கனவு நனவானபோது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 30, 2014
பார்வையிட்டோர்: 8,455 
 

தனக்கும் கல்யாணம் என்று ஒன்று ஆனால், அம்மாமாதிரி இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள் வைதேகி.

புராண இதிகாச காலங்களில் கணவனை வழிபட்ட பெண்கள் பிற கடவுளை நாட வேண்டி இருந்ததில்லையாம். அப்போது இருந்த ஆண்கள் தெய்வாம்சம் பொருந்தியவர்களாக இருந்தார்களோ, என்னவோ!

ஆனால், `பெண்’ என்றாலே ஒரு மாற்று குறைவாக எடைபோடும் அப்பாவின் மெத்தனத்தை, ஆணான தான் எது சொன்னாலும், செய்தாலும் அதை எல்லாப் பெண்களும் ஏற்க வேண்டும் என்று, ஒரு வரையறையே இல்லாது, உணர்ச்சிபூர்வமாக மனைவி மக்களைக் கொடுமைப்படுத்தியதை அவளால் ஏற்கத்தான் முடியவில்லை. அடித்தால்தான் வதையா!

அதற்காக ஒரேயடியாக வெறுப்பை வளர்த்துக்கொண்டு, `கல்யாணமே வேண்டாம்’ என்று பிடிவாதம் பிடிக்கத் தோன்றவில்லை அவளுக்கு. தமிழ் திரைப்படங்களும், `கோடிக்கணக்கில் விற்கிறதே, இந்த ஆங்கில நவீனங்களில் அப்படி என்னதான் இருக்கிறது!’ என்று படித்ததும் அவள் மனதில் கட்டுக்கடங்காத இளமைக் கனவுகளை வளர்த்திருந்தன.

அவளை மணப்பவன் அவள் கிழித்த கோட்டைத் தாண்டாத `பத்தினி விரதனாக’ இருக்க வேண்டும் என்று தீர்மானித்தாள். தான் அவனுக்குப் பணிவதற்குப் பதிலாக, தனது ஆற்றலைப் பார்த்து அவன் அடங்கி ஒடுங்க வேண்டும். அப்போதுதான் அவனால் தன்னைக் கீழே தள்ள முடியாது.

`நீ படிக்காத முட்டாள்! ஒனக்கு என்ன தெரியும்? சும்மா இரு!’ என்று அப்பா சமயம் கிடைத்தபோதெல்லாம் மட்டம் தட்டுவதைப்போல் அவளுக்கும் நேர்ந்துவிடக்கூடாது.

சினிமா நடிகர்களை மனதால் வரித்து, அவர்களைப்பற்றிப் பேசிச் சிரித்த, தன் வயதுப் பெண்களின் போக்கு அவளுக்கு எரிச்சலைத்தான் உண்டுபண்ணியது. இம்மாதிரியான அர்த்தமற்ற கனவுகள் கண்டு, அதிலேயே நிறைவு பெற்று, பின் உப்புச்சப்பற்ற மணவாழ்க்கையில் அமுங்கிவிடுவது மடத்தனம்.

முன்னெச்சரிக்கையுடன், மனதில் ஒரு ஆடவனை உருவாக்கிக் கொண்டாள்.

அவன் முகம்? அது அவ்வளவு முக்கியமாகப் படவில்லை. அனுதினமும் அவனுக்குள் சில குணங்களைச் செலுத்தினாள்.

அவன் பிறரது மதிப்பைப் பெற்றவனாக இருப்பான். இன்னொருவரைச் செயலாலோ, வார்த்தையாலோ காயப்படுத்துவதைவிட தானே துன்புறுவது மேல் என்று நினைக்கும் கண்ணியவானாக இருப்பான்.

சற்று யோசித்து, விளையாட்டு வீரன் வேண்டாம், என்றைக்காவது ஒரு நாள் அவனுக்குள் விதைக்கப்பட்டு இருக்கும் போட்டி மனப்பான்மை, எதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற வெறி, மேலே கிளம்பிவிடும் என்று நிச்சயித்தாள்.

இன்னும் சற்று ஆழ்ந்து சிந்தித்ததில், கலாரசனை உள்ளவன்தான் உணர்ச்சி மிக்கவனாக இருப்பான், வலுவான தேகம் கொண்டவனைவிட இவனை வீழ்த்துவது எளிது என்று தோன்றியது.

இரண்டு, மூன்று வருடங்கள் இதே ரீதியில் முகமற்ற தன் வருங்காலக் கணவனுடன் சிறிது சிறிதாகப் பரிச்சயம் செய்து கொண்டவளுக்கு, அதன்பின் அவனை நினைக்கும்போதே உள்ளுக்குள் ஏதோ கிளர்ந்தெழுந்தது.

வீட்டில் அவளுக்கு வரன் பார்க்க ஆரம்பித்தார்கள். அப்பா தேடிவரும் எவனையாவது மணக்க நேரிடுமோ என்ற அச்சம் பிறந்தது. அப்பா கொண்டு வரும் மாப்பிள்ளையும் அவரைப்போல்தானே இருப்பான்!

`எதற்கோ பயந்து, எதிலோ மாட்டிக் கொண்டாற்போல்’ என்பார்களே! அப்படி நடக்க விடக்கூடாது. கல்யாணம் என்ற பிரச்னையைத் தள்ளிப்போட அதற்கு ஒரே வழிதான் தென்பட்டது.

பட்டப்படிப்பு முடியும் தறுவாயில்தான் அது நிகழ்ந்தது.

`இதே கல்லூரியில் இருந்திருக்கிறார்! அது எப்படி இத்தனை நாளாகக் கவனிக்காமல் போனேன்!’ என்று தன்னைத்தானே நொந்துகொண்டாள்.

அங்கு விரிவுரையாளராக இருந்த சம்பத்தைப் பொறுத்தவரை, `தானுண்டு, தன் வேலையுண்டு’ என்றிருந்தான். அங்கேயே ஹாஸ்டலில் தங்கியிருந்து, வேலை முடிந்ததும் டென்னிஸ் விளையாடி, இரவுப் பொழுதில் புத்தகங்களைப் படிப்பதில் கழித்தான்.

அவனைத் தற்செயலாகப் பார்த்த வைதேகிக்குப் பொறி தட்டியது.

அவள் மனத்துள் பல காலமாகப் பதிந்திருந்த உருவம் முழுமை பெற்றது. அடுத்த வேலை, எதிரிலிருந்தவனைப் பக்கத்தில் நிலைநிறுத்திக் கொள்வதுதான்.

அவனை முதன்முதலில் கண்டபோது, இதுவரை அவளை ஆட்டுவித்த வீறாப்பு, ஆண்களை மட்டம் தட்டவேண்டும் என்ற வெறி எல்லாமே மறைய, மனம் பரபரத்தது.

இவ்வளவு பண்பான, புத்திசாலியான ஒருவனுடன் காலமெல்லாம் இணைந்து, அவன் மிருதுவாகப் பேசுவதை, தன்னைக் கனிவுடன் பார்ப்பதை, அனுபவிப்பதைவிட வேறென்ன இன்பம் இருக்க முடியும் என்று தோன்றிப்போயிற்று.

தன்னையும் அறியாமல், அவனுக்கு வலை விரித்தாள் வைதேகி. முதலில் வகுப்புக்கு வெளியே சந்தேகம் கேட்க ஆரம்பித்தாள். அவன் கேளாமலேயே, சிறுகச் சிறுக, தன்னைப்பற்றி, தன் குடும்பத்தின் அவலத்தைப்பற்றி, சொன்னாள்.

`என்னிடம் ஏன் இந்தப் பெண் இப்படி மனந்திறந்து பேசுகிறாள்?’ என்று குழம்பினாலும், சம்பத் நெகிழ்ந்து போனான்.

ஓர் அழகான, புத்திசாலிப் பெண் தன் ஆதரவை நாடுகிறாள், தன்னை மதிப்பும் மெச்சுதலுமாகப் பார்க்கிறாள் என்றால், எந்த ஆடவனுக்குத்தான் உச்சி குளிர்ந்துபோகாது?

தன்னை வெகுவாகப் பாதித்தவைகளை வைதேகி சொல்லச் சொல்ல, அவளுக்கு ஆறுதலாக ஏதாவது கூற எண்ணியவனாய் தன்னை அவளுடைய நிலையில் வைத்துப் பார்த்துக் கொண்டவனின் உடலிலும் உள்ளத்திலும் ஏதேதோ மாறுதல்கள்.

`இவள் பட்ட பாடெல்லாம் போதும். இனியாவது நான் இவளைக் கண்கலங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்!’ என்ற எண்ணம் முதன்முதலாக எழுந்தபோது, சம்பத் திடுக்கிட்டான்.

தன் கீழ் பயிலும் மாணவியை மணப்பதா! பெயர் கெட்டுப் போகாது?

அச்சத்தை மீறியது ஆண்மை.

அவளைத் தூரத்தில் பார்த்தபோதே ஒரு படபடப்பு, அவள் குரலைக் கேட்கவும் உள்ளத்தில் ஒரு சிலிர்ப்பு. தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் பார்க்காதபோதோ எதையோ இழந்துவிட்டதைப் போன்ற ஏக்கம்.

`இதற்கு எப்படி ஒரு முடிவு கட்டுவது?’ என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான்.

அவளைப்பற்றியே நினைத்துப் பார்க்கக்கூடாது என்று தனக்குள் முடிவு செய்துகொண்டான். ஆனால், வேறு எந்த விஷயத்துக்குமே அவன் மனதில் இடமிருக்கவில்லை.

அந்தந்த வேளைக்கு போதை மருந்தை நாடி, அது கிட்டாவிட்டால் அல்லலுறும் மூளை, காதல் வசப்பட்டிருந்த சம்பத்தையும் அதேபோல் ஆட்டுவித்தது.

படுத்தால், தூக்கம் `வரமாட்டேன்,’ என்று விலகிச் செல்ல, எண்ணப் பெருக்குக்கு ஈடு கொடுக்க முடியாது தவித்தான்.

காதல் நோயை வெல்ல ஒரு வழிதான் புலப்பட்டது.

கணவனின் அன்பில் திளைக்கும்போது, `மணவாழ்க்கை’ என்பது இவ்வளவு குதூகலமாக இருக்குமா, அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மட்டும் ஏன் இப்படி அமையவில்லை என்ற குற்ற உணர்ச்சிகூட உண்டாகியது வைதேகிக்கு.

அம்மா அழகியோ, அதிகம் படித்தவளோ இல்லை. அதுவே அப்பாவுக்குக் குறையாக இருந்திருக்கலாம்.

`என் மனைவியைவிட நான் எல்லா வகையிலும் சிறப்பாக இருக்க வேண்டும்!’ என்றுதான் எந்த ஆணும் ஆசைப்படுகிறான். ஆனால், அவளைவிடச் சிறப்பாக இருக்கும் இன்னொரு பெண்ணையும், அவள் கணவனையும் பார்த்தால் பொறாமை வருகிறது என்றெல்லாம் யோசித்தாள். `பாவம், அப்பா!’ என்று பரிதாபப்பட்டாள்.

பழையதாகப்போன விளையாட்டுச் சாமானை தூரப் போட்டுவிட்டு, பெருமை பட்டுக்கொள்ளக்கூடிய புதியதொன்றில் மகிழ்ச்சி காணும் சிறுவனின் மனப்பக்குவத்துடன்தான் அப்பாவும் அழகும் இளமையுமான இன்னொருத்தியுடன் தொடர்பு வைத்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள்.

`அப்பாவைப்போல என் சம்பத்தும் ஏமாற விடமாட்டேன்! அவர் என்னால் தலைநிமிர்ந்து நடக்க வேண்டும். நான் நிறையப் படித்தால்தான் அது முடியும்!’

`கல்வி ரீதியிலாவது இருவரும் சமமாக இருக்கிறோமே!’ என்ற சம்பத்தின் நிம்மதி பொய்த்தது, வைதேகிக்கு முனைவர் படிப்புக்கான அழைப்பு வழங்கப்பட்டபோது.

இப்போதைக்கு, பெரிய இடத்துப் பெண் என்ற கர்வம் இல்லாமல் பணிவாக இருக்கிறாள். மேற்படிப்பு அவளை மாற்றிவிட்டால்? பயம் பிடித்துக்கொண்டது அவனை.

“எதுக்கும்மா இன்னும் படிப்பு? அதான் ரெண்டு பேருமே கைநிறைய சம்பாதிக்கிறோமே?” என்று நைச்சியமாகப் பேசி, அவள் மனதைக் கலைக்கப் பார்த்தான்.

அவன் மனநிலையை உணராது, தான் எடுத்த முடிவிலேயே உறுதியாக இருந்தாள் வைதேகி.

டாக்டர் வைதேகி!

இப்போது, அவள் செய்வது எல்லாம் தவறாக, தன்னை மட்டம் தட்டுவதற்காகச் செய்வது போல் தோன்றியது.

படுக்கையில் சுகித்தபின்னர்கூட மனம் மகிழ்வால் நிறையவிலை.

“என்னைவிட ஒனக்கு `இந்த’ விஷயத்திலே பலம் அதிகம்! அதான் பெருமை ஒனக்கு!” என்று குற்றம் சாட்டினான். இவளை எந்த விதத்திலும் மீற முடியாது போலிருக்கிறதே என்ற ஆயாசம் பிறந்தது.

காதல் களியாட்டத்தின் இறுதியில் ஆணின் உணர்ச்சிப் பெருக்கு ஒரேயொரு பேரலையாக எழுந்து அடங்கும் என்றால், பெண்ணின் உடற்கூற்றின்படி சிறு சிறு அலைகள் அடுக்கடுக்காக எழும் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. எதிராளியின் தன்மை புரியாததால் பலவீனம் உண்டாயிற்று.

இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளாத வைதேகி சிரிப்பாள். “படுக்கை என்ன, குஸ்தி மேடையா? இல்லே, நம்ப ரெண்டு பேருக்கும் ஏதாவது போட்டியா, யார் ஜெயிச்சது, யார் தோத்ததுன்னு கணக்குப்போட!”

இப்படி அன்பும் பொறுமையும் ஓர் உருவாய் அவள் நடந்துகொள்ளும் போதெல்லாம் தன்மீதே வெறுப்பு எழும் சம்பத்துக்கு.

இருப்பினும், வைதேகி ஒவ்வொரு அடியாக மேலே எடுத்து வைக்க வைக்க, அவனுடைய சுயமதிப்பு குறைந்துகொண்டே வந்தது.

“நானும் ஒன்னைப்போல வசதியான குடும்பத்திலே பிறந்திருந்தா, எவ்வளவோ முன்னுக்கு வந்திருப்பேன்!” என்று அரற்றினான், ஒரு நாள்.

ஆரம்பப் பள்ளி — அதுவும் எவ்வித வசதியும் இல்லாத தமிழ்ப்பள்ளி — ஆசிரியரின் ஆறு பிள்ளைகளில் நான்காவதாகப் பிறந்தது அவனது துர்பாக்கியம். `மகனும் தன்னைப்போல் வறுமைக்கோட்டின்கீழ் அவதிப்படக் கூடாதே!’ என்ற நல்லெண்ணத்துடன், அவன் எவ்வளவு மதிப்பெண்கள் வாங்கினாலும், ரோத்தானால் (மெல்லிய பிரம்பு) விளாசும் அப்பாவுக்குப் பயந்தே படித்தான். வகுப்பில் முதலாவதாக வந்தாலும், `நீயெல்லாம் முதலா! அப்போ மத்தவங்க எவ்வளவு முட்டாளா இருக்கணும்!’ என்று ஏளனம் செய்தால், அது ஊக்குவிப்பதற்குச் சமம் என்று அவர் போட்ட கணக்கு தப்பாகியது. எதற்கும் எளிதில் உணர்ச்சிவசப்பட்டு, அதை மறைத்துக்கொள்ள பெரும்பாடு பட்டவனாக வளர்ந்தான்.

வைதேகி, `பக்கபலமா இருக்க வேண்டிய நீங்களே தடை போடறதையும் ஒரு சவால்னு எடுத்துக்கலே நான்?’ என்று சொல்ல வந்ததை அடக்கிக்கொண்டாள்.

இந்தச் சில வருடங்களில் அவளுக்கு ஒன்று புரிந்திருந்தது. தான் எதையாவது சொல்லப்போக, கோபம் அல்லது வருத்தம்தான் மிகும் கணவனுக்கு.

கோபமாக இருந்தால், அவளிடம் மேலும் தப்பு கண்டுபிடிப்பான். இல்லை, மனம் வருந்தி, மன்னிப்பு கேட்பான், `நான் ஒனக்கு ஏத்தவனே இல்லே!’ என்று. அதன்பிறகு, கொஞ்சல், பரிசுகள் என்று தொடரும்.

வைதேகிக்கு அலுப்பாக இருந்தது.

மனைவி என்பவள் ஒருவனைவிட மேலான நிலையிலிருந்தாலும் கஷ்டம், அவனைவிடத் தாழ்ந்திருந்தாலும் கஷ்டம்.

அவளுக்கு எப்போதாவது தான் கற்பனையில் உறவாடிவந்த முகமற்ற மனிதனின் நினைவு எழும்.

அப்போது திட்டம் தீட்டியிருந்தமாதிரி, தனது உயர்வை ஒவ்வொரு வார்த்தையிலும் செய்கையிலும் பறைசாற்றிக் கொள்ளலாம்தான். ஆனால், ஒருவர்க்கொருவர் அடிமையாக இருப்பதில், அல்லது இன்னொருவரை வீழ்த்துவதால், உறவு எப்படி பலப்படும்?

சஞ்சலப்பட்டுக்கொண்டு இருந்த மனம் நிம்மதிக்காகப் புத்தகங்களை நாடியது. ஆனால், அதிலும் மனம் நிலைக்கவில்லை.

“எப்பவும் புத்தகத்தை வெச்சுக்கிட்டு ஒக்காந்திருந்தா ஆச்சா?” அவள் செய்வது எல்லாமே தவறு என்ற முடிவுக்கு வந்தவன்போல், சம்பத் இரைந்தான். “என் சட்டையெல்லாம் இஸ்திரி பண்ணிவைக்கச் சொல்லி இருந்தேனே!”

அவன் கட்டளையை நிறைவேற்றவேபோல் உள்ளே விரைந்த வைதேகிக்கு ஒன்று புரிந்தது.

அப்பாவுக்கு அம்மா அடங்கிப்போனபோது, என்னமோ பெண் குலத்துக்கே அவமானம் ஏற்பட்டுவிட்டது என்று குமுறினோமே! அப்படி நடந்துகொண்டது அம்மாவின் விவேகம். குடும்பம் போர்க்களமானால், அதனால் குழந்தைகள் மனதில் வடு உண்டாகும் என்றுதான் எல்லா இன்னல்களையும் பொறுத்துப் போயிருக்கிறாள்!

அப்பாவோ, அவளது அமைதியான, எதிர்ப்புக் காட்டாத போக்கைத் தனது வெற்றி என்று இறுமாந்து, எல்லை மீறியிருக்கிறார்!

துணிகளை ஒரு பெரிய பையில் நிரப்பிக்கொண்டு வந்து, தன்னிடம் நீட்டிய மனைவியைப் புரியாது பார்த்தான் சம்பத்.

“என்ன? ஒன்னை இஸ்திரி பண்ணச் சொன்னேன்!”

பிசிறின்றி ஒலித்தது அவள் குரல்: “ஒங்களுக்கு வேலைக்காரி வேணுமானா, அதுக்கேத்த மாதிரி பெண்டாட்டி கட்டியிருக்கணும். பெரிய படிப்பு படிச்சு, கைநிறைய காசு சம்பாதிச்சு, அதை ஒங்க கையில குடுத்தப்புறமும் அவளை எப்படி இன்னும் கொஞ்சம் கீழே தள்ளலாம்னு யோசிக்காதீங்க!” படபடவெனப் பொரிந்துவிட்டு, அப்பால் நகர்ந்தவள் திரும்பினாள். “ஒங்க துணியை லாண்டரியிலதான் போடுவீங்களோ, இல்லே, நீங்களே இஸ்திரி போட்டுப்பீங்களோ, அது ஒங்க பாடு!”

சம்பத் பின்வாங்கினான், அகன்ற விழிகளுடன்.

கணவர் பயந்துவிட்டார், இனி தன்னை மிரட்ட யோசிப்பார் என்று புரிந்தது வைதேகிக்கு. ஆனால், அந்த எதிர்பார்ப்பில் மகிழ்வு என்னவோ இல்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *