குடிமகன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 28, 2021
பார்வையிட்டோர்: 4,599 
 

ராஜபாளையம் செல்லும் அந்த மையச்சாலையில் ஒரு கவட்டை போல இரண்டாக சாலை பிளந்து, அதில் இடது பக்கமாய், இரு தூண்களோடு அகன்று நின்ற உயரமான சிமெண்ட் வளைவு வழியே சென்று, சாலையின் இரண்டு புறமும் யார் வருகையையோ எதிர்பார்த்தபடி வேங்கை, கொன்றை, வேப்ப மரங்கள் குடை பிடித்து நின்ற மடவார்வளாகம் சாலையில் சென்று, இடது புறத்தில் பரந்து, விஸ்தாரமாய் இருந்த பல் டாக்டர் தக்ஷிணேஸ்வரனின் பங்களா முன்பு இருந்த வேப்ப மர நிழலில் ஒதுங்கி, தன்னுடைய மிதிவண்டியை நிறுத்தி , முதல் காரியமாய் அதைப்பூட்டி விட்டு, அந்த பங்களாவை ஒரு தடவை ஏறெடுத்துப்பார்த்தான் அருணாச்சலம்.

தான் மடவார்வளாகத்தில் உள்ள வைத்தியநாதஸ்வாமி கோவிலுக்கு வரும் போதெல்லாம் தன்னுடைய மிதிவண்டியை நிறுத்துவது அங்கே தான். அந்த இடம், அவனுக்கு ஏதோ ரொம்ப வாடிக்கையாகி விட்டது. அவனுக்கு அந்த வேப்ப மர நிழலும் மறைவும் தான் ரொம்ப சௌகரியமாக பட்டது. இது பல வருஷங்களாகவே நடந்து வருவது. மிதி வண்டியை விட்டு விலகி, சாலையின் மேல் ஏறியவன், மேற்கு திசையை பார்க்கிறான். பொன்னை உருக்கி வானில் இருந்து கீழே கொட்டி, அது பிரவாகம் எடுத்தது போல மாலை நேர மஞ்சள் வெய்யில் தனது சோதியை எங்கும் பரப்பிக்கொண்டு இருக்கிறது. நோக்குமிடமெல்லாம் பொன்னிற சோதியே தென்படுகிறது.

வெள்ளை வேஷ்டியை சரி செய்து கொண்டு, சாலையில் அருணாச்சலம் நடந்து தெற்கு நோக்கிப்போகையில், அவனைக்கடந்து ஒரு கார் போகிறது. நல்ல கட்டுக்கோப்பாக வடிவமைக்கப்பட்ட கார். அதில் இருப்பவர்களுக்கு நல்ல சௌகரியமாக இருக்கும் போல. டாக்டர் தக்ஷிணேஸ்வரனின் வீட்டுக்கு சற்று தொலைவில் , எதிர் வரிசையில் உள்ள அர்ச்சகரின் வீட்டின் முன்பு அந்த கார் நிற்கிறது. காரின் முன்புறத்தில் உள்ள ஓட்டுநர் இருக்கையிலிருந்து இள வயசுக்காரன் ஒருவன் வெளியேறுகிறான். அவனைப்பார்க்கிறான் அருணாச்சலம்.

இந்தப்பையனை எங்கேயோ பாத்த மாதிரி இருக்கிறது அருணாச்சலத்துக்கு. நினைவின் அடுக்குகளை தட்டிப்பார்க்கிறான் அருணாச்சலம். ஆ, இப்ப ஞாபகம் வந்துருச்சு. இவன் ஊர்க்குடிமகன் பவளத்தோட மகனில்ல!? இவனா கார் வாங்கியிருக்கான் ? அல்லது இன்னொருத்தருக்கு கார் ஓட்டுறானா ? பரவாயில்லையே ! காரின் பின் கதவு திறக்கப்பட்டு, அதிலிருந்து குடிமகன் பவளம் எறங்குகிறார். முதுமையின் அடையாளங்கள், அவருடைய தலை முழுக்க வெண்ணிறத்தில், வெள்ளிக்கம்பிகளாய் தெரிகிறது. முகம் முற்றிப்போய் விட்டது. உடல் தளர்ந்து ஆட்டம் கண்டு விட்டது. மெதுவாகத்தான் காரை விட்டு இறங்குகிறார் பவளம். காரில் இருந்து இறங்கியதும் இடுப்பு வேட்டியை அவிழ்த்து, உதறி, அதை சரி செய்து கொண்டு, மீண்டும் இடுப்பில் இறுக்கிக்கட்டிக்கொள்ளுகிறார்.

“யாரு, பவளம் ஐயாவா ?”

“ஆமாங்க ஐயா ! என்ன உங்களைப்பாக்கவே முடியல. எங்க போயிருந்தீங்க ? நம்ம வீட்டுல எல்லாரும் சௌக்கியம் தான ? வெளிநாடு எங்கயும் போயிட்டீங்களா ? ஆளே மாறிப்போயிட்டீங்க. வெளியூர் சாப்பாடோ ? ”

சரமாரியாக அருணாச்சலத்தை நோக்கி கேள்விகளை விடுக்கிறார் பவளம்.

“ஐயா, நல்லா இருக்கேன்யா! நீங்க நல்லா இருக்கீங்களா? கார் வாங்கிட்டீங்க போல.” !

“ஆமாங்கய்யா.. என் மகன் தான், எப்படியாவது கார் வாங்கி, அதுல என்னைய உக்கார வெச்சி கொண்டு போவேன்னு, ஒத்தக்கால்ல நின்னான். சொன்னா கேட்டாத்தான? இல்லப்பா, எத்தனை நாளைக்கு தான் நீங்க இப்படி துருப்பிடிச்ச சைக்கிள்ல கரட்டு, கரட்டுன்னு மிதிச்சுக்கிட்டு போவீங்க ! ஒரு நாளைக்காவது உங்க கஷ்டம் விடியணும்ப்பா ! அப்படீன்னு ஒரேயடியா நின்னு இந்த கார வாங்கிட்டான். செகண்ட் அண்ட் தான். இருந்தாலும் கண்டிசனா இருந்தது. அதுனால சரின்னு சொல்லிட்டேன் ! ”

“பையன் எங்க வேலை பாக்குறாரு ? ”

” நம்ம ஊரு தாசில்தார் ஆபீஸ்ல தான். ரெகார்ட் கிளார்க்கா இருக்கான். வேலைக்கு சேந்து ரெண்டு வருசமாச்சு.! ” என்கிறார் பவளம்.

“அவர் பேரு ?”

” பேரு சக்தி ராஜ். இவன் என்னோட ரெண்டாவது பையன்!” பவளம் ரொம்ப நம்பிக்கையோடும், உற்சாகமாகவும் பேசுகிறார். பவளம் முன்னே வந்து நிற்க, அவரது பையன் அவர் பின்னே வந்து நிற்க, பிறகு ” சரி, உங்கள பாத்ததுல ரொம்ப சந்தோசம் !”

பவளத்தோட சலூன் கடை, கீழ ரத வீதியில தேரடிக்கு பக்கத்துல இருக்கு. தேரடியில் இருந்து, பழைய வெங்கடேஸ்வரா தியேட்டருக்கு போற வழியில , டெலிபோன் ஆபீசுக்கு எதுத்தாப்புல, வலது பக்க கடைசில பவளத்தோட கடை. முடி வெட்டிக்கொள்ள அருணாச்சலம் அங்கு காலையில் போவது வழக்கம் தானே முதல் ஆளாய் இருக்க வேண்டும் என்பதற்காக , கடை திறந்ததும் முதல் ஆளாய் போய் நின்று விடுவான்.

அந்த சலூன் கடைக்கு பெரிசு பெரிசாய் நான்கு சன்னல்கள். காரைக்கட்டிடம். அந்தக்கட்டிடம் இருக்கும் இடமே, ஊர்க்காரர்கள் பவளத்தின் அப்பாவுக்கு இனாமாக தந்தது. அந்த இடத்தில் ஒரு கட்டிடம் கட்டித்தந்தது அந்நாளில் இருந்த ஊர்ப்பெரியவர் சடாச்சர முதலியார் தான். சண்முகத்தின் குடும்பம் குடியிருக்க சூடிக்கொடுத்த விநாயகர் கோவில் தெரு முனையில் ஒரு காரை வீடும் தரப்பட்டது. பவளத்தின் அப்பா சண்முகத்தை இந்த ஊருக்கு கொண்டு வந்து வைத்தது முதலியார்களும், வேளாளர்களும் தான். தங்கள் வீட்டு காரியங்களுக்கென்று தனியாக ஒரு குடிமகனை நியமித்துக்கொண்டார்கள்.

சண்முகம் அகால மரணம் அடைந்த பிறகு, பவளத்துக்கு அந்த பொறுப்பு வந்தது. முதலிகளும், வேளாளர்களும் அவனது கடைக்கு வர மாட்டார்கள். வீட்டில் இருந்தபடியே காலையில் சொல்லி அனுப்பி விடுவார்கள். உடனே தாமதம் இல்லாமல், சண்முகம் புறப்பட்டுப்போய், அவர்களின் வீட்டுக்குப்போய் பின்வாசலுக்கு வெளியே நிற்க வேண்டும். இவன் வருவது தெரிந்து, முன்னயே அந்தக்கதவு திறந்து வைக்கப்பட்டிருக்கும். அவர்கள் வீட்டுக்கொல்லைப்புறம் வழியே உள்ளே நுழைந்து, அங்கு ஒரு மர நாற்காலியில் உக்கார்ந்திருக்கும் முதலிக்கு முடி வெட்டி, சவரம் செய்ய வேண்டும். உயர்த்திய கைகளுக்கு கீழே அக்குள் பகுதியில் சவரம் செய்த பிறகு, நாற்காலியில் இருப்பவர், எழுந்து நின்று கொண்டு, தனது எட்டு முழ வேட்டியை அவிழ்த்து, அதை ரெண்டு கைகளாலும் பக்கவாட்டில் நீள வாக்கில் நீட்டிப்பிடித்துக்கொண்டு நிற்க, அவர் முன்னே பவளம் குத்த வைத்து உக்கார்ந்து கொண்டு, மர்ம இடங்களிலும் சவரம் செய்து விடுவான்.

இதை, திருமுக்குளத்திலும் அருணாச்சலம் பார்த்திருக்கிறான். திருமுக்குளத்தின் , தெற்குப்பக்கத்தில் உள்ள அரச மரத்தின் கீழே, நாவிதர்கள் உக்கார்ந்திருப்பார்கள். வந்திருக்கும் ஆளுக்கு, அவர்களும் இதே மாதிரி, முழங்காலை மடித்துக்கொண்டு, தரையில் குத்த வைத்து மர்ம இடத்தில் சவரம் செய்து விடுவதை தன் கண்களாலேயே பார்த்திருக்கிறான்.

முதலிகள், வேளாளர்கள், முடி வெட்டிக்கொண்ட பிறகு, சம்பளமும், பழைய துணிமணிகளும் குடுத்து அனுப்புவார்கள். வருசா வருசம் அறுவடை முடிந்த பிறகு, பவளத்துக்கு சொல்லி அனுப்பி விட்டு, அவனுக்கு ரெண்டு மரக்கால் நெல் அளந்து விடுவதும் உண்டு. யாராவது வீட்டில் துஷ்டி நடந்து விட்டால், அந்த வீட்டில் எல்லா கரும காரியத்துக்கும் பவளமே பொறுப்பு. கொட்டுவான், தட்டுவான், கொம்பு ஊதி, குழல் ஊதி, சண்டி, சேகண்டி என்று எல்லா ஆட்களுக்கும் சொல்லி விட்டு, துஷ்டி காரியத்துக்கு நிற்க வேண்டும். துஷ்டி வீட்டில், தனது தொழிலுக்கான சாமான்கள் இருக்கும் ஒரு மஞ்சப்பையை இடது கையில் பிடித்துக்கொண்டு , வலது கையால், முதன் முதலில் வெண் சங்கு ஊதுவது பவளம் தான். இறந்த ஆளை கொல்லைப்புறத்தில் கிடத்தி, அவரது முகத்தில் தாடி இருந்தால், அதையும் சவரம் செய்யச்சொல்லுவார்கள். சவரம் செய்து முடித்ததும் பிணத்தை குளிப்பாட்டி, நெற்றி நிறைய விபூதியை பூசி விடுவார்கள். இது முடிந்ததும் , கோடி வேட்டியும், துண்டும், நெல்லும், பணமும், தரப்படும்.

எப்பவாவது பணத்தட்டுப்பாடா இருந்தா, பவளம், முதலி அல்லது வேளாளர் வீடுகளுக்கு போய், தூர நின்று கொண்டு, தலையைச்சொரிந்து கொள்ளுவான். ‘எசமானைப்பாத்து ரொம்ப நாளாச்சா. அதான், அப்படியே ஒரு பார்வை பாத்துட்டு படிக்காசு வாங்கிட்டுப்போகலாம்னு வந்தேன் !’ என்று அசடு வழிந்து கொண்டே நிற்பான். அதைப்புரிந்து கொண்டு, அவனுக்கு நெல்லோ, வேட்டி, துண்டு அல்லது அல்லது பணமோ குடுத்து விட்டு,

” ஏலே பவளம் ! உன் பிள்ளையையும் தயார் பண்ணிட்டயா ? அவனுக்கும் உன்னைய மாதிரி எல்லா விஷயமும் தெரிஞ்சிருக்கணும். உன்னையே மாதிரி தொழில் தெரிஞ்சவன் எவன் இருக்கான் சொல்லு ? ” என்பார்கள்.

பவளத்துக்கு தூக்கி வாரிப்போட்டது. அந்த இழுத்து வழிக்கும் சவரத்தொழில் தன்னோடு போகட்டும் என நினைத்தான். தன்னோட பிள்ளைகள், முதலிகளுக்கும், வேளாளர்களுக்கும் முடியை வழித்து விட்டு, நெல்லும், துணிமணியும் வாங்குவதற்கு கையேந்தி நிற்கக்கூடாது என நினைத்தான். தன்னோட ரெண்டு பிள்ளைகளையும் படிக்க வைத்தான்…

…சாமி தரிசனம் முடிந்து, கொடிமரம் அருகே மீண்டும் கைகளை கூப்பி, வைத்தியநாத ஸ்வாமியை கண்கள் குவித்து வணங்கி விட்டு, அகண்ட பிரதக்ஷணம் முடித்து, வெளியேறி, வாசல் அருகே, மேல் கோபுரத்தை நிமிர்ந்து நோக்கி , மீண்டும் கைகளை குவித்து வணங்க நிமிர்ந்து பார்க்க, அங்கே பவளமும், சக்திராஜும் தரிசனம் முடித்து திரும்பி வருகின்றனர்.

“ஐயா, ஒண்ணு சொல்ல விட்டுப்போச்சு. என் பையன், இனிமே என்னைய கடையில இருந்து வேலை செய்ய வேண்டாம்னு சொல்லிட்டான். அவனே எனக்கு எப்பாடு பட்டாவது கஞ்சி ஊத்தறேன்னு சொன்னான். நான் ரிட்டையர் ஆகிட்டேனாம். இனிமே, நானோ, என் குடும்பமோ சவரம் பண்ணக்கூடாதாம். என் பசங்க ரெண்டு பெரும் தெளிவா இருக்காங்க.”

“அப்படியா? இது எப்ப முடிவெடுத்தது?”

“ரெண்டு வாரத்துக்கு முந்தி ஐயா. அதான் பிள்ளைக என் கிட்ட கண்டிசனா சொல்லிட்டாங்கல்ல. நான் எப்படி மீற முடியும்? அதான் ரெண்டு வாரத்துக்கு முந்தி, என்னோட கடைய பூட்டி, சாவிய கொண்டு போய், சடாச்சர முதலியார் வீட்டுல அவரோட மகன் கிட்ட குடுத்துட்டு, இனிமே அந்தக்கடை எனக்கு தேவையில்லன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.”

“ரொம்ப துணிச்சலாத்தான் இந்த முடிவு எடுத்தீங்க போல.”

“ஆமாங்க ஐயா !”

“கடையில இருக்கற நாற்காலி, பெஞ்சு, தொழில் பண்ற சாமான் எல்லாமே கடைக்குள்ள தான் இருக்கு. வீடும் அவங்க குடுத்தது தான். இந்த ஆடி முடிஞ்சதும், ஆவணியில வீட்டையும் காலி பண்ணிட்டு, முதலியார்வாள் வீட்டுல சாவிய குடுத்துட்டு மெட்றாஸ்ல இருக்கற என்னோட மொதப்பையன் வீட்டுக்கு போகப்போறேன். அந்த வீட்டை அவங்களே வெச்சுக்கட்டும்.”

வைத்தியநாதஸ்வாமி கோவில் வாசலில் நின்று கொண்டு, கைகளை உயர்த்தி, நந்திக்கும், கோபுரத்துக்கும் சேர்த்து ஒரே பெரிய கும்பிடு போட்டு விட்டு, தன் பையனோடு காரை நோக்கிப்போனார் பவளம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *