ஓர் எழுத்தாளனின் மறுபிறவி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 30, 2013
பார்வையிட்டோர்: 11,249 
 

வெயில் சுட்டெரிக்கும் ஒரு கிராமத்திலிருந்து, அழகிய ரம்மியமான மலைப் பிரேதஷமான மலைகளின் இராணி ஊத்தமண்ட் நகரில், எண்ணிலடங்கா கற்பனைகளோடும், வேற்று கிரகம் போன்ற ஊகிப்போடும் கால்களை பேருந்திலிருந்து விடுவித்து இறங்கினான் இமான்.

தனது பள்ளிப் படிப்பின் கோடை விடுமுறையில், ஒரு பலசரக்கு கடைக்கு வேலை செய்வதற்க்காக இமான் இங்கு வந்துள்ளான்.இதுவரை திரைப்படங்களில் மட்டும் பார்த்த ஒன்று. முதன்முறையாக இங்கு வருகின்றான். அதற்கு மேலும் மூன்று மாதங்கள் தங்கவும் வேறு போகின்றான் என்ற நினைவுகள் அவனுள் சொல்லிடற்கரிய ஆனந்த ராகங்களை ஒலித்துக் கொண்டே இருந்தது.

முதல் நாள் அவன் வேலை செய்வதற்காக, பூங்கா சாலையில் உள்ள கடைக்குச் செல்கிறான். அங்கு அவனுக்குக் காணும் யாவும் குதூகலம்.கடைக்கு எதிரே தாவரவியல் பூங்கா, எந்நேரமும் புல்லாங்குழல் ஓசை, சோப்புக் குமிழ் பந்துகளின் அணிவகுப்பு, வெளியூர் வாசிகளின் வருகை சங்கமமாய் குவிய என கற்பனைக்கெட்டாத காணொளி அவன் கண் முன்னே. கடை வேலையும் அவ்வளவு பெரிய சிரமம் இல்லை. பல மொழி பேசும் மக்கள். முதல் நாளே அவன் மனம் முழுவதும் அந்நகருக்கு விற்றுவிட்டான். பணி முடிந்து அவன் அறைக்குத் திரும்புவது இரவு, பதினோரு மணி. அதற்குப் பின்னர் இரவு சாப்பாடு, தூக்கம். தலையணை அருகில் வானொலி கீதம், என்று குதூகலாமாய் சென்று விட்டன இரண்டு வாரங்கள்.

அன்று, 16-05-2007 இரவு இமானும் அவனது கடை சகாக்களும் பூங்காவிற்கு கபடி விளையாடச் சென்றனர்,மணி இரவு 9:30. மறுநாள் மலர்க் கண்காட்சி என்பதனால் பூங்கவில் தோரணைப் பணிகள் ஜோராக நகர்ந்து கொண்டிருந்தது. இவர்களின் கபடி விளையாட்டு அதனைவிடச் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருந்தது. அந்நேரம், பூங்காவினுள், தன் தலைக்கு முக்காடிட்டு மின்னல் கீற்றாய் ஃபஹ்மிதா நுழைந்தாள். இமானுக்கு அவளைத் தெரியும். தான் வேலை செய்யும் கடைக்கு இடப்புறமாக நான்கைந்து கடைகள் தள்ளி ஒரு உணவு சிற்றுண்டி வைத்திருக்கும் மலையாளத்தவரின் மகளே ஃபஹ்மிதா.

இமான் தினமும் தனது ஊருக்கு ஃபோன் செய்யும் பட்டம்மாள் பாட்டி கடைக்கு அருகில் உள்ளதுதான் ஃபஹ்மிதாவின் ‘மலபார் ஹோட்டல்’. அவன் வேலை முடிந்து அறைக்குத் திரும்பும் வழியில் பட்டம்மாள் கடையின் சந்திப்பின் போது, தன் கடை சகாவான ரஹீம்,ஆனந்த், உடன் நின்று, ஃபஹ்மியை சில நிமிடம் பார்ப்பது, அவள் நட்பிற்க்காக ஏங்குவது ஒரு வழக்கமாகவே இருந்தது இமானுக்குள்.

ஃபஹ்மிதா ஒரு மழலைக் கூட்டத்தின் தலைவி. அவளைச் சுற்றி எப்போதும் சிறார்கள் கூட்டம்தான் இருக்கும். திறந்த குளிர்சாதனப் பெட்டிப் போன்ற பொழுதில், சுற்றிலும் பனிப்பொழிவுப் புகைகள் சூழும் இரவில் ஃபஹ்மியின் சுட்டி விளையாட்டுக்கள் இமானுக்கு இன்னிசைச் சாரல்கள்.

இன்னும் சில வாரங்கள் கழிந்தன. இமான் ஃபஹ்மியை ஒரு அழகிய மாலைப் பொழுதில், ‘பிரிக்ஸ்’ விளையாட்டு மைதானத்தில் சந்தித்தான். அவ்வப்போது கடையில் மேனேஜரிடம் பொய்களை கூறிவிட்டு இப்படி மைதானம் வந்து முப்பது நிமிடம் வேடிக்கை பார்த்துச் செல்வான். இமானுக்கு கிரிக்கெட்டில் சாதிப்பதே உயிர் மூச்சு.

அவன் மெதுவாய் ஃபஹ்மியிடம் நெருங்கி, பெரும் தயக்கத்தோடு முகமன் கூறி, தன் முதல் பேச்சை அவளோடு கொண்டான். ஆச்சர்ய பார்வையோடு அவளும் பதிலுக்கு முகமன் கூறினாள். அவளின் குரலோசை கேட்பது இமானுக்கு இதுவே முதல் முறை. மலையாளம் கலந்த மலைச்சாரல் தமிழ் மொழி அவனுள் ஓர் மின்சராப் பாய்ச்சல்.

ஃபஹ்மிக்கும் இவனைத் தெரியும். தினமும் இவன் வருகையினை இவளும் கவனித்தாள் என்பதனை விட எதிர்நோக்கினாள் என்றே கூறலாம். அன்று இருவரும் தங்களது பெயர் தொடங்கி சுய விவரங்களைக் கணிசமாக பரிமாறிக் கொண்டனர்.

கடையில வேலை இல்லையா என்று, அவள் கேட்க, அவன் எப்படி வந்தான் என்பதனை விளக்கிக் கூறினான். விளையாட்டுனா ரொம்பப் பிடிக்குமா இமான்?  உம்ம்..என் இலட்சியமே கிரிக்கெட்தான். இந்திய அணிக்காக விளையாடனும் அதான் என் மூச்சு ஃபஹ்மி. அப்பறம் ஏன் வேலைக்கு வந்த? மூணு மாசம் ஏதும் செய்யாம சும்மா சுத்தரதுக்கு இங்க வந்துட்டேன்பா. உன் ஊர் எது இமான்?

கீரனூர். பழனி பக்கத்டுல ஒரு கிராமம்பா ஃபஹ்மி. உம் அடுத்த வருஷம் எந்த காலேஜ் போவ? நான் சிதம்பரத்துல அண்ணாமலை யுனிவர்சிட்டிக்கு போறேன். அதான் என் ஆசை. அங்கதான் எனக்கு விளையாட்டு உடற்பயிற்சி படிப்பு இருக்குனு, என் மாஸ்டர் மகேந்திரன் சார் சொல்லிருக்கறாரு ஃபஹ்மி. ஆனா பணம்தான் பிரச்சனை? ஏதோ என்னால முடியறத தேத்தலாமுனுதான் இங்க வந்தேன். இருந்தாலும் குடும்பத்துல ஒத்துக்க மாட்டேங்கறாங்க, என்னாங்கறது ஊருக்குப் போனாத்தான் தெரியும்பா.

உம்ம்ம்ம்ம்…அப்போ நீ இங்கேயெ இருந்திரு இமான், தினமும் காலைல இங்க வா, பயிற்சி எடு. நல்லா விளையாடு, ஊட்டி காலேஜ்லயே சேர்ந்திரு. கண்டிப்பா எங்க அச்சன்கிட்ட நான் பேசி சீட் வாங்கித் தர்ரேன், என்ன சொல்ற இமான் நீ?

ஆஆஆஹ், எல்லாம் சரிதான், ஆனா… இங்க எனக்கு யாரையும் தெரியாதேப்பா!

அதெல்லாம் நான் பார்த்துக்கறேன், நீ காலைல ஆறு மணிக்கு கிரவுண்ட் வந்திரு சரியா.

உம் சரி,சரி இப்போ கிளம்பறேன், கடைல பதில் சொல்ல முடியாது ஃபஹ்மி, வர்றேன் பா.

மறுநாள் விடியல் கிட்டிய நேரம் பூமிக்கு, இமான் வேகமாக மைதானத்திற்குச் சென்றான். அங்கே ஃபஹ்மி டென்னீஸ் விளையாடிக்கிட்டு இருக்க, இமானைப் பார்த்ததும், சில்லென்ற ஒரு சிரிப்போடு வா, இமான் என்று அழைத்தாள். உள்ளே சென்ற இமானுக்கு, ‘ராஜா,நவநீதன்,கல்யாண்,ரோஷன்,மீரா,சாதனா’ என தன் தோழர்களை அறிமுகப்படுத்தினாள் ஃபஹ்மி. பின்னர் வலைப் பயிற்சி இடத்திற்கு அவனை அழைத்துச் சென்று பயிற்சி எடுக்க வைத்து, உற்சாகமாய் அவனுக்கு கமெண்ட் கொடுத்துக் கொண்டிருந்தாள். காலை எட்டு மணி ஆகிவிட்டதினை உணர்ந்த இமான், அங்கிருந்து கடைக்குச் செல்ல முற்ப்பட்டு, ஃபஹ்மியிடமிருந்து விடைபெற்றான்.

மீண்டும் அன்று மாலை சந்திப்பு நடந்தது. அப்போது இமான் ஃபஹ்மியிடம் அவளது தோழர்களைப் பற்றிக் கேட்டான். எப்படி உனக்கு இச்வளவு பசங்க பழக்கம்?

ஐயே எனக்கு வங்க கூடலாம் அவ்ளோ டீப் இல்ல, எல்லொரும் சாதனாவுக்கு ஃப்ரண்ட்ஸ், ஸோ எனக்கு பழக்கம். டென்னீஸ் விளையாடப் போவேன் அவ்ளோதான். உனக்காகத்தான் அவங்ககிட்ட பேசனேன். மத்தபடி எப்போதும்ல இல்லபா நீ வேற. என் அச்சானுக்கு இதெல்லாம் தெரிஞ்சா அவ்ளோதான்.

அப்போ என் கூட பேசற?

உம் ஏதோ புதுசா உணரேன் உன்கிட்ட, நீ தினமும் பட்டம்மா கடைக்கு வர்றப்போ உன் கூட பேசனும்னு ஆசைப்பட்டிருக்கேன்.

சரி, சரி ஃபஹ்மி, உங்க அச்சனுக்கு என்கூட பேசறது தெரிஞ்சதுனா?

சொல்லிட்டேன் உன்னைப் பத்தி. நீ நம்மாளுகங்கறதால ஒன்னுமில்லைபா. நீ இன்னைக்கு நைட் எங்க ஹோட்டலுக்கு வா, அச்சன் பார்கனும்னாரு சரியா. இப்போ பைய்,பைய்.

இரவு வேலை முடிந்து திரும்புகையில், ஃபஹ்மியின் அச்சன் அம்மையிடம் பேசிப் பழகுகிறான் இமான். அவர்களுக்கும் இவனை புடித்தே போயிற்று. (அவர்களின் மனக் கணக்கு என்னவோ?)

இமான் பணப் பிரச்சனை என்று கூறியது, தன்னுடைய விருப்பத்திற்கு மட்டுமே பொருந்துமே தவிர, அவன் குடும்பத்திற்கு அல்ல. இமான் குடும்பமும் வசதிகள் கொண்ட மேட்டுக்குடியே.

நாட்கள் செல்ல, செல்ல இவர்களது நட்பு, கட்டிடத்தினையே துளைபோடும் ஆணி வேராய் படர்ந்துவிட்டது. காலை டீ முதல் இரவு உணவு வரை மலபார் ஹோட்டல்தான் இமானுக்கு.

காலை ‘யுவர் சாய்ஸ்’ பேக்கரி பப்ஸ், நாயர் கடை ஐஸ்கிரீம், பூங்கா காவலரின் மலர் கொத்து, மீனாட்சியக்காவின் கேரட், சுந்தரி அக்காவின் பிளம்ஸ் பழம், திபெத்தியன் மார்க்கெட் ரவுண்ட்ஸ், மாலை நேர வட்டச்சாலை நீரோட்டம், காட்டேஜ் ஏரியாவின் ஏணிப்படிச் சாலைகள் என இவர்களின் குதூகல ரசனைச் சுற்று உலவுகள் கூடிக் கொண்டே போயின.

இமானின் காலைப் பயிற்சிகள் விடாது தொடர்ந்தது. அவ்வப்போது கடையில் எடுக்கும் விடுப்புகள், மெல்ல மெல்ல முழுநாள் விடுப்புகளாக பரிணமித்தது. இமான் மலைகளின் இராணி நகருக்கு வந்து, இன்றோடு இரண்டு மாதங்கள் சரிந்து விட்டன. இமானோடு ஊரில் இருந்து வேலைக்கு வந்திருந்த, ‘சபீர்தீன்,வசீம்,காதர்,சதாம்,பாசித்’ ஆகியோர் இடையிலயே வேலை வெறுப்பு கொண்டும், ஊர் நினைப்பு மூண்டும் திரும்பிவிட்டனர். இமான் மட்டும் தனி. அவனுக்கு இப்போது பழக்கம், சொந்தம், நட்பு எல்லாமே ஃபஹ்மிதான்.

இப்படி பல வருட முகங்கள் மாயமான பின்னர், இமானுக்கு ஃபஹ்மிதா ஒளி விளக்காய் சுடர் விட்டாள். இவர்களின் நட்பு காணாத ஊட்டி மலர்கள் கிடையாது. இந்த நான்கு பாதங்கள் படாத இடங்கள் இல்லை அந்த மலைதேசத்தில்.

இப்படி மாறிப்போன இமான், கடை வேலையில் இருந்து சரியாக இரண்டரை மாதத்தில் நீங்கலானான். ஆனால் அதற்க்காக அவன் ஒரு நாள் முழுவதும் தொடர்ந்து, அவனது கடை முதலாளியின் கம்பெனியில் பட்டை பாக்கெட் செய்து தண்டனை பெற்றான். இருப்பினும் மறுநாள் விடுதலை எனும் உணர்வு மேலோங்கி இருந்தது அவனுள். விடுதலையும் ஆனான். நேரே மலாபார்க்குச் சென்றான் நடந்ததைக் கூறவே. பின்னர் ஒரு நாள் பிரிவு கண்ட இரு உள்ளங்களும் ஒன்றினையவே, உதகையைச் சுற்றி உவகைக் களிப்புக் கொண்டனர்.

வேலை விட்டு வந்துவிட்டதால் இமானுக்கு ஃபஹ்மியின் இருப்பிடம்தான் வீடு. எந்த வேலையும் இல்லாத இமானும், அவனுக்காகவே மாலையும், விடியலும் வேண்டி தவமிருக்கும் ஃபஹ்மியும், அன்புப் பறவைகளாய் மாறி ஆனந்தக் குளியலில் பவனி வந்தனர். இரண்டு நாட்கள் இப்படியாக தொடர்ந்தது.

‘எப்படியும் மீண்டும் இங்கதான் வரப்போறோம். அதனால இப்போதே ஊருக்குப் போயிட்டு, அங்க ஒரு ரெண்டு வாரம் இருந்துட்டு, அப்படியே கையோட, பன்னிரண்டாது மார்க் சீட், டீசி வாங்கிட்டு வந்தரலாம். அப்பறம் இங்கயே சேர்ந்துடலாம்ல’, என்றவாறு எண்ணிய இமான், அதனை ஃபஹ்மியிடம் கூறி பெரிய விவாதத்திற்குப் பின்னர் சம்மதம் வாங்கினான். ஃபஹ்மியின் பெற்றோரும் இமானை, மிகவும் சிரத்தையோடு வழி அனுப்பினர்.

அன்று உதகை முழுவதும் மழை பெய்து தனது சோகத்தைக் காண்பித்தது. ஃபஹ்மி கண்களில் பெரும் நீரூற்று பெருக்கெடுத்தது. இருவரும் சேரிங்-கிராஸில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை நடந்தே வந்தனர்.

வரும் வழியில், வட்டச் சாலை சந்திப்பின் நீரூற்று தனது முகத்தினை மறைத்துக் கொண்டிருந்தது. பலத்த காற்றினால் சாலையோரப் பூக்கள், இருவரின் வழித் தடங்களில் குவிந்தன. அவ்வப்போது பெரும் இடிச் சப்தமும், மின்னல்களின் மிரட்டல்கள் வேறு. இருவருக்கும் பின்னால் ஒரு பத்தடி தள்ளி ஒரு பேரணி. அதில், ‘ராஜா,சாதனா,நவநீதன்,மீரா,’ முன்னிலையில் ஃபஹ்மியின் சிறார் படையும். இமானின் கால்கள் ஒரு சிறிய குழியில் சிக்குண்டு தடுக்கிடவே குருதி எட்டிப் பார்த்தது. புல்லாங்குழல் இசையோ, சோக காணம் ஒன்றை வெளிக் கொணர்ந்தது.

இப்படி எல்லாமுமாக இருவரின் பிரிவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க, பேருந்தின் முதல் படி ஏறினான் இமான். பதினைந்து நிமிட நிறுத்தத்திற்குப் பிறகு பேருந்து புகையை கக்கியது. மெல்ல நகர்ந்து பேருந்து அதன் நிலையத்தை விட்டு வெளியேற முனையும் தருணம், இமானின் கரங்களை வலுவாய் பற்றிய ஃபஹ்மிதா, தனது பூவிதழ்களால் ஒரு முத்தமிட்டாள், அவனது கரங்களை. முதலில் மெல்ல மிருதுவாய், பின்பு அதுவே அழுத்தமாய். சற்று கணமேனும் இருக்கும் அவளின் முத்தங்களின் ஈரம் காய்வதற்குள் பேருந்து நகரை விட்டும் வெளியேறிவிட்டிருந்தது.

மரணமே மட்டுமே நம் பிரிவு என்று நொடிப் பொழுதும் கூறிக் கொண்டவர்களை, காலம் இப்படி பிரித்தது. ஆனால் உண்மை அன்பாளர்களின் கூற்று பொய்ப்பிக்கவில்லை.

ஆம்!

இமான் தன் ஊர் திரும்பி ஆறு மணி நேரம் கரைந்த நிலையில், செல்லிடப் பேசியில் ஒரு பேரிடர் இமானை நிலை குலைய வைத்தது. எதிர் முனையில் ஃபஹ்மியின் அச்சன் ஜபருல்லாவின் குரல், பெரும் அழுகையோடு ஒலித்தது.

இமான்…இ…இ….இமானு! ஃபஹ்மி மெள…….மெள….மெளத் ஆயிட்டாப்பா, எல்லாரையும் விட்டு போயிட்டாப்பா போயிட்டா……!

எனும் இச்செய்தி கேட்ட இமான், அதிவேகமாக தரையில் வீழ்ந்து மயக்கமுற்றான். அப்பொழுது அவன் தன் ஊர் குளத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்றிருந்தான். இவன் மயக்கமுற்றதைக் கண்டு அனைவரும் ஓடி வந்து நீர் தெளித்து, ஒரு பதற்றச் சூழலை உருவாக்கினர். சரியாக இருபது நிமிடங்கள் இறந்திட்ட நிலையில், இமான் கண் விழித்தான். என்னாச்சு…., என்னாச்சுடா என பலரின் கேள்வி குவியல்கள் அவனுக்கு எட்டவே இல்லை.

மெல்ல எழுந்து, கண்கள் விரைக்க பிரம்மை கொண்டவனாக குளத்திலிருந்து தன் வீட்டை அடைந்தான். எப்போதும் சகஜமாய் இருப்பவன் இன்று ஏனோ இப்படி இருக்கிறான் என்று வீட்டினுள் பலருக்கும் குழப்பம்.

காலம் சுழன்றது….! படுத்த படுக்கையாக தன் சுய உணர்வை இழந்து, அவ்வப்போது அழௌகையும், திடீர் சிரிப்புமென ஆறு மாதங்கள் கழிந்து விட்டது.

மருத்துவப் பரிசோதனையில், இமானுக்கு ஏதோ ஒரு பேரிடர் தாக்கம் உள்ளதால், இப்படி சுய நினைவை இழந்துவிட்டார் எனவும், ஆனால் சில மாதங்கள் சென்ற பின்னர் குணமாகிவிடும் என்றும் மருத்துவர்கள் கூறிச் சென்றனர். இதற்கிடையில் இமானுக்கு எத்தனையோ மாந்த்ரீக மருத்துவமும், தாயத்துகளும் என ஒரு ஆண்மீகச் சடங்குகளும் செய்து பார்த்துவிட்டனர் குடும்பத்தினர்.

இமானின், குடும்பத்தாருக்கு ஃபஹ்மி என்ற ஒரு வாழ்க்கை பற்றி ஏதும் தெரியாது. அவர்களும் இமானுக்கு என்னென்னவோ வைத்தியங்கள் செய்யலாயினர். பேய் பிடித்து விட்டது என்றும் நினைத்து, மந்திரித்து ஊதியும் என தொடர்ந்தது, அவர்களின் மருத்துவ முயற்சிகள்.

ஊட்டியிலிருந்து ஃபஹ்மியின் பெற்றோர்கள் தங்களது சொத்துக்களை விற்றுவிட்டு தங்கள் சொந்த ஊரான கேரள மாநிலம் கொள்ளத்திற்க்கே குடியேறிவிட்டனர். இமானைப் பற்றி இவர்களுக்கு ஏதும் தெரியாமலயே போயிற்று. ஊர் இன்னது என தெரிந்தாலும், அவர்கள் செல்லத் துணிவின்றியும் , அதே வேளை இமானின் மீது கோபமும் கொண்டு கொல்லம் சென்று விட்டனர். இமானு இப்புடி போயி இருந்திட்டான் பாரு, சங்கதி தெரிஞ்சும் வரலைல அவன், ச்ச்சீ இப்படி மோசமானவனா அவன்’ என ஃபஹ்மியின் பெற்றோர்கள் இமானை சலிப்பு கொள்வது உண்டு.

ஃபஹ்மிதா ஒரு இருதய நோயாளி. அதனாலயே அவளது பெற்றோர் அவளின் நட்பை தடை கூறவில்லை. இமான் ஊட்டியிலிருந்து புறப்பட்டு சென்ற இரண்டு மணி நேரத்தில், ஃபஹ்மிக்கு அந்தக் கோரம் நடந்தது. இது இவளுக்கு இரண்டாவது அட்டாக். இமானின் பிரிவு தன்னுள் ஒரு பெரும் அழுத்தத்தைக் கொடுக்கவே, அவள் இறப்பைச் சந்தித்தாள். ஃபஹ்மியின் இறுதிச் சடங்குகள் ஊட்டியிலேயே நடந்தது. அங்கேயே அவள் அடக்கமும் செய்யப்பட்டாள்.

ஃபஹ்மியின் உயிர் பிரிந்து பத்து மணி நேரங்கள் கழித்தே!, ஜபருல்லா இமானுக்கு போன் செய்தார். அவருக்கு ஃபஹ்மியின் ஒரு நோட்டிலிருந்து அவனது எண்ணை தேடி எடுக்கவே இவ்வளவு தாமதம், மேலும் சோகப் பீறிடல்கள் வேறு.

இந்தக் கோரம் நடந்து இரண்டு ஆண்டுகள் மடிந்து விட்டன. இமானும் குணமடைந்து விட்டான். எனினும் அவனின் அந்த’ கருமை நிகழ்வு’ பற்றி அவன் யாருக்கும் கூறியதே இல்லை ஒருவரைத் தவிர.

ஆம் ஒருவர் !

அவள்தான் இமானின் காதலி ஜரீனா.

ஆம், இமான் தன் பால்ய வயது தொட்டே ஜரீனா மேல் காதல் கொண்டுள்ளான். இந்த பால்ய காதல் ஃபஹ்மிக்கும் தெரியும், இருப்பினும் ஃபஹ்மி இமானோடு பழகினாள். அதில் இருந்தது நட்பா காதலா என்றால், இரண்டுமே இல்லை அது உயிர். இனம் புரியாத ஓர் ஆத்மச் சங்கமம்.

ஃபஹ்மி இறக்கும் சில நிமிடங்களுக்கு முன்னர், ‘இமான் ஜரினாவோடு சேர்ந்து வாழனும்’ என்று கூறியதாகவும், இமான் இமான் என்ற சப்தம், அவளது மூச்சு வீழும் வரை ஒலித்ததாகவும், பின்னொரு நாளில் இமானிடம் ஜபருல்லா கூறினார்.

ஆம் ! இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர் இமான் கொல்லம் சென்று ஃபஹ்மியின் நினைவுகளை மீட்டு வந்தான்.

இமான் – ஜரீனா காதல் நிச்சயதார்த்தைக் கடந்துவிட்டது. இரு வீட்டாரும் பச்சைக் கொடி ஏற்றிவிட்டனர். ஆனாலும், இமானின் வாழ்வில் என்றும் கருப்புக் கொடிதான் அசைகிறது.

எல்லாம் கடந்து இமானுக்கு இன்று துணையாய் நிற்ப்பது, எழுத்தும், வாசிப்பும் மட்டுமே!

ஐந்து வருடங்கள் உருண்டோடிவிட்டன, ஃபஹ்மிதா நிலத்தடியில் குடியேறி.

மீளாத் துயரில் இருந்து மீண்ட இமான் இன்று அனைவருக்கும் அறிமுகமாகியிருப்பது ஓர் எழுத்தாளனாக.

தன் துயர் நீங்க அவன் எழுதிய எழுத்துக்கள் இன்று பலரின் உள்ளங்களில் துயரத்தைக் குடியமர்த்திக் கொண்டுள்ளது.

ஜரீனா, இமானின் வாழ்வில் இன்னும் சேரவில்லை. அவள் அதன் நாட்களை எதிர் நோக்கியவளாக….

இமான் பேனாவை கையிலேந்தி, காகிதங்களோடு பேசியவனாக !…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *