ஒரு சிறுவனின் அழுகை

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 21, 2016
பார்வையிட்டோர்: 9,557 
 

காற்றைப் பிளந்து வந்து கொண்டிருந்தது அந்தப் பேருந்து. மேடு பள்ளங்களைத் தாண்டி குதிரையாய் பறந்தது. அந்தப் பேருந்தில் இரண்டு பக்கங்களிலும் குதிரையின் படம் வரையப்பட்டிருந்தது. அதனாலோ என்னவோ இப்படி வேகமாக புழுதிப் பரப்பியது. “என்னங்க பையன் ராத்திரி வரும்போது புரோட்டா கேட்டான்” என்றாள் சந்திரா. கையில் கோத்த பூவை மடக்கி மடக்கி இன்னும் வேகமாகக் கட்டிக்கொண்டிருந்தான் விநாயகம். பெருமாள் கோயிலு வாசல்ல பூ கட்டி விக்கிற தொழில்தான் விநாயகத்துக்கு. அப்பா அம்மா வயசானவங்க. படிப்பும் ஏறல விநாயகத்துக்கு. அப்பாக்கூட சேர்ந்து பூ கட்டுற வேலையப் பாத்துகிட்டான். சின்ன வயசுல இருந்து சேத்து வச்ச காசுக்கு முன்னூறு சதுர அடியில ஒரு வீடு கட்டியிருந்தான். நல்ல வீடு இருந்தாதான் பையனுக்கு பொண்ணு கிடைக்கும்ன்னு யாரோ சொன்னங்க… அதான் விநாயகம் வீடு கட்டியிருக்கான். சந்திராவும் படிச்சவ கிடையாது. அப்பா அம்மா இல்ல. சந்திராவோட பாட்டிதான் வளத்திச்சி. விநாயகத்துக்கு தூரத்து சொந்தம்தான் சந்திரா. கிழவி செத்ததுக்குப் போன விநாயகத்தின் அப்பா மாணிக்கம் சந்திராவை தன்னோட மகனுக்குப் பேசிட்டார். கிழவி செத்து மூணு மாசம் கழிச்சி திருமணம் நடந்திச்சு. சந்திராவும் கணவனுக்குத் துணையா தினமும் பூ கடைக்கு வந்து விநாயகத்துக்கு உதவியா இருப்பா. கொஞ்ச நாள்ல அழகான ஆண் குழந்தைய பெத்தெடுத்தா சந்திரா. இப்ப அவனுக்கு ஆறு வயசாகுது. சந்திரா வீட்டிலிருந்து கிளம்பும்போது “அம்மா புரோட்டா வாங்கியாறியாம்மா?” என்றான். “குட்டி, அப்பாகிட்ட சொல்லி கண்டிப்பா வாங்கியாறேன். என்ன?” என்று சொல்லிவிட்டுதான் கடைக்கு வந்தாள்.

“என்னங்க… நான் பேசிட்டே இருக்கேன். நீங்க பாட்டுக்கும் ஏதோ நினப்புல இருக்கிங்க? என்னாச்சு…” என்றாள் சந்திரா. தன்னை உணர்ந்தவனாய் “என்ன கேட்ட” என்றான் விநாயகம். “சரியா போச்சு போங்க. நம்ம குட்டி ராத்திரிக்கு வரும்போது புரோட்டா கேட்டான்” “அதுக்கென்ன வாங்கிக்கலாம் சந்திரா” என்றான் விநாயகம்.

“சரிங்க, நீங்க ஏ ஒரு மாதிரியா இருக்கிங்க?”

“அதெல்லாம் ஒன்னுமில்ல. நீ பூவ நல்லாப் பாத்து கட்டுவியா” என்று முறைத்தான்.

“உண்மைய சொல்லுங்க. என்னாச்சு?”

விநாயகத்துக்கு தன்னோட மனைவிகிட்ட எதையும் மறைக்க முடியாதுன்னு தெரியும். “கந்து வட்டிகாரனுக்கு இன்னிக்கு சாயங்காலத்துக்குள்ள இருநூற்று இருபது ரூபா தரனும். இல்லன்னா நம்ம மானத்த வாங்கி கப்பல்ல ஏத்திருவான். காலையிலிருந்து வியாபாரமே இல்ல. நம்மகிட்ட நூத்தி ஐம்பது ரூபாதான் இருக்கு. பாக்கி எழுபது ரூபாயிக்கு எங்க போவேன்” என்று புலம்பினான்.

“என்னங்க சொல்லுறிங்க… இருக்கிறத கொடுத்துட்டு, மீதியை நாளைக்கு கொடுத்துடலாம்ங்க..”

“அதெல்லாம் அந்த ஆளு ஒத்துக்கமாட்டாரு. கந்து வட்டிக்குப் பணத்த வாங்கிட்டு கட்டுறதுக்கு ரொம்ப சிரமமாயிருக்கு. வாங்குன அசல விட இன்னிக்கு வட்டி அதிகம் கட்டிட்டேன். என்ன பன்றது? வட்டிக்காரர பாத்தாலே எனக்கு வயிறு கலக்குது சந்திரா”

“என்னங்க இப்படி பேசுறிங்க.. பயப்படாதிங்க! வட்டிக்காரகிட்ட பேசிப்பாக்கலாம். இந்த வருஷம் குட்டிய வேற ஸ்கூல் சேக்கனும். அதுக்கு வேற காசு வேணுமில்லங்க”

சந்திரா சொல்ல சொல்ல கண்கலங்கியது விநாயகத்துக்கு. மனைவியோட கண்களையே பாத்துக் கொண்டிருந்தான். அவளும் கணவன் கண் கலங்குவதைப் பார்த்தபோது கண்கள் குளமாகியிருந்தன. சடாரென பூக்கடை தூக்கி எறியப்பட்டது. புயலாய் சீறிய பேருந்து பள்ளத்தில் இருந்து ஏறியபோது தன் கட்டுப்பாட்டை இழந்தது. கோயில் ஓரத்தில் உள்ள கடைகளில் மேல் ஏறி நசுக்கியது. கோயில் சுவற்றில் முட்டிமோதி நின்றது அப்பேருந்து. ஓ….ஓ….ஓ…. என்று ஓலக்குரல் எட்டு திசைகளையும் நடுங்க வைத்தது. விநாயகத்தின் தலை மீது பேருந்தின் டையர் நின்று கொண்டிருந்தது. கொஞ்சம் கூட அடையாளம் தெரியாதபடி தலை நசுக்கப்பட்டிருந்தது. சந்திராவின் குடல் வெளியே வந்து இரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தாள். அவளுடையக் கண்கள் மட்டும் இன்னும் விநாயகத்தையேப் பார்த்துக்கொண்டிருந்தன. கொஞ்ச கொஞ்சமாக சந்திராவின் கண்கள் மூடின. இப்பொழுது மனசு முழுவதும் தன் மகன் குட்டியைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது.

பற்றி எரிகின்ற சுடுகாட்டின் மணம் எங்கும் பரவியது. மொட்டைத் தலையோடு கையில் கொள்ளிக்கட்டையைப் பிடித்திருந்தான் குட்டி. எதற்காக இங்கு நிறுத்தப்பட்டிருக்கிறோம்? இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று பாதி புரிந்தும் புரியாமலும் இருந்தான் அச்சிறுவன். அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் கொள்ளி வச்சு தலை முழுகினான் குட்டி. தாத்தா மாணிக்கம் பேரனைக் கட்டிக்கொண்டு தேம்பி தேம்பி அழுதார். பாட்டி கனகு, மகனும் மருமகளும் இருக்கின்ற புகைப்படத்தின் முன்பு தன்னோட மாரிலே அடித்துக்கொண்டு மயங்கி விழுந்தாள். அந்த வீடு இரண்டு மாதமாய் மயனமாய் காட்சியளித்தது.

“குட்டிக்கு வயசாச்சு. பள்ளிக்கூடம் சேக்கனும்” என்றாள் கனகு பாட்டி.

“ஆமாம் கனகு! ஞாபகமிருக்கு. நம்ம இருக்குற நிலமையில தனியாருல போயி சேக்க முடியாது. அரசாங்க பள்ளிக் கூடத்துல குட்டிய சேக்க வேண்டியதுதான்” என்றார் மாணிக்கம்.

பள்ளிக்கூடம் ஆரம்பமானது. குட்டி நல்ல டிரஸ் போடலன்னாலும் அழுக்கு இல்லாம, கிழிஞ்சல் இல்லாம சட்டைப் போட்டிட்டு போவான். அவனுக்கு இப்ப எல்லாமே தாத்தா பாட்டிதான். இரவு நேரத்துல தூங்கும்போது அம்மா… அம்மா… ன்னு அழுவுவான். கனகு பாட்டிதான் எழுந்து குட்டியை சமாளிப்பாள். ஒருசில ராத்திரியில அவன சமாளிச்சு தூங்க வைக்குறதுக்கு போதும் போதும் என்றாகியிடும். “அம்மா கடைக்கு போயிருக்கா.. இப்ப வந்துருவாடா செல்லம். நீ தூங்குடா குட்டி” என்றெல்லாம் சமாளிப்பாள். பாதி ராத்திரியில எழுந்திரிச்சி மாணிக்கமும் கனகு பாட்டியும் அழுவுவாங்க.

“இந்தப் பையனுக்கு என்னத்தச் சொல்லி புரிய வைக்குறது” என்பார் மாணிக்கம்.

“பாவங்க சின்னப்பையன். அவனுக்கு அப்பா, அம்மா நினப்பு வராதா என்ன? முடிஞ்சவரை சமாளிப்போம். காலம் போகபோக அவனே புரிஞ்சுக்குவான்” என்றாள் கனகு பாட்டி.

மூணு மாசம் கடந்து பொச்சு. ஒருநாளு மாணிக்கம், அவனோட புத்தகங்களை எல்லாம் வாங்கிப் பாத்திட்டு, குட்டி இந்த புக்குல இருக்குற ஒரு பாட்டு ஒன்னு பாடன்” என்றார்.

“குள்ள குள்ள வாத்து

குவா குவா வாத்து

மெல்ல உடலைச் சாய்த்து

மேலும் கீழும் பார்த்து

செல்லமாக நடக்கும்

சின்ன மணி வாத்து”

என்று அழகாய் உடலை ஆட்டி ஆட்டிப் பாடினான் குட்டி. வாரி அணைத்துக் கொண்டார் மாணிக்கம் தாத்தா. அதுக்கப்புறம் ரெண்டு நாளைக்குப் பிறகு குட்டி சோகமாயிருந்தான். “என்னாடா குட்டி சோகமாயிருக்க” என்றார் மாணிக்கம். “இல்ல தாத்தா, ஸ்கூல்ல பசங்க எல்லோரும் அவுங்க அவுங்க புத்தகங்களை எல்லாம் பைண்டிங் பண்ணிட்டு வந்திருக்காங்க. அதனால நீயும் என்னோட புக்க பைண்டிங் பண்ணிக்கொடு தாத்தா” என்றான்.

“பைண்டிங் பண்ற அளவுக்கு நம்மகிட்ட காசு கிடையாதுடா குட்டி. அதனால உனக்கு நான் பேப்பர்ல அட்டை போட்டு தரட்டுமா?”

“இல்ல தாத்தா, எனக்கு பைண்டிங்தான் வேணும்” அடம் பிடித்தான் குட்டி.

“என்னங்க, பேரன் ஆசப்படுறான். பைண்டிங் பண்ணிக் கொடுங்க. எப்படியாவது சமாளிச்சுகலாம்” என்று குட்டிக்கு வக்காலத்து வாங்கினாள் கனகு பாட்டி.

பள்ளிக்கூடம் முடிந்து மாலையில் தாத்தா வருகின்ற திசையையேப் பார்த்துக் கொண்டிருந்தான் குட்டி. இதோ தாத்தாவும் வந்துவிட்டார். “தாத்தா என்னோட புக்குக்கு பைண்டிங் பண்ணிட்டியா?” என்றான் குட்டி.

“இ.. இல்.. இல்ல..” என்று எச்சில் விழுங்கினார் மாணிக்கம்.

“ஏன் தாத்தா? பைண்டிங் பண்ணல?”

“கடக்காரரு கேக்குற பணம் நம்மகிட்ட குறைச்சலாதான இருக்கு. அதான்! அப்படியே வையி. நாளை காலையில வந்து சொல்றன்னு வந்துட்டன்”

“தாத்தா, நாங்க மெட்ராசுக்கும் போகல. பம்பாயிக்கும் போகல. டெல்லிக்கும் போகல. கூலி வேலைக்குதான் போறோம்ன்னு சொல்லி பைண்டிங் பண்ணிட்டு வாங்க தாத்தா”

மாணிக்கம் – கனகு இருவரின் கண்களிலும் கண்ணீர் வழிந்தோடின. பெரிய மனுசனாட்டம் பேசறான் பாரு என்று மூக்கின் மேல் விரல் வைத்தாள் கனகு பாட்டி. அடுத்த நாள் காலையிலையே பைண்டிங் கடைக்கு வந்து விட்டார் மாணிக்கம்.

“என்ன பெரியவரே! நேத்துதான சொன்னன். அதுக்கு கம்மியா யாரும் போட்டுத் தரமாட்டாங்க”

“தம்பி என்னோட பேரன், நாங்க மெட்ராசுக்கும் போகல. பம்பாயிக்கும் போகல. டெல்லிக்கும் போகல. கூலி வேலைக்குதான் போறோம்ன்னு சொல்லி பைண்டிங் பண்ணிட்டு வாங்க தாத்தான்னு” சொல்றான்.

“என்ன பெரியவரே சின்னப்பையன்னு சொன்னிங்க. இப்படி விவரமா பேசுறான்”

“ஆமாம் தம்பி! அவனோட அம்மாவும் அப்பாவும் ஒரு விபத்துல செத்துப்போயிட்டாங்க. இப்ப நாங்கதான் பாத்துக்குறோம்”

“அப்பா அம்மா இல்லாத பையனா. சரி! எவ்வளவு கொடுப்பிங்க பெரியவரே!”

மாணிக்கம் தொகையைச் சொன்னதும். “கொஞ்சம் உட்காருங்க கிட்டயிருந்து வாங்கிட்டே போயிடுவீங்க”

சரியென்று அங்கையே அமர்ந்து கொண்டார் மாணிக்கம்.

பைண்டிங் செஞ்ச புக்க பாக்க பாக்க குட்டிக்கு எங்கையோ மிதப்பது போல இருந்தது. புக்க தொறந்து தொறந்து மூக்கால் வாசம் இழுத்தான். புத்தகத்தை நெஞ்சிலே போட்டு அப்படியே உறங்கி விட்டான். அவனுடைய தலை அம்மாவின் மடியில் இருந்தது. குட்டியின் கால் அப்பாவின் மடியில் இருந்தது. அம்மா கதைச் சொல்லிக் கொண்டிருந்தாள். குட்டியும் ம்..ம்.. கொட்டிக்கொண்டிருந்தான்.

அம்மா… அம்மா… என்று கத்தியதில் மாணிக்கமும் கனகுவும் எழுந்து கொண்டார்கள். “குட்டி என்னடா? கனவு ஏதாவது கண்டியா?” என்றாள் கனகு பாட்டி. குட்டியின் அழுகை அன்று அதிகமாகி இருந்தது.

“எனக்கு அம்மா வேணும். எனக்கு அம்மா வேணும்”

அம்மா! உனக்கு புரோட்டா வாங்கியாற கடைக்கு போயிருக்கு”

“நீ பொய் சொல்லுற பாட்டி. நேத்தும் அதையேதான் சொன்ன! இப்பவும் அதையேதான் சொல்ற. ஆனாலும் அம்மாவ நான் இன்னும் பாக்கலியே”

“சரிடா குட்டி! இந்தா பாரு நீ கேட்டல்ல… இதோ உன்னோட புக்கெல்லாம் பைண்டிங் போட்டிருக்கு”

“இந்த பைண்டிங் புக்கு யாருக்கு வேணும். எனக்கு அம்மாதான் வேணும்” என்று சொல்லிய குட்டி தன்னோட கையில் இருந்த புத்தகத்தை தூக்கி எறிந்தான். புத்தகத்தில், குட்டி சேமித்து வைத்திருந்த மயில் தோகை பறந்து போய் அவன் அம்மாவின் புகைப்படத்தில் ஒட்டிக்கொண்டது.

Print Friendly, PDF & Email

1 thought on “ஒரு சிறுவனின் அழுகை

  1. தாய் தந்தை இல்லாத பிள்ளையின் நிலையும் அவனை வளர்க்க பாடுபடும் அந்த பெரியவர்கள்
    என் கதையை பார்த்ததுபோல் இருந்தது

    நன்றிகள் பல
    இப்படிக்கு தங்கள் மாணவி,
    ஸ்ரீநிதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *