கர்நாடக விஜயம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 9, 2021
பார்வையிட்டோர்: 5,043 
 

(1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சப் கலெக்டர் சீதாராமனுக்குச் சம்பளம் ஆயிரத்து இருநூறு ரூபாய். ஆனாலும் குடும்ப வாழ்க்கை மிகவும் சிக்கனமாக நடந்து வந்தது. ‘சிக்கனம் ஏன்? திராபை’ என்றே ஊரிலுள்ள மற்ற உத்தியோகஸ்தர் முதலியவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டு ஏளனம் செய்வார்கள்.

புருஷனும் பெண்டாட்டியும் அத்தியந்த அன்புடன் வாழ்க்கை நடத்தினார்கள். ஆனால் ஒரு விஷயம் ரகசியமாகவே இருந்தது. மாதம் தவறாமல் சம்பளம் வாங்கினவுடன் எஜமானர் சீமைக்கு ரூ.900 அனுப்பி விடுகிறாரே, இதற்குக் காரணம் என்னவென்று மனைவியால் தெரிந்து கொள்ள முடியவில்லை. முதலில் ஏதோ சீமையில் நல்ல பாங்கியில் பணம் வைத்து வருகிறார் என்று எண்ணிச் சந்தோஷப்பட்டாள். பிறகு அவ்வாறு இருக்காது என்று தெரிந்து கொண்டாள். பணம் சேர்த்து வைக்கும் சிக்கனத்திற்கும் ரொம்ப வித்தியாசம். தினசரி நடவடிக்கையிலும் மனநிலைகளிலும் இது நன்றாக வெளிப்படையாகிவிடும்.

ஒரு நாள் மனைவியிடம் சீமையில் தான் ஏதோ கடன்பட்டு விட்ட தாகவும் அதைத் தீர்ப்பதற்காக இவ்விதம் மாதந்தோறும் பணம் அனுப்புவதாகவும் சீதாராமன் சொன்னான். எல்லாச் செலவுகளுக்கும் ஊரிலிருந்து பணம் அனுப்பி வந்திருக்க, இம்மாதிரி கடன்படுவதற்குக் காரணம் என்ன என்பது மனைவிக்கு விளங்கவில்லை. ஆயினும் எஜமானர் பேச்சை நம்பாமல் கேள்விகள் அதிகமாகக் கேட்க இயலாது. அதைப் பற்றிப் பேச்சு எடுத்தால், பேச்சை மெள்ள மாற்றிவிட்டு வேறு விஷயத் திற்குப் போய்விடுவான். சீமை வாழ்க்கையைப்பற்றிப் பலர் பேசிக் கொள்வதைக் கேட்டுச் சில சமயம் மனைவிக்குப் பல சந்தேகங்களும் தோன்றும். ஆனால் சீதாராமன் அவளிடம் காட்டிவரும் அன்பானது அந்தப் புகைச்சலை எல்லாம் உடனே ஓட்டிவிடும். ‘எது எவ்வாறானாலும் அதைப் பற்றி எனக்கு என்ன? சம்பளமே முந்நூறு ரூபாய் என்று வைத்துக் கொள்வோமே’ என்று இவ்வாறு மனத்தைச் சாந்தப்படுத்திக்கொள்வாள். பாரத நாட்டுப் பதிவிரதா தருமத்தின் சக்தி இதுவே.

மாமனார் பணத்தைக் கொண்டு தான் சீதாராமன் சீமைக்குப் போய் அங்கே மூன்று வருஷம் இருந்து ஐ.ஸி.எஸ். தேறினது. இவன் சீமைக்குப் போகும்போது மனைவி சுந்தரிக்குப் பத்தொன்பது வயசு. லட்சணமான பெண். ஆனால் பழைய காலத்து நகைகள் போட்டுக்கொண்டு பழைய காலத்து உடை உடுத்து வந்தாள். அது புருஷனுக்குத் திருப்தி தரும் என்று அவள் எண்ணம். ஒரு புதிய நகை வாங்கி மாட்டிக்கொண்டால் முகத்திற்கு ஒரு புது அழகு சம்பாதித்துவிட்டதாக அவளும் அவள் தாயும் நம்பினார்கள். சீதாரா மனோ, பாவம்! தன் மனைவி இந்த மூக்குப் பொட்டும், பெரிய காதுத் தோடுகளும் இல்லாமல் லேசான வளையல் மட்டும் கைக்குப் போட்டுக்கொண்டு வேறு ஆபரணங்கள் இல்லாமல், லேசான புடைவை, தொங்குக் கொசாம் இல்லாமல் நாகரிகமாக உடுத்து, இந்தக் கோரமான பட்டுக்கரை முழங்கை ரவிக்கைக்குப் பதில் கொஞ்சம் குறைவாகவே ஏதாவது வைத்துப் போட்டுக்கொண்டால் நன்றா யிருக்குமே என்று எண்ணி எண்ணி வருந்துவான். அவனும் உண்மையில் ஒரு பழைய காலத்து ஆசாமிதான். மனத்தில் தோன்றும் எண்ணங்களை மனைவியிடம் சொல்லக் கூச்சம்; சொன்னாலும், ‘இந்தப் பழைய பட்ட வர்த்தனங்கள் எங்கே கேட்கப் போகிறார்கள்?’ என்று தன் எண்ணம் மனத்திலேயே புகைந்து கொண் டிருக்க விட்டான். சினிமாவுக்குப் போவான். அங்கே பார்ப்பான்: படத்தில் வரும் ஸ்திரீகளைப் பார்ப்பான். படம் பார்க்க வரும் உள்ளூர்ப் பெண்மணிகளையும் பார்ப்பான். பார்த்துப் பெருமூச்சு விடுவான். ‘எல்லாரும் தங்கள் தங்கள் அழகை எவ்விதம் எடுத்துக் காட்டக்கூடும் என்பதை அறிந்திருக்கிறார்களே. நம் மனைவிக்கு மட்டும் ஒன்றும் இந்த விஷயம் தெரியவில்லையே!’ என்று வருத்தப்படுவான்.சரி, சீமைக்குப் போய்த் திரும்பி வந்ததும் எல்லாம் சரிப்படுத்தி விடலாம் என்று விஷயத்தை ஒத்திப்போட்டு மனத்தைச் சாந்தப்படுத்திக் கொண்டான்.

சீதாராமன் சீமைக்குப் போய்ச் சேர்ந்தான். அங்கே எந்தப் பக்கம் திரும்பினாலும் நாகரிகம். ஆகா! என்ன உடலழகு! என்ன உடையழகு! என்ன முகமலர்ச்சி! என்ன அந்தம்! என்ன நடையழகு! பேச்சோ, அமிழ்தமே என்று சொன்னால் மிகையாகாது. எல்லாம் ஒரு தேவலோக மாகவே அவனுக்குத் தோன்றிற்று. சில நாட்களுக்குள் அந்தத் தேவ லோகத்தில் ஓர் அப்ஸரஸ் அவனிடம் நெருங்கிப் பழகலானாள். ‘ஆகா! இத்தகைய ஒரு பெண்ணுடன் வெறுமனே பேசிக்கொண்டிருந்தாலுமே போதும். விவாகம் என்னத்திற்கு; குடும்பம் என்னத்திற்கு?’ என்று அடிக்கடி எண்ணுவான். அவளை விட்டுப் பிரிந்தால் துக்கத்தில் மூழ்குவான். ஊரில் விட்டு வந்த மனைவி சுந்தரியை நினைத்து வெறுப்புக் கொள்ளவும் ஆரம்பித்தான்.

ஒரு துரதிருஷ்ட நாள் வந்து சேர்ந்தது. அன்று அப்ஸரஸின் மாய வலையின் வீச்சு வலுத்திருந்தது. சீதாராமன் அவளை விவாகம் செய்து கொள்வதென்று தீர்மானித்துவிட்டான். இருவரும் ஒப்புக்கொண்டு மூன்று வாரத்துக்குள் காரியமும் முடிந்தது. சீமையில் விவாகம் அரை மணியில் செய்து தீர்த்துவிடச் சௌகரியங்கள் உண்டு. தான் விவாகம் ஆகாத பிரம்மசாரி என்று முதல் முதலில் அப்ரஸினிடம் சம்பாஷணை உற்சாகத்தில் சொன்ன பொய்யைப் பிறகு மாற்ற இயலாமலே விஷயங்கள் நடைபெற்றன. அந்தப் பொய், விவாகப் பதிவு அதிகாரியிடமும் சொல்லப்பட்டது.

அந்த உறுதி மொழியின் பேரில் விவாகம் பதிவாயிற்று. சீமையில் ஒரு மனைவி இருக்க மற்றொரு விவாகப் பதிவு செய்து கொள்ள முடியாது. ஆணும் பெண்ணும் ஒரே விதம்.

சீதாராமனும் அப்ஸரஸும் புருஷன் மனைவியாக வாழச் சௌகரியக் குறைவுகளால் சில நாட்கள் தடைப்பட்டன. பிறகு ஏதோ காரணம் சொல்லி ஊரிலிருந்து கொஞ்சம் அதிகமாகப் பணம் தருவிக்கலானான். மாமனார்தாம் அனுப்பினார். அதன்மேல் இருவரும் சேர்ந்து வாழ ஆரம்பித்தார்கள். அப்ஸரஸின் குணம் கொஞ்சம் மாறி வருவதாகத் தோன்றிற்று. முன்பெல்லாம் காட்டிய சாந்தமும் விநயமும் கொஞ்சங் கொஞ்சமாகக் குறைந்து கரட்டுப்பான்மையாக முடிந்தது. ‘சுந்தரியே தேவலை’ என்றுகூட ஒரு நாள் தோன்றிவிட்டது.

உதடுகளின் அழகிய நிறம் அவ்வப்போது போடும் பூச்சுத்தான் என்று சில நாட்களிலேயே தெரிந்தது. வண்ணம் பூசாதபோது ரொம்பக் கேவலமாகத்தான் இருந்தது. வயசே மாறினாற்போல் இருந்தது. சீதா ராமனுக்குச் சுந்தரியின் வாயும் உதடும் நினைவுக்கு வரும்.

ஆயிர மடங்கு அழகாக இருந்ததே என்றும் எண்ணலானான். பிறகு ஒரு நாள் அப்ஸரஸின் தலை மயிர் பொய்மயிர் என்பது வியக்தமாயிற்று. அன்று சீதாராமன் பட்ட நரக வேதனை நரகத்தில் இருப்பவர்களுக்குத் தான் தெரியும். தலைமயிர் மட்டுமல்ல, கண் புருவமும் வெறும் கறுப்புப் பூச்சாக முடிந்தது. ஒரு மாதம் கழித்து அப்ஸரஸின் முத்துப்போல் மின்னின பற்கள் இரு வரிசையும் தனியாகப் பெட்டியில் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டிருப்பதையும் கண்டான்.

இதனுடன் சீதாராமனுடைய பொறுமை முடிந்துவிட்டது. கழுத் துக்குச் சுருக்குப் போட்டுக்கொண்டு உயிர் நீப்பதே மேல் என்று முடிவு செய்தான்.

நாற்காலியில் சாய்ந்து தன்னைத்தானே பழித்துக்கொண்டு ஊரையும் தெய்வத்தையும் எண்ணியவாறு கண்ணை மூடித் தியானத்தில் மூழ்கினான். தன் குழந்தைப் பருவத்து வாழ்க்கை எல்லாம் திடீரென்று நினைவுக்கு. வந்தது. இறந்துபோன தன் தாய் பக்கத்தில் வந்து நிற்பதுபோல் காட்சி கண்டான். பிறகு மனைவி சுந்தரி, உமா தேவியைப்போல் ஊரில் தனக்காகத் தவம் செய்து காத்துக்கொண்டிருக்கும் மனக் காட்சியைக் கண்டான்.

தற்கொலை செய்து கொள்ளத் தீர்மானித்தவர்களுக்கு இவ்வாறு எல்லாம் காட்சிகள் தோன்றும். சீதாராமன் கண்களில் நீர் ததும்பிற்று. அடுத்தாற்போல் அப்ஸரஸின் பொய்ப்பல் வரிசை இரண்டும் முகமும் உதடுமின்றி உயிர்கொண்ட தனி உயிர்போல் காட்சி தந்தன. அந்த எலும்புப் பேய் தன் மடத்தனத்தைப் பரிகசித்து இளிப்பதுபோல் கண்டான்.

‘சீ! இந்த ஆபாசத்துக்காகவா நான் உயிர் துறப்பது? சுந்தரியைக் குழியில் தள்ளிவிடவா பார்த்தேன்? என்ன பெரும் பிழை செய்ய இருந்தேன்!’ என்று தற்கொலை எண்ணத்தை ரத்து செய்துவிட்டான். நாற் காலியை விட்டு எழுந்து உடுப்புப் போட்டுக்கொண்டு வெளியே கிளம்பினான்.

சில நாட்கள் அலைந்து கஷ்டப்பட்டு இந்தியாவில் தான் படித்த பாதிரிமார் நடத்திவந்த பள்ளிக்கூடத்து உபாத்தியாயராகிய கிழவர் ஒருவரைப் பிடித்து அவர் அநுதாபத்தைச் சம்பாதித்தான். அவரிடம் மறைக்காமல் விஷயமெல்லாம் சொல்லி அழுதான். அவரும் பழைய மாணவன் மேல் இரக்கம் கொண்டு அவன் சிக்கிக்கொண்ட வலையினின்று அவனை மீட்க முயற்சி செய்தார்.

பிறகு அப்ஸரஸிடம் பேசி ஒரு சமாதான ஒப்பந்தம் முடிவு செய் தார். பரீட்சை தேறி வேலையில் அமர்ந்ததும் தான் பெறும் சம்பளத்தில் அப்ஸரஸுக்கு ஒரு பெரும் பகுதி மாதந்தோறும் அனுப்புவதாக வீதா சாரத் திட்டம் ஒன்றை ஒப்புக் கொண்டு எப்படியோ தப்பினால் போதும் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டான். பொய் உறுதிமொழி தந்த தற்குச் சிறைச்சாலை புகாமல் தப்பினதே அதிருஷ்டம் என்று எண்ணினான்.

பிறகு கஷ்டப்பட்டு ஐ. ஸி. எஸ். ஸும் தேறிவிட்டான். கப்பலேறி ஊருக்கு வந்து சேர்ந்தான். இந்தியத் தரையில் கால் வைத்ததும் தாய் மடியில் குழந்தை அமர்ந்த மகிழ்ச்சியை அடைந்தான். இந்த உணர்ச்சி சீமையிலிருந்து திரும்பி வருபவர்கள் எல்லாருக்குமே மனத்தில் உண்டா கும். ஆனால் சீதாராமனுடைய மகிழ்ச்சி இந்தச் சம்பவங்களினால் தனி வேகம் கொண்டதாக இருந்தது. ஊர் வந்து சேர்ந்து சுந்தரியைக் கண்ட தும் நாட்டு வழக்கமெல்லாம் மறந்து எல்லார் எதிரிலும் அவளைக் கட்டி அணைத்துக்கொண்டான். கர்நாடக உடையும் ஆபரணமும் அவன் கண்ணுக்கு இப்போது உண்மை அழகு வீசின.

தண்ணீரில் மூழ்கித் தத்தளித்தவன் கரையடைந்து கெட்டித் தரை மேல் நிற்கும் உணர்ச்சியும் மகிழ்ச்சியும் சீதாராமனுக்கு இப்போது வந்தன. இந்தக் கொசாம் வைத்து உடுத்திய புடைவையும் முழங்கை ரவிக்கையும்! சுந்தரியின் சௌந்தரியமும் நாகரிகமும் அவனுக்கு இப்பொழுது தான் புலப்பட்டன. பணம் நஷ்டமானாலும் அன்பு உதயமாயிற்று. வாழ்க்கைக்கு வேறு என்ன வேண்டும்?

– ஜனவரி, 1943

– கலைமகள் கதம்பம் (1932-1957), வெள்ளி விழா வெளியீடு, முதற் பதிப்பு: ஏப்ரல் 1957, கலைமகள் காரியாலயம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *