ஒட்டகச்சிவிங்கியின் உதை!

0
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,238 
 

வழக்கத்துக்கு மாறாக, சீக்கிரம், கணவன் வீடு திரும்பியிருந்தது கண்டு, நிர்மலாவுக்கு வியப்பு.
“”என்னாச்சுங்க,” என்று கேட்டபடி, அவனிடம் விரைந்தாள்.
கட்டிக் கொடுத்தனுப்பிய சாப்பாட்டு கேரியர், பிரிக்கப்படாமலேயே திரும்பி வந்தது; கணவன் ஆனந்த் முகம், வாடி இருந்தது.
உடம்புக்குத்தான் வந்து விட்டதோ என்று நினைத்தாள்… “”வரும் வழியில் தானே, டாக்டர் விஜயக்குமார் கிளினிக்; பார்த்துட்டு வந்தீங்களா?” என்றாள்.
ஒட்டகச்சிவிங்கியின் உதை!பொதுவாக, அவனுக்கு உடம்புக்கு எதுவும் வருவதில்லை. ஆரோக்கியமாக இருந்து வந்தான் என்பது, அவளுக்கு தெரிந்திருந்தும் கேட்டாள்.
“”உடம்புக்கு ஒண்ணுமில்லை,” என்று சொல்லி, பைக்கை நிறுத்தி, வாசல் படி ஏறினான்.
“”சைட்டில் இன்னைக்கு ஒர்க் அதிகம்; சாயங்காலம் வீட்டுக்கு வர லேட் ஆகும்ன்னு சொல்லிட்டு போனீங்க. போன வேகத்தில் திரும்பி வந்துட்டீங்களே,” என்றாள்.
“”என்னை வீட்டுக்கு அனுப்பிட்டாங்க,” என்று, சோகமாக சொல்லிக் கொண்டே, சோர்வாக நாற்காலியில் அமர்ந்தான்.
திகைத்தாள் நிர்மலா…
“”என்ன சொல்றீங்க?”
“”வேலையை பத்தி சொல்லிட்டு, சைட்டுக்கு போகலாம்ன்னு, ஆபீசுக்கு போனேன். மூணு பார்ட்னர்களும் இருந்தாங்க. என்கிட்ட ஏதோ சொல்ல நினைப்பது போலவும், சொல்ல சங்கடப்படறாப்லயும் இருந்தது. “என்ன பிரச்னை?’ன்னு கேட்டேன். ஒரு கவர்ல கொஞ்சம் பணத்தை போட்டு கொடுத்து, “ஆனந்த்… இதை வச்சுக்குங்க… எங்களுக்கு நிறைய உதவியும், ஒத்தாசையும் செய்திருக்கீங்க. அதற்கு, நாங்கள் ரொம்ப கடமைப்பட்டிருக் கோம். ஆனால், உங்களை தொடர்ந்து, வேலையில் வச்சுக்க முடியாமல் போவதற்காக வருத்தப்படறோம்; போய் வாங்க…’ன்னாங்க.”
“”காரணம் சொன்னாங்களா?”
“”போன்னு சொன்ன பிறகு, காரணத்தைக் கேட்டு மட்டும் என்ன செய்ய முடியும்?”
“”வேறென்ன… இப்ப நிறுவனம் வளர்ந்திருச்சி; லாபம் பொங்குது. வாய் மொழி ஒப்பந்தப்படி, அவங்க, உங்களை ஒர்க்கிங் பார்ட்டனரா அங்கீகரிக்கணும். அப்படி செய்தால், அவங்களுக்கு சமமான ஆளா, ஒரு முதலாளியா வந்துடுவீங்க. உங்களுக்கு பங்கு தரணும்ன்னு கணக்கு பார்த்திருப்பாங்க. சமயம் பார்த்து கழட்டி விட்டுட்டாங்க. வேலை, வெட்டி இல்லாமல், ஊர் சுற்றிக்கிட்டிருந்தவங்களுக்கு, வழிகாட்டியது நீங்க. உதிரிப் பூக்களை நூலில் கோர்த்து, மாலையாக்கின மாதிரி, அவர்களை பார்ட்னர்களாக்கி, கொஞ்சம் பணம் போட வச்சு, தொழில்ல இறக்கி, வழி காட்டினீங்க. ஆரம்பத்திலேயே, சுதாரிப்பாய் ஒப்பந்தம் போட்டிருக்கணும். “மனுஷனுக்கு, வாய்ச் சொல்லுக்கு மேல, ஒரு பத்திரம் இல்லை. நண்பர்கள் மூவரும் நாணயஸ்தர்கள்; அவர்கள் வார்த்தை மாற மாட்டாங்க…’ன்னு சொன்னீங்க. பணம் வர, பத்தும் பறந்துடும்ன்னு சொல்வாங்க. கொடுத்த உறுதியும், அந்த பத்தோடு சேர்ந்திடுச்சி போல.
“”என்னைக்காவது இப்படி நடக்கும்ன்னு எதிர்பார்த்தது தான்,” என்று சொல்லிவிட்டு நின்றவள், பெருமூச்சு விட்டு தன்னைத்தானே தேற்றிக் கொண்டாள்.
“”எல்லாம் நல்லதுக்குன்னு நினைங்க. நடந்தது, கெட்ட கனவுன்னு நினைச்சு, ஒதுக் கிடுங்க,” என்று, அவன் அருகில் உட்கார்ந்து, அவன் தலைமுடியை கோதி, ஆறுதல் படுத்தினாள்.
அவன் முகம், இறுக்கமாகவே இருந்தது.
“”என்னப்பா, ரொம்ப பீல் பண்றீங்களா?”
“”நம்பிக்கை துரோகம் செய்துட்டாங்களேன்னு அதிர்ச்சியா இருக்கு!”
“”இதை, ஒரு வாய்ப்பாய் எடுத்துக்குங்க. இன்னும், ரெண்டு வருஷம் இழுத்தடிச்சு விரட்டாம, இப்பவே கழட்டி விட்டாங்களே… அதுவரை சந்தோஷம்ன்னு நினைங்க.”
“”துரோகத்தை சாதாரணமா எடுத்துக்க, நான் ஒன்றும் ஞானியில்லை; சாதாரணமானவன். மனசு வலிக்குது நிர்மலா… கோபம் கோபமா வருது. கேஸ் போடலாமா? ஆளை வச்சு, நாலு தட்டு தட்டலாமான்னு மனசு ஓடுது!”
“”உண்மைதான்… மறுக்க முடியாது. ஆனால், நீங்கள் அப்படியெல்லாம் செய்யக் கூடிய ஆள் இல்லை; தன்மையானவர். உங்களால் அப்படி செய்ய முடியாது. துரோகம் செய்தவர்களை பார்த்து, வருத்தப்படத்தான் முடியும் உங்களால்…”
“”ரொம்ப கனவுகளோடு உழைச்சேன் நிம்மி!”
“”அதையெல்லாம் மறந்துடுங்க… இது அடி. தொழிலில் வெற்றி வரும் போது, மனிதர்கள் ஆயிரம் வகையில் உருமாறுவர். அப்படி ஆகாமல், ஒரே நிலையில் நிற்பவர்கள், ஒரு சிலரே. உங்களுக்கு அமைஞ்சவர்கள், பெருந்தன்மை இல்லாதவர்களாகிட்டாங்க. ஒட்டகச் சிவிங்கி, குட்டி போட்டதும், குட்டி எழுந்திருக்க முடியாமல் தடுமாறும். அப்போது, குட்டியை, காலால், படீர்ன்னு ஒரு உதை உதைக்குமாம் அம்மா. உயிர் போகும் உதை அந்த குட்டிக்கு. இது, தாயா, பேயான்னு நினைக்குமாம் குட்டி. ஆனால், ஒட்டகச் சிவிங்கி எதையும் பொருட்படுத்தாமல், குட்டி எழுந்து நிற்கும் வரை, உதை விட்டுக் கொண்டே இருக்கும். அந்தக் காட்டில் எந்த நேரமும் ஆபத்து வரலாம். ஓடத் தெரிந்தால் தான் குட்டி பிழைக்கும். குட்டி எழுந்து ஓட, தயாராகவே அந்த உதை.”
“”எதற்கு இந்த உதாரணம்?”
“”பார்ட்னர்கள் உங்களை கழட்டி விட்டது, ஒட்டகச் சிவிங்கி தன் குட்டிக்கு விட்ட உதை. நீங்கள், அவர்களையே நம்பியிருந்து, ஒரு நாள் ஏமாறுவதற்கு பதில், சுயமாக நிற்க கொடுத்த வாய்ப்பு. “எங்களுக்காக உழைச்சது போதும்; இனி, உன் சொந்த வழியை பார்…’ என்று சொல்லாமல், சொல்லி இருக்கின்றனர். உதைத்து விட்டனரே என்று கோபமோ, துக்கமோ படுவதற்கு பதில், நீங்கள் தொழிலில் சுயமாக ஒரு இடத்தை பிடிக்க, ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்குன்னு எடுத்துக்குங்க,” என்றாள்.
“”நீ சுலபமா சொல்லிட்ட,” என்றான்.
“”சுலபம்தான் கண்ணா… 10 நாளைக்கு எதை பத்தியும் கவலைப்படாதீங்க… உங்களுக்கு பிடிச்சமான சாப்பாடு சமைக்கிறேன்; ருசிச்சு சாப்பிடுங்க. சேர்ந்து சினிமா, பீச்சுன்னு போய் ரொம்ப நாளாச்சு; அங்கெல்லாம் போவோம். சொந்தக்காரர்களை, பழைய நண்பர்களை போய் பார்ப்போம். ஜெயிச்சுட்ட மாதிரியே, வெற்றி முகபாவத்தோடு வளைய வருவோம். வழியில், தப்பித் தவறி, அந்த பார்ட்னர்களை பார்க்க நேர்ந்தாலும், உங்கள் சிரிக்கும் முகத்தை பார்த்து, அயர்ந்து போகணும். மனம் தெளிவடைய, 10 நாள் போதும். பதினோராம் நாள் உட்கார்ந்து, பிளான் பண்ணுவோம். உங்கக்கிட்ட திறமை இருக்கு; கடவுள் துணை இருக்கு. சேமிப்புல கொஞ்சம் பணம் இருக்கு; என் நகைகள் இருக்கு; வித்தால், நல்ல தொகை கிடைக்கும். இரண்டையும் சேர்த்து, மூலதனமாக்கி, தொழிலை ஆரம்பிச்சுடுங்க. பிழைக்க ஆயிரம் வழிகள் இருக்கு. அதில், நமக்கு ஒரு வழி அமையாமலா போகும்,” என்று, அவன், கன்னத்தை செல்லமாக கிள்ளினாள்.
“”நீ இத்தனை தெம்பும், உற்சாகமும் தரும் போது, எனக்கென்ன கவலை,” என்று, துள்ளி எழுந்தான் ஆனந்த். சட்டையை கழட்டும் போதே, கவலையையும் கழற்றி, உதறினான்.
மதிய சாப்பாட்டை பகிர்ந்து உண்டான். அவனுக்கு பிடித்த பால் பாயசம் வைத்துக் கொடுத்தாள். நிம்மதியான உரையாடலுக்கு பின், மாலை கடற்கரையில் கழிந்தது. அங்கு வீசிய காற்றே, ஆயிரம் யோசனைகளை அள்ளிக் குவித்தது. சகஜ நிலைக்கு திரும்ப, அந்த மாலை நேரமே, போதுமானதாக இருந்தது.
மறுநாள் பத்திரிகையில், அவனுக்காகவே வெளியிட்டது போல், ஒரு விளம்பரம் கண்ணில் பட்டது.
“வீடு விற்பனைக்கு. முக்கால் கிரவுண்ட் நிலத்தில், அறுநூறு சதுர அடியில் கட்டப்பட்ட வீடு. கிணறு, தோட்டம், சுற்றிலும் காம்பவுண்ட் சுவருடன். அணுகவும்…’ என்று தொலைபேசி எண்ணுடன் இருந்தது.
போன் செய்தான். ஒரு முதியவர் குரல். விலையும், முகவரியும் சொன்னார்.
“”வாங்க… போய் பார்ப்போம்,” என்று நிர்மலாவும் கிளம்பினாள்.
புறநகரில் அமைந்திருந்தது அந்த வீடு. அது, அவ்வளவாக விருத்தியடையாமல் இருந்தது. எப்போதோ கட்டி குடிவந்திருந்த வீடுகளில் ஒன்றாக அது இருந்தது.
“”பையன் அமெரிக்காவில் இருக்கான். போயிடலாம்ன்னு இருக்கேன். புரோக்கரை அணுகினால், சரி வராதுன்னுதான் நேரில் தொடர்பு கொள்ளச் சொல்லி, விளம்பரம் கொடுத்தேன்,” என்றார். வீட்டைச் சுற்றிப் பார்த்தனர். கொஞ்சம் மராமத்து பார்க்க வேண்டியிருந்தது. பத்திரம் பார்த்தான்.
தயாராக கொண்டு போயிருந்த பணத்தில், பாதியை முன் பணமாக கொடுத்தான். “”ஒரு மாசத்துல கிரையம் பண்ணிக்கிறோம்,” என்று சொல்லி, மீதிப் பணத்தில் வீட்டை அலங்கரித்தான். இப்போது புதுப்பிக்கப்பட்ட வீடு, அழகாக மின்னியது. தினசரிகளை, தினசரி ஆராய்ந்து கொண்டிருந்த நிர்மலா, இன்னொரு விளம்பரத்தை காண்பித்தாள்.
“ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிக்கு, வசிக்க வீடு தேவை. புறநகரில், சகல வசதியுடன் வீடு விற்பனைக்கு இருந்தால் தொடர்பு கொள்ளவும்…’ என்றிருந்தது. போனில் தொடர்பு கொண்டு, மற்ற யாரும் போவதற்குள், தம்பதி சமேதராய் போய் நின்றனர்.
புதுப்பித்த வீட்டை, வாடகை கார் வைத்து, கொண்டு போய் காட்டினர். அந்த அதிகாரிக்கு மிகவும் பிடித்து போய் விட்டது. “”எவ்வளவு?” என்றார்; சொன்னான். மறு பேச்சில்லாமல் செக் கிழித்தார். அதை மாற்றி உரிமையாளருக்கு செட்டில் செய்தது போக, கையில் கணிசமாக பணம் நின்றது.
“”நிர்மலா… உன் நகைகளை மீட்கலாம்; வெறும் கழுத்தாய் இருக்கிறாய்,” என்றான்.
“”மஞ்சள் கயிறு இருக்கே… அதை விடவா, மற்ற நகைகள் முக்கியம். நம் அதிர்ஷ்டம். முதல் டீலே வெற்றிகரமாக இருந்தது. கைக்கு வந்திருக்கும் பணத்தை, மீண்டும் முதலீடு செய்யுங்கள்.”
“”அப்படியானால், உனக்கு நகை வேண்டாமா?”
“”தொழிலில் பெறும் வெற்றிகள்தான் எனக்கு ஆபரணங்கள். அதை, நிறைய வாங்கிக் குவிப்போம்; கிளம்புங்கள்,” என்றாள்.
அவள் கொடுத்த உந்துதலில், புறநகரில் இடம் வாங்கி, தனி வீடு ஒன்று கட்டி, விற்றான். நல்ல விலைக்கு போனது. வீட்டை வாங்கியவர், அதன் அழகிலும், தரத்திலும் மயங்கியவராய், “என் தம்பிக்கும் ஒரு வீடு கட்டிக் கொடுங்கள்…’ என்று, மொத்த பணத்தையும் முன் பணமாக கொடுத்து, அசத்தினார்.
“”உழைப்புக்கும், நேர்மைக்கும் கிடைத்த மரியாதை. சவாலான வேலை. ஆனால், இதுதான் முன்னேறுவதற்கான பாதை; விடக் கூடாது,” என்று முடுக்கினாள் நிர்மலா.
அதே பகுதியில் தேடி, இன்னொரு மனை வாங்கி, வீடு கட்டிக் கொடுத்தான்; நன்றாக போய்க் கொண்டிருந்தது.
“”எத்தனை நாளைக்கு ஒற்றைக் காயை விரட்டுவது; தொகுப்பு வீடுகள் கட்டலாமே,” என்றாள் நிர்மலா.
“”அது, தனி வீடு மாதிரி இல்லை; பெரிய பட்ஜெட், பெரிய வேலை.”
“”அதனால் என்ன… பக்கத்தில் நான் இருக்கேன். மனை வாங்க, காசு இருக்கு. தேடி பிடிச்சு, ஒரு மனை வாங்குவோம். நாலு பேருக்கு வீடு கட்டியும், வாங்கியும் கொடுத்த வகையில், நல்ல பேர் எடுத்திருக்கோம். “இப்படியொரு புராஜெக்ட் ஆரம்பிச்சிருக்கோம். தெரிஞ்சவங்க இருந்தால் சொல்லுங்க…’ன்னு கேட்போம். அதிகம் வேணாம்; நாலு பிளாட் உள்ளதாக, சின்னதாக கட்டுவோம். வேலையைத் துவங்கி விட்டால், “புக்’ பண்ண ஆள் வருவாங்க. முன்பணம் வாங்கி, போட்டு புரட்ட வேண்டியதுதான். தேவைப்பட்டால், லோனுக்கு முயற்சிப்போம்,” என்று வரிந்து கட்டினாள் நிர்மலா.
“”தயங்கினால் ஆகுமா? உங்களை கழட்டி விட்டவங்களுக்கு, தக்க பதிலடி கொடுக்க வேண்டாமா? உங்கள் முன்னேற்றம் தான், அந்த அடியாக இருக்க முடியும்,” என்று உசுப்பினாள்; அவன் சுறுசுறுப்பானான். ஒரு இடம் கிடைத்தது.
பூஜை போட்டு, வேலையை துவக்கியதுமே உனக்கு, எனக்கு என்று கேட்டு வந்தனர். கையோடு, இன்னொரு தொகுப்பு வீடும் கட்ட வேண்டிய தேவை உருவானது. தொழிலில் எதிர்காலம் பிரகாசமாக தெரிந்தது.
ஒரு வருடம் கழிந்த நிலையில், பழைய நிறுவன ஓனர்களை, ஒரு நிகழ்ச்சியில் சந்திக்க நேர்ந்த போது, “”உதை கொடுத்த அந்த ஒட்டகச் சிவிங்கிகளுக்கு நன்றி சொல்லுங்க,” என்றாள் நிர்மலா. அவள் சொல்படி, கை குலுக்கி, நன்றி சொன்னான்.
“”நீ நல்லா வருவேன்னு எங்களுக்கு அப்பவே தெரியும்,” என்று அசடு வழிந்தனர் மூவரும்.
வேறென்ன சொல்ல முடியும் அவர்களால்!

– பி.எஸ்.புகழேந்தி (ஜனவரி 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *