காதல் சிகரம்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 4, 2021
பார்வையிட்டோர்: 2,960 
 

காலை 10.00 மணியிலிருந்தே மாதுரி மனசு சரி இல்லை. மனம் துடித்தது. தவித்தது.

பாதுகாப்பாக எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டாலும் வலித்தது.

‘விசயத்தைச் சொல்லலாமா, கூடாதா..? சொல்லாமல் மறைப்பது எப்படி சரி. எப்படி ஆரம்பிக்க…?’ இதையேத் திரும்பத் திரும்ப கேட்டு, யோசித்து….

வீட்டை வளைய வளைய வந்தாள்.

மாலை மணி ஐந்தடித்தும் மனசு தெளியவில்லை.

அலுவலகம் விட்டு வந்த இனியனுக்கு மனைவியின் மாற்றம் தெரிந்தது.

“என்ன ஒரு மாதிரியா இருக்கே…?” அவள் நீட்டிய காபியை வாங்கிக்கொண்டே கேட்டான்.

“ஒ… ஒன்னுமில்லே..”

“உட்கார். உடம்பு சரி இல்லையா…?”

“இ….இல்லை. நல்லா இருக்கேன்!”

காபியை குடித்து முடித்து… ஆளைப் பரிவுடன் இழுத்து பக்கத்தில் அமர வைத்து நெற்றியில் புறங்கை வைத்தான். சுடவில்லை.

“பதற்றமா இருக்கே. மனசு சரி இல்லையா…?” பரிவுடன் கேட்டான்.

மாதுரி மனசுக்குள் துணுக்குற்றாள். கணவனைப் பாவமாகப் பார்த்தாள்.

“மாதுரி ! எந்த கஷ்டமா இருந்தாலும் என்னிடம் தைரியமா சொல்லு. மனம் விட்டுப் பேசு”என்றான்.

மாதுரி மெளனமாக இருந்தாள்.

“என்னம்மா…??…”இனியனின் குரலில் அன்பு ததும்ப அவள் தாடையைத் தூக்கி முகத்தைப் பார்த்தான்.

‘எப்படி ஆரம்பித்தால் சரியாக இருக்கும்..?’ என்று இன்னும் தடுமாறிய மாதுரி…துணிந்தாள்.

“நம்ம முதலிரவில்… நமக்குள் ஒளிமறைவு இருக்கக் கூடாது. நீங்க பேசுன பேச்சு உங்களுக்கு நினைவிருக்கா…?” ஆரம்பித்தாள்.

இரண்டு மூன்றாண்டுகளுக்கு முன் நடந்தது. சம்பந்தா சம்பந்தமில்லாத கேள்வி. ஞாபகமில்லை.

“ஏன்..??!!…” அவளைக் கலவரமாகப் பார்த்தான்.

“யோசிச்சு சொல்லுங்க…?”

நினைவு வந்தது.

“நான் ஒருத்தியைக் காதலிச்சேன். சாதி, மதம்ன்னு என் அம்மா, அப்பா அவள் கழுத்துல தாலி கட்ட விடாம சதி செய்து பிரிச்சிட்டாங்க சொன்னேன். ஒருநாள் வழியில கூட அவளைக் காட்டினேன்.”சொன்னான்.

“அவ பேரு….”

“தமிழரசி!”

“ஆங்… அவளேதான். அவளை நான் இன்னைக்குப் பார்த்தேன்.!”

“எங்கே…?”

“காலையில் நான் கறிகாய் வாங்க கடைத்தெரு போனேன். பாரதியார் சாலையில் ஒரு பெட்டிக்கடை ஓரமாய் உடம்பு போர்த்தி நடுங்கியபடி ஒரு உருவம் கிடந்தது. அருகில் சென்று பார்க்க … அவள். பதறிப்போனேன். எப்படி இப்படின்னு யோசிக்கும் முன்.. பெட்டிக்கடைக்காரர்….பத்து நாளைக்கு முன் எங்கோ இருந்து வந்து சுத்திய பைத்தியத்துக்கு ரெண்டு நாளா சுரம். சொல்லி இரக்கப்பட்டார். எனக்கு மனசு தாளல. சட்டுன்னு ஒரு ஆட்டோவை அழைச்சி…சுத்தி உள்ளவங்க உதவியால ஏத்தி…மருத்துவ மனையில் கொண்டு சேர்த்திருக்கேன். நான் செய்தது சரியா…?”

“ரொம்ப சரி!” சொன்னான்.

“இப்போ நாம் போய் அவுங்களை மருத்துவ மனையில் பார்க்கலாமா…?”

“தாராளமா போகலாம் கிளம்பு!” – எழுந்தான்.

அரைமணி நேரத்தில் இருவரும் மருத்துவமனைக்குள் தனித்திருந்த ஒரு வார்டுக்குள் நுழைந்தனர்.

துணைக்கு இருந்த வயதான தம்பதிகள் எழுந்து நின்று விலகி இவர்களுக்கு வழி விட்டார்கள்.

கட்டிலில் இருந்த உருவத்தைப் பார்த்த இனியன் இவளைப் புரியாமல் பார்த்தான். சட்டென்று அவன் காலில் விழுந்த மாதுரி….

“அன்னைக்கு ஆண்… துணிஞ்சு சொல்லிட்டீங்க. பெண்.. என்னால அப்படி சொல்ல முடியல. இவர் என் முன்னாள் காதலன். தமிழரசன். நான் மாறி பொய் சொன்னதுக்கும் , இப்படி செய்ததுக்கும் தப்புன்னா மன்னிச்சுடுங்க…”சொன்னாள்.

இனியன் ஒன்னும் சொல்லவில்லை. மலர்ந்த முகத்துடன் அவளை இரு கையால் தொட்டு தூக்கினான்.

“பகைவனுக்கருவாய் நெஞ்சே என்கிறதுதான் சரி. உங்க காதலைப் பிரிச்சு சதி பண்ணின எங்களுக்கு அவனை உசுரா திருப்பிக் கொடுத்திருக்கே. உன்னைத் தவறவிட்டதுக்காக இப்போ வருத்தப் போடுறோம். மன்னிச்சுக்கோ மாதுரி. ஐயா ராசா ! ஜாடிக்கேத்த மூடி. நல்ல உள்ளங்கள் . நீங்க நீடுழி வாழனும்.”சொல்லி கண்ணீர் விட்டார் மருதை.

“ஆமாம்…!”அருகில் இருந்த அவர் மனைவி சிவகாமியும்ஆமோதித்து தன் கண்ணின் ஓரத்தில் கசிந்த நீரை முந்தானையால் துடைத்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *