கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 6, 2012
பார்வையிட்டோர்: 8,655 
 

மின்சார வண்டித் தொடர் ரயில் நிறுத்தத்தை விட்டு கடந்து நீங்கிய பின் அவன் தண்டவாளங்களைக் கடந்து, சரிவும் மேடுமாய் இருந்த பாதையைத் தாண்டி நெடுஞ்சாலையை அடைந்தான். வெளிச்சமும், விரைவும், ஓசையுமாய் கனரக வாகனங்கள், பேருந்துகள், கார்கள் இடைவிடாது சென்று கொண்டிருந்தன. இரவில் நெடுஞ்சாலையைக் கடப்பது கிட்டத்தட்ட தற்கொலை முயற்சி போன்றது தான். ஆனாலும் கடைசி வண்டியைப் பிடிப்பதே பழக்கமாகிவிட்டது.

எதோ நினைவு வந்தவன் போல U வளைவு வரை ஓரமாகவே நடந்தான். வளைவில் ஏதேனும் ஒரு வாகனம் திரும்ப எத்தனிக்கும் போது பாதி சாலையையோ அல்லது சாலை முழுவதையுமோ கடப்பது எளிது. ஒரு லாரி சாலை மத்தியில் நின்று திரும்பும் தருணம் பார்த்துக் காத்திருந்தது. அப்போதும் வண்டிகளின் வேகம் குறைந்த பாடில்லை. ஓரிரு நிமிடங்களில் இன்னொரு லாரியும் அதனுடன் இணையாக நின்று சாலையின் பெரும்பகுதியை அடைத்த போது அவன் கையைக் காட்டிய படியே ஓடிச் சென்று பாதி சாலையைக் கடந்து முடித்தான்.

உண்மையில் மறு பாதி சாலையைக் கடந்து சென்று வீட்டுக்கு செல்லும் உற்சாகம் எதுவும் அவனிடமில்லை. சரி, அப்படியே வீட்டுக்குப் போகவில்லையென்றால் வேறு எங்கே போவது? இதற்கு விடை பல காலமாகக் கிடைக்காததால் அவன் வீட்டுக்கு செல்லுவதை ஒரு வழக்கமாக வைத்திருந்தான். வழக்கம் என்னும் வார்த்தைக்குள்ளேயோ அது ஒரு சடங்கு என்பது போல எளியதாகவோ இல்லை வீட்டுக்குப் போவது. வீட்டுக்குள் நுழைந்த உடன் தேசல் ஸோப்புக்கு பதிலாக புது ஸோப் வாங்க நினைத்தது,அல்லது புது பேஸ்ட் வாங்க மறந்தது நினைவுக்கு வரும் நான்கு நாட்கள் இதே போல் ஆகி வீட்டுக்குள் நுழைந்த உடன் மறுபடி வெளியே கிளம்பிப் போய் வேண்டியதை வாங்கி வந்த தருணங்கள் அனேகம்.

ஒருவழியாக சாலையைக் கடந்து வீட்டுக்குச் செல்லும் பாதையை எட்டிய போது தூறலாகத் தொடங்கிய மழை வலுத்தது. தொப்பலாக நனைந்து வீட்டை நெருங்கினால் மின்சாரம் வேறு தடை பட்டிருந்தது. மிகுந்த யத்தனத்திற்குப் பிறகு வெளிக் கதவுப் பூட்டை சாவி போட்டுத் திறந்தான்.

உள்ளே நுழைந்து உடை மாற்றி தலை துவட்டி மெழுகுவர்த்தியைத் தேடி எடுத்து ஏற்றி வாங்கி வந்த பொருட்களை சரி பார்த்து ஒழுங்கு செய்து ஒரு கோப்பைத் தேனீர் தயாரிக்கத் துவங்கும் வரை ஒரே அமைதி. அவனுக்கே ஆச்சரியமாகவும் ஓரளவு பதட்டமாகவும் இருந்தது. தேனீருக்கான பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி முடித்தவுடன் அவளது குரல் கேட்க ஆரம்பித்து விட்டது “நீ இன்று அவளுடன் தொலை பேசியில் கூடப் பேசவில்லை. என்ன ஆகி விட்டது?”

“பண்பட்ட முறையில் நடந்து கொள்வது என்று ஒன்று உண்டு” அவன் ஆங்கிலத்தில் பதிலளித்தான். “பண்பாட்டைப் பற்றி ஏற்கனவே நாம் பேசி நீ உன் தோல்வியை ஒப்புக் கொண்டு இனிப் பேசுவதில்லை என்று ஒப்புக் கொண்டிருக்கிறாய்.” என்றாள் அவள்.

“இங்கிதம் என்பதே உனக்குத் தெரியாதா?” மழையின் இரைச்சலை மீறி அவன் கத்தினான். நல்லவேளை. பதில் உடனே வரவில்லை. அவன் தேனீர் கோப்பையுடன் அமர்ந்தான்.

“இங்கிதம் இருக்கட்டும். அவளுக்கு ஏற்படப் போகும் நன்மை தீமையைச் சீர் தூக்கித்தான் நீ அவளுடன் பழகுகிறாயா?” குரல் இப்போது ஆங்கிலத்தில் வந்தது.

“இதோ பார். ஒரு ஆணும் பெண்ணும் பழகுவதை ஆராயும் உரிமையை நீயாக எடுத்துக் கொள்ளாதே”

“ஏன் கூடாது? உன்னிடம் என்ன பேசுவது எப்போது பேசுவது என்பது என் தேர்வாகத் தான் இருக்கிறது என்பதை நீ ஏற்கனவே அறிவாய். உலகமே கண்ணில் படும் எந்த ஒரு ஆணின் பெண்ணின் உறவு பற்றி ஆர்வமும் அதை விவாதிப்பதில் ருசியும் காட்டுகிறது என்பது தெளிவு. எனவே நானும் நீயும் இப்போது அதைப் பற்றி அளவளாவுவோம்”

“இதைப் பற்றிப் பேசுவோம் அதைப் பற்றிப் பேசுவோம்” என்று தொடங்கி அவள் பேச்சைத் தொடர்வது முடிவற்று எந்தக் கட்டுப்பாடுமற்ற வன்முறையாகப் போய்க் கொண்டிருக்கிறது. எதை எடுத்தாலும் சங்கிலித்தொடர் போல் பேச்சு. பேச்சுக்குமேல் பேச்சு. வல்லடி வம்பிழுப்பது போல. இன்றைக்கு விடக் கூடாது.

“என்ன யோசிக்கிறாய்?” அவளது குரல்.

“இந்த அபத்தம் மிகுந்த கேள்வியைப் பல அரை வேக்காடுகள் கேட்டபடிதான் இருக்கிறார்கள்”

“நல்லது. அப்போது நான் மட்டும் ஏன் கேட்கக் கூடாது?”

“நீ தான் பெரிய புத்திசாலி போலப் பேசுகிறாயே”

“பெண் குரலில் நீ புத்திசாலித்தனத்தை வரவேற்பதில்லை என்பது எனக்குத் தெரியும்.”

“முதலில் ஒரு குரலாகவே நீ இயங்கி என்னை அச்சுறுத்தி உன் குரூர ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளப் பார்க்கிறாய் என்பதை ஒப்புக் கொள்”

“ஒருவரை குற்றம் சாட்டி மட்டம் தட்டி அவரது தன்னம்பிக்கையை இழக்க்ச் செய்து பின் உன் தரப்பை நிலை நாட்டிக் கொள்வது வேறு எங்கேனும் எடுபடாலாம். என்னிடம் இல்லை”

“பேச்சை மாற்றாதே. நீ யார்? உனக்கு தைரியம் இருந்தால் நேரே வா. குரலாகவே வந்து குரூரம் செய்வது கேவலம். ஆம். சரியான வார்த்தை அது தான். கேவலம்.”

‘முட்டாள். குரல் என்று ஒரு ஒலி தான் இருக்க வேண்டுமா. குரல் என்று ஒரு இருப்பு ஏன் கூடாது?”

அவன் மௌனமானான்.

“சொல். ஏன் கூடாது?”

“இதோ பார். திரும்பத் திரும்ப நீ வல்லடி வழக்கு அல்லது இடக்குப் பேச்சுப் பேசி விபரீத விளையாட்டு விளையாடுகிறாய்? பொறுப்பற்ற நிலையில் செய்யும் குரூர சேட்டை உன்னுடையது”

“பொறுமையிழக்காதே. நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்”

“கேட்டு விடு. வேறு வழியே இல்லை. இன்று இரவு தூங்கி நாளைக்கு நான் வேலைக்குப் போக வேண்டும்”

“மழை என்பது என்ன?”

” அற்பமான கேள்வி. உன்னைப் போன்றே அற்பமானது.மழை என்பது வானிலிருந்து பொழியும் நீர்’

“அது மட்டும் தானா அது? வேறு எதுவுமே இல்லையா?”

“இல்லை”

“எப்படிச் சொல்கிறாய்? குளத்தை அல்லது ஏரியை நிறைக்கும் போது அது குளமாகவோ ஏரியாகவோ ஆகவில்லையா?”

“சரி. ஓரளவு சரி.”

” இன்னும் முடியவில்லை. குளிர்ச்சிக்கு வடிவம் உண்டென்றால் அதில் மழை நீரும் ஒன்று. ஒப்புக் கொள்கிறாயா?”

“அதனால் என்ன?”

“பொறு. ஒரு ஊரையே கழுவி விடும் தோட்டி வேலையையும் மழை மட்டுமே செய்ய இயலும். அதன் இன்னொரு வடிவம் தோட்டி. புரிகிறதா?”
“நீ என்ன சொல்ல வருகிறாய்?”

“நீ அடிக்கடி பார்க்கும் மழை நீரின் பல வடிவங்களையே நீ அவதானித்ததில்லை. ஒரு குரல் என்னும் இருப்புடன் ஒரு ஜீவிதம் இருக்க முடியாது என்று எப்படி முடிவு செய்கிறாய்?”

“என்ன பம்மாத்துகிறாய். ஒலி என்று சொல். ஒப்புக் கொள்கிறேன். குரல் என்பது ஒரு மனித ஜீவனின் திறன்களுள் ஒன்று. எனக்குக் காது குத்தியாகி விட்டது”

“உன் வழிக்கு வந்தே பேசுகிறேன். நீ கடைசியாக் எப்போது ஒரு பெண்ணைப் புணர்ந்தாய்?”

எரிச்சலில் அவனுக்கு நாடி நரம்புகள் துடித்தன். உணவு மேசையில் ஓங்கிக் குத்தினான்.

அவனை மேலும் உசுப்பேற்றுவது போல் “இதெல்லாம் என்னிடம் எடுபடாது. நான் உன் மனைவியை எப்போது புணர்ந்தாய் என்று கேட்டால் தான் நீ யோசிக்க வேண்டும். ஓரு பெண்ணை எப்போது புணர்ந்தாய் என்று தானே கேட்கிறேன். சொல்.”

வேறு வழியில்லை. இந்த நாளுக்கான குரூரம் முடியாமல் அது ஓயாது. ” சென்ற வாரம்”

“அப்போது உனக்கு முழு திருப்தி கிடைத்தா?”

“ஆமாம்”

“அவளுக்கு?”

“இருந்திருக்கும்”

“பொதுப் படையாகச் சொல்லாதே. இருந்ததா?”

“தெரியாது.இருந்ததாகவே பட்டது”

“அதை விடு. அவளுக்காவது தனது நிறைவு மனமும், நம்பிக்கையும், உடலும் இணையும் ஒரு புள்ளியில் உள்ள பெண்வடிவத்தின் நிறைவு உணர்வு அது என்று தெரியுமா?”

“பெண்கள் சம்பந்தப் பட்டதை என்னிடம் ஏன் கேட்கிறாய்?”

“அப்படி வா வழிக்கு. அப்போது அதில் உன் நோக்கமெல்லாம் உன் சம்பந்தப் பட்டதாகவே இருந்தது இல்லையா?”

கதவை யாரோ ஓங்கித் தட்டும் ஒலி கேட்டது. “நான் கதவைத் திறக்க வேண்டும்”

“நில். தப்பிக்காதே.பதில் சொல்”

“அம்மா. தாயே. நீ குறிப்பிடுவதைப் பற்றி நான் புத்தகங்களில் எப்போதோ படித்திருக்கிறேன். ஆனால் நடைமுறையில் எந்த இருவரும் இதைப் பற்றி யோசிப்பதோ விவாதிப்பதோ இல்லை.”

கதவைத் தட்டும் ஒலி தொடர்ந்தது.

“ஒரு பெண்ணின் வடிவம் அந்தப் புள்ளியில் பெயர், உடல், உறவு இவற்றைத் தாண்டித் தனி இருப்பாக நிற்கிறது இல்லையா?”

“தெரியாது என்று சொன்ன பிறகும் நீ என்ன எதிர்பார்க்கிறாய்?”

“கலவி முடிந்ததும் கூடியவளின் முகத்தை குறிப்பாகக் கண்களை நீ உற்றுப் பார்த்திருக்கிறாயா?”

“நேர்மையாகச் சொல்வதென்றால் இல்லை”

“எனவே நான் குறிப்பிடும் அந்தப் புள்ளியில் உள்ள வடிவம் அல்லது இருப்பு அரூபமானது. ஆனால் அது ஒரு திறனில்லை. ஒரு இருப்பு”

“நீ குறிப்பிடுவது மிகவும் சூட்சமமானது. நிறைய நான் யோசிக்க வேண்டும்.” கதவு மிகவும் பத்ட்டமாகத் தட்டப் பட்டது. அவனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.

“அதே போன்ற இருப்புதான் என்னுடையதும். ஒரு பெண்ணின் வடிவம் உன் அளவிகளுக்குள் அடங்க வேண்டும் என்னும் மனப்பாங்கை மாற்றி யோசி. புரியும்.”

அவன் பதில் ஏதும் சொல்லாமல் கதவைத் திறந்தான்.

“கரண்ட் கட் பெல் அடிக்கலே. மழை சத்தத்திலே என் குரல் கேக்கலியா? நீங்க யார் கிட்டேயோ போன்ல பேசறது எனக்குக் கேட்டுச்சே?” அவனது பதிலை எதிர்பாராமல் அவன் மனைவி அறையில் புகுந்து கதவைத் தாளிட்டுக் கொண்டாள். மின்சாரம் வந்தது. வரவேற்பரைத் தரையில் சகதி சேர்ந்த காலடிச்சுவடுகள் அவனுடையதா அவுளுடையாதா என்று பிரித்த்ரிய முடியவில்லை. மழை வலுத்தது.

சற்று நேரத்தில் அவன் மனைவி தலையைத் துவட்டியபடி அறையிலிருந்து வெளியே வந்தாள். “உனக்கு வேறே வடிவம் உண்டா?” அவன் ஆங்கிலத்தில் வினவினான்.

“என்னது?” என்றாள் அவள் குழப்பமாய்.

தமிழில் அதை மறுதலித்தான். அவள் அவனை ஒரு கணம் விசித்திரமாகப் பார்த்து தலையிலடித்தபடி சமையலறையில் நுழைந்தாள். குரல் இப்போது சிரிப்பாகக் கலகலகலத்துத் தொடர்ந்து ஒலி உயர்ந்தபடியே உச்சமானது. நிற்கவே இல்லை.

அவன் காதுகளைப் பொத்தியபடி கதவைத் திறந்து ஓடி கொட்டும் மழையில் சென்று நின்று கொண்டான்.

– 22 செப்டம்பர், 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *