குடை கொண்டான் குமார்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 20, 2021
பார்வையிட்டோர்: 7,297 
 

“எங்க அது..? தொலைச்சுட்டு வந்தாச்சா..?”

மிரட்டலான குரலை தொடர்ந்து, இரவில் நடுத்தூக்கத்தில் என் பூத உடல் வேரோடு உலுக்கப்பட்டது.

“அதுழ்ழா.. எழு..?” தூக்க தைரியத்தில் என் பேச்சு அசால்ட்டாக இருந்திருக்கும் போல.

அடுத்த நிமிடம், இடி முழக்கத்துடன் ஒரு பக்கெட் அளவிலான தண்ணீர் என் தலை வழியாக உடல் முழுவதும் இறங்கி வழிந்ததை உணர்ந்து வாரிச் சுருட்டிக் கொண்டு முழு தூக்கத்தில், கால்பாகம் கண்விழித்தேன்.முக்கால் தூக்க கலக்கமாக இருந்ததால், மழை என்று நினைத்து, ‘குழை, குழை’ என்று, கைகளை உயர்த்தி, விரித்து பிடித்து, குழறினேன்.

“ஆங்… அதைத்தான் இப்ப எங்கேன்னு கேட்கிறேன்…”என் குழறல் பாஷையை புரிந்தவர் யாரோ ஒருவர்தான் கூவுகிறார் என்பது மட்டும் லேசாக புரிந்தது.“என்னை கேழ்ழால்… எனக்கு என்ன தெழியும்..?”

“தெரியுமாவா…” என்ற கர்ஜனையுடன், இரண்டு லிட்டர் தண்ணீரை என் முகம் உள் வாங்கியதும்தான், கொஞ்சம் தெளிவாகி, அது என் அன்பு மழை பொழியும்(?) மனைவி என்பதை உணர்ந்து, பய உணர்வு பிறந்து, அவளுடைய கேள்விகளை என் காதுகள் உள் வாங்க கதவை திறந்தன.

குடை கொண்டான் குமார்“காலையில் பரணில் ஏறி மழைக் கோட்டு தேடும்போது, இத்தனை வருடங்களாக நான் மறைத்து வைத்திருந்த குடை ஒண்ணு உங்க கண்களில் பட்டுச்சா..?”

“ஆமா… ஆமா… பட்டுத் துணி குடை. வீட்டு சிறையிலிருக்கும். என்னை பரோலில் ஷாப்பிங் அழைச்சுக்கிட்டு போன்னு கெஞ்சினா மாதிரி இருந்துச்சு…”

“காலையில் ஆபீஸ் கிளம்பும்போது லேசா மழை தூறிச்சா..?”

“ஆமாம்… லேசான கன மழை…”“மழையில் நனைந்து கொண்டு போனால், கரைஞ்சு போயிடுவீங்களான்னு கேட்டேனா..?”

‘‘ஆமாம்… நறுக், நறுக்குன்னு, இடி முழக்கத்துடன் நீ கேட்பதையெல்லாம் நான் எப்படி மறக்க முடியும்?”

“இன்றைக்கு மாதாந்திர துணி வெளுக்கும் சோப்பு பவுடர் வாங்கும் நாள். இந்த குடை இருந்தால்தான், சோப்பு பவுடரை கரையாமல் கொண்டு வரமுடியும்னு காரணம் சொல்லி, பிடிவாதம் பிடிச்சீங்களா..?”

‘‘ஆமாம்… பிடிச்சேன்…”

“கொண்டு போனால் நீங்க திருப்பிக் கொண்டு வரமாட்டீங்கன்னு சேலன்ஜ் விட்டேனா..?”

“நிச்சயம் திருப்பிக் கொண்டு வருவேன்னு நானும் குடை சேலன்ஜ் விட்டேனே..?”

“உங்க சேலன்ஜ் சல்லிக் காசுக்கு உதவாதுன்னு அதை ஞாபகப்படுத்த ரிமைன்டர் ஏற்பாடுகளை பண்ணிக் கொடுத்தேனே… ஆனால், இப்படி பண்ணிட்டீங்களே..? குடையும் மிஸ்ஸிங்… அத்துடன், நீங்க வாங்கி வந்த சோப்பு பவுடர் முழுவதும் மழையில் நனைந்து, அந்த காகிதப் பையில், இப்ப வெறும் நுரைதான் எஞ்சி இருக்கு!”

“ரிமைன்டர் என்னன்னு இப்ப கொஞ்சம் ரிமைன்ட் பண்ணேன். நானும் ரிவைன்ட் பண்ணிக்கிறேன்…”

‘‘ரிமைன்டரையே ரிமைன்ட் பண்ண யார் தைரியம் கொடுத்தது உங்களுக்கு? எல்லாம், திடீர்னு ஒரு நாள் விசிட்டா, ஒண்ணுமே வாங்கிட்டு வராமல், வெறும் கையை வீசிக்கிட்டு வந்துட்டு போனாளே உங்க பாசமலர் அக்கா… அவளுக்குதான் இதெல்லாம் கைவந்த கலை. லஞ்ச் பாக்ஸில் இன்றைக்கு புத்தம் புதிதாக வாங்கிய பச்சைக் குடை மிளகாயை அப்படியே முழுசா வச்சிருந்தேனே… அதைப் பார்த்துகூட ஞாபகம் வரலையா..?’’

“அக்காவை ஏன் இப்ப அனாவசியமா வம்புக்கு இழுக்கறே..? அவளும் என்னை ரிமைன்ட் பண்ணிட்டுத்தான் போனாள்..!”

“என்னன்னு?”

“‘தம்பி… சின்ன வயசிலிருந்தே உனக்கு ‘ஆயிரம் குடை’ சாபம் இருக்கிறதா ஜோசியர் சொல்லியிருக்கார். அதை பொய்யாக்காமல் சின்ன வயசிலிருந்து 999 குடைகளை தொலைத்து சாப சாதனை படைச்சுருக்கே… இன்னொரு குடையை சீக்கிரம் தொலைத்தால், ஆயிரம் பூர்த்தியாகி, குடை சாபத்திலிருந்து வெளியே வந்து, கின்னஸஸில் பூந்துடலாம். ஆனால், உங்க வீட்டில் இருக்கிற ஒரே ஒரு காசி யாத்திரை குடையை தொலைத்தால், அந்த ராட்சசி, பரம்பரைக் குடை அது இதுன்னு இல்லாத, பொல்லாத கதைகளை இட்டுக் கட்டி, ‘லக… லக’ன்னு செண்டிமென்ட் ஆட்டம் ஆடுவாள்… கின்னஸா, ராட்சசியான்னு முடிவு பண்ணிக்கோன்னுதான் சொன்னாள்.

வேற ஒண்ணும் அனாவசியமாக அவள் வாயே திறக்கலை..”

“இதுக்கும் மேலே வேற வாயை திறக்கணுமா..? அடுத்த தடவை வரட்டும்..வச்சுக்கறேன். உங்களை மாதிரியே அச்சு அசலா, படு அசடா இருந்தாலும், நம்மிடம் ஒரு குடை இருக்கு… அது பரம்பரை குடை என்பதை மட்டும் கரெக்டா மோப்பம் பிடித்து சொல்லியிருக்கா! ஒரு பஞ்சமி அன்றைக்கு கண்டெடுத்த குடையை, இன்னொரு பஞ்சமி அன்றைக்கு, அபசகுனமாக தொலைத்துவிட்டு வந்து நிக்கறீங்க… இப்ப சொல்லுங்க… எங்க அந்த பரம்பரைக் குடை?”

“பிறந்த தேதியும், மறைந்த தேதியும் சொல்ற மாதிரி, நீ குடை கண்டெடுத்த திதியையும், தொலைந்த திதியையும் சொல்றே… குடை எப்படி பரம்பரையா வரும்..?அந்த கதையை முதலில் சொல்லு. அதற்கு பிறகு, அதற்கு திதி கொடுக்கலாமா வேண்டாமாங்கறதை பற்றி யோசிக்கலாம்…”

“உங்க நாக்கில் தர்ப்பையை போட்டு பொசுக்க… பரம்பரைக்குடை உயிரோடு இருக்கும்போதே, திதி அது இதுன்னு உளறிக் கொட்டாதீங்க…”

“கண்டெடுத்த குடை அது இதுன்னு சொல்றே… கீழடி அகழ்வு ஆராய்ச்சியில் கண்டெடுத்ததா..? யார்… எப்ப… எங்கே கண்டெடுத்ததுன்னு முழுவதுமா சொல்லேன்…’’“நடு ராத்திரியில் நல்லா கதை கேளுங்க… உங்களை கட்டிண்டு வேற என்னத்தை கண்டேன்… ஒரு மலேசியா ட்ரிப் உண்டா அல்லது பாலி தீவுக்கு டூர் உண்டா..? பக்கத்து வீட்டில், அடிக்கடி ‘மோடி’ மாதிரி டூர் போயிட்டு வந்து, எனக்கு அவ்வவ்வேன்னு அழகு காட்டறாங்க… எல்லாம் என் தலை விதி. என்னை மாதிரியே அந்த வாயில்லா ஜீவனுக்கும் இப்படி ஆயிடுச்சே… எந்த மழையில், எப்படி நனைஞ்சு அவஸ்தைப் படுதோ தெரியலையே. அது எங்க குடும்ப பரம்பரை சொத்தாச்சே…”

பரம்பரைக் கதையை கேட்க, நான் கொஞ்சம் அகல கண் விரித்தேன். பாம்பு, கீரி சண்டை மாதிரி, கதையைச் சொல்லாமல் அவள் இழுத்தடித்தது எரிச்சல் ஊட்டியது.“ஒரு வேளை நீ முழுக் கதையையும் சொன்னால், குடை கிடைச்சாலும் கிடைக்கும்…”அந்த வேண்டுகோளுக்கு அவள் லேசாக செவி சாய்த்து, ‘ஒரு குடையின் கதை’யை’சொல்ல ஆரம்பித்தாள்.

“எங்க குமார் கொள்ளு தாத்தா, அவருடைய கல்யாணத்தில் காசி யாத்திரைக்கு ரெடியா நின்னுக்கிட்டு இருந்திருக்கார். அப்ப, மாமனார் வீட்டிலிருந்து அவர் கையில் ஒரு குடையை கொடுத்து, இந்த கம்பி குடையையும், தங்க கம்பியான எங்க பெண்ணையும் பத்திரமா பார்த்துக்கோங்கன்னு சொல்லியிருக்காங்க.நாலு பேர் முன்னாடி, தலை குனிந்து நிற்கிற ஒரு பெண்ணும், பரந்து விரியும் ஒரு குடையும் ஒண்ணான்னு கேட்டுட்டு, வெறும் குமார், கோப குமாராக மாறி, குடையோடு காசிக்கே போயிட்டார்.

அவரை தேடி கண்டுபிடிச்சு கூட்டி வந்து, தங்க கம்பியான தங்கம் பாட்டியோடு கல்யாணத்தை நடத்தி வச்சாங்க. ஆனால், அந்த குடையை தொலைச்சுட்டார். அதிலிருந்து அவருக்கும் ‘குடை இழந்த குமார்’னு பெயர் மாறிடுச்சு. சுருக்கமா, ‘குயி குமார்’னு கூப்பிடுவாங்க…” சன்பென்ஸ கொடுத்து நிறுத்தினாள் மனைவி.“மேலே சொல்லு…” என் மண்டை வெடித்து, சிதறிவிடும் போல் இருந்தது.

“குலக் குடையை தேடி, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் எட்டுத் திசைகளிலும் படையெடுத்தாங்க…”“அப்புறம்..” எனக்கு பிபி எகிறியது.“குடை கிடைக்கிற வரை, குடை மிளகாய் சாம்பார்கூட வைப்பதில்லைங்கற விரதத்தை தங்கம் பாட்டி கடைப்பிடிக்க ஆரம்பித்தாள்…’’

“சாம்பாரில் போடாமல், முழுக் குடை மிளகாயை லஞ்ச் பாக்ஸில் வைத்து அனுப்பியதற்கு காரணம் இப்ப புரியுது. மேலே சொல்லு…”

“குடையில்லாமல், மழையில் நனைந்து, நனைந்து தாத்தாவுக்கு நிரந்தரமா ஜலதோஷம் பிடித்து, மூக்காலேயே பேச ஆரம்பித்தார். அதனால், அவருக்கு ‘ஜலதோஷ குமார்’னு பெயர் மாறிடுச்சு. சுருக்கமா ‘தோஷ குமார்’னு கூப்பிடுவாங்க…”

“உங்க குடும்பத்திடம் மாட்டினால், 1008 தடவை பெயரை மாற்றி, ஒரு சகஸரநாமமே படைச்சுடுவீங்க போலிருக்கே… பெயர் போன குடும்பமா இருக்கே… சரி… சரி… மெயின் கதைக்குள் சீக்கிரம் என்ட்ரி கொடு…” ஒரு கப் டீயோடு, குடும்பக் கப்பல் தொலைந்தது போல், கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்திருந்த மனைவியை உற்சாகப்படுத்தினேன்.

“பல வருடங்களாக, குடும்ப க்குடையை பற்றிய ஒரு துப்பும் கிடைக்காத நிலையில், திடீர்னு ஒரு மழைக்கால இரவு, பஞ்சமி திதியில், பரம்பரை வீட்டு ஜன்னல் வழியாக குடை உள்ளே வந்து விழுந்ததும், வீடே துள்ளிக் குதித்தது.

தங்கம் பாட்டியின் கைவண்ணத்தில், குமார் தாத்தாவின் பெயர் அதில் கலர் நூலால் பின்னப்பட்டிருந்ததை வைத்து, அது தொலைந்து போன குடைதான்னு எளிதாக அடையாளம் கண்டு பிடித்து விட்டார்கள். அதோடு மட்டுமில்லாமல், தங்கம் பாட்டி தன் கைப்பட பரம்பரை வீட்டு விலாசத்தை, குடைக்குள் தைத்திருந்த பாக்கெட்டில் முன் ஜாக்கிரதையாக வைத்திருப்பதும் தெரியவந்தது.

அதில் இருந்த விலாசத்தினால்தான், குடை திரும்ப கிடைத்தது…”“அப்புறம் என்ன ஆச்சு…”“தொலைந்து, நீண்ட காலத்திற்கு பிறகு குடை திரும்பி வந்ததால், அதற்கு அதிர்ஷ்டக் குடை… சுருக்கமா அ.குன்னு பெயர் வச்சாங்க. அ.கு. பல தடவை தொலைந்துபோய், திரும்ப கிடைத்திருக்கிறது. அது தொலைவதும், திரும்ப கிடைப்பதும் பஞ்சமி திதியில்தான் என்பதால், அதற்கு பஞ்சமி குடை… சுருக்கமா ‘ப.கு’ன்னும் பெயர்.

அந்த அ.கு.தான் எங்க குடும்பத்தில் ஒவ்வொரு கல்யாண காசி யாத்திரையின் போதும், மாப்பிள்ளையின் தலை மீது பிடிக்கப்படும். குடும்பத்தில் கடைசியா நடந்த நம்ம கல்யாணத்திலும் அ.கு.தான் காசி யாத்திரைக் கதாநாயகன். பத்திரமா நான் பாதுகாத்ததினால், அ.கு இதுவரை தொலையவில்லை. ஆனால், நீங்க இப்படி அ.கு.வை தொலைச்சுட்டு வந்து நிக்கறீங்களே..?’’ மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து நின்றாள்.

“இ.எ.செ.சொ… அதாவது இப்ப என்ன செய்ய சொல்றே..?”

“தொலைத்த இடத்தை ஞாபகப்படுத்தி, அந்த குடையை எப்படியாவது கண்டு பிடிச்சு கொண்டு வாங்க. இன்றைக்கு சாயங்காலம் வரை பஞ்சமி திதி இருக்கு. இன்றைக்கு கிடைக்கவில்லையென்றால், இனி மேல், எந்த பஞ்சமியில் கிடைக்கும்னு சொல்ல முடியாது. அது வரை நாம் இருவரும் குடை விரதம் இருந்தாகணும்…” என்று தாலிக் கயிறை வெளியில் எடுத்து, கண்களில் ஒற்றி சென்டிமென்ட் காட்டி, என்னை பயமுறுத்தினாள்.

விடிந்ததும், வாசல் தெளித்து கோலம் போட்டுக் கொண்டிருந்தவளை, 45 டிகிரி சாய்வுடன் வணங்கிய இளைஞன், ‘‘உள்ளே வரலாமா..?” என்று பவ்யமாகக் கேட்டான்.

“என்ன விஷயம்..?” என்றாள்.“குடை விஷயம்தான்… இது உங்க வீட்டு குடையா பாருங்க. டிபார்ட்மென்டல் ஸ்டோரில், சோப்பு பவுடர் ஷெஃல்பில் இருந்தது. அதற்குள் இருந்த பாக்கெட்டில் உங்க விலாச சீட்டு இருந்ததால் ஈஸியா கண்டுபிடிக்க முடிந்தது. அப்ப நான் வர்றேங்க…” என்று மெல்லிய குரலில் சொன்ன இளைஞன், பணிவின் மறு உருவமாக தெரிந்தான்.

“தொலைந்துபோன எங்க பரம்பரைக் குடையை கொண்டு வந்து கொடுத்திருக்கே… உள்ளே வந்து, காப்பி, டிஃபன் சாப்பிட்டுட்டு போகலாம்…” என்றவள், ‘‘ஏங்க… இங்க வாங்க… இந்த தம்பியை உள்ளே கூப்பிட்டு உட்கார வையுங்க…” என்று கத்தினாள்.

‘‘என்ன ஒரு பணிவு… இது யார் பெற்ற பிள்ளையோ… விடியற்காலையில், பஞ்சமி திதி கழிவதற்குள், இவ்வளவு பொறுப்பா நம்ம குடும்பக் குடையை கொண்டு வந்து கொடுத்த இந்த பையனை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இந்த மாதிரி ஒரு பையன் நமக்கு மாப்பிள்ளையா வந்தா எப்படி இருக்கும்..?” சமையல் அறையில், மனைவி என் காதுக்கு அருகில் முணுமுணுத்தாள்.

பெயர், ஜாதகம், திதி, கிழமை, குடை என்று பல சென்டிமென்ட்டுகளை உள்ளடக்கிய மனைவிக்கு காதல் என்றால் மட்டும் கசக்கும். மகள் ஜலஜா, தான் பார்த்து வைக்கும் பையனைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விடாப் பிடியாக இருந்தாள்.

ஜலஜா தன் காதலைப் பற்றி என்னிடம் முறையிட்டபோது, அவள் அம்மாவின் எதையாவது ஒரு சென்டிமென்ட்டை அட்டாக் செய்து, காதல் கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்க முயற்சிக்கலாம் என்று வாக்கு கொடுத்திருந்தேன். பரணிலிருந்து குடை கீழே இறங்கியதும், அதற்கான மெகா தொலைப்புத் திட்டம் உருவானது! “தம்பி… உங்களை எங்க வீட்டு மாப்பிள்ளை ஆக்கிக்கலாம்னு ஆசைப் படுகிறோம். இதுதான் எங்க பொண்ணு ஜலஜா. உங்களுக்கு சம்மதம்னா, உங்க வீட்டிலிருந்து பெரியவங்களை கூட்டி வந்து, முறையா எங்க வீட்டில் பெண் கேட்க சொல்லுங்க..!”

– 20 Dec 2019

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *