என் குழந்தை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 9,799 
 

பயணம் மிகவும் நீண்டு கொண்டிருந்தது. வாழ்க்கைப் பயணம் போலும் குழப்பம் மிகுந்ததாய் இல்லாவிட்டாலும் முதலும் முடிவும் அறிந்து வைக்கப்பட்டிருக்கக் கூடியதாயிருந்தாலும் ஒவ்வொரு பயணத்தின் இடையிலும் இவ்வாறு தான் உணரப் படுகின்றது. முடிந்து போகவேண்டுமென்ற ஆசையும் முடியப் போகின்றதே என்ற துக்கமும் முடிய வேண்டாமோவென்ற அங்கலாய்ப்பும் மிக்கதாகத் தான் இருக்கின்றது. பயணித்துக் கொண்டிருக்கின்ற ஒவ்வொருவரும் பயணத்தைப் பற்றி நினைப்பது இயல்புதான். பயணத்தைப் பற்றி மட்டுந்தானா ? ஓய்ந்திருக்கும் வேளையும் ஓய்ந்திருப்பதனால் கிடைக்கும் நேரமும் எத்தனையோ விடயங்களை நினைத்துப் பார்க்கத் தூண்டுகின்றது. நடந்தது நடக்கப் போவது அல்லது நடக்க வேண்டியது அல்லது நடக்கக் கூடியது என்று மனது எதையெல்லாம் எண்ணிக் கொள்கின்றதோ அதையெல்லாம் நினைத்துப் பார்க்கின்றது. சமயத்தில் வாழ்க்கையின் சரி பிழைகளைச் சலித்துப் பார்த்து சோர்வும் கொள்கின்றது. எத்தனைதான் முயன்றாலும் வாழ்க்கைக்கு தன் போக்கில் போவதில் ஆனந்தம் மிகுதியாயிருக்கின்றது. இல்லாவிட்டால் எண்ணங்களையும் ஆசைகளையும் மீறிய ஒரு திசையில் வாழ்க்கை நகர்ந்து போவதை பார்த்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறதே. வாழ்க்கை அப்படித்தான் நிகழ்ந்திருக்கின்றது. சொந்த வாழ்க்கையென்றாலும் ஒரு பார்வையாளனாக சும்மா நின்று பார்த்துக் கொள்ளும் படிக்கே வாழ்க்கை அமைந்து விடுகின்றது. கவலைகளை மட்டும் சுமந்து கொண்டு வாழத் தெரியாமல் அவதிப் படுவதை என்னவென்று சொல்லமுடியும்.

எனக்கு குழந்தை பிறந்து இரண்டு நாளாகின்றது. இன்னும் குழந்தையைப் பார்க்க முடியாத படிக்கு வாழ்க்கை என்னைத் தள்ளி வைத்திருக்கின்றது. திட்டமிட்டதற்கும் முன்னால் குழந்தை எதனால் பிறந்தது. இதற்கெல்லாம் யாரும் காரணம் சொல்லமுடியுமா? வாழ்க்கை பற்றி அறிந்து கொண்டதற்கும் அப்பால் வாழ்க்கை ஒரு மர்மத்துடன் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அறிந்து கொள்ளமுடியாத மர்மங்களின் கூட்டாகத் தான் அது இருந்து கொண்டிருக்கின்றது. எளிய அளவு கோல்களுடன் கூட இணைந்து வர முடியாதபடிக்கு அதன் ஓட்டம் நிலையில்லாது மாறிக்கொண்டிருக்கின்றது.

வாழ்க்கையை எளிமைப்படுத்தக் கூடிய எனது முயற்சிகளும் சதா வாழ்க்கையைக் குழப்பி வாழ்க்கையை மேலும் சிக்கலாக்கிக் கொள்ளும் எனது மனைவியையும் சந்திக்க வைத்ததே அதன் நிலையில்லாமைக்குச் சான்றாக இருக்கின்றதே. எதையும் செய் நேர்த்தியுடன் செய்ய வேண்டுமென்ற எனது செயல்களுக்கும் மறதிக்கும் அரைகுறை அவசர வேலைக்கும் பேர்போன அவள் செயல்களுக்கும் சம்பந்தப்படுத்திப் பார்க்கின்றதே. நேர விரயமென்பது மிகவும் கோபத்துக்குரியதாக சுட்டெரிக்க வைக்கும் என்னையும் எதையும் வைத்துவிட்டு வைத்த இடத்தை மறந்து விட்டு வீடு முழுதும் தேடும் அவளையும் வாழ்க்கையில் இணைத்து வைத்திருக்கின்றதே.

ஒழுங்கும் செய்நேர்த்தியும் பழக்கத்தினால் வருவதென்பது எனது அசைக்கமுடியா நம்பிக்கையாகும். அப்படி எதுவும் கிடையாதென்பது அவளின் கொள்கை. ஆயிரம் முறை மீட்டி மீட்டிச் சொன்னாலும் அதை கடைப் பிடிக்க முடியாதவொரு மெத்தனம் அவள் செயல்களில் காணப்படும். சீறிச் சினக்கையில் மறதியைக் காரணம் காட்டி தப்பிக் கொள்ள முயற்சி செய்கையில் கோபம் பூதாகரமாக வியாபித்து எழும். எனக்குண்டான உயர் இரத்த அழுத்தத்திற்கும் நெஞ்செரிவிற்கும் இவளும் இவள் செய்கைகளுமே காரணம் என்று நம்பிக்கை தோன்றி வெகுகாலமாய் விட்டிருந்தது. எப்படிச் சொல்லிக்கொடுத்தாலும் அப்படியே திருப்பிச் செய்ய முடியா தத்தை குணம் இவள் மேல் இருக்கும் கோபத்தை இவள் தகப்பன் மேல் திருப்பி விட்டிருந்தது. தாயில்லாப் பிள்ளையென்று செல்லம் கொடுத்து இவளைச் சீரழித்திருந்தாரென்பது எனது குற்றச் சாட்டு. தாய் இருந்திருந்தால் ஒரு வேளை இவள் வேறு பட்டவளாக என்னைப் போல குணங்கொண்டவளாக வளர்ந்திருக்க கூடுமோ என்றும் அடிக்கடி தோன்றிக் கொண்டிருக்கும். தாய்மை இன்னும் கூடுதலாக அவளை நெருங்கிப் புடம் போட்டிருக்கக் கூடும்.

ஒரு நெருக்கடி மிகுந்த காலமாக வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. நம்பி வந்தவளைக் கை விடும் துணிச்சலும் இன்றி வாழ்க்கையிலும் இணைந்து போக முடியா சங்கடத்துடனும் இதோ ஒரு வருடத்தின் முடிவில் எனக்கொரு குழந்தை பிறந்திருக்கின்றது. யாரிலும் நம்பிக்கையில்லாமல் நானே எல்லாக் காரியங்களையும் கவனித்திருந்தேன். பிரசவ தேதிக்கிடையில் வந்த அவசர அலுவலக வேலை காரணமாக பட்டினத்திற்குப் போயிருந்த போது குழந்தை பிறந்து விட்டிருந்தது. எதிர்பார்த்திருந்த தேதிக்கும் முன்னதாகவே இது நிகழ்ந்து விட்டிருந்தது.

என் இரத்தத்தைப் பார்க்கும் துடிப்புடன் வீட்டினுள் நுழைந்தேன். மனைவியின் தந்தை தான் கதவினைத் திறந்து விட்டிருந்தார். அவரின் பணிவும் என்னைக் கண்ட போது ஏற்பட்டகுதூகலமும் என்னுள் மகிழ்வினை ஏற்படுத்துவதற்குப் பதிலாக எரிச்சலையே ஏற்படுத்தியது. நானில்லாத வேளைகளில் என்ன குழறுபடிகளை ஏற்படுத்தி வைத்திருப்பார்களோ என்ற கவலையே நெஞ்சை நெருடியது. புத்தியில்லாத பெண்ணும் விவேகமில்லாத தந்தையும் என்ற எனது கணிப்பு அவ்வளவு உறுதியுடன் இருந்தது. குழந்தையும் தாயும் நலமுடன் இருந்தது சிறிது ஆறுதல்ப் படுத்தியது. மனதில் ஆசுவாசத்தை ஏற்படுத்தியது. அவ்வளவு அவசரமாக வீட்டிற்கு வர வேண்டிய தேவை என்னவென்று யோசிக்க வைத்தது. எல்லாம் மகிழ்வுடன் நடந்தேறியதில் மகிழ்ச்சி என்னையும் தொற்றிக் கொண்டது. குழந்தையை அள்ளி அணைத்துக் கொண்டேன். பெண் குழந்தை. மகாலட்சுமி. வீட்டிற்கு முதல் குழந்தை பெண் குழந்தையாயிருப்பது விசேஷம் என்பார்கள். என் விருப்பமும் அவ்வாறே இருந்தது. வாழ்க்கை அவ்வாறே தந்து கண்ணாமூச்சி ஆட்டத்தை இங்கே தவிர்த்திருந்தது. சலனம் கேட்டு என் மனைவி எழுந்து கொண்டாள். அவள் புன்னகைக்க முயற்சி செய்தாள். முடியாமல் மிகவும் களைத்திருந்தாள். ஜன்னலால் அவள் தந்தை தவிப்புடன் எங்களையே பார்ப்பதை உணரமுடிந்தது. குழந்தை நெஞ்சில் எட்டி உதைத்தது. அந்தத் தவிப்பு என்னிடமும் தொற்றிக் கொள்வதை உணர்ந்தேன். மனைவியின் நெற்றியை வாஞ்சையுடன் தடவி விட்டேன். அவள் என் கரங்களைப் பற்றிக் கொண்டாள்.

– மார்ச் 2006 (இளந்திரையன் [ilan19thirayan@yahoo.ca])

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *