ஐந்து ரூபாய் நாணயம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 15, 2018
பார்வையிட்டோர்: 5,620 
 

எலே ராசு இந்தாடா காசு, ஸ்கூலு விட்டு வரும்போது மறக்காம அஞ்சு ரூபாய்க்கு வெல்லம் வாங்கிட்டு வந்துடு. சொன்ன மாரியம்மாளிடம்மூக்கில் வழியும் சளியை இடது கையால் துடைத்துக்கொண்டு அம்மோவ்! ஸ்கூலு முடியறதுக்கு நாலு மணி ஆயிடும், சொன்னவனின் தலையை வருடிய மாரியம்மா பராவில்ல ராசா, நான் தோட்டத்துல இருந்து சாயங்காலம்தான் வருவேன்,அப்ப இருந்தா போதும்.சரி என்று வாங்கியவன் அந்த ஐந்து ருபாயின் வடிவத்தை சிறிது நேரம் இரசித்து பார்த்து தன் சட்டை பாக்கெட்டில் போட்டுக்கொண்டான். பாத்து ராசா காசு பத்திரம், சொல்லிக்கொண்டே மாட்டை அவிழ்த்து கொண்டு கிளம்பினாள்.

சட்டைப்பையை மீண்டும் ஒரு முறை தொட்டு பார்த்துக்கொண்டான்.

கால் சட்டை பையில் வைக்கலாமா என்று யோசித்தவன் கால் சட்டை பை க்குள் கையை விட அதிலுள்ள ஓட்டை வழியாக கை வெளியே வந்தது. உதட்டை பிதுக்கி, மீண்டும் பத்திரமாய் இருக்கிறதா என்று தொட்டு பார்த்துக்கொண்டு புத்தகப்பையை தோளில் மாட்டிக்கொண்டு பள்ளிக்கு கிளம்பினான்.

வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் நடந்துதான் அந்த ஆரம்ப பள்ளிக்கு செல்லவேண்டும்.கொஞ்சம் காட்டு வழிதான். மலை அடிவாரமாய் இருப்பதால் அந்த பகுதியில் மிருகங்கள் தொல்லையும் உண்டு.

ராசு இருடா, சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவன் மணி ஓடி வருவதை பார்த்தான்.இவனோடு மூன்றாம் வகுப்பு படிப்பவன். “சிக்கிரம் வாடா”, இவன் இங்கிருந்தே குரலிட, கொஞ்சம் நில்லுடா வந்து சேர்ந்துகொண்டான் மணி. அதற்குள் மூச்சு வாங்கியது மணிக்கு.இருவரும் மெளனமாய் சிறிது தூரம் நடந்தவர்கள் நம்ம ஊருக்கு பஸ் விடப்போறங்காலாம்டா என்ற மணிக்கு எப்ப்டா குரலில் ஆசையாய் கேட்டான் ராசு, அடுத்த மாசம்னு எங்க அப்பா சொல்லுச்சு

அவர்கள் ஊரில் ஓட்டு கேட்க வரும்போது ஒவ்வொரு அரசியல் பிரமுகரும் கொடுக்கும் சம்பிரதாய வார்த்தை. இதை கேட்டு ஒவ்வொரு முறையும் ஊர் மக்கள் நம்பி தேர்தல் திருவிழா முடிந்தவுடன் மறந்து விடும்.

புளிய மரத்தை பார்த்தவுடன் மணி கீழே கிடந்த ஒரு கல்லை எடுத்து எறிந்தான். அது இலக்கில்லாமல் சென்றது. இருடா நான் அடிக்கிறேன், ராசு குனிந்து கல்லை எடுத்து வீச அதுவும் இலக்கில்லாமல் சென்றது.மணி மீண்டும் முயற்சிக்க, ராசு புத்தகப்பையை அங்கிருந்த கல்லின் மீது வைத்துவிட்டு கற்களை பொறுக்க ஆரம்பித்துவிட்டான்.

இருவரும் மாறி மாறி வீசினர்.

கை நிறைய பளியம்பழங்களை எடுத்து இருவரும் பங்கிட்டு கொண்டு புத்தகப்பைக்குள் வைத்தனர். “டேய் மணியாயிட்டு ஒடியா”, என்று வேகவேகமாக புத்தகப்பையை எடுத்துக்கொண்டு ஓட ஆரம்பித்தனர்.

பள்ளி அமைதியாய் இருந்தது. வகுப்புக்கள் நடந்து கொண்டிருந்தன. இவர்கள் இருவரும் பதுங்கி பதுங்கி வகுப்பறை வாசலில் நின்றனர்.சத்தம் போட்டீங்கண்ணா பிச்சுப்புடுவேன்.மிரட்டிவிட்டு திரும்பிய அருணாச்சல வாத்தியார் இவர்கள் இருவரையும் பார்த்தவர் “வாங்கடா துரைகளா” இது தான் ஸ்கூலுக்கு வர்ற நேரமா?

மெல்ல இருவரும் பயந்து கொண்டே ஆசிரியரின் அருகில் வர ஏண்டா லேட்டு? ஓடி வந்த மூச்சிறைப்பிலும், மூக்கில் ஒழுகும் சளியையும் சமாளிக்க முகத்தை தூக்கி வைத்தவாறு சார் ..என்று ஆரம்பிக்க அதை கேட்க ஆசிரியருக்கு நேரமில்லாமல் பிரம்பால் இருவரின் பின்னால் ஒங்கி அடித்து, போங்கடா, போய் உட்காருங்க, என்று விரட்டி விட்டார்.

குடு குடுவென் ஓடிய இருவரும் அவரவர் வரிசையில் பாய்ந்து புத்தகப்பையை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு உட்கார்ந்தனர்.பக்கத்தில் உள்ளவன் மெல்ல இவனை நோண்ட,ஏ கம்முனு இருடா குசு குசுத்தான் மணி.

தன் இடத்தில் உட்கார்ந்த ராசு மெல்ல புத்தகப்பைக்குள் கையை விட்டு ஒரு புளியம்பழத்தை எடுத்தவன் பக்கத்தில் இருந்தவனிடம் கொடுக்க, அவன் வாயை பிளந்தவாறு டேய் புளியம்பழண்டா பக்கத்தில் உள்ளவன் சத்தம் கேட்டு டேய் எனக்கு ஒண்ணு கொடுடா அவனிடம் கேட்க, கொஞ்ச நேரத்தில் ராசு பையிலிருந்த புளியம்பழங்கள் காணாமல் போயின.

இப்பொழுது மணியின் முறை, ராசு முன்னால் உட்கார்ந்திருந்த மணியிடம் ஒரு பழம் கொடுடா என்றவுடன் முடியாது என்று புத்தகப்பையை இழுத்து மடி மீது வைத்துக்கொண்டான். டேய் நீயெல்லாம் நண்பனாடா என்று ராசு கேட்க நீ அடுத்தவங்களுக்கு கொடுத்துட்டு எங்கிட்ட கேட்காதே, அங்க என்னடா சத்தம் வாத்தியார் அருணாச்சல்த்திடமிருந்து ஒரு அதட்டல் வர ராசு அமைதியானான்.

உன்னைய மதியானம் பாத்துக்கறேன் மனதுக்குள் கருவிக்கொண்ட ராசு திடீரென்று ஞாபகம் வர தன்னுடைய சட்டைப்பைக்குள் கையை விட்டு பார்த்தவன் அதிர்ந்து போனான்.
ஐந்து ரூபாய் காணாமல் போயிருந்தது.அப்படியே ஜில்லிட்டு போய்விட்டது அவனுடம்பு.

எங்கே காணாமல் போயிருக்கும்?புளிய மரத்தடியில்தான் காணாமல் போயிருக்கும்.அம்மாவின் கோபமான முகம் நினைவுக்கு வந்தது.அதற்கு மேல் வகுப்பில் என்ன நடந்தது என்றே அவனுக்கு தெரியவில்லை.

இடைவேளை விட்டதும் அவன் எங்கும் செல்லாமல் பிரமை பிடித்த்து போல் உட்கார்ந்திருந்தான்.எங்கே தொலைந்தது? அம்மாவுக்கு பதில் சொல்ல வேண்டுமே?.

மதிய உணவு இடைவேளையில் மணியே இவனிடம் வந்து “இந்தாடா” என்று ஒரு புளிய்ம்பழம் கொடுத்தான். வேண்டாண்டா என்றவனை அதிசயமாய் பார்த்து பரவாயில்லை வச்சுக்கடா என்று அவன் கையில் திணிக்க இவன் டேய் மணி எங்க அம்மா அஞ்சு ரூபா கொடுத்து வெல்லம் வாங்கியான்னுச்சு,அது காணாம போயிடுச்சுடா என்று சோகமாக சொன்னான்.எப்படா தொலைச்ச? தெரியல, நாம புளியம்பழம் அடிச்சமில்ல அங்கதாண்டா தொலைஞ்சிருக்கணும்.சரி விடுடா, சாயங்காலம் போகும்போது அங்க தேடி எடுத்துக்கலாம். நண்பன் சொன்னவுடன் கொஞ்சம் நிம்மதியானான் ராசு.

இங்க ஒண்ணையுமே காணோமேடா, மணி தேடி அலுத்தவனாய் சொன்னான். ராசுவும் உதட்டை பிதுக்கினான்.மணி ராசு நேரமாச்சுடா எங்க அம்மா தேடும் நான் போறேண்டா, நீ வேணா எங்கூட வா நாளைக்கு காலையில தேடலாம் என்று சொன்னான். எங்கம்மா தோலை உறிச்சுடும், நீ வேணா போடா நான் கொஞ் நேரம் தேடிட்டு வந்துடறேன். சரி என்று கல்லு மேலே வைத்திருந்த புத்தகப்பையை தோளில் மாட்டிக்கொண்டு கிளம்பினான்.

இருள் கொஞ்சம் கொஞ்சமாய் சூழ ஆரம்பித்தது. தேடி தேடி அலுத்துப்போன ராசு இனி இருளில் தேட முடியாது என புளியமரத்தடியில் உட்கார்ந்தான். இப்பொழுது மிருகங்களின் சத்தங்கள் கேட்க ஆரம்பித்தது.பயந்து மரத்தின் மேல ஏறிக்கொள்ளலாமா என்று மேலே பார்த்தான்.

வீட்டுக்கு வந்த ராசுவின் அம்மா ஐந்து மணி வரை பார்த்தவள் இவனை காணாததால் மணி வீட்டுக்கு வந்து கேட்டாள். மணியும் வீட்டுக்கு வராததால் சரி இரு பயல்களும் எங்கேயோ விளையாண்டுட்டு வருவான்கள் என்று மனதில் நினைத்தவாறு சென்றுவிட்டாள்.

மணி ஆறு மணிக்கு மேல ஆகி இருட்ட ஆரம்பித்தவுடன் மீண்டும் மணியை பார்க்க சென்றாள்.

மணியின் அம்மா, என்ன மாரியம்மா ராசு வந்துட்டானா, இவன் இப்பத்தான் வந்தான், அவன் அப்பன் என்னமோ திட்டுன உடனே புத்தகத்தை எடுத்துட்டு உட்கார்ந்துட்டான்.இவள் சொல்ல, கொஞ்சம் மணிய கூப்பிடறயா? ஏலே மணி இங்க வா, மணி மெல்ல வெளியே வந்தவனை மாரியம்மா மணி “ராசுவ” இன்னும் காணோமேடா, உங்கூட வரலியா?

ம்..சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்து நின்றவன் சரி சொல்லிவிடுவோம் என்று ராசு அஞ்சு ரூபா காச தொலைச்சுப்போட்டு அந்த புளிய மரத்தாண்ட தேடிக்கிட்டிருக்கான்.

சொன்னவுடன் இந்நேரத்துக்கு புளிய மரத்துக்கிட்டயா, அட கடவுளே, நாய் நரி எல்லாம் சுத்துமே, பதட்டமானவளை பார்த்து மணியின் அம்மா கொஞ்ச இரு மாரியம்மா
எங்க வீட்டுக்க்காரர வர சொல்றேன் போலாம் என்று சொல்ல அதற்குள் மாரியம்மா நடக்க ஆரம்பித்திருந்தாள்.அவள் போகும் வேகத்தை பார்த்து அவள் வீட்டுக்காரரை கூப்பிட்டு
கொண்டே மாரியம்மாளை பின் தொடர்ந்தாள்.

“ராசு”ராசு” சத்தம் அம்மாவுதா? ஒரு மரத்தின் கிளையில் உட்கார்ந்திருந்த ராசு கீழே பார்க்க அவன் அம்மாவும், மணியின் அம்மா,கூட நான்கைந்து பேர்கள் வருவது தெரிந்தது.”ராசு”ராசு” வந்தவர்கள் கூவ, இவன் இங்கிருக்கேன் என்று மெல்ல மரத்திலிருந்து இறங்கினான்.

ஏண்டா வீட்டுக்கு வராம மரத்துல ஏறி உட்கார்ந்துருக்க?இல்லே காசு தொலைஞ்சு போச்சு நீ அடிப்பியே அதுதான் இன்னைக்கு பூரா இங்கியே இருக்கலாம்னு மரத்துல ஏறிட்டேன். என்றவனை வாரி அணைத்துக்கொண்டாள் மாரியம்மா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *