கல்யாணிப் பாட்டி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 25, 2016
பார்வையிட்டோர்: 6,021 
 

டில்லியிலிருந்து சென்னை வந்த நாளா அம்மா நச்சரித்துக் கொண்டே இருந்தாள். “ டேய், ஒரு நட நம்ம கிராமத்துக்குப் போய் பாட்டியப் பார்த்துட்டு வாடா. தாத்தா போனதுக்கு அப்புறம் நீ இப்போ தான் வந்திருக்கே, போய் ஆறுதலா ரெண்டு வார்த்த சொல்லிட்டு வந்துடு”.

சரி என்று காரை எடுத்துக்கொண்டு சென்னையிலிருந்து விழுப்புரம் சாலையில் சுமார் ஒன்றரை மணி நேரப் பயணத்தில் இருந்த எங்கள் பூர்வீக கிராமத்துக்கு கிளம்பினேன்.

இடைவிடாது ஒட்டியதின் பலனாக மதியம் பனிரெண்டு மணி சுமார் பாட்டி வீட்டை அடைந்தேன். காரை நிறுத்தி விட்டு உள்ளே சென்று ‘ பாட்டி’ என்று குரல் கொடுத்தேன். கதவு திறந்திருந்தது. எங்கே பாட்டியைக் காணம்? என்று எண்ணியவாறு முற்றத்தைத் தாண்டி சமையலறை நோக்கி சென்றபோது தான், “யாரு?” என்று கேட்டபடி கண்களை இடுக்கிக் கொண்டு பின்கட்டிலிருந்து பாட்டி வந்தாள். ‘நான் தான் கண்ணன் ‘ என்றவுடன் ‘ வாடா! இப்பத் தான் வழி தெரிஞ்சுதா? ஆண்டவன் இப்படிப் செஞ்சிட்டானே’ என்று கதறியபடி என்னை ஓடி வந்து கட்டிப்பிடித்துக் கொண்டாள்.

எனக்கும் கண்ணில் கண்ணீர். பாட்டியைக் கட்டிக் கொண்டு நானும் அழுதேன். சிறிது நேரம் கழித்து இருவரும் சமாதானமானோம். “ஏண்டா, சாப்டயா இல்லை இனிமே தானா?” என்று கேட்ட பாட்டியிடம் ‘ “இனிமே தான்” என்றேன். “சரி குளிச்சிட்டு வா, இலை போடறேன்” என்று இலை அறுக்க புழக்கடை பக்கம் சென்றாள்.

சரியாக பதினைந்தாவது நிமிடம் ஆவி பறக்க சாப்பாடு! நன்றாக சாப்பிட்டு விட்டு ஒரு குட்டி தூக்கம் போட்டேன். ஆனால் அலுப்பில் நன்றாக தூங்கி விழித்த போது மாலை மணி அஞ்சு.

பாட்டி கொடுத்த காப்பியைக் குடித்து விட்டு, ஒரு ‘தம்’ போட்டு விட்டு வரலாம் என்று வெளியே சென்றேன்.

பெட்டிக் கடையில் நின்று புகைத்துக் கொண்டிருந்த போது “ ஆரு? கல்யாணிக் கெளவிப் பேரனா?” என்ற குரல் கேட்டு திரும்பினால் முருகேசன் தாத்தா! ஊர்ப் பெரியவர்.

சட்டென்று சிகரெட்டை கீழே போட்டு அணைத்தேன். ‘இருக்கட்டும், மரியாத மனசுல இருந்தா போதும். காச ஏன் வீணாக்குற” என்று சிரித்தார்.

‘நல்லா இருக்கீங்களா’ என்று மரியாதைக்குக் கேட்டேன். “என் நலத்துக்கு என்ன கேடு” என்று முனகியவாறே முருகேசன் தாத்தா அந்தப் பெட்டிக்கடை வாசலில் போட்டிருந்த பெஞ்சில் உட்கார்ந்தார். என்னையும் உட்காருமாறு சாடை செய்தார். நானும் அமர்ந்தேன்.

“தாத்தா போனதா விசாரிக்க வந்தியாக்கும்” என்று கேட்டார். ஆமாம் என்று தலை அசைத்தேன்.

“ம்ம்ம்ம்.. அது ஆகிப் போச்சு ஒரு மாசம்! பாவம் கெளவி எப்படி இருக்கா?” என்று கேட்டார். “ ஏதோ இருக்காங்க தாத்தா” என்ற என்னிடம் “இருக்காதா பின்ன? எவ்ளோ வருசம் ஒண்ணா வாழ்ந்திருக்காங்க? இது கூட இல்லீனா எப்படி?” என்றார்.

திடீரென்று எனக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. சின்ன வயசில் என் அம்மா சொல்லிக் கேள்வி. பாட்டியின் அம்மா ஒரு சித்த புருஷரிடம் பக்தியுடன் இருந்து சில பல மூலிகை ரகசியங்களைத் தெரிந்து வைத்திருந்தாளாம். அந்த சக்தியால் ஒரு தடவை, பாம்பு கடித்து இறந்து போன ஒரு சிறுவனுக்கு மூலிகை மருத்துவம் செய்து அவனுக்கு உயிர் கொடுத்தாளாம். இந்த சம்பவத்துக்கு பிறகு அந்தக் கிராமத்துக்கே கிட்டத்தட்ட ஒரு காவல் தெய்வம் போல ஆகிவிட்டாளாம் அவள்! இந்த விஷயம் உண்மை தானா என்று முருகேசன் தாத்தாவை கேட்டால் தெரியுமே!

என் முகத்தில் ஓடிய உணர்வுகளை யூகித்து “என்ன தம்பி, என்ன விசயம்?” என்றார் முருகேசன் தாத்தா. நான் என் மனதில் இருந்த சந்தேகத்தை சொன்னேன்.

திடீரென்று அவர் முகம் மாறியது. சட்டென்று எழுந்து என் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு சிறிது தூரம் சென்றவர், “ இந்த டவுன்காரவுகளுக்கு எல்லாத்திலேயுமே சந்தேகம் தான். தம்பி, அது உண்மை தான். அந்தப் பய நான் தான்’ என்றார்.

எனக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. அவரே தொடர்ந்து “ ஒன் பாட்டிக்கு அவ அம்மா அந்த மூலிகை ரகசியத்தச் சொல்லிக் குடுக்காமலேயே போய் சேந்துட்டா. இல்லீனா இந்நேரம் உன் தாத்தா உயிரோட வந்திருப்பார்! எல்லாம் ராசாமணி அதிர்ஷ்டம்” என்றார். ராஜாமணி என் தாத்தா!

மனதில் நிறையக் குழப்பங்களோட வீடு திரும்பினேன்.

மதியம் போலவே வீடு திறந்திருந்தது. நான் வந்த அரவம் கேட்டு பாட்டி பின் கட்டிலிருந்து வந்தாள்.

பிறகு இரண்டு பேரும் ரொம்ப நேரம் பழைய கதைகள் எல்லாம் பேசிக்கொண்டிருந்தோம். ராத்திரி எட்டு மணிக்கு சாப்பிட்டோம். பாட்டி சீக்கிரம் தூங்கப் போய் விட்டாள். சிறிது நேரம் கழித்து நானும் அங்கேயே ஹாலில் இருந்த கட்டிலில் படுத்தேன். உறங்கியும் போனேன்.

எத்தனை மணி என்று தெரியவில்லை. ஒரு சப்தம் கேட்டு தூக்கம் கலைந்தது. யாரோ யாருடனோ பேசிக்கொண்டிருந்தது போல. பின்கட்டிலிருந்து தான் சப்தம் வந்தது.

என்னவென்றுப் பார்க்க எழுந்து போனேன். அரிசி பருப்பு வைக்கும் அறையில் மங்கலான வெளிச்சம். மெதுவாக எட்டிப்பார்த்தால் பாட்டி ஒரு பெரிய கள்ளிப் பெட்டிக்கு முன் உட்கார்ந்திருந்தாள். அவள் தான் ஏதோ முனகிக் கொண்டிருந்தாள். அவள் கையில் ஒரு சிறிய கிண்ணம். அருகே ஒரு பெரிய டம்ளரில் பால்.

அந்தக் கிண்ணத்திலிருந்து பச்சையாக விழுது போல ஒரு வஸ்துவை எடுத்து அந்தக் கள்ளிப் பெட்டிக்குள் குனிந்தாள்.

“ ஆச்சு, இன்னியோட மருந்து முடிஞ்சாச்சு. இனிமே வழக்கம் போல சாப்பிடலாம். பிடிவாதம் பிடிக்காம சாப்பிடுங்க” என்று பெட்டிக்குள் சொன்னாள். அப்புறம் அந்தப் பால் டம்ளரை எடுத்து “ இத நீங்க எழுந்து தான் குடிக்கணும், இல்லேனா கொட்டிடும்” என்றாள். “சரி’ என்று ஒரு குரல் கேட்டது.

என்னது இந்தப் பாட்டி ஆண் குரலில் பேசுகிறாள் என்று குழம்பிய நான் ஒரு பெரிய அதிர்ச்சிக்கு உள்ளானேன். பாட்டியின் கையிலிருந்து அந்த டம்ப்ளரை வாங்கிக் குடிப்பதற்காக கள்ளிப் பெட்டிக்குள்ளிருந்து என் தாத்தா எழுந்து உட்கார்ந்தார்.

“எல்லாம் ராசாமணி அதிர்ஷ்டம்” என்ற முருகேசன் தாத்தாவின் குரல் காதில் கேட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *