கரையில்லாத நதிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 8, 2016
பார்வையிட்டோர்: 5,806 
 

“அம்மா! சீக்கிரம் வாயேன்! இன்னும் எவ்ளோ நேரம் பண்ணுவே தல பின்னி விட?” என்று இரைந்த சாருலதாவை முறைத்துக்கொண்டே வந்தாள் வசுமதி.

சாருலதா ஒரே குழந்தை என்பதால் நிறைய செல்லம். அப்பா செல்லம். தன் கணவன் அதீத செல்லம் தந்து சாருவை குட்டிச்சுவராக்கி வைத்திருப்பதாக வசுமதியின் எண்ணம். இப்போது கூட பாருங்களேன்! பத்தாவது படிக்கும் பெண்ணுக்கு தானே தலை பின்னிக்கொள்ள வராதா? அப்படி என்ன எதுவும் தெரியாமல் செய்யாமல் ஒரு பிடிவாதம்?

“ ஏண்டி, தெரியாமத்தான் கேக்கறேன். நானெல்லாம் ஆறாவது படிக்கறசேயே
நானே பின்னிப்பேன். நீயேண்டி கத்துக்க மாட்டேன்கறே? அப்படி என்ன வேலை செஞ்சு வெட்டி முறிக்கற வீட்டுல? யூனிபார்ம் அப்பா அயர்ன் செஞ்சு தரணும். டிபன் பாக்ஸ் அப்பா எடுத்து வைக்கணும். தலை நான் பின்னி விடணும். அப்புறம் உனக்கு என்னதான் வேலை?” என்று பொரிந்து தள்ளினாள் மகளிடம்.

“இதப் பாரு! முடிஞ்சா செய். செஞ்சுட்டு சொல்லிக்காட்டுற வேலையெல்லாம் எனக்குப் பிடிக்காது. எனக்கு அம்மாதானே? இது நீதான் செய்யணும். சும்மா தொணதொணன்னு பேசி டென்ஷன் ஆக்காதே.” என்று பதிலுக்கு அம்மாவைச் சாடினாள் சாரு.

சப்போர்டுக்காக கணவன் பக்கம் திரும்பிய வசுமதியை, ராமநாதனின் பார்வை அடக்கியது. “ப்ளீஸ்! பெருசு பண்ணாதே! அவ வேலைய செஞ்சுடு. ஸ்கூலுக்குக் கெளம்பிப் போகட்டும்.” என்று கெஞ்சியது. சரியென்று வந்த கோவத்தை அடக்கிக்கொண்டு தலை பின்னிவிட்டாள்.

இவ்வளவு அடங்கிப்போயும், நடுவில் ஒரு முறை தெரியாமல் சிறிது அழுத்தம் கொடுத்ததற்கு, “உன் கோவத்த என் முடி மேல காட்டாதே!” என்று சாரு சொன்னபோது, வசுமதியின் கண்களில் கண்ணீர் தளும்பியது.

ஒரு வழியாக சாரு பள்ளிக்குக் கிளம்பிப் போனாள். அவள் போனபின் வசுமதி தேம்பித் தேம்பி அழத்தொடங்கினாள். சிறிது நேரம் அவள் அழுது ஓயட்டும் என்று விட்ட ராமநாதன், பிறகு வந்து அவள் அருகில் அமர்ந்தான்.

ஆதுரத்தோடு அவள் தோளை அணைத்து, “ அழாதடா மதி!” என்றான்.
“அவ யாரு? உன் பொண்ணு தானே? கொழந்த சொன்னதுக்கு இவ்ளோ சீரியஸா எடுத்துக்கணுமா? விட்றா!” என்றான்.

“என்னங்க நீங்களும் அவளையே சப்போர்ட் பண்ணறீங்க? அதனாலத்தான் அவ என்ன மதிக்கவே மாட்டேங்கறா. நாளைக்கு இன்னொரு வீட்டுக்குப் போய் வாழவேண்டியவ. நல்லது கேட்டது தெரியணும். இப்போ நாம சொல்லித்தரலேனா யாரு சொல்லித்தருவாங்க?

அவளை ஒரு முறை அன்புடன் பார்த்தான் ராம்.

“நீ சொல்றதுல தப்பே இல்லை. நாமதான் சொல்லித்தரணும். ஆனா ஒரு விஷயத்த மறக்காத மதி. இது அவளோட போர்ட் எக்ஸாம் வருஷம். மத்த வருஷத்த விட டென்ஷன் ஜாஸ்த்தி. அவ ராத்திரி ரொம்ப நேரம் கண்ணு முழிச்சு படிக்கறது ஒனக்கு தெரியும்தானே? அதுனால கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்கணும். Moreover உலகத்துல கடவுள் படைப்புல எல்லை இல்லாம கரை இல்லாம எதுவும் இல்லை. நதி கடலுக்கு கரையிருக்கு. ராத்திரி பகலுக்கு ஒரு எல்லை இருக்கு. அது மாதிரி நம்ம உறவுல கூட ஒரு எல்லை இருக்கணும். மத்தவங்களோட லிமிடேஷன் புரிஞ்சு நடந்துக்கணும். தாய்மை அன்புல கரையில்லாத நதியா இருக்க நீ. அவ நல்லாயிருக்கணும் என்கிற எண்ணம் மட்டுமே உனக்குள்ள மேலோங்கியிருக்கு. அதனால உன்னையும் அறியாம அவ மேலே உன் அன்ப, எதிர்பார்ப்ப திணிக்கற. அது அவள சில சமயம் suffocate பண்ணுதுன்னு உனக்குப் புரிய மாட்டேங்குது. அவ தான் ரெண்டும்கெட்டான். நீ புரிஞ்சுகோடா” என்று அவள் தலைய கோதியவாறே சொன்னான்.

வசுமதிக்கு ஏதோ புரிந்த மாதிரி இருந்தது.

எழுந்து மடமடவென்று வேலைகளை செய்ய ஆரம்பித்தாள். ராமும் வேலைக்கு சென்று விட்டான். எல்லா வேலையும் முடித்து சற்று ஓய்வெடுத்து டீவி பார்த்து என்று மாலை நாலுமணி ஆயிற்று.

ஸ்கூல் விட்டு சாரு வந்தாள். வரும்போதே முகம் வாடியிருந்தது. காலையில் தான் சொன்ன வார்த்தைகள்தான் காரணம் என்று நினைத்த வசுமதி ஒன்றும் பேசாமல் அவளுக்கு மாலை டிபனும் ஹார்லிக்கசும் கொடுத்தாள். அதை சாப்பிட்டுவிட்டு தன் ஹோம்வொர்க் செய்தாள் சாரு. ஆறு மணியானதும் சைக்கிளை எடுத்துக்கொண்டு கணக்கு ட்யூஷன் சென்றாள்.

ஏழேகாலுக்குத் திரும்பி வந்தவள், டின்னர் வேண்டாம் என்று சொல்லிவிட்டு படுக்கச் சென்று விட்டாள்.

அதற்குள் ராம் வந்து விட்டான். அவனிடம் விஷயத்தைச் சொன்னாள் வசுமதி. “போய் சமாதனம் செய்யேன்!” என்று புன்னகையுடன் சொன்னான்.

சாருவின் ரூமுக்குள் சென்றாள் வசுமதி. அவள் தூங்காமல் விழித்துக்கொண்டிருக்கிறாள் என்று உணர்ந்தாள். ஒன்றும் சொல்லாமல் அவள் அருகில் உட்கார்ந்து அவள் தலையைக் கோதினாள். ஓரிரு நிமிஷங்களில் சாருவின் உடல் குலுங்கியது. “என்னடா?” என்று வசுமதி கேட்டதும் அழத்துவங்கினாள் சாரு.

சிறிது அழுது ஓய்ந்ததும் விவரம் சொன்னாள். ஸ்கூலில் அவள் பெஸ்ட் பிரெண்டிடம் சண்டையாம். அதனால் கலா இவளிடம் பேசவில்லையாம். ஒரு இரண்டு மணிநேரம் பேசாமல் இருந்த இருவரும் லஞ்சில் அதற்கு மேலும் பொறுக்கமுடியாமல் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு அழுது விட்டார்களாம்.

“சரி! கலா தான் உன்கிட்ட பேசிட்டாளே! இப்போ எதுக்கு அழற?” என்றாள் வசுமதி.

“அதே மாதிரிதானே நான் உன்கிட்ட கோவிச்சிக்கிட்டு போனதும் நீ வருத்தப்பட்டிருப்ப? I am truly sorry மா! இனிமே உன்கிட்ட கோவிக்கமாட்டேன்!” என்று சொல்லிவிட்டு அம்மாவின் மடியில் முகம் புதைத்து மீண்டும் கேவிக்கேவி அழத்துவங்கினாள் சாரு.

வசுமதிக்கு இப்போது மிகவும் நன்றாகவே புரிந்தது.

– நவம்பர் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *