எல்லோரும் நலம் வாழ…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 27, 2021
பார்வையிட்டோர்: 3,811 
 

“திவாகர் சார்..உடனே 88 C க்கு வரீங்களா…? வைஃப் மயக்கம் போட்டு விழுந்துட்டா…”

திவாகர் பயந்து விட்டான்.. அவன் வேலையில் சேர்ந்து முழுதாய் இருபத்தி நாலு மணிநேரம் கூட ஆகவில்லை… முதல் எமர்ஜென்சி கால்…!

மனைவி ஜோதிகா பதறி விட்டாள்…..

“திவா… எனக்கு பயம்மா இருக்கு.. ஏதாவது ஆயிடிச்சுன்னா…?

இதுக்குதான் இந்த வேலை வேண்டாம்னு அப்பவே சொன்னேன்…”

“ஜோ.. கொஞ்சம் சும்மா இருக்கியா…வயசானா மயக்கம் போடறதெல்லாம் சகஜம்தான்.!!

நீயா ஏதாச்சும் கற்பன பண்ணி நீயும் குழம்பி என்னையும் குழப்பாத.. நான் உடனே போய்ப் பாக்கணும்… என் சட்டைய எடு…!!”

மணி இரவு பத்து இருக்கும்…!

ஊரிலிருந்து வந்த அலுப்பில் சாப்பிட்டுவிட்டு படுக்கப் போகும் போதுதான் இந்த ஃபோன்!

88 C… மங்களம் மாமியும்… சபேசன் மாமாவும்.. வயது எண்பத்தைந்தை தாண்டிவிட்டது!

உண்மையாகவே மங்களம் மாமி அரை மயக்கத்தில் இருந்தார்..

ஆனால் மாமா சொன்னது போல கீழேயெல்லாம் விழவில்லை…

சோஃபாவில் உட்கார்ந்து கண்ணை மூடி மூடி திறந்து கொண்டிருந்தார்…

“என்னாச்சுங்க…?”

மாமா நல்ல ஆரோக்கியமாக தான் இருந்தார்…

“ஒண்ணுமில்ல..பாத்ரும்ல ஒரு கரப்பு..மங்களத்துக்கு கரப்புன்னா பயமா… !மேல பறந்து வந்து உக்காந்துது போல இருக்கு! அதான் மயக்கமா வருதுன்னு…!”

கரப்பு இன்னும் பாத்ரும்லதான் இருக்கு.. கொஞ்சம் அடிச்சிடுங்க மேனேஜர் சார்…!!”

மேனேஜராய் சார்ஜ் ஏற்றதும் முதலில் கரப்பு அடிக்கும் வேலை இருக்கும் என்று ஜோசியர் சொல்லியிருந்தால் கூட சத்தியமாய் நம்பி இருக்க மாட்டான் திவாகர்….

இதுவே வேறு இடமாய் இருந்தால்…

“ஏன் சார்..இதுக்கா பத்து மணிக்கு அர்ஜென்ட்டா கூப்பிட்டீங்க…நீங்களே அடிக்கலாமே…!!”என்று சொல்லியிருப்பான்….

இந்த இடத்தில் வாயைத் திறக்கக் கூடாது.. திறந்தால் வேலை காலி…!!

அப்படி என்ன இந்த இடத்தில் ஸ்பெஷல்….?

இது ஒரு மூத்தோர் குடியிருப்பு!

‘நல்வாழ்வு’ சீனியர் சிட்டிசன் ஹோம்’

இருப்பவர்கள் அனைவரும் கனிந்த வாழைப்பழம் போல.. அறுபது…எழுபது வயதுக்கு மேற்பட்டவர்கள்..

இங்கு அவர்கள் சொல்வதுதான் சரி…

சிலர் தம்பதிகள்……!

துணையை இழந்து தனியாக வாழ்பவர்கள்…!

குழந்தை இல்லாதவர்கள்…!! தொலைதூரத்தில் குழந்தைகளை விட்டுப் பிரிந்து வாழ்பவர்கள்…!

பூரண ஆரோக்கியமாய் இருப்பவர்கள்…!

ஊன்றுகோலுடன் நடப்பவர்கள்!!

சக்கர நாற்காலியில் வலம் வருபவர்கள்… !!

துணைக்கு ஆள் வைத்துக் கொண்டிருப்பவர்கள்…!!

தனியாகவே வாழ்க்கையை வாழத் துணிந்தவர்கள்!

மரத்திலிருந்து எப்போது வேண்டுமானாலும் விழத் தயாராயிருக்கும் காய்ந்த சருகுகளாய் சிலர்……!

இவர்களுக்கு எல்லாம் பாதுகாப்பாய் , அவர்கள் கூப்பிட்ட குரலுக்கு சேவகம் செய்பவனாய்.. மொத்தத்தில் பாரதி சொன்ன..

“நண்பனாய்…சேவகனாய்…மந்திரியாய்…!

“ஏங்க.. மங்களம் மாமி நல்லாத்தானே இருக்காங்க…?

“அவுங்க நல்லாவே இருக்காங்க.. பாவம்..கரப்புதான் செத்துப் போச்சு.”

“என்ன உளற்றீங்க…??’

திவாகர் போனதிலிருந்து நடந்ததை ஒன்று விடாமல் சொன்னான்..

கொஞ்சம் சிரிப்பும் வந்தது…

“என்னங்க.. ஆரம்பமே இப்படி…?”

சரி.தூங்கு..நேரமாச்சு…!”

திவாகரும் ஜோதிகாவும் காதல் திருமணம் செய்தவர்கள்..ஜாதி, மதம், அந்தஸ்து, இவை எதுவுமே பொருந்தவில்லை….மனப்பொருத்தம்…. அதை மட்டுமே அஸ்திவாரமாய் வைத்து ஆரம்பித்த வாழ்க்கை…

இரண்டு பக்கத்தின் எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொண்டு தனியே வாழ்ந்து காட்ட வேண்டுமென்ற வைராக்கியத்துடன் இதோ….இந்த ‘நல்வாழ்வுக்கு’ தயாராகி வந்தவர்கள்…

இதற்கு முன்னால் பொறுப்பிலிருந்து விலகிய உலகநாதன் சொல்லி விட்டு போனது இன்னும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது…!

“திவாகர்..எல்லா வேலை மாதிரி இல்ல..இங்க இருப்பவுங்க எல்லாருமே ஒரு காலத்தில உயர்ந்த பதவியிலிருந்து ஓய்வு பெற்றவுங்க.. !!

ஆனாலும் எண்பது வயதில எப்படி இருப்பாங்கன்னு நீங்க அனுபவத்தில் தான் தெரிஞ்சுக்கணும்…!

பொறுமை..! பொறுமை..! பொறுமை..!

அது மட்டும் அவசியம் இருக்கணும்….. பெஸ்ட் ஆஃப் லக்…!”

திவாகருக்கு ட்யூட்டி டைம் ஒன்பதிலிருந்து ஆறுமணி வரை என்று பெயரேயொழிய இருபத்து நாலு மணி நேரமும் எமர்ஜென்சி தான்!

“மேனேஜர் சார்.. நான் ராமநாதன் பேசறேன்… நேத்து குடுத்தீங்களே வாழைப்பழம்..அது பழுக்கவே இல்ல.வெறும் காய்..சாப்பிட்டா வயத்த வலிக்கும் சார்…!”

“சாரி சார்..நேத்து பழமா கிடைக்கல.. நாளைக்கு பழுத்திடும்…!!”

“அப்போ இன்னைக்கு என்ன பண்றது?? அது சாப்பிட்டால்தான் சார் அடுத்த வேலையே நடக்கும்.. நீங்க ஒண்ணு பண்ணுங்க…

முருகன அனுப்பி அர்ஜென்ட்டா இரண்டு வாழைப்பழத்த வாங்கி, 13 B க்கு அனுப்பி வச்சிடுங்க…

அப்புறம் முள்ளங்கி சாம்பார்ல காய் வேகவே இல்ல…நல்லா வேக வைக்க சொல்லுங்க… வாசல் விளக்கு மூணு நாளா எரியல..
எலக்ட்ரீஷியன அனுப்பச் சொல்லி மூணு நாளாச்சு!!

அப்புறம்…ஏதோ சொல்லணும்னு நெனச்சேன் ….. மறந்து மறந்து போறது..வயசாச்சு பாருங்க…!”

ஒரு வழியாக அரைமணி நேரம் கழித்து ஃபோனை வைத்தார்….

திவாகருக்கு இது மட்டும்தான் வேலை என்று இவர்கள் நினைத்துக் கொண்டிருப்பது மாதிரி நீங்களும் நினைத்து விடாதீர்கள்…!

நல்வாழ்வு எனும் மூத்தோர் குடியிருப்பின் அனைத்து பொறுப்புகளும் அவன் தலையிலதான்…!!

கிச்சன் ஸ்டாஃப் , வீட்டு வேலைகள் செய்ய வரும் பெண்கள், தோட்டக்காரர்கள் , காவலாளிகள், ப்ளம்பர் , எலக்ட்ரீஷியன், நர்ஸ், அத்தனை பேரின் வேலைகளை கண்காணித்து தினமும் M.D.க்கு ரிப்போர்ட் அனுப்ப வேண்டும்…

வரவு செலவு கணக்கு பாலன்ஸ் ஷீட் தயாரிக்க வேண்டும்…
மெயின்டெனன்ஸ் அவசியம்….

இதற்கு நடுவில் தான் இத்தனை ‘எமர்ஜென்சி கால்கள்’

நல்லவேளை… இப்போதைக்கு குழந்தைகள் இல்லாததால் வீட்டுப் பிரச்சினை என்று ஏதும் இல்லை….

“சாப்பிட வாங்க… ரொம்ப நேரம் ஆச்சு…இங்க வந்தப்புறம் நேரம் காலம் இல்லாம போச்சு…

இருபத்தி நாலு மணி நேரமுமா பேசுவாங்க..? எனக்கென்னவோ இங்க பிடிக்கல…!

உங்களுக்கு பிடிச்ச சப்பாத்தியும் , காளான்.. காலிஃப்ளவர் குருமாவும்….பசி உயிர் போகுது…”

“ஜோ…சப்பாத்தின்னதும்தான் நியாபகம் வருது….

இன்னைக்கு சரஸ்வதி மேடம் ஒரு கலக்கு கலக்கிட்டாங்க…!”

திவாகர் டைனிங் ரூமில நடந்ததை ஒன்று விடாமல் சொன்னான்..

தட்டில் சப்பாத்தி வந்து விழுந்ததுதான் தெரியும்…!

“மணி.. இங்க வா…!! இது என்ன சப்பாத்தின்னு பேரா.. காஞ்சு போயி…வந்து நீயே பிச்சு பாரு….. என்னால இத சாப்பிட முடியாது.. எனக்கு இன்னைக்கு சாப்பாடே வேண்டாம்…!”

“சாரி மேடம்….இப்பவே போய் சூடா, சூப்பரா சப்பாத்தி போட்டு எடுத்துட்டு வரேன்…!!”

“வேண்டாம்…!! திவாகர கூப்பிடு…”

“மேடம்…சாரி… தயிர் சாதமாவது சாப்பிடுங்க…!!”

சரஸ்வதி மேடம் சொன்னா சொன்னதுதான்….

எழுந்து போய்விட்டார்…. ”

அப்புறம்….?

“மேடத்துக்கு ஒரு கிளாஸ் பால் அனுப்பி வச்சேன்…”

பத்து நிமிடத்தில் ஃபோன்…..

“தாங்யூ திவாகர்… வெரி கைண்ட் ஆஃப் யு…. குட் நைட்…”

இரண்டு நாள் கழித்து காலை ஆறு மணிக்கு வாசலில் காலிங் பெல்…

சரஸ்வதி மேடம் கையில் ஒரு கிண்ணத்துடன்…

“குட் மார்னிங் திவாகர்… இன்னைக்கு சாரோட தொன்னூறாவது பிறந்தநாள்…!

ஆமா..உங்க அம்மா..அப்பா…!?”

யாரும் எங்களுக்கு ஆதரவாக இல்லை என்று தெரிந்ததும் கண்ணில் நீர் கோத்தது…

“என்னை அம்மாவா நெனச்சுக்குங்க… உங்களுக்கு ஒரு குறையும் வராது…”

சரஸ்வதி மேடம் ஒரு பிரபல கல்லூரியில் பிரின்சிபாலாக இருந்து ஓய்வு பெற்றவர்…

கணவனை பத்து வருடங்களுக்கு முன் புற்றுநோய்க்கு பலி கொடுத்தவர்…தைரியத்தின் ஒட்டு மொத்த பிரதிநிதி….

“பாயசம் இனித்தது… மனமும்…!!

ஒரு அம்மா கிடைத்த மகிழ்ச்சியில்….

வயதானவர்கள் வசிக்கும் இடமாக இருந்தாலும் அவர்கள் நினைத்ததற்கு மாறாக , எல்லோருமே பொதுவாக உற்சாகமாகவே இருப்பது திவாகருக்கும் ஜோதிகாவுக்கும் ஆச்சரியமாய் இருந்தது…

அவ்வப்போது ஈகோ தலைகாட்டினாலும் சீக்கிரத்தில் எல்லாவற்றையும் மறந்துவிட்டு சிறு குழந்தைகள் போல மாறிவிடும் அதிசயத்தை கண்கூடாக காண முடிந்தது…!

“திவாகர்.. இந்தாங்க .. ஸ்வீட்…என்னோட பேரனுக்கு இன்னைக்கு ஆறாவது பிறந்தநாள்…”

“மேனேஜர் சார்.. நாளைக்கு என் பொண்ணும் மாப்பிள்ளையும் ஆஸ்திரேலியாலேர்ந்து வராங்க!

பத்து மணிக்கெல்லாம் ஏர்போர்ட்டுக்கு வண்டி போயிடணும்…. ஏழுமலை கிட்ட மறக்காம சொல்லிடுங்க…”

காலையிலிருந்து ஒரு பத்து முறையாவது திருப்பி திருப்பி ஃபோன் பண்ணி விடுவார் ராமமூர்த்தி…!

“திவாகர்… அடுத்தவாரம் எங்களோட ஐம்பதாவது திருமண நாள்… எல்லோருக்கும் இல போட்டு சாப்பாடு… இரண்டு ஸ்வீட்…பிரமாதமா இருக்கணும்..என்ன…?”

கங்கா மேடம் ஒரு வாரம் முன்பே திவாகருக்கு என்ன மெனு என்பது முதற்கொண்டு சொல்லிவிடுவார்…!

குழந்தைகளைப் பிரிந்து வெகுதூரத்தில் இருந்தாலும் எப்போதும் அவர்கள் நினைவாகவே வாழும் இவர்களின் அன்பு திவாகருக்கும் ஜோதிகாவுக்கும் ஆச்சரியமாய் இருக்கும்…

“ஏங்க.. நம்ப அம்மா அப்பாவும் இதுமாதிரி நம்மளப் பத்தி நெனச்சுப் பாப்பாங்களா…?”

“ஜோ… எனக்கும் அதேதான் தோணுது… அம்மாவைப் பாக்கணும் போல ஆசையா இருக்கு…”

பரந்தாமனின் குழந்தைகள் எங்கிருந்தாலும் வருடத்துக்கு ஒரு முறை அப்பா…அம்மாவை வந்து பார்க்க தவறவே மாட்டார்கள்…

கல்யாணியைப் பார்க்க வேண்டுமே…!!

போகும் போதும், வரும்போதும் , ‘ எம்பேத்தி…. என் பேரன்…’ என்று சொல்லி சொல்லி பெருமைப் படுவார்கள்…!!

எப்போதுமே இதேபோல் இருந்துவிட்டால் அப்புறம் திவாகருக்கு வேலையே இருக்காதே…!

கல்யாணராமன் எழுபதுகளில் இருப்பவர்.. நல்ல ஆரோக்கியமாக இருந்தாலும் அவ்வப்போது பிரச்சினை பண்ணிக் கொண்டே இருப்பது அவருக்கு வாடிக்கை!

இருபது வருடங்களுக்கு முன்பே அவருடைய மனைவி அவருடன் சண்டை போட்டுக் கொண்டு குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு போனவள் தான்!!

விவாகரத்து ஆனதாக கேள்வி…!

இதுவரை அவரை ஒரு ஈ , காக்கா எட்டிப்பார்த்தது கிடையாது…

ஒரு நாள் இருப்பதுபோல் மறுநாள் இருக்க மாட்டார்…!

அவரைக் கண்டு ஒரு சிலர் ஒதுங்கிப் போவதும் உண்டு… சிலர் பயப்படுவதும் உண்டு…!

ஒருமுறை அவருக்கு பக்கத்து வீட்டு மாதவனுடன் பெரிய தகராறு…!?

அடிதடி வரை போகாமல் தடுத்து விட்டான் திவாகர்…. !!

இரண்டு மாதங்கள் போயிருக்கும்!

திவாகர் பொறுப்பேற்றுக் கொண்டபின் முதலில் ஏற்பட்ட சோக சம்பவம்…!!

மாதவனுக்கு நெஞ்சுவலி…காலை மூன்று மணி அளவில் ஃபோன்…!!

உடனே ஓடினான் திவாகர்…

கூடவே நர்ஸையும் கூட்டிக் கொண்டான்…. நர்ஸ் உமா பயந்தபடி பல்ஸ் வீக்.மாஸிவ் கார்டியாக் அரெஸ்ட்…!!

மாதவனின் மனைவி கமலா ஒரு அப்பாவி… கணவன், குடும்பம், பூஜை , புனஸ்காரம் என்று வாழ்ந்தவள்.. வெளியுலகம் தெரியாமல் இத்தனை காலம் அவளை பொத்தி பொத்தி வைத்துவிட்டார் மாதவன்…!

குழந்தைகள் இல்லை…

ஆம்புலன்ஸ் வந்துவிட்டது…. ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணி கையில் காலணா கிடையாது…!!

கமலாம்மா கதறி அழுதது பரிதாபமாக இருந்தது…!!

“கமலாம்மா… நீங்க ஒண்ணும் கவலைப் படாதீங்க… எல்லாம் நான் பார்த்துக்கறேன்…. திவாகர் , ஏறுங்க வண்டில…!”

ஒரு வினாடி கூட யோசிக்காமல் சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பி விட்டார் கல்யாணராமன்…

அவரை அட்மிட் பண்ணினதிலிருந்து, ஒரு வாரம் ICU …C.T. ஸ்கேன் , ஆஞ்சியோ , மருந்து, மாத்திரை என்று அத்தனை பொறுப்பையும் ஏற்றுக் கொண்டது மட்டுமில்லாமல் , அவர் டிஸ்சார்ஜ் ஆகும்வரை கூடவே இருப்பார் என்று யாராவது நினைத்துப் பார்த்திருப்பார்களா?

பணத்தை தண்ணியாய் செலவு செய்தார்…

மாதவன் , கமலா தம்பதிகளுக்கு இப்போது கல்யாணராமன் தெய்வமாகக் தோன்றினார்!

“சார்.. உண்மையிலேயே நீங்க பண்ணினமாதிரி யாரும் செஞ்சிருக்க மாட்டாங்க..நாங்கூட உங்கள தப்பா புரிஞ்சுகிட்டேன்…!”

“அது உங்க தப்பில்லை திவாகர்.. என்னோட முன் கோபத்தால நான் அருமையான என் குடும்பத்தையே இழந்தவன்…!

வாழ்க்கையில எல்லாமே தாமதாமாத்தான் புரியுது…இப்போ நான் எவ்வளவோ மாறிட்டு வர முயற்சி செய்யுறேன்…!!

‘பெட்டர் லேட் தென் நெவர்…’

இப்போ என் கையில பணம் ஒண்ணுதான் இருக்கு…அதுவாவது மற்றவங்களுக்குப் பயன் படட்டுமே…!

எல்லோரும் ‘ என் பேரன்.. என் பேத்தி..ன்னு ‘ சொல்லும்போது எனக்கு எல்லாம் இருந்தும் சொல்லி பெருமைப்பட யார் இருக்கா திவாகர்….??”

குலுங்கி குலுங்கி அழும் குழந்தையை சமாதானப் படுத்தும் ஒரு மகனானான் திவாகர்…!!

திவாகர்.. ஜோதிகாவுக்கு ஒரு அப்பாவும் கிடைத்து விட்டார்…

திவாகர் அன்று காலை யார் முகத்தில் முழித்தானோ…? ஒரு சச்சரவும் இல்லாமல் அமைதியாக கழிந்தது..

வீட்டுக்கு வரும்போது மணி பத்தை நெருங்கியது…

பாவம்..ஜோ.. சாப்பிடாமல் தனக்காக காத்திருப்பாள்…

விசிலடித்தபடி உள்ளே நுழைந்தவன் ஜோவைத் தேடினான்!

படுக்கையறையிலிருந்து விசும்பல் சத்தம்…

வெளியே பிரச்சினையே இல்லையென்று மகிழ்ச்சியாக வந்தவனுக்கு வீட்டுக்குள் பிரச்சனையா…?

“ஜோ..என்னம்மா..நீ இப்படி அழுது நான் பாத்ததேயில்லயே… கண்ணெல்லாம் செவந்து போய்…சொல்லு கண்ணு…

நாம் இரண்டு பேர் தானே இருக்கோம்.. வேறு யாராச்சும்…ஏதாவது ….?”

“ஆமாங்க..இங்க நாம மட்டும் இல்லீங்க…மூணாவதா…!!”

“நம்ப வீட்டுக்குள்ள வேற யாரு வரமுடியும்…?? சொல்லு..அவுங்கள என்ன பண்றேன் பாரு…!!”

“ஒண்ணும் பண்ண முடியாது…”

அழுகை இப்போது சிரிப்பாய் மாறியது…!

“ஜோ… என்னாச்சு உனக்கு..? எனக்கு பயம்மா இருக்கு.”

“நம்ம வீட்டுக்கு ஒரு பாப்பா…!!”

அவளை முடிக்க விடவில்லை.. அப்படியே தூக்கி , கட்டிப்பிடித்து முத்தமிட்டான்!

“ஆமா.. இதுக்குக்குப் போய் யாராவது அழுவாங்களா…??”

“முதல் முதலா இந்த மாதிரி நல்ல சேதிய யார்கிட்ட சொல்லுவாங்க…??

“ஓ நீ அத சொல்றியா..?? கவலப்படாத..நமக்குதான் இங்கேயே ஒரு அம்மா இருக்காங்களே…!! அவுங்க கிட்ட முதல்ல சொல்லி ஆசீர்வாதம் வாங்கலாம்…!!”

அடுத்த ஒருவாரத்தில் தடபுடல் பண்ணி விட்டார் சரஸ்வதி…

தொடர்ந்து வளைகாப்பு , பேபி ஷவர், பிரசவம் எல்லாமே ஒரு குறையுமில்லாமல் அசத்தி விட்டார்கள்…!

குழந்தையுடன் திரும்பி வந்த திவாகர்…ஜோதிகா தம்பதியருக்கு வாயிலில் தோரணம், பன்னீர், சந்தனம், ஆர்த்தி தட்டுடன் நந்தினியும், எழிலரசியும்…!

சுற்றியும் அத்தனை பேரும் நின்று கைதட்ட…திக்குமுக்காடிப் போனார்கள்.!!

குழந்தை வீல் வீலென்று கத்தியது..

“ஏண்டா கண்ணா அழற.. ..இங்க பாரு.. எத்தன தாத்தா.. பாட்டி…!

“ஆமா..எல்லா குழந்தைக்கும் மிஞ்சிப் போனா இரண்டு தாத்தா.. இரண்டு பாட்டி.. இருப்பாங்க!! சுத்தி நூறு தாத்தா ..பாட்டியப் பாத்தா குழந்த பயப்படாம என்ன பண்ணும்..??

“நான் ஒண்ணும் பாட்டியில்ல..அத்தையாக்கும்…!”

நந்தினிக்கு தான்தான் இருப்பதிலேயே சின்னவள் என்று எப்போதுமே பெருமை…!

“அப்போ..எனக்கு யாரும் கிடையாதா.?”

ஜோவுக்கு முகம் சுருங்கி விட்டது..

“இந்த மாமா ராஜேந்திரன் இருக்கும்போது என்னம்மா தங்கச்சி கவல..? இந்தா.. மாமா சீர்.”

ஐநூறு ரூபாயை எடுத்து குழந்தை கையில் வைத்தார் ராஜேந்திரன்…!

அறுபது வயது பிரம்மச்சாரி…!

குழந்தை சிரித்தது…!

திவாகர்.. ஜோதிகா… கண்களில் ஆனந்தக் கண்ணீர்…!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *