லி வெச்ச மாதிரி, சுவர்க் கோழி ‘ழீ’ன்னு கத்தற ராத்திரி நேரத்துல தான் பொறக்குது. அதுவும் கண்ணை மூடி, வீல்வீல்னு கத்திக்கிட்டு..!’’

‘‘டேய், ராகவா! உங்க வீட்லதான் அடிக்கடி கொழந்தைங்க பொறந்துட்டே இருக்குமே! தூளியும், தொட்டிலும் எப்பவும் உங்க வீட்லதானே ஆடிக் கிட்டே இருக்குது! நீ சொல்லேண்டா, குழந்தை எப்படிப் பொறக்குது?’’

ரங்கன் கேள்வியை முடிப்பதற்கு முன், அந்த வாக்கியத்தைக் குறைப் பிரசவமாக்கி, அவன் காதைக் கொத்தாகப் பிடித்துத் திருகினார் மடைப்பள்ளி ஆராவமுதன்.

‘‘ஏண்டா, சின்ன பையன் பேசற பேச்சாடா இது? அதுவும் கோயில்லே? அதுவும், மண்டபத்திலே அனுமார் தூண்கிட்டே நின்னு கேக்கற கேள்வியா இது? கொழந்தை எப்படிப் பொறக்கு துன்னு இப்ப ஒனக்குத் தெரிஞ்சாகணுமா? இதோ, என்ன செய்யறேன் பாரு…’’

‘‘மாமா, மாமா… விட்டுடுங்கோ மாமா! காது வலிக்குது மாமா!’’

‘‘இருடா, கொழந்தை எப்படிப் பொறக்குதுனு கேட்டியே, தெரிஞ்சுக்க வேணாமா? வா, தேரடி இருட்டு மூலைக்குப் போலாம்! அங்க கெக்கே பிக்கேனு சிரிச்சுக்கிட்டே சொக்கம்மா இருப்பா. அவகிட்டே உன்னைப் புடிச்சுக் கொடுத்துடறேன். நீயே கேட்டுத் தெரிஞ்சுக்கோ அவகிட்டே!’’

மரியாதை நிமித்தம் ஆராவமுது மாமாவின் கைக்கெட்டும் தூரத்துக்குக் கொஞ்சம் தள்ளி ஓட்டமும் நடையு மாகத் தொடர்ந்து போன நானும் சீனுவும் அதிர்ந்து போனோம்.

சொக்கம்மாகிட்டேயா? ஐயையோ!

சீனு எமகாதகன். முள்ளை முள்ளால் எடுப்பதில் சமர்த்தன்.

மூர்க்கத்துடன் துரத்தும் கோயில் காளைக்கே பயப்படாத ஆராவமுதன், நாய் என்றால் நடுநடுங்குவார். கடித்தால் தொப்புளைச் சுத்தி எம்பிராய்டரி மாதிரி யார் ஊசி போட்டுக் கொள்வது!

‘‘மாமா… மாமா… ஜாக்கிரதை! பின்னாடி நாய் வருது!’’ என்று திடுமென்று சீனு போட்ட அலறலில் பயந்து துள்ளிக் குதித்து, அவர் ரங்கன் காதை விட்ட அடுத்த கணமே, நாங்கள் விட்டோம் சவாரி!

அன்று இரவு, முற்றத்தில் மாவடுவைத் தொட்டுக்கொண்டு, மோர் சாதத்தை அவசரமாகச் சாப்பிட்டு முடித்த கையோடு எங்கள் தாத்தா, பாட்டியுடன் குரலைத் தாழ்த்திப் பேசிக்கொண்டு இருந்தார்…

‘‘என்னடி… மீனாட்சிக்கு வலி எடுத்துடுத்தா, இல்லியா?’’

‘‘ஆமாம். இல்லே!’’

‘‘அதென்ன ஆமாம், இல்லே?’’

‘‘கொஞ்சம் சும்மா இருங்களேன். எங்களுக்குத் தெரியாதா? இப்பதான் மொத மொதல்ல பிரசவம் பார்க்கிறோமா?’’

‘‘அதுக்கில்லேடி! மருத்துவச்சி ஸ்டெல்லாவுக்கு சொல்லி அனுப்ப வேணாமா?’’

‘‘அட, ராமா! எல்லாம் சொல்லி யிருக்கு. வருவா! நீங்க கொஞ்சம் சும்மா இருங்கோ!’’

‘‘கடிகாரம் வெச்சிருக்கா? கொழந்தை பொறக்கிற சரியான நேரம் பார்க்கணும்.’’

‘‘எல்லாம் வெச்சிருக்கு.’’

‘‘சாவி குடுத்தாச்சா? ஓடறதா? ஆட்டிப் பார்த்தியா?’’

‘‘அடடா! குடுத்தாச்சு. ஓடறது. பார்த்தாச்சு!’’

‘‘பஞ்சாங்கம்?’’

‘‘வெச்சிருக்கு!’’

‘‘டார்ச்?’’

‘‘இருக்கு!’’

‘‘எரியறதா? பாட்டரி புதுசா வாங்கிட்டு வந்தேனே… போட்டியா?’’

‘‘சிவ சிவா! எல்லாம் போட்டு இருக்கு. பிரசவ வேதனைப்படறது நீங்களா, மீனாவா தெரியலே!’’

மூடிய கதவின் பின்னாலிருந்து, அம்மா வின் அலறல் என்னை அதிரவைத்தது.

‘‘தாத்தா, ஒண்ணு கேக்கலாமா?’’

‘‘என்னடா கேக்கப்போறே? உனக்குத் தம்பிப் பாப்பா பொறக்குமா, தங்கச்சிப் பாப்பா பொறக்குமானு கேக்கப்போறியா?’’

‘‘அதில்லே தாத்தா! கொழந்தைங்க எப்படிப் பொறக்குது?’’

‘‘சிவ சிவா! ஆகாசத்திலேர்ந்து தொப்புனு குதிக்கும். போடா, போய் விளையாடு, போ!’’

‘‘அந்த ரூமுக்கு மேலே கூரை இருக்கே… அங்கேர்ந்து அடிக்கடி தேள்தானே விழும்? கொழந்தைங்க எப்படி விழும் தாத்தா?’’

‘‘அதெல்லாம் அப்புறம் சொல்றேன்… இந்தா, இந்த மிட்டாயை வாங்கிக்கோ. உனக்கு ஸ்டெல்லா வீடு தெரியுமில்லையா, கிருஷ்ணாயில் டிப்போக்குப் பக்கத்துல…’’

‘‘தெரியும் தாத்தா! இதோ, ஓடிப் போய் கூட்டிட்டு வரேன்!’’

தாத்தா கொடுத்த புளிப்பு மிட்டாயை வாயில் அடக்கிக்கொண்டு, என்னுடைய கற்பனை மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்து, ‘ர்ர்ரூம்… ர்ர்ரூம்ம்ம்’ சத்தத்துடன் பறந்து, ஸ்டெல்லா வீட்டின் முன் போய் நின்றேன்.

என்னைக் கண்டதும் புன்னகைத்தார் ஸ்டெல்லா மேடம்!

‘‘என்ன தம்பி… வீட்ல வரச் சொன்னாங்களா?’’ என்றார்.

‘‘ஆமா!’’

‘‘சரி, உட்காரு! இதோ வரேன்’’ என்று சொல்லிவிட்டு, உள்ளே போனார். உள்ளிருந்து இருமல் சத்தம் கேட்டது.

நான் அந்த ஹாலை சுற்றிப் பார்த்தேன். சுவரில் அன்னை மேரி படம். மேரியின் கையில் குழந்தை ஏசு.

இஸ்திரி போட்ட மொட மொட வெள்ளைப் புடவையில், மெல்லிய சோப் வாசனையுடன் வந்தார் ஸ்டெல்லா. மேரி மாதா படத்தின் முன், கண்களை மூடிப் பிரார்த்தித்தார். பின்பு, ‘‘வரேங்க’’ என்று உள் நோக்கிக் குரல் கொடுத்தார்.

பதில் வரவில்லை. மூடிய கதவின் பின்னாலிருந்து அடுக்கு இருமல்தான், ‘சரி, போயிட்டு வா!’ என்பது போல் பதிலாக வந்தது.

‘‘வா, போகலாம்!’’ என்று என்னுடன் கிளம்பினார் ஸ்டெல்லா.

‘‘ஏன் தம்பி… உனக்குத் தம்பிப் பாப்பா வேணுமா, தங்கச்சிப் பாப்பா வேணுமா?’’ & ஸ்டெல்லா மேடம் சிறு புன்னகையோடு கேட்க, ‘‘எனக்குத் தம்பியும் வேணாம், தங்கையும் வேணாம். நாய்க் குட்டிதான் வேணும்’’ என்றேன்.

‘‘நாய்க் குட்டியா?’’ என்று சிரித்தவர், ‘‘கடிக்குமே! பரவாயில்லையா?’’ என்றார்.

‘‘கொழந்தைங்ககூடத்தான் கடிக்கும். வாயிலே வெரலை வெச்சுப் பாருங்க, வெடுக்குனு கடிக்கும். அது மட்டுமில்லே ஆன்ட்டி, கொழந்தைங்க எப்பப் பார் நய்… நய்னு அழும். நாய்க்குட்டிங்க அழவே அழாது. அழகா வாலை ஆட்டும்’’ என்றவன், ‘‘அது சரி ஆன்ட்டி, உங்களை ஒண்ணு கேக்கவா? சீனுக்கும் தெரியலே, தாத்தாவுக்கும் தெரியலே!’’ என்றேன்.

‘‘என்னது? கேளு!’’

‘‘கொழந்தைங்க எப்படிப் பொறக்குது?’’ என்று ரங்கன் கேட்ட கேள்வியை இவரிடமும் கேட்டேன். திடுக்கிட்டு விட்டார்.

‘‘எ… என்ன கேட்டே?’’

‘‘கொழந்தைங்க எப்படிப் பொறக்குதுனு கேக்கறேன்?’’

ஒரு கணம் அமைதியாக யோசித்தவர், ‘‘ம்… எப்படிப் பொறக்குதா? சொல்றேன். அதுக்கு முன்னாடி கொழைந்தங்க ஏன் பொறக்குதுனு உனக்குத் தெரியுமா?’’ என்று திருப்பிக் கேட்டார்.

‘‘ஏன்… தெரியலையே?’’

‘‘யோசிச்சு சொல்லு!’’

அதற்குள் வீடு வந்துவிட்டது. வாசலில் தாத்தா நின்றிருந்தார். கோடி வீட்டு வக்கீல் வீட்டு மாமி சிறப்பு ஆலோசகராக வந்திருந்தார்.

‘‘உனக்குத் தம்பிப் பாப்பா வேணுமா, தங்கச்சிப் பாப்பா வேணுமாடா?’’ என்று வக்கீல் மாமியும் கேட்டார்.

‘‘எனக்கு நீங்க பண்ற சோமாசிதான் மாமி வேணும்’’ என்றேன்.

‘‘போடா, சாப்பாட்டு ராமா!’’ என்று செல்லமாக என் கன்னத்தைக் கிள்ளினார்.

எல்லோரும் வீட்டுக்குள் போனோம்.மூடின அறைக்குள்ளிருந்து அம்மாவின் அலறல் சத்தம் உச்சஸ்தாயியில் கேட்டது. தாத்தாவின் சிவ… சிவ உச்சாடனம் வேகமெடுத்து, உதடுகள் தந்தி அடித்தன. வக்கீல் மாமி, பேஸின் பேஸினாக அறைக்குள் வெந்நீரை எடுத்துச் சென்றபடி இருந்தார். அரிக்கேன் விளக்கின் திரி புகைய ஆரம்பித்தது.

சில விநாடிகளில், ‘‘குவா… குவா…’’ என்று குழந்தையின் அழுகை வீறிட்டுக் கேட்டது.

‘‘நர்ஸ் ஸ்டெல்லா வந்த அரை மணியிலே கொழந்தை பொறந்தாச்சு. கைராசிக்காரிதான்!’’

‘‘புள்ளைக் கொழந்தை. பெரியவரே, உங்க பேரனைப் பாருங்க!’’

‘‘கொடி சுத்திப் பொறந்துதாம்மா?’’

‘‘இல்லீங்க.’’

‘‘தாயார் சொகமா?’’

‘‘தாய், சேய் ரெண்டு பேரும் நல்ல சுகம்!’’

‘‘பரணி நட்சத்திரம்… தரணி ஆள்வான்!’’ என்றார் தாத்தா, பஞ்சாங்கம் பார்த்து.

‘‘தரணி ஆள்வான்னா என்ன அர்த்தம் தாத்தா?’’

‘‘ராஜாவா இருப்பான்னு அர்த்தம்!’’

‘‘அப்போ எல்லா ராஜாக்களும் பரணி நட்சத்திரமா தாத்தா? அரிச் சந்திரன், திருதராஷ்டிரன், தசரதன்…’’

‘‘இந்தாடா, புளிப்பு மிட்டாய் எடுத்துக்கோ! போ, விளையாடு! போ!’’ என்றார் தாத்தா.

உள்ளேயிருந்து பாட்டி கையில் பளபளவென்று பித்தளைத் தாம்பாளத் துடன் வந்தாள். அதில் ஒரு புடவை, ரவிக்கைத் துண்டு, தேங்காய், வெற்றிலைப் பாக்கு, வாழைச் சீப்பு, கட்டி கட்டியாகக் கல்கண்டு, ரூபாய் நோட்டுகள்…

‘‘இதெல்லாம் எதுக்குங்கம்மா?’’

‘‘எடுத்துக்கோம்மா! நீ மகராசியா இருக்கணும். பிரசவ அறைக்கு நீ வந்துட்டேன்னா, அம்மா உடம்புல கொழந்தை எங்கே ஒளிஞ்சிருந்தாலும், ஜாக்கிரதையா வெளியிலே கொண்டு வந்துடுவியே!’’

‘‘எல்லாம் மாதாவோட கிருபைங்க..!’’ என்று பணிவாகச் சொன்னார் ஸ்டெல்லா.

‘‘எவ்வளவு பெண்களுக்கு நீ பிரசவம் பார்த்திருப்பே? எவ்வளவு கொழந்தை களை மொத மொத தொட்டுத் தூக்கி இருப்பே? பார்த்துட்டே இரு, உனக் குன்னு ஒரு தங்க விக்கிரகத்தைக் கடவுள் சீக்கிரமே கொடுப்பாரு!’’

ஸ்டெல்லா கஷ்டப்பட்டுச் சிரித்தார். தளும்பும் கண்களுடன் கூரை யைப் பார்த்தார். என்ன, அங்கிருந்து தான் அவருக்கான குழந்தையும் குதிக்கப் போகிறதா?

ஸ்டெல்லா எல்லோரிடமும் விடைபெற்றுப் புறப்பட, அவரைக் கொண்டுவிட நானும் கிளம்புகிறேன். திரும்பிப் போகும்போது மேளச் சத்தம் மாத்திரம் மெலிதாகக் காதில் விழுந்தது. வீதிகள் வெறிச்சென்று இருந்தன.

‘‘ஆன்ட்டி, கொழந்தைங்க எப்படிப் பொறக்குதுனு நான் கேட்டதுக்கு, ஏன் பொறக்குதுனு திருப்பிக் கேட்டீங்களே… எனக்குத் தெரியலே ஆன்ட்டி! ஆமா, கொழந்தைங்க ஏன் பொறக்குது?’’

‘‘தேரடி முக்கிலே இருக்கிற சொக்கம் மாவைத் தெரியுமில்லியா, உனக்கு?’’

என் உடம்பு பயத்தால் சிலிர்த்தது. ‘ஆமாம்’ என தலையை அசைத்தேன்.

‘‘அவங்க ஏன் இப்படி ஆனாங்கனு தெரியுமா?’’

‘‘தெரியாதே!’’

‘‘அவளோட புருஷன் எப்பவோ செத்துப் போயிட்டாரு. அப்புறம் இந்தம்மாவை, பெத்த பிள்ளையே அடிச்சு, வீட்டை விட்டுத் தொரத்தி விட்டுட்டான். இவங்க போக்கிடம் இல்லாம, அநாதை ஆயிட்டாங்க. கொஞ்ச நாள் பிச்சைக்காரியா சுத்திட் டிருந்தவங்க, அப்புறம் பைத்தியம் பிடிச்சுப் போய்… ப்ச்… ரொம்பப் பாவம்! குழந்தை எப்படிப் பொறக்குதுனு கேட்டே, இல்லே! சொல்றேன். அம்மாவும் அப்பாவும் விரதம் இருந்து, கடவுள்கிட்டே குழந்தை வேணும்னு வேண்டிக்கிட்டா, கடவுள் அவங்களுக்குக் குழந்தை கொடுப்பாரு. சொக்கம்மாவும் அப்படித் தான் விரதம் இருந்தா. பிள்ளை வேணும்னு கடவுளைக் கேட்டா. பொறந்தது. ஆனா, குழந்தைங்க எப்படிப் பொறந்ததுங்கிறது முக்கியம் இல்லே. ஏன் பொறந்ததுங்கறதுதான் முக்கியம்!’’

‘‘அதனாலதான் நீங்களும் பயந்து, பிள்ளையே வேணாம்னு கடவுள்கிட்ட சொல்லிட்டீங்களா?’’

ஸ்டெல்லா நின்றார். உதடுகளை மடித்து, அழுந்தக் கடித்துக்கொண்டார். கசிந்த கண்களை சேலைத் தலைப்பால் துடைத்துக்கொண்டு, என் தலையை வருடினார். பின் மௌனமாக நடந்தார். நான் அவரைப் பின்தொடர்ந்தேன்.

அவரின் வீட்டு வாசலுக்குச்சென்ற போது, இருமல் சத்தம் வாசல் வரை கேட்டது. ஸ்டெல்லா மேடம், என் கன்னத்தைக் கிள்ளிவிட்டு, வீட்டுக்குள் போய்விட்டார்.

‘குழந்தை எப்படிப் பிறக்கிறது?’ என்று நாளைக்கு மறுபடியும் ரங்கன் கேட்டால், அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்துக்கொண்டே, நான் என் கற்பனை மோட்டார் சைக்கிளை ‘ர்ர்ரும்… ர்ர்ரூம்ம்ம்…’ என்று கிளப்பி, வீட்டை நோக்கிப் பறந்தேன்.

வேறு வழியில்லை… ‘குழந்தை எப்படிப் பொறக்குதுங்கிறது இருக்கட் டும்… ஏன் பொறக்குது? மொதல்ல அதுக்கு நீ பதிலைச் சொல்லு!’ என்று அவனைத் திருப்பிக் கேட்டு மடக்கிவிட வேண்டியதுதான்!

– ஜனவரி 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *