காற்றில் பறக்கும் தமிழ்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 2, 2014
பார்வையிட்டோர்: 14,029 
 

ஸ்கைப்பில் முகம் பார்த்துக் கதைக்கிற போது, உயிர் மறந்து போன அந்த வரட்டுக் காட்சி நிழல், மனதில் ஒட்டாமல் தானும் தன் உறவுகளும் இப்படி வேர் கழன்று போன வெவ்வேறு திசைகளிலல்ல, நாடுகளில் ஒரு யுகாந்திர சகாப்த மாறுதல்களுக்குட்பட்டு தலைமறைவாகிப் போனதற்கு நாட்டில் மிகக் கொடூரமாக நடந்தேறிய யுத்த விளைவுகள்தான் காரணமென்பதை அறிவுபூர்வமாக ஏற்றுக் கொள்ள அகல்யாவுக்கு ஏனோ முடியாதிருந்தது.

அவர்கள் இன்னும் அதையே உயிர்நாதமாகப் பறை போட்டுச் சொல்லி வந்த போதிலும், அவளுக்குக்கென்னவோ அது சரியாகப்படவில்லை.. .இவர்களில் அநேகமானோர் சண்டைக்குப் பயந்து இப்படி விதேசிகளாய் மாறி விடவில்லை.. உண்மையில் அது ஒரு நொண்டிச்சாட்டு. பெருவாரியாகக் காசு பணம் சம்பாதிக்கவே அவர்கள் கப்பலேறிப் போனார்கள்.

அதுவும் கள்ள வழியில் எத்தனையோ பொய் மூட்டைகளை அவிழ்த்து, அவர்கள் போன வழி இப்படி. இந்த மகாமட்டமான குறுக்கு வழிகளில். இன்று இப்படிப்பட்டவர்கள் இருளின் அந்தகாரம் விலகி வானளாவல்ல அதிலும் மேலாக வெளிச்சக் கடலில் நீந்திக் குளிக்க நேர்ந்தாலும் , பூர்வீகமே அடியோடு தொலைந்து போன,, தொலைத்து விட்டு நிற்கிற இவர்களின் இந்தப் பணத்திலேயே கொடிகட்டிப் பறக்கிற வெளிநாட்டு வாழ்க்கையின் உயிர் திரிந்து போன நிழல் சங்கதிகளில் ஒன்றாகவே ஸ்கைப்பில் முகம் பார்த்துக் கதைக்கிற அந்த விடயமும் அவளை வதைத்தது..

அவர்களோடு மனம் விட்டுக் கதைக்க இதை விட்டால் வேறு வழியில்லை.. அதுவும் தமிழ் மறந்து போன கதை தான்.. பெரியோர்களுக்கு மறக்காவிட்டாலும் குழந்தைகள் வாயில் தப்புத்தப்பாய் தமிழ் இடறிச் சரிவதைக் கேட்டால் இப்படிக் கேட்க நாம் என்ன பாவம் செய்தோமோ என்று வருந்தியழத் தோன்றும். . உண்மையான தமிழ் அபிமானிகளுக்கே இதெல்லாம்.. நேற்று இப்படித்தான் பேத்தி வாயிலிருந்து வெள்ளைக்காரன் பேசுவது போல ஒரு கொச்சைத் தமிழ் இடறிச் சரிவதைக் கேட்டவாறே கணணிக்கு முன்னால் நிலை தடுமாறி அகல்யா அமர்ந்திருந்தாள் பேத்தி ஆர்த்தி அக்கரையில் ஜெர்மனியிலிருந்து திரையில் அவள் முகம் பளிச்சென்று தோன்ற, முதல் கேள்விக்கணை அபிராமியின் வாயிலிருந்து சகஜமாய்ப் புறப்பட்டு வந்தது.

.

“ஆர்த்தி! நான் அம்மம்மா கதைக்கிறன். எப்படியிருக்கிறாய்? இண்டைக்கு பள்ளிக்குப் போகேலையோ?”

“மம்மி—- என்றவள் தொடர்ந்து ஏதோ தமிழில் பிதற்றி, மேலே பேச வராமல் மெளனம் காத்தாள்.. .இடையில் மகள் குறுக்கிட்டுச் சொன்னாள்.

“ஐயோ அம்மாi iஇவளுக்குத் தமிழே தெரியாது இவள் தமிழ் கதைச்சால் உங்களுக்குத் தலைவலி வந்திடும்.. டொச்தான் நல்லாய்க் கதைப்பாள்”

“எனக்கு விளங்குது அனு அதுக்காக நானும் டொச் படிக்க வேணுமே? இவளுக்குத் தமிழ் கட்டாயம் தெரிஞ்சிருக்க வேணும் .. பூர்வீகம் மறந்தால் தமிழ் நிலைக்குமோ?

அதற்குச் சட்டெனக் குரலை உயர்த்தி அனு ஆவேசத்தோடு கேட்டாள்

“என்னம்மா சொல்லுறியள்?ஆர்த்திக்குத் தமிழ் எதுக்கு? இங்கிலீஷ் நன்றாய்க் கதைக்கிறாளே! டொச் அதை விட ஒருபடி மேலே நல்லாய்க் கதைப்பாள். அவள் இதெல்லாம் கதைச்சால் ஒரு வெள்ளைக்காரியே கதைக்கிற மாதிரி நான் எப்படிப் பூரிச்சுப்ப் போறேன் தெரியுமே”

“இதை நீதான் மெச்ச வேணும். நான் ஒண்டு சொல்லுவன் கேக்கிறியே?”

“சொல்லுங்கோ”

இதுகளின்ரை எதிர்காலத்தை நினைச்சால் எனக்குப் பயமாய் இருக்கு . ஏன் தெரியுமா? பூர்வீகமே அறியாமல் தமிழே வராமல் எங்கடை மூச்சே நின்ற மாதிரி இது கேவலமில்லையோ? இப்படி அழிஞ்ச பிறகு நாங்கள் அழிஞ்சு போறம் எண்டு சொல்லுறதிலை என்ன நியாயமிருக்கு? சொல்லு அனு., தமிழை நீதான் காப்பாற்ற வேணும்”

“இதைப் பற்றி நான் யோசிக்கிறன்”

“அதன் பிறகு அவர்கள் முகம் ஸ்கைப்பை விட்டு மறைந்து போனது… இந்த மறைவு அதனோடு மட்டும் தானா,? இல்லை இந்த மறைவு ஒரு தமிழின் விழுக்காடாகவும் இருந்து விடுமோ என்ற, பயம் விடுபட்டுப் போகாத நிலையிலேயே அபிராமி தன்னை இருள் விழுங்கியது கூடத் தெரியாமல், ஹால் இருண்டு கிடக்க, அவளும் இருளில் மூழ்கிக் கிடக்கிற போது கேட்டுக்கு வெளியே மோட்டார் சைக்கிள் உறுமிக் கொண்டு வந்து நிற்கிற போது தான் அவளுக்கு மெல்ல விழிப்புத் தட்டிற்று.

அவசரமாக எழுந்து ஹால் லைட்டைப் போட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் வந்த மகனை வரவேற்பதற்காகக் கேட்டைத் திறந்து விட்டாள் அவனும் தெகிவளையில் வேறொரு வீட்டில் இருக்கிறான்.

அம்மா வீட்டிற்கு அடிக்கடி வந்து போகிறான். அகிலாவுக்கு அவனைக் கண்டால் மனம் உற்சாக கதியில் இயங்கும். அவன் மட்டும்தான்.

அவளுடன் இப்போது தாய் மண்ணில் இருக்கிறான் இதைப்பற்றியெல்லாம் இனிக் கவலைப்பட்டுப் பிரயோசனமில்லை தமிழைக் காப்பாற்ற வேண்டுமே என்ற நினைவில் அவள் முகம் கறுத்து இருப்பதைப் பார்த்துச் சோபாவில் சரிந்து அமர்ந்து கொண்டு மகன் கேட்டான்

“என்னம்மா? ஒரு மாதிரி இருக்கிறியள். முகமும் வாடிக்கிடக்கு. ஏதும் சுகயீனமோ? அல்லது என்ன பிரச்சனை?”

‘ “எனக்கு ஒரு பிரச்சனையுமில்லை. பிரச்சனையெல்லாம் உன்ரை மருமகள்கள் பற்றித்தான் ஹரி”

“என்னம்மா> சொல்லுறியள்? அதுகளுக்குப் பிரச்சனையோ? பணத்திலே குளிச்சு வானத்திலே கப்பல் விடுகி|ற அதுகளுக்குப் பிரச்சனையென்றால் தரையிலே தவழ்கிற நாங்கள் எங்கே? சொல்லுங்கோவம்மா”

“சீ உந்தப் பணமும் அவையளும், தமிழ் அங்கை நாறுது குழந்தைகள் தமிழே கதைக்குதுகளில்லை. எங்களுக்கு இப்படி ஒரு நிலைமை வர வேணுமே? சொல்லு ஹரி”

“அம்மா1 அவையள் தமிழே கதைக்காமல் டொச் கதைக்கட்டும் வேறு ஏதாவது கதைச்சுத் தொலைக்கட்டும். உங்களுக்கு என்ன வந்தது? வயசான காலத்திலை வாயை மூடிக் கொண்டு சும்மா இருங்கோ”

“நடைமுறையிலை நடக்கிற இந்தக் கூத்துகளைப் பார்த்துக் கொண்டு ஒரு தலையாட்டி பொம்மை மாதிரி என்னையும் இருக்கச் சொல்லுறியோ? ” அதெப்படி முடியும்? தமிழ் என்ரை உயிரல்லோ. இப்படித் தமிழ்க் கொலை நடக்கிறதைப் பார்த்த பிறகு, இல்லை கேட்ட பிறகு உயிரோடு எரிஞ்சு போற நிலைமை எனக்கு நீ தண்ணி ஊத்தினாலும் இது அணையாது”

அவனுக்கு அதைக் கேட்க உண்மையிலேயே பெரிய மன வருத்தமாக இருந்தது இப்படி யோசிப்பதற்கு எத்தனை பேருக்கு மனம் வரும்? பணத்தைக் கண்டு மயங்குகிற புத்தி இருக்கும் வரை அது நடக்காதென்று அவன் உள் மனம் அழுதது அதையே முகம் வடிகாலாய்க் காட்டத் திடுக்க்கிட்டுக் குரலை உயர்த்தி அம்மா கேட்டாள்.

“என்ன உனக்கும் அழுகை வருகுதே?”

அதற்கு அவன் சொன்னான்”

தமிழுக்கு மூச்சு நின்றால் அழாமல் என்ன செய்கிறது? நாங்கள் அழுவோம் அது மட்டும் தானே முடியும் எங்களால்…. நன்றாக உரத்து அழுவோம் கடவுளுக்காவது இது கேட்கட்டும்”

என்றான் அவன்.

மிகப் பெரிய மன வருத்தம் போகாமலே இப்போது இப்படிக் காற்றில் பறக்கும் என்றும் பெருமைக்குரிய நற்றமிழ் தன் கண்ணையே குத்துவது போல உணர்ந்தான் அந்த உணர்தலில் நீண்ட நேர மெளனம் கனத்து உறைந்து போன அவன் உயிர் மங்கிய பார்வைக்கு முன்னால் தமிழை நேசிக்கக் கற்றுத் தேறிய அம்மா கூட வெறும் நிழலாக ஜடம் வெறித்து அமர்ந்திருப்பது போல் பட்டது.

அகல்யாவின் மனதைத் திசை திருப்புவதற்காக அவளை ஆறுதல்படுத்துவது போல அவன் சொன்னான்

“அதற்கென்ன செய்கிறது? ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளை வேணுமென்று அனு அடம் பிடிச்சதன் பலன்தானே இது. இதுக்கு நீங்கள் என்ன செய்வியள்? அப்ப அவளுக்குத் தமிழின்ரை அருமை தெரியாமல் போச்சு . நாளைக்கு இதுகளுக்கு இதே வழியில் மாப்பிள்ளை தேடுறது இன்னும் பெரிய சவால். அப்படி ஒரு சுத்தமான தமிழ் பெடியன் கிடைக்காமல் போனாலும் ஒரு வெள்ளைக்காரனை வலை போட்டுப் பிடிக்க இதுகளுக்கு ஆரும் சொல்லித் தரத் தேவையில்லை அது தானாய் நடந்து கொண்டுதானிருக்கு “

“திடுமென்று பிரக்ஞை மீண்டவளாய் கண்ணை அகல விழித்து உணர்வுபூர்வமாய் அவனைக் கேட்டாள் அகல்யா

“அனுவின்ரை பிழைக்கு நானும் தானே பொறுப்பு . கால ஓட்டத்திலே நடை இடறுகிற போது நான் அதைச் சரி செய்திருக்க வேண்டாமோ? அனுவை மட்டும் அப்ப நான் காப்பாற்றியிருந்தால் தமிழ் இப்படிக் காற்றிலே பறக்குமோ? இப்படிப் பறக்கிற தமிழ் இனி உயிர் மீண்டு வர எத்தனை யுகமாகுமோ? அது வரைக்கும் எனக்கு உயிர் நிற்க வேண்டுமே”

“அம்மா இது நடக்கிற காரியமா? எரிஞ்ச ஊழி நெருப்பிலே எல்லாமே அழிஞ்சு போன மாதிரித்தான். இதிலே தமிழ் இப்படி உயிர் விட்டுச் சாகிறது எங்கள் பார்வைக்கு எட்டாத வெறும் புதினமாகவே எனக்குப் படுகுது, நீங்களும் அப்படி நம்புங்கோ. தமிழ் காற்றிலே கரைஞ்சாலென்ன. கடலில் மூழ்கிச் செத்தாலென்ன.

“எங்கள் நெஞ்சிலே தமிழ் மணக்குதல்லே. அது போதும்” அதை அங்கீகரித்து ஆமோதிப்பது போல் அகல்யாவும் தலை ஆட்டிய போது கறைபடாத தமிழே நேரில் வந்து ஆசீர்வதிக்கிற மாதிரி வெளியே வானம் கண் திறந்து மழை கொட்டிற்று.

தாங்கள் விரும்பி நேசிக்கும் தமிழையே ஆசீர்வதிக்கும் ஒரு பூமழையாய் அதை அவன் உணர்கையில் அம்மாவும் அதை உணர்கிற பாவனையில் அவள் முகமும் ஒளி விட்டுச் சிரிப்பது கண்டு அவன் பெருமிதம் கொண்டான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *