காரியவாதிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 31, 2021
பார்வையிட்டோர்: 3,732 
 

ராஜாராமனுக்கு தற்போது வயது அறுபத்தியேழு.

அவருக்கு கடவுள்மீது பெரிய நம்பிக்கையெல்லாம் கிடையாது. தான் உண்டு தன் தினசரி வாழ்வியல் முறைகள் உண்டு என்று அமைதியாக வாழ்க்கையை ஓட்ட விரும்புபவர். எதற்கும் அலட்டிக்கொள்ள மாட்டார்.

அவருக்கு சாஸ்திரங்கள், சடங்குகள், பூஜைகள் என எதிலும் நம்பிக்கை கிடையாது. பூணூல் போட்டுக்கொள்ள மாட்டார். மறைந்த அம்மா, அப்பாவிற்கு திவசம் பண்ணமாட்டார்.

அடுத்தவர்களின் கடவுள் நம்பிக்கைகள் தன் வசதியிலும், சுகத்திலும் தலையிடாதவாறு பார்த்துக் கொள்வார். வேளா வேளைக்கு சாப்பாடு, தூக்கம், டிவி நியூஸ், பேப்பர், பத்தரிக்கைகள் என தன் வசதிகள்தான் அவருக்கு பிரதானம். சரியான காரியவாதி. தனக்கு காரியம் ஆக வேண்டும் என்றால் பொய் சொல்லிக்கூட அதைச் சாதித்துக் கொள்வார்.

மத்திய அரசாங்கத்தின் ஒரு பெரிய பதவியில் இருந்து ரிடையர்ட்டு ஆனதும் திருவானைக்காவலில் சொந்தமாக ஒரு பெரிய வீடு கட்டிக்கொண்டு சந்தோஷமாக மனைவி நாராயணியுடன், கொழுத்த பாங்க் பாலன்ஸுடன் செட்டில் ஆகிவிட்டார். ஒரே மகன் அமெரிக்காவில் மனைவி குழந்தையுடன் இருக்கிறான்.

ராஜாராமனுக்கு நேர் எதிர் நாராயணி. கடவுள் நம்பிக்கை அதீதம். தினமும் காலையில் திருவானைக்காவல் கோயிலில் அகிலாண்டேஸ்வரியை தரிசனம் செய்துவிட்டுத்தான் சாப்பிடுவாள்.

பிரதோஷம், சங்கஷ்ட சதுர்த்தி, ஏகாதசி என அடிக்கடி ஏதாவது காரணங்களைச் சொல்லி உபவாசம் இருப்பாள். தனது தெய்வ நம்பிக்கைகளை ராஜாராமன் வசதிகளுக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்வாள். தவிர அவரை அன்புடன் நன்கு கவனித்துக் கொள்வாள்.

நாராயணி தன் கணவரை “ரொம்ப செல்பிஷ்” என்று அடிக்கடி குறை கூறுவாள். அதற்கு அவர், “நாம எல்லோரும் சுய நலத்துடன் இருந்தால், அதுவே மிகப்பெரிய பொதுநலன்தானே?” என்று ஆர்க்யூ பண்ணுவார்.

அவருடைய ஒரே நண்பி, நண்பர் எல்லாம் அவர் மனைவி நாராயணிதான். அவளிடம் நிறைய அரட்டை அடிப்பார். தனக்குத்தான் எல்லாம் தெரிந்த மாதிரி அவளிடம் நிறைய வியாக்கியானம் செய்வார். இருவர் மட்டுமே வீட்டில் இருப்பதால், நிறைய விஷயங்களை புரிதலுடன் அலசுவார்கள், பேசுவார்கள்.

திடீரென ஒருநாள் நாராயணியிடம் “நம்ம வாழ்க்கையில் எவ்வளவோ சம்பவங்கள் நடக்குது. படிக்கிறோம்; வேலைக்குப் போகிறோம், சம்பாதிக்கிறோம்; கல்யாணம் பண்ணிக்கிட்டு குடித்தனம் நடத்தி பிள்ளைகளைப் பெற்றுக் கொள்கிறோம். மேலோட்டமாகப் பார்த்தால் இதுக்கெல்லாம் நாமதான் காரணம்னு தோணும். கொஞ்சம் ஆழமா யோசித்தாதான் உண்மை புரியும்…” என்றார்.

“என்ன உண்மை?”

“பகல் இரவாகவும்; இரவு பகலாகவும் மாறுது. கிரகங்கள் வானவெளியில் ஒரே வேகத்தில் இயங்கிக்கிட்டே இருக்குது; இதுல மனுஷனோட பங்குன்னு ஏதாவது உண்டா?”

“இல்லைதான்…”

“அதுமாதிரி கோடைக்காலம், மழைக்காலம், குளிர்காலம்னு நாமளா சீஸனை மாத்திகிட்டு வரோம்?”

“இல்லை.”

“அது மாதிரிதான் நம்ம வாழ்க்கையிலும் நம்மைக் கேட்காமல் மாற்றங்கள் வந்துகிட்டே இருக்கும்…”

“அதுசரி, உங்க வாழ்க்கைல என்னை மாதிரி அருமையான ஒருத்தி உங்களுக்கு பெண்டாட்டியா அமைஞ்சதை என்னிக்காவது எண்ணிப் பார்த்தீர்களா? அதுக்காக மனசார என்னை ஒரு வார்த்தை பாராட்டக் கூடாதா?”

“இதுலே பாராட்ட என்னம்மா இருக்குது? இருபத்திநான்கு மணி நேரமும் மூச்சு விட்டுட்டிருக்கமே, அது நம்ம சாமர்த்தியமா? நடுவிலே ஒரு நிமிஷம்கூட ரெஸ்ட் எடுக்காம மூச்சு விடறதைப் பாராட்டக் கூடாதான்னா என்னைக் கேட்ப? ஏன் கடைசி காலத்துல மனுஷனுக்கு மூச்சு விட முடியாமப் போகுது? ஏன்னா, அதுவரைக்கும் சுவாசிச்சதுக்கு அவன் காரணமில்லை. உள்ளிருந்து ஒரு சக்தி அவனை சுவாசிக்க வைத்தது. அது போதும்னு நினைக்கறப்போ முடிவு வருது. அது மாதிரிதான் எந்த விஷயமுமே… நம்ம கைல எதுவுமே இல்ல நாராயணி…”

“……………………….”

“லோகத்திலே நாம கவனிக்காத ஆச்சர்யங்கள் கோடிக் கணக்கிலே இயற்கையா நடக்குது. சூரிய ஒளி, மழை நீர் உதவியோடு எத்தனை வகையான மரம், செடி கொடிகள், வண்ணப் பூக்கள் வெறும் மண்ணுலேர்ந்து வெளியே வருது… ஒவ்வொரு காய்கறிக்கும், பழத்துக்கும் தனித்தனி சுவை எப்படிக் கிடைக்குது? மழை பெய்யறதும், காற்று வீசறதும், வெயிலடிப்பதும் நம்மைக் கேட்டா நடக்குது? மனுஷனுக்கு சம்பந்தமேயில்லாத இந்த மாதிரி ஏகப்பட்ட ஆச்சரியங்களுக்கு நடுவே, நம்முடைய அற்ப சாதனைகளை பெருசா நினைக்கலாமா? நீ இல்லைன்னா வேற ஒருத்தி என்னைக் கவனிக்க மாட்டாளா என்ன? அதுதான் இயல்பு…”

நாராயணி மேற்கொண்டு எதையும் பேசவில்லை. அவளுக்குத் தெரியும், ரொம்பப் பேசினால் மனஸ்தாபம்தான் மிஞ்சும் என்று.

ராஜாராமன் தினமும் ப்ரேக்பாஸ்ட் முடிந்தவுடன் காலை எட்டரை மணி வாக்கில் பால்கனியில் அமர்ந்துகொண்டு அன்றைய ஹிந்து பேப்பரை விலாவாரியாகப் படிப்பார்.

அன்று பேப்பர் படித்துக்கொண்டிருந்த போது, திடீரென மைல்டாக சிகரெட் புகை ஸ்மெல் அடித்தது.

பால்கனியிலிருந்து வெளியே எட்டிப் பார்த்தபோது, அவர் வீட்டின் எதிரே ரோடைத் தாண்டி மரநிழலில் ஒருத்தன் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு இருபது வயதிருக்கும். ஒரு காதில் தோடு அணிந்துகொண்டு பார்க்க கரடு முரடாக இருந்தான். இந்த நிகழ்ச்சி மிகச்சமீப காலங்களாக தினமும் நடந்து கொண்டிருக்கிறது.

ராஜாராமனுக்கு முணுக்கென்று கோபம் வந்தது…

‘சொந்த வீடு கட்டிக்கொண்டு நான் நிம்மதியாக, சொகுசாக குடியிருக்கையில், இவன் யார் என் வீட்டிற்கு எதிரே வந்து நின்று தினமும் சிகரெட் பிடித்து என் சுவாசத்தில் தலையிட?’

சிறிது நேரம் அமைதியாக யோசித்தார்…

‘அவனிடம் போய் இங்கே நின்று சிகரெட் புகைக்காதே என்றால், அவன் நீயார் என்னைக் கேட்க? ரோடைத் தாண்டி நிழலில் நின்றுகொண்டு பொது இடத்தில்தானே நான் புகைக்கிறேன்?’ என்று எதிர்வாதம் செய்வான்.

‘வேண்டாம், எனக்கு என் காரியம் ஆகவேண்டும். நாளையிலிருந்து இவன் இங்கு நின்றுகொண்டு புகைக்கக் கூடாது…. சாமர்த்தியமாக அவனை அப்புறப்படுத்த வேண்டும்…’

விறுவிறுவென கீழே இறங்கி வாசல் கேட் அருகில் நின்றுகொண்டு அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். நாராயணி என்னவென்று புரியாமல் அவரருகே பதட்டத்துடன் ஓடிவந்து நின்றாள்.

சுவாரஸ்யமாக சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தவன் தற்செயலாக ராஜாராமனைப் பார்க்க நேரிட்டது.

இதற்காகவே காத்துக் கொண்டிருந்த ராஜாராமன், அவனை நோக்கி தன் இரண்டு கைகளையும் கூப்பி, புன்னகையுடன் அவனை அருகே வருமாறு அழைத்தார்.

அவன் மரியாதை நிமித்தம் சிகரெட்டை பின்புறம் மறைத்தபடியே அவரிடம் விரைந்து வந்து நின்றான்.

கூப்பிய கைகளுடன் ராஜாராமன் அவனிடம் கனிவான குரலில் “ஸார்… உங்களை மாதிரிதான் நான் தினமும் சிகரெட் புகைத்தேன்… போன வருடம் எனக்கு திடீரென ஹார்ட் அட்டாக் வந்து, பைபாஸ் சர்ஜரி செய்து கொண்டேன் ஸார். அதன் பிறகுதான் சிகரெட்டை தலை முழுகினேன்… நீங்க ரொம்ப சின்ன வயசு. நான் உடனே உங்களை இதை நிறுத்தச் சொல்லவில்லை…அது கஷ்டம். ஆனால் படிப்படியாக குறைத்துக்கொண்டு பிறகு முற்றிலுமாக நிறுத்தி விடுங்களேன் ப்ளீஸ்….” என்றார்.

அவன் அரண்டுபோய், “ஷ்யூர் ஸார்… நான் நிறுத்தி விடுகிறேன்…” முதுகுக்குப் பின்னால் புகைந்துகொண்டிருந்த சிகரெட்டை கீழே போட்டு மிதித்தான். பிறகு அங்கிருந்து அகன்றான்.

திரும்பி வீட்டினுள் வந்தவரிடம் “ஏங்க நீங்க என்னிக்கு சிகரெட் பிடிச்சீங்க? பைப்பாஸ் அது இதுன்னு ஏன் அவனிடம் பொய் சொன்னீங்க?” நாராயணி கேட்டாள்.

“ஆமா அவன் தினமும் நம் வீட்டின் முன்னே நின்றுகொண்டு சிகரெட் புகைப்பது எனக்கு சுத்தமா பிடிக்கல…. இதை அவன்கிட்ட மொட்டையா நான் போய்ச் சொன்னா சண்டைக்கு வருவான்… இப்படி ஜோடித்துச் சொன்னா, அதுவும் கைகளைக் கூப்பி, ஸார், ப்ளீஸ் என்று அவனிடம் கெஞ்சினால் உடனே கேட்பான்… தீவட்டித் தடியன்… எனக்கு என் காரியம்தான் முக்கியம்…”

மிக ஆச்சரியமாக மறு நாளில் இருந்து அவன் அந்தப் பக்கமே காணப்படவில்லை.

ஒருவாரம் சென்றிருக்கும்…

அன்று ராஜாராமன் மனைவியுடன் மாலை வாக்கிங் போனபோது, ஒரு கிலோமீட்டர் தள்ளியிருந்த ஒரு பெட்டிக் கடையின் பின்புறம் நின்றுகொண்டு அவன் புகைத்துக் கொண்டிருந்தான்.

இவர்களைப் பார்த்ததும் அவன் அங்கிருந்து தலைமறைவாக ஓடிவிட்டான்.

ராஜாராமன் தனக்குள் சிரித்துக் கொண்டார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *