கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 22, 2013
பார்வையிட்டோர்: 13,550 
 

” டாடி ..” முதுகை தட்டி சஞ்சய் எழுப்பியதும் , அரைக்கண்ணால் கடிகாரத்தை பார்த்தான் சரவணன், மணி ஆறாகியிருந்தது.

” என்னடா இன்னைக்கு சண்டேதானே… இன்னும் கொஞ்சம் நேரம் தூங்க கூடாதா..?போர்வையை இழுத்து விட்டான்.

கொஞ்சம் நேரம் கழித்து மறுபடியும் சரவணனை எழுப்பினான் சஞ்சய்,

“டாடி பசிக்குது… பால் கலக்கி குடு…”

அஞ்சு வயசு குழந்தை… பசிக்காதா என்ன.. சோம்பலை தூக்கி போட்டு விட்டு எழுந்த சரவணன் அவனை பிரஷ் செய்ய வைத்து பாலை காய்ச்சி கப்பில் ஊற்றி தந்துவிட்டு … தனக்கும் காபி எடுத்துக்கொண்டு தினசரியை பிரித்தான்.

‘ விலைவாசி உயர்வை கண்டித்து இன்று மாலை ஆறு மணி வரை முழு கடையடைப்பு..’ – தலைப்பு செய்தி பளிச்சிட்டது. இதை ஏன் நேற்று மறந்து போனோம்..? நொந்து கொண்டான்.

“என்னங்க அம்மாவுக்கு நாலு நாளா காய்ச்சலாம்.. ட்ரிப்ஸ் எல்லாம்
ஏத்தியிருக்காங்க.. நாளைக்கு லீவுதானே.. சஞ்சயை பார்த்துக்கோங்க..நான் அம்மாவை பார்த்துட்டு வந்துடறேன் என்றவளை நேற்று மாலை பஸ் ஸ்டாப்பில் டிராப் செய்தான். சஞ்சய்க்கு என்ன தர வேண்டும், தரக்கூடாது என்று சொல்லிக்கொண்டே வந்தாள்

“ஆமா பெரிய சிஎம் வேலை.. எல்லாம் நான் பார்த்துக்கறேன் போ..” அவளிடம் ஜம்பமாய் சொன்னான்.

இன்று எந்த ஓட்டலும் இருக்காது என்று தெரிந்துதான் அர்ச்சனா போயிருப்பாளோ?

மனதிற்குள் கோபம் கொப்பளித்தது.’ பூனை கண்ணை மூடினா பூலோகமே இருண்டிடுமா என்ன.. நானே சமைக்கிறேன் பார் என்று … ‘ தனக்குள் முணகினான்.

குளித்து முடித்து ப்ரிட்ஜை ஆராய்ந்தான். தோசை மாவு இருந்தது. ஸ்டவ் பற்றவைத்து கல் வைத்து ஊற்றினான். தோசை பிய்ந்து.. பிய்ந்து வந்தது.

” எனக்கு ரவுண்டா வேணும்… ” என்று அடம் பிடித்த சஞ்சயை விளையாட்டு காட்டி சாப்பிட வைத்தான். சஞ்சயை ஹோம் வொர்க் செய்ய வைத்து, நூடுல்ஸ் செய்து, துணி துவைத்து… வீட்டு வேலைகளை முடிப்பதற்குள் மணி நான்கு ஆகிவிட்டது. இனி எங்கே தூங்குவது என்று தன் வண்டியை துடைத்துக் கொண்டிருந்தான். அந்த பக்கம் சஞ்சய் கல்லால் வண்டியில் ஏதோ கிறுக்கி கொண்டிருந்தான்.

இன்று முழுவதும் வேலை செய்த ஆத்திரம் சரவணனை டென்ஷனாக்க .. ‘ “குட்டி பிசாசு.. நான் சுத்தமா வண்டி துடைச்சிட்டிருக்கேன்.. கிறுக்கி நாசமா பண்றே…? ” பக்கத்தில் இருந்த ஷட்டில் பேட்டால் அவன் கை மீது அடித்தான்.
கையை உதறிய சஞ்சய்.. ” மம்மி ..” என்று அழ ஆரம்பித்தான். பதறிப்போய் சிவந்திருந்த கைகளை பற்றி தூக்கும் போது தான் பார்த்தான்… ‘ ஐ லவ் யூ டாடி… ‘ என்று அவன் தூசியில் கிறுக்கியிருந்ததை.

ஒரு நாளைக்கு நமக்கு பொறுமையில்லையே .. அர்ச்சனா தினமும் எவ்வளவு அன்பாக குடும்பத்தை நடத்துகிறாள்…

” சாரிடா.. செல்லம்.. தெரியாம அடிச்சுட்டேன்.. பதிலுக்கு நானே என்னை அடிச்சிக்குறேன்..” என்று பேட்டை தூக்க ,
“வேணாம் டாடி.. அப்புறம் உனக்கும் வலிக்கும்…” என்ற சஞ்சயை தூக்கி அணைத்து கையில் ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுத்துக்கொண்டே … “மம்மியைஅழைச்சிகிட்டு ஜாலியா ஓட்டலுக்கு போலாம் என்ன என்றான்.

– 21-05-2011 தினமலர்- பெண்கள் மலரில் வெளியானது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *