களிமண் பட்டாம்பூச்சிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 23, 2017
பார்வையிட்டோர்: 8,516 
 

தங்கமணிக்கு வயிறு பெருத்துக்கொண்டே போனது. எப்போது வேண்டுமானாலும் பிரசவித்து விடலாம் என்பது போல் பயம் வந்தது கோபிநாத்திற்கு. வலி வந்து விட்டால் பழையனூரில் இருக்கும் ஏதாவது மருத்துவமனையில் சேர்த்து விடலாம் என்று நினைத்திருந்தான். ஆனால் வலி வருவதற்கான எந்த அடையாளமும் தங்கமணியிடம் காணப்படவில்லை என்பது கோபிநாத்திற்கு வருத்தமாக இருந்தது. வருத்தம் பிரசவத்தால் உடைந்து போகும்.

ஜானகி பிரசவத்தின் போது எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதைத் திரும்ப திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தாள். பற்களைக் கடித்துக் கொண்டு முக்க வேண்டும். முடிந்த மட்டும் உந்தித் தள்ளவேண்டும். கால்களை அகல விரித்து வைத்துக் கொள்ள வேண்டும். நிணநீர் அதிகம் வெளியேறுகிறதென்று கவலைப் படக்கூடாது. பெருங்குரலெடுத்து, பெரிய கஷ்டம் வந்துவிட்டது அதிலிருந்து தப்பிப்பதுபோல் சப்தமிடவேண்டும்.என்று சொல்லியிருந்தாள். ஜானகி தங்கமணியின் பெரிய அத்தை. மூன்று குழந்தைகள் பெற்றெடுத்தபின் கருத்தடை செய்து கொண்டவள். அப்பாடா அப்பாடா என்பாள் பிரசவம் பற்றிக் கேட்டாள்.

” அம்மா மறுபடியும் ஆட்சிக்கு வர்றாங்க. அவங்க பதவி ஏத்துக்கற நாளன்னிக்கு கொழந்தே பொறக்கும் பாரேன். கட்சிக்காரங்ககிட்டே சொல்லி பொறக்கற கொழந்தைக்கு கால் பவுன் மோதரமாச்சும் அம்மா பேர் போட்டு இருக்கறது உன் கையிலே குடுக்கப் பண்ணுவன் ” என்றாள் ஜானகி. அம்மாவின் கட்சிக்காரி அவள். தீவிரமான மேல் மருவத்தூர் பக்தை கூட.

” எனக்கென்னவோ அஞ்சான் படம் ரிலீஸ் ஆகற அன்னிக்கோ, வேலையில்லாத பட்டதாரி ரிலீஸ் ஆகற அண்ணிக்கோதான் குழந்தை பொறக்கும்னு தோணுது. ”

” சரியான சினிமா பைத்தியமடா கோபி நீ. படம் பார்க்கறப்போ குழந்தை பொறக்கணும்னு படத்துக்கு கூட்டிட்டு போயிடுவே போலிருக்கு….”

“ செரி ..கம்யூட்டர் சாதகமுன்னு கடை வந்திருக்கே. அங்கெ என் சாதகத்தைப் போட்டு பிரசவ நேரம் பாருங்க.. இல்லீன்னா உங்க பிரண்ட் சோமசுந்தரம் கம்யூட்டர் படிச்சவர் சாதகமும் பாப்பாரில்லையா ..அவர் கிட்டக் கேளுங்க ..”

“ பொதுவாத்தான் சொல்வான். பிரசவ நேரமெல்லா சொல்ல மாட்டாங்க. அதெல்லா யாருக்குத் தெரியும். அறுத்து எடுக்கற னேரத்தெ வெச்சு சாதகம் தயார் பண்ற ஆளுக இருக்காங்க “

“ அறுக்கறெல்லா உடம்பு தாங்காது. வேண்டா சாமி . வெளிநாடு கூப்புட்டுப் போறன்னு அறுத்துத் தள்ளியிருக்கார் இவரு ஜானகி“

” அது வேற சத்தியம் பண்ணியிருக்கானா “

” இவருதா சினிமாவுல டூயட் வரப்பெல்லை இது சிங்கப்பூர், சிங்கத்தீவு, சந்தோச தீவு , இது காசினோவா, இது உலகம் சுற்றும் வாலிபன் பாட்டு எடுத்த பார்க்குன்னு ஒவ்வொண்ணையும் காமிப்பார். இதுக்கெல்லாம் கூட்டிட்டு போறன் கண்ணுன்னு சொன்னார். தேனிலவுக்கு கூட்டிட்டு போவார்ன்னு பாத்தேன். வேலைக்குன்னு கூட்டிட்டு போயி குடும்பம் நடத்தாட்டியும் டுயூரிஸ்ட் விசாவுல கூட்டிட்டுப் போயி காட்டிட்டு வருவான்னார். இப்போ பிரசவத்துக்கு வந்து நிக்கறேன். என் கொழந்தையாச்சும் கூட்டிட்டு போவார்ன்னு பாக்கணும்.’

” கொழந்தையோடு உன்னையும் கூட்டிட்டுப் போறன் கண்ணு”

” இந்தக் கொஞ்சலுக்கெல்லா கொறச்சல் இல்ல போங்க… நல்ல ஆஸ்பத்திரியாச்சும் கூட்டிகிட்டு போயி வலியில்லாம பிரசவம் பார்க்க பண்ணுங்க…”

” அதுக்காக அம்மா பதவி ஏற்கற நாள்லே கால் பவுன் மோதிரத்திக்காக வயித்தைக் கிழிச்சு எடுக்கச் சொல்றியா…”

” அய்யய்யோ …சும்மா இருங்க.. வாயை வெச்சுகிட்டு ”

” குல தெய்வத்திற்கு வேண்டியிருக்கறன். எல்லாமும் நல்லா நடக்கும்…”

தொட்டிச்சியம்மன் அவர்களின் குலதெய்வம் கோடாங்கிகளின் தெய்வம் அது. வீட்டு வேலைக்கென்று இருந்த வேறு குலப் பெண்ணை கோடாங்கி குலத்துக்காரன் கூட்டி வந்து குடும்பத்துக்கு காவலாக வைக்கிறான். அவளே குடும்பத்தை காத்து குலதெய்வம் ஆகிவிட்டாள் என்பது பூர்வீகக் கதை.

” குழந்தை பொறக்கப் போகுது கொழந்தை பொறக்கப் போகுதுன்னு உடுக்கையெல்லா அடிச்சிருவீங்க போலிருக்கு ”

” சாதித்தொழிலைப் பண்ணிக் காமிக்கணும்கரியா. டச் வுட்டுப் போகுதுன்னு டிரைபன்னச் சொல்றியா”

” அதெல்லா வேண்டா சாமி. நடுராத்திரியில் உங்கள வெளியே அனுப்பிச்சுட்டு நான் கதியா கெடந்து இருக்கணுமா…”

வெளிநாட்டு வேலைக்கென்று அலைந்து கொண்டிருந்தான் கோபி. எதுவும் கிடைக்கவில்லை. குலதெய்வத்தை ரொம்பவும் நம்பியிருந்தான்.

அவன் பள்ளிக்கூடம் போகிற காலங்களில் மீன் வேட்டைக்கு முருக நதி பக்கம் போவான். தொட்டிச்சியம்மன் கோவிலுக்குப் போய் கும்பிட்டுவிட்டு மீன் பிடித்தால் எதாவது அகப்படும். இல்லாவிட்டால் திருப்தியாக இருக்காது. இதை பரிசீலித்தும் பார்த்திருக்கிறான். பரிசீலித்துப் பார்க்க பல சந்தர்ப்பங்கள் அமைந்திருந்தன.

மருத்துவமனையில் சும்மா உட்கார்ந்து சலித்துப் போனதென்று சோமசுந்தரத்தை வரச்சொல்லியிருந்தான். வேலைக்குப் போகும் போதோ, திரும்பும்போதோ வருவதாகச் சொல்லியிருந்தான்.” என்ன எப்பிடி அமையப் போகுது .”

“ சுகப்பிரசவமா இருந்தா நல்லதுதா “

“ இல்லீன்னா அறுக்கெடுக்கறதுதானா “

” வேற வழி.. “

சோமசுந்தரம் வேலைக்கு போகும்போது கணபதியை பழையனூர் பேருந்து நிலையத்தில் விட்டு விட்டு போனான். அவன் பெரிய வண்டி வாங்கியதில் அவன் அப்பாவுக்கு உடன்பாடில்லை.

” இவ்வளவு பெரிய கனமான வண்டியை எப்படிடா சொமக்கபோறே”

” என்ன தலையில் வச்சா சுமக்கப் போறேன். கால்ல எட்டி ஒதைச்சா அது பாட்டுக்கு போய்கிட்டிருக்கும்.”

சோமசுந்தரம் படித்து விட்டு கோழி தீவனக் கம்பனி ஒன்றுக்கு சூப்பர் வைசராக வேலைக்கு சென்று சென்றுகொண்டிருந்தான். அவன் அப்பா கணபதிக்கு அது பிடிக்கவில்லை. ஜாதகம் பார்க்கக் கற்றுக்கொள் என்று படிக்கிற காலத்தில் நச்சரித்துக் கொண்டிருந்தார். அவனும் ஓர் ஆண்டு அவருடனே இருந்து கற்றுக் கொண்டான். நோட்டில் கட்டம் போட்டு ஜாதகம் எழுதவும் கற்றுக் கொண்டான். ஜாதகம் பார்த்து சொல்லவும் கற்றுக் கொண்டான். கணபதிக்கு அது ஆறுதலாக இருந்தது.

பாட்டி கிருஷ்ணம்மாள் ” நம்ம தலைமுறையில பரம்பரையெக் காப்பாத்தறதுக்கு ஒருத்தன் இருக்கான்” என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வாள். ஆனால் படித்து முடித்த பின் ஜாதக மேடையில் உட்கார மாட்டேன் என்று அடம் பிடித்தான்.

” வேலைக்கு போறேன் ”

” என்னடா இப்படி குண்டைத் தூக்கிப் போடறே ”

” வூட்ல உக்காந்து இதெல்லா நான் பண்ண முடியாதுப்பா”

” கோபால் மாதிரி மேடராசுக்கு போயி ரூம் போட்டு பாரடா . இல்லீன்னா கோயம்முத்தூர் திருப்பூர்ன்னு போயி கடை போட்டுக்கோ. பழனியில கட போடறதும் வருமானம்தா ”

” அதெல்லாம் முடியாதப்பா… நான் வேலைக்கு போறேன்.”

” வேலை கெடைக்கறவரைக்கும் கூட இருடா”

” கூட உட்கார்ந்தாப் பழகிப் போயிடும். வேண்டா.. வேலைக்கு போகிறேன். நல்ல முடிவுதான்னு நினைக்கிறேன்.”

ஆறு மாதங்கள் எதற்கெதற்கோ இன்டர்வியூ என்று போனான். பிறகு பல பரீட்சைகள் எழுதினான். பத்து கி. மீட்டரில் இருக்கும் எம் சி எம் கோழித் தீவனத் தொழிற்சாலையில் வேலை கிடைத்தது என்று சேர்ந்து விட்டான்.

” கம்ப்யூட்டர்ன்னு என்னென்னமோ படிச்சே. கோழித்த தீவனத்துக்கு போயிட்டியேடா”

” அதுக்காக கம்ப்யூட்டர் ஜாதகம் பார்க்க முடியுமா நான். கம்ப்யூட்டர் வேலைன்னு அதுவும் ட்ரை பண்ணிட்டு இருக்கன். கெடச்சா போயிருவேன்.”

கணபதி நல்லூர் பிரிவிற்கு ஒரு ஜாதகம் பார்க்க கிளம்பி பேருந்துக்காக காத்திருந்தார். இப்போதெல்லாம் வெளியிலும் கிளம்பி விடுகிறார்.

” ஜாதகம் பார்க்கற தொழில் அப்பிடி இப்படின்னீங்க. இப்போ வீடு தேடிப் போயி பாக்கவேண்டிய காலம் வந்திருச்சு பாருங்க. வெளியூர்ன்னு போயி பார்க்கறீங்க.”

“கோபால் மாதிரி கண்ணு முன்னாலே ஜெயிச்சவங்க இருக்காங்களே. வெளியூர் போயி கோபால் ஜெயிச்சிருக்கானே “

” கோபால் பத்தியெல்லா பேசாதீங்கப்பா. நாணயமானவனில்லே. கள்ள நோட்டுக்காரன்னே பேரு வந்திருச்சு. மெட்றாஸ் மாதிரி தெள்ளவாரிக இருக்கற ஊர்ல இருக்கறதுக்கு செரியான ஆளுதா. அவர் சம்பாத்தியம் பத்தி பெருமையா பேசாதீங்க. ”

தலைமுறையாய் ஜாதகம் பார்க்கும் குடும்பம். வருமானம் கொஞ்சம் குறைந்து விட்டது. அதை நிவர்த்தி செய்ய வெளியூர் போகவும் தயாராகி விட்டார். . யாரவது தொலைபேசி செய்து கூப்பிட்டால் கணபதி கிளம்பி விடுகிறார். ” இங்க ஊருக்கு வர்றீங்களா” என்று கேட்பார். இல்லையென்றால் அவரே முகவரி வாங்கிக்கொண்டு கிளம்பி விடுவார். காலம் மாறிவிட்ட பின் தானும் மாறிக்கொள்வதில் உறுதியாக இருந்தார்..

அடுத்த மாதத்தில் ஒரு நல்ல நாளில் பிரசவம் செய்ய, அறுத்துக் குழந்தையை வெளியில் எடுக்க தேதி கேட்டிருந்தார் அமெரிக்கா ரிடர்ன் செல்வராஜ். பழனிக்குப் பக்கமிருக்கும் சோமராயன்பட்டிக்காரர். வசதியானவர். எல்லா அம்சங்களும் பொருந்தி வருகிற மாதிரி அந்த நேரத்தில் குழந்தை பிறந்ததாகக் குறித்துக் கொண்டு ஜாதகம் எழுத வேண்டுமாம்.அதைக்கேட்ட்தும் மனம் பேதலித்துப் போன மாதிரி ஆகிப்போனார்.

“ கோபிநாத் ஜாதகம் எழுதணும்ம்னு கேட்டுட்டு இருந்தான்.வெளிநாடு போற மாதிரி கெடைக்கணும்ம்ன்னு சொன்னான். “

“ இன்னம் பிரசவமே ஆகலியே. அறுத்து எடுக்க நேரம் கேக்கறானா. “

சட்டெனத் திகைப்புடன் சோமசுந்தரம் பார்த்தான்.

“ அறுத்து எடுக்க நேரம் குறிச்சுக் குடுக்கற னெலமைக்கு நம்மப் பொழப்பு போயிருச்சு பாரேன் “

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *