குடியிருந்த கோவில்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 8, 2015
பார்வையிட்டோர்: 14,125 
 

நேரே இருந்த முருகப்பெருமானை கைகூப்பி வேண்டிக் கொண்டாள் தாரா.

“”யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லாமல் நான் போய்ச் சேர வேண்டும் முருகா” கட்டிலில் படுத்திருந்தபடி முருகப்பெருமானின் காலண்டரைப் பார்த்தபடி தன் வேண்டுதலை முணுமுணுத்தாள். கணவன் இருந்தவரை சந்தோஷமாய் வாழ்க்கையைக் கழித்தாள். மூன்று பெண்கள். கணவனுக்கு மத்திய அரசில் நல்ல உயர்பதவி. மூன்று பெண்களையும் கரை சேர்த்து நிம்மதியாய் ஐந்து வருடம் கணவனுடன் இருந்தாள். இறைவனுக்கு அது பொறுக்கவில்லை போலும் கணவனைப் பறித்துவிட்டார்.

இரண்டாவது மகள் வீட்டில் தான் பத்து வருடமாய்த் தங்கி இருந்து நடுவில் நடுவில் மற்ற மகள்களின் வீட்டிற்குச் செல்வாள். வாழ்க்கையின் துன்பத்தின் உச்சகட்டதில் அப்போதுதான் தாரா அடி வைத்தாள். இந்தப் பத்து வருடங்களில் எத்தனை சுடுசொற்கள்…. என்னென்ன வார்த்தைகள்… முதியவர் என்ற மரியாதை கூடவா இல்லாமல் வளர்க்கப்பட்டிருப்பான்? மாப்பிள்ளை என்ற வேஷத்தில் தன் வீட்டிற்கு வந்த அரக்கனை அவளால் மறக்க முடியவில்லை. வெட்கமில்லாமல் இங்கு இருக்கிறாள்.

“”மற்ற பெண்கள் இல்லையா? நீங்க ரெண்டுபேரும் திருட்டு ….” கெட்ட வார்த்தைகளைக் காதில் கேட்க முடியாமல் மகள் கதறுவாள். பேரனுடன் தன் அறையில் எத்தனை முறை மனதில் வருத்தப்பட்டிருப்பாள்?

பார்த்துப் பார்த்து படிக்க வைத்த பெண்னை ஒரு பாவிக்குக் குடுத்து விட்டேனே என்று மனது குமுறும். பையனைப் பத்து வருஷம் பார்த்துக் கொண்டு தன் நகைகளையும் மகளிடம் ஒப்படைத்தவளிடம் மகள் செல்வி சொல்வாள்: “”அம்மா நீ எதுவும் கண்டுக்காதே, இந்த ஆள் மனுசனேஇல்ல. புருஷன் இவன் திருந்துவான் என்று நானும் பதினெட்டு வருடமாய் பார்த்துவிட்டேன். என்கிட்டே கடன் வாங்கி, என் பணத்தை எனக்கு தெரியாமலேயே தன் மன்னிக்குக் கொடுத்து விட்டு என்னை ஏமாற்றியவன். பையனுக்கு ஸ்கூல் ஃபீஸிலிருந்து வீடு, கார் வாங்கி அதுக்கெல்லாம் கடன் எல்லாம் நான் தான் கட்டறேன். வீட்டில் உள்ள எல்லாப் பொருளும் வாங்கி போட்டவள் நான். அதற்கு காட்டும் நன்றிதான் இந்தக் கொடுமை. ரத்தக்கோளாறு, ஏதோ ஜெனடிகல் ப்ராப்ளம் இருக்கணும். ஏதோ புருஷன்கிற போஸ்ட்டில் உட்கார்ந்து அதிகாரம் செலுத்திட்டு இருக்கிறான். ஆண்டவன் கட்டாயம் கேட்பார்” என்று கோபத்துடனும் இயலாமையுடனும் அவள் அழுவாள்.

“”இவன் அம்மாவுக்கோ பணம், புடவை பைத்தியம். இவனை பணத்தைக் காட்டித்தான் வளர்த்திருக்காங்க, பாசத்தைக் காட்டி அல்ல. இவனைப் பொருத்தவரை நான் ஒரு மூவிங் ஏ.டி.எம் கார்ட்….இல்லை இல்லை … ஏ.டி.எம் மெஷின். அவன் அத்தை மகளை விரும்பி இருக்கிறான். அவள் இவனைத் தூக்கி எறிந்திருக்கிறாள். அந்த வெறியில் இவன் சைக்கோ மாதிரி பிஹேவ் பண்ணுவான்…இந்த உலகத்திலே பெண் ஐந்து ஆணுக்கு நிகராகச் சம்பாதித்தாலும்… பெற்ற தாயை வைத்துக் கொள்ள முடியாது. புருஷன் கிட்ட அடிமையாய் தான் இருக்க வேண்டி இருக்கு. விவாக ரத்து பண்ணலாம் என்றால் நீ ஒத்துக்க மாட்டே. இந்த அரக்கன் கிட்டே எத்தனை வருஷம் வாழணுமோ… சரி விடு… உனக்கு நான் இருக்கிறேன். நான் சாப்பிடுவது கஞ்சி ஆனாலும், உனக்கும் சேர்த்து தான்” கண்ணீரைத் துடைத்தபடி செல்வி கூறுவாள் .

மகளின் வார்த்தைகளைக் கேட்டு கண்ணீருடன் அவளை அணைத்து கொள்வாள். இந்த பத்து வருடத்தில் ஒரு முறையாவது, “”அம்மா சாப்பிட்டீங்களா?” என்று அன்பான ஒரு வார்த்தை கூட மாப்பிள்ளை கேட்டதில்லை. தன் பெண்ணுக்கு ஒரு பட்டுப் புடவையோ, வீட்டிற்காக ஒரு பொருளோ அவன் மகிழ்ச்சியுடன் வாங்கித் தந்து அவள் பார்த்தது இல்லை. தன் பெண்ணைச் சந்தோஷமாய் சிரித்து பார்த்தது கிடையாது. தன்னுடைய பென்ஷன் பணத்தைக் கொடுத்து அவனிடம் தஞ்சம் என்று விழணும். இது தான் அவன் எதிர் பார்க்கிறான். செல்வி தான் பணத்தைத் தரக்கூடாது என்று சத்தியம் வாங்கி விட்டாள்.

கணவனை இழந்த நான்காவது வருஷம் நெஞ்சு வலி ஆரம்பித்தது. மகளுடன் டாக்டரிடம் சென்றதற்கு மார்புக் குழாய் பழுதடைந்து விட்டது, அறுவைச் சிகிச்சை செய்யணும் என்று சொல்லி விட்டார்கள். மூன்று பெண்களும் முடிவு எடுக்கும்போது, “”தாரா ஆபரேஷன் செய்து கொள்ள மாட்டேன், ஆண்டவன் விட்ட வழி” என்று திட்டவட்டமாய்க் கூறிவிட்டாள் (அவளுக்குத்தான் தெரியும் ஆபரேஷன் என்று வந்துவிட்டால் ஒரு மாதம் படுத்து கிடக்கணும், மூன்று பெண்களும் வேலைக்கு செல்பவர்கள் தன்னால் தொந்தரவு வேண்டாமென்றே இந்த முடிவெடுத்தாள்.)

எத்தனை அவதூறு வார்த்தைகள்… “”வக்கில்லை… பெண் வீட்டில் வந்து உட்கார்ந்து விட்டாள்”

பெண்ணைப் படிக்க வைத்து மாதம் லட்ச ரூபாய் சம்பாதிக்கும் ஒரு நேர்மையான அரசு அதிகாரியாய் ஆக்கித் தந்ததற்கு தான் இந்த மாப்பிள்ளை தரும் இவ்வளவு அளவு கடந்த பாராட்டுகள்.

“”என்னம்மா தூக்கம் வரலையா?” கையில் பாலைக் கொண்டு வந்து கொடுக்கும் மகளைப் பார்த்து, “”ஒண்ணும் இல்லடா, ஏதோ யோசனைகள்” என்றாள்.

“”என் குடும்பத்தைப் பற்றி நீ கவலைப்படாத, இந்த ஆள் திருந்தமாட்டான். அதை நான் மதிக்கறதும் இல்ல. வயதான அன்னையைப் பார்த்து பாலைத் தந்து விட்டு தனியே வெளியே சென்று கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் செல்வி. “பாவி இவனால் யாருக்கும் நிம்மதியில்லை…. அன்பு என்ற சொல்லே தெரியாமல் வளர்ந்த மிருகம்’ என நினைத்துக் கொள்வாள். மூன்று வருஷம் வேலை இல்லா தண்டச் சோறாக இருந்தான். அப்போது இரண்டு வேலை பார்த்து குடும்பத்தை இழுத்தேன். “”இறைவா மனைவியைத் துன்பப்படுத்துவர்களைக் கொன்று விடு. அவர்கள் வீட்டுப் பெண்களை வாழ விடாதே” என்று பலமுறை செல்வி மனதில் மெüனமாக வேண்டிக் கொள்வாள். மறுநாள் செல்வி தன் தோழியிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தாள்.

“”ஏதோ இருக்கிறேன். நம் நாட்டை விட்டு வட நாட்டுக்கு வந்து நிம்மதியாய் இருந்தேன். நாலு மாதமா நிம்மதி தொலைந்துவிட்டதடி. நல்லவனைப் போல் மூன்று மாதங்கள் நடித்தான். எப்பவும் போல் நான் ஏமாந்துவிட்டேன்”

இங்கிலீஷில் இருவரும் உரையாடிக் கொண்டிருந்தார்கள். “”வை டூ யு கால் தட் இடியட், ஹெü யு சப்போர்ட் இன் சென்னை. கிவ் ஹிம் டைவர்ஸ், ஹி நெவெர் அலோ யு டு பி ஹாப்பி. ஒ.கே, திஸ் இஸ் தி சொல்யூஷன்”

தோழியின் ஆலோசனைக்கு எதுவும் பேசாமல் “”பை …பை” சொல்லி வைத்துவிட்டாள் போனை செல்வி.

தாரா நினைத்து பார்த்தாள். தன் கணவனுக்கும் தனக்கும் ஏதோ சிறு சிறு தகராறுகள் வந்து போகும். ஆனால் வாழ்க்கை இது போல் இல்லை. என்னதான், பிரச்னை நல்ல படித்த உயர் பதவியில் இருக்கும் மனைவி. சுட்டியான மகன். வாழ்க்கையைத் தானும் வாழாமல், அடுத்தவர் நிம்மதியைக் கெடுக்கும் ஜன்மங்கள். மனைவியைப் பார்த்துப் பார்த்து பொறமைப்பட்டு புண்படுத்தும் சுபாவம் உள்ளவன்.

எத்தனயோ முறை தாரா தன் மகளிடம் சொல்லி இருக்கிறாள். “”என்னால் தான் உனக்கு பிடுங்கல். நான் செத்துவிட்டால் நிம்மதி” என்று.

“”அப்போது இவன் புத்தன் ஆகி விடுவானா? இவனைப் பெத்தவள் ஓர் அரக்கி. என்னைக் கொல்ல வந்தவன் இவன்.. ஏதோ நீ இருக்கிற நிம்மதியில் என் பையனை விட்டு வேலைக்கு போகிறேன்…” என்று விரக்தியுடன் சிரிப்பாள் செல்வி .

“”கல்யாணம் ஆகி நானும் அவரும் ஆறு வருஷம் தனியாய்த் தானே இருந்தோம். அப்போது மற்றும் வாழ விட்டாரா? என் காசை எடுத்து அண்ணன் மனைவி பெயரில் போட்டு சொல்லாமல் கடன் வாங்கி அதை நான் என் எல்.ஐ.சி பாலிசியை அடமானம் வைத்து,கடன் தீர்த்து… அருமையான டி.வி.எஸ். வேலையை விட்டுட்டு… போதும் போதும் அந்த ஆளைப் பத்தி பேசாதே” என்று எழுந்து விடுவாள் சிலசமயங்களில்.

எத்தனையோ முறை செல்வி தன் கணவரிடம் கூறி இருக்கிறாள்.

“”இந்தா பாருங்க, இரண்டு அண்ணன்கள் இருக்கும்போதே, உங்க அம்மா தன் அப்பா அம்மாவை தன்னுடன் வைத்திருந்தாங்கன்னு உங்க உறவுக்காரங்க சொன்னாங்க. சம்பாதிக்காத, படிக்காத உங்க அம்மா தன் தாய் தந்தையை தன் வீட்டில் வைத்திருந்தாள். மனனவிக்கு மரியாதையை கொடுத்து அன்பாக வைத்திருந்தார் உங்க அப்பா. கை நிறைய சம்பளம், வீடு, கார் வாங்கி உங்களுக்குக் கொடுத்தேன். நம்ப குழந்தையை எல்.கே.ஜி இருந்து அன்பாகப் பார்த்து கொள்ளும். என் தாயைத் துரத்த முடியுமா? எனக்கு அவங்க என்னிக்கும் பாரம் கிடையாது. அது முடியாதுங்க, அவங்க எனக்கு கல்வி. தமிழ் மொழி கற்றுதந்த ஆசிரியையும் கூட. எல்லாத்திற்கும் மேலே என் தாய். நம் நாட்டு குடும்பங்களில் மகளை மகனைப் போல் படிக்க வைக்கிறார்கள். ஆனால் முதுமையில் பெண் வீட்டில் தங்க சட்டம் இல்லையாம். இதெல்லாம் யார் போட்ட கட்டளை? உங்க அம்மாவையும் தான் ஃப்ளைட் டிக்கெட் குடுத்து கூப்பிட்டேன். வர முடியாது என்று சொன்னாங்க. வட மாநிலத்தில் தனியா பையனுடன் நான் வந்தபோது என் கூட வந்தவள் என் தாய் மட்டும் தான். எதற்காக நான் இங்கே வந்தேன்? வீட்டுக்கு ஈ .எம் .ஐ கட்டுவதற்காக ஆண் செய்யும் வேலையை நான் செஞ்சுகிட்டிருக்கேன். மனிதன் மனிதனை நேசிக்கப் பழகுங்கள். மனைவி வீட்டார் மட்டம், தன் வீட்டார் உசத்தி… என்ற கீழ்த்தரமான எண்ணத்தை விடுங்கள், போதும் உங்கள் பழைய எண்ணம். இதய நோயாளியிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்” என்று செல்வி அழுவாள்.

பலமுறை தன் தோழி வனிதா படும் பாட்டை நினைத்து பார்ப்பாள். அவள் வீட்டில் இல்லத்தரசி என்று சொல்லும் ஓர் அடிமை. அவளது கணவன் கோபம் வந்தால் மனைவி முகத்தில் எச்சில் துப்புவான். அவள் சொல்லும்போதே கல்லூரி முதல்வராகப் பணி புரியும் இன்னொரு தோழி வசந்தி சொல்லுவாள்: “”பெண் கை நிறையச் சம்பாதித்தாலும் ஏன் சில ஆண்கள் அவர்களைச் சந்தோஷமாய் வாழ விடுவதில்லை? எல்லாம் காம்ப்ளெக்ஸ் தான் காரணம். இந்த ஜந்துக்களையெல்லாம் பெண்கள் வன்கொடுமைச் சட்டத்தில் தள்ளி நாலு தட்டு தட்டினால் சரியாகிவிடும்” என்று.

அதற்கு வனிதா, “”வக்கீல் செலவு, நேரம் வீணாகும், கோர்ட் வாசலில் இந்த மூதேவிகளுக்காக நேரத்தையும், பணத்தையும் வீணாக்க என்னால் முடியாது” திடமாக கூறுவாள். செல்விக்கு அதுவும் சரி தான் என்று தோன்றும்.

இதை எல்லாம் பார்த்து ஒரு நாள் தாரா, “”முதியோர் இல்லத்திற்கு என்னைக் கொண்டு போய் விடும்மா” என்றும் செல்வியிடம் கூறினாள். “”நான் உயிரோடு இருக்கும்வரை அது முடியாது” என்று திடமாக மறுத்தாள் மகள் செல்வி .

அன்று ஒரு நாள் மகள் ஆபீசிற்கு, பேரனும் ஸ்கூலுக்குப் போயிருந்த நேரம் தனியே இருக்கும் தன்னிடம் எத்தனை வார்த்தைகளை வீசி இருப்பான்? அவன் கத்துகிற சத்தத்திற்கு அக்கம் பக்கத்தினரும் தன்னைப் பரிதாபமாய்ப் பார்ப்பதையும் மறக்கவில்லை தாரா.

ஓர் இரவில் லோ பி.பி என்று அருகில் உள்ள மருத்துவமனையில் செல்வி சேர்த்தாள். பத்து நாள் சி.சி.யு. என்ற பெயரில் நரகத்தைப் பார்த்தாள் தாரா. செல்வியிடம் சொன்னாள்: “”செல்வி தைரிமாக இருக்கணும், உனக்குப் படிப்பு, அரசு உத்தியோகம், ஆண்டவன் அருளில் இருக்கிறது. பையனை நல்லாப் படிக்க வைக்கணும். எதுக்கும் கவலைப்படாதே” மரணப்படுக்கையில் கூட தாயின் மனோ திடத்தைப் பார்த்து தனியாகக் கதறி அழுதாள் செல்வி.

அன்று சனிக்கிழமை. காலையில் மருத்துவமனைக்குப் போன செல்வி தாயைப் பார்த்து கதறிவிட்டாள்

வாயை இழுத்து குழாயைப் போட்டு வெண்டிலேட்டர் என்ற பெயரில் கழுத்திற்கு நெக்லைன் போட்டு இஷ்டம் போல் மனிதநேயம் இல்லாத இந்த பணம் பிடுங்கும் மருத்துவர்களைத் தான் என்ன சொல்ல முடியும்? அதுவும் நம் மொழி தெரியாத வட நாட்டில்? அம்மா இறந்துவிடுவாள் என்றால் தயவுசெய்து செய்து என்னிடம் கொடுத்துவிடுங்கள். நான் வீட்டிற்குக் கொண்டு சொல்கிறேன்” என்று ஹிந்தியில் மருத்துவர்களிடம் கெஞ்சியும் எந்த பிரயோஜனமும் இல்லை.

“”அம்மா இறுதி யாத்திரைக்குக் கிளம்பி விட்டாயா?”

என்று, அவள் வாயில் துளசி ஜலத்தையும், கங்கா

ஜலத்தையும் விட்டுக்கொண்டே, அவள் நெற்றியை வருடியபடி குலுங்கி அழுதாள்.

“”பைத்தியமே….அழாதே அனாயாச மரண ஸ்தோத்திரம் சொல்லிக் கொண்டிருக்கும்போது தானே மயக்க ஊசி போட்டு வென்டிலேட்டரை போட்டார்கள். நான் மறைந்தாலும் உன்னுடன்தான் இருப்பேன்” என்று அம்மா சொல்லத்தானோ, என்னவோ மயக்கத்தில் கண்களைச் சிமிட்டுகிறாள், கால்களை ஆட்டுகிறாள்.

இரவு அம்மா இறந்துவிட்டாள் என்று கூறினவுடன் மருத்துவர்களிடம் இருந்து சடலத்தைப் பெற்றுக் கொண்டு செல்வி தன் மகனிடம், “”கண்ணா உன் அப்பாவிற்கு ஒரு கிலோ ஸ்வீட்ஸ் வாங்கி குடு. கொண்டாடட்டும்” என்று சொல்லிக் கொண்டே குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

அதற்கு அவன், “”அம்மா இந்த உலகத்தில் எத்தனையோ தாரா பாட்டிகள் இருக்கிறார்கள், அவர்களுக்கு முதியோர் இல்லம் வைத்து வழிகாட்டுவோம். அது தான் பாட்டிக்கு செய்யும் தர்ப்பணம். அழாதே” என்று கண்ணீரைத் துடைத்த மகனை வாரி அணைத்துக் கொண்டாள் செல்வி .

(இந்த கதை நவம்பரில் இறந்த என் அன்புத்தாய்க்கு சமர்ப்பணம்)

– ஆகஸ்ட் 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *