கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 14, 2020
பார்வையிட்டோர்: 5,384 
 

கொரோனா தொற்றுக்கு அஞ்சி சொந்த ஊர் வந்து இருபது நாட்களாகிவிட்டது. சொந்த ஊர், சொந்த வீடு.

நகராட்சி விடும் தண்ணீர் காலை 6 மணி முதல் 7 மணி வரை தொட்டியில் வந்து விழும். மோட்டார் போட்டு ஏற்றி விட்டால் போதும். கண்ணாடி போல சுத்தமாகவும் ஐஸ் போன்ற ஜில்லிப்புடன் இருக்கும் குளிர்ச்சியான தண்ணீர். குளிப்பதற்கு சுகமாக இருப்பது மட்டுமல்ல. குளித்துமுடித்து உடுத்திக்கொண்டு உலவும் அடுத்த ஒரு மணி நேரத்துக்கும் தண்ணீரின் குளிர்ச்சி உடம்பில் இருந்து மனதை சந்தோஷப்படுத்தும்.

சிறிய ஊர் என்பதாலோ என்னவோ பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள் பேசுவது நன்றாகவே கேட்கும். காலை நேரம் தூரத்தில் மயில் அகவுவது காதில் விழும். 30, 40 மீட்டர் தூரம் போன பின்பும், கடந்து போகும் மோட்டார் வண்டிகளின் ஓசை தொடர்ந்து கேட்கும். குறிப்பாக வீதியில் போகும் வியாபாரிகளின் குரல். பக்கத்துத் தெருவில் அவர்கள் கூவுவதுகூட நன்றாகக் கேட்கும்.

இன்றைக்கு காய்கறி வாங்கியே ஆகவேண்டும் என்றிருந்த ராகவனுக்கு அப்படிப்பட்ட ஒரு சத்தம் கேட்டது. சத்தம் பலமாக இருந்ததே தவிர, என்ன விற்கிறார்கள் என்று புரியவில்லை. வீட்டைவிட்டு வேகமாக வெளியே வந்து வாசல் கேட்டுக்கு மேல் எம்பிப் பார்த்தான். நோய்த் தொற்று காரணமாக கடைகளுக்குப் போவதில்லை. பலவும் வாசலுக்கு வரும். வாங்கிக்கொள்ளலாம்.

பின் கொசுவம் வைத்து கட்டிய சேலையின் முந்தானையை சுருட்டி தலை சுமைக்கு கீழ் வைத்தபடி ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, தலையில் இரண்டு உரப் பைகளில் எதையோ வைத்திருந்தாள். ராகம் இழுத்தமாதிரி என்னவோ கூவியபடி போய்க்கொண்டிருந்தாள். அடுத்த தெருவிற்குள் நுழைய இருந்தவளைப் பார்த்த ராகவன், உரத்த குரலில் கூப்பிடக் கூச்சப்பட்டு, கையை மெதுவாகத் தட்டினான். உடனே ராகவன் பக்கம் திரும்பிய அந்தப் பெண்மணி தொடர்ந்து அதே புரியாத வார்த்தைகளை சத்தமாகச் கூவியபடி அவன் வீட்டை நோக்கி வந்தாள்.

கோலமாவு ஆக இருக்குமோ என்று யோசித்தபடி கூர்ந்து கவனித்தான். அவன் வீட்டை நெருங்கிவிட்ட அந்த அம்மாள், ’கேரேவண்ட்க்கேகெத்ரிகே’ என்று மீண்டும் கூவ, ’கீரை, கத்தரிக்காய், வெண்டைக்காய்’ என்பதைத்தான் வார்த்தைகளுக்கு இடையே இடைவெளிகொடுக்காமல், மூன்றையும் சேர்த்து வினோதமாக என்று கூவுகிறாள் என்று ராகவனுக்குப் புரிந்தது. ’நல்ல வேளை. காய்கறிதான். வாங்கிக்கொடுத்துவிட்டால், குளிக்கப் போகலாம். 9 மணிக்கு லேப்டாப் பில் அலுவலக வேலையில் உட்காரவேண்டும். ஜூம் மீட்டிங் இருக்கிறதே’ என்று நிம்மதியானான்.

கேட்டைத் திறந்து, “உள்ள வாங்க” என்று சொல்லிவிட்டு வாயையும் மூக்கையும் மறைக்கும் மாஸ்க் போட்டுக்கொள்ளவும், பணம் எடுத்து வரவும் வீட்டிற்குள் ஓடினான்.

அந்த அம்மாளும் ‘மாஸ்க்’ மாதிரி ஒரு துணி கட்டியிருந்தார்கள். ஆனால் அது தாடையை மட்டும் சுற்றியிருந்தது. மூக்கும் வாயும் மூடப்படவில்லை. இப்படியிருக்கும் போதே அவர் கத்துவது புரியவில்லை. வாயைக் கட்டிக்கொண்டுவிட்டால் பிறகு எப்படி கத்துவார், விற்பார்! என்று சமாதானம் ஆனான்.

தலையில் இருந்து இறக்கி, நாற்றுநடுவது போன்ற முறையில் கால்களை அகல விரித்துக்கொண்டு குனிந்து நின்றபடி, பைக்குள் கையைவிட்டு, முருங்கைக் கீரை, புதினா போன்றவற்றை பையில் இருந்து எடுத்து வெளியே வைத்துக் கொண்டிருந்தார்கள்.

“அம்மா..அம்மா. முதல்ல அந்த மாஸ்க்கை சரியாப் போடுங்க” என்று ராகவன் சொல்லிக்கொண்டிருக்கையில் அவன் மனைவி சுகந்தி அங்கே வந்துவிட்டார்கள்.

”நீங்க உள்ள போங்க. நான் வாங்றேன்”

“நீ உள்ள போ. முதல்ல வாயக் கட்டிக்கிட்டு வா”

இருவரையும் நிமிர்ந்து பார்த்த அந்த அம்மாள், “என்ன ரெண்டு பெரும் இப்படிப் பேசுறீஹ! எனக்கு கொரானாவெல்லாம் இல்லைங்க. நான் முள்ளிக்கொண்டிலிருந்து வாறேன். அங்கிட்டெல்லாம் யாருக்கும் கொரானா இல்ல. பயப்படாதீஹ” என்றார்கள்.

காய்கறிப் பையை நெருங்கிப் போன சுகந்தியின் கையை பிடித்து பின்னுக்கு இழுத்த ராகவன், ”சொன்னாக் கேளு. கிட்டக் கிட்டப் போகாதே” என்று சத்தம் போட்டான்.

“கிட்டப் போகாம! வெண்டைக்காய் எல்லாம் தள்ளி நின்னா வாங்க முடியுமா? முற்றல் பார்த்து வாங்க வேண்டாமா?” என்று பதிலுக்கு சுகந்தி கோபமாய் கேட்டார்.

“இல்ல தாயி. வெண்டைக்காயை உடைக்காதே! எல்லாரும் உடைச்சுப் போட்டா நா எப்படி விக்க முடியும்!” என்று சொல்லியபடி, ”இதோ பாரு. பெருசா இருக்கே தவர எல்லாம் இளசு”’ என்று ஒரு வெண்டைக்காயை எடுத்துக் காட்டினார்கள்.

“கிலோ எவ்வளவு?” என்று சுகந்தி கேட்க,

”கால் கிலோ 24 ரூபா”

“அடேயப்பா! அப்ப கிலோ நூறு ரூபாயா?”

“ஹூம்! அதெப்படி நாலு 24, நூறுங்கிறீஹ பட்டணத்துக்கார! 96 ரூவாதானே சொல்றேன்”

”கணக்கெல்லாம் கரெக்டாதான் சொல்ற. நாங்களும் இந்தூருக்காரக தாம்மா” என்று ராகவன் சிரிக்க, அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, மீண்டும் ஒரு வெண்டைக்காயின் முனையை சுகந்தி உடைக்க முயல,

“வேணாம் தாயி. நீ வெண்டைக்காவ விட்டிரு. வாங்க வேணாம்” என்று சொன்னார்கள்.

மேலும் உடைக்காமல் அந்த அம்மாள் போட்டதை வாங்கிக்கொண்டு, “கொத்தவரை என்ன விலை? அதுவும் 96 ரூபாவா?” என்று சுகந்தி கேட்க,

“ ஹாங்.. நான் என்ன அநியாய விலையா விக்கிறேன்! இப்படிக் கேக்குறீக! கிலோ 60 ரூபாய் தேன்”

” கிலோ அம்பதுன்னு கொத்தவரங்கா அரை கிலோ போடு. வெண்டைக்காய் கிலோ 70தான் கொடுப்பேன்”

“ஆத்தாடி. அம்மபுட்டு குறைவாவா? முடியாது. வேண்டாண்ணா விட்றுங்க..என்ன வெலை கொடுத்து தோட்டக்காரஹகிட்டயிருந்து வாங்யாறோம்! இப்படிக் கேக்குறீஹ!!”

“உடைக்கவும் கூடாதுங்கிற. விலையும் குறைக்க மாட்டேங்குற! பிஃக் பேஸ்கட்டுல இதெல்லாம் என்ன விலை தெரியுமா?” என்று சுகந்தி சத்தமாய் கேட்க, அதற்கு அந்த அம்மாளும் ஏதோ சத்தமாய் பதில் சொல்ல, ராகவன் பதறிவிட்டான்.

சுகந்தி அந்த அம்மாளுடன் பேரம் பேசுவது ராகவனுக்கு பிடிக்கவில்லை. அதுவும் இருவரும் சத்தமாய் பேசுவது பக்கத்து வீடுகளுக்கு கேட்குமே! என்று ராகவனுக்கு அசூசையாக இருந்தது. கையைப் பிடித்து சுகந்தியை தன் பக்கம் இழுத்து, அவள் காதில், “இவ்வளவு தூரம் வெயிலில் தூக்கி வந்து வீட்லயே தர்றாங்க. அவுங்கக்கிட்ட போய் பேரம் பேசுறியே!” என்றான்.

சுகந்தி, ராகவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு வேறு ஏதும் பேசாமல் விருவிருவென்று வீட்டினுள் போய்விட்டாள்.

“நீங்க போடுங்கம்மா” என்றபடி, ராகவன் கொத்தவங்காயை எடுத்து தராசுத் தட்டில் வைத்தான்.

நிமிர்ந்து நின்றுகொண்டு, ”விலை அதேதேன் சாமி. குறைக்க முடியாது” என்றார்கள் அந்த அம்மாள்.

”சரி, சரி. போடுங்கம்மா”

கீரையையும் புதினாவையும் எடுத்து கூடையில் வைத்துக்கொண்டு, “எல்லாத்துக்கும் என்ன ஆச்சு? “ என்று கேட்டான்.

சத்தமாக, கீரை, புதினா, வெண்டை, கொத்தவரை என்று வரிசையாகவும் சரியாகவும் விலைகளை கூட்டிய அந்த அம்மாள், ”மொத்தம் 196 ரூபா” என்றார்கள்.

ராகவன் எதுவும் பேசவில்லை. ”இந்தாங்க” என்று ஒரு 200 ரூபாய் தாளை நீட்டினான். தனது சுருக்குப் பையிலிருந்து மீதம் 4 ரூபாயை அந்த அம்மாள் தேட, “வேண்டாம்ம்மா” என்று சொல்லிவிட்டு, மேலும் ஒரு இருபது ரூபாய் தாளை எடுத்து அவரிடம் கொடுத்து, “இந்தாங்க இதையும் வச்சுக்குங்க. காயெல்லாம் நல்லா இருக்கு “ என்றான். உடன் அந்த அம்மாள் கூடுதல் பணத்தை வாங்க மறுப்பார்களோ என்ற எண்ணமும் வந்தது.

அந்த அம்மாள் ஏதும் சொல்லவில்லை. ஏறிட்டு ராகவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, வாங்கிக்கொண்டார்கள். அடுத்து பைக்குள் கையை விட்டு துழாவி, இரண்டு வாழைக் காய்களை எடுத்து நீட்டினார்கள். உடன், “நாட்டுக்காய். கூட்டுகறிக்கு நல்லா இருக்கும். வைச்சுக்க” என்றார்கள்.

அவர்கள் சும்மா கொடுப்பதை கட்டாயமாய் வாங்க மறுத்த ராகவன் கேட்டைக் கூட சாத்தாமல், காய்ப் பையுடன் வீட்டிற்குள் போய்விட்டான்.

போனவன், அந்த அம்மாள் கிளம்பிப் போவதற்காக ஹாலிலேயே காத்திருந்தான். சில நிமிடங்களில் ’கேரேவண்ட்க்கேகெத்ரிகே’ என்ற சத்தம் வீட்டிற்கு வெளியில் கேட்டது. கூடுதலாகக் கொடுத்த காசுகுக்கு பதிலாக வாழைக்காயை எடுத்துக்கொள்ளாத சந்தோஷத்தில் குளிக்கப் போனான்.

அவன் குளியல்றையில் இருக்கையில் சுகந்தி, குளியலைறைக் கதவுக்கு வெளியில் நின்று, “இதென்ன இரண்டு வாழைக்காய் தரையில கிடக்கு . வெளியிலேயே விட்டிட்டு வந்திடீங்களா! என்ன விலைன்னு கொடுத்தா! 40 ரூபாயின்னு உங்க தலையில கட்டியிருப்பாளே!” என்று சத்தமாக கேட்டார்கள்.

ஏதும் பதில் சொல்லாமல் ராகவன் அடுத்த டப்பா பச்சைத் தண்ணீரை உடம்பில் ஊற்றிக் கொண்டான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *