ஓடு விரைந்து ஓடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 7, 2018
பார்வையிட்டோர்: 6,152 
 

அவள் பெயர் தீபிகா ப்ரான்சிஸ். வயது இருபது.

தினமும் காலை நான்கு மணிக்கே எழுந்து, பக்க வாதத்தால் பாதிக்கப் பட்டிருக்கும் வயதான தன் தந்தையைப் பல் தேய்க்கவைத்து, இதமான வெந்நீரில் குளிப்பாட்டிவிட்டு, காப்பி போட்டுக் கொடுத்துவிட்டு, கடைசியாக அவருக்கான காலை உணவையும் தயார்செய்து அவரருகில் வைத்துவிடுவாள்.

அதன்பிறகு தன் உடைகளை மாற்றி ட்ராக் பாண்ட், டி-ஷர்ட், ஷூக்கள் அணிந்துகொண்டு பரபரவென சைக்கிளை எடுத்துக்கொண்டு இரண்டு கிலோமீட்டர்கள் தள்ளி இருக்கும் மைதானத்திற்கு சரியாக ஆறு மணிக்குச் சென்றுவிடுவாள்.

ஆறு மணிக்கு அவளுடைய பயிற்சியாளரும் வெள்ளை உடையில் தன்னுடைய ஸ்கூட்டரில் வந்து இறங்குவார். இருவரும் பரஸ்பரம் காலை வணக்கம் சொல்லிக்கொண்ட பிறகு, அவர் தன்னிடமுள்ள ஸ்டாப் வாட்ச்சை எடுத்து தயாராக வைத்துக்கொண்டு ‘ஸ்டார்ட்’ சொன்னதும் தீபிகா அந்தப் பெரிய மைதானத்தை சுற்றி ஓட ஆரம்பிப்பாள்.

அவளுடைய ஒரே முனைப்பு 51 செகண்டுகளில் 400 மீட்டர் தூரம் கடந்துவிட வேண்டும் என்பதுதான்.

அதற்காக தினமும் காலையில் வெறியுடன் ஓடுவாள். அவளுடைய ஆதர்ச கதாநாயகி பி.டி. உஷா. உஷா உலக அரங்கின் ஓட்டப் பந்தயத்தில் வெற்றிபெற்று பவனி வந்ததுபோல், அதற்குமேலும் தன்னால் சாதிக்க முடியும் என்று திடமாக நம்பினாள். உஷா கான்பெராவில் 1985 ம் ஆண்டு இதே தூரத்தை 51.61 செகண்டுகளில் கடந்தாள்.

அவளுடைய கோச் சில்வெஸ்டர், தீபிகாவின் முனைப்பை நன்கு புரிந்துகொண்டு அவளுக்காக தன் நேரத்தையும், உழைப்பையும் சிரத்தையுடன் கொடுத்துக் கொண்டிருந்தார்.

ஒருமணிநேரம் ஓடி முடிந்ததும், ஏழரை மணிக்கு வீட்டிற்கு வந்து, . குளித்துவிட்டு ப்ரேக்பாஸ்ட் முடிந்ததும் அன்றைய தினசரியின் ஸ்போர்ட்ஸ் செய்திகளை மட்டும் ஊன்றிப் படிப்பாள். அதன்பிறகு அப்பாவுக்கு மதிய உணவு தயார்செய்து அதை அவரருகில் வைத்தபின், தான் சர்வராக வேலைசெய்யும் ஹோட்டலுக்கு பதினோரு மணிக்குமேல் கிளம்புவாள்.

அந்த மூன்று நட்சத்திர ஹோட்டலில் பகல் பன்னிரண்டு முதல் இரவு எட்டுமணிவரை அவளுக்கு வேலை. அங்கு வரும் கஸ்டமர்கள் நிறையபேர் குடித்துவிட்டு உணவருந்துவார்கள். தீபிகா அவர்களைப் பார்த்து அன்புடன் சிரித்துப் பரிமாறுவாள்.

பணி முடிந்து இரவு வீட்டுக்கு வர ஒன்பதரையாகி விடும்.

அதன்பிறகு அப்பாவை கட்டிலில் மெதுவாகக் கிடத்தி தூங்க வைத்துவிட்டு தானும் தூங்குவாள்.

மறுநாள் காலையில் எழுந்து மறுபடியும் ஓடுவாள்…

அவளது ஒரே குறிக்கோள், ஒரேவெறி ஒலிம்பிக்ஸ் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வாங்கிவிட வேண்டும் என்பதுதான்.

அன்று மதியம் அவள் பணிபுரியும் ஹோட்டலுக்கு ஒரு வசீகரமான இளைஞன் சாப்பிட வந்தான். தீபிகாவைப் பார்த்து நேரடியாகப் புன்னகைத்தான். தீபிகாவுக்கு அது பிடிக்கவில்லை. அடுத்த சில தினங்களுக்கும் அவன் தொடர்ந்து வந்தான், அவளை உற்று உற்றுப் பார்த்தான்.

அதனால் தீபிகா அவன் வரும்போதெல்லாம் தன்னுடைய சர்வீஸ் டேபிளை சாமர்த்தியமாக மாற்றிக்கொண்டு அவனை அவாய்ட் செய்தாள்.

அடுத்த வாரம் அவளிடம் அவன் ஒரு பேப்பர் ப்ரின்டைக் காண்பித்து, “ஐ வான்ட் டு மேரி யூ” என்றான். அதில் அவளுடைய புகைப்படத்துடன் மேட்ரிமோனியல் விளம்பரம் காணப்பட்டது.

அவளுடைய தாய்மாமா அந்த விளம்பரத்தைக் கொடுத்துள்ளார் என்பது தீபிகாவுக்கு உடனே புரிந்துவிட்டது. அவர்தான் அவளை கடந்த சில மாதங்களாக திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி வந்தார். தற்போது அவளைக் கேட்காமலேயே விளம்பரமும் கொடுத்து விட்டார்.

தீபிகா அவனைப் புண்படுத்த விரும்பவில்லை. “அது என்னுடைய போட்டோதான்… ஆனால் தனக்கு தற்போது திருமண ஆசையில்லை” – அவனிடம் நாகரீகமாகக் கூறினாள்.

அந்த இளைஞன் ஏமாற்றத்துடன் வெளியேறினான். அதன்பிறகு அவன் அந்த ஹோட்டலுக்கு வரவேயில்லை. தன்னை திருமணம் செய்துகொள்ள விரும்பித்தான் அவன் தன்னைப் பார்த்து அடிக்கடி புன்னகைத்தான் என்பது புரிந்ததும் தீபிகாவுக்கு அவன் மீது மரியாதை ஏற்பட்டது. அதனால் அவன் வராதது ஏமாற்றமாக இருந்தது. அவனைப் பற்றிய ஒரு நல்ல எண்ணம் தீபிகாவுக்குள் பரவியது.

இரண்டு வாரங்கள் சென்றன…

அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணி. தீபிகா தன் தந்தையை வீட்டின் முற்றத்தில் ஒரு நாற்காலியில் அமரவைத்து குளிப்பாட்டி விட்டுக்கொண்டிருந்தாள். அப்போது காலிங்பெல் ஒலிக்க, தீபிகா போய்க் கதவை திறந்தாள். அந்தப் பையன் தன் தாயாருடன் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தான்.

திடீரென அவர்களது வருகை அதிர்ச்சியளித்தாலும், நாகரீகம் கருதி அவர்களை வீட்டினுள் அழைத்து அமரச் செய்துவிட்டு, அவர்கள் முன்னிலையிலேயே அப்பாவை பொறுமையாகக் குளிப்பாட்டி விட்டாள்.

அதன்பிறகு அவனின் தாயார் தீபிகாவைத் திருமணம் செய்துகொள்ள தன் மகன் விரும்புவதாக அவளின் அப்பாவிடம் முறையாகப் பெண் கேட்டாள். மகன் பெயர் பீட்டர் என்றும், பைலட்டாக இருப்பதாகவும் சொன்னாள்.

தீபிகா அவர்களுக்கு காப்பி போட்டுக் கொடுத்தாள்.

பீட்டர் அமைதியாக, தெளிவாக தன் குடும்பத்தைப்பற்றி விளக்கிச் சொன்னான். அவளும் தன்னுடைய தங்க மெடல் விருப்பத்தைச் சொன்னாள்.

தீபிகாவுக்கு அம்மா இல்லாததுபோல், அவனுக்கு அப்பா இல்லையாம்.

தீபிகாவின் மாமாவைக் கேட்டுவிட்டு சொல்வதாக அப்பா சொன்னதும், இருவரும் கிளம்பிச் சென்றனர்.

அவர்கள் சென்றதும் அப்பா, “உன்னை ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்து விட்டால் என் கடமை முடிந்துவிடும், அதன்பிறகு நான் நிம்மதியாக இறப்பேன்” என்று அவளிடம் தழுதழுத்தார்.

தீபிகா குழப்பத்தில் இருந்தாள். தங்க மெடலும் வேண்டும், அதேசமயம் பீட்டரும் வேண்டும் என்கிற ஆசை அவளுள் துளிர்விட்டது.

அடுத்தநாள் மாலை பீட்டர் ஹோட்டலுக்கு வந்து அவளிடம் தனிமையில் சற்றுநேரம் பேசவேண்டும் என்றான். தீபிகா உடனே டியூட்டி மானேஜரிடம் சொல்லிவிட்டு அவனுடன் வெளியே வந்தாள்.

பீட்டர் நேரடியாக விஷயத்துக்கு வந்தான்.

“உன்னை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது தீபு. உன்னுடைய தங்கமெடல் உத்வேகத்துக்கு நானும் உற்சாகமளிப்பேன்…அதற்கான எல்லா உதவிகளையும் செய்வேன்.”

“ஐயாம் வெரி ஹாப்பி பீட்டர்…அதுதான் என் லட்சியமே.”

“நம் திருமணத்திற்குப் பின், உன் அப்பாவும் நம்முடன் இருப்பாரா?”

“ஆமாம் பீட்டர்… அப்பாவுக்கு என்னை விட்டால் வேறுயாரும் கிடையாது. நான்தான் அவருடைய உலகமே…”

“அப்பாவை அதே வீட்டில் ஒரு நர்ஸ் போட்டு பார்த்துக் கொள்ளலாமே? நமக்கு வீடு மீனம்பாக்கம் ஏர்போர்ட் குவார்ட்டர்ஸில்… என்னுடைய அம்மா மட்டும்தான் நம்முடன் இருப்பாள் தீபிகா.”

“……………………….”

“நானும் அம்மாவும் நேற்று இதைப்பற்றி நிறையப் பேசினோம்… நீயும் அப்பாவிடம் இதை எடுத்துச் சொல். அப்பாவை அதே வீட்டிலோ அல்லது வேறு ஒரு நல்ல காப்பகத்திலோ சேர்ப்பதாக நீ சொன்னால், நம் கல்யாணத்துக்கு எந்தத் தடையும் இல்லை தீபு. ப்ளீஸ் அண்டர்ஸ்டான்ட்…”

“நோ பீட்டர், ஐ கான்ட் அக்ரி…”

“மை மம்மி வில் நாட் அக்ஸப்ட்.”

“தென் ஐ டோன்ட் திங்க் அவர் மேரேஜ் வில் டேக் ப்ளேஸ்.”

தீபிகாவுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. மனக் குமுறலுடன் அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

தன்னுடைய தங்க மெடல் முனைப்பில் ஒரு சிறிய சலனம் ஏற்பட்டுவிட்டதை எண்ணி தன்னையே நொந்துகொண்டாள். அன்று இரவு அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு நிம்மதியாகத் தூங்கினாள்.

மறுநாள் காலை ஆறுமணிக்கு மைதானத்தில் இருந்தாள்.

ஒரு புதிய உத்வேகம் அவளுள் பரவியது. அன்று அவள் 51 செகண்டில் 400 மீட்டர்தூரம் வெறியுடன் கடந்தாள்.

கோச் சில்வெஸ்டர் “வெல் டன் மிஸ்.ப்ரான்சிஸ்… யு ப்ரோக் ஆல் த ப்ரீவியஸ் ஏஷியன் ரெக்கார்ட்ஸ்.. கீப் இட் அப்.” என்று மகிழ்ச்சியில் துள்ளினார்.

வானத்தில் ஒரு விமானம் சப்தத்துடன் பறந்து சென்றது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *