காலம் கடந்தபின்னே

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 8, 2015
பார்வையிட்டோர்: 7,961 
 

நாள் பூராவும் அலுவலகத்தில் உழைத்துவிட்டு, அப்படியே ஆஸ்பத்திரிக்குப் போய் தலையைக் காட்டிவிட்டு, பஸ்ஸைப் பிடித்தாள் கல்யாணி. வீட்டில் காலெடுத்து வைத்தவுடன் சமையல்பாட்டைக் கவனித்தாக வேண்டும். கால்கள் கெஞ்சின. `இந்த வாழ்க்கை இன்னும் எத்தனை காலமோ!’ என்ற மலைப்பு எழுந்தது.

தெய்வாதீனமாகத்தான் அந்த விபத்து நிகழ்ந்திருக்க வேண்டும். என்ன, கொஞ்சம் பிசகிவிட்டது. சாகாமல், கோமாவுக்குப் போய்விட்டார், `உன்னை அவ்வளவு சீக்கிரம் விட்டுவிடுவேனா?’ என்பதுபோல். தானும் உலகத்தார் என்ன சொல்வார்கள் என்று பயந்து, நாள்தவறாமல் அவரைப் பார்க்கப்போக வேண்டியிருக்கிறது.

யாரால் வந்த வினை இது? `ஆண்துணை’ என்று நம்பி, அம்மா தன் தம்பியை வீட்டிலேயே வைத்துகொண்டாளே! அந்த அறிவின்மையாலோ?

இடைநிலைப்பள்ளியில் அப்போதுதான் காலெடுத்து வைத்திருந்த கல்யாணிக்கு உடல் வளர்ச்சியின் தாத்பரியத்தைக்கூடப் புரிந்தகொள்ளாத வயது. தான் கண்டே அறியாத தந்தையின் இடத்தில் தாய்மாமனை வைத்தவளுக்கு அவனுடைய கொஞ்சல் அத்துமீறல் என்று முதலில் புரியவில்லை. சற்று விவரம் புரிந்ததும், “வேண்டாம், மாமா. அம்மாவுக்குத் தெரிஞ்சா திட்டுவாங்க,” என்று கெஞ்சத்தான் முடிந்தது.

`இது தப்பே இல்லைடி. `அம்மை நீ, அப்பனும் நீ, அன்புடைய மாமனும் மாமியும் நீ!’ அப்படின்னு அப்பாவுக்குச் சமமா இல்லே மாமாவை வெச்சிருக்காங்க!’ என்று நைச்சியமாகப் பேசினவனை நம்பத்தான் தோன்றியது அப்பருவத்தில்.

`பிற பெண்களைவிட எனக்கு அதிகமாகத் தெரியும்!’ என்ற சிறுபிள்ளைத்தனமான பெருமைகூட எழுந்தது. நாளடைவில், தன் இழப்பு எவ்வளவு பெரிது என்று புரியப் புரிய, குற்ற உணர்ச்சி ஓங்கி எழுந்தது. யாருடனும் பழகப் பிடிக்காது, தானே ஒரு தனி உலகத்தைச் சிருஷ்டி செய்துகொண்டு, அதிலேயே அமிழ்ந்துபோனாள்.

அவள் போக்கு அம்மாவுக்குக் கலக்கத்தை உண்டாக்க, கூர்ந்து கவனித்தாள்.

“`அனுவைத் தூக்கி வளர்த்தவன்! அவள்மேல கொள்ளை பாசம்,’ அப்படின்னு எல்லார்கிட்டேயும் பெருமையா பேசுவேனேடா! இப்படிச் செய்துட்டியே!” என்று பொருமியவள், “அனு மைனர். நினைவிருக்கில்ல? நான் போலீசுக்குப் போனா, நீ கம்பி எண்ண வேண்டியிருக்கும். கண்காணாம எங்கேயாவது தொலை!” என்று கத்தினாள்.

அவன் தொலைந்தாலும், அவன் செய்கையின் பாதிப்பு விலகவில்லை. பள்ளிப்படிப்புக்குப்பின் மேலே படிக்க வசதி இல்லாமல் போனதும் நல்லதாகப் போயிற்று. மனம் ஒரு நிலையில் இருந்தால்தானே! இனியும் அம்மாவுக்குப் பாரமாக இருக்கவேண்டாம் என்று ஒரு வேலை தேடிக்கொண்டாள் கல்யாணி.

அவளுடைய அழகுக்காகவே அவளை மணக்க முன்வந்தார் லோகநாதன். சாதுவாக இருந்தார். அன்பைப் பொழியாவிட்டாலும், அவளைத் தன்போக்கில் விட்டிருந்தார்.

இரு குழந்தைகள் பெற்ற பின்னர், அந்த நல்லவரிடமிருந்து தன் ரகசியத்தை மறைக்க முடியவில்லை கல்யாணியால். அவன் கையால் மட்டுமின்றி, மனத்தாலும் அவளைத் தீண்டியிருந்தானே! சில நாடுகள், சில கலாசாரங்கள், வயது வந்தவர்களுக்கு அது இயற்கை என்று ஏற்கலாம். ஆனால், அதற்கு உடந்தையாக இருந்த காரணத்தால் எப்போதும் தன்னை ஆட்டுவிக்கும் குற்ற உணர்வை அவருடன் பகிர்ந்துகொண்டால், அது குறையாது?

தன் எண்ணங்களிலேயே அமிழ்ந்துபோன கல்யாணி, நின்ற பஸ் புறப்படும் சமயத்தில்தான் கவனித்தாள், அது தான் இறங்கவேண்டிய இடம் என்று. அவசரமாக மணியை அழுத்தியவளுக்கு டிரைவரின் வசவு உறைக்கவில்லை.

வீட்டுக்குள் நுழைந்ததும், “அப்பாவுக்கு இப்போ எப்படிம்மா இருக்கு?” என்று மரியாதை குறித்து உமா கேட்டபோது, எரிச்சல்தான் எழுந்தது.

பெரி..ய அப்பா! தான் பெற்ற குழந்தைகளுக்காக என்ன செய்திருக்கிறார்? ஒரு நாளாவது அன்பாகப் பேசியிருக்கிறாரா? இல்லை, வெளியில் வாசலில் அழைத்துப்போய், அவர்கள் அறிவுத்திறனைப் பெருக்க முயற்சித்திருக்கிறாரா?

அவளுக்குப் பதிலாக சூள் கொட்டிவிட்டு, ஐஸ் பெட்டியைத் திறந்தாள். பயற்றங்காய் சற்றே வெளிறிய நிறமாக இருந்தது. நுனியில் வாடல். `இனிமே பயத்தங்கா, புடலை, வெண்டை மூணையும் ஒரே நாளில வாங்கக்கூடாது. ஃப்ரிட்ஜில வெச்சா வெறைச்சுப்போயிடுது!’ முணுமுணுத்தாள். `அலுத்துச் சலிச்சு வீடு வந்தா, இதையெல்லாம் சமைக்கிறதுக்குள்ளே உசிரு போயிடும்!’

அவளையுமறியாமல் எழுந்த எண்ணத்தால் அவளுக்குத் தூக்கிவாரிப்போட்டது. இன்று என்ன வந்துவிட்டது எனக்கு? `வெறைச்சுப்போய்,’ `உசிருபோய்,’ என்ற வார்த்தைகளாக வந்து விழுகின்றனவே! கணவர் ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்று அடிமனதில் எழும் எண்ணத்தின் தாக்கமோ? எந்தப் பெண்ணாவது கணவன் ஏன் இன்னும் சாகவில்லை என்று நினைப்பாளா?

உடனே அதற்கு மாற்று எண்ணம் எழுந்தது. `ஆமாம்! எல்லாப் பெண்களும் என்னைமாதிரிதான் காலமெல்லாம் அணு அணுவாகச் சாகிறார்களோ?’ கண்ணால் வெளிவரக்கூடாது என்று தடுத்த நீர் மூக்கால் வந்தது. உறிஞ்சினாள்.

“என்னம்மா? உடம்பு சரியில்லையா? நீங்க ரெஸ்ட் எடுத்துக்குங்க. நான் சமைக்கிறேன்!”

கையில் எடுத்த கத்தியைப் பலகையில் வைத்துவிட்டு, கல்யாணி நிமிர்ந்தாள். மனைவியாக இருந்தவள் நொடிப்பொழுதில் தாயாக மாறினாள். “ஏன் உமா? மத்தியானம் ஸ்கூல்லேருந்து வந்தது! இன்னுமா யூனிஃபார்மை மாத்தலே?”

கலீரென்று சிரித்தாள் மகள். “ஹெல்ப் பண்றேன்னு வரேன். தாங்க்ஸ் சொல்லாம திட்டறீங்களே!”

கல்யாணிக்கும் சிரிப்பு வந்தது. அப்படி ஒரு சிடுமூஞ்சி அப்பாவுக்கு இப்படி ஒரு மகள்!

“எதை, எப்படி செய்யணும்னு சொல்லிக் குடுத்துட்டுப் போங்கம்மா. அப்பதான் அந்த தடியன், `இதெல்லாம் ஒரு சமையலா!’ன்னு நாக்குமேல பல்லுபோட்டு கேக்கறப்போ, `எல்லாம் அம்மாதான் சொன்னாங்க’ன்னு நான் தப்பிச்சுக்க முடியும்!”

“பயத்தங்காயை ஆவியில் வெச்சு எடு. அது இந்த ஜன்மத்திலே வேகாது!”

“முழுசாவா?”

தலையில் அடித்துக்கொண்டாள் தாய். “என்ன பொண்ணுடி, நீ! ஒன் வயசிலே எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சு!”

சற்றும் விட்டுக்கொடுக்காமல் பதிலளித்தாள் உமா. “அதான் இவ்வளவு சீக்கிரம் இப்படி அலுத்துச் சலிச்சு, கிழவிமாதிரி ஆக்ட் பண்ணறீங்க. இன்னும் நாப்பது வயசுகூட ஆகலே! அமெரிக்காவில அம்பத்தேழு வயசான நடிகை ஒருத்தியை கவர்ச்சிக்கன்னின்னு கொண்டாடறாங்க!”

இவளிடம் வாய் கொடுத்தால் மீள முடியாது என்று எச்சரிக்கையானாள் கல்யாணி. “சுண்டு விரல் நீளத்துக்கு, இல்ல, அதில பாதியா நறுக்கி, ஒரு பாத்திரத்தில போட்டுக்க. குக்கர் அடியில மட்டும்தான் தண்ணி!”

“ஸ்டீம் பண்ணுன்னு சொன்னா, எனக்குப் புரியாதா?”

தெரிந்து வைத்துக்கொண்டே தன் வாயைப் பிடுங்கி இருக்கிறாள்! “அஞ்சு நிமிஷம் போதும். நீ பாட்டில அடுப்பிலே வெச்சுட்டு, நாவல் படிக்கப் போயிடாதே! தண்ணி வத்திப்போய், காய் தீஞ்சுடும்!” என்றபடி நகர்ந்தாள்.

`ஒங்களுக்கு நல்லதையே நினைக்கத் தெரியாது!’ என்று சொல்லவந்த உமா தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டாள். பாவம், அம்மா! என்றாவது கேட்கவேண்டும், `ஏம்மா இந்த மனிதரைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டீங்க?’ என்று.

அட, இளம் வயதில் விவரம் புரிந்திருக்காது. ஏன், இப்போது தான் இல்லையா? சற்றே உயரமாக, கம்பீரமாக எந்த ஆணைப் பார்த்தாலும் இன்னொருமுறை பார்க்க வேண்டும்போல இருக்கிறது. அதோடு, குரல் ஒரு அமிதாப் பச்சனைப் போலவோ, ஒரு சரத்பாபுவைப் போலவோ இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். அப்பாவிடமும் அந்தமாதிரி அம்மாவுக்குப் பிடித்த அம்சம் ஏதாவது இருந்திருக்க வேண்டும்.

அதுதான் போகட்டும், அம்மாவும் அப்பாவும் அவளுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே சிரித்துப் பேசியதோ, ஒருவரையொருவர் சீண்டிக்கொண்டதோ கிடையாதே, ஏன்?

`நான் புத்திகெட்டுப்போய், அனு அப்பாவிடம் எல்லாத்தையும் சொல்லியிருக்கக் கூடாது!’ காலங்கடந்து தன்னை நொந்துகொண்டாள் கல்யாணி.

`மற்றவர் பாழ்படுத்திய பண்டத்தையா நான் சுவைத்தேன்!’ என்ற அருவருப்பு சுயபச்சாதாபத்தில் கொண்டுவிட, தன் வாழ்க்கையுடன் அவளுடையதையும் சேர்த்து அல்லவா நரகமாக்கிக்கொண்டார்!

“சமையல் ரெடி!” என்று உற்சாகமாகக் கூவியபடி வந்தாள் உமா. அதே சமயத்தில் தொலைபேசியும் அழைத்தது. எதுவும் மறுமொழி கூறாது, அதைக் கீழே வைத்துவிட்டு, வெறித்தபடி நின்றிருந்த தாயைப் பார்த்தாள் உமா.

“யாரும்மா?”

“ஆஸ்பத்திரியிலிருந்து!”

ஒரு நரக வாழ்க்கையின் முடிவு. எதிர்பார்த்ததுதான். உள்ளுக்குள் விரும்பியதும்கூட. ஆனால், திட்டவட்டமாகத் தெரிந்தபோது, மனதில் ஓர் அலாதி வெறுமை.

நீரில் மூழ்குமுன் தன் கடந்த காலம் முழுவதும் ஒருவனுக்குத் தோன்றுமாமே, அதுபோல அவள் வாழ்க்கையைக் கலக்கியிருந்தவர்கள் எல்லாரும் மாறி மாறித் தோன்றினர்.

எங்கு, எப்போது, யாரால் தவறு நிகழ்ந்தது?

`அப்பா இல்லாத பெண், பாவம்!’ என்று அம்மா அவளை குழந்தைத்தனம் மாறாமல், வெளி உலகமே தெரியாது வளர்த்திருந்ததாலா?

`வேலியில்லாத பயிர்’ என்று ஒருவன் அவளுடைய குழந்தைத்தனத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டதாலா?

நான் ஏன் அவன் கை என்மேல் பட்டதுமே, கூச்சல் போட்டு, ஊரைக் கூட்டவில்லை? தவறு என்மேல்தானோ?

இதெல்லாம்கூட பரவாயில்லை. நடந்ததை அவரிடம்வேறு சொன்ன முட்டாள்தனத்துக்கு யாரை நோவது!

தான் காலமெல்லாம் யோசித்தாலும், நடந்தது நடந்ததுதான் என்று தோன்ற, விரக்தி உண்டாயிற்று கல்யாணிக்கு.

“அப்பாவோட இருதயத்தையோ, கண்ணையோ மொதல்லேயே தானம் பண்ணியிருக்கலாம். இல்லேம்மா?”

“எல்லாமே காலம் கடந்துதான் நமக்குத் தோணும், உமா!” பெருமூச்சுடன் வந்தது பதில்.

Print Friendly, PDF & Email

3 thoughts on “காலம் கடந்தபின்னே

    1. மிக்க நன்றி. வாசகர்களின் கருத்தை நான் எப்போதும் வரவேற்கிறேன்.
      நிர்மலா ராகவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *