கல்லறைத் தோட்டம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 6, 2020
பார்வையிட்டோர்: 5,222 
 

பாளையங்கோட்டை…

விடியும் போதே வானம் இருட்டிக்கொண்டு மழை பிசு பிசுவென தூறிக்கொண்டிருந்தது.

லூர்துசாமி காலை ஏழரை மணிக்கு எழுந்து கல்லறைத் தோட்டத்தின் இரும்புக் கதவை அகலத் திறந்து வைத்தான். அவன்தான் அந்தக் கல்லறைகளுக்கு கடந்த ஐந்து வருடங்களாகப் பொறுப்பு.

பக்கத்துக் கடையில் ஒரு டீ குடித்துவிட்டு ஒரு பீடியைப் பற்றவைத்தபோது, காலை எட்டுமணி வாக்கில் அவன் மொபைல் சிணுங்கியது. அதில் மார்த்தாண்டத்தில் இருக்கும் அவனுடைய அண்ணனின் மகன் பெயர் ஒளிர்ந்தது. லூர்துசாமி உடனே எடுத்துப் பேசினான்.

“சித்தப்பா, இன்னிக்கி காலைல அப்பா ஹார்ட் அட்டாக்ல போயிட்டாரு. உடனே கிளம்பி வாங்க சித்தப்பா… நாளைக்கி மதியம் ஜெபம்…” அழுதான்.

“அழாதலே…நா உடனே கெளம்பி வரேம்ல… நீ அம்மாவைப் பாத்துக்க.”

லூர்துசாமி உடனே தன் மனைவி ஜெஸிந்தாவை மொபைலில் தொடர்புகொண்டு விஷயத்தைச் சொல்லி அவளை புறப்பட்டு ரெடியாகச் சொன்னான்.

அப்போது ஒரு இன்னோவா கார் கல்லறைத் தோட்டத்தின் முன்பு வந்து நின்றது. அதிலிருந்து ஒரு முதியவர் இறங்கினார். லூர்துசாமியை நோக்கி வந்தார்.

“ஐயா, என்னோட நான்கு வயதுப் பேத்தி நேற்று இரவு இறந்துவிட்டாள். அவளைப் புதைக்க வேண்டும். சரியாகப் பத்து மணிக்கு பாதிரியார் இங்கு வந்துவிடுவார்… மரண ஜெபம் முடிந்ததும் குழந்தையை குழியில் இறக்கிவிட வேண்டியதுதான். சிறு குழந்தைக்கான அளவில் குழியைத் தோண்டி தயார் செய்து வைத்து விடுங்கள்…”

“சரிங்கையா…”

“அப்புறம் பத்து நாட்கள் கழித்து குழியின் மேல் கிரானைட்டில் கட்டடம் கட்டி சிலுவை எழுப்ப வேண்டும்… தோற்றம், மறைவு எழுத வேண்டும்..”

“செய்யலாங்கையா… அதுக்கு நம்மகிட்ட ஆளுங்க இருக்கு.”

“சரி, இத முதல்ல அட்வான்ஸா வெச்சுக்க…”

லூர்துசாமி கையில் பத்து ஐநூறு ரூபாய் நோட்டுகளைத் திணித்தார்.

“ஒன்பதரைக்கே எல்லாத்தையும் ரெடி பண்ணி வச்சிருங்க.”

“கண்டிப்பா ரெடியாகிடும் ஐயா.”

பெரியவர் இன்னோவாவில் ஏறிச்சென்று விட்டார்.

பெரிய இடம் போல… அண்ணனின் மரண ஜெபம் நாளைக்கு மதியம்தான். மதியத்துக்கு மேல் கிளம்பினாலும் இரண்டுமணி நேரத்தில் மார்த்தாண்டம் போய்விடலாம்… லூர்துசாமி பரபரவென செயல்படத் துவங்கினான்.

இரண்டுபேரைத் துணைக்கு கூப்பிட்டான். கடந்த சில நாட்களாக மழை வேறு பெய்து கொண்டிருந்தமையால் பூமி இளகி இருந்தது. தோண்டுவது எளிதாக இருந்தது. ஒன்பது மணிக்கே சிறிய குழியை ஆழமாகத் தோண்டித் தயார் செய்துவிட்டான்.

சமாதானபுரத்தில் இருக்கும் தன் தூரத்து உறவினன் சில்வெஸ்டரை வரவழைத்தான். அண்ணனின் துட்டிக்கு மார்த்தாண்டம் செல்வதாகவும், அடுத்த இரண்டு நாட்களுக்கு கல்லறைத் தோட்டத்தை பார்த்துக் கொள்ளும்படியும் சொன்னான்.

பத்து மணி வாக்கில், ஒரு நீளமான மூங்கிலில் வெள்ளை நிறத் தூளி கட்டி, அதில் குழந்தையைத் தூக்கி வந்தார்கள். சந்தனத்தில் செய்யப்பட்ட சவப்பெட்டி தனியாக வந்தது. ஏகப்பட்ட கார்கள் வந்து நின்றன. அவ்வளவு பேர் கூடி நின்றாலும் அந்த இடம் சோகமாக அமைதியாக இருந்தது. இதைத்தான் மயான அமைதி என்பார்கள் போலும்… பலர் தங்களுடன் எடுத்துவந்திருந்த ரோஜா மலர்களின் வாசனையும் ரசிக்கவில்லை.

லூர்துசாமி வருத்தத்துடன் தூளியை விலக்கி உள்ளே எட்டிப் பார்த்தான். வெள்ளைநிற உடையில் நிர்மலமான முகத்தில் அந்தக் குழந்தை ஒரு தூங்கும் தேவதையைப் போல் இருந்தது. லூர்துசாமிக்கு துக்கம் பீறிட்டது.

சந்தன சவப்பெட்டிக்குள் ரோஜா மலர் இதழ்கள் தூவப்பட்டன. அதன்மீது ஒரு வெள்ளைநிற பட்டுத் துணி விரிக்கப்பட்டது. லூர்துசாமி தூளியில் இருந்து குழந்தையைக் மிகக் கவனமாகக் கையில் தூக்கி எடுத்து சவப்பெட்டிக்குள் மெதுவாக இறக்கி வைத்தான்.

வெள்ளை அங்கி அணிந்திருந்த பாதிரியார், உறவினர்கள் படை சூழ ஜெபம் செய்தார். குழந்தையின் தாய் வெடித்து அழுதாள். சோகத்தில் புலம்பினாள்.

“என் ராசாத்தி… நற்கருணை வீரன் புத்தகத்தைப் பார்த்து அழகா பாட்டுப் பாடுவியே! அத இப்பப் பாடும்மா…உன் குரல நான் கடைசியா ஒருதடவை கேட்கணும்..”

“………………”

“நீ பாடமாட்டே, உனக்காக நான் பாடுதேன்..” குரல் நடுங்க பாடினாள்.

இயேசுவின் திருவடி நாடு;

பாசத்தை வேண்டி மன்றாடு;

நேசத்தின் கரங்களை நாடு;

தினம் தினம் அவர் புகழ் பாடு. (இயேசுவின்…)

தட்டின கதவே திறக்கும்;

கேட்டதன் பொருளே கிடைக்கும்;

திட்டமே இதுதான் வேதம்;

திடமாய்க் கொள்வாய் மனமே; திடமாய்க் கொள்வாய் மனமே. (இயேசுவின்…)

துக்கம் தொண்டையை அடைக்க கீழே சரிந்து விழுந்தாள்.

ஜெபம் முடிந்து லூர்துசாமி குழிக்குள் இறங்கி நின்றுகொண்டதும், சில்வெஸ்டரும் இன்னும் சிலரும் சவப்பெட்டியை மெதுவாக குழிக்குள் இறக்கினர். லூர்துசாமி பெட்டியைக் கவனமாக வாங்கி இறக்கினான். அந்தக் குறுகலான இடத்தின் இரண்டு ஓரங்களிலும் தன் கால்களை நிதானமாக அகலப் பரப்பி நின்றுகொண்டு, குனிந்து குழந்தையைச் சுற்றியிருந்த மாலைகளை சரி செய்தான், பிறகு மெதுவாக சவப்பெட்டியை மூடினான். அதன் நான்கு ஓரங்களிலும் தடிமனான ஸ்க்ரு டைப் ஆணிகளை நிதானமாகப் பொருத்தினான். ஏராளமாக வியர்த்தது.

அவன் மேலே ஏறி வந்ததும், சுற்றியிருந்த ஈர மண்களால் குழி மூடப்பட்டு சமன் செய்யப்பட்டது.

அங்கிருந்த அனைவரும் வருத்தத்துடன் அமைதியாகக் கல்லறைத் தோட்டத்தை விட்டு வெளியேறினர்.

லூர்துசாமி அவசர அவசரமாகக் கிளம்பி வீட்டிற்குச் சென்றான். மனைவி ஜெஸிந்தாவை அழைத்துக்கொண்டு மார்த்தாண்டம் செல்ல நெல்லை ஜங்க்ஷன் பேருந்து நிலையத்திற்கு விரைந்தான்.

அன்று மாலை ஏழுமணி இருக்கும்…

மழை பிசு பிசுத்துக் கொண்டிருந்தது. திடீரென அந்தக் குழந்தை புதைக்கப்பட்ட இடத்திலிருந்து சன்னமாக அழுகுரல் விடாமல் கேட்டது. சில்வெஸ்டர் பயந்து விட்டான். அருகே சென்று உற்றுக் கேட்டான். சந்தேகமே இல்லை குழந்தையின் அழுகுரல்தான். பதட்டமானான். ஓடிச்சென்று ரிஜிஸ்டரில் அன்று காலை குழந்தையைப் புதைத்த குடும்பத்தின் பெயரைத் தேடினான். ‘ஜோசப், ஹைகிரவுண்ட்’ என்கிற முகவரியும் மொபைல் நம்பரும் இருந்தது.

உடனே அவரைத் தொடர்புகொண்டு, “சார், குழந்தைக்கு இன்னமும் உயிர் இருக்கு. குழந்தை அழுதுகிட்டிருக்கு … உடனே வாங்க..” என்றான்.

அவர்கள் அடித்துப்பிடித்து குடும்பத்துடன் காரில் விரைந்து வந்தனர்.

தொடர்ந்து மழை பிசு பிசுத்துக் கொண்டிருந்தது.

அவர்கள் வந்து சேர்ந்த சிறிது நேரத்தில் மறுபடியும் அழுகுரல் கேட்டது. குழந்தையின் அம்மா துடி துடித்துப் போனாள். “மொதல்ல என் குழந்தையைத் தோண்டி எடுங்க..அவளுக்கு உயிர் இருக்கு… ப்ளீஸ்” என்று கதறினாள்.

“டாக்டர் டிக்ளேர் பண்ணப்புறம்தான் நாம் குழந்தையைப் புதைத்தோம்… இனிமே குழந்தையைத் தோண்டி எடுத்தா அது பெரிய போலீஸ் கேஸ் ஆகிவிடும்” அப்பா ஜோசப் எடுத்துச் சொன்னார்.

கல்லறைத் தோட்டம் பரபரப்பானது. விஷயத்தைக் கேள்விப்பட்ட லோக்கல் தினமலர் நிருபர் அங்கு ஓடிவந்தார்.

அன்று முழுதும் குழந்தையின் அழுகுரல் நிற்பதும் கேட்பதுமாக இருந்தது.

மறுநாள் காலை தினமலரில் அந்தச்செய்தி முதல் பக்கத்தில் பரபரப்பாக வெளியானது. ஊரெல்லாம் இதே பேச்சானது.

அன்று மதியம், ஜெபம் செய்த பாதிரியார் மறுபடியும் அங்கு வரவழைக்கப் பட்டார். அழுகுரலை உறுதி செய்துகொண்டபின், “இது கர்த்தரின் அதிசய விளையாட்டு… இப்பூவுலகில் காரணம் புரியாத எவ்வளவோ அதிசயங்கள் அன்றாடம் அரங்கேறுகின்றன. அதில் இதுவும் ஒன்று…எனினும் ஒரு கடைசி முயற்சியாக குழந்தையின் ஆன்மா அமைதியடைய ஒரு ஜெபம் செய்துவிடலாம்…” என்று சொல்லிவிட்டு பத்து நிமிடங்கள் ஜெபம் செய்தார்.

என்ன ஆச்சர்யம்!? அன்று பாதிரியார் ஜெபம் செய்து முடித்தவுடன் குழந்தையின் அழுகுரல் முற்றிலுமாக நின்றுவிட்டது…

அதன்பிறகு அழுகுரல் கேட்கவேயில்லை…

மார்த்தாண்டம் சென்றிருந்த லூர்துசாமி, மூன்றாம் நாள் மதியம் கல்லறைத் தோட்டத்திற்கு வந்து சேர்ந்தான்.

சில்வெஸ்டர் அவனிடம் பதை பதைப்புடன், “அண்ணே நீங்க முந்தாநாள் அந்தக் குழந்தையைப் புதைச்சிட்டு போயிட்டீங்க… அதுக்கப்புறம் அங்கிருந்து அந்தக் குழந்தையின் அழுகுரல் விடாம கேட்டுக்கிட்டே இருந்திச்சு. அப்புறம் நேற்று மறுபடியும் பாதிரியார் வந்து ஜெபம் செய்தப்புறம்தான் நின்னுச்சு… பேப்பர்ல நியூஸ் வந்து ஒரே களேபரம் ஆயிடுச்சு…” என்றான். முந்தைய நாள் தினமலர் பேப்பரை எடுத்துக் காண்பித்தான்.

சிறிது நேரம் யோசித்த லூர்துசாமி பிறகு ஒரு நமுட்டுச் சிரிப்புடன், “சரி விடு எல்லாம் நல்லபடியா முடிஞ்சிடுச்சுல்ல… நீ வீட்டுக்கு கெளம்பு, கல்லறை தோட்டத்தை இனிமே நா பாத்துக்கிறேன்…” அவனை அனுப்பி வைத்தான்.

பிறகு அங்கிருந்த லேண்ட் லைனில் அவசரமாக ஜெஸிந்தாவைத் தொடர்புகொண்டு, “இப்பம் எல்லாமே எனக்கு நல்லா புரிஞ்சிருச்சு புள்ள… என்னோட மொபைல் வேறு எங்கேயும் தொலையல… அன்னிக்கி அந்தக் குழந்தையைப் பொதச்சப்ப சவப் பெட்டிக்குள்ள என்னோட மொபைல் தவறி விழுந்திடுச்சி… நாம விடாம ரிங் போட்டு ட்ரை பண்ணோம்… அதோட பேட்டரி வீக் ஆகி ரிங் டோன் அதுவா நின்னுபோச்சு…”

“ஒன்னோட பொறந்த நாளுக்கு நா ஆசையா வாங்கிக் கொடுத்த மூவாயிரம் ரூபாய் மொபைல இப்படி அநியாயமா பொதச்சி தொலைச்சிட்டே…”

அவன் வாழ்நாள் முழுதும் இனி இதையே அவள் குத்திக் காண்பிப்பாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *