ஒரு மௌனத்தின் குரல்

0
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 4,702 
 

அந்த பெரும் வெளியில் சுற்றிக்கொண்டு இருந்த போது இந்த துயரம் எதுவும்
இருக்கவில்லை. அங்கே காற்றொடு காற்றாய் காற்றின் திசையில் திரிந்து
கொண்டு இருந்தேன்…. சட்டென்று யாரோ பிடித்து இழுப்பது போல்
தோன்றியது… என்னவென்று உணர்வதற்குள் ஒரு இருட்டரையில் தள்ளப்பட்டு
இருந்தேன். சில காலமாய் அந்த இருட்டறையில் தான் வாசம். கொஞ்சம்
நாளான பின் வெளியில் பேசுவதும், கேட்க துவங்கியது. நாளாக நாளாக
சுற்றிலும் சிவப்பு நிற திரவம் ஓடிக்கொண்டு இருக்க நான் ஒரு பந்துக்குள்
இருந்தேன். கை கால்கள் முளைத்து இருந்தது. கொஞ்சமாய் வளர்ந்து
இருந்த போது உந்துதலால் பூமியின் தரை தொட்டேன்.. இதுவரை இருந்த
அந்த மெல்லிய கதகதப்பு போய் சுளீர் என குளிர் தாக்க… வீறிட்டு அழ துவங்கினேன்.

” பொட்டப்புள்ளையாண்டா, என்ன பண்ணப்போறே??”

” என்ன செய்யறது சொல்லிடேன் நீதான் ”

” அதான் ஏற்கனவே சொன்னது தானே …. ”

” சரி என்னமோ பண்ணித்தொலை… நான் போறேன் என்னை விடு….”

ஒரு வயதான பெண் என்னை நோக்கி வந்தாள்.. கையில் பால் கிண்ணம்.. நிரம்ப
பசித்தது…. அழுது அழுது மிகவும் களைப்பு வேறு…. அந்த பெண் என்னை தூக்கி
தன் மடியில் இருத்திக்கொண்டாள். அடடா… என் பசியறிந்து ஊட்டுகிறாள்
இவள் தான் எத்தனை நல்லவள்.

“அய்யோ அத்தை வேணாம்னு சொல்லுங்கத்தை …. என் குழந்தை.. என் குழந்தை
அத்தே சொல்லுங்க அத்தை அய்யோ.. யாராவது சொல்லுங்களேன்….. ”

என்னை பெற்றவள் கதறிக்கொண்டு இருந்தாள். அந்த பால் கிண்ணம் வைத்து
இருந்தவள் சற்று நிதானித்தாள் அத்தை என்றழைக்கப்பட்ட அந்த பெண்ணை
பார்த்தாள். எனக்கு பசி தாங்கவில்லை… அந்த பாலை கொடுத்துவிட்டு பார்த்தால்
என்ன??

“மருத்துவச்சியம்மா சீக்கிரம் ஆகட்டும் நேரமாகுதில்ல”

அந்த பெண் வாயருகில் பால் கிண்ணத்தை வைத்து சாய்த்தாள்.. ஆசையுடன்
உள்வாங்கினேன்.

” அய்யோ எம்புள்ளை போச்சே எம்புள்ளை போச்சே”

பெரிதாய் ஒரு வீறல் அழுகை சத்தம் கேட்டது என்னை பெற்றவள் தான் அது.

கொஞ்சம் பொறுங்கள் என்னவிது வயிறு இப்படி எரிகிறது… உடல் பற்றி எரிவது
போல உணர்வு…..

“என் புள்ளையை கள்ளிப்பால் வச்சி கொன்னுட்டாங்களே….”

முன்பை விட அதிக சப்தத்தில் வீறிட்டாள்.. அதன் பின் பெருத்த மௌனம்.

“எல்லாரும் வாங்களேன்… என் மருமக பிரசவத்துல போய்ட்டாளே…. அய்யய்யோ
என்ன பண்ணுவேன் நான்…..”

அத்தை என அழைக்கப்பட்டவளின் குரல் மெல்ல மெல்ல என் காதுகளில் தேய்ந்து
கொண்டே வந்தது.

மீண்டும் காற்றோடு காற்றாய் பறந்து கொண்டு இருந்தேன். வெகு தொலைவில்
புள்ளியாய் தெரிந்த வெளிச்சம் தான் நாங்கள் போய் சேர வேண்டிய இடம். அங்கு
தான் கடவுள் இருப்பதாக கூட வந்து கொண்டு இருந்த(து)வர் சொன்னது.
உருவமற்ற உருவமாய் நாங்கள் போய் கொண்டு இருக்கிறோம். அந்த இடம்
சேர்ந்தால் பின் மறு பிறவி, துன்பம் ஏதும் இல்லையாம். என்னுடன்
வந்தத(து)வர்களில் பலருக்குதெரிந்திருந்தது. போனதடவைக்கு முன் தடவை இந்த
இடத்தை நெருங்கி கொண்டு இருக்கும்போதே எங்களில் பலர் இழுக்கப்பட்டு
வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டோம். அங்கு இருந்து மறுபடியும் ஒரு
இருண்ட இடத்திற்கு தள்ளப்பட்டோம்.

அய்யய்யோ இதென்ன மறுபடி யாரோ இழுக்கிறார்கள். கடவுளே மீண்டும் அந்த
இருட்டறைக்குள் நான் போக வேண்டுமா??..

இது வேறு இடம். இந்த இடத்துக்கு வந்து இத்தோடு மூன்று மாதங்களுக்கு
மேலாகிறது. மெல்ல மெல்ல வெளியில் பேசும் வார்த்தைகளும் கேட்கதான் செய்கிறது.
” அடியே இந்த தடவையாவது ஆம்பளை புள்ள பெத்து குடு … இல்லாட்டி…
பொறக்கற கொழந்தை மட்டுமில்லை நீ கூட உசுரோட இருக்கமாட்டே”

ஒரு வயதான பெண்ணின் குரல் ஓங்கி ஒலித்தது. அட என்ன இது… அவளே ஒரு
பெண் இருந்தும் பெண்குழந்தை வேண்டாம் என்பாளா எனக்கு ஆச்சர்யமாக தான்
இருந்தது. என்ன உலகம் இது. மனிதம் அற்று போய் சே…. தேவையா இந்த
வாழ்க்கை…. கடவுளே ஒரு வழி காட்டமாட்டாயா…..

” என்ன பண்ணட்டும் நானு, அந்த கடவுள் தான் ஒரு வழி காட்டணும்” எனை
சுமக்கும் உயிர் அழும் வேதனை புரிந்தது.

” இந்த எழவெடுத்த கவர்ன்மெண்ட் வேற ஸ்கேனிங் பண்ண கூடாதுன்னு சட்டம்
போட்டு வச்சிருக்கு.. இல்லாட்ட வரப்போறது பொட்டை கழுதையா இருந்தா இப்பவே
ஒரு முடிவு கட்டிடலாம்” மறுபடி அந்த பெண்மணியின் குரல் தான்….

கடவுளே இன்னும் எத்தனை நாளைக்கு இந்த கொடுமை. ஒருவேளை பிறந்தாலும்
விட்டு வைப்பர்களா….. நான் கிடக்கிறேன்!!! இந்த தாயின் கதி என்ன ?? யோசிக்க
யோசிக்க எனக்குள் எதுவோ சுருங்கி போனது.

” என்னடா… எப்ப பிரசவம் ஆகுமாம்”

” தெரியலைம்மா… டாக்டர் உள்ள கூப்டுனு போய் அரை மணி நேரமாச்சி ஒண்ணும்
சொல்லலை”

” சொன்னது ஞாபகம் இருக்கில்ல…. பொட்டையா இருந்தா நர்சு கிட்ட
சொல்லி வை”

“என்னம்ம நீ ஆணா இருந்தாலும் பெண்ணா இருந்தாலும் என் குழந்தை
தானேம்மா அது ”

” சொல்றதை செய். போன தடவை பொறந்ததை போட்ட மாதிரி இதையும் பண்ண
சொல்லு ….. இந்த பரம்பரைய ஆள ஒரு சிங்க குட்டி தான் வேனும்…. பொண்ணு
பொறந்து என்ன ஆகப்போகுது ”

” இப்படி எங்க பாட்டி நெனச்சி இருக்கலாம் ”

” என்னாது… ”

” ஒண்ணுமில்லை…. ”

நர்ஸ் ஒருத்தி வெளியே வந்தாள்

” உங்களுக்கு கொழந்தை செத்து பொறந்து இருக்குங்க ”

” என்ன நர்ஸ் சொல்றிங்க ?? ஆணா பெண்ணா ”

” ரெண்டும் இல்லாமா என்னவோ ஒரு மாமிச பிண்டம் மாதிரி இருக்கு… கடவுளே
என் சர்வீஸ்ல இப்படி ஒண்ண நான் பார்த்ததில்லை”

அந்த மாமியார் அதிர்ச்சியில் முகம் வெளுத்து இருந்தார்.

“என்னடா இப்படி ஆய்டிச்சி….”

” நீ பண்ணவிருந்த கொடுமை கடவுளுக்கே பொறுக்கல… ”

“அடப்பாவி … நீ பிற்காலத்துல நல்ல இருக்கனும்னு தானடா அப்படி சொன்னேன், நீ
என்னயவே குத்தம் சொல்லுறியேடா…….” குரல் பின்னால் தேய்ந்து கொண்டு இருந்தது.

இந்த தடவை நான் காப்பாற்றி விட்டேன் அந்த தாயை… அடுத்த தடவை யார்
வருகிறார்களோ… தெரியாது… அதற்குள்ளாவது இவர்கள் திருந்தட்டும்…

நான் மறுபடி பறந்து கொண்டு இருந்தேன்… இந்த தடவை யாரும் என்னை இழுத்து
அந்த இருட்டறையில் தள்ள கூடாது. இந்த தடவையாவது அந்த ஒளியை வெகு அருகில்
சென்று பார்த்து, முடிந்தால் அத்துடன் கலந்து விட வேண்டும்.

– கி.ஐயப்பன்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *