கலங்கிய பார்வையில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 4, 2015
பார்வையிட்டோர்: 7,161 
 

கீதாவுக்கு அழுகை அழுகையாக வந்தது.அடக்க முயன்றால்.முடியவில்லை.கலங்கிய கண்களுடன்,வேலை செய்வதை விட்டு,எழும்பி நின்று பயிர்களைப் பார்த்தாள்.பச்சை விரித்தாற் போல்,பரந்து கிடந்தது.பூக்கிறதுக்கு காலம் இருக்கிறது

கீதாவுக்கு அழுகை அழுகையாக வந்தது.அடக்க முயன்றால்.முடியவில்லை.கலங்கிய கண்களுடன்,வேலை செய்வதை விட்டு,எழும்பி நின்று பயிர்களைப் பார்த்தாள்.பச்சை விரித்தாற் போல்,பரந்து கிடந்தது.பூக்கிறதுக்கு காலம் இருக்கிறது.மற்ற தோழிகள்,பெரிய விவசாய அறிவில்லாவிட்டாலும்,பயிரின் கீழேயுள்ள மண்ணை சிறுது கொத்தி தூர்த்தும்,ஏதாவது விருந்தாளியான களைப் பூண்டின் பகுதி தெரிந்தால் வேருடன் பிடுங்கி,இடுப்பிலுள்ள சொப்பிங் பையில் போட்டுக் கொண்டிருந்தார்கள்.அவள் இடுப்பிலும் ஒரு பை இருக்கிறது.

அவளைப் போன்ற சோகம் அவர்களுக்கில்லை.இருந்தாலும்,அவளுடன் அனுதாபத்துடனே பழகிறார்கள்.அவளால் தான் தனித்த நிலையிலிருந்து விடுபட முடியவிலை.

வீடும்,அவளைப் போலவே கிடக்கிறது.’உற்சாகமாகவிருக்க வேண்டும்,நம்பிக்கைகளுடன் இருக்க வேண்டும்,இன்று புதிதாய் பிறந்தோம் என்ற பாரதிக்கவிதை வரியை எடுத்து அலம்பிற அப்பாவிற்குக் கூட நாடி விழுந்து விட்டது.

அம்மா,படிப்பில் சுட்டியாகவில்லா விட்டாலும்,அந்த காலத்தில் படித்து ஆசிரியையானவர். “உசாரானப் பெண்”என பாட்டி பாராட்டுறவர்.பள்ளிக்கூடத்தில் அனைவராலுமே மதிக்கப் படுறவர், “ஏதும் லெளகிகப் பிரச்சனையை டீச்சரோட கதைத்தால்,சரியாகி விடும்”என்று கதைப்பார்கள். ‘வயதில் மூத்தவர் என்பதாலல்ல,உலக அனுபவமுள்ளவர்’என்பதே காரணம்.அவரே,ஆடிப் போய் விட்டார்.1 மாசம் வெறித்த பார்வை,சேது மாதிரி! “அவன்,சொல்வழி கேளான்,கண்டிச்சு வையுங்கோ”இடைக்கிடை இப்படி புலம்புவராக…வீடு, செத்த வீடு கொண்டாடியது.மனநல வையித்தியர் கந்தசாமியால் ஓரளவு தேறியிருக்கிறார்.

அக்கா,சோகம் இருந்தாலும் அத்தனை பாராட்டவில்லை.அவள் வீட்டு விஞ்ஞான(சமையல்) ஆசிரியையாக …வேலைக்கு போய் வந்து கொண்டிருக்கிறாள்.அவள் ஒருத்தி மட்டும் தான் நேராக இருக்கிறாள்!அவளை விட, 5 வருசம் தள்ளி தம்பி பிறந்ததால் இருக்கலாம்.

இதுவரையில் வெளியில், அரசபடைகளால் நிகழ்த்தப்படுற சாவுகள் அவர்களைப் பாதித்ததில்லை,அதுவே வீட்டிலே நடக்கும் என எதிர்பார்க்கவில்லை.

எல்லாமே,நம்ப முடியாமலே இருக்கிறது.தமிழ் சிங்களப் பிரச்சனை தெரியாத தம்பி,இயக்கத்திற்குப் போறான்.ஒருநாள்,நகரப் பள்ளிக்கூடத்தில் “என்னோட படிக்கிறவன்,ரமேஸ்”என்று கூட்டி வந்தான்.சாப்பிட வைத்து உபசரித்தார்கள்.தம்பியைப் போன்ற துருதுருப்பு.அவன் நகரம்! இவன் கிராமம்.

அச்சமயம்,காந்தியத் தலைவர்,யாழ்ப்பாணம் வந்து, “காந்தியச் செயல்பாட்டுக்கு,உங்களுடைய பள்ளி விடுதலை நாட்களில் வவுனியா வந்து சரீர உழைப்பை தாருங்கள்”என்று அழைத்து,விளக்கி கூட்டங்களை மாணவர்கள் மத்தியில் பரவலாக வைத்துக் கொண்டிருந்தார். “டெக்கிலே,வைத்த கூட்டத்திற்கு ரமேஸ் கூட்டிச் சென்றான்”, ‘அவன்,ஏதோ மாணவர் அமைப்பில் இருக்கிறான்’என்று தம்பி சொல்லி தெரிய வந்தது.

பொதுவாக நகரத்தில் படிக்கிறவர்களுக்கு சகமாணவனின் பின்புலம் எல்லாம்தெரிவதில்லை.வகுப்பு நடைபெறும் வரையில் தான் சந்திப்பு.ஒவ்வொருவரும், வடமராட்சி,தென்மராட்சி..என வேறுபட்ட இடங்களிலிருந்து வருவார்கள்.வெளியில் பழகிறது அவ்வளவாக இருப்பதில்லை.பஸ் பயணம் கணிசமான நேரத்தை விழுங்கி விடுகிறது.

ரமேஸ்,அவனை பல கூட்டங்களுக்கு கூட்டிச் சென்றான்.அவர் பேசிய ‘அர‌சியல்’தம்பிக்கு புரியவில்லை.அப்பாவிடம் வந்து 108 கேள்விகள் கேட்டு துளைத்தான்.அப்பா,தனக்குத் தெரிந்ததைக் கூறினார்.அவனுக்கு திருப்தி இல்லை.அவன் வார விடுதலையில் வவுனியா போக விரும்பினான்.

அவர்,அப்பரைப் போல எளிமையானவராக இருந்ததால் அவனுக்கு வெகுவாக பிடித்து விட்டது போலயிருக்கிறது.அவர் குரல் கூட அப்பாவைப் போல இருக்காம் என்று சொல்லுவான்.அவன் தொணதொணப்பை தாள முடியவில்லை.

விடுமுறை நேரம்,வவுனியா போறதுக்கு வீட்டிலே அனுமதி கிடைக்கவில்லை.அவனுக்கும் அது பெரிய விசயமாக இருக்கவில்லை.அவனுடைய தோழர்களை (குரங்குகளை) பார்க்க கொடுத்து வைக்கவில்லை.அவ்வளவு தான். ‘வவுனியாவும், வடபகுதி போல ஒரு தமிழ்ப்பகுதி ‘என்றது மட்டும்’ அவளுக்குத் தெரியும்.

அவள் கண்கள் கலங்கி இருப்பதைக் கவனித்த மாலதி, “என்னடி செய்யுது?”என்று அன்புடன் கேட்டாள்.

“உடம்பும்,வயிறும் நோகுது”என்றாள்.

பொம்பிள்ளைச் சமாச்சாரம்.”நீ போய் நிழலிலே இரு.கொஞ்ச நேரத்திலே வாரோம்”என்று அனுப்பினாள்.

அக்காணி,வீட்டுவளவுப் பக்கத்திலே மேற்கே பார்த்தக் காணி.வேலியோடிருந்த கிளுவை,பூவரசுப் பக்க வரம்பு நிழலாகவிருந்தது. அக்கிராமத்தில் எல்லாம் ஒரு தடவை நெல் விதைத்த பிறகு,2வது வாட்டி எவரும் விதைப்பதில்லை.போதிய நீர் இல்லாதது தான் காரணம்.மழையை நம்பித் தான் ஒரு தடவை செய்கிறதே இருக்கிறது.பொய்த்து விட்டால் கருகி விடுகிறது.இயக்கம் மூலமாக மகளிர் அமைப்பு அவரை விதைக்க காணியைக் கேட்ட போது …கொடுத்திருக்கிறார்கள். அவர்களுடைய பெடியள்களுக்கும் இயக்கத் தொடர்பு இருந்ததாலே கிடைத்தது.

அவளை, உடம்பு வலி விரக்திக்குத் தள்ளியது.நிழலில் போய் தனிய இருந்தாள்.ஒரு அன்பான ராஜகுமாரன் வந்து தாங்க மாட்டானா?என்றிருந்தது.அவன் தோளில் சாய்ந்து கொண்டு…சாதாரணமாக சந்தோசத்துடன் வாழ்றதையே அவள் விரும்புகிறாள்.இயல்பான சாவு,சுனாமி போல நிகழ்ந்தாலும்,எல்லோரையும் போல…என மனதை சமாளித்துக் கொள்ளலாம்.ஆனால்,இந்த சாவு ரணமாக, ஆற்ற முடியாததாகவல்லவா இருக்கிறது.

தம்பிக்கும் ரமேஸ் மூலமாக விதி கயிரை வீசியிருக்கிறது.இல்லாவிட்டால் அப்பாவியாக இருந்த அவனை,இயக்கத்திற்குள் கொண்டு போய் தள்ளி இருக்குமா? இயக்கங்கள் எழுந்தது பிழையான விசயமில்லை தான்! காந்தி கூட மனித அவமதிப்பினால் ஏற்பட்ட கோபத்திலே போராட்டத்திற்கு வந்தவர்.

காந்தியத் தலைவரின் கதையை, அரசு வன்முறையால் சாக்கடிக்காமல் இருந்திருந்தால்,தம்பி இந்தளவுக்கு குழப்பப் பட்டிருக்க மாட்டான்.தம்பி,ஜூலை 25,27 கொலை விழுந்ததிலிருந்து அவளிடமே நிறைய கேள்விகளை,சண்டை பிடிக்கிற மாதிரி கேட்டு விட்டான். அவளுக்கு பதில் தெரியவில்லை.

“நீ ஒரு வெங்காயம்”என்று ,அப்பாவோடு போய் தர்க்கித்தான்.

அப்படி ஒரு மாற்றம்!

அவர்,எத்தனை எளிமையானவர்.அவரைப் போல இருக்கிற அப்பாவிற்கு கூட நாளை ஏதாவது நடக்கலாம்,என்ற அந்தரம் அவன் பேச்சில் இருந்தது. ‘பெண்ணாக பிறந்து,பெரியபிள்ளையாகிற தாக்கங்கள் இருந்தாலும் கூட எங்களுக்கு ஆம்பிள்ளைகளுக்கு இருக்கிற கோபம் இல்லாமல் போகுமா?பேதங்களை மீறி மூளை 2 மடங்கு வீரமாகவும் கொந்தளிக்க கூடியது’அதனாலே …அவள் இங்கே நிற்கிறாள்!செயற்பாட்டில், மகிந்தா போல நடக்க வருகிதில்லை,காந்தி வழியை தெரிகிறதே இருக்கிறது;அமைதி நிலவும் வாழ்க்கையில் உள்ள நம்பிக்கையை மாற்றுவதும் எளிதாக இருக்குதில்லை.

தம்பிக்கு,’காந்திய தலைவருக்கு ஏற்பட்ட கதி நாளை எல்லாத் தமிழர்க்கும் ஏற்படும்’என்ற நினைப்பு உறுதியாக விழுந்திருந்தது.

தமிழர்கள், ‘சாதாரண வாழ்வை போராடித்தான் பெற வேண்டும்’என்ற தூண்டுதலினால்,அதிர்ச்சியாக, பயிற்சிக்காக இயக்கப் பெடியள்களுடன் வள்ளத்தில் ஏறி விட்டான்.வீட்டை விட்டு ஓடும் முறை மேலும் குழப்பங்களையே விளைவிக்கச் செய்யும்.கோணல்..முழுதும் கோணல்! என்ற பழமொழியே நம்மவர்கள் வழக்கில் இருக்கிறது.

அமைதியான சட்டதிட்டங்களுக்குட்பட்டு,பாதுகாப்பாக வாழ்றதுக்கான சூழலை அரசாங்கம் ஏற்படுத்தித் தர ண்டும்.முடியாவிட்டால்,அரசியல் சமநிலைக்கு சுதந்திரமாக விட வேண்டும்.அதுவும் முடியா விட்டால் ராணுவ ஆட்சியைக் கொண்டு வருவதா?பாவம்!,அப்பாவி மனித‌ர்களை,இளைஞர்களை சிறையில் வைத்தும் அல்லவா கொல்கிறார்கள்.நீதி மன்றங்களுக்குப் போனாலும் பிரயோசனம் இல்லை.முருகன்,தனி உலகம் படைக்க கிளம்பியது போல,தனி ஈழம் அமைப்பது தான் வழி!,என்று இளைய ரத்தங்கள் நினைத்து விட்டன.

ஓரியக்கமாக இருந்து, இரண்டாக பிளவுபட்டதில் புதுப் பெயரில் இருந்ததிலே தம்பி சேர்ந்து விட்டிருந்தான்.

ஆனால் வள்ளுவர்,

“ஒன்றாமை ஒன்றியள் கட்படின் எஞ்ஞான்றும் பொன்றாமை ஒன்றல் அரிது!”என்கிறார்.

‘ஒன்றிலிருந்த நிலையில் உட்பகை தோன்றி விடுமானால்,அதனால் ஏற்படும் அழிவை தடுப்பது எந்த காலத்திலும் முடியாது’என்கிறார்.

தம்பியின், சாதாரண வாழ்வுக்கனவும் நிறைவேறாமல் போய் விடக் கூடியது தானா?

வேலையை முடித்து விட்டு தோழிகள் அவளிடத்துக்கு வந்தார்கள்.அவ்வீட்டுக்காரர்,அவர்களிற்கு தேனீரை இளைய மகனிடம் கொடுத்து அனுப்பி இருந்தார்.உஸ்ணத்துடன் கஞ்சல்கள் பறக்க காற்று வீசினாலும்,சூடாக குடிக்க நல்லாய் தானிருந்தது!தம்பி,திரும்பி வந்த பிறகு அந்த கிராமத்திலும் அலைந்து திரிந்து பழகி இருக்கிறான்.அந்த சிறுவனுக்கு கூட ரோல் மாடலாக இருந்திருக்கிறான் போலயிருக்கிறான் போல,அவளுக்கு காட்டுற மரியாதையிலிருந்து தெரிகிறது.

மாலதி,”நீ வீணா மனதைப் போட்டு அலட்டிக் கொள்ளாதே”என்றாள்.மேலும்,

“உனக்குத் தெரியுமா?நாம வாழ்றதே ஆச்சரியம் தான்!”என்றாள்.

எல்லோரும் தம்பியை மதிக்கிறார்கள்.அவன்ர சாயலில் இருக்கிற அவளை,உயிரோட இருக்கிற பொம்பிள்ளை ராமுவாகவே பார்க்கிறார்கள்.அவன்,சில அரசியல் தகவல்களை சேகரித்துக் கொண்டு கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தான்.அவளிடம் ‘அத்தன்மை’ இல்லை.சூனியமாகவே இருக்கிறாள்.

“அவரை காய்த்துக் கொட்டும் போல இருக்கிறது.அந்த விவசாய மாஸ்ரர் சொன்ன மாதிரி கவனிக்கணும்.இடையிடை அவரையும் கூட்டி வந்து காட்ட வேண்டும்”என்றாள் வசந்தி.

பிளவுபட்ட இயக்கம், நிறைய கட்டமைப்புக்களைக் கட்டி வைத்திருந்தது.கிட்டத்தட்ட ‘நிழல் அரசாங்கம்’ போன்ற அமைப்புக்கள்.ஜி.எ, எ.ஜி.எ, ஜி.எஸ்…அதே பெயரிலே பொறுப்பாளர்கள்,உபவமைப்புகள்.பொலிஸுக்குப் பதிலாக ராணுவப் பிரிவு.ஆனால்,அவ்வமைப்புகள், அரச ராணுவம் அடிக்கடி ஊர்மனைகளுக்குள் வந்து தேடுதல் நடத்துவதால் செயல்பட முடியாதிருந்தது.இயக்கத்திலே, பயிற்சி எடுத்தவர்கள் ராணுவப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.மக்கள் அமைப்புடன் சேர்ந்தியங்க விடப்பட்டிருந்தார்கள்.அதனாலே,தம்பி கிராமத்து அமைப்புடன் சென்று அலைந்திருக்கிறான்.

8 மாசம் கழித்து தம்பி திரும்பி வந்த போது,அவர்களுக்கு சந்தோசப்படுவதா?இல்லையா?என்று தெரியவில்லை.

இலங்கை ராணுவம் ஒவ்வொரு ஊர்களாக மாறி,மாறி தீவிரமாக தேடுதல் நடத்திக் கொண்டிருந்தது.சந்தேகத்தின் பேரில் 100 பெடியளையாவது பூசாவிற்கு அள்ளிக் கொண்டு சென்றது.அவர்கள் பகுதிக்கும் நிச்சியம் நாள் குறித்திருப்பார்கள்.எந்நேரமும் வரலாம் என்ற பயம், சந்தோசத்தை விட அதிகமாகவிருந்தது.

அவன் வந்து 6 மாசமாக தேடுதலுக்கு வரவில்லை.நிம்மதியாகவிருந்தது!குலைக்கிற மாதிரி திடீரென வந்தார்கள்.4,5 இயக்கத்தைச் சேர்ந்த பெடியள்களும் அவ்விடத்திலே இருந்தார்கள்.தம்பிட ஆட்கள் தான் அதிகம்.எல்லோரும் சிதறி ஓடு பட்டார்கள்.3 நாள் கடுமையான ஊரடங்கை அமுல் படுத்தி விட்டு, தேடுதலை ஆரம்பித்தது. ‘வீதியில்,ஒழுங்கையில் யாரும் தென்பட்டால் சுடப் படுவார்கள்’என்ற எச்சரிக்கைகள் வேறு!

சூடுபட்டு தப்பி ஓடியதில் 2 பெடியள்கள் இறந்தார்கள்.தங்களை நோக்கி வேட்டுகள் தீர்த்த‌தால், ராணுவம் சிறிது துணுக்குற்றிருந்தது.அப்பாவி இளைஞர் என்று தெரிந்தும் பலரை அள்ளியது.தம்பி,அரசியல் அமைப்புடன் வயல்வெளியில் இருட்டில் ஓடித் திரிந்தான் என்று செய்தி வந்திருந்தது.வேலி பொட்டுக்குள்ளாக ரகசியமாக மக்கள் போய் வந்து கிசுகிசுத்துக் கொண்டிருந்தார்கள்.அவர்களுடைய வேலியிலும் பொட்டு இருந்தது.

ராணுவம் அகன்ற பிறகு, சுனாமிக்குப் பிறகான ஊர் போல.. காட்சியளித்தது!

அப்பதான் அந்த செய்தி வந்தது.தம்பியைக் காணவில்லையாம்.இடிவிழுந்தது போல பதைத்துப் போனார்கள்.

‘பஸ் நிலையத்தில் 2 பேரைப் போட்டு எரித்திருக்கிறார்கள்’என்ற வதந்தி,யார் ஆட்கள் எனத் தெரியவில்லை.இப்படி உலவியது!

முருகா!அதிலே தம்பி இருக்கக் கூடாது,என மனமுருகி வேண்டிக் கொண்டாள்.

இயக்கப் பெடியள்,துருவி,துருவி ஆராய்ந்தார்கள்.அதில் எரித்திருப்பார்களோ ?…என சந்தேகமாகவிருந்தது.எலும்புத் துண்டோ,எந்த மீதியோ இருக்கவில்லை.குவியலில்,சாம்பலும்,டயர்க் கம்பியும் மட்டுமே இருந்தன.

ராமுவோடு கடைசியாக ஓடிய பரமு, “எனக்குப் பக்கத்தாலே ஆமி சுட்ட புல்லட்டுகள் விண்கூவிக் கொண்டு பறந்து சென்றது,திரும்பிப் பாராமல் ஓடினேன்”என்றான்.’ராமுவுக்கு சிலவேளை சூடு விழுந்திருக்கலாம்’என்ற ஐயம் ஏற்பட்டது.மழையும் பெய்திருந்ததால் அவ்விடத்தில் ரத்தக் கறையையும் காணவில்லை.

பஸ்நிலையத்திலிருந்த தேத்தண்ணிக் கடைப் பெடியன் தென்னை மரத்தில் ஏறி ஒளிந்திருக்கிறான். “2 பேரை தூக்கிப் போட்டு எரித்ததை என்ர கண்ணாலே பார்த்தேன்”என்று சத்தியம் செய்தான்.

அவர்களில் ஒருத்தன், சற்றுத் தள்ளியிருந்த பகுதியிலிருந்து கிழிந்த சேர்ட்டின் துண்டை கண்டெடுத்தான்.ஆமி தூக்கி வார போது கிழிந்திருக்கலாம்.ராமு போட்டிருந்த சேர்ட்டின் பொக்கற் துண்டுப் பகுதி.காம்பில் பெடியள் அடிச்சுப் பிடிச்சு அணியிற சிறிது உக்கிப் போயிருந்த டேர்னிம் சேர்ட்டின் துண்டில் ‘கே’ஆங்கில எழுத்து கூட இருந்தது.

ராமு,அக்குவியலில் பஸ்மமாகப் போய் விட்டான்!ஊர்ஜிதமாகியது.வீட்ட அறிவித்தார்கள்.

அம்மாவிற்கு,கேட்டவுடனேயே மூளை குழம்பிப் போனது.1 மாசத்திற்குப் பிறகு தான் நோர்மலுக்கு திரும்பியிருக்கிறார்.பள்ளிக்கூட ஆட்கள் அம்மாவை பழைய நிலைக்கு மாத்தி நடமாட வைத்திருக்கிறார்கள். “ரீச்சர்,வேலையை விடாதீர்கள்”என்று அதிபரின் வற்புறுத்தலால் பள்ளிக்கூடம் போய் வந்துக் கொண்டிருக்கிறார்.இனி,தாய்(மார்க்சிம் கோர்க்கி எழுதிய தாய் நாவலில் வாரவர்)பாத்திரமாக மாறுவாரா?இல்லையா?…தெரியாது.

கீதாவும் சந்தோசமற்ற முகத்துடன் குழப்பத்தில் இருந்தாள்.வயசுப் பெண்கள் சந்தோசத்துடன் இருந்தால் தான் அழகாய்யிருப்பார்கள்.அழுது வடிந்தால் அழகுக்களை அவர்களை விட்டு ஓடி விடும்.எல்லா இயக்கத்திலிருந்தும் பெடியள்களை பிடித்துக் கொண்டு போனதால் அவர்களும் ஆத்திரத்தில் இருந்தார்கள்

ஒன்று மாறி ஒரு இயக்கம் என.. ராணுவமுகாமிற்கு அருகில் போய்,சிறிய மோட்டரில் செல்லுகளை தள்ளி, கண்டமாட்டுக்கு உள்ளே விழ அடித்தன.ஒன்று ஓய ஒன்று என நான்கைந்து இயக்கங்களும் வாணவேடிக்கை காட்டிக் கொண்டேயிருந்தன. ராணுவம் வெளியே வர எத்தனித்த போது,ஓரியக்கம் குறி பார்த்துச் சுட்டது.சினைப்பர் சூடு.அதற்குப் பிறகு, ராணுவம் வெளியே வராமல் உள்ளே போய் இருந்து,மழை போல செல்லுகளை நாலாபுறமும் அடித்தார்கள்.கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் பக்கம் கூட விழுந்தன.அவர்கள் அடிக்கிற போது,பெடியள் அணி ஓய்ந்தது போல அமைதி கொண்டது.திரும்ப ஆமி எட்டிப் பார்த்த போது சினைப்பர் சூடுகள் பறந்தன.முகாமிற்குள் ஆட்களை மடக்கியாயிற்று.பெடியள்களுக்குச் சந்தோசம்.பொதுமக்களில் கணிசமான அழிவுதான். ஆனால், ஆமிமுகாமைச் சூழ ஒவ்வொரு எல்லையில் இயக்கங்கள், நிரந்தர காவல் நிலைகளை நிறுவி,கண்ணிவெடிகளை தாழ்ட்டும், கிளைமொர் வெடிகளை பொறுத்தியும் விட்டன.பரீட்சார்த்தகரமாக இந்த காம்பில் ஏற்பட்ட வெற்றியைத் தொடர்ந்து, வடபகுதியில் இருந்த எல்லா ஆமிக்காம்களையும் சுற்றிவர காவல்நிலைகளை நிறுவிக் கொண்டார்கள்.

ஆமியை எதிர்த்து வெல்ல முடியாது.தெரியும்! எனவே அவர்கள் நடமாட ஒரு பகுதியை மாத்திரம் விட்டு விட்டு இறுக்கமான காவல் நிலைகளைப் போட்டுக் காவல் இருந்தன. இயக்கங்கள் மத்தியில் இணைப்புகள் இல்லை.எதேச்சையாக தற்காலிக இணைப்பு இப்படி ஏற்பட்டு விட்டது.ராணுவம் அடிக்கடி நான்கு பக்கமும் செல்லுகளை அடித்து தீர்க்கும்.அவை நகரத்தின் குறிப்பிட்ட கி.மீ வரைதான் செல்லும்.கிராமப்புறங்களை எட்டியும் பார்க்காது.

ராணுவம் சிறிது பயந்து போன அதிசயம் வடபகுதியில் மட்டும் தான் நிகழ்ந்தது.அம்முறை,மற்றைய மாகாணங்களில் சரி வரவில்லை.சிங்களகிராமமும்,தமிழ்க்கிராமங்களும் அருகருகே இருந்தது காரணமாக இருக்கலாம்.ராணுவம், அந்த அவமானத்தையும் சாதகமாக பயன்படுத்திக் கொண்டது.இயக்கங்கள் மத்தியில், “எல்லா ஆயுதங்களையும் வடக்கிற்கே கொண்டு போய் விடுகிறார்கள்”என்று பிரதேச வேறுபாட்டைக் கிளறி விட்டது.அதனால் சில சலசலப்புகள் ஏற்பட்டன.

வடபகுதி வெற்றி, இயக்கத்தின் முதல்படி வெற்றி என்பதை உண்ர்வதை அது குழப்பித் தான் விட்டது.ஆனாலும் வடபகுதியினர்,தம் உயிரைக் கொடுத்தும்,பரீட்சார்த்த முறைகளில் ஈடுபட்டும் வெடிகளை உள்ளே விழ வெடித்தன.ராணுவம்,உள்ளேயும் பதுங்கு குழிகளில் இருக்க வேண்டியதாயிற்று.அதன்,வெளிய பவனி வாரது,தேடுதலை நடத்துவது எல்லாம் நின்று போயிற்று.

இந்த அதிசய அமைதியில், வெளியில் இருந்த இயக்கங்களின் அரசியல் அமைப்புக்கள் எல்லாம் உயிர் பெற்று இயங்க ஆரம்பித்து விட்டன.தம்பியின் இயக்கத்தின் தொழிற்சங்க அமைப்பு தோட்டப்பயிர்ச் செய்கையை கிராமப்புறங்களில் ஊக்குவிக்க விரும்பியது.எல்லா இடங்களிலும் நெற்செய்கை ஒரு போகமே செய்யப் படுகின்றன.மிச்சக் காலங்களில் வீணே விடப்படுகின்றன.அயலிலுள்ள குளங்களையும்,வாய்க்கால்களையும் செப்பனிட்டுச் விட்டால் செய்யிறது..சாத்தியப் படக்கூடியது.அப்போது நிழல் அரசாங்கமும் நல்லபடி இயங்கும்.

ராமு திரிந்த கிராமத்தில் உள்ள பெரிசுகளைக் கூட்டி கதைத்த போது,அவர்கள் நம்பிக்கைக் கொள்ளவில்லை.தவிர, “2வது அரசாங்கம் சாத்தியப்படாது”என்றார்கள்.2,3 பேர்கள், “நீங்கள் செய்யிறதென்றால் செய்யுங்கள்.காணியைத் தாரோம்.ஆனால்,நெல்லு செய்யிற போது விட்டு விட வேண்டும்”என்றார்கள் கண்டிப்புடன்.

அப்படி தரப்பட்ட காணி ஒன்றிலே மகளிர் அமைப்பு,அவரைச் செய்கை செய்கிறது.அவர்கள் வெற்றி பெறுவார்களா?என்பது தெரியாது.

கடமையைச் செய்கிறார்கள்.நாளை,ஆமி வெளிய வந்து முயற்சி தடைப்பட்டு விடுமா?அதுவும் தெரியாது.பயணப்படாமல் இலக்கை அடைய முடியாது. நாகரீக உலகில்,அடக்குமுறைகளோடு வாழ்வது என்பது முடியாத காரியம்.காலனியாட்சியிலிருந்து விடுதலை அடைந்த போது தமிழ் பேசுறவர்கள் 40வீதமும்,சிங்களவர்கள் 60 வீதமாக இருந்தார்கள்.இஸ்ரேலியரின் சியோனிச முறைகளிலே தமிழர்களின் வீதத்தைக் குறைத்தும்,நிலங்களை அபகரித்தும் கொண்டிருக்கிறார்கள்.

உலகலாவிய அடக்குமுறைகளுடனே அவர்களது வெற்றி சம்பந்தப் பட்டிருக்கிறது.அதர்மத்தின் வெற்றி எப்பவும் தற்காலிகமானதே.நாளை தமிழீழ வெற்றியும் கிடைக்கலாம்.அவர்கள் பூட்டிய பாரமான இரும்புக் குண்டுகளை,ஒருநாள்,இந்தப் பெண்களின் மெல்லிய கைகளும் கூட அப்ப‌ உடைத்தெறிந்து விடும்!

“கிளம்புங்கடி.காம்பிலே போய் சாப்பாட்டை முடித்து விட்டு,அடுத்த கிராமத்திற்கு பின்னேரம் போக வேண்டும்”மாலதி துரிதப் படுத்தினாள்.மாலதி,தன்னுடைய கரியரில் கீதாவை ஏற்றிக் கொண்டு,அவளுடைய சைக்கிளை வசந்தியை ஓடிவரும்படி கொடுத்து விட்டு,உழக்கினாள்.

(இது,பழைய கதை தான். விதி,மறுபடியும் முதலிலிருந்தல்லவா…ஆரம்பிக்க தள்ளி விட்டது.)

– செப்டம்பர் 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *