ஒளியும் ஒலியும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 15,756 
 

“” என்ன கௌம்பீட்டியளாக்கும்?”

“”போர ஜோலிக்குப் போயித்தானே ஆவணும்.”

“”தூரம் தொலைவெட்டா இருக்கே. வயசான காலத்துலெ… இங்குனக்குள்ளேனா பரவாயில்லை.”

“”இது பெரிய கேதமில்லையா… அதெல்லாம் பார்க்கமுடியுமா அப்புறம் எப்பப் போயிக் கேப்பீயாம்? ஒரு மாசம் ஓடிடுச்சு. காரியத்துக்கும் போகத் தோதுப்படலெ…”

“”நல்ல சாவுதானே?”

“”ம். என் ஜோட்டு ஆளுதான்.”

ஒளியும் ஒலியும்

“”எல்லாம் நம்ம கையிலயா இருக்கு, கூப்பிட்டா போகவேண்டியதுதேன்.”

“”அது உள்ளதுதேன்.”

“”புள்ள குட்டிகளுக்குக் கல்யாணம் முடிச்சாச்சா?”

“”ம்! எல்லாம் தல எடுத்துடுச்சுக. ஒரு கொறையும் இல்லெ. இங்க அடிக்கடி வருவாருள்லே…!”

“”ஆமா…ஆமா… வெத்தலை பாக்குக்கடை வெச்சுருக்காருன்னீகளே…”

“”சும்மா ஆத்தமாட்டாப்புலெ. ஜாதகம் பாத்துக்கிட்டிருந்தாப்புலெ… அந்தாக்குளெ ஒரு கடையை வெச்சு ஒக்காந்திட்டாப்புலெ.”

“”மேலுக்குச் சேட்டமுள்ளாமயா கெடந்தாரு…?”

“”வெடிப்பாத்தேன் இருந்தாருன்னாங்க. காலையிலெ எழுந்திருச்சதும் வீட்டுக்கார அம்மாட்ட கொஞ்சூண்டு நீச்சத் தண்ணி கொண்டான்னுருக்காரு… சரின்னு அந்தம்மாவும் கொண்டாரப்போயிருக்கு… வந்து பாத்தா அந்தாக்குலெ சாஞ்சிட்டாராம். பேச்சு மூச்சுக் காங்கலையாம்… உசிரு பிரிஞ்சுடுச்சாம்…”

“”ப்சு ! நல்ல சாவுதேன் போங்க. இழுக்காம பறிக்காம போய்ச் சேந்திட்டாரு…”

ஒரு பஸ்ஸைப் பிடித்து வந்திருக்கலாம் ; இப்படி வேகாத வெயிலில் எதுக்கு வேகுவேகுன்னு நடக்கணும் ; மிஞ்சிப் போனா ரெண்டு ரூபா துட்டு; போயிட்டுப் போவுது; கழுதைய விட்டெறிஞ்சா அலுங்காமக் கொண்டு போய் விட்டுப்பிடுவான். எவ்வளவோ செலவு ஆகுது. திங்காம உங்காம ஊருப் பயகளுக்குக் கொடுக்குது ; சனியன் ரெண்டு ரூபா துட்டுன்னு பஸ்லெ வந்திருக்கலாம்; சங்கதி அதுவல்ல. மனசுக்கு வேற ஏக்கம்! சோமு ஆசாரியோடு இப்படிதான் இதே வழியில்தான் பேசிக்கொண்டே நடப்பார். இப்போது சோமு ஆசாரி இல்லை. அவர் இல்லாவிட்டால் என்ன அவரோடு பேச முடியாதா? இப்படி நடக்கிறப்ப ஒவ்வொன்றைப் பார்க்கிறப்பவும் அவர் நினைப்புதான். உடல் தளர்ந்தாலும் மனம் வீராப்புதான். மனம் பொங்கிக்கொண்டு வந்தது!

“”நமக்கு கொடுத்து வெச்சலவு அம்புட்டுதேன்; திங்கிறதுக்கும் உடுத்துறவுக்கெல்லாம் எழுதி வாங்கிட்டு வந்திருக்கணும்” என்பார் சோமு ஆசாரி. அவர் சொல்வது வாஸ்தவம்தான். ஒரு கொடையவாவது கையிலெ பிடிச்சுட்டு வந்திருக்கலாம். கொடை இரண்டு வர்றது பெரசில்ல. அது சனியன் சூதானமா திருப்பி வீட்டுக்குக் கொண்டாரணுமே? எங்கிட்டாவது போட்டுட்டு வந்திட்டா அவ்வளவுதேன்! அவ விடமாட்டா; அவ வாய்க்குப் பயந்துதேன் எதுக்குடா அந்தத் தொந்தரவுனு விட்டாச்சு! மணியக்காரருக்கு வெயிலின் உக்கிரம் தாங்க முடியவில்லை. என்னா இன்னும் கொஞ்சத் தூரம்தானே! குளத்தத்தொட்டுப் பிட்டா அப்புறம் சொகம்தேன். புளிய மர நிழழே பராக்குப்பாத்துட்டே வெரசா போயிடலாம். சோமு ஆசாரி இருந்தார்னா பாட்டுப்பாட ஆரம்பிச்சிடுவார். இப்படி இருமருங்கிலும் புளியமரங்கள் ; அடர்ந்த நிழல் ; இப்பத்தான, வண்டி, காரெல்லாம் எத்தன சனங்க இந்த வழியா போயிருக்கும், வந்திருக்கும். நமக்கே எம்பது வயது; தாத்தன் பூட்டன் காலத்து மரங்க!

பயபுள்ளீக அம்புட்டையும் புடுங்கிப் போட்டுட்டு, அகலமா ரோடு போடப் போறாங்கலாம்; நாலு வழிப்பாதையாம்! மூணு மயிலு, நாலு மயிலு தூரம் எம்புட்டு மரங்க! அம்புட்டையும் தரை மட்டமாகிப் போட்டுட்டு தங்க நாற்கரைச் சாலை கொண்டாரப் போறாங்கலாம். அப்புறம் எம்போல அப்புராணிங்க எல்லாம் இப்படி நடக்கமுடியுமோ என்னவோ…!

மணியக்காரர் நடை வேகம் கண்டது. காலில் செருப்பு இல்லை. சிரமத்தோடுதான் நடந்தார். ஆனாலும் அது தெரியவில்லை. “”சித்த இப்படி நின்னீங்கன்னா ; தெச்சுக் கொடுத்துப்பிடுவேன்” என்றான் செருப்புத் தைக்கும் சுப்பையா, அவன் அப்படித்தான் சொல்வான். அவன் பேச்சைக் கேட்டால் போற ஜோலி தொந்தரவு கெட்டுப் போயிடும்னு அவன் பேச்சுக்கு “ஈவ்’ கொடுக்காம செருப்பை உதறிப் போட்டுவிட்டு நடந்துவிட்டார். “”தினமுமா செருப்பு போட்டுக்கிட்டுத் திரியுது. தெக்க வடக்கன்னு எங்குட்டாவது ஜோலி தொந்தரவுனு கிளம்பினாத்தானே அது கழுதையத் தேடுது! இல்லைன்னா அந்தப் பகுமானமெல்லாம் நமக்கெதுக்கு?

“”சின்னமனூர் செவ, ஒரு ஜோலியாப்போவணும்; நம்ம உருப்படிய தோது பண்ணி வச்சுக்கணு வந்த வண்ணாத்திட்ட முந்தா நாளே சொல்லுச்சு. இந்தா அந்தான்னு கிளம்புறவரைக்கும் காணோம்; அப்புறம் ஆத்துசெவ போயி கையோட ஆளக் கூட்டியாந்து, இந்த நாலு முள வேஷ்டியையும் இந்த சட்டை துணியையும் வாங்கப்பட்ட பாடு இருக்கே; வருசக்கூலினா எல்லாப் பயலுகளுக்கும் தொக்குதேன்!
ஊருக்குள் நுழைந்தும், ஒரு மாதிரி அந்நியமாக இருந்தது! நாளுக்கு நாள் எல்லா ஊர்களும் ஊதிக்கொண்டேதான் போகின்றன. ஊளைச் சதைக்காரன் போல! அப்படியே உருவம் மாறிவிடுகிறது. விவசாயிகள், சம்சாரிங்க நடமாட்டம் குறைந்து, வியாபாரிகளின் நடமாட்டம் கூடவும் ஊரின் முகவாட்டமே மாறி விடுகிறது. கட்டவண்டி, மாட்டுவண்டி நின்றிருந்த இடமெல்லாம் இப்பகாரும் பைக்கும்தான்! தெருவில் ஆடு, மாடு கோழிகளை எல்லாம் எங்க காங்க முடிகிறது!
மணியக்காரர் ஒரு கனம் திகைத்து நின்றார்! தெரு தப்பி வந்துவிட்டோமோ! சற்றுமுற்றிலும் பார்வையை ஓட்டினார். திசை தெரியவில்லை. திக்கும் புரியவில்லை. தெரு தப்பி வந்துவிட்டோமோ! முன்னும் பின்னுமாக நடந்து எதையோ தேடினார். பத்திரகாளியம்மன் கோயில் வாசல் தெரிந்தது! அதுக்கு எதுத்தாக்குலெ உள்ள சந்துதேன். நடந்தார். எல்லாம் மாறித்தேன் தெரிந்தது. ஒரு அம்மா தெருவில் முக்காலியைப் போட்டுக் கொண்டு பாத்திரங்களைக் கழுவி கொண்டிருந்தாள்.

“”ஜோசியக் காரு வீடு எதும்மா…?”

“”எந்த ஜோசியரு…?

“”அனுசுக்குள்ள தவறிப் போனாரே…”

“”அது அந்தத் தெருவுள்லெ. இங்க வந்துட்டீக!”

ஒரு கணம் திகைத்தார்.

“”முதல்ல இங்கதான இருந்தாரு…?”

“”கம்பீட்டர் சோசியம் பாக்குறவுக வீடுதானே? அது அந்த தெரு!”

“”ஜாதககாரு – சோமு ஆசாரி!”

“”அது யாரு?” – அந்தப் பெண் யோசித்தாள்.

“”அடீயே, வெத்தல பாக்குக் கரைக் காரவுகளான்னு கேளு” – என்று ஒரு குரல்!

“”ஆமா” என்றார் ஆர்வமாக

“”பின்னே, சோசியக் காரவுக, சோசியக் காரவுகன்னா… அந்தா ஒருத்தர் போராக பாரு… அதேன்…”

முன்புபோல் சட்டென்று வீட்டுக்குள் நுழைய முடியவில்லை! எல்லாமே மாறிப்போய் இருந்தது! இடமும் வலமுமான திண்ணை இல்லை! நீளமான ரேழி இல்லை. பட்டியக் கல் பதித்த பட்டக சாலை இல்லை. நடுச் சுவரில் முதுகைச் சரித்து இருக்கும் சோமு ஆசாரி, ஆளைக் கண்டதும் எழுந்து, ஓடி வருவாரே… இப்போது அப்படி ஒன்றுமில்லை! தயங்கித் தயங்கித்தான் நகர்ந்தார்.

“”இது ஜோசியக் காரு வீடுதானே?”

“”ம் ! காமு ஒங்க அப்பாயிட்ட போய்ச் சொல்லு…”

அந்த சிறுமி ஒரு வீட்டுக்குள் ஓடினாள்! நான்கைந்து வாசல்கள் தெரிந்தன.

சற்று நேரத்தில் ஒரு கிழவி ! மணியக்காரர் கிழவியைப் பார்த்தார். பார்த்துக்கொண்டே இருந்தார். எதையோ தேடும் பார்வை. சட்டென்று தோளில் கிடந்த துண்டை எடுத்து முகத்தில் இழுகிக் கொண்டார். கிழவியும் அவரையே பார்த்து. “”எங்கோ பார்த்தாப்புலெ இருக்கே’-என்ற கலக்கம்!

“”என்னய தெரியுதா ஒங்களுக்கு?”

கிழவியின் கண்கள் கூர்மையாயிற்று !

“”அவரு இருக்கப்ப வந்திருக்கீங்கள்லெ…”

“”மணியக்காரர் !”

“”சீலையம்பட்டிக்காரவுக தானே?”

“”ஆமாம்!”

“”கேதத்துக்கு வரலையா?”

“”ஆள் போட்டு வுடுங்கனுச்சு. என்ன கேக்கிறான். என்னத்தையோ ஒண்ணுமண்ணா சொல்லிட்டு வந்துட்டது. ஒரே சடவு !”

“”திடுதிப்புனு… நம்பவே முடியலே!”

“”நல்லாத்தேன் இருந்தாரு! வீடும் நிறைஞ்சு மணியமாத்தேன் கெடக்கும். கல்யாணம், காதுகுத்துன்னு ஜனங்க காகித்த தூக்கிட்டு வந்திடுங்க. காலையிலெ வெள்ளனமா ஒக்காந்தார்னா வெளக்கு வைக்குற முட்டும் எந்திரிக்கவே முடியாது ! அம்புட்டு “குறிப்புக’ வரும். ஒரு சனத்தைகூட முடியலைன்னு முடுக்க மாட்டார்! இத்தனைக்கும் ஒரு வெத்தலை பாக்குதேன். மிஞ்சிப்போனா காலணாவோ எட்டணாவோ. ஆறு ஆம்பளைகலெ பெத்து என்னத்துக்கு? ஒண்ணுகூட உருப்படி இல்லெ. இல்லைனா எதுக்குச் சீப் படுது!”

“”வெத்தலை பாக்குக் கடை வெச்சாப்புலே…”

“”இவிங்ககிட்ட எதுக்கு தொண்நாந்துகிட்டுக் கெடக்கணும்னு, கொழக்காகாரவுக தெருவுல போயி “வெத்தலபாக்கு க் கடை போட்டாரு… தொட்டுக்கொ தொடச்சுக்கோன்னு இருந்தாலும் ரெண்டு மனுச மக்களையாவது பாத்துகிட்டுக் கெடந்தாரு…”

“”என்னாச்சாம்!”

“”இப்ப வந்தீகளே அந்த முக்குலெதேன் கடை ! நல்ல எடுப்பான எடம் ! எப்பவும் ஜனக்காடு மண்டிக் கெடக்கும். அதுக்கும் ஒல வெச்சாச்சு ! “போன்’ கடைக்காரன் வந்து ஒக்காந்துட்டான். அசலூர்காரன்தேன். ஒத்திக்கு இருந்தாரு. மாச வாடகை. அட்வாசுனு உண்டானக் கொடுக்கிறேங்கப்ப உண்டானக் கொடுக்கிறேங்கப்ப வேணாம்னா சொல்லுவாக…”

“”ப்சு ! கொடுமையே…”

“”அப்புறம் தெக்கப்போறேன் ; வடக்கப்போறேன்னார். வயசான காலத்துலெ ஒங்க பாட்டுக்குச் சூசுவானு இருங்கன்னுச்சு…”

“”மேலுக்கு வெடிப்பாத்தானே இருந்துச்சு?”

“”அதெல்லாம் ஒண்ணுமில்ல. ஒரு காய்ச் மண்டயடின்னு ஒரு நாக்கூட படுத்ததில்லே…”

“”ப்சு…”

“”பிள்ளைங்க தலப் பொறட்டுதேன். பங்குபாகம் பிரின்னு மல்லுக்கு நின்னுச்சு. இன்னும் ஓஞ்ச பாடில்லை. வெட்டுவேன். குத்துவேன்னு திரியுதுக…”

“”அம்புட்டுத்தேன், இதுக வவுசின்னு போக வேண்டியதுதேன்.”

“”அவரு உசுரோட இருக்கப்பவே ஆரம்பிச்சுடுச்சுக…”

“”நடக்குறதேன் நடக்கும்.”

“”கேதம் கேக்க இன்னும் பேரும் வந்துகிட்டிருக்கு; ஒரு காப்பித் தண்ணி வாங்கிக் கொடுக்க ஒண்ணாவது வீடு தாங்குதான்னு பாருங்க…”

“”பாவம் ; ஒங்கபாட்டுக்கு நீங்க இருங்க. நீங்க என்னா செய்வீக…”

“”மோரு வேணா தாரேன் குடிங்க…”

“”தண்ணிக் கொடுங்க ; போதும்.”

“”இருங்க. ஒல வைக்கிறேன். சாப்பிட்டுப் போவீக…”

“”அதெல்லாம் வேண்டாம்.”

“”இனி எங்க போயி சாப்பிடுவீங்க. தூரம் தொலைவுலே இருந்து வந்திருக்கீக…”

“”இதெல்லாமா தூரம்?”

“”இருங்க…”

“”அடுத்தாக்குலெ பாக்கலாம்.”

“”ஆமா ; இனி அடுத்தாக்குலெ எப்ப வரப் போறீக…”

“”பொழச்சுக் கெடந்தா பாக்கலாம்”… என்று எழுந்து கொண்டார்.
மனசு என்னவோ வாடலாகவே இருந்தது. வீட்டை ஒரு கணம் பார்த்தார். கண் இமைக்காத பார்வை. ஒரு பெருமூச்சுவிட்டார். ஜோசியர் இருந்தால் இப்படி விடமாட்டார் ; கண் கலங்கியது. விருட்டென்று நடந்து வீதிக்கு வந்தார். “போயிட்டு வர்றேன்’ என்று சொல்லக்கூடாது. அதனால் ஒன்றும் சொல்லாமலெ நடந்தார். ஜோசியர் இருந்தால் கூடவே தெருமுக்கு வரைக்கும் நடந்து வருவார். மணியக்காரர் தனியாக வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

– டிசம்பர் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *