கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 6, 2014
பார்வையிட்டோர்: 13,224 
 

எனது செருப்பிரண்டையும் கையில் பிடித்துக்கொண்டு, மணப்பரப்பில் காலை வைத்தேன். மாலைச்சூட்டில் காய்ந்திருந்த மணல், அடிப்பாதத்தை வெதுவெதுப்பாய் வருடியது. அது, அடிப்பாதத்தில் ஒரு பூச்சியின் நகர்தலை மிதித்ததுபோல் ஒரு குறுகுறுப்பை ஏற்படுத்தி, எனது சிறுவயது உற்சாகத்தை நினைவூட்டியது. அப்படியோர் இதமான வருடல். அன்னையின் தலைவருடல் போல.

காவேரி

ஆற்று மணலின் நடுவே வீசும் காற்று, யாருடைய அந்தரங்கத்தையும் கவர்ந்து வராமல், பரிசுத்தமான மெல்லிய இசைபோல் இனிமையாக காதில் ரீங்காரமிட்டது. இப்போது காதிற்குள் குறுகுறுப்பு. எனது இரு கைகளையும் காது மடலை மூடியும், திறந்தும் காற்றுடன் விளையாடத் தொடங்கினேன். குழந்தைப் பருவ விளையாட்டு.

எனது பள்ளி வாழ்க்கையின் பாதி வாழ்க்கையை இந்த ஆற்றில்தான் கழித்தேன். அதுவும் நான்காவது ஐந்தாவது படிக்கும்போது. மதியம் வரை பள்ளியிலும், அதற்குமேல் இந்த ஆற்று மீன்களிடமும் விளையாடியபடி என் பொழுதுகள் கழியும். நான்கைந்து மணிநேரம் ஆற்றில் குளித்த காரணத்தால், கண்கள் இரண்டும் செக்கச் சிவப்பாய் பீட்ரூட் கலரில் சிவந்திடும். அதைப் பார்த்து நான் பள்ளி செல்லவில்லை என்ற உண்மை வெளிவந்து, அப்பா கட்டி வைத்து வெளுத்தெடுப்பார். அப்போது போகமாட்டேன் போகமாட்டேன் என்று அழுதபடி செய்யும் சத்தியம், மறுநாள் ஆற்றுத் தவளைகளை பீடி குடிக்க வைக்கும்போது, அவை வெளியிடும் புகைபோல் காற்றில் கரைந்து விடும்.

இப்படி நாங்கள் தினந்தோறும் நெடுநேரம் ஆற்றில் குளித்துக் கொண்டிருப்பதை பார்த்து, கையில் ஒரு குச்சியை எடுத்துக் கொண்டு துரத்துவார் அந்த தாத்தா. சற்று கூன் விழுந்த முதுகும், வெற்றிலைக் கரைபடிந்த பற்களும், எப்போதும் காற்றில் கலைந்த தலைமுடியுமாக, அடிக்கடி தலையில் ஒரு மண்கூடையோடு ஆற்றில் இறங்கி ஏறிக் கொண்டு இருப்பார். ஆற்றிற்கு செல்லும் பாதையின் தொடக்கத்தில் அவரது குடிசை இருக்கும். யார் ஆற்றில் குளிக்க சென்றாலும் அவரைத் தாண்டித்தான் செல்ல முடியும். இதனால், நாங்கள் அவர் வீட்டு வாசலில் இருக்கும் வரை மறைந்து நின்று கொண்டு, அவர் எச்சில் துப்ப திரும்பும் நொடிப்பொழுதில் உள்ளே ஓடி விடுவோம். பிறகென்ன, கொண்டாட்டம் தான். ஆற்றில் துணிகளை துவைத்துக் கொண்டிருக்கும் பெண்கள், தங்களது துணிகளை அலசி கொண்டிருக்கும் வேளையில், சட்டென அவர்கள் கல்மேடையில் வைத்திருக்கும் துணி சோப்பை எடுத்து உடம்பெல்லாம் தேய்த்துக் கொண்டு, அவர்கள் திரும்புவதற்குள் ஆற்றுக்குள் குதித்துவிடுவோம். அப்பொழுதெல்லாம் எங்களது குளியல் சோப் துணி சோப்தான். குளித்து முடித்தவுடன் உடம்பெல்லாம் உப்பு காய்த்திருக்கும். ஆனாலும், அதைப்பற்றி கவலைப்படுவதில்லை.

என், பதின்மூன்றாவது வயதில் நீச்சல் கற்றுக் கொடுத்தது இந்த ஆறுதான். இந்தப் பகுதியை மாடு குளிக்கிற ஆறு என்பார்கள். காரணம், இங்குதான் அப்பகுதியில் இருக்கும் அனைத்து மாடுகளும் குளிப்பாட்டப்படும். எப்போதும் நான் படிக்கட்டில் மட்டுமே நின்று குளிப்பதை பார்த்த வெங்கடேசன் அண்ணன், திடீரென என்னை தூக்கி ஆற்றுக்குள் எறிந்தார். நான் பதறி தத்தக்கா பித்தக்கா என கைகால்களை அடித்துக் கொண்டிருக்கும்போது, என்னருகே வந்து என்னை நிதானப்படுத்தி நீச்சல் சொல்லிக் கொடுத்தார். அன்றுமுதல்தான், நான் நீச்சல் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.

இப்படி நீச்சலைக் கற்றுத்தந்த இந்த ஆறுதான் மரண பயத்தையும் ஒருநாள் கற்றுத் தந்தது. நான் நீச்சல் கற்ற சில நாட்களிலேயே, மணி என்ற நண்பனொருவன் என்னிடம் சவால் விட்டான். நம்மில் யார் முதலில் ஆற்றின் நடுவில் இருக்கும் அந்த மணற்பரப்பில் கால் வைக்கிறோமோ அவனே பெரியவன் என்று. ஆபத்தறியாத பருவம். நீச்சல் கற்றுக்கொண்டிருக்கிறோம் என்ற தைரியத்தில் ஒத்துக்கொண்டேன். நீச்சலில் நானே கன்றுக்குட்டி. அவனோ காளை. நீந்தத் தயாரானோம். சட்டென இருவரும் ஒருசேர குதித்தோம். ஆர்வமிகுதியால் நான் தொடக்கத்திலேயே வேகமாக நீந்தத் தொடங்கினேன். அதனால், பாதி வழியிலேயே உடல் வலிக்கத் தொடங்கியது. கைகால்களை அசைக்க முடியாத வலி. அவனோ மெதுவாக நீந்தியபடி நடுக்கரையை தொட்டு ஏறி நின்று என்னை பார்த்து வெற்றி புன்னகையை சிந்தத் தொடங்கினான். நானோ ஆற்றின் போக்கில் அடித்துச் செல்லப்படத் தொடங்கினேன். எனக்கு தாகமில்லாவிட்டாலும் தண்ணீரை குடிக்கத் தொடங்கினேன். ஒருகட்டத்தில், என்னைச் சுற்றி மரணம் எதிர்பார்ப்புடன் எனக்காக காத்திருப்பதை அறிந்தவுடன், உடலில் எஞ்சியிருந்த வலிமை அனைத்தையும் சேர்த்து, ஆற்றின் போக்கிலேயே போய், நடுக்கரையை தொட்டு சரிந்தேன். என்னை தோற்கடித்த நண்பன் வெற்றிக்களிப்பில் என்னை நோக்கி வர, மரணத்தை தொட்டு விட்டு வந்த களைப்பில் வேகமாக மூச்சு வாங்கி தண்ணீரை குடித்துக் கொண்டிருந்தேன் நான்.

வாரத்திற்கு ஒருமுறை, எங்கள் வீட்டில் சேர்ந்துள்ள அழுக்குத் துணிகளையெல்லாம் துவைப்பதற்காக, புடவைகளால் கட்டப்பட்ட பெரிய பெரிய துணி மூட்டைகளை தட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு அப்பா ஆற்றிற்கு செல்வார். கூடவே நானும், தம்பியும் மூட்டைகள் கீழே விழாதவாறு பிடித்துக்கொண்டு ஆற்றிற்கு போகும் சந்தோசத்தில் செல்வோம். அக்காக்கள் மூவரும் பின்னால் வண்டியை தள்ளிக்கொண்டு வருவார்கள். காவேரி பாலத்தின் அடியில் நானும் தம்பியும் மூட்டைகளை தூக்க முடியாமல் தூக்கிச் செல்வோம். அக்காக்கள் தாங்கள் கைகளில் வைத்திருக்கும் சாப்பாட்டு குண்டானை மணலில் வைத்துவிட்டு, துணிகளை துவைக்கத் தொடங்குவார்கள். நாங்கள் அதை அலசத் தொடங்குவோம். இடை இடையே தண்ணீரில் பொத்பொத்தென்று குதித்து கும்மாளமிடுவோம். அக்காக்கள் திட்டுவார்கள். அப்பாவின் அடிக்கே அடங்காத சிறுவன், அக்காக்களின் திட்டுகளுக்கா அடங்குவான். பொத்தென அவர்களின் அருகேயே குதித்து அவர்களையும் நனைப்பேன். அடிக்க துரத்துவார்கள். தண்ணீருக்குள் ஒளிந்து கொள்வேன். ஆனாலும் எப்படியோ கண்டுபிடித்து தலைமுடியோடு தூக்கி முதுகிலேயே நாலு வைப்பார்கள். அந்த நேரத்தில் அழுதுவிட்டு, கோபத்தில பழையபடி அவர்கள் அருகேயே பொத்தென குதித்து, நீருக்குள் மூழ்கிக் கொள்வேன்.

துணி துவைத்துவிட்டு சாப்பிட உட்காரும்போது, என்னை திட்டிக்கொண்டே சாப்பாடு போடுவார்கள். அந்த நேரம் மட்டும் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு சாப்பிட்டு முடிப்பேன். பிறகு நாங்களனைவரும் குளித்துவிட்டு வீட்டிற்கு திரும்பும்வரை நீருடன் ஒரே கும்மாளம்தான். அடுத்தமுறை உன்னை அழைத்து வர மாட்டோம் என்று மூவரும் ஒருசேர உறுதி கூறுவார்கள். அடுத்தமுறை, நான்தான் அழுக்குத்துணி மூட்டைகளை பாலத்தின் அடியில் வைத்து பிரித்து தண்ணீரில் ஊற வைத்துக் கொண்டிருப்பேன். மூன்று அக்காக்களுடனும் நான் சந்தோசமாய் ஆற்றில் ஆடிக் கழித்த காலத்தை இந்த காவேரி நன்கறியும். இப்போது அக்காக்கள் ஆளுக்கொரு திசையில் மணமாகி சென்று விட்டாலும், அவர்களுடன் இருந்த அந்த சந்தோச கணங்களில் இந்த ஆற்றுக்கும் முக்கிய பங்குண்டு.

பிறகு எட்டாவது படிக்கும்போது புதிய நண்பர்களுடன் இணைந்து, காவேரி ஆற்றின் மறுபுறம் இருக்கும் நாவல் மரத்தில் நாவல் பழம் பொறுக்க, பள்ளியை கட் அடித்து செல்வேன். அதற்காக, இரயில் பாலத்தில் வேகமாய் நடப்போம். எதிரே ஏதாவது இரயில் வந்தால் பரபரப்பாகி தண்டவாளத்தின் ஓரத்தில் ஒதுங்கிக் கொள்வோம். இரயிலில் போவோரை, அவர்கள் டாட்டா காட்டாவிட்டாலும், இரயில் மறையும்வரை டாட்டா காட்டுவோம். பின், நாவல் மரத்தை அடையும் வரை அரட்டை அடித்துக்கொண்டு நகரும் எங்கள் கும்பல், அதன் அருகே வந்ததும் அடித்துப்பிடித்துக் கொண்டு நாவல் பழங்களை பொறுக்கி திங்க ஆரம்பிப்போம். வாய் முழுக்க நாவல் பழ சிவப்போடு, ஆற்றுக்குள் இறங்குவோம். நீருக்குள் எங்களது கண்ணாம்பூச்சி விளையாட்டு ஆரம்பிக்கும். நேரம் போவது தெரியாது. நீர் நன்றாக குளிர்ந்த பின்னர்தான், மாலை நன்றாக இருட்டி விட்டதை உணர்ந்து அவரவர் வீட்டிற்கு விரைவோம். மறுநாள் பள்ளிச் சீருடையோடு நாங்கள் ஆற்றில் விளையாடியதை பள்ளிக்கு யாரோ தெரிவித்துவிட, தலைமையாசிரியர் அறைக்கு வெளியே பயந்த விழிகளோடு நிற்போம். ஆனாலும், உள்ளுக்குள் அந்த நவால்பழ இனிப்பும், காவிரி நீரின் குளுமையும் அப்படியே இருக்கும். ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொள்வோம்.

பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது, சர்க்கார் பாளையத்தில் இருக்கும் நண்பனொருவன் வீட்டிற்கு படிக்கச் செல்கிறோம் என்று கூறிவிட்டு, கையில் கொண்டு வந்த புத்தகங்களை அவன் வீட்டிலேயே போட்டுவிட்டு, மிகவும் சீரியசாக மீன் பிடிக்கத் தொடங்குவோம். கூடவே நண்டும். தேவையான அளவிற்கு பிடித்துவிட்டு, குளிக்கத் தொடங்குவோம். அப்போது எங்கள் கையில் ரப்பர் பந்து இருக்கும். பேபே விளையாட்டு. படார் படாரென்று உடம்பில் ரப்பர் பந்தால் அடி விழும். அடிவாங்கிய வெறியை மனதில் தேக்கி வைத்துக்கொண்டு, என்கையில் பந்து அகப்பட்டவுடன் என்னை அடித்தவனை திருப்பி அடிப்பேன். மனம் அமைதி கொள்ளும். ஆனாலும், இப்போது நினைத்தாலும் அவை யாராலும் திரும்பப் பெற முடியாத சந்தோசமான பொழுதுகள்.

பொதுத்தேர்விற்கு படிப்பதற்காக, ஆற்றின் நடுவே இருக்கும் பாலத்திற்கடியில் கூடுவோம். மனிதச் சத்தமே இல்லாமல், எங்களை காற்று மட்டும் கடந்து சென்று கொண்டிருக்கும். அவ்வப்போது இரயில்கள் வருவதும் போவதும் என அழகான பொழுதாக அவ்விடம் அழகாக நகரும்.

பிறகு, வயது ஏற ஏற ஆற்றிற்கும் எனக்குமான இடைவெளி அதிகரிக்கத் தொடங்கியது. வாலிப வயதில் காதல் என்று தோன்றும் எதிர்பாலின ஈர்ப்பு, பசி, வறுமை, ஜாதி பார்த்து பேசும் நண்பர்களிடம் நிகழ்ந்த அவமானங்கள், தோழமையுடன் பழகும் பெண்களை காதலிகளாக எண்ணிப்பார்த்து சோர்வடையச் செய்யும் மனக்குழப்பங்கள், படிக்க துடிக்கும்போது, வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம் என என் வாழ்க்கை என்னவென்று நிச்சயிக்க முடியாத ஒரு திசையை நோக்கி வேகமாய் என்னை அழைத்துச் சென்று கொண்டிருந்தது. அந்த பரபர வாழ்க்கையில் என் மனதைவிட்டு காவேரி ஆறு, முழுவதுமாக என்னை கரையில் தள்ளிவிட்டு வேகமாய் நகரத் தொடங்கியது.

இப்போது, இதுதான் என் வாழ்க்கையென ஓர் இலக்கை தீர்மானித்துக்கொண்டு, வெளியூரில் தங்கி படித்துக் கொண்டிருக்கும்போது, விடுமுறையில் திருச்சிக்கு வந்தேன். எனக்கிருக்கும் ஒரு சில நண்பர்களில் ஓரிருவரை சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கும்போது, சுதாகர் என்ற நண்பன் சம்மர் பீச்சுக்கு போலாம் வரீயா என்று அழைத்தான். அது என்ன என்று கேட்டதற்கு, மாலை அங்கு போகும்போது தெரியும் என்றவன், மாலையில் கூட்டிச் சென்ற இடம் காவேரி ஆறு. பழைய ஞாபகங்கள் அனைத்தும் ஒன்றுசேர, ஆற்று மணலில் கால் பதித்தேன். முன்பு தண்ணீர் கரையிரண்டையும் முத்தமிட்டபடி சென்று கொண்டிருந்த காவேரியில், இப்போது மணல் முத்தமிட்டு நின்று கொண்டிருந்தது. ஆங்காங்கே ஆற்று மணல் சுரண்டப்பட்டதற்கான அடையாளங்கள், பள்ளங்களாக மாறி ஆற்றின் பரிதாப நிலையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. இதற்கெல்லாம் இரங்குமா மனிதமனம்..?

காவேரியின் அந்தப்பக்கம், காவேரி பாலத்தை ஒட்டியதுபோல் ஆற்றோரத்தில் முப்பது நாற்பது டியூப்லைட்டுகளைக் கட்டிவிட்டு, அதற்குள்ளான பகுதியை மட்டும் சுத்தம் செய்து சம்மர் பீச் ஆக்கியிருந்தார்கள். அதுவும் பள்ளிக் கோடைவிடுமுறையான அந்த ஒரு மாதத்திற்கு. மெரினா பீச்சில் இருக்கும் கடைகளைப்போல், இங்கும் கடைகள் அடைத்துக்கொண்டு வியாபாரம் செய்து கொண்டிருந்தன. வயதான பெண்களின் கைகளில் முறுக்குகளும், சிறுவர், சிறுமிகளின் கையில் சுண்டலும், சில திருமண தம்பதிகள் தள்ளுவண்டிகளில் முட்டை போண்டாவும், அப்பளமும் அவசர அவசரமாய் விற்றுக் கொண்டிருந்தனர். மாலைபொழுது மெல்ல நகர நகர மக்கள் கூட்டம் அவ்விடத்தை நிறைக்கத் தொடங்கியது. கோடை வெயிலின் வெப்பத்தில் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்தவர்கள், காவேரியோர குளுமையான காற்றுக்காக ஆரவாரத்துடன் ஆற்று மணலில் இறங்கத் தொடங்கினார்கள். இவ்வளவு ஜனத்திரள் திருச்சியில் இருக்கிறதா என்றெண்ணும்படி, அவ்விடம் என்னை மூச்சடைக்கச் செய்தது. சற்று நேரத்தில் அவ்விடம் ஒரு குட்டி மனிதத்தீவை போலக் காட்சி அளித்தது. கூட்டத்தை விட்டு தனியாக நடக்கத் தொடங்கினேன்.

– வே.தர்மராஜ் (அக்டோபர் 2013)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *