ஒரு வீடும் சில மனிதர்களும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 22, 2012
பார்வையிட்டோர்: 9,840 
 

தெருவிலே சில கரை வேட்டி கட்டிய கட்சிக்காரர்கள் ஒவ்வொரு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். தேர்தலுக்கு இன்னும் சில தினங்கள் இருந்தன. ஜமுனாவின் வீட்டுக்கு அவர்கள் வந்த போது அவர் துணி துவைத்துக்கொண்டிருந்தார். இடுப்பில் சொருகியிருந்த சேலையை எடுத்து விட்டு சரி செய்து கொண்டு கட்சி காரர் கொடுத்த நோட்டீஸை வாங்கிக்கொண்டார். வயது ஐம்பதுகளில் இருக்கலாம். கட்சிக்காரர்களுடன் வந்தவர்களில் ஏழுமலையும் இருந்தார். அவரை பார்த்தவுடன் வாண்ணா.. உள்ள வா.. என்றார் ஜமுனா.

கட்சிக்காரர்கள் அடுத்த வீடுகளுக்கு போனார்கள். வர்ரேன் போங்க.. என அவர்களை அனுப்பி வைத்தார் ஏழுமலை.

வீட்டுக்குள் வந்தமர்ந்த ஏழுமலைக்கு தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தாள் ஜமுனாவின் மருமகள் வள்ளி. வழக்கமான நல உபசரிப்புகளுக்கு பிறகு ஜமுனாவிடம் ஏழுமலை சொன்னார்.

ஒங்கைல ஒன்னு சொல்லனும்
இன்னான்னா..?
நா அங்க மெயின்ரோட்ல கீற ஒரு வூட்ட வாங்க யோசிச்சுன்னுகிறேன். இப்ப கீற வூட்ட வித்து தான் அத வாங்க முட்யும். ஓங்கைல மின்ன ஒரு தபா சொல்லிக்கிறேன், உனுக்கு வாங்ற வசதி வந்தாக்க உனுக்கே தர்றேன்னு.. நீ மற்ந்திருப்ப நா மறக்கல. உனுக்கு வசதி எப்டி கீது…வாங்கிறாப்ல கீறியா…

ஜமுனா முகம் மலர்ந்தார். “இத்தினி வருசமாயும் சொன்னத மற்க்கலியே” என மகிழ்ச்சியடைந்தார். மேலும் தன் மகன் வீடு வாங்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் இந்த வேளையில் பல வருடங்களுக்கு முன்பு தன் கணவனால் விற்க்கப்பட்ட தன் பழைய வீடு திரும்ப கிடைக்குதே என்ற மகிழ்ச்சி. ஆனாலும் மகிழ்ச்சியை வெளிக்காட்டாமல்

“இன்னா வெலண்ணா” என்றாள்
ஊரா ஆளுங்களுக்கு பாஞ்சு (லட்சம்) உனுக்குன்னா இருவதாயிரம் கொற்ச்சி தர்ரேன்

ஜமுனா பெருமூச்சு விட்டாள். அன்று தன் புருஷன் இருவதாயிரத்துக்கு வித்த வூடு… இப்ப பாஞ்சு லட்சம்.

ஆவட்டும்னா, நைட்டு வாசு வந்தப்றம் சொல்றேன். அவன்பேர்ல வூடு வாங்கனும்னு எம்மாம் வருசமா ஆச… அவுங்க நைனா வித்த வூட்ட வாங்கினா ரொம்ப சந்தோஷண்ணா.

ஏழுமலையின் முகம் மாறியது. “இன்னாது, அவன் பேருக்கா…அதெல்லாம் ஆவாது. உங்கைல தான் பேசுவேன், உம்பேருக்கு தான் எய்தி குடுப்பேன்.

எனுக்கின்னான்னா வேண்டி கெடக்கு, எங்காலமெல்லாந்தான் முட்ஞ்சி பூட்டுதே… அவம்பேர்ல தான் வாங்கனும்.

இத்த கண்டுக்க ஜம்னா.. ஊன் குடும்பத்துக்கு அந்த வூட்ட விக்க எனக்கு இஷ்டமில்ல, உங்கைல மின்ன ஒரு தபா வாக்கு குட்த்திருக்கினேன்னுதான் இப்ப ஊங்கைல ஸொல்றேன்.
அப்பால உன் இஷ்டம்.

ஜமுனாவின் முகம் சுருங்கியது. ஏன் வூட்ல வந்து குந்திக்கினு எனுக்கு குடுக்க இஷ்டமில்லன்னு ஸொல்றதுக்கா இம்மாந்தூரம் வந்தே…என மனதில் எண்ணிக்கொண்டாள்.

எனுக்கு வாசு பேர்ல தான் வாங்க ஆச. நீ இம்மாந்தூரம் ஸொல்றியே…வாசு வரட்டும் பேசிட்டு ஸொல்றேன்.

அவங்கிட்ட இன்னாத்த கேக்க போற, நீ ஸொன்னா அவங்கேப்பான்.

நா ஸொன்னா ஏந்நைனா தட்டமாட்டான், ஆனாக்கூட அவங்கைல கேக்கனும்.

ஏழுமலை முகம் மாறினார். இனிமே இந்த வூடு மேட்டர பத்தி உன்னாண்ட பேச வரமாட்டேன். என சொல்லி விட்டு புறப்பட்டார்.

ஜமுனாவின் மருமகள் வள்ளி கேட்டாள், ஏந்த்த அந்த சித்தப்பா தான் குடுக்க இஷ்டமில்லன்னு சொல்லுதே. அப்பால வேற வீட்ட பாக்கலாமே.

ஜமுனா பெருமூச்சுடன் பழய நினைவுகளில் மனம் லயித்து சொன்னாள்

அது வீடு இல்லம..கோயிலு. ஜமுனாவின் கண்களில் நீர் கோர்த்தது. நா பொறந்ததும் அந்த வூட்ல தான். அப்போ சுத்தி ஓலை மேஞ்ச குட்ச. அங்க பெரிய வேப்பமரம் இர்ந்துச்சு
சின்ன வயசில நாங்கல்லாம் அங்க ஊஞ்சல் கட்டி வெளாடுவோம். மண் தரையில சாண மொய்கி கோலம் போட்டு…பொங்கல் தீவாளி சமயத்தில இன்னமா இருக்குங்கிற.
நா கண்ணாலங் கட்டிக்கசொல்லோ எனுக்கு பாஞ்சு பய்னாறு வயசு. . சின்ன வய்சிலயே நா எங்க மாமாவூட்டுக்கு வர்ரப்ப வெங்கட்டு பொண்டாட்டி வந்துட்டா…ன்னு தாத்தாவும் ஆயாவும் கேலி செய்வாங்கோ.

எனுக்கு கண்ணாலமாகி ரெண்டு வர்சங் கயிச்சு தான் அந்த வூட்ட சொவரு வச்சு கட்னோம். முத்தத்தில கீற ரெண்டு தென்னை மரமும் அவரும் நானுமா சேர்ந்து குயி வெட்டி நட்டு வச்சது தான்.
வூடு கட்டச்சொல்ல நா எனுக்கு அப்டி இப்டி வேணும்னு சொல்லி அதப்போலவே கட்ட சொன்னேங். கெண்த்துக்கு பக்கத்தில ஒரு மாமரங் கீது, அது நா சாப்ட்டு போட்ட கொட்டையில மொளச்சு வளர்ந்தது தான். கெண்த்து சொவருக்கு பின்னால நானும் அவுரும் மணிக்கணக்கா பேசின்னிருப்போம்.

எதையோ நினைத்து ஜமுனாவின் முகம் சிரித்தது. வெளியில் சொல்ல முடியாத விளையாட்டுக்களின் நினைவோ என்னவோ.. சில வினாடிகளுக்கு பிறகு அவரே தொடர்ந்தார்.

ஒரு நா வேல மேல போன மனுசன் எங்கயோ மல்லிப்பூ கொடியும் மருதாணி செடியும் பாத்துச்சாம், வேலக்கி போவாம வூட்டுக்கு வந்து கெணத்துக்கு பக்கத்தில நட்டு வச்சு பந்தல் போட்டுச்சு.

அப்பால ஏன் வித்திங்க..? என கேட்டாள் வள்ளி

எல்லாம் நல்லாத்தான் போய்க்கினு இர்ந்துச்சு, எங்க புட்ச்சுதோ அந்த சனியன்…. குடி அப்பால ஜூது (சூதாட்டம்). அந்த பயக்கம் ஆரம்பிச்ச அப்பால எங்க பாத்தாலும் கடம்… வட்டி..
கன்னிப்பண்ணங் கைல போட்ட சீட்ட ஆறாம் மாசமே எடுத்தாச்சு, அப்பால ஒய்ங்கா சீட்ட கட்டல. அது கைலயே வட்டிக்கு கடம் வேற. தெனிக்கும் கடங்காரங்களுக்கு பதில் சொல்ல முடிஞ்சுதா?
வாங்ன கடன குடுக்க வக்கில்ல உனுக்கெல்லாம் எதுக்கு வூடு பொண்டாட்டி புள்ள் குட்டின்னுச்சு கன்னிப்பண்ண. அது மேலயும் கொற சொல்லக்கூடாது, அது கைல சீட்டு போட்டவங்களுக்கு அது
காச குடுக்கணுமே. அந்த சமயத்தில தான் ஏய்மல அண்ணாத்த வூட்ட வாங்குச்சு, அன்னிக்கு பூரா நா துண்ணாம அய்துண் கீறத பாத்துட்டு மன்சு கேக்காம சொன்னுச்சு “இந்தாம்ம உனுக்கும் ஒரு நா காலம் வரும், அப்ப இந்த மாறி நாலஞ்சு வூடு வாங்குவே, அப்ப நீ இந்த வூட்ட கேட்டா ….தர்றேன்னுச்சு. அதான் இப்ப சொல்லிட்டு போவுது.

மாமா ரொம்ப குடிப்பாரா அத்த.. கேட்டாள் வள்ளி

அத ஏங்கிற.. எப்ப பாத்தாலும் குடிதான்.. அதால தாம் ஒடம்புக்கு முடியாம செத்து போச்சி. சாவர்துக்கு முன்னால ஒரு தபா சொன்னிச்சி, புள்ளைங்கல நல்லா பாத்துக்கோமேன்னு. அப்பால எப்டி எப்டியொ பொயச்சேன்………………….. எத்தினி வருசமா அந்த வூட்ட பாத்து அய்திருப்பேன். ஜமுனாவின் கண்ணங்களில் கண்ணீர் வழிந்தது.

அத்த அந்த வூட்ட வாங்கின வொட்ன நாகாத்தம்னுக்கு பொங்க வைக்கனும். என்றாள் வள்ளி

கடாவே வெட்லாம்மே. . என்றார் ஜமுனா கண்களை துடைத்துக்கொண்டு.

ஜமுனா தான் கஷ்டப்பட்டதை மருமகளிடம் விபரமாக சொல்லவில்லை. பிள்ளைகளை வளர்த்ததில் அவருடைய மனவுறுதியும் உழைப்பும் ஆச்சர்யமானது. ஆண்களாலும் முடியாதது. பிள்ளைகளையும் பார்த்துக்கொண்டு வீட்டு வேலை முதல் சித்தாள் வேலை வரை செய்திருக்கிறார். காய்கறி கடை முதல் டீ கடை வரை வைத்து நடத்தியிருக்கிறார். தாயிற்சிறந்ததொரு கோயிலுமில்லை என சொன்னவர்கள் அனுபவசாலிகள்.

அன்று மாலை அவள் மகன் வாசு வந்தவுடன் ஏழுமலை வந்து பேசிய விபரங்களை சொன்னார்.
நம்ளுக்கு குடுக்க தான் இஷ்டமில்லயே அப்பால ஏன் வந்து பேசனும்..? என்றான் வாசு
அதாண்டா ஒரு தபா சொன்னுச்சே அதுக்கோஸ்றந்தான்னு
கொஞ்சம் கொறச்சி வெல பேசி கேட்டியா..
அதான் ஸொல்றனே அது ஒடனே கெளம்பிட்டு பூடிச்சின்னு.

வாசுவுக்கு அந்த வீட்டை பற்றிய காட்சிகள் விரிந்தன. அந்த வீட்டை வெங்கடேசன் விற்றபோது வாசுவுக்கு பத்து வயது அவன் தங்கைக்கு எட்டு வயது. அவர்கள் குழந்தைகளாய் தவழ்ந்து தத்தி தத்தி நடந்து விழுந்து புரண்டு ஓடி ஆடி விளையாடி, கிணற்றடியில் வெற்றுடம்பாய் நீரை அள்ளி ஊற்றி வயிற்றுக்கு சோப்பு போட்டு குளித்த நாட்கள்…. இனி எப்போது கிடைக்கும் அந்த சந்தோஷம்…?

ஒருநாள் ஏதோ நடந்து விட்டது. மூட்டை முடிச்சுகளுடன் வேறு வீட்டுக்கு போனார்கள். அதன் பிறகு அந்த விளையாட்டு, சொந்த வீட்டு சுதந்திரம் எல்லாம் போயிற்று. அதன் பிறகு எட்டு வீடுகளுக்கு
வாடகைக்கு மாறியிருக்கிறார்கள். அந்த கசப்பான அனுபவங்கள் மாறப்போகிறது. இதோ அந்த வீடு மீண்டும் கிடைக்க போகிறது. அவனுக்கு எதையோ சாதித்து விட்ட மகிழ்ச்சி. மானசீகமாக நைனாவிடம் வேண்டிக்கொண்டான்.
அந்த வூட்ட வாங்கின வொட்ன பேக்ஸைட்ல வனஜாவுக்கு ஒரு ரூம் போடனும். மச்சானும் அவளும் வந்தா இருக்க சொல்னும்.

ஆனா ஏல்மல அந்த வூட்ட நம்ளுக்கு குடுப்பாரா..? என்ற சந்தேகமும் இருந்தது. பழைய நினைவுகளில் மூழ்கினான்.

ஒருநாள் உறவினரின் இறுதி சடங்கில் சுடுகாட்டில் நின்று கொண்டிருந்தபோது, பலரும் அங்கொரு முட்புதர் செடிக்கு பின்னால் சென்று சாராயம் குடித்து விட்டு வந்தனர். ஒரு வயதான் பெண்மணி
பிளாஸ்டிக் கேனில் வைத்து விற்றுக்கொண்டிருந்தாள். துணையாக அருகில் நாற்பது வயது ஆள் ஒருவனும் நின்றிருந்தான்.

இறந்தவரைப்பற்றி இருவர் பேசிக்கொண்டனர்.
நல்லாத்தான இருந்தாரு எப்படி செத்தாரு…
அவருக்கு கேன்சரு என்னென்னவோ சிலவு செஞ்சு பாத்தாரு, ம்…விதிய புடிக்க யாரால முடியும்.
வட்டிக்கு விடுவாரில்ல
ஆமா கறாரான ஆளு. ஒரு நாள் தள்ளி போனா கூட வட்டி அடுத்த மாச வட்டி கணக்கு தான்
அருகிலிருந்த வாசு சும்மா நிற்காமல் “அநியாய வட்டி வாங்கி அடுத்தவன ஏமாத்திறவங்களுக்கெல்லாம் சத்திமா நல்ல சாவே கெடைக்காது” என்றான்.

நோய் துன்பங்கள் இவையெல்லாம் நல்லவன் கெட்டவன் என பார்த்து வருவதில்லை. ஆனாலும் ஆற்றாமையினால் மனிதர்கள் இப்படி பேசிக்கொள்கிறார்கள்.

வாசு பேசியது அருகிலிருந்த ஏழுமலை கன்னியப்பன் காதில் விழுந்தது. அவர்கள் மேல் சாரய நெடி வீசியது. அவர்கள் நிற்பதை அறிந்து தான் அவர்கள் காதில் விழும்படியாய்
சொன்னான் வாசு.

ஏய்.. இங்க வா.. யாரப்பத்திடா சொன்னெ?…. என்றார் ஏழுமலை
நா உன்ன சொல்லலெ.. பொதுவா சொன்னேன் உனுக்கேன் குத்துது.
ஹ.க்காண்டா.. பணத்த வாங்கும் போது அய்து காலப்புடிச்சு வாங்குவீங்க… கேட்டா மட்டும் நாங்க ஆகாதவங்களாயிடுவோம்.
ஒங்க வட்டிய பத்தி தான் ஊருக்கே தெரியுமே.. மொதலுக்கு ஒரு வட்டி அத கட்டாட்ட அதுக்கு ஒரு வட்டி… எங்க நைனா குடுக்க வேண்டிய பண்ணெண்டாயிரத்துக்கு இருவதாயிரம் கணக்கு காண்பிச்சு
வூட்ட எய்தி வாங்கினவுங்க தான நீங்க.. உங்க கணக்கு எனுக்கு தெரியாதா..?
டேய் அப்பல்லாம் நீ சின்னப் பய.. உங்கம்மா கைல கேட்டுப்பாரு எங்கள பத்தி, எவ்ளோ ஹெல்ப் பண்ணியிருக்கோம்னு, நன்றி கெட்ட நாய்ங்களா.. என்றார் கன்னியப்பன்.
இதப்பாரு நாயி பேயின்னே மரியாத கெட்டுடும் என வாசு வாசு குரலை உயர்த்திய போது “ஏம்ப்பா சுடுகாட்ல வந்து பேசுற பேச்சா இது” என அங்கிருந்தவர்கள் அவர்களை அழைத்துக்கொண்டு போனார்கள்.

நைனா நீ சீக்கிரம் பணம் ரெடி பண்ணிட்டு சொல்லு, நா போய் பேசுறேன்.. என ஜமுனாவின் குரல் கேட்டு நிகழ்கால சிந்தனைக்கு வந்தான் வாசு.
சரிம்மா என்ற வாசு அம்மா பேர்லயே வாங்கிடனும் அந்த ஆளு மனசு மாற்றதுக்குள்ளோ.. அது பேரே ஏடாகூடம் ஏல்மல என நினைத்துக்கொண்டான்.
கையிருப்பு பணம், லோன், நகை அடகு வைத்து என பணம் ஏற்பாடு செய்தான்.

மனிதர்கள் சக மனிதர்களிடம் பற்று வைப்பதோடு மட்டுமில்லாமல் வீடு நிலம் இவற்றின் மீதும் பற்று வைக்கிறார்கள். அதன் பலனை அனுபவிக்கிறார்கள்.

மூன்று வார காலம் ஓடிவிட்டது. இன்று காலை ஜமுனா காலண்டரை பார்த்தாள். முகூர்த்த நாள். காலை முதல் சரியாக சாப்பிடவில்லை. அவருக்கு நெஞ்சுவலியுடன் மூச்சுவிடுவதில்
சிரமம் ஏற்ப்பட்டது. உடல் வியர்த்தது. மார்பை பிடித்துக்கொண்டு ..ம்..ம்.ஹு..ம் .என்றாள். உடனே மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

சிறிது நேரத்துக்கு பிறகு அவசர சிகிச்சை அறையிலிருந்த டாக்டர் வாசுவை அழைத்து சொன்னார். நல்ல நேரத்தில கொண்டு வந்துட்டீங்க.. கொஞ்சம் லேட்டாகி இருந்தாலும்……
வீட்ல எதுவும் பிரச்னை..சண்ட ஏதாவதா..? டென்ஷன் ஆனாங்களா..?என்றார்
வாசு யோசித்து பார்த்தான், வழக்கமாக வரும் சின்ன சண்டை கூட இன்று எதுவுமில்ல.. “அதெல்லாம் ஒண்ணுமில்ல சார்” என்றான்.
அவங்க டென்ஷனாகம பாத்துக்கோங்க என டாக்டர் சொல்லி விட்டு போனார்.

ஆனால் இன்று காலை ஏழுமலை அந்த வீட்டை வேறு ஒருவருக்கு விற்று விட்டது நினைவுக்கு வந்தது. அந்த வீட்டை வேறொருவருக்கு பேசி விட்டார்கள் என கேள்விப்பட்டதிலிருந்தே
ஜமுனாவின் முகம் சுருங்கி விட்டது. அதிகமாய் நடமாடவில்லை. அதிக நேரம் உட்கார்ந்தும் படுத்துமே இருந்தார். கிட்டத்தட்ட அங்கு பத்திர பதிவு நடந்த நேரமும் ஜமுனாவுக்கு
மாரடைப்பு ஏற்ப்பட்ட நேரமும் ஒன்றாக இருந்தது.

உறவினர்கள் பலரும் மருத்துவமனைக்கு வந்திருந்தார்கள்.
இதாங் விதிங்றது நல்லா இர்ந்த அண்ணிக்கு திடீர்னு இன்னாச்சு பாத்தியா… என்றார் அங்கு அமர்ந்திருந்த வள்ளியின் தாயார்
இது விதி இல்லமே.. மனுஷாளுங்க புத்தி… என்ற அவளுடைய கணவனின் கண்ணில் கோபம் கொப்பளித்தது. ஐப்பசி மாசம் மய வரும்னு ஆடி மாசம் வெத வெதைக்கிறோம், ஐப்பசியில மய வராம போட்டதெல்லாம் நஷ்டமாச்சுன்ன அது விதி. ஆனா இது விதி இல்லமே. சும்மா கெடந்த பொம்னாட்டியாண்ட வந்து உன் வூட்ட உனுக்கு குடுக்க இஷ்டமில்ல ஆனாலும் வாக்கு குடுத்ததுக்காக வந்து பேசுறேன்னு அர்ச்சந்திரன் மாறி வந்து பேசுனானே அந்த பேமானி கய்த. அவன் பண்ண சதி. சமயம், சந்தர்ப்பம், மனுசாளுங்க பேசுற பேச்சு.. இது தான்மே எல்லாத்துக்கும் காரணம்,
விதிய சொல்லாதெ. என்றார் அவளுடைய கணவன். அவர். நாத்திக எண்ணங்களில் ஊறியவர்

இரண்டு வார காலத்துக்கு பிறகு ஜமுனா மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்தார். உறவினர்கள் வந்து பார்த்தார்கள். எல்லோரது முகத்திலும் நிம்மதி களை குடியேறி இருந்தது.

வாசுவின் முகம் மட்டும் கவலையும் பயமுமாய் இருந்தது. அந்த வீட்டை வாங்கியவர் புதிதாக கட்டுவதற்காக பழைய வீட்டை இடித்து தரைமட்டமாக்கி விட்டார்.
மின்சார இணைப்பு கொடுத்திருந்த சுவர் மட்டும் மரப்பெட்டியுடன் நின்று கொண்டிருக்கிறது. இரண்டு தென்னை மரங்கள் மட்டும் நடப்பதையெல்லாம் பார்த்துக்கொண்டு நிற்கின்றன.

இந்த விஷயம் இப்போதைக்கு அம்மா காதுக்கு போய்விடக்கூடாது என பயப்படுகிறான் வாசு. ஆனால் சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள் ஜமுனாவிடம்
ஜாடைமாடையாய் அதை சொல்லி விட்டார்கள். அது அவனுக்கு தெரியாது. ஜமுனா இப்போதெல்லாம் அதிர்ச்சிகளை தாங்கும் ஆற்றலை பெற்றிருக்கிறார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *