கல்விக்காக…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 18, 2016
பார்வையிட்டோர்: 7,205 
 

காலையில் எழுந்ததிலிருந்தே ரகுராமனுக்கு மனசே சரியில்லை. இனம் தெரியாத ஒரு பயமும், அமைதியின்மையும், பதற்றமும் அவரிடம் காணப்பட்டது.

அவருக்கு தற்போது வயது 59. நாளை மறுநாள் திங்கட்கிழமை அவருக்கு பைபாஸ் சர்ஜரி. சர்ஜரியின் முன்னேற்பாடுகளுக்காக நாளை காலை அப்பலோ ஹாஸ்பிடலில் அட்மிட் ஆக வேண்டும். போனவாரம்தான் ஆஞ்சியோ செய்யப்பட்டு எழுபது சதவீதம் அடைப்பு என்றார்கள்.

கடந்த ஐந்து வருடங்களாக டயாபடீஸ் வேறு இருப்பதால் சர்ஜரியின்போது இறந்து விடுவோமோ என்கிற மரணபயம் அவரை ஆட்கொண்டது.

ரகுராமன் சென்ற வருடம் வங்கிப் பணியிலிருந்து ரிடையர்ட் ஆனவர். அவருக்கு எல்லாமே மனைவி காயத்ரிதான். அவள் இவருடன் இல்லாத தருணங்களில் தவித்துப் போய்விடுவார். காயத்ரி மிகவும் துடிப்பானவள். தன் கையில் வைத்திருக்கும் லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன் மூலமாக அனைத்தையும் கெட்டிக்காரத்தனமாக முடித்துக் கொள்பவள்.

ஒரு மகள், ஒரு மகன். இருவரையும் நன்கு படிக்க வைத்தார். காயத்ரியிடம் அவர் அடிக்கடி ‘கல்வி ஒன்றுதான் நம் குழந்தைகளுக்கு நாம் விட்டுச் செல்லக் கூடிய அழியாத செல்வம், மற்ற செல்வங்கள் அனைத்தும் அழிந்து விடக்கூடியவை’ என்று சொல்வார்.

மகள் சுகன்யா மூத்தவள். தஞ்சைக்கு அருகிலுள்ள சாஸ்தா கல்லூரியில் இஞ்சினியாரிங் படித்து விட்டு தொடர்ந்து எம்.பி.ஏ படித்தாள். தற்போது அம்னெஸ்டி இண்டர்னேஷனல், நியூஜெர்ஸியில் பணி புரிகிறாள். வயது 27. மிகவும் ¨தைரியமானவள். இன்னமும் திருமணமாகவில்லை.

மகன் ஸ்ரீராம். அண்ணா யுனிவர்சிடியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தான். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஐ.டி கம்பெனியில் தன்னுடன் வேலை பார்த்த, தன்னை விட வயதான எமல்டா என்கிற கிறிஸ்தவ பெண்ணை காதலித்து பெற்றோர்களின் சம்மதமில்லாமல் தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டான். அதனால் உண்டான மன வருத்தத்தினால் தற்போது அவனுடன் பேச்சு வார்த்தை கிடையாது. இதே சென்னையில் நங்க நல்லூரில் குடியிருக்கிறான். திருமணதிற்குப் பிறகு மின்னஞ்சல் மூலமாக ஒரு கடிதம் எழுதி தன் வீட்டு முகவரியைத் தெரியப் படுத்தினான். அதோடு சரி.

தன்னிடம் வேலை பார்க்கும் டிரைவர், வீட்டின் வேலைக்காரர்கள், ஏன் தெருவில் வண்டி தள்ளிக் கொண்டுவந்து இஸ்த்ரி போடுபவன் என அனைவரின் குழந்தைகளையும் ரகுராமன்தான் பள்ளிக்கும், கல்லூரிக்கும் பணம் கட்டி படிக்க வைக்கிறார்; யூனிபார்ம், ஷூஸ் எடுத்துத் தருகிறார். இவர் உதவி செய்த குழந்தைகள் பலர் நன்கு படித்து இன்று நல்ல வேலையில் இருக்கிறார்கள். .

ரகுராமன் வங்கியில் சீப் மனேஜராகப் பணி புரிந்த போது, தனக்கிருந்த அதிகாரத்தை பயன் படுத்தி ஏழை மாணவர்களின் வரப் பிரசாதமான கல்விக் கடன் திட்டத்தை

நேர்மையாகவும், விரைவாகவும் செயல் படுத்தி, நன்கு கல்வி பயிலும் அடித்தட்டு மாணவர்களின் உயர் கல்விக்காக முனைந்து செயல் பட்டார். தன் அதிகாரத்திற்கு உட்பட்ட அனைத்து உதவிகளையும் கல்விக்காக உற்சாகத்துடன் செய்தார்.

ரகுராமன் மூலம் உதவி பெற்று கல்வி கற்ற பெரும் பாலோர், தாங்கள் ஒரு நல்ல நிலையை அடைந்தவுடன், மற்ற ஏழை மாணவர்களின் படிப்பிற்காக தொடர்ந்து உதவிசெய்து அவர்களின் வளர்ச்சியில் பெருமிதம் கொண்டார்கள். அவரது முயற்சியால் நல்ல காரியங்கள் ஒரு சங்கிலித் தொடர்போல் அடுத்தடுத்து சத்தமில்லாமல் உணர்வு பூர்வமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

தன்னைப் பொறுத்தவரை ஒரு பொறுப்புள்ள சமூகப் பிரஜையாக, ஒரு நல்ல குடும்பத் தலைவனாக வாழ்ந்து விட்ட திருப்தி இருந்தாலும் இறப்பு என்பது இந்த உலகத்திலிருந்து ஒரு நிரந்தரப் பிரிவு… ஐம்பத்தொன்பது வயது என்பது இறப்புக்கான மிகவும் சின்ன வயதுதானே என்று ஏங்கினார்.

அவரது எண்ணங்கள் வாழ்க்கையில் தான் கடந்து வந்த எல்லா மாற்றங்களையும் தொடர்ந்து அசை போட்டன….

அடுத்தடுத்த சம்பவங்களின் கோர்வைதான் வாழ்க்கை. அதில் பெரும்பாலான நிகழ்வுகளை நம் சுய நலத்தையும், அப்போதைய நம் தேவைகளையும் ஒட்டியே அமைத்துக் கொள்கிறோம். எல்லா உறவுகளும், நட்புகளும் நம் தேவைக்காக மட்டுமே தொடர்கின்றன. தற்போதைய உறவுகளில் அன்பு, பாசம், வாஞ்சை, அனுசரித்தல், பொறுமை, விட்டுக் கொடுத்தல்

போன்றவைகள் அர்த்தமற்றுப் போய்விட்டன என்று நினைத்தார்.

ரகுராமன் சிறுவனாக இருந்தபோது அவரது கிராமத்தில் முதலில் ஒருத்தர் வீட்டிற்கு டெலிபோன் வந்தது. சிறிது காலத்திற்குப் பிறகு, தெருவுக்கு ஒரு டெலிபோன் என்றாகி, வீட்டிற்கு ஒன்று என்ற மாற்றம் அப்போதைய அதிசயம். தற்போது நம் வீட்டில் உள்ள அனைவருக்கும் தனித்தனியாக கம்பியில்லாத கைப்பேசிகள். பெரும்பாலானோர் ஸ்மார்ட் போன் வைத்திருக்கிறார்கள். அதன் மூலமாக உலகத்தில் உள்ள அனைத்தையும் – காய்கறியிலிருந்து, கார் வரை – வாங்கலாம், விற்கலாம். ப்ளிப் கார்ட், அமேஸான், ஸ்னாப் டீல் போன்றவைகளின் அதிரடியான ஈ காமர்ஸ் வியாபாரப் போட்டிகளினால் இன்னும் ஐந்து வருடங்களில் ரீடெய்ல் கடைகளெல்லாம் மூடி விடுவார்கள் போல… தவிர ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப், வைபர், பேஸ் டைம், ஸ்கைய்ப் போன்ற சஞ்சரிப்புகளினால் உலகம் மிகவும் சுருங்கிவிட்டது என்று நினைத்தார்.

மாப்பிள்ளை விநாயகர், வின்செண்ட், காளிமார்க் போன்ற இந்திய குளிர் பானங்கள் மறைந்து, அயல் நாட்டின் கோக், பெப்ஸி, மிராண்டாக்கள் நம்மை மிரட்டுகின்றன. நம்முடைய பாரம்பரிய உணவுகள் விரும்பப் படாது, நம் உடம்புக்கு ஒவ்வாத பாஸ்ட் உணவுகளை அதிகம் ரசிக்க ஆரம்பித்து விட்டோமே என்று வருந்தினார்…

மனிதர்களின் பழக்கங்களும் மிகவும் மாறிவிட்டன. தன்னுடைய பாட்டி, எல்லா பேரக் குழந்தைகளையும் தரையில் வட்டமாக அமர வைத்து, உள்ளங்கையில் சாதம் வைப்பாள். அதை எனக்கு, உனக்கு என போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் சாப்பிட்ட அதிர்ஷ்டம் தற்போதைய குழந்தைகளுக்கு அமையவில்லை. டைனிங் டேபிள் வரவினால் தற்போதைய குழந்தைகளுக்கு தரையில் உட்காருவதே பெரும் பாடு. வீட்டிலுள்ள பெண்கள் வாஞ்சையுடன் பார்த்துப் பார்த்து பாரிமாறிய காலங்கள் போய், தற்போது டேபிளின் மேல் வைத்திருப்பவற்றை அவசர அவசரமாக நாமே எடுத்துப் போட்டுக் கொண்டு சாப்பிட்டு விடுகிறோம்.

தான் சின்னவனக இருந்தபோது அத்தை, சித்தி, பெரியப்பா, பெரியம்மா போன்ற நெருங்கிய உறவினர்கள் வீட்டிற்கு கோடை விடுமுறையில் சென்று கொட்டமடிப்போம். ஆற்று மணலில் அழகான வீடு கட்டி கடைசியில் இரண்டு பேர் அடிப் பக்கமாக மணலை நோண்டி, கைகளை கோர்த்து மேலே தூக்கும் போது கட்டிய வீடு இடிந்து விழ பொரிதாக சிரித்துக் கொள்வோம்.

தெருக்களில் கிட்டிப்புள், கோலி, பம்பரம் என விதவிதமாக விளையாடுவோம். பதை பதைக்கிற வெய்யிலில் தட்டான்களைப் பிடிப்பதற்கு அதன் பின்னாலேயே ஓடுவோம் அல்லது தெருவில் கிரிக்கெட் விளையாடி எதாவது ஒரு வீட்டின் கண்ணாடியை உடைத்து விட்டு ஓடி ஒளிந்து கொள்வோம். பெண் குழந்தைகள் பாண்டி, கோலாட்டம் என லயிப்பார்கள். வீட்டிற்குள் பல்லாங்குழி, பரமபதம் போன்ற விளையாட்டுக்கள் தனி இன்பம். அதில் தாத்தா, பாட்டிகளும் கலந்து கொண்டது அதிக பரவசம்.

தற்போது கோடை விடுமுறையில், நம் குழந்தைகளை அபாக்கஸ், ஹிந்தி, டிராயிங், கராத்தே போன்ற இன்ன பிற கோச்சிங் க்ளாஸ்களில் சேர்த்து அவர்களை சுதந்திரமாக இருக்க விடாமல் இம்சைப் படுத்துவது மிகப் பெரிய சோகம். டி.விதான் அவர்களுக்குப் பிரதானமான பொழுது போக்குச் சாதனம்.. தற்போதைய வாழ்க்கை முறையில் ஒரு வீட்டிற்கு ஒரு குழந்தை என்றாகி விட்டது. எதிர் காலத்தில் மாமா, அத்தை, பெரியப்பா, சித்தப்பா உறவுகளே இருக்காது என்று நினைத்தார்.

ரகுராமிற்கு தன் மனைவி, குழந்தைகளின் ஞாபகம் வந்தது.

சர்ஜரி முடிந்ததும் வந்து பார்க்கிறேன் என்று நேற்றைய ஸ்கைப் உரையாடலில் சுகன்யா தெளிவாகச் சொல்லி விட்டாள். காயத்ரி காலையிலேயே எழுந்து குளித்துவிட்டு

ரகுராமனுக்கு சமைத்து வைத்தாள். பிறகு, அவரைத் தனிமையில் விட்டு விட்டு தி.நகரில் உள்ள பெருமாள் கோவிலுக்கு, திங்கட்கிழமை ஓப்பன் ஹார்ட் சர்ஜரி நல்ல படியாக நடக்க வேண்டுமே என்று வேண்டிக் கொள்ள தானே காரை ஓட்டிக் கொண்டு சென்றுவிட்டாள். .

காயத்ரியின் சொக்க வைக்கும் அபரிதமான அழகையும், நல்ல பண்பையும், புத்திசாலித்தனத்தையும், சுறுசுறுப்பையும் நினைத்துப் பார்த்த ரகுராமனுக்கு, தான் அவளை விரட்டி விரட்டி காதலித்து திருமணம் செய்து கொண்டது மிகவும் சரியே என்று தோன்ற தனக்குள் சிரித்துக் கொண்டார்.

சட்டென்று அவருக்கு தான் ஸ்ரீராமிடம் பேசினால் என்ன என்று தோன்றியது. தன்னுடைய சர்ஜரியின் போது ஒரு வேளை தனக்கு ஏதாவது ஆகிவிட்டால்? அவனிடம் தனக்கு

ஆஞ்சியோ நடந்ததையும், ஓப்பன் ஹார்ட் சர்ஜரி நடக்கப் போவதையும் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்தார். இன்று சனிக்கிழமை, விடுமுறை தினம். வீட்டில்தான் இருப்பான்.

மனசும், உடம்பும் பர பரக்க தன் ஸ்மார்ட் போனில் அவன் மொபைல் நம்பரைத் தேடி அடித்தார். சுவிட்ச் ஆப் செய்யப் பட்டிருந்தது. தன்னுடைய லாப் டாப்பை திறந்து இரண்டு வருடத்திற்கு முன் அவன் அனுப்பிய ஈ மெயிலில் அவன் முகவரியைத் தேடி எடுத்தார். . .

மணி தற்போது காலை பத்து. உடனே ஒரு டாக்ஸி பிடித்து நங்கநல்லூர் சென்று அவனை நேரில் பார்த்து விட்டு வந்தால் என்ன என்று தோன்ற உடனே தன் ஸ்மார்ட் போனில்

எண்களை ஒத்தி டாக்ஸியை வரவழைத்தார். டாக்ஸி புது மாடல். தான் சிறுவனாக இருந்தபோது கார் என்றாலே அது அம்பாஸிடர் அல்லது பியட் தான். தற்போது எத்தனை விதமான கார்கள் விற்பனைக்கு வந்து விட்டன என்று நினைத்துக் கொண்டார்.

டாக்ஸியில் பயணித்த போது, ஓரு வேளை தனக்கு பேரன் பிறந்திருப்பானோ? தன் குலக் கொழுந்தை இன்று கொஞ்சும் அதிர்ஷ்டம் தனக்கு வாய்க்குமோ? என்று நினைத்து அந்த கற்பனை தந்த சுகத்தில் மகிழ்ந்தார். ஒரு கணம் காயத்ரிக்கு போன் செய்து தான் ஸ்ரீராமை பார்க்கப் போய்க்கொண்டிருப்பதை சொன்னால் அவள் மிகுந்த சந்தோஷப் படுவாளே என்று நினைத்தவர், அடுத்த கணம் கோவிலில் பெருமாள் தரிசனத்தில் இருப்பாள். இப்போது அவளை தொந்திரவு செய்ய வேண்டாம், அவள் வீடு திரும்பியதும் நேரில் சொல்லி சந்தோஷிக்கலாம் என்று முடிவு செய்தார்.

அடுத்த நாற்பது நிமிடங்களில் கார் நங்கநல்லூர் வந்தது. போகிற வழியில் ஹனுமார் கோவில். அன்று சனிக்கிழமையாதலால் கூட்டமாக இருந்தது. காரை விட்டிறங்கி ஹனுமாரை நன்கு தரிசித்தார். பிரசாதம் வாங்கிச் சாப்பிட்டார். தண்ணீர் குடித்தார். ஸ்ரீராமின் வீட்டைக் கண்டுபிடித்து காலிங் பெல்லை அமுக்கினார்.

மாநிறத்தில் குதிரை வால் கொண்டையுடன் உயரமாக ஒரு பெண் சிறிதான இடைவெளியில் கதவைத் திறந்து ரகுராமனைப் பார்த்து, “யெஸ் ப்ளீஸ்” என்றாள்.

“நான் ஸ்ரீராமோட அப்பா… ஸ்ரீராம் இருக்கானா?”

உடனே அவள் முகம் மலர கதவை அகலத் திறந்து, ” அவர் இல்ல, ப்ளீஸ் உள்ள வாங்க… ” என்றாள்.

ரகுராமன் உள்ளே சென்று வரவேற்பறையில் அமர்ந்தார்.

“சார், உங்களுக்குத் தெரியாதா? அவர் இப்ப நான்கு மாசமா ஆஸ்திரேலியாவில் ஒர்க் பண்றார்… எனக்கும் விசா கிடைத்து விட்டது. அடுத்த புதன் கிழமை அவர் சென்னை வருவார். வீ ஆர் வைண்டிங்கப் சென்னை பார் குட் ஆன் சண்டே… ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகி விடுவோம்..”

” உன் பெயர்தானே எமல்டா? குழந்தைகள் ஏதாவது… ?”

“இல்ல சார் உங்களுக்கு ஒரு விஷயமும் தெரியதா? அவர் எமல்டாவை மியூட்சுவல் டிவோர்ஸ் பண்ணிட்டாரு. என் பெயர் ரம்யா.”

ரகுராமன் அதிர்ந்தார்.

“உனக்கு எந்த ஊர் ? உன் பேரண்ட்ஸ் என்ன பண்றாங்க ?”

” சார், என் முழுப் பெயர் ரம்யா ரணதுங்க. நான் இலங்கையில் பிறந்து, படித்து வளர்ந்தவள். அப்பா சிங்களவர்… அம்மா திருச்சி பக்கம், தமிழும் சிங்களமும் எனக்கு அத்துப்படி. ” சிரித்தாள்.

” உங்க ரெண்டு பேருக்கும் எப்ப திருமணம் ஆச்சு ?”

“இல்ல சார்… எங்களுக்கு இன்னமும் திருமணமாகவில்லை. என்னை அவருக்கும், அவரை எனக்கும் பிடித்திருக்கிறது… ஆஸ்த்திரேலியாவில் நன்றாக செட்டில் ஆனவுடன் திருமணம். அதுவரை லிவ்-இன் ரிலேஷன்ஷிப்தான்…” புன்னகைத்தாள்.

ரகுராமன் ஆடிப் போனார்.

“ஒருவேளை அவனுக்கு உன்னை பிடிக்காமலேயோ அல்லது உனக்கு அவனைப் பிடிக்காதுபோய் இந்த திருமணம் நடக்காது போனால்….”

“ஸோ வாட் சார்? நாங்கள் ஒரு நல்ல புரிதலுடன் பிரிந்து விடுவோம்… விசா, பாஸ்போர்ட் எல்லாம் தனித் தனியேதான இருக்கிறது.”

ரகுராமனுக்கு தலையைச் சுற்றியது.

ரம்யா மிக இயல்பாக, “சார் உங்க மொபைல் நம்பர் குடுங்க, நான் என் நம்பரிலிருந்து மிஸ்டு கால் தரேன்… அப்புறம் அவரோட புதிய நம்பரையும் தரேன்… நீங்க எங்க ரெண்டு பேர் நம்பரையும் ஸேவ் பண்ணிக்குங்க” என்றாள்.

ரகுராமன் ஏண்டா இங்கு வந்தோமென்ன்று நினைத்துக் கொண்டார். உடம்பு பட படத்தது.

அவளுக்கு பதில் சொல்லத் தோன்றாது சோர்வுடன் அமர்ந்திருந்தார். ரம்யா அவர் அருகில் வந்து மிக அன்புடன் அவருடைய மொபைலை கேட்டு வாங்கி அதில் தன்னுடைய நம்பரையும், ஸ்ரீராமின் நம்பரையும் கவனமாகச் சேமித்தாள்.

அவரிடம் மொபைலை திருப்பிக் கொடுத்து, “எப்ப வேண்டுமானாலும் எங்களுக்கு போன் பண்ணுங்க சார்…” என்றாள்.

“………………”

“சார் நான் கோப்பி போட்டுத் தரேன்.. அவரு இப்ப ஸ்கைப்பில் வர்ற நேரந்தான், நீங்க அவரிடம் பேசுங்க…” என்றாள்.

பதில் பேசாது, சுரத்தில்லாமல் கிளம்பினார்.

ஏராளமான எதிர் பார்ப்புகளுடன் வந்தவர், தொய்ந்து போய் டாக்ஸியில் அமர்ந்தார். தன்னுடைய வம்சமானது ஜாதி, மதம், மொழி, இனம், தேசங்களைத் தாண்டிப் போவதை எண்ணி நொந்து கொண்டார். தான் ஒரு நல்ல தகப்பனாக இருந்து மகனை ஒழுக்கத்துடனும், கண்டிப்புடனும் வளர்க்கவில்லையோ என்று நினைத்து வேதனைப் பட்டார்.

குழந்தைகளின் கல்வியில் காட்டிய அக்கறையை மற்ற நல்ல விஷயங்களில் காட்டத் தவறி விட்டோமோ என்று வெட்கினார்.

மதியம் இரண்டு மணிக்கு வீட்டையடைந்தவர், பூஜை அறையில் தான் வணங்கும் அகிலாண்டேஸ்வாரி அம்மன் படத்தின் முன்பு நின்று கதறி அழுதார்.

ஒரு மணிக்கு காயத்ரியிடமிருந்து போன் வந்தது. தனக்காக காத்திருக்க வேண்டாமென்றும், சுகர் இருப்பதால் நேரத்துக்கு சாப்பிட்டு விடும் படியும், காலையில் தான் சமைத்து வைத்ததை மைக்ரோ ஓவனில் சுட வைத்து சாப்பிடச் சொல்லிவிட்டு, மெயின் டோரை லாக் செய்து கொள்ளுமாறும், தன்னிடம் இன்னொரு சாவி இருப்பதாகவும்’ சொன்னாள்.

ரகுராமன் சாப்பிடவில்லை. மனது சரியில்லாததால் அவருக்கு சாப்பிடப் பிடிக்கவில்லை. இடது தோள் பட்டையில் மேலிருந்து கீழாக ஷாக் அடிப்பது போல் வலி எடுத்தது… வியர்த்துக் கொட்டியது. வெது வெதுவென வென்னீர் போட்டுக் குடித்தார். படுக்கையறைக்குச் சென்று மெதுவாகப் படுத்துக் கொண்டார்.

தன் மகனைப் பற்றி நினைத்து வேதனையில் துடித்தார். அதெப்படி ஒருத்திய காதலித்து மணந்து, இரண்டு வருடங்களுக்குள்ளாக அவளைப் பிரிந்து மறுபடியும் இன்னொருத்தியுடன்.. ச்சே! அது என்னது? லிவ் இன் ரிலேஷன்ஷிப்பா… அது என்ன கன்றாவியோ, நல்ல வேளையாக காயத்ரிக்கு தான் அவனைத் தேடிப் போனது தெரியாது.. உண்மை தெரிந்தால் எவ்வளவு வருத்தப் படுவாள்? அவளிடம் எதுவும் சொல்லாதது ரொம்ப நல்லதாகப் போயிற்று’ என சமாதானமடைந்தார்.

மிகுந்த மன உளைச்சலுடன் தூங்கிப் போனார்.

மதியம் இரண்டு மணிக்கு மெயின் டோரைத் திறந்துகொண்டு வீட்டிற்குள் வந்த காயத்ரி, ரகுராமனை எழுப்பினாள்.

அவர் அசையவில்லை. தொட்டுப் பார்த்தாள். உடம்பு ஜில்லிட்டிருந்தது.

ஓடிச் சென்று பக்கத்து தெருவிலிருந்த டாக்டரை அழைத்து வந்தாள். அவர் பார்த்துவிட்டு “தூக்கத்திலேயே ஹார்ட் அட்டாக்” என்றார்.

காயத்ரி பதட்டத்துடன் மகன் ஸ்ரீராமின் பழைய மொபைல் நம்பருக்கு டயல் செய்தாள். சுவிட்ச்டு ஆப் என்றது.

அடுத்து அவசரமாக மகள் சுகன்யாவுக்கு போன் செய்தாள்.

“அம்மா, நீ பதட்டப் படாத, முதல்ல ஸ்ரீராமுக்கு எப்படியாவது மெசேஜ் சொல்லிடு… சித்தப்பா, பெரியப்பா எல்லாருக்கும் போன் பண்ணிச் சொல்லிடு.. நீ இன்னிக்கு ராத்திரி தனியா இருக்காத, துணைக்கு அடுத்தாத்து மங்களம் மாமிய கூட்டி வச்சிக்கோ.. முக்கியமா உடனே ஸ்டான்லி மெடிக்கல் காலேஜ்க்கு போன் பண்ணி அப்பா இஸ் நோ மோர்ன்னு சொல்லிட்டு, அப்பலோ ஹாஸ்பிடலுக்கும் மறக்காம சொல்லிடு. அப்பா நாளைக்கு அட்மிட்டாவார்னு அவா காத்திண்டிருப்பா. நான் ஏற்கனவே ஆப்பரேஷனுக்கு அப்புறம் அப்பாவை பார்க்கணும்னு டிக்கெட் புக் பண்ணதுனால அடுத்த வாரம் அங்க வந்துடுவேன்…எனக்கு அப்பா முகத்த உடனே பார்க்கணும், நான் பேஸ் டைமல இப்ப வர்றேன், எனக்கு அப்பாவக் காமி.” என்றாள்.

காயத்ரி மிகுந்த வேதனையுடன், ரகுராமனை தன் மகளுக்கு பேஸ் டைமில் காண்பித்தாள்.

அன்று இரவு முழுவதும் பக்கத்து வீட்டு மங்களம் மாமி, காயத்ரியுடன் இருந்தாள்.

அடுத்த நாள்.

ஞாயிற்றுக் கிழமை காலை.

ரகுராமனின் உடல் கூடத்தில் தரையில் கிடத்தப் பட்டிருந்தது. மூக்கில் பஞ்சு வைத்து, கால் கட்டை விரல்கள் சேர்த்துக் கட்டப் பட்டிருந்தன. உறவினர்கள் வருத்ததுடன் கூடியிருந்தனர். காயத்ரி ஒரு அமைதியான சோகத்துடன் ரகுராமனின் முகத்தையே ஏக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். அடிக்கடி அவரின் தலைமயிரைக் கோதினாள்.

ரகுராமனின் இறப்பைக் கேள்விப்பட்டு அவர் உதவியினால் கல்வி பயிலுபவர்கள், பயின்றவர்கள் அவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் என ஒரு பெரிய கூட்டமே திரண்டு வந்து அவருக்கு இறுதி மரியாதை செலுத்தியது.

ரகுராமனின் மூத்த சகோதரர் ராஜாராமன், “இப்பவும் நிறைய நேரமிருக்கு, வாத்தியாருக்குச் சொன்னா உடனே வந்துருவா. சாஸ்திர முறைப்படி என் தம்பிக்கு ஈமக் கிரியைகள் செஞ்சுரலாம்” என்று குரலை உயர்த்தினார்.

காயத்ரி குரலில் கண்டிப்புடன் மிகவும் தெளிவாக, “வேண்டவே வேண்டாம்.. முப்பத்தி மூன்று வருஷம் அவரோட நான் குடும்பம் நடத்தியிருக்கேன். அவரோட ஆசைப்படிதான்

எல்லாம் இங்க நடக்கும்… நடக்கணும். உயிரோடு இருந்தப்ப எத்தனையோ பேர் கல்வி கற்பதற்காக ஏகப்பட்ட உதவிகள் செய்தார். இப்ப இறந்த பிறகும் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கல்விப் பரிசோதனைகளுக்காக உதவும் வகையில் தன் உடலையே பத்து வருஷத்துக்கு முன்னாலயே எழுத்து மூலமா பதிவு செஞ்சு வச்சிட்டாரு. அதுல ஸ்ரீராமும், சுகன்யாவும், நானும் முழு சம்மதத்தோட கையெழுத்து போட்டிருக்கோம். ஸ்டான்லி மெடிக்கல் காலேஜுக்கு நேத்து சாயங்காலமே நான் போன் பண்ணிச் சொல்லிட்டேன்.

மத்தியானம் ஒரு மணிக்குள்ள ஆம்புலன்ஸ் வண்டி வந்துரும்” என்றாள்.

ராஜாராமன் அடங்கிப்போனார்.

ஒரு மணிக்கு மெடிக்கல் காலேஜிலிருந்து ஆம்புலன்ஸ் வந்து நின்றது. உடனே அங்கு ஒரு அமானுஷ்யமான அமைதி நிலவியது. ஆம்புலன்ஸிலிருந்து இறங்கிய மூன்று பேர் ஒரு பொரிய பள பளப்பான அலுமினியப் பெட்டியை வீட்டிற்குள் கொண்டு வந்து அதைத் திறந்தனர். உள்ளேயிருந்த நீளமான பாலிதீன் கவரைப் பிரித்தனர். கவாரினுள்ளே வெள்ளை நிற கெமிக்கல் பூசப் பட்டிருந்தது. ரகுராமனின் உடலை அதற்குள் கவனமாகத் திணித்து ஜிப்பை சர்ரென்று இழுத்து மூடினர். பத்திரமாக அலுமினியப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டினர்.

அவருடைய சடலத்தைப் பெற்றுக் கொண்டதற்கான அத்தாட்சியாக சில பேப்பர்களில் ஒப்பமிட்டு, சீல் வைத்து காயத்ரியிடம் கொடுத்தனர்.

ஆம்புலன்ஸில் அலுமினியப் பெட்டியை ஏற்றிக் கொண்டு கதவை அடித்துச் சாத்தினர்.

வாழ்க்கையில் எண்ணற்றவர்களுக்கு கல்வி கற்க உதவி செய்த ரகுராமன், தற்போது தன் உடலையே கல்விக்காக அர்ப்பணித்து தன் இறுதிப் பயணத்தை கம்பீரமாகத் தொடங்கினார்.

காயத்ரி வாசலுக்கு வந்து, ஆம்புலன்ஸ் தெரு முனை திரும்பும் வரை சோகமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பின்பு வீட்டினுள் வந்து துக்கம் தாங்காமல் வெடித்து அழுதாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *