கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 12,439 
 

புலியுடன் சென்று கொண்டிருந்தேன். புலி நன்றாகவே இரு சக்கர வாகனத்தை செலுத்தியது. அசாத்தியமாக வளைவில் வளைந்து சென்ற லாகவத்தில் வேகம் அதன் பிடியில் இருப்பது தெரிந்தது. தைரியமாக பின் அமர்ந்து செல்லலாம். மெல்ல சிவப்பு விளக்கில் தேங்கியது புலி.

“”ஆமா! இந்நேரத்துக்கு போறோமே! அவர் இருப்பாறா?” புலியிடம் கேட்டேன்.

“”நான் ஏற்கெனவே போன்ல பேசிட்டேன்…ஃப்ரீதான் எப்ப வேணும்னாலும் வான்னு சொல்லிட்டாரு” புலி பேசிக்கொண்டே இடதுபுறம் லாகவமாக திரும்பி பாலத்தின் மீது உந்தி ஏறியது.

பார்க்கப் போகும் நபர் வேறு யாருமல்ல ஒரு டான்ஸ் மாஸ்டர். குத்துப்பாட்டு முதல் குலாவும் பாட்டு வரை அவருடைய அடிதான். நூறு படங்களைக் கடந்துவிட்டார். பாகவதர் முடியும், மைனர் ஜிப்பாவும், வளைந்த மீசையுமாய், கையின் மூன்று விரல்களில் பளிச் சென்று மோதிரம் மின்ன தனக்கு கிடைத்திருக்கும் அந்தஸ்தைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிற அவரது தோற்றத்தை புலி முன்னொரு நாள் ஒரு சினிமா இதழில் காட்டியிருக்கிறது. புலி அன்று அவரை கரடி என்று அறிமுகப்படுத்தி வைத்தது. “”கரடியா?” என்று கேட்கத் தோன்றியது. ஆனால் நீ புலி என்றால் அவர் ஏன் கரடியாக இருக்கக் கூடாது என்று நினைத்து அமைதியாக இருந்துவிட்டேன். புலி மீண்டும் ஓர் ஐந்து விநாடிகள் சிவப்பில் தேங்கி நகர்ந்தது.

இந்த புலியையும், கரடியையும் நம்பி இன்று ஒரு நாள் பொய் சொல்லி விடுமுறை வாங்கியிருக்கிறேன். இந்த முறைதான் ஒரே இடத்தில் ஆறுமாதமாக ஓடிக் கொண்டிருக்கிறது கதை. ஒரு பட்டப்படிப்பை நுனியிழையில் தேர்ச்சி கொண்டு, மூளை பூராவும் கர்ச்சித்துக் கொண்டிருந்த சிங்கத்தின் வேட்கைக்காக, பதினைந்து கறவை மாடுகளையும், எருமைகளையும் வைத்து செவ்வனே காலந் தள்ளிக் கொண்டிருந்த அப்பா என்கிற அந்த ஜீவனிடம் வீர வசனம் பேசாத குறையாக மாற்று நகர் நோக்கி, யாரையெல்லாமோ நம்பி வந்து இறுதியில் இந்த ஓட்டலில் ஆறுமாதமாக காலம் அழிகிறது. இரு வேளை உணவுடன், சோத்துக்கு சொன்னது வேலை என்பார்கள். அதன்படியே ஒரு நாள் சூப்ரவைசர், மற்றொரு நாள் ஆள் குறைவென்று சர்வர், இன்னும் சில நாளில் சரக்கு வாங்க மார்கெட்டில் இறங்க வேண்டும். சொல்வது வேலை அதை செய்தால் சம்பளம். இப்படி எப்பொழுதாவது கேட்டால் விடுமுறை. அதற்கொரு பொய். நியதிக்குட்பட்டு ஓடிக்கொண்டிருக்கிற ஓட்டத்தில் சிங்கத்தின் சீற்றம் ஒடுங்கித்தான் போனது. ஆனாலும் அவ்வப்போது சீறும். அச்சீற்றத்தில் கொஞ்சம் கவிதை பிறக்கும். சில வேளை கதையும் உதயமாகும். இச்சிறிய கனவினுள் ஒரு கனவும் புகுந்து கொண்டது. வாழ்நாளில் ஒரு திரைப்படத்தையாவது இயக்க வேண்டும். அதற்காக அடிவாங்க ஒரு வைராக்யம், அந்த வைராக்யம் தான் ஓட்டலில் சம்பாஷனையாக நடந்து கொண்டிருந்தது.

இப்போது புலியுடன் பார்க்க போய்க்கொண்டிருக்கிறே அந்த கரடியின் தயவில் ஓர் உறுப்படியான இயக்குநரின் கீழ் போய் ஒட்டிக் கொண்டுவிட்டால்- பின் படிப்பினைகளும் பாதைகளும் மெல்ல ஓர் நாள் ஊர் போய் சேர்க்கும். எல்லாம் நம்பிக்கைதான்- என்று மனம் ஆசுவாசம் அடைந்தது. புலி வாகனத்தை ஓரங்கட்டியது. பாக்கெட்டிலிருந்து கைபேசியை எடுத்து யாருடனோ பேசியது.

“”சார்! அங்கதான் சார் வந்துட்டு இருக்கோம்”

“”ஓகே! ஓகே! வாங்க, வாசல்ல செக்யூரிட்டிகிட்ட சொல்லி வச்சிருக்கேன். எம் பேர சொல்லிட்டு நேரா வந்துடுங்க”

“”ஓ.கே. சார்!”- கைபேசி உரையாடலை முடித்துவிட்டு வாகனத்தை உதைக்க ஆரம்பித்தது புலி. ஒரு கதை, இரண்டு கதை, மூன்று, நான்கு, ஐந்து….. வாகனம் தகராறு செய்தது. இப்போது போல் “”செல்ஃப்” இல்லாத பழைய பாடல். இருப்பினும் புலி அதை பளபளவென்று வைத்திருந்தது.

“”நான் ட்ரை பண்ணவா!” புலியிடம் கேட்டேன்.

“”ம்…வேண்டாம். இந்த வண்டிய பத்தி எனக்குத்தான் தெரியும். இதோ இப்ப சரியாகிடும்”

புலியின் வசதிக்காக வண்டியைவிட்டு இறங்கிக் கொண்டேன். “”தள்ள வா” என்று கேட்டேன். “”ம்” என்றது புலி. சிறிது தூரம் தள்ளினேன். உயிர் கொண்டது இஞ்சின். சில நொடிகளில் பறக்க ஆரம்பித்தது புலி. புலி வளைவில் சரிந்து கொண்டே பேசியது.

“”லைன்ல அவர்தான்,, ஹீ இஸ் வெய்டிங்”

மிகவும் யோக்யமான கரடி என்று நினைத்துக் கொண்டேன்.

“”கரடி எப்படி?” மெல்ல புலியை கீறினேன்.

“”இன்றைய தேதிக்கு இவர்தான் லீடிங்…எல்லா டைரக்டரும் வந்து விழறாங்க…குறிப்பா குத்து பாட்டுக்கு அவர அடிச்சுக்க ஆளில்லை. அவர் மனசு வச்சா போதும். உன்னோட எதிர்காலம் கொடி கட்டிப் பறக்கும். நமக்காக அவர் நேரத்த ஒதுக்கினதே பெரிய விஷயம்”

“”ஆள் எப்படி? ஸ்மூத்தா? ரஃப்பா?”

“”இதோ பாரு யாருகிட்டே இருந்தாலும் கொஞ்ச நாளைக்கு கூஜா தூக்கித்தான் ஆகணும். இல்லேன்னா ராஜா ஆக முடியாது. இது ஃபீல்டோட பால பாடம்”

அப்படியா? என்று புலியிடம் பாடம் கேட்டுக்கொண்டேன். இன்னும் ஏதேதோ பேசிக்கொண்டே வந்தது புலி. அத்துறை நிகழ்வுகளை தேடித் தேடி கதையாக விரித்தது. மெüனமாக கேட்பதைத் தவிர வேறு வழியில்லை. கரடியை பார்க்க வேண்டும். ஒரு கூழை கும்பிடு போட்டு அவரை ஈர்க்க வேண்டும். அந்த ஈர்ப்பினால் கரடி தன் கைபேசியை எடுத்து எனக்காகப் பேச வேண்டும். பேசினால்…பேசுவாயா கரடி! பேசாவிட்டால் உடனே ஊரைப் பார்த்து மாடு மேய்க்க சென்றுவிடுவேன் என்று நினைக்காதே! இந்தக் கரடி இல்லை என்றால் இன்னொரு பூதம். பூதம் ஒத்துவரவில்லை எனில் ஒரு பிசாசு! பிசாசு லாயக்கில்லை என்றால் பேயைக் கட்டியாவது அழுவேன். புலியே நீ எப்படி இவ்வளவு பேசிக்கொண்டே கவனம் சிதறாமல் வண்டி ஓட்டுகிறாய்! வண்டியை இயக்கும் விதத்திலேயே அதன் மேல் உனக்குள்ள காதல் தெரிகிறது.

“”இந்தியா முழுவதும் பைக்கிலேயே சுற்றி வர வேண்டும்”

எப்பொழுதோ தன் ஆசையை புலி என்னிடத்தில் கூறியது பொறி தட்டியது. கவலைப்படாதே புலி! இந்த கரடி மூலம் ஒரு ஊன்றுகோல் கிடைக்கட்டும். நானே உன் ஆசைக்கு ஸ்பான்ஸர் செய்கிறேன்.

சிறிது நேரத்தில் ஒரு முட்டுச் சந்து போன்ற தெருவில் நுழைந்தது. அதன் இறுதிக்குச் சென்றதும் முட்டுச் சந்தாக இல்லாமல், இடப்புறம் குறுகிய தெருவாக நீண்டது. அக்குறுகிய தெரு 200 அடிக்குள்ளாகவே தன்னை அகலப்படுத்திக் கொண்டு விரிந்தது. அவ்விரிவின் இறுதியில் கருங்கல் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டிருந்த வீட்டின் கேட்டின் முன்னால் புலி வாகனத்தை ஓரங்கட்டியது. பெரிய கேட்தான். பக்கத்தில் ஆள் நுழைந்து செல்ல ஒரு சிறிய கேட். சிறிய கேட்டின் வலப்பக்கத்துச் சுவரில் “காவிலி சுந்தரம்மா பவனம்’ என்று பொறிக்கப்பட்டிருந்தது.

இடம்பக்க சுவரில் “காவிலி ரெங்கய்யா’ என்ற பெயருக்கு கீழ் டான்ஸ் டைரக்டர் என்று ஆங்கிலத்தில் வடிக்கப்பட்டிருந்தது.

சிறிய கேட்டைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தோம். செக்யூரிட்டி கையால் மறித்தாலும் விஷயத்தைச் சொன்னவுடன் சல்யூட் அடித்து உள்ளேவிட்டான். வீட்டின் முகப்பு கதவை அடைவதற்குள் அது திறந்து கொண்டது. செக்யூரிட்டி போனில் கூப்பிட்டுச் சொல்லியிருக்க வேண்டும். உள்ளே தேடி மாடிக்குச் செல்ல கட்டளை பிறந்தது. மாடிக்குச் சென்றதும் ஜிப்பா அணிந்திருந்த அந்த பாகவதர் சிகைக்காரர் முகம் மலர என்னையும் புலியையும் அழைத்தார்.

“”என்ன சாப்டறீங்க?” என்றார்.

ஒரு ஃபார்மாலிட்டி தான் என்று தெரிந்ததால் நாசூக்காக மறுத்துவிட்டோம். இவருக்கு எப்படி கரடி என்று பெயர் வந்தது என்று கேட்க மனதில் ஓர் அவா எழுந்து மறைந்தது. அவருக்கு ஒரு வணக்கத்தைப் போட்டுவிட்டு சோபாவில் அமர்ந்தோம். அந்த ஜிப்பா

என்னைச் சிறிது நேரம் பார்த்துவிட்டு புலிப்பக்கம் நோக்கியது. அவர் பார்வையை புரிந்துகொண்ட புலி என்னை அறிமுகப்படுத்தி வைத்தது. என்னைப் பற்றி எல்லா விவரங்களையும் கேட்டறிந்தது. கரடியா? ரெங்கய்யாவா?- மனதில் மீண்டும் எதையோ தெரிந்து கொள்ளும் ஆவல்.

“”தம்பி உன்னோட ஆசை, லட்சியம் எல்லாத்தையும் நான் ரொம்ப மதிக்கிறேன். ஆனா அதே சமயத்துல ஓர் உண்மையையும் சொல்றேன். எனக்குக் கூட ஊர்ல பெரிய பண்ணை இருக்கு. அம்பது மாடுங்களுக்கு மேல வச்சிருக்கோம். எல்லாத்தையும் என் பையன் தான் பார்த்துக்கறான். அவனுக்கு இந்த சினிமா, ட்ராமா, கூத்து,கதை, கத்திரிக்கா எதுவும் பிடிக்காது. நாள் முழுக்க பண்ணையிலேயேதான் இருப்பான். ரொம்ப சிம்பிள் பேர் வழி. ஒரு கார் வாங்கிக்கோ, பைக் வாங்கிக்கோன்னு எவ்வளவோ சொன்னேன். ஆனா அவன் இன்னும் அந்த சைக்கிளை விட மாட்டேங்கறான்…” கரடி தன் மகனின் புராணத்தை நீட்டிக்கொண்டே சென்றது.

அதை ஏன் என்னிடம் சொல்லி அறிவுரையா! அங்கலாய்ப்பா? மெல்ல திரும்பி புலியைப் பார்த்தேன், புலி மனசுக்குள் சிரித்துக் கொள்வது தெரிந்தது. புலி கரடியின் பேச்சில் குறுக்கிட்டு,””சார்! நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் ஒண்ணுமில்லை…எல்லாத்தையும் தன் லட்சியத்துக்காக கொஞ்ச நாள் ஒதுக்கி வச்சிருக்கான். நீங்க கை காட்டி விட்டீங்கன்னு போதும். மத்தது எல்லாத்தையும் அவன் பாத்துப்பான்”

“”தம்பி! ஸ்கிரிப்ட் ஏதாவது வச்சிருக்கயா கைவசம்?”

“”டி.வி.க்காக எழுதின ஸ்கிரிப்ட்…அதுவும் பாதில நிக்குது”

“”பரவாயில்லைப்பா…அத எடுத்துகிட்டு போய் டைரக்டர் வீரய்யாவை பாரு. நான் போன் பண்ணி சொல்லிடறேன். ரொம்ப திறமைசாலி. கறார் பேர்வழி! அவரோட அஞ்சு படம் பண்ணிருக்கேன்…வெரி நைஸ் பர்சன்”

“”அட்ரஸ், ஃபோன் நம்பர் சார்!”

“”எல்லாத்தையும் கீழ ஆபிஸ்லே இருந்து வாங்கிக்கோ. அவரப் பாத்துட்டு எனக்கு போன் பண்ணு. மத்தத நான் பாத்துக்கறேன்”

புலி, “”ரொம்ப, ரொம்ப தேங்க்ஸ் சார்” என்று கரடியின் கையைப் பற்றியது.

புலியுடன் மீண்டும் பயணம் தொடர்ந்தது.

“”வீரய்யா எப்படி?” என்று புலியிடம் கேட்டேன்.

“”நான் கேள்விப்பட்ட வரைக்கும் தேனாகவும் பேசுவார். தேளாகவும் கொட்டுவார். அது அவரது தொழில் முறை. அதை நாம் பொறுத்துத்தான் ஆக வேண்டும். ஏன்னா கோடிக் கணக்குல பணத்த கொட்டினவனுக்கு அவர்தான் பதில் சொல்லணும். தேளா கொட்டறத நாம பார்க்கக் கூடாது. அவர் ஒரு முதலை வாய்க்குள்ள தலைய விட்டுருக்கிற சங்கடத்த அனுபவிச்சிக்கிட்டு இருக்காரு. அவரோட நாற்காலியின் வெளிப்பாடும் அப்படிதான் இருக்கும்?”

அடடா! புலி இவ்வளவு விலாவாரியா பேசறதே! சரி! நான் போன் செய்தால் என்று வரச் சொல்வார்? உடனேயா? இல்லை ஒரு பத்து நாட்கள் கழித்தா? வீரய்யாவைக் காணும் எண்ண அலையில் மிதக்கையிலேயே பாக்கெட்டில் செல்போன் அதிர்ந்தது. அப்போதுதான் கடந்த நான்கைந்து மணி நேரமாக எவ்வித அழைப்பும் வராததை உணர்ந்தேன். சட்டென்று செல்போனை பாக்கெட்டிலிருந்து உருவி நம்பரைப் பார்த்தேன். “நண்ள்ற்ங்ழ்’ என்று மிளிர்ந்தது. மகா ஆச்சரியத்துடன் பச்சை பட்டனை அழுத்தி காதில் வைத்துக்கொண்டு,

“”ஹலோ…செல்லம் சொல்லு செல்லம். எல்லாரும் செüக்யமா ஊர்ல…”

“”செüக்யம்தான் அண்ணா”

“”என்ன விஷயம் எதுக்கு பண்ண?”

“”இல்ல. இப்பல்லாம் அம்மாக்கு கொஞ்ச தூரம் நடந்தாலே ரொம்ப எறைக்குது”

“”டாக்டர் கிட்ட போக வேண்டியதுதான”

“”கூட்டிகிட்டு போனோம்…இதய துடிப்பு சரியில்லையாம். ஏகப்பட்ட டெஸ்ட்டுக்கு எழுதி கொடுத்திருக்காரு. அது எல்லாத்துக்கும் ஒரு பதினஞ்சாயிரம் ரூபா ஆகும் போல இருக்கு. அதனால அப்பா உன்னை ஏதாச்சும் காசு அனுப்ப முடியுமான்னு கேட்கச் சொல்லிச்சு”

“”பதினஞ்சாயிரமா!” என்று சில விநாடிகள் மெüனமானேன்

“”என்ன அண்ணே அனுப்பறியா?”

“”ம்…ஏற்பாடு பண்ணறேன்னு சொல்லும்மா”

“”சரி அண்ணே”

செல்லம் என்கிற பங்கஜவல்லி போனை துண்டித்துவிட்ட பின் மெüனம் மூளை முழுவதும் வியாபித்துக் கொண்டது. ஏற்பாடும் இல்லை. புறப்பாடும் இல்லை. எங்கே புரட்டுவது?

“”யாரு லைன்ல?” என்று விசாரித்தது புலி. சொன்னேன். அனைத்தையும் சொன்னேன். கேட்டுவிட்டு,””இந்த மாசம் எவ்வளவு அனுப்பிச்சே?” என்று மிகவும் வாஞ்சையுடன் கேட்டது.

“”ஆயிரம் ரூபா”

“”அவ்வளவுதானா?”

“”நீ வேற இதுக்கே இங்க ஒன்னுத்தையும் காணோம். ஏதோ அனுப்பனுமேன்னு அனுப்பிச்சேன்”

“”சரி லேட்டாயிடுச்சி…உன்னை நான் எங்க ட்ராப் பண்ணனும்னு சொல்லு”

“”ஏதாவது ஒரு ஸ்டேஷன்ல விட்டுடு…பாஸ் இருக்கு போயிடுவேன்”

புலி பேசியதைப் பார்த்தால் தானே அந்த பணத்தை கொடுக்க விழைவது போல் இருந்தது. ஆனால் செய்யாது என்று எனக்குத் தெரியும். ஏனெனில் ஆறு மாதத்திற்கு முன் வாங்கிய இரண்டாயிரத்தை இந்த மாதம்தான் திருப்பி இருக்கிறேன். வாங்கும்போது அடுத்த மாதமே கொடுப்பதாக பேச்சு. கொடுக்கவில்லை. புலியும் வற்புறுத்தவில்லை. ஆனால் இப்போது சப்தமில்லாமல் வாங்கி பாக்கெட்டில் வைத்துக்கொண்டது. சிறிது நேரத்தில் என்னை ஒரு ஸ்டேஷன் வாசலில் இறக்கிவிட்டது. “”நாளைக்கே போன் பண்ணிடு”ன்னு எச்சரித்தது!

“”ம்…ம்…டெஃப்னெட்” என்று சொல்லி முடிப்பதற்குள் புலி பைக்கை நகர்த்தியது. நொடிகளில் பறந்துவிட்டது. புலி அப்படி மறைந்ததும், மீண்டும் பாக்கெட்டில் செல்போன் சிணுங்கியது. எடுத்துப் பார்த்தேன் தயக்கத்துடன். ஓட்டல் ஓனர். பரபரப்புடன் பச்சை பட்டனை அழுத்தி,””ஹலோ சார்!” என்றேன்.

“”என்னப்பா…டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?”

“”இல்ல…இல்ல…சொல்லுங்க சார்”

“”ஒண்ணுமில்ல. நீ நாளைக்கு லீவு போட்றாதப்பா. ஏன்னா கிட்டத்தட்ட நாலு பேர் லீவுல போறாங்க. அதனால நீ கட்டாயமா வந்துடுப்பா. அநேகமா ரெண்டு ஷிஃப்டும் பார்க்க வேண்டியிருக்கும். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோப்பா…என்ன நான் சொல்றது?”

“”சார்! நான் அப்படில்லாம் லீவு எடுக்க மாட்டேன் சார்! நாளைக்கு கட்டாயமா வந்துடறேன்”

கைபேசி துண்டிக்கப்படவும், ரயில் வரவும் சரியாக இருந்தது. சரியான கூட்டம். இடித்துக்கொண்டு ஏறி ஓரமாக சாய்ந்து நின்று கொண்டேன். ரயில் மெல்ல நகர்ந்து வேகம் கொண்டது. தடக், தடக் ஓசை எந்த நெரிசலிலும் கேட்க இனிமையாகத்தான் இருந்தது. மனதில் வீரய்யா வந்து வியாபித்துக்கொண்டார். கூடவே தங்கை கேட்ட பணம் நினைவில் உறுத்தியது. நாளை ஒரு நாள் பல்லைக் கடித்துக்கொண்டு குப்பை கொட்டிவிட்டால் முதலாளியிடம் ஒரு பெயர் சம்பாதிக்கலாம். அதன் அடிப்படையில் ஊர் நிலைமையைச் சொல்லி ஏதாவது தேற்றப் பார்க்கலாம். ஆனால் உடனே சுரீரென்று இன்னொன்றும் மூளையை இடித்தது. அது வேறொன்றுமில்லை, போன மாதம் வாங்கிய ஐயாயிரம் ரூபாய் அம்மாவின் வைத்திய செலவுக்கு என்று பொய் சொல்லி வாங்கியது. அதிலிருந்துதான் புலிக்கு பைசல் செய்திருந்தேன். வீரய்யா, கரடி, தங்கை, புலி என்று மாறி மாறி காட்சிகள் } எந்த விஷயத்தை முதலில் அணுகுவது? மனதில் சுமை அழுத்திற்று. ரயிலோ அந்த நெரிசலை சுமந்துகொண்டு, தாளம் தப்பாமல் ஓடிக்கொண்டிருந்தது. எந்த மனித இரைச்சலையும் பொருட்படுத்தாமல்.

– நவம்பர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *