எழுத்தாளனின் மனைவி!

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 6, 2016
பார்வையிட்டோர்: 6,476 
 

முத்தமிழ் இலக்கிய வட்டம் இந்த ஆண்டு நாவலாசிரியர் புரட்சி வேந்தன் அவர்களின் ‘துணையா?…இணையா?..’ என்ற நாவலை பரிசுக்குரிய நாவலாகத் தேர்வு செய்துள்ளது!- என்ற செய்தியை பத்திரிகையில் கட்டம் கட்டி வெளியிட்டிருந்தார்கள்!

அந்த செய்தித் தாளை எடுத்துக் கொண்டு தமிழ் செல்வி தன் கணவன் புரட்சி வேந்தனின் தனியறைக்குள் நுழைந்தாள்.

“ இன்றைய செய்தித் தாளைப் பார்த்தீங்களா?….”

“ எனக்கு நேற்றே போனில் கூப்பிட்டு அவங்க சொல்லிட்டாங்க!…உனக்கு சந்தோஷம் தானே?….”

“ நீங்க எப்ப எழுதறதை நிறுத்தப் போறேன் என்று சொல்லப் போறீங்களோ…அன்று தான் எனக்கு சந்தோஷம்!….”

“ ஏண்டி நீ மட்டும் இப்படி இருக்கிறே?….புருஷனுக்கு புகழும் பாராட்டும் கிடைச்சா சந்தோஷப் படாத பொண்டாட்டி என்ன பொண்டாட்டி?……”

“ உங்க ஒவ்வொரு நாவலையும் படிக்கும் பொழுதும் எனக்கு சந்தோஷமாவா இருக்கு!…சொல்ல முடியாத வேதனையா இருக்கு தெரியுமா?…இந்த லட்சணத்தில் அதற்கு பாராட்டு வேறு! நவீன இலக்கிய வட்டம் என்று உங்களைச் சுற்றி இருக்கும் அந்தக் கும்பலுக்கு வேறு வேலையே இல்லையா? …அதை நினைச்சா இன்னும் வேதனையா இருக்கு!..”

“இந்த நவீன இலக்கியம் என்பது இதுவரை எந்த எழுத்தாளரும் தொடாத புதுப் புது விஷயங்களைத் தேர்ந்தெடுத்து நான் எழுதுவது தான்! …நீ ஒரு பழைய பஞ்சாங்கம்..உனக்கு அதெல்லாம் புரியாதடி!..”

“ எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் நல்லாப் புரியற மாதிரி நீங்க எழுதறது தாங்க எனக்குப் பிரச்னையே!…அதனால் தான் நீங்க எழுதாமே இருந்தா அதுவே நீங்க நம்ம நாட்டிற்கு செய்யற பேருதவிங்க!…நீங்க குடிச்சுப் போட்டு ஒரு மூலையில் பேசாம கிடந்தாக் கூட நான் இவ்வளவு கவலைப் பட மாட்டேன்!.பாமர மக்கள் மனசிலே அப்படியே பதியற மாதிரி எழுதற திறமையை உங்களுக்கு ஏன் தான் ஆண்டவன் கொடுத்தானோ… அதை நினைச்சுத்தான் நான் கவலைப் படறேன்!..”

“ ஏண்டி நீ பேசாம போக மாட்டே? இங்கிருந்து நேரம் காலம் தெரியாம என் வயிற்றெரிச்சலை கிளறாதே!…”

“ உங்க மனைவிங்கற முறையிலே எனக்கும் கவலையும் சமுதாயப் பொறுப்பும் இருக்குதுங்க!..நானும் ஓரளவு படிச்சவ தான்!..சமுதாயத்திற்கு கேடான விஷயங்களையே இப்படி எப்போதும் எடுத்துக் கொண்டு நீங்க எழுதினா…ஒருநாள் இல்லேனா ஒருநாள் ஊர் மக்களே சேர்ந்து நீங்க எழுதறதை நிறுத்திடுவாங்க!……….அப்ப ஊருக்கு மத்தியிலே நாம தான் குடும்பத்தோடு

2

அனாதையா நிற்க வேண்டியிருக்கும்! அப்ப இந்த இந்த நவீன இலக்கிய ரசிகர் கூட்டம் எல்லாம் வந்து உங்க பக்கத்தில் நிக்க மாட்டாங்க….அவங்க பத்திரிகைகளில் அறிக்கை விடுவதோடு சரி! அதோடு நின்று கொள்வாங்க!.நீங்க தான் குடும்பத்தோட தெருவில் நிற்க வேண்டியிருக்கும்!..”

“ ஏண்டி இப்படி பேசறே?….நீ என்னுடைய ‘துணையா?….இணையா?…’ நாவலை படிச்சயா?.அதில் என்னடி குறை கண்டே?..”

“ அந்த கண்றாவியை ஏன் கேட்கிறீங்க?..கல்லூரி ஹாஸ்டலில் ஒரே ரூமில் தங்கிப் படிக்கும் இரண்டு மாணவிகள் ஒருவரை ஒருவர் விரும்புகிறாங்க!….அவங்க நட்பு காதலா மாறுது!….அப்புறம் என்ன என்னவோ நடக்குது…இருவருமே ஆண்களை வெறுக்க ஆரம்பிச்சிட்டாங்க!…ஒரு பெண் வாழ் நாள் முழுவதும் ஒரு ஆணுக்கு அடிமையாக வாழ்வதை விட, ஒரு பெண்ணுக்கு ஒரு பெண்ணே துணையாக வாழ்வதென்று முடிவு எடுத்திடறாங்க!…இது தானே நீங்க எழுதிய கதை! அதற்கு வெளிநாட்டில் இருந்து பல உதாரணங்கள் காட்டியிருக்கீங்க!…அதற்கு ஆதரவு தரும் அமைப்புகள், அரசுகள் பற்றி எல்லாம் விபரமா சொல்லியிருக்கிறீங்க! …அப்படி வாழ்ந்தா தப்பு இல்லைனு புட்சிகரமாச் சொல்ல வரறீங்க!..இது தான் நம்ம நாட்டுக்கு இப்ப ரொம்ப அவசியமோ?..”

“ நீ ஒரு கிணற்றுத் தவளை…உனக்கு என்ன தெரியும்?…நம்ம இந்தியாவிலேயே ஒரு தாய் தன் மகனுக்கு கல்யாணம் செய்ய விரும்பி, அவனுக்கு ஆயுசு முழுக்க நல்ல துணையாக ஒரு பையன் வேண்டுமென்று பத்திரிகையில் விளம்பரம் கொடுத்திருந்தாங்க!…அதற்கு நிறைய பதில்களும் வந்திருக்கு!….அந்தம்மா சந்தோஷமா கொடுத்த பேட்டியும் பல தமிழ் பத்திரிகைகளில் வந்திருக்கு!….”

“ உங்களுக்கு பத்திரிகையில் வரும் நல்ல விஷயங்களே கண்ணில் படாதா? உங்க மாதிரி ஆட்களுக்கு இந்த மாதிரி வேண்டாத விஷயங்கள் தான் கண்ணில் படும்!…அதை கண்ணில் விளக்கெண்ணை விட்டு ஆய்வு செய்து எழுதுவீங்க!..எதாவது நல்ல விஷயங்கள் வந்தா அது உங்க கண்களில் படாது! அதைப் பற்றி ஒரு வரி எழுத மாட்டீங்க! ..”

“ யதார்த்தமான வாழ்க்கையைப் பார்த்து…அப்படியே கேமராவில் படம் படித்து காட்டுவதைப் போல அதை கண் முன் காட்டும் எழுத்துக்குத் தான் இன்று மரியாதை!..என்னுடைய ‘கறுப்பு நாய்கள்!’ நாவலை நீ படித்திருந்தா உனக்கு அது தெரியும்!…”

“ அதையும் தான் படிச்சு தொலைச்சேன்!…அந்தக் கண்றாவியை என் வாயால் சொல்ல வேண்டுமா?… சிறைச் சாலையில் பெண்களை அடைத்து வச்சிருக்கும் செல்களில் இருக்கும் பெண்கள் எல்லாம் ஓரின சேர்க்கைக்கு ஏங்கி தவித்து இரவு வந்தா அதில் ஈடு படுவது போல் எழுதியிருக்கீங்க! ..ரொம்ப

3

அசிங்கங்க!…எங்கோ ஒரு மூலையில் ஒரு தப்பு நடந்தா அதையே ஒரு பொதுவான விதியா மாற்றி உங்களைப் போன்ற எழுத்தாளர்கள் எழுதுவது

ரொம்ப பாவங்க!..சிறைச்சாலைக்குப் போனவுடன் ஆத்திரத்தில் செய்த தவறுகளுக்காக எத்தனை பெண்கள் கண்ணீர் வடிக்கிறாங்க தெரியுமா?…, குழந்தை குட்டிகளை பிரிந்த சோகத்தில் கண்ணீரை ஆறாக வடிக்கும் பெண்கள் பேட்டி எல்லாம் கூட பத்திரிகைகளில் வருது….அதெல்லாம் உங்கள் கண்களுக்குப் படவில்லையா?….

அதை விட கொடுமை… குடிசை குப்பத்தில் வாழும் பெண்களைப் பற்றி அந்த நாவலில் நீங்கள் எழுதியிருப்பது!

“ அங்கு நடப்பதைப் பார்த்துத் தான் எழுதினேன்!..”

“நீங்க பார்த்து கிழிச்சீங்க!…குப்பத்தில், குடிசையில் குறைந்த வருமானத்தில் வாழற ஆண்கள் எல்லாம் பொறுக்கிகள் என்றும், பெண்கள் எல்லாம் ஒழுக்கம் கெட்டவர்கள் என்றும் கூசாமல் எழுதறீங்க!…அந்த ஏழை ஜனங்களைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? அந்த படிக்காத பாமர ஜனங்க உங்க நாவல்களை படிக்க மாட்டாங்க என்ற தைரியத்தில் தான் உங்களைப் போன்றவர்கள் இப்படி எழுதறீங்க!..இந்த மாதிரி நாவல்களை அவங்களும் படிச்சா…அந்த உழைச்சு உரமேறிய கைகளில் இருந்து உங்களை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது!…”

“ என்னடி என்னை பயமுறுத்தறயா? உனக்கு நவீன இலக்கியத்தைப் பற்றி என்ன தெரியும்?…என்னுடைய ‘கடவுள் வழிபாடு!’ என்ற நாவலுக்கு எவ்வளவு வரவேற்பு இருந்தது தெரியுமா?…”

“ அந்த அசிங்கத்தை வேறு கேட்கிறீங்களா? ஒழுக்கக் கேட்டிற்கு ஆண்டவன் பெயரைப் பயன் படுத்தும் நீங்கள் எல்லாம் ஒரு எழுத்தாளர் என்று சொல்வது தான் எனக்கு அசிங்கமாப் படுதுங்க! பெண்கள் ஒழுக்கம் தவறுவதற்கு கோயில் தேர் திருவிழாவுக்கு வரும் வழிபாட்டு பக்தர்கள் கூட்டத்தை பயன் படுத்தி இருக்கிறீங்க! ..நவீனங்கற பேரிலே உங்க புத்தியெல்லாம் ஏன் தான் இப்படி கீழ் தரமாப் போகுதோ?..”

“நீ பெரிய மேதைனு உனக்கு நெனப்பு,,,,கதை எப்படி எழுத வேண்டுமென்று நீ தான் சொல்லேன்!..”

“ நாம கொஞ்ச நாட்களுக்கு முன்னாலே ‘காக்க முட்டை’னு ஒரு சினிமா பார்த்தோம்!,,,நினைவு இருக்கா?….”

“ ஆமா அதிலே என்னடி பெரிசா கண்டு பிடிச்சிட்டே?…”

“ அதிலே இரண்டு சிறுவர்கள் பீட்சா சாப்பிட ஆசைப் படறாங்க!…அதற்கு அவர்களுக்கு வசதியில்லே!…எப்படியாவது சாப்பிட வேண்டுமென்று ரொம்ப ரொம்ப கஷ்டப் பட்டு பணம் தேடறாங்க….

4

அவங்களுக்கு ஏன் அந்த ஆசை வந்தது?..அவர்கள் இருப்பிடத்திற்கு பக்கத்திலே ஒருவன் பீட்ஷா கடை திறக்கிறான்!.அவர்களுக்கு அதுவரை இந்த உலகத்தில் பீட்ஷா என்று ஒன்று இருப்பதே அவர்களுக்குத் தெரியாது!

அந்த சிறுவர்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தை அவர்களுக்கு காட்டி, அவர்கள் ஆசையைத் தூண்ட வைத்தது அந்த பீட்ஷா கடைக்காரன் தான்!

அந்தக் கடைக்காரன் வேலையைத் தான் உங்களைப் போன்ற எழுத்தாளர்களும் செய்கிறீர்கள்!

எந்த நாட்டிலோ எங்கோ ஒரு மூலையில் மறைமுகமாக நடக்கும் ஒரு வேண்டாத விஷயத்தை நீங்க தெரிந்து கொண்டு அதற்கு வெளிச்சம் போட்டு, நாமும் அப்படி நடந்தால் என்ன என்று மக்களின் உணர்ச்சியைத் தூண்டும்படி எழுதுகிறீங்க!…அது ரொம்ப ரொம்பத் தப்புங்க!….

உங்க ‘துணையா?…இணையா?’ என்ற நாவலையே எடுத்துக் கொள்ளுங்க!…கல்லூரி ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் டீன் ஏஜ் பெண்கள் அதைப் படித்தால் பருவத்தில் ஆண் துணை இல்லாமல் அதில் வருவது போல் இப்படி எல்லாம் கூட இன்பம் அனுபவிக்க வழி இருக்கும் போலிருக்கு!…நாமும் அப்படி ஒரு முறை ரகசியமாக செய்து பார்த்தால் என்ன என்ற எண்ணம் வராமல் இருக்குமா?

இப்படி ஒரு தவறான எண்ணத்தை வளரும் இளைய தலைமுறைக்குத் தூண்டி விடுவது உங்க எழுத்து!

அதே போல் உங்க ‘கறுப்பு நாய்கள்’ என்ற நாவலில் குப்பத்தில் வாழும் படிக்காத பாமர ஜனங்களை வைத்து எழுதியிருக்கிறீங்க!..

குடிசை, குப்பத்தில் வாழும் எல்லாப் பெண்களுக்கு எல்லோருக்கும் ஒழுக்கம் இருக்காது என்றும், ஆண்கள் எல்லாம் கஞ்சா குடித்து விட்டு சட்ட விரோதமான காரியங்களில் ஈடு படுவார்கள் .என்று எழுதியிருக்கிறீங்க…இதெல்லாம் பாவங்க!…. கொஞ்சம் கூட நியாயம் இல்லே! ஏழை பணக்காரன், படித்தவன் படிக்காதவன் கிராமத்தான், நகரத்தான் எல்லா வகையான மக்கள் மத்தியிலும் நல்லவங்களும் கெட்டவங்களும் கலந்து தான் இருப்பாங்க! அதெல்லாம் புரியாம நீங்க எழுதறது ரொம்பத் தப்புங்க!

அதைவிட ரொம்பக் கொடுமை உங்க கடவுள் வழிபாடு என்ற கதையில் பெண்கள் ஒழுக்கம் தவறி நடப்பதற்கு ஆண்டுக்கு ஒரு முறை வரும் நம் கடவுள் வழிபாட்டின் உச்சமான கோயில் தேர் திருவிழாவையே பயன் படுத்தியிருக்கீங்க! ஒரு பெண் ஒழுக்கம் தவற கோயில் தேர் திருவிழா தான் உங்களுக்குச் சிக்கியதா?…ஏனுங்க உங்க புத்தி எல்லாம் இப்படி மட்டமாப் போகிறது?

அதை தப்புனு சொன்னா அதில் போய் மதம், ஜாதி, கட்சி என்று ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு திசை திருப்புபுறீங்க!

5

சமுதாயத்தில் அப்படி லட்சத்தில் ஒரு தப்பு நடந்திருக்கலாம்! அதை மறைத்து நல்ல விஷயங்களை முன்னிருத்தி மக்கள் மனசில் தவறான எண்ணம் எழுந்து விடாமல் பார்த்துக் கொள்வது தான் உங்களைப் போன்ற எழுத்தாளர் கடமை! அதை விட்டு விட்டு அது தான் பழக்கம்..என்று மற்றவர்களையும் நினைக்கும்படி நீங்க செய்தா அது பெரிய தப்புங்க! ஒரு எழுத்தாளன் இப்படி எழுதுவது ரொம்ப அநியாயங்க! அதுவல்ல எழுத்தாளன் கடமை!

நீங்க என் கழுத்தில் தாலி கட்டியிருக்கிறீங்க!….அந்த தாலியை சுமக்கிற எனக்கும் பொறுப்பும் கடமையும் இருக்குதுங்க!..என்னைப் போலவே இந்தக் காலத்தில் பத்திரிகைகளில் எழுதும் எல்லா எழுத்தாளர்கள் மனைவிகளும்

நல்லாப் படிச்சிருக்காங்க! அவங்களுக்கும் சமுதாயப் பொறுப்பு இருக்குங்க! தங்கள் கணவன்மார்கள் ஒழுக்க கேடான விஷயத்திற்கு ஆதரவாக எழுதினாலோ அப்படி பட்டவர்களுக்கு ஆதரவு கொடுத்தாலோ தப்புனு அவங்களுக்கு உறைக்கிற மாதிரி எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை ஒவ்வொரு எழுத்தாளர் மனைவிக்கும் இருக்குங்குங்க!….”

“ சரியடி!…நீ இப்ப என்ன சொல்ல வரறே?….”

“ உண்மையா இருந்தாக் கூட சமூகத்திற்கு கேடு விளைவிக்கும் விஷயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டறது நல்ல எழுத்து இல்லைங்க!…

டீன் ஏஜ் குழந்தைகளுக்கும், பத்திரிகைகளை காசு கொடுத்து வாங்கும் அப்பாவி மக்களுக்கும் உலகத்தில் நடக்கும் எல்லா கெட்ட விஷயங்களையும் விபரமா எடுத்துச் சொல்ல வேண்டியது எழுத்தாளன் கடமை இல்லைங்க!…அவர்கள் எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அவைகளைத் தேடிப் பிடித்து பிரசுரம் செய்வதும் பத்திரிகை தருமமும் இல்லைங்க!

டீன் ஏஜ் குழந்தைகள் மனம் பக்குவப் படப்பட அவங்களே கொஞ்சம் கொஞ்சமாக நல்லது கெட்டது புரிந்து கொள்வாங்க… சரியாப் பக்குவப் படாத நிலையில் அவங்க ஆசையைத் தூண்டி விடற மாதிரி எழுதுவது பெரிய தப்புங்க!… கூர் தீட்டிய ஆயுதம் மாதிரி தான் எழுத்துங்க!….அதை சரியா பயன் படுத்த வேண்டும்! அதை எழுதற எழுத்தாளர்களும் சரி, அதை வெளியிடும் பத்திரிகைகளும், பதிப்பகத்திற்கும் சரி, அவர்களுக்கும் பொறுப்புணர்ச்சி இருந்தா தான் நம்ம நாடு முன்னேறுங்க! நீங்க செய்யற தப்பை எடுத்துச் சொன்னா என்னவோ கருத்து சுதந்திரம் என்று குதிக்கிறீங்க! நாட்டு மக்கள் மனசை கெடுக்க நீங்க எழுதற எழுத்தும், ஊருக்குள் வெடிகுண்டு வைப்பதும் ஒண்ணுதானுங்க!.அதற்கெல்லாமா உரிமை கேட்பாங்க? கருத்து சுதந்திரம் என்று நீங்க கேட்கிற சுதந்திரம், மக்கள் நாகரிகத்தையும், பண்பாட்டையும் அழிக்க சுதந்தரம் கேட்பது போல் இருக்கிறது! தீவிரவாதிகள் குண்டு வைக்க ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு அலைவது போல் நீங்களும் இதற்கு ஒரு கூட்டத்தை சேர்த்துக் கொண்டு அலைகிறீங்க!…இது ரொம்பத் தப்புங்க!. ..”

6

எந்த நேரமும் சமையலறையிலேயே குடியிருக்கும் தமிழ் செல்வியா இப்படி பேசுவது? நாவலாசிரியர் புரட்சி வேந்தன் இதை சற்றும் எதிர் பார்க்க வில்லை!

தமிழ் செல்வி இவ்வளவு ஆவேசமாகப் பேசி புரட்சி வேந்தன் இதுவரை பார்த்த தில்லை! மாலை நேரத்தில் இருளடைந்த அறையில் ஒரு குத்து விளக்கை ஏற்றியது போல் வெளிச்சம் அந்த அறை முழுவதும் பரவியதைப் போல் அந்த நாவலாசிரியர் உணர்ந்தார்!

அப்படிப்பட்ட வெளிச்சம் நாடெங்கும் பரவ வேண்டும்! எழுத்து கூட கத்தியைப் போன்ற ஒரு ஆயுதம் தான்! கத்தியை எப்படி ஆக்க வேலைகளுக்குத் மட்டும் தான் பயன் படுத்துகிறோமோ அதைப் போல் தான் எழுத்தையும் பயன் படுத்த வேண்டும் என்பதை இன்றைய எழுத்தாளர்கள் புரிந்து கொண்டால் நாடு முன்னேற்ற பாதையில் வீறு நடை போட முடியும்!

– விஜய பாரதம் தீபாவளி மலர் 2016

Print Friendly, PDF & Email

2 thoughts on “எழுத்தாளனின் மனைவி!

  1. மிகவும் அழுத்தமான, வருத்தமான உண்மையின் பதிவு. நமது ஊடகங்கள் மட்டமும் அல்ல, உலகில் உள்ள அணைத்து ஊடகங்களும் எங்கோ ௦.01 % நடக்கும் தப்பான அல்லது தவிர்க்க வேண்டிய விடையங்களை மட்டும் பெரிதுபடுத்தி காட்டுகின்றன. Facebook போன்ற சமூக வலை தளங்கள் மிகவும் விரைவாக இதை கொண்டு செல்கிறனறன. எனது குழந்தைகளின் மனதில் ஏற்படுத்தும் விளைவுகளை நினைக்க வருத்தமாக உள்ளது. கதை வடிவிலே மிகவும் அழகாக இந்த கருத்தை பதிவு செய்ததுக்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *