கறிவேப்பிலைகள்‌

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 8, 2022
பார்வையிட்டோர்: 11,923 
 

அந்த வங்கிழடு தம்பதியருடைய சொந்தப்‌ பெயர்களை மறந்தே போய்விட்டது கிராமம்‌. பப்பு தாத்தா தம்பதியர்‌ என்று சொன்னால்தான்‌ தெரியும்‌. தனித்தனியாகச்‌ சொல்வதென்றால்‌, அந்தத்‌ தொண்டுக்கிழவரைப்‌ பப்பு தாத்தா என்றும்‌, அந்தத்‌ தொண்டு கிழவியைப்‌ பப்புப்‌ பாட்டி என்றும்‌ வயசானவர்களிலிருந்து குழந்தைகள்‌ வரை அழைத்தார்கள்‌.

அவர்களைப்‌ பார்க்கும்போது உலர்ந்த பழங்களின்‌ ஞாபகம்‌ வரும்‌.

பேர்ச்சம்பழ நிறத்திலுள்ள அவர்களுடைய உடம்பின்‌ தோல்களில்‌ கணக்கில்லாத மச்சங்கள்‌; கருப்பு, சிகப்பு நிறத்திலும்‌ கருநீல நிறத்திலும்‌ உடம்பின்‌ சில பகுதிகளில்‌ வறண்ட பாலுண்ணிகள்‌ நிறைந்திருந்தன. முகத்தில்‌ சில இடங்களில்‌ சிலந்தி வலையின்‌ நிழலை ஞாபகப்படுத்தும்‌ கோடுகள்‌. தென்னம்பாளையின்‌ காய்ந்த ஓட்டின்‌ மேலுள்ளதைப்‌ போன்ற நெருக்கமான நேர்கோடுகள்‌; பனைமரத்தின்‌ சில்லாடையிலுள்ளதைப்போல்‌ சதுரக்கட்டங்கள்‌; இப்படி உடம்பெங்கிலும்‌ வயோதிகத்தினால்‌ விழுந்த கோடுகள்‌ நிறைந்திருந்தன.

பப்பு தாத்தா, இழவு, கல்யாண வீடுகளில்‌ சாப்பிடும்போது பல தடவைகள்‌ பருப்புக்‌ கறியையே மாறி மாறி வாங்கி விரும்பிச்‌ சாப்பிடுவார்‌.

அதிலிருந்து அவருக்கு பருப்புத்தாத்தா என்று ஏற்பட்ட பெயர்‌ நாளடைவில்‌ குழந்தைகளின்‌ மழலை உச்சரிப்பில்‌ அந்தப்‌ பெயர்‌ பப்புதாத்தா என்று ஆகிவிட்டது.

விடாமல்‌ ஒரு குழந்தை அழுதுகொண்டே இருந்தால்‌ அதனுடைய தாய்‌ கடைசியில்‌ ‘பப்பு தாத்தாவைக்‌ கூப்பிடட்டுமா?’ என்று கேட்பாள்‌.

அந்தத்‌ தம்பதியர்‌ பஞ்சம்‌ பிழைப்பதற்காகக்‌ கீகாட்டிலிருந்து இந்த ஊருக்கு வந்தவர்கள்‌. அப்படியே இங்கேயே இருந்துவிட்டார்கள்‌.

அவர்களைப்‌ பொறுத்தமட்டில்‌ அவர்கள்‌ எங்கிருந்தாலும்‌ ஒண்ணுதான்‌.

அவர்கள்‌ கூலி வேலை செய்யும்‌ விவசாயக்கூலிகள்‌. எந்த உடமையும்‌ அவர்களுக்குக்‌ கிடையாது. கைகள்‌ ஒன்றுதான்‌ அவர்களுடைய உடமை.

அவைகள்தான்‌ அவர்களுடைய மூலதனம்‌.

தலைக்கோழி கூப்பிட எழுந்திருக்கணும்‌. எதாவது ஒரு ‘மகராஜன்‌’ விட்டில்போய்‌, பருத்திமாரால்‌ தொழுவத்தைத்‌ தூத்துப்‌ பெரிய கூடைக்கு ஒரு நாலைந்து கூடை குப்பையைக்‌ கொண்டுபோய்க்‌ குப்பைப்குழியில்‌ தட்டணும்‌. கடேசிக்‌ கூடையைக்‌ குப்பைக்குழியில்‌ அப்படியே தட்டியமானைக்குக்‌ கூடையை வைத்துவிட்டு, கோமணத்தை அவிழ்த்து அங்கேயே வெளிக்கு இருந்துவிட்டு, முதல்‌ துப்புரவாக ஒரு கல்லை எடுத்துத்‌ துடைத்துக்‌ கோமணத்தைக்‌ கொஞ்சம்‌ தொய்வாகப்‌ பாய்ச்சிக்‌ கொள்ளவேண்டியது. கூடையை எடுத்துக்கொண்டு நேரே கம்மாய்க்கரைக்குப்‌ போய்‌, போகும்போதே பல்‌ குச்சி நீளத்துக்கு ஒரு கம்மந்தட்டையை எடுத்து அதன்‌ கணுவுக்கு மேலாக ஒரு விரல்லிட்டு ஒடித்து அதை மென்று பல்லைத்‌ தேய்த்துக்‌ கொண்டேபோய்‌, கம்மாய்க்கரைக்குப்போய்‌, கம்மாய்க்குள்‌ அரை முழங்கால்‌ அளவு தண்ணீரில்‌ நின்றுகொண்டு முதல்‌ காரியமாய்‌ ‘கால்‌’ கழுவிவிட்டு; பிறகு வாய்‌, மூஞ்சி, கைகால்‌ கழுவிக்கொண்டு கூடையையும்‌ சும்மாட்டுக்குப்‌ பதிலாக மடித்துப்‌ போட்டுக்கொண்ட சாக்கையும்‌ எடுத்துக்கொண்டு தொழுவுக்கு வருவார்‌.

பருத்திக்கொட்டையை ஆட்டி மாடுகளுக்கெல்லாம்‌ தண்ணீர்‌ காட்டிவிட்டு, வீட்டுக்குப்போய்‌ கஞ்சி குடித்துவிட்டு, நிறைய நீத்துத்‌ தண்ணீரும்‌, அதில்‌ மிதக்கும்‌ தேங்காய்‌ பருமனில்‌ போடப்பட்‌ இரண்டு மூன்று கம்மஞ்சோற்று உருண்டைகளும்‌ கலயத்தின்‌ வெளிப்புறத்தில்‌ ஒட்டிவைக்கப்பட்ட துவையலுமாக கஞ்சிக்‌ கலயத்தைத்‌ தலையில்‌ தூக்கி வைத்துக்கொண்டு கோட்டேரைப்‌ போட்டுக்‌ கொண்டு போனால்‌ சாயந்திரம்‌ வீடு திரும்புவார்‌.

தங்களுடைய நாளில்‌ அந்தத்‌ தம்பதியர்‌ தங்களுக்காக செய்து கொண்ட ஒரே ஒரு காரியம்‌ தங்களுக்கு என்று அவர்கள்‌ ஒரு வீட்டைக்‌ கட்டிக்கொண்டதுதான்‌. அந்த ஊருக்கு மத்தியில்‌ ஒதுக்குப்புறத்தில்‌ ஓர்‌
இடத்தில்‌ கேட்பாரற்று ஒரு சிறிய காலியிடம்‌ இருந்தது. அந்த இடத்தை அவர்கள்‌ தேர்ந்தெடுத்தபோது யாரும்‌ ஆட்சேபணை செய்யவில்லை; உதவிகள்‌ செய்தார்கள்‌. இரண்டு நல்ல பாட்டாளிகள்‌ தங்களோடு இருப்பதை யாவருமே விரும்பினர்‌.

பப்பு தாத்தாவுக்கும்‌ அவருடைய மனைவிக்கும்‌ அப்பொழுது நல்ல பிராயம்‌. நத்தத்து மண்ணை கூடைகளில்‌ இருவருமே தலைச்சுமையாகவே கொண்டு வந்தார்கள்‌. வேலைக்குப்‌ போய்வந்த மிச்சநேரத்தில்‌ இந்த வேலை.

குளத்திலிருந்து தண்ணீரைக்‌ கொண்டுவந்து குடம்‌ குடமாக கொட்டி மண்ணை ஊறவைத்தார்கள்‌. அப்புறம்‌ மிதி. பப்பு தாத்தா பாடிக்கொண்டே மண்ணை மிதிப்பார்‌. அவருடைய மனைவி மண்ணை
உருட்டி உருட்டிக்‌ கொடுக்க அவரே படை வைத்தார்‌. பத்தடி நீளம்‌ எட்டடி அகலம்‌. இப்படியாக தினம்‌ தினம்‌ கொஞ்சமாக மண்‌ ஆற ஆற வைத்துக்கொண்டே வந்து, நெஞ்சு உயரம்‌ வந்தவுடன்‌ நிறுத்திவிட்டார்கள்‌. அப்புறம்‌ கூரை; பனை ஓலைகளால்‌. இடுப்பு உயரமுள்ள வாசல்‌. குனிந்துதான்‌ போய்வரணும்‌. ஜன்னல்‌ கிடையாது. எதுக்காக வேணும்‌ ஜன்னல்‌? காற்று வசதி இல்லாதவர்களுக்கல்லவா அது வேணும்‌? பதினாறு மணிநேரம்‌ திறந்தவெளியிலும்‌ காற்றிலேயும்‌ லோலாயப்பட்டு வருகிறவர்களுக்குக்‌ காற்றே இல்லாமல்‌ இப்படி ஒரு அமுக்கமாக முடக்கி எழுந்திருக்க ஒரு இடம்‌ மட்டும்‌ இருந்தாலே போதும்தானே?

கதவு மண்ணெண்ணெய்ப்‌ பலகைகளால்‌ ஆனது. அவர்கள்‌ இருவராகவே சேர்ந்து அந்த ‘வீட்டை’க்‌ கட்டி முடித்துவிட்டார்கள்‌. இது அவர்களுடைய நீண்டநாளையக்‌ கனவு, நான்கு கைகளின்‌ உழைப்பின்‌ பலன்‌. பப்பு தாத்தா தன்னுடைய இரண்டு கைகளையும்‌ சந்தனத்தில்‌ முக்கி எடுத்து அப்படியே கதவில்‌ பதித்தார்‌. அதில்‌ இரண்டு மனிதக்கைகளின்‌ முத்திரை பத்து விரல்களோடு விழுந்தது. சந்தணம்‌ காயக்காய அந்தக்‌ கைகளின்‌ பதிவு, ரேகைகள்‌ முதல்கொண்டு மிகவும்‌ தெளிவாகத்‌ தெரிந்தன. அவைகள்‌ இந்த உலகத்துக்கு ஒரு செய்தியை வற்புறுத்திக்‌ கூற விரும்புவதுபோல்‌ தோன்றிக்கொண்டே இருந்தது.

வீட்டில்‌ குடிபுகும்‌ அன்று பக்கத்து வீட்டுக்காரர்களெல்லாம்‌ விதைப்பெட்டி நிறைய உப்பும்‌ மஞ்சளும்‌ தேங்காயும்‌ வாழைப்பழங்களும்‌ கொண்டுவந்து வைத்தார்கள்‌. மிகவும்‌ ஏழைகளாக இருப்பவர்கள்‌ உப்பும்‌ மஞ்சள்‌ துணுக்கும்‌ மாத்திரம்‌ கொண்டுவந்து வைத்தார்கள்‌.

அன்று ராத்திரி பப்புப்‌ பாட்டி – தன்‌ கணவனுக்கு மாத்திரம்‌ கேட்கும்படியாக – கல்யாணப்பாட்டுப்‌ பாடினாள்‌. சந்தோஷம்‌ வரும்போதெல்லாம்‌ அவள்‌ கல்யாணப்பாட்டுப்‌ பாடுவாள்‌.

அந்த வருஷம்‌ ஊரில்‌ நல்ல மாசூல்‌, விவசாயக்கூலிகள்பாடு கொண்டாட்டம்தான்‌. பப்புப்பாட்டி ஒரு இருபது கையாட்களைத்‌ திரட்டினாள்‌. வேலைகளை மதிப்புப்‌ பிடித்துச்‌ செய்தார்கள்‌. கைக்‌ களைக்கே அவர்களுக்கு ஆளுக்கு மூன்றுபடி வீதம்‌ கூலி விழுந்தது.

கம்மம்‌ பயிரில்‌ ராமப்பயிர்‌ 1 தட்டுப்பட்டவுடன்‌, புஞ்சையின்‌ சொந்தக்காரரை அந்த ராமப்பயிருக்குப்‌ பக்கத்தில்‌ கொண்டுவந்து நிறுத்தி, காலில்‌ விழுந்து மூன்றுதரம்‌ குலவையிடுவார்கன்‌. இப்படி அவர்கள்‌ செய்யும்‌ இந்தப்‌ காரியத்துக்கு, தனியாக ஒரு ஆள்‌ கூலியைப்‌ புஞ்சைக்காரரிடமிருந்து வாங்கிவிடுவார்கள்‌. (பருத்தியில்‌ களையெடுக்கும்‌ போது பட்டரைச்‌ செடி தட்டுப்பட்டாலும்‌ இதே மாதிரிதான்‌.)

கோடைப்‌ பருத்தியின்‌ கடேசி நெருங்க ஆரம்பித்தது. ஆடிமாச முடிவில்‌ ஒரு நாள்‌ கூலிக்காரர்கள்‌ பறவைப்‌ பருத்தி 2எடுக்க ஆரம்பித்தார்கள்‌.

பப்புப்பாட்டி அன்று கோழிகூப்பிட எழுந்திருந்து போனவள்‌. மதியம்‌ அடித்திரும்புகிறவரை ஓடி ஓடி பறவைப்‌ பருத்தி எடுத்தாள்‌.

அன்று அவள்‌ இரண்டுகிலோவரை எடுத்துவிட்டாள்‌. தான்‌ ஏற்கனவே நிதமும்‌ பருத்திக்குப்‌ போய்ப்‌ பகிர்ந்து கொண்டுவந்து வைத்திருக்கும்‌ பருத்தியோடு இதையும்‌ சேர்த்துக்‌ கடையில்‌ கொண்டுபோய்ப்‌ போட்டுக்‌ தனக்கு ஒரு சேலையும்‌ அவருக்கு ஒரு வேட்டியும்‌ வாங்கினாள்‌.

ஐப்பசி மாசம்‌ வந்தது; அடைமழையும்‌ வந்தது. நாப்பது நாட்கள்‌ வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல்‌ பெய்தது. அடைமழைக்காகச்‌ சேகரித்து வைத்திருந்த தானியம்‌ தீர்ந்தது. வழக்கமாக வேலைசெய்யும்‌
பெரிய சமுசாரி வீடுகளில்‌ அதிகப்படி தானியமும்‌ வாங்கியாகி விட்டது.

பட்டினி கிடந்தார்கள்‌. ஈரத்துணியை வயிற்றில்‌ மடித்துப்‌ போட்டுக்கொண்டால்‌ பசிக்கிறது தெரியாது. பசியினால்‌ ஏற்படும்‌ வயிற்று வலியும்‌ குறையும்‌. இந்த நல்ல முறையை விவசாயக்‌ கூலிகள்‌ அனைவருமே அறிவார்கள்‌. பப்பு தாத்தா தம்பதியரும்‌ இந்த முறையைப்‌ பின்பற்றினார்கள்‌.

தாத்தா சொன்னார்‌ ‘சன்னகுட்டி (தன்னுடைய மனைவியை அவர்‌ பிரியமாகக்‌ கூப்பிடும்போது இப்படிப்‌ பெயர்‌ சூட்டித்தான்‌ அழைப்பார்‌!) இந்த ஈரத்துணிதான்‌ வயித்துக்கு எம்புட்டு இதமா இருக்கு. இதைக்‌ கண்டுபுடிச்ச அந்தப்‌ புண்ணியவாளன்‌ நல்லா இருக்கணும்‌.’

குளிர்‌ தாங்கமுடியாமல்‌ இருந்தது. ராத்திரியில்‌ விரித்துக்‌ கொள்ள ஒன்றுமில்லை. தாத்தா தன்னுடைய வேட்டியை அவிழ்த்து விரிப்பார்‌, அதில்‌ இருவரும்‌ படுத்துக்கொள்வார்கள்‌. பாட்டியின்‌ சேலையை
அவிழ்த்து இருவரும்‌ மூடிக்கொள்வார்கள்‌. ஒருவருடைய உடம்பின்‌ சூட்டில்‌ மற்றவர்‌ குளிர்காய்ந்துகொண்டு அயர்ந்து தூங்குவார்கள்‌.

தைமாசத்தில்‌ மழை தெளிந்து விவசாய வேலைகள்‌ ஆரம்பமாகும்‌.

பட்டினி கிடந்த உடம்பு கொஞ்சம்‌ மக்கர்‌ பண்ணும்‌. அதையெல்லாம்‌ பார்த்தால்‌ நடக்குமா? அடைமழைக்காலம்‌ தவிர விவசாயக்கூலிகளுக்கு தகிப்பாறும்‌ நாட்கள்‌ (லீவு நாட்கள்‌) வேறு ஏது? காலில்‌ நகம்‌ முளைத்த நாள்முதல்‌ அவர்கள்‌ தினம்‌ தவறாமல்‌ வேலை செய்தேதான்‌ பிழைத்து ஆகணும்‌.

பப்பு தாத்தா பிறந்ததிலிருந்து நாலு வயசுவரை பிறந்தமேனியாகத்‌ திரிந்தார்‌. ஐந்து வயசிலிருந்து எட்டு வயசுவரை ஒரு கோமணத்தை மட்டும்‌ வைத்துக்கொண்டு கம்மம்‌ பிஞ்சைகளுக்குக்‌ காவல்‌ காத்தார்‌.
ஒன்பது வயசிலிருந்து பன்னிரெண்டு வயசு வரை ஒரு துண்டை மட்டும்‌ கட்டிக்கொண்டு மாடு மேய்த்தார்‌. பதிமூணு வயசுவரை ரெட்டைக்‌ கலப்பை பிடிக்கிறது முதலிய வேலைகளைச்‌ செய்தார்‌. பதினாறாம்‌ வயசிலிருந்து அவர்‌ தனிக்‌ கலப்பை பிடித்து உழ ஆரம்பித்தார்‌.

ஏரைக்‌ கட்டி, உழ ஆரம்பிப்பதற்கு முன்னால்‌ மேழியைத்‌ தொட்டுக்‌ கும்பிட்டுவிட்டுத்தான்‌ உழ ஆரம்பிப்பார்‌. பரம நாஸ்திகன்‌ ஒருவன்‌ அந்தக்‌ காட்சியைப்‌ பார்த்தாலுங்கூட அதற்கு ஒரு நல்ல அர்த்தம்‌ தெரியும்‌. உண்மையிலேயே அது ஒரு மனசைத்‌ தொடும்‌ நிகழ்ச்சிதான்‌.

எப்பொழுதாவது அவர்‌ தன்‌ கூலியைத்‌ தானியத்துக்குப்‌ பதிலாகப்‌ பணமாக வாங்கிக்கொள்ளுவார்‌. அப்படிப்‌ பெற்றுக்‌ கொண்ட அந்தப்‌ பணத்தை முதல்காரியமாகத்‌ தலைபணிந்து இரண்டு கண்களிலும்‌
ஒற்றிக்கொண்ட பின்னரே, வேஷ்டியின்‌ சொறுகுமுனையில்‌ பவ்யமாக முடிய ஆரம்பிப்பார்‌. ஆம்‌, அது அவ்வளவு உயர்ந்த காசுதான்‌; அதற்கு அந்த மதிப்பு தகும்‌.

பதினாறு வயசில்‌ மேழி பிடிக்க ஆரம்பித்த அந்தக்கை அறுபத்தி ஓராவது வயசுவரையிலும்‌ மேழியை இடறவிடாமல்‌ அழுத்திப்‌ பிடித்தது. போஷாக்கு இல்லாததாலும்‌ அரைப்பட்டினியாலும்‌ தரத்துக்கு மிஞ்சிய வேலையாலும்‌ அவருடைய உடம்பு, வேகமாகச்‌ சக்தியை இழந்து மங்கலாக ஒளிவிடும்‌ ஒரு ‘பாட்டரி’யின்‌ நிலைக்கு வந்துவிட்டது.

விளக்குப்‌ பொருத்துகிற நேரத்துக்குமேல்‌ மாலைக்கண்‌ வந்துவிடும்‌. ஒரு குருடனைப்போல்‌ தெருவழியே தடுமாறிக்‌ கொண்டு செல்வார்‌.

கிராமங்களில்‌ இது ஒரு சோகம்‌.

எழுபது வயசுக்குப்‌ பிறகு அவரால்‌ மேழி பிடிக்கமுடியவில்லை. ஆகவே அவர்‌ தன்னுடைய ஒன்பது வயசில்‌ செய்த மாடு மேய்க்கும்‌ வேலைக்குப்‌ போனார்‌. மாடு மேய்க்கும்‌ வீட்டிலேயே அங்கே கஞ்சி குடித்துக்கொள்வார்‌.

மாசம்‌ நாலு ரூபாய்‌ சம்பளம்‌. மாதமுடிவில்‌ இந்த நான்கு ரூபாய்களை வாங்கிக்கொண்டுபோய்ப்‌ பாட்டியிடம்‌ கொடுப்பார்‌. அவள்‌ அதை வாங்கி வெகுநேரம்‌ பார்த்துக்கொண்டே இருப்பாள்‌. இந்தப்‌ பணத்தில்தான்‌ அவள்‌ ஒரு மாசத்தை ஓட்ட வேண்டும்‌. இதுவரை அவர்களுக்கு எந்தவிதமான வெத்திலை பாக்குப்‌ போயிலை பொடி முதலிய துர்ப்பழக்கங்கள்‌ இல்லை யாயினும்‌ பாட்டிக்கு மாத்திரம்‌ சமீபத்தில்‌ ஒரு பழக்கம்‌ ஏற்பட்டிருந்தது; எல்லோரும்‌ பொடியை மூக்கிலும்‌ பற்களிலும்‌, உபயோகப்‌ படுத்துவார்கள்‌. ஆனால்‌ பப்புப்‌ பாட்டி அப்படியில்லை.

அவளுக்கு கிருமித்தொல்லை அதிகம்‌; ராத்திரிகளில்‌ தூங்க முடியாது. ஆகவே அந்த இடத்தில்‌ ஒரு சிட்டிகை பொடியை வைத்தால்தான்‌ அவளால்‌ நிம்மதியாகத்‌ தூங்கமுடியும்‌. பக்கத்து வீடுகளில்‌ பெண்களுக்கு அவள்‌ தன்னால்‌ இயன்ற எடுபிடி ஒத்தாசனை வேலைகளைச்‌ செய்து ஒரு வேளைக்கு நீத்துப்பாகம்‌, வடிதண்ணீர்‌ முதலியவற்றை வாங்கிக்‌ குடித்துக்கொள்வாள்‌. சிலநாளைக்குக்‌ கேப்பைக்கூழோ கம்மங்கஞ்சியோகூடக்‌ கிடைப்பதும்‌ உண்டு.

பாட்டியிடமிருந்து அவர்‌ புறப்படும்போது அவள்‌ அவருடைய உடம்பைத்‌ தடவிவிட்டுக்கொண்டே சொல்லுவாள்‌, ‘பெரியவரே, நீர்‌ என்னைக்‌ கட்டிக்கொண்டு ஒரு சொகத்தையும்‌ அடையலை ‘ என்பாள்‌.
அவளுடைய வயோதிக முகத்தில்‌ சோகம்‌ நிழலிடும்‌. பார்வை எங்கேயோ நிலைக்கும்‌.

‘கோட்டிப்‌ பொம்பளை! அப்படியெல்லாம்‌ பேசாதே; . . . உனக்குத்தான்‌ நான்‌ ஒரு சவுரியமும்‌ செய்யலை’ இப்படிச்‌ சொல்லிவிட்டு, அவர்‌ அடக்கமுடியாமல்‌ ‘நமக்கு ஒரு பிள்ளை இல்லை. இருந்திருந்தால்‌, இந்தத்‌ தள்ளாத வயசில்‌ இப்படி நாம அல்லாடவேண்டாம்‌.’

அவர்‌ இப்படிச்‌ சொல்லும்போதுமட்டுமே பாட்டியால்‌ தாங்கிக்கொள்ள இயலாது. கொஞ்சநேரம்‌ உட்கார்ந்து அழுவாள்‌. அப்புறம்‌ மூக்கைச்‌ சிந்தி எறிந்துவிட்டு வயத்துப்பாட்டைக்‌ கவனிக்க ஆரம்பித்து விடுவாள்‌.

பப்பு தாத்தாவின்‌ வாழ்க்கையில்‌ குறிப்பிட்டுச்‌ சொல்லும்‌ படியாக ஏதேனும்‌ சம்பவங்கள்‌ நடக்கவில்லையா என்று கேட்டால்‌ . . . கொஞ்சம்‌ நடந்தது என்றுதான்‌ சொல்லவேண்டும்‌.

ஒருநாள்‌ அந்தக்‌ கிராமத்தின்‌ முதலாளியின்‌ பேரன்‌ கம்மாய்க்‌ கரையிலிருக்கும்‌ பெரிய நவ்வாமரத்தில்‌ ஏறி நவ்வாப்‌ பழம்‌ பறித்துக்கொண்டிருந்தான்‌. ஒரு கிளையில்‌ நுனியிலுள்ள பழத்தை எட்டிப்‌
பறிக்க அவன்‌ முயற்சி செய்யும்போது அந்தக்‌ கிளையே ஓடிந்துவிட்டது.

தற்செயலாக அந்தச்‌ சமயத்தில்‌ அங்கே ‘கால்‌’ கழுவவந்த பப்புதாத்தா, தலைக்குமேலே கிளை ஒடிந்த சத்தம்‌ கேட்டு மேலே பார்த்தவர்‌, கீழே விழத்‌ தரையை நோக்கி வந்துகொண்டிருக்கும்‌ பையனை அப்படியே தன்னுடைய வலுவான கரங்களில்‌ ஏந்தி அணைத்துக்கொண்டார்‌. அந்தப்‌ பையன்‌ உயிர்‌ பிழைத்தது. அல்லது கால்‌ கை எதுவும்‌ முடமாகாமல்‌ ப்பாற்றியது பப்பு தாத்தாதான்‌ என்று அப்பையனின்‌ குடும்பமும்‌ ஊரும்‌ சொன்னது.

ஊரில்‌, மேல்காற்று சமயத்தில்‌ தீவனப்‌ படப்புகள்‌ விரோதத்தின்‌ காரணமாக – தீப்பற்றி எரியும்‌ சமயங்களில்‌, தனது உயிரைத்‌ திரணமாக மதித்து எத்தனையோ தடவைகள்‌ பெரு நெருப்பை அணைக்கப்‌ பப்பு தாத்தா உதவியிருக்கிறார்‌. ‘பாவிப்பயல்களா, உங்களுக்குள்‌ விரோதம்‌ இருந்தால்‌ மாடுகள்‌- வாயில்லாச்‌ சீவன்கள்‌ – என்ன செய்யும்‌, அதனுடைய பாவத்தில்‌ கொண்டுபோய்‌ இப்படிக்கை வைக்கீறீர்களேடா; நீங்கள்‌ விளங்குவீகளா?’ என்று முணுமுணுப்பார்‌.

ஒரு பெருந்தனக்காரரின்‌ மகள்‌ – கன்னி கழியாதவன்‌ – சொல்ல முடியாத காரணத்துக்காகக்‌ கிணற்றில்‌ விழுந்து இறந்து போனாள்‌. அர்த்தராத்திரியில்‌ கிணற்றினுள்‌ மிதந்த உடம்பை எடுக்க யாருமே
முன்வரவில்லை. இவர்தான்‌ இறங்கி எடுத்து மேலே கொண்டுவந்தார்‌. கிராமத்தின்‌ வழக்கப்படி உடம்பை உடனே மயானத்தக்குக்கொண்டு போய்‌ எரித்துவிடவும்‌ உதவினார்‌ இவர்‌.

கோடையில்‌ அருகு எடுக்கும்போது ஒருநாள்‌. அவருடைய மனசில்‌ வடு ஏற்படுத்திய ஒரு சம்பவம்‌. அவரோடு பலரும்‌ அருகு எடுத்துக்கொண்டிருந்தார்கள்‌. இவர்‌ பல்க்கம்பி போட்டுக்கொண்டிருந்தார்‌.
இவருக்கு ஜோடியாக ஒரு இளவட்டம்‌ மண்வெட்டி பிடித்தான்‌. அவன்‌ சில இடங்களில்‌ தப்பருகு விட்டான்‌. அப்பொழுது அவனை அவர்‌, ‘தம்பி, பார்த்து வேலைசெய்‌. பிஞ்சைக்குச்‌ சொந்தக்காரன்‌ அறுபது
நாழியப்பொழுதும்‌ நம்ம கூடவே இருக்கமாட்டான்‌. நாம வாங்குகிற கூலி நமக்கே வத்திக்கணுமில்லே !’ என்றார்‌.

‘சரிதான்‌; உம்ம பேச்சைக்‌ கேட்டு அருகை வள்ளிசா எடுத்துட்டா அடுத்த வருஷம்‌ கோடையிலே நாம கஞ்சிக்குத்‌ ததிகிணத்தோம்‌ போட வேண்டியதுதான்‌’ என்றான்‌.

இந்த பதில்‌ அவரை அதிர வைத்தது.

அங்கே வேலை செய்துகொண்டிருந்தவர்கள்‌ பல அபிப்ராயங்களைச்‌ சொன்னார்கள்‌ அந்த இளவட்டத்தினுடைய பதிலை ஒட்டியே.

அருகை பூசை பண்ணுகிறது விளையாட்டுக்கில்லை! அது நமக்கு அருங்கோடையிலும்‌ சாப்பாட்டு போடுகிறது.

‘கைநாழிக்கு மூணுபடி கூலி வாங்கினா திரும்ப அளந்து பாக்கிறபோது ரெண்டரைப்‌ படி இருக்கு; அதுக்கு இந்த வேலை காணாதாக்கும்‌.’

‘அண்ணாச்சி பயப்படாதிங்க; நாளைக்கு நிலமெல்லாம்‌ நமக்குச்‌ சொந்தமாயிடும்‌; அப்போ அருகைச்‌ சுத்தமா எடுத்திருவோம்‌.’

அவர்‌ முணுமுணுத்துக்கொண்டார்‌, ‘சாவஞ்‌ செத்த பயல்களா, நாளைக்கு நிலமெல்லாம்‌ நமக்கே சொந்தமானாலும்‌ நீங்க அன்னைக்கும்‌ இப்படிதானிருப்பீங்க.’

அவரை அவர்கள்‌ சர்வ கேலி செய்தார்கள்‌.

ஊரின்‌ முதலாளியின்‌ மருமகன்‌ – (அவன்‌ சின்னப்பிள்ளையாக இருந்தபோது இவர்‌ பிரியமாக எடுத்துவைத்துச்‌ சுமந்துகொண்டு திரிவார்‌) பெரியவனாகிவிட்ட அவனைப்‌ பார்த்து ஒருநாள்‌,

‘மாப்பிளேய்‌, செளகரியமா இருக்கியா?’ என்று அன்பாக விசாரித்தார்‌. முதலாளி என்று கூப்பிடாமல்‌ இந்தக்‌ கூலிக்காரன்‌ தன்னை முறைகொண்டாடி மாப்பிள்ளை என்று கூப்பிடலாச்சா என்று ரெம்பக்‌
கேவலமாக – எழுதவே கைகூசும்‌ கெட்டவார்த்தைகளால்‌ – திட்டி அவரைத்‌ தலைகுனிந்து செல்லும்படி வைத்தான்‌.

இப்படியெல்லாம்‌ ஒரு சாதராணமானவன்‌ வாழ்க்கையில்‌ நடக்கும்‌ இந்த மாதிரியான நிகழ்ச்சிகள்‌ தான்‌ அவருடைய வாழ்க்கையிலும்‌ நடந்ததேயன்றி வேறு வீரதீரமான நிகழ்ச்சிகள்‌ எதுவும்‌ அவருடைய
வாழ்க்கையில்‌ நடந்துவிடவில்லை.

பப்பு தாத்தா தம்பதியருக்கு இப்பொழுதெல்லாம்‌ ஒரு வேலையும்‌ செய்யமுடிகிறதில்லை. மிகவும்‌ வயோதிகத்தினால்‌ தவங்கிப்போய்‌ விட்டார்கள்‌. ஒருநாள்‌ பெய்த தாங்கமுடியாத கனமழையினாலும்‌
காற்றாலும்‌ அவர்களுடைய வீடு இடிந்து தரைமட்டமாகிவிட்டது. ஊருக்கு மேற்கே உள்ள கண்மாயை ஓட்டி ஒரு கல்மண்டபம்‌. அவர்கள்‌ இப்பொழுது அங்கேதான்‌ இருக்கிறார்கள்‌. வயிற்றுக்கு மாத்திரம்‌
ஊருக்குள்ளே வருவார்கள்‌. பாட்டியின்‌ சேலை கந்தல்‌ கந்தாலாகிக்‌ கிழிந்து கந்துகந்தாகி உடுத்த முடியாமலாகிவிட்டது. அதனால்‌, அவள்‌ ஊருக்குள்‌ வருவதில்லை; என்னயிருந்தாலும்‌ பொம்பிளை அல்லவா?

சாவுக்காகத்தான்‌ இப்பொழுது அவர்கள்‌ காத்திருக்கிறார்கள்‌. ஆனால்‌ சாவு வரமாட்டேன்‌ என்கிறதே லேசில்‌. சித்திரபுத்தனுடைய கணக்கில்‌ ஏதோ கோளாறாகிவிட்டதோ என்னமோ! எப்பவாவது ஊருக்குள்‌
சாகக்கூடாதவர்கள்‌ திடீரென்று செத்துப்போவார்கள்‌. அந்த வீட்டின்‌ பக்கத்து வீட்டுக்காரர்களெல்லாம்‌ பேசி வைத்தமாதிரி ஒருவருக்கொருவர்‌ சொல்லிக்கொள்வார்கள்‌; ‘இந்தச்‌ சாவு அந்தப்‌ பப்புப்‌ பாட்டி கிழடுகளுக்கு வரக்கூடாதா.”

‘ஆமாம்‌, அதுதானே.’

அந்த வங்கிழடு தம்பதியருக்கு இப்பொழுதெல்லாம்‌ ஒரே ஒரு ஆசைதான்‌. இழவு வீடுகளில்‌ போய்‌ உட்கார்ந்து, இலைபோட்டு, அதில்‌ நிறைய்ய நெல்லுச்சோறு போட்டு காரமும்‌ புளிப்புமாயுள்ள பூஷணிக்காய்க்‌ குழம்பை தாராளமாய்‌ விட்டு- மூக்கில்‌ நீர்‌ சொட்டச்‌ சொட்ட – பெரிய பெரிய கவளமாகச்‌ செய்து ஆசைத்ரச்‌ சாப்பிட வேண்டும்‌ என்பதுதான்‌.

கொஞ்சநேரத்துக்கெல்லாம்‌, ஒருவர்‌ முகம்‌ ஒருவருக்கும்‌ தெரியாத மாலை நேரம்‌ வரப்போகிறது. எல்லா ரகப்‌ பறவைகளும்‌ தங்கள்‌ பந்து இனங்களுடன்‌ இரை தேடிவிட்டுக்‌ கூடுகளை நோக்கிப்‌ போய்க்கொண்டிருக்கின்றன. அந்தக்‌ கல்மண்டபத்தைத்‌ தவிர வீடுகள்‌ யாவற்றிலும்‌ தீபம்‌ பொருத்தியாகிவிட்டது. அங்கிருந்து ஒரு உருவம்‌ குனிந்து ஒருகையால்‌ கம்பை ஊன்றித்‌ தலை கிடுகிடு என்று நடுங்கத்‌ தட்டுண்டு தடுமாற ஊருக்குள்‌ நுழைகிறதே, அது யார்‌ தெரிகிறதா?

அதுதான்‌ பப்பு தாத்தா. அவர்‌ கையில்‌ இருப்பது என்ன என்று தெரிகிறதா? அது ஒரு மண்சட்டி.

– தாமரை, ஜூலை-1969

1.ராமப்‌ பயிர்‌: கம்மம்‌ பயிரில்‌, ஒரு பயிரின்‌ சோகையில்‌ வெண்ணிறமான கோடு ஒன்று அபூர்வமாக விழுந்திருக்கும்‌. அந்தப்‌ பயிரை சமுசாரிகள்‌, ராமப்பயிர்‌ (நாமப்பயிர்‌) என்று அழைப்பார்கள்‌. ராமப்பயிர்‌ விழுந்திருந்தால்‌ அந்த வருஷம்‌ நல்ல மாசூல்‌ காணும்‌ என்று ஒரு நம்பிக்கை.

2. பறவைப்‌ பருத்தி: பருத்தி வெடிப்பு இனி ஓய்ந்துவிடும்‌ என்று தெரிந்தவுடன்‌ கூலிக்காரர்கள்‌ நிலங்களில்‌ புகுந்து தங்கள்‌ தங்கள்‌ இஷ்டப்படி(சொந்தத்துக்கு) எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள்‌. அவர்களை யாரும்‌ அந்தச்சமயத்தில்‌ ஒன்றுஞ்‌ சொல்லக்கூடாது. அந்த நாள்‌ அவர்களுடையது. கூலிகளுக்கு அன்று ஒரு கொண்டாட்டமான நாள்‌.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *