குருதட்சணை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 17, 2015
பார்வையிட்டோர்: 14,390 
 

கல்விக் கூடத்தில் தன்னை மறந்து விழுந்து விழுந்து படிக்கும் போதெல்லாம், பகீரதியின் மனத்திரையில் கண்களையே எரிக்கும் ஒரு காட்சி அவலமாய் தோன்றுவதெல்லாம் வறுமையில் தீக்குளித்து எரிந்து கருகிப் போன நிழல் தட்டி வெறிச்சோடியிருக்கும் அம்மாவின் இருண்ட முகம் தான். அதில் ஒளிமயமான ஒளிக்கீற்றை என்றைக்குமே அவள் கண்டதில்லை அவள் சிரிப்பது கூட எப்போதாவது அபூர்வமாய்த் தான் நிகழும் அப்படித் தான் சிரித்தாலும் மனம் விட்டுச் சிரிக்கிற மாதிரித் தெரியாது ஏதோ பிள்ளைகளுக்குப் போக்குக் காட்டப் போலியாகச் சிரிப்பது போல் தோன்றும் வாய் நிறையச் சிரிப்பொழுக அம்மாவைக் காண வேண்டுமென்றால் அதற்கு ஒரேயொரு வழி நிஷ்டை கூடுகிற மாதிரி இந்தப் படிப்புத் தவம் தான்

அது தவமா சாக்கடையா என்று புரியாத மயக்கமாக இருந்தது ஏனென்றால் அதிலும் பல குழறுபடிகள். கல்வியையே கூறு போட்டுக் காசுக்கு விற்கிற நிலைமை.. காசு இருந்தால் தான் கல்விக் கடலையும் கடக்கலாம். படிப்பிக்கிற குருமாரில் கல்வியைத் தவமாகப் பார்க்கிற அதி உயர்ந்த மனம் எத்தனை பேருக்கு உண்டு? தெரியவில்லை அவளுக்கு கல்லூரியில் கற்பித்தல் என்ற ஒரு முறையிருக்க அதையும் தாண்டி பணம் சம்பாதிக்கிற வெறியில் இன்னும் எத்தனையோ குறுக்கு வழிகள் எங்கு பார்த்தாலும் திரும்பின பக்கமெல்லாம் டியூஷன் வகுப்புகளே கொடி கட்டிப் பறக்கின்றன அவை நடக்காவிட்டால் காசும் வராது கல்வியும் பூஜ்யம் தான்

நிலைமை இப்படியிருக்கும் போது இதற்கெல்லாம் பகீரதி பகற்கனவுதான் காண முடியும். நிஜத்தில் கண் விழித்தால் வறுமை தாண்டவமாடுகிற வீட்டில் அதற்கெல்லாம் வழியேது. அவளின் அப்பாவுக்கு தற்போது தொழிலுமில்லை. சண்டை தொடங்குவதற்கு முன் வீடு கட்டும் மேசனாக வேலை பார்த்தவர் அவர். சண்டை மூண்ட பிறகு சீமெந்து வருவது அடியோடு நின்று போனதால், வீடுகட்ட வழியில்லாமல் அவரும் காட்டுக்குப் போய் விறகு கொண்டு வந்து விற்று வருகிறார் அதுவும் எத்தனை அலைச்சல். அம்மாவும் தினசரி வேலைக்குப் போகிறாள். அவ:ளுக்கு மா இடிக்கிற வேலை. கூடவே மிளகாய்த் தூளும் இடிப்பதுண்டு. அது இல்லாத நாட்களில் தோட்டவேலைக்கும் போய் வருகிறாள்

மா இடிக்கிற வேலை அம்மாவுக்குக் கை வந்த கலை. சிறு வயதிலிருந்தே மா இடிக்கப் பழகியவள் வெள்ளாள வீடுகளில் தான்

தினசரி அவளுக்கு இந்த வேலை. பத்துக் கொத்துக்குக் குறைவாக அவள் மா இடிப்பதில்லை. அதில் நெஞ்சு வலி வந்தாலும் காட்டிக் கொள்ள மாட்டாள். பகீரதிக்கு இது குறித்து அறிவுபூர்வமான பெரும் மனக் கவலை. செல்லரித்துப் போன வறுமை தான் அம்மாவை இப்படிச் சிலுவை அறைந்து கொன்று வருவதாக அவளுக்கு உறைக்கும் அதிலிருந்து மீள ஒரே வழி, தான் படித்து முன்னேறினால் தான் இதற்கான கதவு திறக்குமென்று அவள் நம்பிக் கொண்டிருந்தாள்

அவள் அப்போது யாழ் இந்து மகளிர் கல்லூரியில் புகுமுக வகுப்பில் படித்துக் கொண்டிருந்த நேரம். இந்த வருட இறுதியில் அதற்கான பரீட்சை வருகிறது. பிறகென்ன. பல்கலைகழகம் தான்.. கணிதம் படித்து ஒரு பொறியியலாளராக வரவேண்டுமென்பதே அவளுடைய நெடுநாளைய கனவு. கணக்கு அவளுக்குத் தண்ணீர் பட்டபாடு. ஒவ்வொரு பாடத்திலும் நூறு புள்ளிகள் எடுப்பாள். இருந்தாலும் வகுப்பில் அவள் இரண்டாம்பட்சம் தான். வகுப்பாசிரியை ஜானகிக்கு அவள் மீது பிடிப்பு வராத ஒரு நழுவல் நிலை. அவளுக்கு பணம் சம்பாதிக்கிற வெறி நாலைந்து டியூஷன் வகுப்புகளுக்கு அவளே பொறுப்பாளர். அவளும் கற்பிப்பாள். அது மட்டுமல்ல வினா விடைத் தாள்களும் எழுதி அச்சிட்டு விற்பனை செய்யும் பெரும் பணமுதலை அவள். அவளின் இந்தப் பசிக்கு இரையாக பகீரதி என்றைக்குமே தீனி போட்டதில்லை/ அவளுக்குப் பள்ளிப் படிப்போடு மூளை திறந்து விடும். டியூஷன் வகுப்புக்குப் போவதற்கும் ஜானகியின் பரீட்சை வினா விடைத் தாள் நூலை வாங்குவதற்கும் வக்கில்லாத கையறு நிலைமை அவளுக்கு. தினமும் உடல் வருத்தம் பாராமல் மா இடித்து அம்மா கொண்டு வரும் சொற்ப வருமானத்தில் வயிறு கழுவுவதே பெரும்பாடு .அதிலேயும் அன்றாடம் பஸ் கூலிக்கு வேறு அம்மாவோடு போராட வேண்டியிருக்கிறது

மல்லாகத்திலிருந்து பஸ் ஏறி தட்டாதெருச் சந்தி வரை அந்த பஸ் பயணம். பிறகு அரசடி வீதி வழியாக நீண்ட தூரம் நடந்தால் தான் கல்லூரியை அடையலாம். சில சமயம் வெறும் வயிற்றுடனேயே வர வேண்டிய நிலைமை .கல்லூரி வாசலை மிதித்து விட்டால் அவளுக்குப் பசி கூட மறந்து போகும். பணம் பற்றிய பிரக்ஞையே அடியோடு இல்லாது ஒழிந்து, ஒரு மானஸீக தவம் மாதிரி அவளுடைய அந்தப்[ படிப்புத் தனிமையுலகம். அதற்கு இடையூறு செய்கிற மாதிரி ஜானகி டீச்சரின் தலையீடுகள் வந்து அவளைக் குழப்பும்

தவணைக் கட்டணம் கட்டச் சொல்லி, அவள் ஆணை பிறப்பித்து ஒரு கிழமைக்கு மேலாகிறது. பகீரதி தவிர ஏனைய மாணவிகள் உடனடியாகவே அதைக் கட்டி முடித்து விட்ட நிலைமையில், டீச்சருக்கு அவள் மீது பெருங் கோபம் அவள் ஜானகியின் காலில் விழாக் குறையாகக் கெஞ்சி மன்றாடி, நாளை கொண்டு வருவதாகக் கூறி விட்டு வீடு வந்து சேர்ந்த போது, மா இடித்த களைப்போடு அம்மா வாசலில் நிழல் தட்டி வெறிச்சோடி அமர்ந்திருப்பதை ஒரு அவலக் குறியீடான இருள் வெளிப்பாடாக அவள் எதிர் கொள்ள நேர்ந்தது

இருந்தாலும் பசிக்களை மறந்து போன விரக்தியோடு அவள் தன்னிலை மறந்து கேட்டாள்

“அம்மா! நாளைக்கு எனக்குக் காசு வேணும். தவணக் கட்டணம் கட்ட இல்லாட்டால் டீச்சர் என்னைக் கொன்றே போடுவார்”

“உன்ரை டீச்சர் என்ன அவ்வளவு பெரிய கல் நெஞ்சக்காரியா? இஞ்சை நான் மா இடிச்சுச் செத்துக் கொண்டிருக்கிறன் . நினைச்சவுடன் காசென்றால் எங்கை போறது? சாப்பாட்டிற்கே எங்களுக்கு வழியில்லை ஒரு இரண்டு நாளைக்குத் தவணை கேட்டுப் பார் கொப்பரிட்டைச் சொல்லி எங்கையாவது கடன் கேட்டு வாங்கித் தாறன்”

“அம்மா இது எடுபfடுமே?. ஏற்கனவே அவவுக்கு என் மீது கடுப்பு நாளைக்கு நான் இதைச் சொல்லிக் கொண்டு போனால், நிக்க வைச்சு என்னைக் கொன்றே போடுவா.. நான் எந்த முகத்தை வைச்சுக் கொண்டு அங்கை போய் நிக்கிறது”?”

எங்களுக்கு இருக்கிறது பணத்தை வைச்சுச் சாதிக்க முடியாமல் போன ஒரே முகம் தான். இதைக் காட்ட உனக்கென்ன வெட்கம்? அவ புரிஞ்சு கொண்டால், நீ சந்தோஷப்பட மாட்டியே?”

“ஐயோ! அம்மா! என்ன கதை சொல்லுறியள்? நான் அதை எதிர்பார்க்கேலை அவ என்னைப் புரிஞ்சு கொண்டிருந்தால் பாவம் போகட்டும் என்று விட்டிருப்பாவே. இது நடக்குமா? என்னவோ நீங்கள் சொல்லுறியள். என்னவோ நானும் போய்ச் சொல்லிப் பாக்கிறன் கடவுள் விட்ட வழி”

மறு நாள் விழித்த போதே நீண்ட ஒரு மங்களகரமான ஒரு கனவுத் தொடர். ஜானகி அருள் வாக்குக் கூறி வரம் கொடுப்பது போலவும், அவள் ஒளித் தேரிலேறி முடி சூடிக் கொண்டு விட்ட ஒரு தேவதையாய் ஊர்வலம் போவது போலவும், காட்சிமயமான இன்பக் கனவுகள் கண்களுக்குள். அந்தக் கனவுகளுடனேயே அவள் கல்லூரி வந்த போது வகுப்புத் தொடங்கி விட்டதற்கு அறிகுறியாக ஜானகியே அவளை எதிர் கொண்டாள்

‘”வாரும் உம்மைத் தான் இவ்வளவு நேரமும் எதிர்பார்த்தனான் என்ன பேசாமல் கையை ஆட்டிக் கொண்டு உல்லாசமாய் வாறீர்? இப்ப காசை எடும்”

காசு இல்லையென்று எப்படிக் கையை விரிப்பது என்று தெரியாமல் பகீரதிக்கு முகம் இருண்டு அழுகை மழை கொட்டிற்று. பேச வாய் எழாமல் அவளுள் மெளனம் கனத்த சோகம் கண்ட பிறகும், காசுக்கு வலை விரித்த புத்தியில் ஜானகிக்கு அது நெஞ்சில் ஒரு பாரமாய் உறைக்கவில்லை. அவள் மீண்டும் சீறிக் கனல் கொட்டினாள்

“சொல்லு பகீரதி! காசு எங்கை?’

‘டீச்சர்!அம்மாட்டை இப்ப காசு இல்லையாம். கடன் வாங்கித் தாறதாய்ச் சொன்னவ .இரண்டு நாளிலை கொண்டு வந்து தாறன்”

“உது சரி வராது காசு இல்லையென்றால் இஞ்சை ஏன் வந்தனீங்கள்? போய்ச் சின்னப் பள்ளிக் கூடத்திலை படிக்கிறது தானே”

அறிவு மயங்கிய நிலையில் அவள் சொன்ன வார்த்தைகளின் சூடு தாங்காமல் பகீரததி தன்வசமிழந்து அப்படியே நிலை சரிந்து போனாள் அது ஓங்கி வளர்ந்த ஓர் அக்கினிக் குண்டமாய் தன்னை விழுங்குவது போல உணர்கையில் அங்கு நிற்கவே பிடிக்கவில்லை அவளுக்கு. யாரிடமும் சொல்லிக் கொள்ளாமலே அவசரமாக நொந்த மனதுடன் அவள் வீடு திரும்பி வரும் போது, வீட்டு வாசலில் அம்மா நிழல் வெறித்து அமர்ந்திருந்தாள்

“என்ன பிள்ளை இப்ப வாறாய்? ஏதும் பிரச்சனயோ?

“ஓமம்மா எல்லாம் முடிஞ்சு போச்சு நான் இனிப் படிக்கப் போகேலை உங்களுக்கு உதவியாய் நானும் மா இடிக்க வாறன்”

“என்ன பிள்ளை சொல்லுறாய்? நீயும் மா இடிக்க வரப் போறியே? நல்ல கதை. இவ்வளவு காலமும் படிச்சுப் போட்டு சோதனை எடுக்கிற நேரத்திலை உனக்கு என்ன வந்ததென்று கேக்கிறன்? ”சொல்லு”

“ஐயோ!அம்மா அதை எப்படி வாய் விட்டுச் சொல்லுறதென்று எனக்கு விளங்கேலை. சொல்ல நான் விரும்பேலை. ஆனால் ஒன்று சொல்லுறன் தகுதிக்கு மீறி எதுக்கும் ஆசைப்படக் கூடாதென்று இப்ப நான் நம்புறன். அப்படி ஆசைப்பட்டதுக்கான தண்டனையை இப்ப நான் அனுபவிச்சே தீர வேண்டும். நானும் இண்டைக்கு உங்களோடை மா இடிக்க வாறனே”

“அப்ப நீ இனிப் படிக்க மாட்டியே ?

“மாட்டன் மாட்டன் போதும் நான் பட்ட அவமானங்கள் தூக்கிய சிலுவைகள்”

‘அதுதான் ஏனென்று கேக்கிறன்”’

“அம்மா!இவ்வளவு காலமும் நான் படிச்ச படிப்புக்கு விசுவாசமாய், எனக்கு அதைச் சொல்லத் தோன்றேலை நான் இப்படியானதற்கு என் விதி தான் காரணம் வேறொன்றுமில்லை”என்றாள் அவள் தனக்குள் பிரகாசிக்கின்ற அறிவு தீபத்துடன். அவள் சொல்ல மறுக்கின்ற அந்த உண்மை அம்மாவைப் பொறுத்தவரை ஒரு கானல் சங்கதியாகவே இன்னும் இருக்கிறது. அந்தக் கானலை விட்டு வெகு தூரம் விலகிப் போன ஒரு கலங்கரை விளக்கம் போல இப்போது அவள். குருதட்சணையாய் மெளனம் கனத்த அவளின் உயிர்ப் பாஷையிலேயே அதை உணர முடியும் ஆம் அந்தக் குருவின் வழிபாடு. என்ன இருந்தாலும் ஜானகி அவளுக்கு எழுத்தறிவித்த இறைவன் என்ற நினைப்பில் வாய் இறுகி அவள் பூண்ட இந்த மெளன கவசம், அம்மாவைப் பொறுத்தவரை இன்னும் அதற்கான விடை முடிச்சவிழாத வெறும் புதிராகவே அவளைக் குடைகிறது அவளோடு கூடவே உலக்கை தூக்கி பகீரதி மா இடிக்க வரும் போதெல்லாம் சோகம் கனத்துக் கேட்க முடியாமல் போன அந்தக் கேள்வியிலேயே வதைபட்டு உயிர் நதியே அடியோடு வரண்டு வற்றிப் போன மாதிரி அவள் நிலைமை. இதைக் கண்டு கொள்ளாத ஒரு மனுஷ பாவனை நிழல் மாதிரி பகீரதியின் இருப்பு மறைவு. உள்ளூரத் தன்னைக் காட்டிக் கொள்ள விரும்பாத அவளுடைய அந்த அதி உன்னதமான ஆத்ம சமர்ப்பணமாக ஒளி வீசிக் கொண்டிருக்கும் குரு வழிபாடு நினைப்புக்கு முன் அம்மாவையே குமுற வைத்து உயிர் எடுத்துக் கொண்டிருக்கும் கேள்வி மட்டுமே மிஞ்சி நிற்கிற அந்த இருளும் கரைந்து தான் போகுமென்று பகீரதி மிகவும் அறிவு தீர்க்கமாக நினைவு கூர்ந்தாள்

– மல்லிகை 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *