கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 11,882 
 

அலுவலகத்தில் மதிய சாப்பாடு முடிந்ததும் நானும் ஸ்ரீதரும் பக்கத்திலிருக்கும் பெட்டி கடைக்குச் செல்வோம். வழக்கம்போல் அவர் வாழைப்பழம் வாங்கிக்கொள்வார், நான் “புகை’ வாங்கிக் கொள்வேன்.

அன்று கடைக்கு போகின்ற வழியில், “”முத்து, ஒரு குட் நியூஸ்…” என்றார்.

“”ஆஸ்துமாவுல அவஸ்தைப்படறியே ஒரு வைத்தியம் கேள்விப்பட்டேன். அதை சொல்லலாம்னு நெனைச்சேன்….” என்றார்.

“”என்ன ஸ்ரீதர்… நெனைச்சேன் காய வைச்சேன்னு… நான் படற அவஸ்தையை நீ தினமும் பார்த்துக்கினுதானே இருக்கிறே? சொல்லு ஸ்ரீதர், என்ன வைத்தியம்? எந்த வைத்தியன்?”

கானல் நீர்நான் கொஞ்சம் சீரியஸாகக் கேட்டேன்.

ஸ்ரீதர் சொல்ல ஆரம்பித்தார்.

“”எங்க ஏரியாவுல ஒரு டாக்டர் வந்திருக்காரு. யுனானி வைத்தியம். ஆஸ்துமாவுக்கு நல்லா ட்ரீட்மென்ட் பண்றாரு.

“”எனக்கு எப்படித் தெரியும்?”

“”எங்க மாமனாருக்கும் ஆஸ்துமா உனக்குப் போல தானே வருஷக் கணக்கா இருக்கு! நேத்து எங்க வீட்டுக்கு வந்திருந்தாரு. போன வாரம் அந்த டாக்டர்கிட்டே போய் வந்திருக்காரு. ஒருவாரமா மருந்து சாப்பிடறாராம். இப்போது தேவலையாம். அவருகிட்டே பேசிக்கிட்டிருந்தப்போ, எனக்கு உன் ஞாபகம்தாம்பா வந்தது. ரொம்ப தூரம் இல்ல, எங்க வீட்டுக்கு ஒரு நாலு தெரு தள்ளிதான் டாக்டர் வீடு. காலை ஆறு மணிக்கெல்லாம் அங்கே போயிடணும். ஆந்திராவுல இருந்தெல்லாம் நோயாளிங்க வர்றாங்களாம். நீ ஸண்டே வறியா?”

என் பதிலுக்காக பேச்சை நிறுத்தினார், ஸ்ரீதர்.

“”கண்டிப்பா ஸண்டே வர்றேன் ஸ்ரீதர். காலைல அஞ்சரை மணிக்கெல்லாம் உன் வீட்டுக்கு வறேன். ரெண்டு பேரும் போகலாம்…” என்றேன்.

“”முத்து, ஒருவிஷயம் மறந்துட்டேன்…” என்றார் ஸ்ரீதர்.

“”என்ன விஷயம்?”

“”அந்த டாக்டர்கிட்டே மருந்துகூட வாங்கிடலாமாம். ஆனா, டோக் கன் வாங்கறதுதான் ரொம்ப கஷ்டமாம். எங்க மாமனாரு தெரியாம போய் கூட்டத்திலே மாட்டிக்கினு அவஸ்தைப்பட்டாறாம். சிலபேர் நைட்டே வந்து டாக்டர் வீட்டு கேட்டு முன்னால படுத்துக்குவாங்களாம்…” என்றார்.

“”நம்ம ஏரியாதானே பார்த்துக்குவோம்!” என்றேன்.

நான் பத்து வருடங்களாக இந்த ஆஸ்துமா நோயினால் அவஸ்தைப்படுகிறேன். திருமணத்திற்குப் பிறகுதான் இதன் பாதிப்பு எனக்கு அதிகமாக இருக்கிறது. மனைவி என் மாமன் மகள். அதனால் பிரச்னை அதிகமாக இல்லை. இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். இது தொற்று நோயல்ல என்பது ஆறுதலான விஷயம். இந்த நோய்க்கு நான் செலவு செய்த பணத்தை வைத்திருந்தால் ஒரு பங்களா கட்டி இருக்கலாம்.

சில நேரங்களில் மூச்சு அடைக்கிற மாதிரி ஆகிவிடும். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள். டெரிபிலின் ஊசியை போட்டதும் கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடும். ரெண்டு நாள் கழித்து மறுபடியும் மூச்சு வாங்கும். மழைக் காலத்திலும் பனிக்காலத்திலும் என் அவஸ்தையை சொல்ல வார்த்தைகளே கிடையாது.

அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து குளித்துவிட்டு பூஜையறையிலிருக்கும் எல்லா தெய்வங்களையும் வணங்கிவிட்டு மனைவியிடம் கொஞ்சம் பணம் வாங்கிக் கொண்டு ஸ்ரீதர் வீட்டுக்குச் சென்றேன். அவரும் தயாராக இருந்தார். அவர் மனைவி எனக்குக் காபி கொடுத்தார். “வீட்டில் இப்போதுதான் குடித்தேன்…’ என்று சொல்லியும் என்னை விடவில்லை.

“இந்த முறை உங்களுக்கு சரியா போயிடும். இப்போ எங்க அப்பாவுக்கு எவ்வளவோ தேவல….’ என்று சொன்னது என் செவியில் தேன் வந்து பாய்ந்தது மாதிரி இருந்தது.

என் பைக்கை ஸ்ரீதர் வீட்டில் போட்டுவிட்டு ஸ்ரீதர் பைக்கிலேயே டாக்டர் வீட்டுக்குச் சென்றோம்.

ஸ்ரீதரின் மாமனார் சொன்னது உண்மைதான். கூட்டம் நிரம்பி வழிந்தது. காலை ஆறு மணிக்கு டோக்கன் கொடுத்தார்கள். என் டோக்கன் எண் இருபத்தி மூன்று. டாக்டர் ஏழு மணிக்கு வருவார் என்றார்கள். நாங்கள் பக்கத்திலிருந்த பெட்டிக் கடையில் பேப்பர் வாங்கி வந்து படித்துக் கொண்டிருந்தோம்.

எனக்கு அழைப்பு வந்தது.

டாக்டருக்கு ஐம்பது வயதுக்கு மேல் இருக்கும். ஓர் ராணுவ வீரனைப் போல அழகாகவும் மிடுக்காகவும் இருந்தார். அந்த குறுந்தாடி அவர் அழகுக்கு மேலும் அழகு சேர்த்தது.

என் பழைய ரெக்கார்ட் அனைத்தையும் பொறுமையாக பார்த்தார்.

“”ரொம்ப செலவு பண்ணி இருக்கீங்க….” என்றார்.

“”இதுமாதிரி ஒரு பங்களாவே கட்டி இருக்கலாம்…” என்றேன்.

என்னைப் பார்த்து லேசாக சிரித்தார்.

“”பூரணமா குணமாகலியே டாக்டர்…” என்றார் அருகில் அமர்ந்திருந்த ஸ்ரீதர்.

“”இனிமே கண்டிப்பா குணமாயிடும். சட்டையைக் கழற்றுங்க….” என்றார் டாக்டர்.

சட்டையையும் பனியனையும் கழற்றி ஸ்ரீதரிடம் கொடுத்துவிட்டு உட்கார்ந்தேன்.

டாக்டர் எழுந்து நின்று ஸ்டெத்தாஸ்கோப்பை என் மார்பிலும் முதுகிலும் விலா பக்கங்களிலும் வைத்து நீண்ட நேரம் சோதித்தார்.

“”மூணு மாசத்தில கம்ப்ளீட்டா சரியா ஆகிடும். பதினைந்து நாள் கழித்து வந்து செக் பண்ணிக்கினு மருந்து வாங்கிட்டுப் போகணும்…” என்று சீட்டு எழுதிக் கொடுத்துவிட்டு, “”டோக்கன் வாங்கினீங்களே அங்கேயே மருந்து கொடுப்பாங்க வாங்கிக்கோங்க..” என்றார் டாக்டர்.

“”சாப்பாட்டில் ஏதாவது பத்தியம் இருக்கணுமா?”

“”கத்தரிக்காய், மீன், கருவாடு தவிர, உங்க உடம்புக்கு ஒத்துக்கொள்ளும் எதை வேணுமானாலும் சாப்பிடுங்க.. ”

ஸ்ரீதர் வீட்டுக்குச் சென்று என் பைக்கை எடுத்துக் கொண்டு என் வீடு வந்து சேர்ந்தேன்.

டாக்டர் கொடுத்த மருந்தினாலா இல்லை, என் மன மாற்றத்தினாலா என்று தெரியவில்லை. டாக்டரிடம் போய் வந்ததிலிருந்து என் உடல் நிலை நன்றாகவே இருக்கிறது. அதுவும் இது பனிக்காலம். ஒவ்வொரு வருடமும் இந்த நேரத்தில் நான் நரக வேதனைப்படுவேன். இப்போது எனக்கு இருமலோ, மூச்சு விடுவதில் சிரமமோ இல்லை. பதினைந்து நாள் மருந்திலேயே இவ்வளவு பலன் என்றால், டாக்டர் சொன்ன மாதிரி மூன்று மாதத்தில் என் நோய் பூரணமாய் சரியாகிவிடுமே! நினைக்கும் போதே எனக்கு சந்தோஷம்!

அலுவலகத்தில் ஸ்ரீதரிடம் சொன்னேன்:

“”ஸ்ரீதர், பதினைந்து நாள் கழித்து டாக்டர் வர சொன்னார்ல, இன்னும் இரண்டு நாள்தான் இருக்கு, வர்ற ஸண்டே வறியா டாக்டர்கிட்ட போய் வரலாம்?”

“”ம்… போகலாம்..”

அதேமாதிரி ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஸ்ரீதர் வீட்டுக்குப் போனேன். அவர் மனைவி கொடுத்த காபியை குடித்துவிட்டு, என் பைக்கை ஸ்ரீதர் வீட்டில் விட்டுவிட்டு ஸ்ரீதர் பைக்கில் டாக்டர் வீட்டுக்குப் போனோம்.

பைக்கைவிட்டு இறங்கியதும் கவனித்தேன். டாக்டர் வீட்டு முன்னால் கூட்டம் இல்லை!

“”என்ன ஆச்சு? கூட்டம் இங்கே அலை மோதுமே! இல்லையா?” என்று எனக்குள் கேட்டுக் கொண்டே டாக்டர் வீட்டு கேட்டைத் திறந்தேன்.

நாலைந்து பெரியவர்கள் போர்ட்டிகோவில் உட்கார்ந்திருந்தனர். லுங்கியும், வெள்ளைச் சட்டையும் அணிந்த ஒரு பெரியவர் வெளியே வந்தார்.

“”டாக்டரைப் பார்க்கணும்ங்க….” என்றேன்.

“”உங்களுக்கு தெரியாதா?”

“”என்னது?”

“”டாக்டர் செத்துட்டாரு!”

நான் தீயை மிதித்தது போல் திடுக்கிட்டேன்.

அந்தப் பெரியவர் சொன்னார்.

“”டாக்டர் ராத்திரி சாப்டுட்டு படுக்கப் போயிருக்காரு. லேசா மார்பு வலிக்குதுனு அவரு மனைவிகிட்ட சொல்லி இருக்காரு. அந்த அம்மா தைலம் தேய்ச்சு இருக்காங்க. அப்புறம் வலி அதிகமா ஆகியிருக்கு. உடனே பக்கத்தில் இருக்கிற ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டுப் போயிருக்காங்க. போற வழியிலேயே அவரு உயிரு போயிட்டிருக்கு. அவரே ஒரு டாக்டரு. ஒருநாள் கூட அவரு நோய்னு படுத்ததில்ல… உள்ளே போய்ப் பாருங்க…”

நானும் ஸ்ரீதரும் செருப்பை வெளியில் கழற்றிவிட்டு உள்ளே போனோம். அதே கம்பீரம் குறையாமல் டாக்டர் பிணமாய் படுத்திருந்தார்.

நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன்.

ஓர் ஐந்து வருடங்களுக்கு முன் என் அக்காள் மகள் திருமணமான ஆறு மாதத்தில் தீக்குளித்து இறந்தாள். குழந்தைப் பருவம் முதல் அவளை நான் தூக்கி வளர்த்ததால் அன்று உறைந்து போனேன். அடுத்தது நான் உறைந்தது இந்த மரணத்தில்தான்.

டாக்டர் என் உறவினரோ நண்பரோ அல்ல. அவர் வைத்தியத்தின் மேல் நான் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன்!

எனக்கு லேசாக தலை சுற்ற ஆரம்பித்தது. பக்கத்திலிருந்த சேரில் உட்கார்ந்தேன். குடிப்பதற்கு ஸ்ரீதர் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார்.

கொஞ்ச நேரம் கழித்து, “”வா… ஸ்ரீதர் போகலாம்….” என்று எழுந்தேன்.

“”தைரியமா இரு முத்து. பயப்படாதே…” என்றார்.

“”பயப்படுறதுக்கு என்ன இருக்கு? நல்லா இருந்த டாக்டரே திடீர்னு போயிட்டார். நான் நோயாளி. எப்ப வேணாலும் போகலாம். பயந்து என்ன ஆகப் போகுது?” என்றேன்.

– டிசம்பர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *