எல்லாவற்றிலும் பங்கு!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 12,693 
 

“”யாரு, யாருக்குடா அண்ணன்… போடா வெளில… இனிமேல் இதுமாதிரி அண்ணன், தம்பின்னு உறவு சொல்லிக்கிட்டு இங்கே வந்தே, நடக்கறதே வேற. வெளில போ…” என்று, கோபமான குரலில் கத்தினான் அசோகன்.
இவ்வளவு மோசமான எதிர்ப்பை எதிர்பார்த்திராத கணேஷ், வெல வெலத்துப் போனான்.
“போனதும் சிறிது எதிர்ப்பு இருக்கும். பிறகு சரியாகிப் போய் விடும்…’ என்று எண்ணித்தான், புறப்பட்டு வந்தான் கணேஷ்.
ஆனால், வெட்டி முறிக்கிற ஆவேசப் பேச்சாய் அல்லவா இருக்கிறது.
நிறைய யோசனை செய்து, வேண்டியவர்களிடம் ஆலோசனை நடத்திய பிறகே, கிளம்பி வந்தான் கணேஷ்.
எல்லாவற்றிலும் பங்கு!அசோகன், பொதுவாக நல்லவன் தான். ஆனால், எல்லாரிடமும் எல்லா விஷயங்களிலும் அப்படியே தானிருப்பான் என்று எண்ணியது, பொய்த்துப் போய் விட்டது. கணேஷிடம் பொங்கி எழுந்து விட்டானே!
“அண்ணா…’ என்று கணேஷ் அழைத்த மறுகணமே, புயல் வடிவம் கொண்டு விட்டானே!
“”ஏண்டா இன்னும் நின்னுக்கிட்டிருக்கே… அதான், வெளில போடான்னு அப்பவே சொல்லிட்டேன்ல்ல… போ வெளியே,” என்று மறுபடியும் கத்தினான் அசோகன்.
பரிதாபப் பார்வையோடு நின்றான் கணேஷ். மறுபடியும் அசோகனை நோக்கி…
“”அண்ணா… எங்கேண்ணா போக முடியும். அப்பாவும் போயாச்சு. இப்ப, அம்மாவும் போயாச்சு. தங்கச்சியும், தம்பியும் சின்னப் பிள்ளைங்க. அதுகளை வச்சுக்கிட்டு, எப்படிண்ணா என்னாலே வாழ முடியும். ப்ளீஸ் அண்ணா…” என்று கெஞ்சலானான்.
“”நாயே… மறுபடியும், “அண்ணா அண்ணா’ன்னா உறவு கொண்டாடுற. செருப்புப் பிஞ்சிடும். வாழ வழி இல்லேன்னா ஆற்றிலோ, குளத்திலோ போய் விழுங்க… அனாதை மடங்கள்ல்ல போய்ச் சேருங்க… இங்கே வந்து என் உயிரை ஏண்டா வாங்குறே?” என்று எரிந்து விழுந்தான்.
“”அண்ணா… நீங்க இருக்கிற போது, நாங்க ஏண்ணா அப்படி எல்லாம் செய்யணும். இதுவரைல, அம்மா இருந்து பார்த்துக்கிட்டாங்க… உங்க உதவி தேவைப்படலே. திடீர்ன்னு போன மாசம் உடம்பு முடியாம இறந்து போய்ட்டாங்க… அப்ப திசை தெரியாமத் திணறினோம். பக்கத்து வீட்டுப் பெரியவர்தான், உங்களைப் பத்திச் சொல்லி, அட்ரஸ் தந்து, அனுப்பி வச்சாங்க. ப்ளீஸ் அண்ணா… யாருமே இன்னும் படிப்பைக் கூட முடிக்கலே.”
“”ஓ… படிச்சு மேதைகள் ஆகப் போறீங்களோ… போங்கடா போக்கத்தவனுகளா… நீங்க படிச்சா என்ன, பாழாப் போனா எனக்கென்ன? வெளில போடா முதல்ல,” என்ற அசோகனின் கர்ஜனைக்கு, நடுங்கி போய் விட்டான் கணேஷ். சப்தம் கேட்டு வீட்டினுள் வந்தார் பக்கத்து வீட்டுத் தாத்தா.
“”என்னடா அசோகா சப்தம்… யார் கிட்ட பேசிக்கிட்டிருக்க?” என்று கேட்டபடியே, கணேஷை பார்த்தார்.
வாடிப் போன முகத்துடன் இருந்த கணேஷை, அவருக்குத் தெரியவில்லை. எனவே, அசோகனை பார்த்து, “”இந்தப் பையன் யாருடா?” என்று கேட்டார்.
எதுவும் கூறாமல் இருந்தான் அசோகன்.
கணேஷை துருவித் துருவிப் பார்த்தார் தாத்தா.
“இந்தப் பையன் யார்?’ என்ற வினாவை உள் வைத்து யோசனை பண்ணிப் பார்த்தார்.
லேசாக, எதுவோ ஞாபகம் வந்தது போல் இருந்தது. இதுவரையிலும் இவனைப் பார்த்திராத போதும் கூட, மூளைக்குள் பொறி தட்டினாற் போல் இருந்தது.
பார்ப்பதற்கு அசோகனைப் போல், கணேஷ் காணப்பட்டதால், தாத்தா யூகம் செய்து விட்டார். நிச்சயமாய் இவன், திருமூர்த்திக்குப் பிறந்தவன் தான் என்று முடிவாக எண்ணினார். மீண்டும் இருவரையும் ஒருமுறை ஒப்பிட்டுப் பார்த்து, தனக்குள் தெளிவாகிக் கொண்டார்.
“”ஏம்ப்பா அசோகா… இப்ப என்ன பிரச்னை. இந்தச் சின்னப் பையன்ட்டப் போய், ஏம்பா கோபமாப் பேசுறே… அப்படி அவன் என்ன கேட்டுட்டான்?” மெதுவாகக் கேட்டார் தாத்தா.
“”இப்ப அவனுக்கு உதவி வேணுமாம். வந்து கேட்டுட்டு நிக்கிறான்,” என்றவனின் குரலில் அசாத்தியமான எரிச்சல்.
“”அப்படியா… நீ எல்லாருக்கும் உதவி செய்யக்கூடிய ஆள்தானே… என்ன உதவி வேணுமாம். செய்து விட்டுப் போயேன்,” என்றார் அலட்சியமான குரலில்.
இதற்கு உடனடியாக எந்தவிதமான பதிலையும் கூறாத அசோகன், கணேஷை முறைத்துப் பார்த்தான்.
அவனோ, “ஒரு பெரியவர் வந்திருக்கிறாரே, அவரிடம் எல்லாவற்றையும் கூறினால், ஏதாவது நியாயம் பேச மாட்டாரா…’ என்று எண்ணினான். இந்த எண்ணத்துடன், பக்கத்து வீட்டுத் தாத்தாவை மெதுவாக ஏறிட்டுப் பார்த்தான்.
அவரும், அவனை நோக்கி, ஒரு முறுவலை விசிறியடித்தார்.
“”தாத்தா… அண்ணாகிட்ட சொல்லுங்க. எங்க மூணு பேருக்கும் யாருமே உறவுன்னு இல்ல. யாரையும் தெரியவும் தெரியாது. இப்ப, அண்ணா ஆதரவு தந்தா மட்டும்தான், நாங்க உயிர் வாழ முடியும்… இல்லேன்னா, அண்ணா சொன்னதைப் போல, நாங்க மூணு பேரும், ஆற்றிலேயோ, குளத்திலேயோதான் போய் விழுந்து, உயிரை மாய்ச்சிக்க வேணும்… இதான் கடைசி வழி,” என்று அழுகுரலில், வேதனையோடு கூறினான்.
அசோகனோ, இறுக்கமான முகபாவத்தோடு நின்றான்.
கணேஷை கனிவோடு பார்த்தார் தாத்தா. பின், “”உன்னோட பெயர் என்னப்பா?” என்று அன்போடு வினவினார்.
அசோகனுக்கு எரிச்சலாக இருந்தது.
பக்கத்து வீட்டுத் தாத்தாவின் மீது, மிகுந்த அன்போடும், மரியாதையோடும் தான் இருப்பான் அசோகன். ஆனால், இன்றையச் சூழ்நிலை, அவன் இயல்பை அமுக்கி விட்டது. மாறுபாடாக நடக்கத் தூண்டியும் விட்டது.
“”என் பேரு கணேஷ்… எங்கப்பா எனக்கு வச்ச பேரு,” என்றான்.
“”சரி… சரி… எல்லா விளக்கமும் போதும். முதல்ல போய் சேரு,” என்று கணேஷை அதட்டினான் அசோகன்.
“”பொறு அசோகா… கொஞ்சம் பொறுமையா இரு. அவன்கிட்ட நான் கேட்கிறேன். ஏம்பா கணேஷ், உனக்கு எந்த ஊரு… நீ எங்கேர்ந்து இங்கே வந்திருக்கே?” என்று கேட்டார்.
“”மதுரை தாத்தா… மேலே மாசி வீதில, ஒரு சந்துல குடி இருக்கோம். எங்கம்மா போனதும் வீட்டுக்காரர், வீட்டைக் கேட்கிறார். எங்கே போறதுன்னும் தெரியலே. எப்படிப் பொழைக்கிறதுன்னும் தெரியலே,” என்று கூறிக் கண்ணீர் விட்டான்.
“”தப்பான வழில பொறந்துட்டா இதான் கதி… உன்னைப் பெத்தவ, இதை யோசனை செய்திருந்தாள்ன்னா, உனக்கு இந்த கதி வந்திருக்காது,” என்றான், “நறுக்’கென்று.
“விலுக்’ கென்று நிமிர்ந்தான் கணேஷ். விழிகளில் அனல் இருந்தது.
“”தப்பை எங்க அம்மா மட்டும் பண்ணலே,” என்றான், “வெடுக்’ கென்று.
இதுவரையிலும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்த கணேஷாக இப்போது தென்படவில்லை அவன். சீண்டப் பெற்ற கருநாகம் போல், சீற்றத்துடன் நின்றிருந்தான்.
அசோகனோ, அதை எதிர்கொள்ளும் ஆங்காரத்துடன் அவனைப் பார்த்தான்.
இந்த எதிரெதிர் துருவங்கள், கொஞ்சம் மனது வைத்து அருகில் போனால் ஒட்டி உறவாடலாம். ஆனால், ஒத்த துருவங்கள் போன்று விலகி அல்லவா நிற்கின்றன! இதுவரையிலும், பம்மி பம்மி பேசிய கணேஷ், இப்போது அவனைத் தப்பான தாய்க்குப் பிறந்தவன் என்று கூறியதும், திருப்பி அல்லவா அடிக்கிறான்.
தப்பை அவனது தாய் மட்டும் செய்யவில்லை என்று சொன்னதன் மூலம், திருமூர்த்தியும் தப்புச் செய்தவர்தான் என்றல்லவா குற்றம் சுமத்துகிறான்.
“”தப்புச் செஞ்சது, எங்க அப்பாவும் தானே… இதுல எங்க அம்மாவை மட்டும் தப்புச் சொன்னா எப்படி?” மறுபடியும் நிமிர்ந்து நின்று கேட்டான்.
அசோகனுக்குப் புருபுருவென்று, கோபம் கோபமாய் வந்தது. அதுவும், அவன் இப்போது இப்படிச் சொல்லி மடக்கியதும், கோபம் எகிறியது.
“”நாயே… இப்ப நீ வெளில போறியா இல்லியா. நாக்கை இழுத்துவச்சு அறுத்துருவேன்… ஆமா,” என்று உறுமினான்.
“”அப்போ… முதல்ல பேசின நாக்கை?” என்று, இடக்காகக் கேட்டான்.
“”உன்னை…” என்று கத்திக் கொண்டே அடிக்கப் பாய்ந்தான் அசோகன்.
“”நில் அசோகா…” என்று கத்தினார் தாத்தா. மந்திரம் போட்டது போல் நின்றான்.
“”இதோ பார் அசோகா… இது, சரிக்குச் சரியா நின்னு பேசக்கூடிய விஷயமில்லே. நிதானமா தனியாத்தான் நின்னு பேசணும். இப்படி எதிர் வார்த்தையாடிக்கிட்டே இருந்தா, சேற்றை அள்ளிப் பூசிக்கிறது போல தான்.
“”தம்பி கணேஷ்… நீ கொஞ்சம் அடுத்தாப்ல இருக்கிற, என்னோட வீட்டுத் திண்ணையிலே போய் இருப்பா… நான் அசோகன் கிட்டக் கொஞ்சம் பேசிட்டு, உன்னைக் கூப்பிடுறேன்,” என்றார் தாத்தா.
“”சரி தாத்தா…” என்று கணேஷ் எழுந்து வெளியே போனான்.
“”ஆமாம்… இப்ப அவனை வெளில அனுப்பிட்டு, என்கிட்டே மட்டும் எதை ரகசியமாப் பேசப் போறீங்க… இதோ பாருங்க தாத்தா, நான் அவனை, “கட்’, பண்ணி அனுப்பத்தான் போறேன். அதனாலே என் கிட்டே வேற எதையும் பேச முயற்சிக்காதீங்க,” என்றான் அசோகன் கறாரான குரலில்.
லேசாய் சிரித்தார் தாத்தா.
பிறகு, “”அசோகா… பிரச்னை வராதவரை ஒண்ணுமில்லே. பிரச்னைன்னு வந்துட்டா, தீர்வு காணாமத் தீராது. இப்ப அந்தப் பையன் கணேஷ், பெரிய பிரச்னையைக் கொண்டு வந்திருக்கான். ஒங்கப்பா இருந்திருந் தாலோ, அவனோட அம்மா இருந்திருந்தாலோ, இப்ப இந்தப் பிரச்னைக்கு, நீ தீர்வு சொல்ல வேண்டிய அவசியம் இருந்திருக்காது. அவங்க இல்லாததாலே, நீ தான் தீர்வு கண்டாகணும். அந்தப் பையனுக்கு பதில் சொல்லணும்.”
“”எவனோ ஒருத்தனுக்கெல்லாம், நான் பதில் சொல்லணும்ன்னு இல்லே,” என்றான், “வெடுக்’ கென்று.
தாத்தா லேசாகச் சிரித்தாற் போன்று இருந்தது. பின் அசோகனை இதமாக பார்த்து, “”அசோகா… கோபப்படாதப்பா. அவன் ஒண்ணும் எவனோ ஒருத்தன் இல்லே. ஒங்கப்பாவுக்கு அவனும் கூட வாரிசுதான்,” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே,””வாரிசா… அதை நிரூபிக்க முடியுமா?” என்று வெடிக் குரலில் கேட்டான் அசோகன்.
“”இந்த விஞ்ஞான யுகத்துல போய் இப்படிக் கேட்கிறியேப்பா. நிரூபிக்க எல்லாம் அவசியம் இல்லே. உண்மை தெரியாட்டி தானே அதெல்லாம். இப்ப நான் உன்கிட்டே எதிர் பார்க்கிறது, மனிதாபிமானத்தை மட்டும் தாம்பா.”
“”எப்படியாச்சும் என்னை அவமானப்படுத்தலாம்ன்னு நினைச்சிட்டீங்க, இல்லியா தாத்தா?”
“”என்ன அசோகா… இப்படிச் சொல்லிட்டே… ஒரு பிரச்னை, நாலு பேர் தெரிஞ்சு வச்சிருக்கிற பிரச்னை. இது பெரிய விவகாரமாய் ஆய்டக் கூடாதுன்னுதான் அடக்கி வாசிக்கச் சொல்றேன். அந்தப் பையன் சும்மா போறாப்ல இல்லே… பிரச்னையை உண்டாக்கிட்டான்னா ஊர் கூடிரும். அப்ப, உன் சார்புலயே பேசுவாங்கன்னு சொல்ல முடியாது. அதனாலே, நீயே சுமூகமான முடிவு ஒண்ணை எடுக்கிறதுதான் நல்லது.”
“”வரட்டும் பார்க்கிறேன்…”
“”எதைப் பார்க்கப் போறே… கூட்டம் கூடி நின்னு, ஒங்கப்பாவை அவமானப்பட வைக்கிறதையா… சொல்றதக் கேளுப்பா. ஒங்கப்பா செய்த தப்பு உனக்குத் தெரியும். அதுக்குச் சாட்சி சொல்லிக்கிட்டு இந்தப் பையன் வந்து நிற்கிறான். ஏதோ, அவங்களுக்கு நீ உதவி செய்து, பரிகாரம் செஞ்ச மாதிரி இருக்கும்.”
“”நானா தப்புச் செஞ்சேன்; பரிகாரம் பண்றதுக்கு?”
“”உங்கப்பாதான் செஞ்சார். அப்பனோட சேமிப்பெல்லாம் பிள்ளைக்குத்தானே… புண்ணியச் சேமிப்பை சந்தோஷமாய் ஏத்துக்கிற மாதிரி, பாவச் சேமிப்பையும், ஒரு பிள்ளை ஏத்துக்கத்தான் வேணும்.”
“”தாத்தா…”
“”ஆமாம்டா அசோகா… அப்பாவோட சொத்தை பிள்ளைங்க பங்கு வச்சிக்கிற மாதிரி, அவர் செஞ்ச பாவத்தையும், பங்கு போட்டு ஏத்துக்கத்தான் வேணும். உங்கப்பாவோட ரெட்டை வாழ்க்கை குறிச்சு ஒனக்கு நல்லாவே தெரியும்…
“”எதிர்பாராத வேளைல அவர் போய்ட்டதாலே, இந்தப் பையன் குடும்பத்துக்கு எதுவும் வைக்காம, அம்போன்னு விட்டுட்டுப் போய்ட்டார். அதனாலேயே, இவங்களுக்கு ஒண்ணுமில்லேன்னு சொல்லக் கூடாது. அது பெரிய பாவம். உங்கப்பாவோட ஆத்ம சாந்திக்காக, நீ எவ்வளவோ கர்மாக்கள் பண்றே. ஆனா, ஒங்கப்பாவோட ஆத்மா நிஜமாவே சாந்தி அடையணும்ன்னா, அவர் செய்யாம விட்டுட்டுப் போனதையெல்லாம் இவனோட குடும்பத்துக்கு நீ செய்தே ஆகணும்டா.”
“”இப்படியெல்லாம் செஞ்சு, இறந்து போன என்னோட அப்பாவை கேவலமாப் பேசும்படி நடக்கச் சொல்றீங்களா?”
“”தப்பு அசோகா… இப்ப, நான் சொல்றது போல செஞ்சின்னா, உங்கப்பாவையும், உன்னையும் சேர்த்தே புகழ்ந்து பேசுவாங்க. என்னவோ பெரியவர் திடீர்ன்னு கண்ணை மூடிட்டாலும், அவரோட மகன், “அவர் சார்புல’ பரிகாரம் பண்ணுறானே… இப்படி ஒரு மகனைப் பெற்றவர் புண்ணியவான் இல்லியான்னு, உங்கப்பாவை உயர்வாப் பேசுவாங்க… இல்லேன்னு வச்சுக்க, “தப்புப் பண்ணத் தெரிஞ்ச பாவிக்கு, பாதிக்கப்பட்டவங்க வாழ வழி பண்ணணும்ன்னு தெரியாதா… இப்படி நடுத் தெருவுல விட்டுட்டுப் போய்ட்டானே படுபாவி…’ன்னு திட்டித் தீர்த்துருவாங்க.”
இதமாய் எடுத்துச் சொன்னார் தாத்தா.
அசோகனிடம் கோபம் குறைந்து, சிந்தித்துப் பார்க்கிற பக்குவம் வந்து விட்டிருந்தது.
“”தம்பியைக் கூப்பிடுங்க தாத்தா… இல்ல இல்ல… நானே கூப்பிடுறேன்,” என்றவன் வெளியே சென்று, “”டேய் தம்பி கணேஷ்… வாடா,” என்று கூப்பிட்டான்.
நம்புவதற்குத் திணறினாலும், தாய்ப்பசுவை கண்டு விட்ட கன்று போல், ஓடோடி வந்து, அசோகனை அணைத்துக் கொண்டான் கணேஷ். மெய்சிலிர்த்து நின்றார் தாத்தா.

– உமா கல்யாணி (ஜூலை 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *