கடைசிக் கடிதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 15, 2012
பார்வையிட்டோர்: 6,881 
 

அன்புள்ள மதுரன்,

இக்கடிதத்தைப்படிக்கும் போது நீயும் உன் தம்பிதங்கையும் வளர்ந்து நன்றாகப் படித்துக்கொண்டிருப்பீர்கள். நான் விழைவதும் அதுவே. உலக சரித்திரத்தில் இல்லாவிட்டாலும், உன் வாழ்க்கை வரலாற்றில் இடம்பிடிக்கப்போகும் இந்தக் கடிதம் இன்னும் ஏழு வருடத்திற்குப் பிறகு உன்னுடைய இருபத்தியோராவது வயதில் உனக்குப் படிக்கக்கிடைக்கும். அப்படித்தான் என் அக்காவிடம் நான் வேண்டிக்கொள்ளப்போகிறேன்.

விடைகளில்லாக் கேள்விகளால் குழம்பும் உனக்கு விடைகள்மட்டுமன்றி என் இப்போதைய செயல்களுக்கான நோக்கங்களும் விளக்கங்களும் கிடைக்கவேண்டும் என்றே முடியும்போதெல்லாம் எழுதுகிறேன்.

சில மாதங்களுக்கு முன்பிருந்த சுறுசுறுப்பு கூட இப்போதெல்லாம் இல்லை மது எனக்கு. வெகுசீக்கிரமே மிகுந்த களைப்பு வந்து அழுத்துகிறது. அடிக்கடி பிளந்ததோலைப்போன்ற விநோதவாய்ப்புண் வருகிறது. மூக்கிலிருந்து அவ்வப்போது ரத்தம் வடிவதும் உண்டு. பயங்கள் நீங்கி நிதர்சனத்தை மனம் ஏற்று பக்குவப்படப்பட உடலுபாதைகள் மூச்சு விடுவதைப்போல என்னில் இயல்பாகிவிடத் துவங்கி யிருக்கின்றன. இருந்தாலும், சோர்ந்துசோர்ந்து படுக்கும் என்னைப் பார்க்கும் போதெல்லாம் அக்கறையும் அலுப்பும் கலந்த வார்த்தைகளாலும் பார்வைகளாலும் மயூரனும் மஞ்சுவும் ‘என்ன?’வென்று கேட்கும்போது சொல்லமுடிவதில்லை.

உன் பார்வையில் மட்டும் எப்போதும் ஒரு சலிப்பும் கடுகடுப்பும். உன் வயது அப்படி. புரிகிறது எனக்கு. சின்னச்சின்ன ஆசைகள் பூர்த்தியாகாமல், எப்போது பார்த்தாலும் அழுதுவடிந்து கொண்டு நோயாளியாய் அம்மா இருந்தால், ஒரு நவீனப் பதின்பருவத்து மகன் வேறு எப்படி என்னைப் பார்ப்பான்?! இருந்தாலும், ‘அம்மா’என்று முதன்முதலில் அழைத்து என்னைப்பூரிப்பில் ஆழ்த்திய என் தலைமகனான உன் ஆறுதல் வார்த்தைக்கு என் மனம் கிறுக்குத்தனமாக ஏங்குவது என்னவோ உண்மை.

000

தினமும் கிளம்பி அலுவலகத்துக்குப் போகிறேன். இருப்பினும், முன்புபோல ஈடுபாட்டுடன் கணக்குவழக்குகளைச் செய்யமுடியவில்லை. தவறுகள் ஏற்படாமலிருக்கத்தான் அதிகப்பிரயத்தனங்கள் தேவைப்படுகின்றன. மயூரனும் மஞ்சுவும் இன்னமும் தொடக்கப் பள்ளியில் தான் படித்துக் கொண்டிருக்கின்றனர். இருவரையும் உன் பொறுப்பில் விட்டுவிட்டு செல்வதை நினைத்தால் வழக்கமாக நான் உட்கொள்ளும் சொற்ப உணவும் உட்செல்லவதில்லை.

உங்கள் மூவருக்கும் விஷயம் தெரிந்துவிடுமோ என்று ஒவ்வொரு நாளும் எனக்கு பயம். சிலவேளைகளில், உங்களிடம் பக்குவமாகச் சொல்லிப் புரியவைப்பதே நல்லதோ என்றும், உங்களுக்கு விரைவில் வரவிருக்கும் என் மரணத்தை எதிர்கொள்ள நான் செய்யும் உதவியாகவே அது இருக்குமோ என்றும் பலவாறாக பலமுறை யோசித்துக் குழம்புகிறேன்.

மூத்தவனான உன்னிடம் மட்டும் விஷயத்தைச் சொல்லிவிட்டால் என்ன என்று முதலில் யோசித்தேன். என் நிலையை அறிந்தால், ஒரு வேளை, முரட்டுத் தனத்தையெல்லாம் குறைத்துக் கொண்டு, நீ இன்னும் முனைந்து படிப்பாயோ என்ற சின்ன நம்பிக்கை கூடத் துளிர்க்கும் மனதில். ஆனால், ஒரு வருடமாய் அப்பா எங்கே என்று கேட்டு நச்சரித்து, சமீபமாக மறந்திருந்த உன்னிடம், இதையும் சொல்லி, உன்னைக் கவலையில் தள்ள வேண்டுமா என்று யோசனைச் சங்கிலியின் இறுதியில் தோன்றிவிடும் எனக்கு. அப்பா வீட்டைவிட்டுப் போன ஒரு வருடமாகத் தான் நீ படிப்பில் முன்பைவிட அதிக விட்டேற்றியாக இருக்க ஆரம்பித்திருக்கிறாய். என் நிலையை அறிந்து நீ திருந்தினால் நல்லது. வேறு விதமாக மனதளவில் நீ பாதிப்படைந்து விட்டாலோ என்ற பயம்.

000

ஒரு வருடத்திற்கு முன்பு, ஒரு நாள், “இதோ வரேன்”, என்று சொல்லிவிட்டுப் போனவர் தான் உன் அப்பா. மூன்று நாட்களாகியும் திரும்பவேயில்லை. ஒன்றுமே புரியாமல், அவர் ஆபீஸ¤க்குத் தொலைபேசி விசாரித்தேன். நான்கு நாட்களாகியும் வரவில்லை என்றும் அவரிடமிருந்து ஒரு தகவலும் இல்லையென்று சொன்னபோது வேறு வழியில்லாமல் காவல்துறைக்குச் சென்று புகார் கொடுத்துவிடலாமென்று முடிவெடுத்தேன்.

மறுநாள், காவல்நிலையத்துக்குக் கிளம்பிக்கொண்டிருந்தபோது தான் வீட்டுத் தொலைபேசியடித்தது. உன் அப்பாவின் குரலைக் கேட்டதும்,” எங்கயிருந்து பேசறீங்க?”, என்ற என் கேள்விக்கு பதி சொல்லாமல், ” கவிதா என்ன மன்னிச்சுடு. எனக்கு வேற வழியே தெரியல்ல. ரொம்பக் கொழப்பத்துல இருக்கேன். உன்னையும் கொழந்தைகளையும் விட்டுட்டு எப்படி வரதுன்னு ரெண்டு நாளா யோசிச்சேன். சிங்கப்பூர்லயிருக்கறப்பயே உனக்கு போன்ல பேசிடத்துடிச்சேன். துணிவில்லாம மனசக் கல்லாக்கிகிட்டு,.. “, என்றபடி மறுமுனையில் அவர் பேசமுடியாமல் அழுதபோது எனக்கு வயற்றினுள் முடிச்சுமுடிச்சாகப் பயப்பூச்சிகள் நெளிந்தன.

“ஏன்? என்னாச்சு? எதாயிருந்தாலும்,…..”, என்று நான் சொன்னபோது, என்குரலே எனக்கு அந்நியமாகப் பட்டது. ஏதோ சரியில்லை என்று மட்டுமே உணரமுடிந்தது.மேலே பேசவிடாமல்,”கவிதா, ரொம்ப சாரி. எனக்கு எயிட்ஸ்னு உறுதியாயிடுச்சு. வேல விஷயமா ‘பாதாம்’ (Batam) போனப்ப,..அந்த விவரமெல்லாம் இப்ப எதுக்கு,..இன்னும் ஒரு வருஷமோ இல்ல, …என்னோட மரணம் எனக்கு ஒரு பொருட்டில்ல. ஆனா, உனக்கும் நோயைக் கொடுத்திருப்பேனோன்ற சந்தேகம் தான் அரிக்கிது, எனக்கு பயமாயிருக்கு. நீயும் ப்ளட் டெஸ்ட் பண்ணிக்கோ”, என்று மளமளவென்று சொல்லிவிட்டு துண்டித்துவிட்டார்.

திடீரென்று உலகத்தையே புரட்டிப்போட்டாற்போன்ற பேரதிர்ச்சி! அன்று பள்ளியிலிருந்து திரும்பிய பிறகு நானிருந்த நிலையைப்பார்த்து நீ என்னிடம் ‘என்னம்மா’வென்று கேட்டாய். நம் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றியமைத்த அந்தநாள் உனக்கு நினைவிருக்க வழியில்லை.

எய்ட்ஸா? அவருக்கா? என்று சுழன்று சுழன்று மனதில் அடித்துக்கொண்டிருந்த கேள்விகள் சில நிமிடங்களில் அடங்கிய போதுதான், அப்படிப் பொறுப்பற்று நம்மை விட்டுவிட்டு ஓடியதை நினைத்து சூழ்நிலையின் மேல் வெறுப்பும் கோபமும் உண்டாகி, குபீரென்று அழுகையாகப் பீரிட்டது. கஷ்டமோ நஷ்டமோ, இருந்து சேர்ந்து படுவோம் என்றில்லாமல் அதென்ன ஓடிப்போவது? நல்ல கணவனாகவும் தந்தையாகவும் இருந்தவர் எப்படி அப்படி விட்டுவிட்டு ஓடினார்? என்னால் நம்பவே முடியவில்லை. அவரா விலைமகளிடம் போய் நோயையும் வாங்கிக்கொண்டார் என்றெல்லாம் ஏனோ ஆராயத்தோன்றவில்லை.

000

என் குழந்தைகளுக்கு நானாவது இருக்கிறேனே என்று நினைத்துக்கொண்டு சகஜநிலைக்குத் திரும்பிவிடவே நினைத்தேன். ஓரிரு தினங்களில் உன் அப்பா வேலைசெய்த நிறுவனம் கணக்கைத்தீர்த்து அவரின் கடைசி மாதச் சம்பளத்தை வங்கிக்கணக்கில் போட்டிருந்தது.

மது, உன் அப்பாவுடன் கழித்த மகிழ்ச்சியான நாட்கள் அரைத் துக்கத்திலிருக்கும் போது என் நினைவில் இப்போதெல்லாம் அடிக்கடி வருகின்றன. அவர் இருந்தவரை நம்மிடமெல்லாம் மிகவும் அன்பாகத்தான் இருந்தார். ஆனால், அவருக்கு நாமும், நமக்கு அவரும் அதிகதேவை என்ற நிலை ஏற்பட்டபோது அவர் ஏன் விட்டுவிட்டு ஓடிவிட்டார் என்பது தான் இன்றுவரை எனக்குப் புரியாதபுதிர். சூழ்நிலையின் சதிதானோ?

அடுத்து வந்த நாட்களில் நீங்கள் மூவரும் ‘அப்பா எங்கேம்மா?’ என்று திரும்பத்திரும்பக் கேட்டபோதெல்லாம் வேலை விஷயமாக வெளியூரூக்குப் போயிருப்பதாகச் சொல்லிச் சமாளிக்க முயன்றேன். “போனே பண்ணல்லயா?”, என்று கேட்ட உனக்குத் தான் பதில் சொல்லமுடியாமல் தடுமாறினேன். “ஏம்மா அழுவறீங்க?”, என்று முகத்தைப் பரிதாபமாக வைத்துக்கொண்டு தன் நுனிவிரல்களில் என் முகவாயைத் தாங்கி மஞ்சு கேட்டபோதும், “அம்மாக்கு ஜலதோஷம்டா”, என்று பொய் சொன்னேன்.

எங்கே போயிருக்கப்போகிறார்? பிறந்து வளர்ந்த ‘ஈபோ’ விற்குத்தான் போயிருப்பார். கொஞ்சம் முயற்சித்தாலே கண்டுபிடித்து விட்டிருக்கலாம். ஆனால், உதறிவிட்டு ஓடியவரைக் கண்டு பிடித்து என்னசெய்ய? அவருடைய உடைகளையும் பொருட்களையும் பார்க்கப்பார்க்க அடக்கமுடியாமல் என் உணர்ச்சிகள் கொப்பளித்தன. எல்லாவற்றையும் கண்காணாமல் தூக்கி அலமாரியில் உயரவைத்தேன்.

000

அடுத்த வாரமே என்னுடைய உதிரப்பரிசோதனையின் முடிவு தெரியவந்தது. எனக்குத் தொற்றியிருக்காது என்று நான் மிகத்திடமாக நம்பியதாலோ என்னவோ, எனக்கும் ‘ஹெச் ஐ வீ’ கிருமி இருப்பது உறுதியான அச்செய்தி இடியாக என்னில் இறங்கியது. இனி என்ன? மரணத்தின் வரவை எதிர்நோக்கி நிற்கவேண்டியதுதானா? பிறந்தவருக்கெல்லாம் மரணம் எப்படியும் நிச்சயம். ஆனால், அதன் பிறகு என் குழந்தைகளின் கதி? சாலை விபத்தில்கூட என் உயிர் போகலாம், அப்போதும்தான் மூவரும் நிர்கதியாக நிற்பீர்கள் என்றெல்லாம் நினைத்துக்கொண்டபோது என் நிலையை எண்ணி என்னுள் ஏற்பட்டிருந்த கழிவிரக்கம் மெதுவாகக் கரைந்து.

“சிவப்பணுக்களின் எண்ணிக்கை (CD4 count) ஐநூறுக்கும் குறைவாய் இருந்தாலே எயிட்ஸ் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். உங்களுக்கு முன்னூறுக்கும் குறைவாக இருக்கு. இநூறுக்குக் குறையும்போது நோய் முற்றியநிலையை அடையும். அந்நிலையை அடைவதை மருந்து மாத்திரைகளில் உதவியால் தள்ளிப்போடுவது ஒன்றே தீர்வு”, என்று விளக்கிக்கூறினார் மருத்துவர். “நாங்க உங்களுக்கு கௌன்ஸிலிங்க்குக்கும் ஏற்பாடு செய்வோம்”, என்று சொல்லி முடித்தார். அன்றுதான் மது, நீயா நானா என்ற மரணத்துடனான எனது போட்டி துவங்கியது.

நம் குடும்பப்பொருளாதார நிலையை அறிந்த மருத்துவர் முதல் ஆறு மாதங்களுக்கு ‘மருந்து பரிசோதனைக்காக’ (drug trial) என்னைப் பரிந்துரைத்தார். செலவில்லாமல் ஓடியது. அதன் பிறகு, ஒரு மாதத்திற்கு எழுதிக்கொடுத்த மாத்திரைகளுக்கான செலவு என்னுடைய இரண்டு மாதச்சம்பளத்தை வைத்தால் மட்டுமே வாங்க முடியும். மருந்து வாங்குவதே முடியாத நிலையில், மூன்று மாதத்திற்கு ஒரு முறை கிருமியின் எண்ணிக்கை எந்தளவில் இருக்கிறது என்று சோதித்தறிய வேறு செலவு செய்வது எப்படி? அதற்கு ஒரே ஒரு முறை போனேன். அதன் பிறகு போகவில்லை. அந்தப்பணத்திற்கு வரிசையாய் செலவுகள் இருந்தனவே.

000

போனமாதம் உன் சைக்கிள் பழையதாகிவிட்டது என்று சொல்லி புதியதாய் வாங்கவேண்டுமென்று அடம் பிடித்தாய். நான் மறுத்தற்கு முதன்முறையாக என் முகத்தைப்பார்த்து கோபமும் அழுகையுமாகக் கத்தினாய். எனக்கும் வாங்கித்தரத்தான் ஆசை. ஆனால், மாதாமாதம் மின்கட்டணம், மளிகை, பேருந்து, ரயில் கட்டணச்செலவுகள் என்று நீளமாய் வீட்டுச் செலவுப்பட்டியல். உங்களின் படிப்புச் செலவுகள் தவிர்க்க முடியாததாயிருந்தது. இரண்டு சம்பளத்தில் நடத்திய குடித்தனம் திடீரென்று ஒரு சம்பளத்தில் நடக்கவேண்டுமென்றால், முழிபிதுங்கியது. சேமிப்பில் இருந்த தொகை குறையக்குறைய என்னில் இருந்த பாதுகாப்பின்மை எகிறியபடியே இருந்தது. அப்போதுதான், ஒவ்வொரு நகையாக விற்க ஆரம்பித்தேன்.

என் உடல் எடை குறைய ஆரம்பித்தது. உடுப்பில் இருவர் நுழைந்துவிடும் அளவுக்கு எலும்புமேல் போர்த்திய தோலாய் ஆகியிருந்தேன். அப்படித்தான் இருக்குமென்று மருத்துவர் சொல்லிவிட்டிருந்ததால், மனதளவில் தயாராகியிருந்தேன் என்று வைத்துக்கொள். புதிதாய் உடைகளுக்குச் செலவு செய்யாமல் இருவதவற்றையே கொஞ்சம் பிடித்துப் போட்டுக்கொண்டேன். ” நிமோனியாவோ டீபீயோ வந்தால், நோய் முற்றியநிலையாக இருக்கலாம், உடனே மருத்துவமனைக்கு வந்துவிடுங்கள்”, என்றும் சொல்லியிருந்தார் மருத்துவர்.

மீண்டும் என்னை ‘மருந்து பரிசோதனைக்காக’ ப் பரிந்துரைக்கும்படி மருத்துவரிடம் வேண்டினேன். அதற்கும் என்முறைவரக் காத்திருக்க வேண்டியிருந்தது. கிடைத்தால், மீண்டும் ஒரு ஆறு மாதத்திற்கு ஆயுளை நீட்டிக்கலாம்.குறைந்தபட்சம் குழந்தைகளுக்காகவாவது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருக்கவேண்டியிருந்தது. நோயுடனான போராட்டம் என் மனதையும் பலவீனப்படுத்திய போது அறைக்குள் ரகசியமாக அழுதேன்.

யாரிடமாவது சொல்லி வெளிப்படையாக அழலாமென்றாலும் முடியவில்லை. அதை மட்டும் தவறியும் செய்துவிடலாகாது என்று என்னுள் சத்தியப் பிரமாணமே எடுத்திருக்கிறேன். எனக்கு இருக்கும் நோய் பற்றி யாருக்குமே தெரியாது. அக்கம்பக்கத்தாருக்கும் தான். ஒருவருக்குத் தெரிந்தால், ஊருக்கே தெரிந்தாற்போலத் தான். வட்டாரத்தில் வம்புகள் பரவும் வேகத்தில் சுமத்ராகாட்டுத் தீ தோற்றது. பிறகு அண்டை அயலிலும், பள்ளியிலும் உங்களை ஒதுக்க ஆரம்பித்து விடுவார்களே. மூவரும் வளர்ந்து பெரியவர்களாகும் முன்பே காலன் என்னைக் கொண்டுபோய் விடுவானோ. அதன் பிறகு உங்களின் கதி ! என்றெல்லாம் நினைக்கும் போது பைத்தியமாகி விடுவேனோ என்று பயந்தேன். எய்ட்ஸ் நோயாளிகளை உலகத்தார் பார்க்கும் பார்வையில் இன்னமும் முதிர்ச்சி வந்திருக்காத நிலையில், எனக்கு ரகசியத்தைக்காப்பதைத் தவிர வேறு வழியுமிருக்கவில்லை மதுரன்.

000

இரண்டரை வருடங்களுக்கு முன்பு நடந்தது. அன்று நடந்தது எதுவும் உனக்குத் தெரியாது. மூவரும் பள்ளியில் இருந்தநேரம். மணமாகி பதினோரு வருடங்களாகக் குழந்தைப்பேறு இல்லாத ஒன்பது வயது மூத்த என் அக்கா மல்லிகா தயங்கித்தயங்கிக் கேட்டாளே, எப்படி எடுத்தெறிந்து பேசிவிட்டேனே என்றெல்லாம் பலவாறாய் அடிக்கடி என் யோசனை விரிகிறது.

“கவிதா, உனக்கு ரெண்டு மகன்கள் இருக்கறாங்க. மயூரன மட்டும் எனக்குக் கொடு. நான் சிறப்பா அவன வளர்ப்பேன். உன்னவிட பலமடங்கு வசதியிருந்தும் ஒரு கொழந்தை இல்லாம சூன்யமாயிருக்கு, எனக்கு வாழ்க்கை”, என்றவளிடம், “அக்கா, எப்படிக்கா உனக்கு இப்படிக்கேக்க முடியுது. பத்து கொழந்தையிருந்தாலும், ஒரு அம்மாவுக்கு ஒரு கொழந்தையத் தூக்கிக் கொடுக்க மனசு வருமா? மன்னிச்சுடுக்கா. வேற எதாச்சும் பேசுவோம்”, என்று பட்டென்று சொல்லிவிட்டு எழுந்து போனேன்.

என்னிடம் கேட்க நினைத்து ஒருவருடம் ஆனதையும், எப்படிக்கேட்க என்று குழம்பியதையும் பற்றியெல்லாம் அக்காவின் விசும்பல்களினூடே சொல்லிக்கொண்டே போனார் பெரியப்பா உன் அப்பாவிடம். அதற்கு உன் அப்பாவும் சமாதானமாக ஏதேதோ சொன்னார். அறைக்குள்ளிருந்த எல்லாமே எனக்கும் தெளிவாகக் கேட்டது.

சிலமாதங்களிலேயே இந்தியாவிலிருந்து இரட்டைப் பெண்குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். சில மாதங்களேயான குழந்தைகள் அக்காகுடும்பத்தில் மிகவும் நல்ல முறையில் ஒட்டிக்கொண்டு விட்டதாகவும் ஆரோக்கியமாக வளர்வதாயும் செவிவழித்தகவல்கள் தெரிவித்தன.

உள்ளூரிலிருந்து கொண்டே அக்கா என்னுடன் பேசுவதையோ என்னைப்பார்க்க வருவதை நிறுத்திக்கொண்டாள். நானும் தொடர்பேயில்லாமல் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களைக் கழித்துவிட்டேன். ‘பெரியம்மா’ என்ற பேச்சை உங்களில் யாரேனும் எடுக்கும் போதும் மழுப்பிச்சமாளித்தேன்.

அன்று சுமுகமாகப் பேசியிருந்தால், அவள் கேட்டபடி மயூரனை அவளிடம் கொடுத்திருந்தால், எதிர்காலத்தில் உங்களிருவருக்கும் ஒரு பாதுகாப்பான குடும்பம் அமைந்திருக்குமே என்ற சுயநலம் தோய்த்த எண்ணத்தை இப்போதெல்லாம் தவிர்க்கமுடியவில்லை. நான் பெற்ற குழந்தைகளுக்கு அம்மாவாக நிரந்தரமாக இவ்வுலகில் இருக்கப்போகிறேன் என்ற நினைப்பில் அன்று பேசி விட்டதைப்போலவும், அதற்காகவே தெய்வங்கள் எனக்குப் படிப்பினை கற்றுக்கொடுப்பதைப் போலவும் விசித்திர எண்ணங்கள் தோன்றுகின்றன.

அக்கா என் நிலையை அறிந்தாலே பொருளாதார உதவிகள் செய்வாள். ஆனால், என் மனம் வேண்டியது அதல்ல. சமீபமாக ஒரே உறவான அக்காவைப் பார்க்கமட்டுமே என் மனம் ஏங்கியது. மரணம் வீட்டுக்கதவை எப்போது வேண்டுமானாலும் தட்டும் என்றிருந்த நேரத்தில், ஆறுதல் ஒன்றை மட்டுமே வேண்டித்தான் அக்காவை நினைத்துக்கொண்டேன். ஆனால், அவளைப்பார்த்தால் நிச்சயம் என்னையறியாமல், என் நோயைப் பற்றிச் சொல்லிவிடுவேன் என்று தான் பயந்தேன். அதற்காக அக்கா ஒன்றும் என்னை வெறுத்து ஒதுக்கமாட்டாள் என்றாலும் ‘செய்தி’ மெதுவாக செய்தி பரவிவிடும் என்றும், எதிர்காலத்தில் என் குழந்தைகள் அதனால் பாதிப்படைவார்களே என்றும் தான் மிகவும் கவலையாக இருந்தது. அக்காவைப் பற்றிய நினைப்பு வரும்போதெல்லாம் வலுக்கட்டயமாக சிந்தனையை மற்றவற்றில் செலுத்துகிறேன்.

000

இரண்டு வாரங்களுக்கு முன்பு மஞ்சுவுக்கு வாய்ப்புண் வந்திருந்தது. பார்த்தபோது அதிர்ந்தேன். குழந்தைகளுக்கும் நோய் வந்துவிடுமா என்று பயந்து பதறிய என்னிடம் நீ கூட, “ஏம்மா ஒரு வாய்ப்புண்ணுக்கு இவ்வளவு ·பஸ் பண்றீங்க?”, என்று கோபமாகக் கேட்டாயே. பக்கத்தில் இருந்த மருத்துரிடம் அவளைக்கூட்டிக்கொண்டுபோய்க் காட்டிக்கேட்டேன். சாதாரண புண் தான் என்று சொன்னார். அப்போதுதான் மனம் கொஞ்சம் சமாதானமடைந்தது.

அன்றிலிருந்து தான் வேலை விஷயமாக உன் அப்பா ‘பாதாம்’ தீவுக்குப் போக ஆரம்பித்தது எப்போது என்று யோசித்து யோசித்துக் குழம்பி களைத்தேன். அதை எப்படியாவது அறிந்துகொள்ளத் துடித்தேன். உனக்கும் மயூரனுக்கும் ஹெச் ஐ வீ கிருமி இருக்க வழியில்லை. ஏனென்றால், உன் தம்பி மயூரன் பிறந்து பாலர்பள்ளிப் போகும் வரை அவர் உள்ளூரிலேயே தான் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அது நன்றாக நினைவிருக்கிறது. ஆகவே மஞ்சுவைப்பற்றிதான் கவலை எனக்கு. அவள் பிறக்கும் முன்பே போக ஆரம்பித்து விட்டார் என்று சிலநேரங்களிலும், வேறு சில நேரங்களில் அவள் பிறந்தபிறகே போக ஆரம்பித்தார் என்றும் தோன்றியபடியிருக்கிறது. பயத்திலும் குழப்பத்திலும் சரியாக யோசிக்கும் மனநிலையை இழந்துவிட்டாற்போலிருக்கிறது.

உறுதியாகத் தெரிந்துகொள்ள போன வாரம்தான் அவர் வேலை பார்த்த அலுவலகத்திற்குப் போய் கேட்டேன். கோப்புகளைப்பார்த்துச் சொல்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். நாளைபோகவேண்டும். மஞ்சுவுக்குக் கிருமி இருக்கும் சாத்தியமேயில்லை என்றறிந்தபிறகு தான் கொஞ்சமேனும் நிம்மதி ஏற்படும். என் இறப்பிற்குப் பிறகு நிச்சயம் அக்கா என் குழந்தைகளைப்பார்த்துக்கொள்வாள் என்ற நம்பிக்கை மட்டுமே மீதமிருக்கிறது.

ஒருநாள் மயூரனுக்குப் பள்ளியில் அடிபட்டதாகத் தொலைபேசியில் அழைத்துச் செய்தி சொன்னபொது அலறியடித்துக்கொண்டு ஓடினோமே, அன்று ரத்தசேதம் அதிகமென்றும் உடனே ரத்தம் ஏற்ற வேண்டியிருக்கும் என்றும் சொன்னார் மருத்துவர். ” அம்மா, உங்க க்ரூப் ‘ஏ’ பாஸிடிவ் தானே? நீங்களே ரத்தம் குடுத்துடுங்கமா?”, என்று கவலையுடன் நீ சொன்னதும் திருடனுக்குத் தேள் கொட்டியதைப்போலானது எனக்கு. உனக்கு என்ன பதில் சொல்வேன்? மருத்துவரைத் தனியாகக் கூப்பிட்டு, விளக்கியதும், வெளியிலிருந்து ரத்தம் வருவித்து ஏற்றினார்கள். மயூரனுக்கு வேண்டிய ரத்தம் கிடைக்கும் வரை என் உயிர் என்னிடமில்லை. அன்றிலிருந்தே நீ என்னை,” சீ, நீயெல்லாம் ஒரு அம்மாவா?”, என்ற இடித்துரைக்கும் பார்வை பார்க்கத் துவங்கிவிட்டிருந்தாய். என் நிலையையறிந்தால் குற்றம் சாட்டியிருக்கமாட்டாயோ என்னவோ. ஆனால், பயந்து ஒதுக்கியிருந்தாலும் ஆச்சரியப்பட்டிருக்கமாட்டேன்.

000

போன வாரம் நள்ளிரவில், தொலைபேசி அலறியது. எடுத்தால், உன் அப்பா இறந்துவிட்டார் என்ற செய்தியை எனக்கு முன்பின் பரிச்சயமில்லாத ஒருவர் தெரிவித்தார். மேற்கொண்டு விவரங்கள் கேட்குமுன்னார் போனை வைத்தும்விட்டார். சிலநிமிடங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. கண்கள் கலங்கிய நிலையில் உட்கார்ந்துவிட்டேன். அறைக்குள் எட்டிப்பார்த்தால், நீங்கள் மூவரும் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தீர்கள். நான் மட்டும் கிளம்பிப் போவதா, இல்லை பேசாமல் போகாமலே இருந்துவிடுவதா என்று ஒரே குழப்பம்.

பிள்ளைகளிடம் செய்தியைச் சொல்வதா? எப்படிச் சொல்ல? நோயினால் இறந்ததை உள்ளூரில் தெரிந்தவர்கள் அறியவழியில்லை. அந்த வகையில் அவர் எங்கேயோ போய் இறந்தது என்குழந்தைகளுக்கு நல்லதுதான். ஆனால், நான்? நான் என்ன செய்யப்போகிறேன். நானும் ஓடிப்போய் வேறு ஊரிலா இறக்கமுடியும்? இல்லை, என் இறப்புக்கு வேறு காரணங்கள் ஏற்படுத்தும் வகையில் தற்கொலை செய்துகொண்டுவிடுவதா? உடல் உபாதைகளைக் காட்டிலும் மனப்போராட்டம் தான் எனக்கு மிகுந்த சோர்வைத் தருகின்றது மதுரன்.

தகப்பனின் இறப்பைப்பிள்ளைகளிம் சொல்வதா வேண்டாமா என்று குழம்பும் என் நிலை வேறு ஒரு தாயிற்கும் எப்போதும் வரக்கூடாது மதுரன். சொல்லியிருந்தால், நிச்சயம், நீ பல கேள்விகள் கேட்டிருப்பாய். போவோமே, எப்படி இறந்தாரென்றெல்லாம் நிறைய கேட்டிருப்பாய். அப்படியெல்லாம் எனக்கு இக்கட்டு ஏற்படக்கூடாது என்றுதான், உன் அப்பாவும் செய்திசொன்னவரிடம் முன்கூட்டியே தெரிவித்திருக்கிறார் என்று யூகித்தேன்.

000

இன்று என் நிலை மோசமாக இருக்கிறது, மதுரன். கிருமிகளின் எண்ணிக்கை என் ரத்ததில் ஏறியிருந்தது உதிரப்பரிசோதனை செய்யாமலேயே எனக்கு உணரமுடிகிறது. மதியத்திற்குமேல், உன்னைவிட்டு அக்காவுக்குத் தொலைபேசலாமா என்று தீர்மானிக்கப் போகிறேன். இன்னும் சில மணிநேர நம்பிக்கை. முன்னேற்றம் தெரிந்தால், வெற்றி என்பக்கம்.

மஞ்சு பிறந்து ஏழு மாதத்திற்குப் பிறகுதான் அந்தக் ‘காண்டிராக்ட்’ நிறுவனத்திற்கு வந்ததென்று போனில் சொல்லிவிட்டார்கள். மஞ்சுவுக்கு கிருமி இருக்க வழியேயில்லை என்று அறிந்துகொண்டுவிட்டேன். அதுவே எனக்கு தெம்பைக்கொடுக்கலாம்.

“எனக்கு கிருமி இருக்குமோ?”, என்ற சந்தேகத்துடனேயே வாழ்க்கையை நீங்கள் மூவரும், எதிர்கொள்ளக்கூடாது என்ற ஒரு எண்ணம் ஒருபுறமும், சமூகம் “இவனுக்கும் கிருமி இருக்குமோ?”, என்று உங்களைப் பார்க்கக்கூடாது. பலவிதமான வளரும் வலிகளோடு இவ்வகை வலிகளும் சேராமலிருக்கவே இத்தனையும். எப்போதும் போல, இந்த நொடியிலும் நான் உங்கள் மூவருக்கும் நிறைந்த ஆரோக்கியம் மற்றும் இழப்புகளைத் தாங்கும் ஆத்மபலம் வேண்டிப் பிரார்த்திக்கிறேன்.

நீ கேட்கலாம் திடீரென்று இப்போது ஏன் இவற்றையெல்லாம் என்னிடம் சொல்லவேண்டும் என்று. அப்போது சொல்லாதது சிறுவயதிலேயே உனக்கு வாழ்க்கையில் நம்பிக்கையில்லாமல் போய்விடக்கூடாது என்பதற்கு. இப்போது உனக்குப் படிக்கக் கொடுப்பது, வாழ்க்கை எத்தகைய சவால்களைக்கொண்டது என்று அறிய வேண்டிய பருவத்தை நீ அடைந்துவிட்டதால்.

ஹ¥ஹ¤ம், இல்லை மது, எனக்கு முடியவேவில்லை. நல்லவேளை, நீ இன்று சீக்கிரமே பள்ளியிலிருந்து திரும்பிவிட்டாய். மயூரனையும் மஞ்சுவையும் இன்னும் காணோம். செவிகள் அவர்களின் வருகையைச் சொல்லும் சின்னச்சின்ன அரவங்களை எதிர்பார்த்திருக்கின்றன.

ஒருக்களித்துப் படுத்துக் கொண்டே எழுதவும் முடியவில்லை. வேறு வழியில்லை. இப்போதே முடிக்கிறேன் கடிதத்தை. இதோ, உன்னைக்கூப்பிட்டு பெரியம்மாவைத் தொலைபேசியில் அழைக்கச்சொல்லப்போகிறேன். இவ்வரிகளை மிகவும் சிரமத்துடனேயே எழுதிக் கையெழுத்திட்டு முடிக்கிறேன்.

அன்புடன், அம்மா
பி.கு – மயூரனுக்கும் மஞ்சுவுக்கும் அவர்கள் இன்னும் வளர்ந்த பிறகு இக்கடிதத்தைப் படிக்கக் கொடுக்கவும்.

—-

பிரபல எழுத்தாளர் கோவை ஞானி அவர்கள் நடத்தும் ”தமிழ் நேயம்’ அமைப்பின் ஏற்பாட்டில் திருமதி. ராஜேஸ்வரி அவர்களின் ஆதரவில் 2005ல் நடைபெற்ற பெண் எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டியில் முதல் தகுதி. தேர்வான கதைகளுடன் ‘புதிய காளி’ என்ற (அமைப்பின் எட்டாவது) தொகுதியில் பிரசுரம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *