ஒரு பகல் ஒரு இரவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 13, 2012
பார்வையிட்டோர்: 10,550 
 

ஒரு பகல்.

சுண்டு விரல் கனமே ஆன கம்பிகள் அவன் அறையின் சன்னலுக்கு வாய்க்கப் பெற்றிருந்தன. துருப்பிடித்த ஹைதர் அலி காலத்துக் கம்பிகளாக இருந்தாலும் காலையில் சூரியன் துணிச்சலுடன் உள்ளே வந்து வணக்கம் சொல்லியது. அது வரும் போது நிச்சயமாக அவன் கண்விழித்திருக்கவில்லை. வேறு வழியில்லை. அவன் வணக்கத்திற்கு கதிரவன் காத்திருக்கத் தான் வேணும். எழுந்தவுடன் கண்ணைக் கசக்கிவிட்டு வணக்கம் சொல்வதற்கு யத்தனித்தான். தூக்கக் கலக்கத்தில் மங்கலாகத் தெரியும் சன்னலுக்கு நேரெதிர் இருக்கும் சுவற்றைப் பார்த்தான். பழைய சன்னலாக இருந்தாலும் சூரியனை சரியான அளவில் ஐந்து செவ்வகங்களாக வெட்டி அந்தச் சுவற்றில் ஒட்டி வைத்திருந்தது.

கிழவியின் தலைமுடியைப் போல நொந்து போய் மடங்கிப் பிய்ந்துவிடும் நிலையில் உள்ள பிரஷ்சில் பக்கத்து அறை பீட்சாக்காரனிடம் பேஸ்ட் வாங்கினான். அவன் மிகவும் கவனத்துடன் காகிதத்தின் கனத்தில் பேஸ்டை தடவினான். அவனும் அதை வைத்து பேருக்கு பல், நாக்கு சுத்தகரிப்பு செய்தான். அதன் பிறகு பெரிய யோசனை. இன்று குளிப்பதா வேண்டாமா என்று ரொம்பவும் யோசித்ததில் காலம் கடந்துவிட்டது. காலர் சுமாராக அழுக்கான ஒரு சட்டையை சிரத்தையுடன் தேர்ந்தெடுத்துப் போட்டுக் கொண்டான். எப்போதோ யாரோ வாங்கிய சென்ட் பாட்டிலை எடுத்தான். பெயர் எழுதியிருந்த பெயிண்ட் கூட அழிந்து போயிருந்தது. உடம்பைச் சுற்றியும் அடித்தான். சன்னமான இரைச்சலுடன் கொஞ்ச நஞ்ச காற்றும் டப்பாவில் இருந்து வெளியேறி காற்றில் கலந்தது. அந்த டப்பாவை மூக்குக்குள் விட்டு அடித்தாலும் மணம் வராது. சுவற்றை இரண்டு முறை இரும்புச்சாவியால் சுரண்டியெடுத்து திருநீராக நெற்றியில் பூசிக்கொண்டான். இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான், அந்தத் துயரம் பிடித்த மேன்ஷனின் சுண்ணாம்படித்த சுவற்றிலும் இருப்பான்.

படிக்கட்டில் பதவிசாக இறங்கி தெருவில் நடந்தான். வயிறு கொடி ஆட்டிவிட்டது. மெயின் ரோட்டுக்குச் செல்லும் வழியில் வலது பக்கம் இரண்டாவது சந்து. மூணு வீடு ரெண்டு பெட்டிக் கடை தள்ளி நீலக்கலர் வண்டி. சூடாக இட்டிலி, முட்டை தோசை, தன்மையான தேவியக்கா. சந்து திரும்பியவுடனே வண்டியும் இட்டிலிச் சட்டியில் இருந்து கிளம்பும் ஆவியும் தெரிந்தது. பார்த்தவுடனே பாதி வயிறு நிரம்பிவிட்டது.

“வாப்பா !”, அவன் ஆறடி தூரத்தில் வரும் போதே வாஞ்சையுடன் வரவேற்றாள் தேவி. அப்போது தான் ஞாபகம் வந்தவளாக, “உக்காந்திரு, வூட்டுக்குப் போயி முட்ட எடுத்தாரேன்”, சேரை இழுத்துப் போட்டுவிட்டு ஓடினாள்.

அவன் வந்தால் என்ன வேண்டுமென்று கேட்பதில்லை. எப்போதும் அஞ்சு இட்டிலியும் ஒரு முட்டை தோசையும் தான். தேவிக்கு அவனைவிட வயசு அதிகமா இல்லை குறைவா என்று தெரியாது. ஆனாலும் பழக்கத்தில் அவள் ‘தேவியக்கா’. இட்டிலியையும் முட்டை தோசையையும் தாண்டி இருவருக்கும் பரஸ்பரம் நல்லெண்ணமும் ஒருவகை நட்பும் இருந்தது. அத்தி பூத்தாற்போல என்றைக்காவது சிரித்துப் பேசுவான் அதுவும் அந்த இட்டிலிக் கடையில் தேவியிடம் மட்டும் தான். பின்னிரவில் வேலை முடித்து வரும்போது சாப்பிட்டவாறே அன்று நடந்ததை இருவரும் பகிர்ந்து கொள்வார்கள். அவள் சுகங்களையும் சோகங்களையும் வெட்கம் பார்க்காமல் சொல்லுவாள். அவன் அந்த அளவு வெளிப்படையாகப் பேசுவதில்லை. எவ்வளவு உணர்வுபூர்வமான விசயத்தையும் செய்தியாகச் சொல்வான். அவர்கள் இருவரும் மற்றவருக்கு, தங்கள் வாழ்வின் நிகழ்வுகளை எழுதிச் செல்லும் நாட்குறிப்பேடாக இருந்து கொண்டார்கள்.

“இந்தாப்பா இந்த இட்டிலி இன்னிக்கு மட்டுந்தான். நல்லா சாப்ட்டுக்க”, காரச் சட்டினியும், சாம்பாரும் ஊற்றிய இட்டிலித் தட்டை அவனிடம் நீட்டியபடி சொன்னாள். அவன் ஒன்றும் சொல்லவில்லை. மெலிதாகச் சிரித்து வைத்தான். அவளே மேலும் தொடர்ந்தாள், “அதில்லப்பா. நாளைக்கு இட்டிலி இருக்கும் ஆனா தேவி இருக்க மாட்டா. அதுக்குத் தான் சொன்னேன்”, சூட்சுமமான வார்த்தைகள்.

“என்ன ஊருக்கா ?”, இரண்டாவது இட்டிலி உள்ளே போய்க் கொண்டிருந்தது.

“ஊருக்குத் தான் போறேன். ஆனா திரும்ப வருவேனா மாட்டேனான்னு தான் தெரியல. எல்லாம் அந்த ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்”, அவள் பேச்சில் ஒரு புதுக்கதைக்கான அச்சாரம் நிழலாடியது. சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அவள் கண்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“யாருகிட்டயும் சொல்லல. இத்தினி நாள் பழகிட்டியேன்னு சொல்றேன். ஆத்தா இருக்குதே அதுக்கு என்ன கலியாணம் பண்ணிக் குடுக்கிற நெனப்பே இல்ல. ஆமா நான் போயிட்டா கடைய யாரு பாப்பா ? அந்தக் கெழவிக்குத் தான் யாரு கஞ்சி ஊத்துவா ?”, அடுத்த ஈடு இட்டிலியை பெரிய தட்டில் கவிழ்த்து சூட்டோடு ஒரு ஹாட்பேக்கில் போட்டு வைத்தாள். சாப்பிடுவதை நிறுத்தியவன் அப்படியே அவள் சொல்வதை ஹரிகதை கேட்பது போல கேட்டுக் கொண்டிருந்தான்.

“வயசு முப்பது நெருங்கிடுச்சு. எனக்கும் ஆச இருக்காதா என்ன ?”, அவள் ஏதோ விபரீதமாகச் சொல்லப் போவதாகப் பட்டது அவனுக்கு.

“அவருக்கு ஒரு இன்சூரன்ஸ் புடிச்சுக் குடுக்கிற வேலையாம். ரெண்டு மாசமாத் தான் பழக்கம். கட்டுனவ கைலாசம் போய் நாலு வருசம் ஆச்சாம். ஒரே பொம்பளைக் கொழந்தையாம். புடிச்சிருக்கு கூட வந்திரு, நல்லா வச்சிக்கிறேன்னாரு. ரெண்டு மூணு நாலு நெதமும் வந்து கேட்டுக்கிட்டே இருந்தாரு. யோசிச்சுப் பாத்தேன். எனக்கும் இந்தப் பொழப்பு பிடிக்கல. சரி வரேன்னுட்டேன். கலியாணத்துக்கு அப்புறம் நான் வேலையெல்லாம் பாக்கக் கூடாதாம் அவரு சொல்லிருக்காரு”, வாடிய பூ மணம் வீசுவதைப் போல இருந்தது இந்த வயதில் அவளுடைய வெட்கம். அவன் இதை எப்படி கையாளுவது என்று மனதைப் போட்டு உளப்பிக் கொண்டிருந்தான்.

இரண்டு இட்டிலிக்கு மேல் சாப்பிடவில்லை. முட்டை தோசையையும் வேண்டாமென்று சொல்லிவிட்டான். கை காய்ந்து போயிருந்தது. அவளுக்குத் தெரியாமல் மீதி இட்டிலிகளை குப்பையில் போட்டுவிட்டு கை கழுவினான். மாதத்தில் அந்த நாள் வரை சாப்பிட்டதற்கு பணம் குடுக்க வேண்டும். இரவு வரும் போது தருவதாகச் சொன்னான். ஒன்பது மணிக்கு பஸ் ஸ்டான்டில் இருந்து அவள் கிளம்புவதாகச் சொன்னாள். பணத்திற்கு பதில் ஒரு சுடிதார் வாங்கித் தந்தால் அவன் நினைவாக வைத்துக் கொள்வதாகவும் கட்டாயம் வழியனுப்ப வரும்படியும் சொன்னாள். தொலைந்து போகும் நாட்களோடு சேர்ந்து அதன் நிகழ்வுக் குறிப்புகளும் அழிந்து போகப் போவதை அவன் உணர்ந்து கொண்டான். அவள் சொன்னதுக்கெல்லாம் பதிலேதும் பேசாமல் தலையை மட்டும் ஆட்டிவிட்டு கிளம்பிவிட்டான்.

கடைக்குப் போகிற வழியெங்கும் பராக்கு பார்த்தபடியே சென்றான். லோன் போட்டோ, கைக்காசிலோ, கருப்புப் பணத்திலோ புதிதாக வாங்கி மாலை போட்டு, சந்தனம் குங்குமம் எல்லாம் வைத்து பூசை செய்யப்பட்ட வாகனங்கள் முனீஸ்வரன் கோவில் வாசலில் வரிசையாக நிறுத்தப்பட்டிருப்பதை நெருப்பாகக் குமையும் வெறுப்புடன் பார்த்தான். தினுசு தினுசான சக்கரை டப்பாக்கள் சக்கரம் கட்டிக் கொண்டு நிற்பதாகப் பட்டது அவனுக்கு. அதையொட்டிய நடைபாதையில் ஜோடியாக ஒரு பெண்ணும் பையனும் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். தம்பதியோ, காதலர்களோ இல்லை மூன்றாம் தர ஜோடியோ என்னமோ ஆனால் நெருக்கம் அதிகமாகவே இருந்தது. பெண் பார்ப்பதற்கு கறுப்பு நிறம். தண்ணீரில் குழப்பியடித்த பவுடரையும் மீறி அவள் சருமம் கருப்பு என்று தெரிந்தது. அவள் கையை அழுத்தமாக பிடித்தபடி உரசி நடப்பவன் அவளுக்கு கொஞ்சம் நிறம் அதிகம். பத்து மணிக்கு வெயில் தன் வெப்பத்தை வழக்கத்துக்கு அதிகமாகவே வழங்கிக் கொண்டிருந்தது. ரோட்டில் எல்லோரும் வியர்வையைத் துடைத்தபடியும் முகத்தைச் சுழித்துக் கொண்டும் விருப்பமில்லாமல் வேலைக்குச் சென்று கொண்டிருந்தார்கள். லெமன் ஜூஸும், ஐஸ் மோரும் விற்பவன் அவன் வண்டியை ரோட்டோரத்தில் நிழலைப் பார்த்து நிறுத்தி வியாபாரத்திற்கு தயாரானான். ஏதோ ஒரு சந்துக்குள் இருக்கும் டீக்கடைச் சிறுவன் ஒரு கையில் டீக்கிளாசுடன் வாயில் வண்டி ஓட்டியபடியே நடைபாதையில் வளைந்து நெளிந்து ஓடிக்கொண்டிருந்தான்.

இத்தனை பேரையும் கவனிக்காமல் அந்த ஜோடி பனிமழையில் உல்லாச நடைபயிற்சி செல்வது போல ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து கொண்டு மெதுவாக சென்றனர். அவனுக்கு ஏனோ அவர்கள் மேல் கோபம் பத்திக் கொண்டு வந்தது. வேண்டுமென்றே நடைபாதையில் அவர்களுக்கு நடுவே கையை நுழைக்கப் போவது போல சாடை செய்து கொண்டே,”ஏய் _______ இந்தா வெலகு !”, என்று அதிகம் புழங்கப்படும் நகரத்திற்கே உரிய ஒரு கெட்டவார்த்தையை சத்தம் போட்டு திட்டியபடி சென்றான். அவர்கள் பயந்து விலகினார்கள். யாருக்குப் பயந்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் கூட்டுக்குள் கல்லெறிந்த குருவிகளாட்டம் அவர்களுடைய கண்கள் அங்குமிங்கும் அலைந்து யாரையோ தேடின. அதற்குள் அவன் நடுவில் புகுந்து சென்று கூட்டத்தில் மறைந்து விட்டான்.

மருந்துக்கடையில் வேலை. அது மொத்த வியாபாரக் கடை. பெருமளவில் மருந்துச் சாமான்கள் வந்து இறங்கும். பிறகு சில்லரை வியாபாரிகளும், ஆஸ்பத்திரி நடத்துகிறவர்களும் வந்து வாங்கிச் செல்வார்கள். குறைவான வெளிச்சமே கிடங்கில் இருக்கும். சுரங்கத்தில் வேலை பார்ப்பதைப் போலத் தோன்றும். அங்கு அவனுக்கு சரக்குகளை சரி பார்த்து கணக்கெழுதுகிற வேலை.

நுழைந்ததுமே நேரமானதற்காக முதலாளி திட்ட ஆரம்பித்துவிட்டார். அவன் பதிலேதும் பேசாமல் நேராக மேசையில் முதலாளியில் செல்போனுக்கு அடியில் இருந்த நோட்டை எடுத்துவிட்டு நகர்ந்தான். சரக்கு வந்ததை நோட்டில் தேதி போட்டு, பொருள் வாரியாகப் பிரித்து எழுத ஆரம்பித்தான். உணவு இடைவேளையின் போது முதலாளிக்கு அதுவரை வந்த சரக்குகளின் கணக்கை சொல்லிவைத்தான். அவ்வப்போது இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்தால் தான் அவர் அவன் வேலை செய்வதாக நம்புவார்.

மதியத்துக்கு மேல் சரக்கு அவ்வளவாக வரவில்லை. சாயுங்காலம் ஒரு போன் வந்தது. போனை வைத்துவிட்டு முதலாளி அவனை முறைத்துப் பார்த்தார். யாராக இருக்கும் ? ஊரில் யாருக்கும் மேலுக்கு முடியாமல் போச்சா ? ஒருவேளை தேவியக்கா பேசிருப்பாளோ ? ஏதும் பிரச்சினை ஆகி இருக்குமோ ? தீர்க்கதரிசியைப் போல கணிக்க முயற்சி செய்தான்.

பார்த்துக் கொண்டிருந்த முதலாளி, பக்கத்தில் இருந்த காலிப் பெட்டியை எடுத்து பலம் கொண்ட மட்டும் அவன் மேல் எறிந்தார். பிரச்சினை தேவியக்காவுக்கு இல்லை அவனுக்கு தான்.

“இன்னிக்கு சம்பளம் கேட்டு கைய நீட்டு, கோணி தைக்கிற ஊசியாலயே குத்துறேன். மொதப்பக்கத்தக் கூடப் பாக்காம அப்பிடி என்ன கணக்கு எழுதுற ? ஒழுங்கா கணக்கெழுதுறத் தவிர உனக்கு வேற என்ன வேல. சாயந்திரம் ஆனா கூசாம துட்டு மட்டும் கேக்கத் தெரியுதுல. வாங்கற துட்டுக்கு வஞ்சமில்லாம வேல பாக்கணும்னு தெரியாது ? இதுக்குத்தான் கழுத காசு போனாலும் பரவால்லன்னு மெஷின வாங்கிப் போடறது….”

அடிக்கடி கேட்கும் அமிலப் புளிப்பான வசவுகள் அவன் காதுகளைத் தாண்டவில்லை. வசவுகளின் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து கொண்டே போனது. அவன் கடையில் இருந்து கிளம்பிவிட்டான்.

ஒரு இரவு.

இரவு உணவுக்கே கையில் பைசா குறைச்சலாகத்தான் இருந்தது. சம்பள முன்பணம் கேட்கலாம் என்று இருந்தான். அதான் சனி வந்து சதிராட்டம் போட்டுவிட்டதே. சம்பளமே கைக்கு வரவில்லை ! வழியில் துணிக்கடையொன்றின் கடியாரம் மணி ஏழடித்ததைச் சொல்லியது. தேவியக்கா இன்னேரம் புறப்பட்டிருப்பாளோ ? போனால் சுடிதார் கேட்பாளோ ? அவள் ஆளை அறிமுகம் செய்து சிரிக்கச் சொல்வாளோ ? அவன் போகவில்லை.

நிதானமாக நடந்து வந்தவனைச் சுற்றி ரோடும், மேன்ஷனும், படிக்கட்டுகளும், கதவும், சன்னலும், கம்பியும் தள்ளாடின. சட்டை பேன்ட்டோடு பாய் விரிக்காத, பல நாள் பெறுக்காத வெறுந்தரையில் ‘தொம்’மென்ற சத்தத்துடன் விழுந்து படுத்த போது, ரகசியக் கூட்டம் நடத்திக் கொண்டிருந்த பாச்சாக்கள் தெறித்தோடின. தலைக்கு மேல் சுழலும் மின்விசிறி காலத்தின் சுழலில் சிக்கிக் கிடக்கும் அவனைப் பாவமாகப் பார்த்துக் கொண்டே இருந்தது. க்கிரீச்சடக்…க்கிரீச்சடக் என்று ஒரே தாளகதியில் அது சீரான மித வேகத்தில் சுற்றிக் கொண்டிருந்தது. குளிர் காலம், வெயில் காலம் எதையும் அந்த மின் விசிறி மதிப்பதே இல்லை. எந்த காலத்திலேயும் ஒரே வேகத்தில் தான் பிடிவாதமாகச் சுழன்று கொண்டிருந்தது. அதன் வேகத்தைக் குறைக்கவோ கூட்டவோ யாருக்கும் அதிகாரம் இல்லை.

வெளியில் இருந்து அறைக்கு வந்து விளக்கணைத்து படுத்த நொடியில் ஒன்றும் கண்ணுக்குத் தெரியவில்லை. நேரம் போகப் போக கண்கள் இருட்டுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டன. இப்போது அவனுக்கு மின்விசிறி தெளிவாகத் தெரிந்தது. இடம்மாறும் இறக்கைகள் கூடத் தெரிந்தது. அவன் கண்கள் அந்த இறக்கைகளை பின் தொடர்ந்து சுழன்றன. மின்விசிறியின் ‘க்கிரீச்சடக்…’ சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக மங்கிக் கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் சுத்தமாகக் கேட்கவில்லை. மின்விசிறியின் சத்தம் மட்டுமல்ல எல்லா சத்தமும் ஓய்ந்து விட்டது. அவன் செவிகள் நிசப்தத்தின் விதவிதமான வசனங்களை விருப்பமில்லாமல் கேட்டுக் கொண்டிருந்தன. அந்த வரியில்லா வசனங்கள் தனிமையின் கொடுமையில் தோய்க்கப்பட்டது. ஏதோ இரைச்சல் கேட்க ஆரம்பித்தது. நேரமாக ஆக இரைச்சலின் வேகமும் அளவும் அதிகரித்துக் கொண்டே போனது. சீக்கிரமே அது பெரிய சப்தமாக உருவெடுத்து காது சவ்வுகளைக் கிழித்து எறிந்து விடும் போல இருந்தது. அலறியபடி முழித்து எழுந்தான்.

அங்கு அதே இடத்தில் மின்விசிறிக்குப் பதில் வேறு என்னமோ தொங்கிக்கொண்டிருந்தது. தேள் போல இருந்தது. ஆம் தேள் தான், மின் விசிறியை விடப் பெரிய கருந்தேள். வாழ்க்கையின் மொத்த விஷத்தையும் கொண்டிருந்த, நீண்டு வளைந்த அந்தக் கொடுக்குகள் மட்டும் கீழே இறங்கி வந்தது. இப்படியும் அப்படியும் ஆடிக்கொண்டு கத்தரிக்கோலைப் போல அவன் கழுத்தைக் குறி பார்த்தபடி இறங்கி வந்தது. வியர்த்துக் கொட்டியது. அவன் பயத்துடன் கண்களை மூடிக் கொண்டான். கையை வைத்து இறுக மூடிக் கொண்டான். பேடித்தனமாக இதயம் படபடத்து அடித்துக் கொண்டது. நெஞ்சுக்கூட்டின் கொடிய சிறை இருட்டில் பதுங்கிக் கிடக்கும் இந்த இதயத்திற்கு பயந்து பயந்து துடிப்பதைத் தவிர வேறு என்ன வேலை ?

மரங்களற்ற நீண்ட நெடிய மணல்வெளி. ஒற்றை ஆளாய் அவன் மட்டும் நின்று கொண்டிருந்தான். குத்தவைத்து அமர்ந்தபடியே மணல் வெளியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது இரைச்சல் கேட்கவில்லை. மறுபடியும் நிசப்தம். உலகம் எல்லாம் உறைந்து விட்ட நிசப்தம். அவனை யாரோ திட்ட ஆரம்பித்தார்கள். அவன் முதலாளிதான். இந்த மனுசன் எங்கிருந்தய்யா முளைத்து வந்தான் ? கணக்கு சரியாக வரவில்லை என்று திட்டினார். அவன் சோம்பேறித்தனத்தை குத்தி காட்டினார். ஒவ்வொரு வார்த்தையும் அட்சர சுத்தமாகக் கேட்டது. அவனுக்கு அவமானமாக இருந்தது. வசவுகளுக்கு பின்னால் ஏதேதோ எண்களை இவன் மனம் ஒழுங்கற்றுப் பிதற்றியது. தலையைச் சுற்றி எண்கள் வட்டம் வந்தது. முதலாளி திட்டுவதும் கேட்டுக் கொண்டுதான் இருந்தது. தூரத்தில் யாரோ செல்வது தெரிந்தது, தேவியக்கா போல. அவள் அந்த இன்சூரன்ஸ் ஆளுடன் கைக்கோர்த்துச் செல்கிறாள். காலையில் பார்த்த அந்த ஜோடிகளைப் போலவே அவர்களும் மிக நெருக்கமாக உரசிய படி செல்கின்றனர். அதன் பின் முதலாளி திட்டும் ஓசை கேட்கவில்லை. ஆனால் நின்று கொண்டுதான் இருந்தார். இப்போது அவன் அவரை கெட்ட வார்த்தைகளில் திட்ட ஆரம்பித்தான். பல நேரங்களில் திட்ட நினைத்து மனதில் புழுங்கிக் கிடந்த அனைத்திற்கும் சேர்த்து வைத்து திட்டினான். முதலாளி வாய் மூட அவன் மட்டும் திட்டிக் கொண்டே இருந்தான். அவன் கன்னங்களில் ஒரு துளி சூரியன். விழிகள் ஒதுக்கித் தள்ளி கன்னங்களில் வழிந்த கண்ணீர்த் துளியில் வணக்கம் சொல்ல வந்த சூரியனின் பிம்பம் மின்னியது.

மீண்டும் ஒரு பகல்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *