கப்பல் கேப்டன்!

0
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,884 
 

காலை 9:00 மணி இருக்கும்.
“”சார்…” என குரல் கொடுத்துக் கொண்டே, கேட்டைத் திறந்து, உ<ள்ளே வந்தார் சதானந்தம். ஆச்சரியமாக இருந்தது. கடிகாரம் தவறான நேரத்தைக் காட்டுகிறதோ என்று சந்தேகித்து, இன்னொரு முறை பார்த்தேன். ஒன்பதடித்து ஐந்து நிமிடங்கள் ஆகியிருந்தது.
இந்த நேரத்தில், சதானந்தம் சாரை வீட்டிலோ, வெளியிலோ, பார்க்க முடியாது.
தினமும் காலை ஏழரைக்கே கம்பெனிக்கு கிளம்பி விடுவார். அத்துடன், மதியம் 1.00 மணிக்கு வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு, சரியாக ஒண்ணரைக்கு மீண்டும் கிளம்பினால், இரவு எட்டாகும் வீடு திரும்ப.
கப்பல் கேப்டன்!ஞாயிற்றுக்கிழமை தான், மனிதர் வீட்டில் இருப்பார். அப்போதும், ஓ.டி., இருந்தால் கிளம்பி விடுவார்.
“பரமசிவத்தை கூட பார்த்து விடலாம்; இந்த சதானந்தத்தை பார்க்க முடிவதில்லையே…’ என்று தெரிந்தவர் வட்டத்தில் பேச்சு உண்டு.
அப்படி நேரத்திற்கு கம்பெனிக்கு போகிறவர். வேலை நாளில், ஏதுங்கெட்ட நேரத்தில் தேடி வருகிறார் என்றால், ஆச்சரியம் வராமல் இருக்குமா?
“”வாங்க சார்…” என்று வரவேற்றேன். எப்போதும் பேன்ட் அணிந்து, முழுக்கை சட்டையை இன் செய்து, நெற்றியில் விபூதி பட்டையும், கையில் பைக் சாவியுமாய் காட்சி தருபவர், வேட்டி கட்டி வந்திருந்தார்.
“”என்ன அதிசயமா இருக்கு… இந்த நேரத்தில் கம்பெனியில் அல்லவா இருப்பீங்க, லீவு போட்டிங்களோ… என்ன விசேஷம் சார்?”
“”இனி, நிரந்தர லீவுதான்,” என்றபடி, நாற்காலியை ஆக்கிரமித்தார். “”கம்பெனியை மூடிட்டாங்க… பத்து நாளாச்சு,” என்றார்.
என்றோ ஒரு நாள் இப்படியாகும் என்று எதிர்பார்த்தது தான் என்றாலும், செய்தி கேட்டதும் நான் திடுக்கிட்டேன்.
“”எந்த விஷயமானாலும், அடுத்த நிமிடமே சொல்லி, பகிர்ந்து கொள்ள ஓடி வந்துடுவீங்க… இந்த விஷயத்தை, பத்து நாள் கழிச்சு வந்து சொல்றீங்க?”
“”வரணும்ன்னுதான்… ஒரு வேலையா அலைஞ்சுகிட்டிருந்தேன்,” என்றார்.
சதானந்தம், பிரபல கார்மென்ட்ஸ் கம்பெனியில் பேட்டர்ன் மாஸ்டர். 20 ஆண்டு அனுபவம்; கொடுக்கிற சம்பளத்துக்கு, இரண்டு மடங்கு வேலை செய்வார். அத்தனை வருடம் அங்கு தாக்கு பிடித்ததற்கு அதுவும் காரணம். காலம் முழுக்க, அதே கம்பெனியில் உழைத்து, ஓய்வு பெற வேண்டும் என்று நினைத்திருந்தவர். அவருக்கு, நிறைய நண்பர்கள். அவர், பல பேருக்கு தொழில் சொல்லிக் கொடுத்து, வேலைக்கு வைத்திருக்கிறார்.
சமீப காலமாகவே, கம்பெனி ஆட்டம் கண்டிருப்பதாக சொல்லிக் கொண்டிருந்தார். “பார்ட்னர்களுக்கிடையே பிரச்னை; நிர்வாகம் சரியில்லை; வரவுக்கு மேல செலவு; ஆர்டர்களை, குறித்த நேரத்தில் டெலிவரி செய்வதில்லை…
“புரொடக்ஷனில் கவனம் செலுத்துவதில்லை; சம்பளம் லேட்டா போடுறாங்க; கேன்ட்டீன் வசதியை கட் பண்ணிட்டாங்க; ஆட்களுக்கு பஸ் பாஸ், ரயில் பாஸ் கொடுத்துகிட்டிருந்தாங்க… அதையும் நிறுத்திட்டாங்க… “பி.எப்., – ஈ.எஸ்.ஐ., பிடித்தங்களை, முறையா அரசாங்கத்துக்கு செலுத்தலைன்னு’ பல பிரச்னைகள் அனுமார் வால் போல் நீண்டு கொண்டு போனது; படிப்படியா ஆட்குறைப்பும் நடந்தது…
“பாதிபேர் அப்போதே வேலையை விட்டு போய் விட்டனர். இருக்கும் ஆட்களை வச்சு, உருண்டுகிட்டிருக்கு கம்பெனி. என்னைக்கு முற்றிலும் மூடுவாங்களோ…’ என்பார்.
அப்போதே, “அது வரைக்கும் ஏன் காத்திருக்கணும். இப்பவே வேற நல்ல கம்பெனிக்கு தாவிடுங்களேன்…’ என, எச்சரிப்பேன். அதற்கு காரணம், அவர் குடும்பம். கடன் வாங்கி வீடு கட்டியிருக்கிறார்; பிள்ளைகள் படிக்கின்றனர்; குடும்பத்தின் ஒரே வருமானம், அவர் சம்பளம் தான். ஒரு மாதம் சம்பளம் வராவிட்டாலும், நெருக்கடியாகி விடும்.
“பேட்டர்ன் செக்ஷன்ல நான் ஒருத்தன்தான் இருக்கேன். நானும் நின்னுட்டா,. போய்கிட்டிருக்கிற குறைந்த பட்ச வேலையும் நின்னு போயிடும். எந்த ஆண்டவனாவது கண் திறந்து, கம்பெனி பழைய நிலைக்கு வராதான்னு பார்க்கிறேன்…’ என்பார்.
அவர் நம்பிக்கை வீணாகியிருக்கிறது.
“”என்ன பண்ணப் போறீங்க?” என்றேன் அக்கறையுடன்.
“”ஒரு இடத்துல என்னை வரச்சொல்லி கூப்பிட்டாங்க. நானும் பார்க்கலாம்ன்னு சொல்லிகிட்டிருந்தேன். இப்ப கம்பெனி மூடிட்டாங்கன்னு தெரிஞ்சு, தினமும் போன் பண்றாங்க…”
“”போக வேண்டியது தானே…”
“”நான் மட்டும்ன்னா, இன்னைக்கே சேர்ந்துக்கலாம். என்னை நம்பி நாலு பேர் இருக்காங்க; அவங்களுக்கும் ஒரு வழி செய்யணும்,” என்றார்.
புரியாமல் பார்த்தேன்.
“”ஆமாம் சார்… மேனேஜ்மென்ட் சார்பா, கடைசி கட்டத்துல நாலு பேரை சேர்த்தாங்க… கம்பெனி மூடினதும், அவங்களை அம்போன்னு விட்டுட்டாங்க… அந்த நாலு பேரும், வட மாநிலத்தவர்கள்; வேலை தெரியும், மொழி தெரியாது. நம்பி குடும்பத்தோடு வந்து, இப்ப ஆதரவில்லாம நிக்கறாங்க… “எங்களுக்கு ஏதாவது <உதவி பண்ணுங்க சார்…’ன்னு கேட்கிறாங்க..
“”முடியாதுன்னு சொல்ல வாய் வரலை நமக்கு… “முயற்சி பண்றேன்’ன்னு சொன்னேன். அதையே கெட்டியா பிடிச்சிட்டாங்க. என்ன செய்ய, இந்த வாரம் முழுக்க, தெரிஞ்ச இடம், தெரியாத இடம்ன்னு ஏறி இறங்கிட்டிருக்கேன். அவங்களுக்காக,” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது, அவர் கையில் இருந்த மொபைல் ரீங்கரித்தது.
“”ஒரு நிமிஷம் சார்…” என்று எழுந்து போய், வாசலில் நின்று பேசினார். வெளியில் நின்றிருந்தாலும், பேச்சு உள்ளே வரை கேட்டது.
அவரை, ஒரு கம்பெனி, வேலைக்கு அழைக்கிறது. அவரோ, இன்னொரு நபருக்கு சிபாரிசு செய்கிறார்.
“”தப்பா நினைக்காதீங்க… நான் சொன்ன நபருக்கு வேலை கொடுத்தால், அது எனக்கு கொடுத்த மாதிரி. குழந்தைகளை வச்சுகிட்டு, ரொம்ப கஷ்டப்படறார். நம்பி வந்துட்டாங்க. வந்த இடத்தில், இப்படி ஆயிடுச்சி… ஊருக்கும் திரும்ப முடியாம, இங்கேயும் யாரையும் தெரியாம கஷ்டப்படறார்… நல்ல ஆள்; அதற்கு நான் உத்தரவாதம்,” என்று சிபாரிசு செய்தார்.
எதிர் தரப்பில் சாதகமான பதில் வந்திருக்க வேண்டும்; நாலு முறை நன்றி சொன்னார்.
“”ஒருத்தருக்கு வழி பொறந்தாச்சு. மீதி மூணு பேருக்கு பார்க்கணும்,” என்றபடி உள்ளே வந்தார்.
“”அவங்களுக்காக அலையறது இருக்கட்டும். உங்களுக்கு எப்ப தேடிக்க போறிங்க?”
“”எனக்கு பரவாயில்லைங்க… ஒரு மாசத்துக்கு கையிருப்பு இருக்கு. அவங்க அடுத்த வேளைக்கு இல்லாம நிக்கறாங்க,” என்றவர், ஏதோ நினைத்துக் கொண்டவராய், மொபைலை எடுத்து, ஆன் செய்து, ஒருவரை தொடர்பு கொண்டு, “”வாசு… சதானந்தம் பேசறேன். வட மாநிலத்தார் ஒருத்தருக்கு வேலைக்கு சொல்லியிருந்தேனே… அது சம்பந்தமா, மேனேஜரை பார்த்தியா… நான் வரணுமா… சரி எத்தனை மணிக்கு… சும்மாதான் இருக்கேன்; வரட்டுமா?” என்று கேட்டுக் கொண்டு எழுந்தார்.
“”ஒரு இடம் போகணும் சார்… அப்புறம் வந்து பார்க்கிறேன்,” மீதி மூணு பேருக்கு வேலை தேடி வைத்து விட்டுதான், மறு வேலை என்று தீர்மானித்துக் கொண்டது தெரிந்தது.
“”போய் வாங்க,” என்றேன்.
“”நீங்களாவது கேட்கக் கூடாதா…” என்று கேட்டு வந்தார், அவர் மனைவி காமாட்சி.
“”இவர் வேலை பார்த்த கம்பெனி மூடிட்டாங்கன்னு தெரிஞ்சதுமே, ஒரு இடத்துலிருந்து கூப்பிட்டாங்க. ஒரு இடம் காலியா இருக்காம்… உடனே வந்து சேரச்சொல்லி. இவரென்னான்னா… உடனே போறதுக்கில்லை, கொஞ்ச நாள் ஆகும்ன்னு மத்தவங்களுக்காக சுத்திக்கிட்டிருக்கார்…
“”வேலைக்கு கூப்பிட்டவங்க, ஒரு வாரம் வெய்ட் பண்ணி பார்த்துட்டு, வேற ஆளை போட்டுட்டாங்க. நல்ல இடம் அது… போயிருந்தால் ஒரு வார சம்பளம் கைக்கு வந்திருக்கும். அங்கே தாராளமா அட்வான்சு லோன் எல்லாம் தருவாங்களாம்,” என்று வருந்தினார்.
“”கவலைப் படாதீங்க… உங்க புருஷன் கெட்டிக்காரர். கூடிய சீக்கிரம் நல்ல இடத்துல உட்கார்ந்துடுவார்,” என்றேன்.
“”அப்படி சொல்லிடாதீங்க… எப்பேற்பட்ட கெட்டிக்காரங்களுக்கும் நேரம் நல்லா இருந்தால் தான் ஆச்சு… கடைசி வரை இருப்போம்ன்னு நினைச்சு போன கம்பெனி என்னாச்சு… மூடிட்டான்.
“”வர வேண்டிய பிடிப்பு தொகை, எந்த காலத்துக்கு வருமோ தெரியாது… அதை எதிர்பார்த்தால், வயித்துல துணியைத் தான் கட்டிக்கணும். அவங்கவங்க பறந்து கட்டி, கிடைத்த இடத்துல உட்கார்ந்துகிட்டிருக்காங்க. இவரானால், வந்த வாய்ப்பை விட்டுட்டு, மத்தவங்களுக்காக அலையறார். இவருக்குன்னு தேடும்போது கிடைச்சா போச்சு… இல்லைன்னா? முதல்ல நாம காலை ஊன்றிக்கணும். அப்புறம் ஒருத்தருக்கு கை கொடுக்கணும். ஆத்துல விழுந்தவனை காப்பாத்த, நீச்சல் தெரியாதவன் குதிச்ச கதையாகிவிடக் கூடாதில்ல,” என்றார்.
அவர் கூற்றில் இருந்த நிஜம், சுட்டது.
“”இவருக்கு ஒரு வேலையை தேடிக்காம, மத்தவங்களுக்காக மாய்ந்து மாய்ந்து ஓடிகிட்டிருக்காரே…. கேட்டால், “அவங்க நான் ஏதாவது செய்யணும்ன்னு எதிர்பார்க்கிறாங்க. அவங்களை விட்டுட்டு, நான் மட்டும் எப்படி போறது…’ என்கிறார்…
“”இவரோ பேட்டர்ன் மாஸ்டர்… இவர் போய் டெய்லர்களுக்கு வேலை தேடறார். இவரை கூப்பிடுறாங்க; போய் சேர்ந்துகிட்டு, அங்கிருந்த படியே, மத்தவங்களுக்கு முயற்சிக்கலாம்ல…” என்றார் காமாட்சி.
எனக்கும், அது சரி என்று தோன்றியது.
ஆனால், சதானந்தம் மறுத்தார்.
“”ரெண்டு காரணங்களால, என்னால் அப்படி செய்ய முடியாது சார். ஒண்ணு… வேலைக்கு சேர்ந்த இடத்துல, உடனடியா சிபாரிசு செய்து, நான் வேலை பாக்கிற இடத்துல, வேலைல வைக்க முடியாது. சில மாசம் போகணும்… நிர்வாகத்துக்கு நம்ம பேரில் நம்பிக்கை வரணும்; அங்கே டெய்லரிங் வேலை காலியாயிருக்கணும்; அதுக்கு நாட்களாகும்.
“”வேலைல உட்கார்ந்துட்டால், நான் இவங்களுக்காக நாலு இடம் தேடியலைய முடியாது. இந்த காரணங்களுக்கு தான், அவர்களுக்கு ஒரு வழி காட்டிட்டு, என் வழியை பார்க்கலாம்ன்னு இருக்கேன்,” என்று சொன்னார்.
“”நீங்க கப்பல் கேப்டன் ஆகியிருக்க வேண்டியவர்… எப்படியோ, தையல் தொழிலுக்கு வந்துட்டீங்க,” என்றேன்.
“”ஏன் சார் அப்படி சொல்றீங்க?” என்றார்.
“”அவர்தான், கப்பல் கடல்ல மூழ்கினால்… தான் தப்பிக்க வாய்ப்பிருந்தாலும், தப்பிக்க மாட்டார். தன் கப்பலில் பயணித்த பயணிகள் எல்லாரையும் பாதுகாப்பாக அனுப்பி வைத்துவிட்டு, ஊழியர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்துவிட்டு, கடைசியாகத்தான் தன்னை பற்றி யோசிப்பார். நீங்களும் அது போலத் தான் செய்றீங்க,” என்றேன்.
“”அவங்க கடமையுணர்ச்சி, பொறுப்பு, தியாக உணர்ச்சியோடு என்னை ஒப்பிடாதீங்க சார்… நான் ரொம்ப சாதாரணமானவன்… நான் தேடி வைக்கலைன்னாலும், அந்த நாலு பேருக்கும் எங்கேயாவது வேலை கிடைக்கத்தான் செய்யும். என் மனத்திருப்திக்காக வேண்டிதானே, நான் மெனக்கெடறேன்… இதுல சுய நலமும் இருக்கில்லையா?”
“”பெரியவர்கள், என்னைக்கு தன்னை பெரியவர்கள் என்று ஒப்புக் கொண்டிருக்கின்றனர். உங்க விருப்பப்படி செய்யுங்கள். ஆனால், கப்பல் மூழ்குவதற்குள், நீங்களும் கரையேறப் பாருங்கள்,” என்றேன்.
பத்து நாட்களுக்குப் பிறகு —
நாலு பேருக்கு பின், ஐந்தாவதாக அவரும் ஒரு இடம் பார்த்துக் கொண்டார். என்ன ஒன்று… முதலில் அழைத்த இடத்துக்கு போயிருந்தால், நல்ல சம்பளம் கிடைத்திருக்குமாம். புது இடத்தில் குறைவு. அதை ஈடு கட்ட, தினமும் ஓ.டி., பார்க்கிறார். அதற்காக, அவர் கவலைப்பட்டிருப்பார் என்று தோன்றவில்லை. மாறாக, நாலு பேருக்கு உதவ முடிந்ததை எண்ணி சந்தோஷமாகத்தான் இருப்பார்.

– செங்கமல கண்ணன் (மே 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *