என்னைப் போல் ஒருவன்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 12,922 
 

அவள் தன் புருசனைப் பார்த்து, “தா… சும்மா கிட!” என் றாள். புருசன், “சீ… கம்னு கிட!” என்றான். அவர்கள் ஏழு வயதுப் பையன், “இது இன்னடா பேஜாரு!” என்றான்.

“இந்தாம்மே… இப்ப இன் னான்றே?”

“இன்னாய்யா முறைக்கிறே..! இஸ்டமில்லாட்டி உட்டுட்டுப் போயேன்… இன்னாமோ உன்னை நம்பித்தான் நான் கீரா மாதிரி!”

“சீ… கய்தே! இன்னா தெனா வெட்டு இருந்தா இப்படி பேசுவே நீ!” என்று கோபமாகக் கூறி, அரு கிலிருந்த அரிவாளை எடுத்தான் அவன். பக்கத்திலிருந்த தேங்கா யையும் எடுத்து ஒரே சீவாகச் சீவினான். இளநீர் குடித்துவிட்டு வெளியேறிவிட்டான். அவன் கீழே அலட்சியமாக வீசி எறிந்து விட்டுச் சென்ற தேங்காயை அவள் கையில் எடுத்து உடைத் துக் கொஞ்சம் சாப்பிட்டாள். பையனுக்கும் கொடுத்தாள்.
அடுத்த நாள், அந்த வீட்டில் பையன் கண் விழித்து எழுந்த போது, தாயின் பக்கத்தில் வேறொருவன் படுத்துக் கிடந் தான்.

“யாரம்மா இது?” என்றான்.

“இவன்தாண்டா இனிமே உங்கப்பன்!” என்றாள் அவள்.

“அப்பாவா? நம்ம அப்பாவா?”

“அவன் பூட்டான்! இவன் வன்ட்டான். கம்னு கிடறா! இந்தா, கஞ்சி தண்ணி. குட்சிட்டு வெளியிலே போய்ட்டு வாடா!”

“அம்மா… நீ…” – அந்தப் பிஞ்சு உள்ளத்திலே விவரிக்க முடியாத வேதனை.

“சீ! உங்கப்பனுக்குப் பொறந்த வன்தானே நீ… அதே திமிரு! கேல்வியா கேக்கறே… கய்தே… போடா வெளியிலே! இனிமே ஊட்டுப் பக்கம் வந்தே, தோலை உரிப்பேன்!” என்று கத்தினாள். இந்தச் சத்தம் கேட்டு, அந்தப் புதியவன் எழுந்துவிட்டான்.

“இன்னாம்மே கெலாட்டா?” என்றான்.

அவள் அவனை முறைத்துப் பார்த்தாள். “இன்னா கெலாட் டாவா இருந்தா உனுக்கின் னாய்யா? எனக்கும் என் மவனுக் கும் ஆயிரம் இருக்கும்! நீ கம்னு கிடப்பியா. அத்த உட்டுட்டு…”

அந்தப் பையன் மிரள மிரள விழித்துவிட்டு, வெளியே சென்று விட்டான். அவள் ‘ஓ’வென்று அழ ஆரம்பித்துவிட்டாள்.

“இன்னாம்மே, ஏன் அளுவறே? தா… இன்னா ஆயிடிச்சு இப்ப… ஏம்மே கூவறே… கோஸ்டம் போடாதே… தா!”

“என்னைத் தொடாதேய்யா..! எல்லாம் உன்னாலேதான். நீ ஏன்யா வந்தே..? பூடு…பூடு…” என்று கத்தினாள்.

“இன்னாமே இது, இப்படிச் சொல்றே? வா, ரெண்டு பேருமா பூடுவோம்…” என்று அவன் அவள் கையைப் பிடித்தான்.

பூடுவதா, பூடாமல் இருப்பதா என்று புரியாமல் தவித்தாள்.

“ஆமா… இப்ப உன் பெஞ்சாதி எங்கேய்யா கீரா?”

“உம் புருசனோடதான்!”

“அடப் பாவி!” என்றாள்.

அப்போது அவள் புருசன் வந்துவிட்டான். “யேண்டி! இன் னாடி பாவியைக் கண்டே நீ?”

“ஊராமுட்டான் பெஞ்சா தியைக் கூட்டிக்கினியே, நீ பாவி இல்லாமே இன்னாய்யா?”

“அப்ப இவன்கூட நீ கீறியே, இதுக்கு இன்னா சொல்றே?”

“இவன்கூட நான் இருந்தா, ஊராமுட்டான் பெஞ்சாதியைக் கூட்டிக்கின இவன்தான் பாவி. நான் இன்னாத்தக் கண்டேன்!”

அதற்குள் அந்த ஆளின் பெஞ்சாதி வந்து, “யோவ்… வாய்யா ஊட்டுக்கு! நடந்தது நடந்து போச்சு” என்று அவனை அழைத் துப்போய்விட்டாள்.

அப்போது மகன் வந்தான். “நயினா நயினா!” என்று அப்பா வைக் கட்டிக்கொண்டான். “வாடா ராசா” என்றான் புருசன். “நம்ம மவன்” என்றாள் அவள்.

“சரி சரி, இப்ப இன்னா இப்ப? அவன் யாரு… என்னைப் போல ஒருத்தன். உடு..!” என்றான் அவன்.

பையன் குளிக்கச் சென்றான். அவள் பையன் தலையில் தண் ணீர் ஊத்தினாள். அவள் பாவம் தீர்ந்தது!

– ‘சோ’ விகடனில் 1970-இல் எழுதிய ஆறாம் நவரச(!)க் கதை (ரியலிசக் கதை)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *