கல்லுக்குள் ஈரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 19, 2016
பார்வையிட்டோர்: 9,392 
 

கல் என்றல்ல கருங்கல் மனிதன் என்று ஆரணியின் ஆழ் மனதில் உண்மை தெரிந்த பெரிய மனிதர்கள் பலராலும் விதையாகத் தூவப்பட்டு அது விருட்சமாக நிலை கொண்டு வளர்ந்த நிலையிலேயே யாழ்ப்பாண மண்ணில் புகை விட்டு எரிந்த சண்டை நெருப்பினால் இடம் பெயர்ந்து போகும் மக்கள் வெள்ளத்தில் தானும் ஒருத்தியாய் அள்ளுண்டு அவள் கொழும்பு மண்ணில் கரை ஒதுங்கி வாழத் தொடங்கி அந்தக் காலக் கணக்கு கிட்டத்தட்ட ஒரு யுகம் போலாகிறது

அவள் வாழ்வு ஒரு பெரிய வேள்விக் களம் மாதிரி வாழ்க்கையை வேதமாகவே பாடம் கற்றுக் கொள்ளச் சூடு பட்ட எத்தனையோ மனதில் புரையோடிக் கிடக்கும் அனுபவக் காயங்கள் இவை சூடு தணியாமல் ரணகளமாய்ப் பற்றியெரிந்தாலும் உயிர் வியாபகமாய் பரந்த அளவிலேயே வாழ்க்கை ஞானம் கை கூடிய ஒரு ஞானியைப் போன்ற எதிலும் தளும்பாத இருப்பு நிலை அவளுடையது

அவள் குடியிருக்கத் தொடங்கியது முதலில் வாடகை வீட்டில் தான் அதில் இருந்து கஷ்டப்படுகிற நேரங்களில் தான் ஊரிலே இருக்கும் சொந்த வீட்டு ஞாபகம் உயிர் தரிசனக் கோலமாய் நெஞ்சைக் குளிர வைக்கும் பக்கத்திலே சிறுவயது ஞாபகச் சுவடுகளாய் களை கொண்டு மிளிரும் அவள் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து முடிந்து போன ஒரு சிரஞ்சீவிக் கனவு நிலைக் கோபுரமாய் அம்மாவின் வீடு. அப்பா எவ்வளவு கனவுகளோடு நம்பிக்கை வைத்து அந்த வீட்டைக் கட்டி எழுப்பியிருப்பார் இப்போது அது வாழ்வு மனிதர்களின் கறைபட்டு தமிழுக்கு நேர்ந்த ஒரு தீராத சாபமாய் அவளைக் கண்ணீர் விட்டு அழ வைக்கும்

அங்கு யார் யாரோவெல்லாம் வந்து போனார்கள் அகதிகளுக்கான ஒரு சத்திரம் போலானது அது தட்டிக் கேட்பதற்கு ஆளில்லாமல் போன நாதியற்ற நிலை அதற்கு மட்டுமல்ல தமிழ் சமூகமே அப்படியான பின் அதற்காக நெஞ்சில் இரத்தக் கறை படிந்த காயத்தோடு தான் இப்போது அவள் மனிதம் தழைத்தால் தான் இந்தச் சாபம் போகுமென்று அவள் நம்பினாள் எல்லோர் மனதிலும் போர் வெறி தீர்ந்து சுபீட்சம் நிலைக்க வேண்டுமானால் கண் திறக்கும் ஆன்மீக ஞானமே சிறந்த வழி என்று அவள் மிகவும் நம்பிக்கையோடு நினைவு கூர்ந்தாள்

இந்திய ராணுவம் யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டிருந்த போது அவளால் மறக்க முடியாமல் போன நெருடலான ஓர் அனுபவம் அம்மா வீட்டில் அகதிகள் வந்து குடியேறி இருந்த போது நடந்த ஒரு சம்பவம் அம்மா வீடு ட பட அமைந்த விஸ்தாரமான பெரிய வீடு எல்லாமாக ஏழு அறைகள் அதில் நாலைந்து அகதிக் குடும்பங்கள் அவர்களது சொந்த இடம் காங்கேசந்துறை அவர்களில் அனேகமானோர் கடற் தொழில் செய்தவர்கள் பூர்வீக இருப்பு நிலம் கை நழுவிப் போனதால் இப்போது நிவாரணப் பொருட்களை நம்பியே அவர்களின் வாழ்க்கை கழிகிறது அவர்கள் புழங்க முன் வாரந்தாவோடு சேர்ந்த ஓர் அறையும் ஸ்டோர் ரூம் ஒன்றும் கொடுத்தது போகச் சமையலறையாக மாட்டுக்கொட்டிலே பயன்படுகிறது அப்பா மாடு வளர்த்த இடத்தில் கவுச்சி நெடி மணக்க மீன் சமையல் தான் என்பதை நினைக்க ஆரணிக்குச் சிறிது மன வருத்தம் தான் .அது சீமென்ந் தரை கொண்ட சிறிய வீடு போல. மேலே ஓலைக் கூரையானதால் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் அதில் அப்பா மாட்டுத் தொழுவம் வைத்துப் பால் கறந்தது ஒரு சிரஞ்சீவி ஞாபகச் சிமிழ் அது கண் திறக்கும்போதெல்லாம் புறப்பிரக்ஞையாய் வருகிற தற்போதைய கால நெருப்புக் கண்ணை எரிப்பதில்லை அவளுக்கு

மாடு வளர்த்து வாளி நிறைய நுரை பொங்க அப்பா பால் கறக்கிறது ஒரு தனி அழகு மாட்டுத் தொழுவமென்றால் எப்பவும் மாடு தான் கண்ணுக்குள் நிற்கும் அம்மா சாகிற போதே அந்த மாட்டுக் களையும் இல்லாமல் போய் விட்டது மாடு செத்தால் வீட்டின் மங்களமே போன மாதிரித் தான் .பிறகு அந்த வீட்டில் நடந்த எதுவும் மனதில் ஒட்டவில்லை அகதிகளுக்காகக் கதவு திறந்த காலக் கொடுமையில் அவளும் ஒரு துரும்பு போலாகி கொழும்புக்கு வந்து எல்லாம் விடுபட்டுப் போய் கரை ஒதுங்கிப் போன தனிமையில் நிழல் தெறிக்க வாழ்ந்து கொண்டிருப்பது போல ஒரு பிரமை இப்படி வாழ்க்கை உயிர்த்துவம் இழந்தது எதனால் என்று புரியவில்லை விழிப்பு நிலை கெட்டுப் புறம்போக்காக வாழ்க்கையைத் தேடும் பட்சத்தில் இது தான் நடக்கும்

எல்லாம் இருந்தும் கையறு நிலைமை தான். காசு பணம் தான் வாழ்க்கை என்ற வரட்டுப் போக்கில் உயிர் திரிந்து காட்டு வெளீயில் அலைகிற மாதிரித் தமிழர் வாழ்வு சூனியமாகிப் போனதைக் கண்டு கொள்ளப் புதிதாய் ஓர் அறிவுக் கண் திறக்க வேண்டும்

மகன் துருவனுடைய வெளிநாட்டுப் பணத்தை நம்பித் தான் ஆரணி தன் குடும்பத்தோடு கொழும்பில் வந்து குடியேறினாள். கணவன் ஐங்கரன் ஒரு சாதாரண கிளார்க்காக இருந்து இறந்து போனதால் வருகிற பென்ஷன் வீட்டுச் செலவுக்கே போதாத நிலைமையில், வாடகைக்கு வீடு எடுத்துக் கொழும்பில் வந்து குடியிருக்க நினைத்தால் அது வெறும் பகற் கனவு தான். வெளிநாடு போன மகனின் அனுமதியோடு தான் இப்போது அவளின் இந்தக் கொழும்பு வாழ்க்கை, அதுவும் ஆரம்பத்தில் வாடகை வீடு எடுத்து நிறையக் கஷ்டங்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்தது பின்னர் சொந்த வீடு வாங்கி இடம் மாறியது ஒரு தனிக் கதை கொழும்புக்கு வெளியே தெஹிவளையில் இரண்டடுக்கு மாடி வீடு வாங்கிய போது பலரும் சொன்னார்கள் ஒரு பீதிக் கதை முற்றிலும் சிங்களப் பிரதேசம் என்றபடியால் கலகம் மூண்டால் என்ன செய்வீர்கள் என்று அவர்கள் ஆளுக்காள் தர்க்கம் செய்து கிலி மூட்டிய போது அவள் கொஞ்சமும் பயப்படாமல் ஒரு வேத வாக்காக இப்படிக் கூறினாள்

“மரணமென்பது விதியின் கூற்று எப்படி எழுதப்பட்டதோ அது நிகழ்ந்து தான் தீரும் சிங்களவன் கையால் தான் சாக வேணுமென்று விதியிருந்தால் எல்லா வழிகளிலும் அது வந்து தான் தீரும் “ என்றாள்

அவள் அதைச் சொன்ன நேரம் மறக்க முடியாத ஒரு நெருடல் சம்பவம் நினைவுக்கு வந்தது. அப்போது அவள் அப்பா சீதனமாகக் கட்டித் தந்த வீட்டில் வாழ்ந்து கொண்டிருந்த சமயம். பக்கத்து வீடான அம்மா வீட்டில் பழைய லட்சுமிக் களை போய் கலியின் கொடுமையால் யாரோ அகதிகள் வந்து குடியேறி அது ஒரு சத்திரமாகத் தடம் புரண்டு போன நிலைமையில் பங்குக் கிணறாக இருந்த படியால் அவர்களை எதிர் கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் அடிக்கடி அவளுக்கு நேர்வதுண்டு அதுவும் அங்கே நாலைந்து குடும்பங்கள் இருப்பதால் ஓயாத சப்த அலைகள் தான். அதிலும் அவர்கள் மீனவ குடும்பங்கள் ஓயாத கடல் அலைகளுக்கே முகம் கொடுத்து வாழ்ந்து பழகிய கலகலவென்று பேசும் மனச் சுபாவம் அவர்களுக்கு

அவள் அப்படியல்ல பேசுவது குறைவு எளிதில் உருகும் மென் மனப் போக்கு அவளுடையது, ஒரு நாள் கிணற்றடிக்குக் குளிக்க வரும் போது நடந்த கதை. அவர்களில் கொஞ்சம் வாயாடியான ஒரு குடும்பப் பெண் தனது ஆறு வயதுக் குழந்தைக்குக் குளிக்க வார்ப்பதற்காகக் கிணற்றடிக்கு வந்த போது குழந்தை குளிக்க மறுத்து அடம் பிடித்த சமயம் சொன்னாள் ஒரு வன்முறைக் கதை எங்கள் சகோதர இனத்தை பற்றியது அவர்கள் கண்டால் பெரும் ஆபத்தாய் விடும் வெட்டிப் போடுவினம் ஓடி வந்து குளி என்றாள்

“ சிவ சிவ என்று காதுகளைப் பொத்திக் கொண்டு மெளனமாக இருந்தாள் ஆரணி. அதுவும் ஒரு குழந்தைக்குச் சொல்கிற கதையா? இது நாளைக்கு இது வளர்கிற போது அவள் தூவிய இந்த விஷ விதை விருட்சமாகிற போது இந்தக் குழந்தை அன்பையா நினைக்கும்? வன்முறை தான் பாடமாகும். இப்படி தான் வன்முறை வாழ்க்கையின் வளர்ச்சிப் பாதை இது மாற வேண்டுமானால் அன்பு வேதம் தான் மனதில் தழைக்க வேண்டும் பேச்சு வளர்த்துச் சாதிக்கிற விஷயமல்ல இது வாழ்ந்து காட்டித் தான் இதை பெற வேண்டுமென அந்த எண்ணம் பிராத்தனையாக அவள் மனதில் ஓடியது எதிர்மறையான அந்தப் பெண்ணின் மன இருட்டுக்கு வெளிச்சமாகாமலே போகலாம். காலம் தான் இந்த உண்மையைச் சொல்ல வேண்டும்

காலப் போக்கில் பழைய சுவடுகள் மறந்து போய் இப்போது மிக அமைதியான புதிய இருப்பில் அவள் வாழ்க்கை நிலை கொண்டிருந்த சமயம் தான் மனிதாபிமானம் தழைத்த தலை நிமிர்ந்து நின்ற ஓர் உயிர் ஒளி மனிதனை அவள் மனம் சிலிர்த்துத் தரிசிக்க நேர்ந்தது. அவன் சிங்களவனுமல்ல தமிழனுமல்ல இன வேறுபாடுகள் கடந்த முழுமைத் தன்மை கொண்ட ஒரு மனிதனாய் அவனை அவள் காண நேர்ந்தது ஒரு வெற்றுச் சங்கதியல்ல எழுதி வைக்க வேண்டிய காவியம்

அன்று காலை எட்டு மணிக்குக் காய் கறி சாமன்கள் வாங்குவதற்காக அவள் நெடுமால சந்திக்கு வந்திருந்தாள். முச்சந்தி கூடுகிற அந்தப் பாதையில் வாகனங்கள் தாறுமாறாக வரும். தெருவைக்கடப்பதே பெரிய சவால். மஞ்சள் கோட்டில் வெகு நேரம் காத்திருக்க வேண்டும், சிவப்புப் பச்சைக் குறியீட்டு விளக்கும் இல்லை மூன்று தெருக்கள் கூடுகிற சந்தியல்லவா கிழக்கு நோக்கி ஒன்று மஹரகம போகிறது அதில் கிளைபிரிந்து இன்னொரு தெருவில் இறங்கினால் விஷ்ணு கோவிலுக்குப் போகலாம் மற்றது தெஹிவளை சந்தியிலிருந்து கிழக்கு நோக்கிய தெரு அவள் சாமாகள் வாங்கி முடிந்ததும் கையில் பாரத்தோடு சந்தி கடப்பதற்காக நின்று கொண்டிருந்தள்

அடுக்கடுக்காக வாகன வரிசை மூன்று திசையிலுமிருந்து அனல் பறக்க வருகிறது அப்போது கிழக்கேயிருந்து உதித்தது அருளொளி பிரகாசமாக ஒரு சூரியன் கண்கள் கூச அந்த அன்பு தரிசன மழையில் அவள் இது அபூர்வமான ஒரு மெய் மறந்த காட்சி தரிசனம் அவளுக்கு

வன்முறையில் விளைந்த கல் மனிதன் அல்ல அவள் அங்கே கண்டது அவர்கள் சொன்னாலும் அதை உள் வாங்கிய மனப் பிரதிபலிப்பின்றி சுத்த வெளியில் ஆன்மாவையே கண்டு தேறிய அவள் கண்களுக்கு முன்னால் ஒரே ஜோதிப் பிரவாகமாய் அந்த இளைஞனை அவள் காண நேர்ந்தது மஹரகம தெருவிலிருந்து மோட்டார் சையிக்கிளில் அசுர வாகத்தில் வந்தவன் அவள் ஓரு தமிழச்சி என்பதையே மறந்து போய் மனதில் பெருக்கெடுத்தோடும் கருணை நினைப்போடு தான் நின்றதுடன் நில்லாமல் அதே திசையில் விஷ்ணு கோவில் வீதியிலிருந்து வரும் வண்டிகளை இடை மறிக்க அவன் கை தூக்கி நின்ற காட்சி தரிசனம் கண்டு அவள் வெகுவாகப் புல்லரித்துப் போனாள்

அவன் நினைத்திருந்தால் கதை வேறாகத் திசை திரும்பியிருக்கும் அவளைத் தெரு கடக்க விட்டே கொன்று போட்டிருக்கலாம் ஏன் அந்தக் கொலை வெறி அவனுக்கு வரவில்லை மனிதம் தழைக்க நிற்கிற மானுட தெய்வ நிலை கண்ட பின் கொலை வெறி என்ன ஆளைத் தின்கின்ற கொடூர பாவங்களும் ஒழிந்து தான் போகும்

அங்கே அவள் கால் தரித்து நின்ற அந்த மண்ணில் வேறுபாடுகள் ஒழிந்து போன சகஜபாவம் பிறர் சொல்லியல்ல அந்த வேதம் தானாகவே வருமென்பதற்கு அன்பு மாறாத ஒரு சாட்சி புருஷனாய் அந்தச் சிங்கள இளைஞன் உயிர் சத்தியம் நிலை கொண்டு மிளிர அப்படி அவன் எடுத்து நின்ற விசுவரூபம் கண்களை நிறைக்க அவனை ஆசீர்வதித்து வணக்கம் சொல்லி மேலும் மனிதம் தழைக்க மனம் உணர்ச்சி கொண்டு பிராத்தனை செய்தவாறு முகத்தில் என்றுமில்லாத சந்தோஷக் களையோடு அவள் வீடு திரும்பினாள்

அவள் பத்திரமாக வீடு திரும்பி வரவேண்டுமென்ற கவலையுடன் எப்போது அவள் வெளியே போனாலும் அவளின் ஒரே மகள் திவ்யா அவளை எதிர்பார்த்து வாசலிலேயே மணிக்கணக்காய்த் தவம் கிடப்பது வழக்கம் காரணம் சிறு வயதில் சிங்கள இனம் பற்றி அவள் மனதில் பிறர் சொல்லியே வேரூன்றிவிட்ட விஷ விதை ஆகவே அவள் அப்படித் தான் நினைப்பாள் கத்தி பொல்லுடன் கண்ணில் குருதி கொட்ட வைக்கும் குரூரமான நிழல் வடிவங்கள் காணும் நிலை தான் அவளுக்கு

அம்மாவை உயிருடன் கண்ட மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்தோட அவள் பார்க்கிற போது ஆரணி ஒரு மாசுபட்ட யுகத்தையே கடந்து வந்த பெருமித்தத்தோடு முகத்தில் பாலாபிஷேகமே கண்ட மாதிரி அப்படியொரு களை அவள் முகத்தில் கண்டவுடன் திவ்யா கொஞ்சமும் நம்ப முடியாமல் குரல் தழுதழுத்துக் கேட்டாள்

“என்னம்மா பாலாபிஷேகம் கண்ட மாதிரி புதிசாய் முகத்திலே களை ஏறி வாறியள்? அப்படியென்ன புதினத்தைக் கண்டனீங்கள்?

“திவ்யா நீ நினைச்ச மாதிரி இது வெறும் புதினமில்லை எழுதி வைக்க வேண்டிய காவியம் ஒன்று இப்ப நான் தரிசித்து விட்டு வாறன் ஒரு சிங்களப் பெடியன் மனிதம் என்றால் என்ன என்று சொல்லிக் காட்டிய இந்த அனுபவத்தை வேதமாக நான் உணர்ந்ததை நீ நம்ப வேணும் அப்ப தான் சகதி குளிக்கிற சரித்திரங்களுக்கு ஒரு புது விடிவு பிறக்கும் அரசியல்வாதிகள் சொல்லித் தாற பாடமும் மனதில் நிற்காது “

“நீங்கள் என்னம்மா சொல்லுறியள்? என்னைக் குழப்பிற மாதிரி ஒரு புதுக் கதை இதை நான் நம்ப வேணுமே?

“போதும் நிறுத்து ஊர் சொல்வதே வேதம் என்று நம்பத் தொடங்கினால் உலகம் இருக்காது சொந்த உறவுக்குள்ளேயே மனம் வேறுபட்ட திரிபு நிலை இருக்கிற போது இனங்களுக்குள்ளை பரஸ்பர அன்பு நிலை கைகூடி வாறது கஷ்டம் என்ற நிலையையும் தாண்டி இன்று நடந்த இந்த விசேஷமான மாற்றத்தைக் கமரா வைச்சுப் படம் பிடிச்சுத் தான் உனக்கு நான் காட்ட வேணும் அவ்வளவு தூரம் நான் கண்ட ஒளி தரிசனம் ஒரு போதும் பொய்யாகாது என்ரை வாக்குப் புனிதத்திலை கூடவா உனக்கு நம்பிக்கை இல்லை உன்ரை அம்மா மீது உனக்கு முழு நம்பிக்கை இருந்தால் இதை நீ நம்பத் தான் வேணும் அந்தச் சிங்கள இளைஞனை நோக்கி நீ ஒன்றும் மலர் தூவ வேண்டாம் உன்ரை அறிவுக்கு எட்டிய வேதமாக இதை நீ ஏற்றுக் கொண்டாலே பெரிய வெற்றியாக நான் கொண்டாடுவேன் “

அதை அவள் சொன்ன பிறகு பேச்சு நின்ற மெளனத்தில் திவ்யா அப்படியே கரைந்து போனாள் தோற்றுவிட்ட மனிதம் உயிர் தழைப்பதற்கான வெற்றியின் அடுத்த படிக்கட்டு போல் அவளுடைய அந்த மெளன நிலைக் கோபுர உச்சியின் விளிம்பையே கண்டு தேறிய மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டோட ஆரணியின் காலடி மண் கூடக் கறை ஒழிந்து நிற்பது போல் ஒரு காட்சி தரிசனம் அவர்கள் கண்களுக்கு மட்டுமல்ல திரை விலகி உலகமே அது போல இன்னும் பலமனித நேயம் கண் திறக்கிற காட்சி தரிசனம் கண்டு மனம் திருந்தும் திரு நாள் நிச்சயம் வரத்தான் போகிறது கடவுளருளால் அது வந்து வழிபாடு செய்கிற உலகமாய் எல்லாம் மாறும் போது ஆரணியின் கண் குளிர்ந்து காட்சி தரிசனம் கண்ட இருப்பில் மட்டுமல்ல சகல மனங்களுக்குமே அது ஓரு சுபீட்சமான வழிபாடு இருப்பு நிலை தான் வழிபாடே வாழ்க்கையானால் பிறகென்ன போகுமிடமெல்லாம் உயிர் நனைய நனைய ஓரே அன்பு மழை தான் கலியின் சாபம் தீர்ந்து அதற்கு ஒரு காலம் கண் திறக்காமலா போய் விடும் நிச்சயம் திறக்கும் வழிபாடே வாழ்க்கையாகும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *