ஒரு கைபேசி கலவரம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 18, 2014
பார்வையிட்டோர்: 14,335 
 

இரவு மணி 10.00. அறையில் படித்துக்கொண்டிருந்த எனக்கு கை நழுவி புத்தகம் விழுந்தது நான்காவது முறை. இனி படிக்க முடியாது. தெளிவாய்த் தெரிந்தது.

விழுந்த புத்தகத்தை எடுத்து மேசை மேல் வைத்து நாற்காலியை விட்டு எழுந்து அறையை விட்டு வெளியே வந்தேன்.

ஒரு கைபேசி கலவரம்கூடத்தில் தொலைக்காட்சிப் பெட்டியில் என்னவோ ஓடிக்கொண்டிருந்தது. பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய என் மனைவி வள்ளி உட்கார்ந்தபடியே “கொர்ர்’. தட்டி எழுப்பினால் திடுக்கிட்டு விழிப்பாள். அடுத்து… தூக்கத்திற்கு அது கெடுதல். ஆகையால் மெல்ல அவள் தோள்மீது பூவைத் தொடுவது போல் கை வைத்தேன்.

உறக்கம் கலையாமல் பாதி விழிகளைத் திறந்து, “”என்ன?” என்றாள்.

“”தொடர் பார்த்தது போதும், எழுந்து போய் அறையில் படு” என்றேன்.

“”தூங்கிட்டேனா?” என்றாள் நம்பாமல்.

“”ஆமாம்”

தொலைக்காட்சிப் பெட்டியை அணைத்தேன்.

“”கண்கள் சொருகிடுச்சு” – எழுந்து பாத்ரூம் போனாள்.

வள்ளிக்கு எப்போதுமே படுக்கப் போகும் முன் பாத்ரூம் செல்வது வழக்கம். தூங்கினால் இடையில் இதற்காக எழக்கூடாது என்கிற எண்ணம்.
தொலைபேசி சிணுங்கியது.

எடுத்தேன்.

“”நான் சேகர் நண்பன் கணேஷ் பேசுறேன்ப்பா”

“”சொல்லுப்பா”

“”ஏழு மணியிலேர்ந்து அவனுக்கு நான் இப்போ எட்டுவரை நாலைஞ்சு முறை போன் செய்தேன். ஸ்விட்ச் ஆஃப்ன்னு சேதி வருது” என்றான் கலவரமாக.

எனக்குள்ளும் அவன் கலவரம் தொற்ற…

“”நீங்க போட்டுப் பாருங்கப்பா” சொல்லி அணைத்தான்.

நான் கைபேசியை எடுத்தேன்.

அதற்குள் பாத்ரூம் சென்ற வள்ளி திரும்பி வந்தாள்.

“”யார் போன்?” – கேட்டாள்.

சொன்னேன்.

“”அப்படியா… போட்டுப் பாருங்க”

அவளுக்குள்ளும் லேசான கலக்கல் அதிர்வுகள்.

நானும் சேகர் பெயர் எடுத்து அழுத்தினேன்.

“நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் கைபேசி தற்போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. தொடர்பு கொள்ள இயலாமைக்கு வருந்துகிறோம்’ – கணினியில் பதிவு செய்யப்பட்ட பெண் குரல்.

மறுபடியும் அழுத்தினேன். வள்ளிக்குக் கேட்க வேண்டுமென்பதற்காக ஒலிபெருக்கியை உயிர்ப்பித்தேன்.

மீண்டும் அதே குரல். பதில்.

“”என்னங்க…..” வள்ளி முகமெங்கிலும் கலவர ரேகைகள். எனக்கும் அதே.
சேகர் என் மூத்த பையன். திருமண மாப்பிள்ளை. சென்னையிலிருக்கும் தன் நண்பர்களுக்குப் பத்திரிக்கை வைக்கச் சென்றவன்.

மாலை ஆறு மணிக்கு, “”அப்பா சென்னையிலேர்ந்து எனக்கு நேர் வண்டி கெடைக்கலை. மாற்றுப் பேருந்து ஏறி புதுச்சேரி வந்து காரைக்கால் பேருந்து ஏறிட்டேன். பத்தரை மணிக்கெல்லாம் வீடு வந்துடுவேன். அம்மாக்கிட்ட எனக்கு இரவு சாப்பாடு டிபன் தயார் பண்ணச் சொல்லிடுங்க” தொடர்பு கொண்டு அணைத்தான்.

வள்ளியிடமும் சேதி சொல்லி….சப்பாத்தி ஹாட்பேக்கில் தயார். இதோ வெடிகுண்டு.

கணவன், மனைவி சோபாவில் ஆளுக்கொரு மூலையில் அமர்ந்தோம்.
கைபேசி தொலைந்து அல்லது திருடு போனால்… எடுத்தவன் சிம் கார்டுகளை அகற்றி விட்டால், யார் எத்தனை முறை தொடர்பு கொண்டாலும் இப்படி பதில் வரும். இது என் அனுபவப்பாடம்.
சேகர் கெட்டி. தொடுதிரை கைபேசி வைத்திருக்கிறான். விலை முப்பத்தைந்தாயிரம்.

பேண்ட் பாக்கெட்டிலிருந்து நழுவி விழுந்து அடுத்தவன் கையில் கிடைத்து விட்டதா?

என் கைபேசியும் இப்படித்தான் பறிபோனது. முன் பின், அக்கம் பக்கம் அமர்ந்தவர்களிடம் கேட்க…. “ப்ச்’

சேகர் சிறு வயது. இளைஞன். அக்கம் பக்கம் கேட்டு கிடைக்காமல்…

“”நான் இருக்கையைவிட்டு எழுந்திரிக்கலை. பேருந்தும் எங்கும் நிக்கலை. என் கைபேசி பேருந்துக்குள்ளேதான் இருக்கு. நடத்துநர், ஓட்டுநர் ஐயா வண்டியை காவல் நிலையத்துல நிறுத்துங்க. கண்டுபிடிச்சுடலாம்” என்று சொல்லி கலாட்டாவா?

நடத்துநர் அப்படி செய்ய… எடுத்தவன் சுதாரித்து கம்பி எண்ணாமல் தப்பிக்க…. ஒருவருக்கும் தெரியாமல் வெளியில் வீசிவிட்டு நல்ல பிள்ளையாய் இருக்க….மொத்தப் பயணிகளையும் விசாரித்து பரிசோதித்த காவல்நிலைய உதவி ஆய்வாளர் கடுப்பாகி…..

“”எங்கோ தொலைச்சிட்டு இங்கே கலாட்டாவா? இதுக்குத் தண்டனையாய் இன்றைய இரவு இங்கேயே இரு” என்று உத்தரவா?

காக்கிச் சட்டைகள் எல்லாரும் காவல்நிலையத்தின் வெளியேதான் கண்ணியமாய்ப் பேசுவார்கள். உள்ளே நுழைந்துவிட்டால் அங்கு அவர்கள் வைத்ததுதான் சட்டம். “அங்கே உட்கார்’ என்றால் உட்காரவேண்டும். “எழுந்திரு’ என்றால் எழுந்திருக்க வேண்டும். மீறினால்…..விதிகள் மீறும். சட்டம் எப்படி பாயும், மாறும் என்று தெரியாது.

இல்லை… பேருந்து விபத்தா? அந்த நினைவைத் தொடவே நெஞ்சு உதறியது. வள்ளிக்கும் அந்த நினைவு வந்திருக்கும்போல… பாத்ரூம் சென்றாள்.

ஆணானப்பட்ட எனக்கே அடி வயிற்றில் அமிலம் சுரக்க ஆரம்பிக்கையில் பத்து மாதங்கள் சுமந்து பெற்ற தாய்….கலக்காமல் என்ன செய்யும்?
திருமணம், எண்ணி நான்கே நான்கு நாட்கள்தான் இருக்கின்றன.
குளிர்வசதி செய்யப்பட்ட திருமணநிலையம்…. வாடகை எழுபதாயிரம். சாப்பாடு… இலைக்கு ஐநூறு என்று ஐந்து லட்சம். அதற்கு மேல் நாதஸ்வரம், மேளம், ஐயர். அலங்கார வண்டி, நாட்டியக்குதிரை என்று திருமணம் தடபுடல். முன் பணம் கொடுத்து மொத்தமும் தயார்.

தற்போது விபத்து – சின்னக்காயம் என்றால்கூட…..பெண் வரும் நேரம் என்று சுற்றம் நட்பு எதையும் யோசிக்காமல் உடன் சொல்லும்.
நல்ல பெண். சாப்ட்வேர் இன்ஜினியர். சேகர் உருகி உருகிக் காதலித்து மனைவியாகப் போகிறவள்.

“”ஆளை இந்த நேரத்துல தனிச்சு அனுப்பக் கூடாதுன்னு நெனைச்சு உங்களையும் அதுக்குத்தான் தங்கச்சிக்கு நீங்கதான் நேரடியாய்ப் போய் வைச்சி, “வா’ன்னு அழைக்கணும்னு சொல்லி கிளப்பினேன். நீங்கதான் வேலையாய் இருக்குன்னு சொல்லி மறுத்தீங்க. ஒருத்தருக்கொருத்தர் துணைன்னா பயமில்லே. இப்போ என் புள்ள எங்கே எப்படி இருக்கானோ?” பாத்ரூம் சென்று திரும்பும் வள்ளி முணுமுணுத்தபடி வந்து அமர்ந்தாள்.
பணம் போகட்டும். அந்தப் பெண். வாழ்க்கை.

விபத்தென்றால் சேதி வரும். தொடர்பு கொள்ள முடியாத இடம், பொட்டல்வெளி, இருட்டில் எகிறிய கைபேசி எவருக்கும் கிடைக்காமல் போனால், யாருக்கு… எவர்… எப்படி… தகவல் கொடுக்க முடியும்?
ஐந்து கிலோ மீட்டர் தொலைவு காரைக்கால் பேருந்து நிலையம்.
காரைக்கால் வரும் புதுச்சேரி பேருந்து எங்காவது விபத்து, பழுதென்றால் அதைத் தாண்டி வந்த அடுத்த பேருந்துக்காரர்கள் அங்கு தகவல் சொல்லி இருப்பார்கள். போய் விசாரிக்கலாமா? என்ற எண்ணம் உள்ளுக்குள் எழுந்தது.

விசாரிக்கலாம். சேகர், காரைக்கால் – புதுச்சேரி நேர் பேருந்தில்தான் ஏறி வந்தானென்பது என்ன நிச்சயம்? நேர் வண்டி கிடைக்காமல் சிதம்பரம் வந்து மாறி ஏறலாம் என்று மாற்றுப் பேருந்தில் ஏறி இருக்கலாம். ஆக… விபத்து, பழுது பேருந்தில்தான் சேகர் இருப்பானென்பது என்ன நிச்சயம்?
சொந்தக் காரை எடுத்துக்கொண்டு நோகாமல் திரும்பலாம் என்று சொன்னதற்கு…..

“”என் ஒருத்தனுக்கு எதுக்குப்பா கார் வீண் செலவு. சென்னைப் பயணம் எனக்கு இன்னைக்கு நேத்தா… வேலை பார்க்குறேன். அஞ்சு வருசமா தண்ணிபட்டபாடு.. கவலைப்படாதீங்க. சீக்கிரம் திரும்பிடுறேன்” சொல்லிச் சென்றான்.

மணியைப் பார்த்தேன். 12.00 – ஐத் தாண்டியது.

காரைக்கால் புதுச்சேரி 130 கிலோ மீட்டர். நேர் வழி பேருந்து ஏறினாலும், சிதம்பரம் வந்து மாறி மாற்றுப் பேருந்து ஏறி வந்தாலும் மூன்றரை மணி நேரத்தில் வீடு வந்து சேர்ந்துவிடலாம். மேலும் காரைக்காலுக்கு முன் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் வீடென்பதால் பத்து நிமிடங்கள் முன்பாகவே வந்து விடலாம். மணி பன்னிரண்டைத் தாண்டுகிறதென்றால் …..
என்னையும் அறியாமல் விரல் பிரிந்தது.

ஆறரையிலிருந்து ஏழரை ஒரு மணி நேரம், அடுத்து எட்டரை இரண்டு, ஒன்பதரை மூன்று, பத்து, பதினொன்று, பன்னிரண்டு….. எண்ணி நிறுத்த….. நடுக்கம் இன்னும் அதிகமாகியது.

வள்ளி மறுபடியும் பாத்ரூம் போய்த் திரும்பினாள்.

அங்கே அழுதிருப்பாள் போல…. கண்களின் ஓரம் ஈர நசநசப்பு.
“”இன்னொரு முறை போன் போடுங்க” கரகரத்தாள்.
போட்டேன்.

நீங்கள் தொடர்பு கொள்ள நினைக்கும் வாடிக்கையாளர்….. நிறுத்தினேன். படக். வாசல் காம்பெüண்ட் கேட் திறக்கும் ஒளி.

நான் விளக்குப் போட்டு கதவு திறக்க…… சேகர்

எனக்கும் வள்ளிக்கும் போன உயிர் திரும்பி வந்த உணர்வு.

“”தம்பி கைபேசி என்னப்பா ஆச்சு?” படி ஏறுவதற்குள் கேட்டேன்.

“”ஏன்?”

“”ஏழு மணியிலேர்ந்து உன் நண்பனும் நானும் போட்டுப் பார்த்தோம். சுவிட்ச் ஆஃப் வருது” கலவரம்.

“”உங்ககிட்ட பேசி முடிச்ச மறாவது நிமிசமே அது சார்ஜ் போயிடுச்சுப்பா” அலுப்பாய்ச் சொல்லி செருப்பைக் கழட்டி உள்ளே கால் தாங்கி நுழைந்தான்.
“”கால் என்னப்பா ஆச்சு” வள்ளி பதறினாள்.

“”பாடாவதி ஓட்டைப் பேருந்துல ஏறி உட்கார்ந்துட்டேன்ம்மா. உருட்டு உருட்டுன்னு உருட்றான். வேகம் நாப்பது கிலோ மீட்டரை தாண்டலை. அதோட மட்டுமில்லாம இடையில பஞ்சர். அடுத்துப் பாலம் பழுதுன்னு மாற்றுப் பாதை வேறு. அதிக நேரம் உட்கார்ந்து வந்ததுனால கால் மரத்துப் போச்சு” சொல்லி சோபாவில் அமர்ந்தான்.

வள்ளி மகன் அருகில் அமர்ந்து சட்டென்று அணைத்து கண்ணீர் விட்டாள்.
எனக்கும் அப்படித்தான். அருகில் அமர்ந்து அவனை ஆசையாய் அணைத்தேன்.

– காரை ஆடலரசன் (நவம்பர் 2013)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *