எதை விதைக்கிறோமோ…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 7, 2018
பார்வையிட்டோர்: 5,983 
 

சிறுவன் ரகுராமனுக்கு தாத்தா பாட்டி என்றால் ரொம்பப் பிடிக்கும். தாத்தாதான் அவனுக்கு ஸ்லோகங்கள், புராணக் கதைகள், நீதிக்கதைகள் நிறைய சொல்லிக் கொடுப்பார். தவிர, இரவு அவன் தூங்கும்முன் நிறைய அம்புலிமாமா கதைகள் சொல்லித் தூங்க வைப்பார்.

ஆறாவது படிக்கும் ரகுராமன் பள்ளியிலிருந்து வந்ததும் அவனுடைய வீட்டுப் பாடங்களை அக்கறையுடன் சொல்லிக் கொடுத்து, அதைச் செய்ய வைப்பார்.

பாட்டி அவனை தினமும் குளிப்பாட்டி, தலைமயிரை வகிடு எடுத்து வாரிவிட்டு, ஸ்கூல் யூனிபார்ம் அணிவித்து, சாக்ஸ், ஷூ போட்டுவிட்டு ஸ்கூல்பஸ் வந்ததும் பொறுப்பாக ஏற்றிவிட்டு டாட்டா கண்பிப்பாள். அவன் திரும்பி வந்ததும் யூனிபார்மை களைந்து வேறு உடை போட்டுவிடுவாள்.

அதுதவிர பாட்டி ரகுராமனுக்கு விதவிதமாக சமைத்துப் போடுவாள். வித்தியாசமான தின்பண்டங்கள் செய்து தருவாள். அவற்றை வாஞ்சையுடன் ஊட்டி விடுவாள். ரகுராமன் அவற்றை சப்புக்கொட்டி வக்கணையாக சாப்பிடுவான். ராமாயணம், மஹாபாரதம் கதைகளை ரசனையுடன் சொல்வாள்.

இவ்வளவு அன்பாக இருக்கும் தாத்தா பாட்டியை சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு ரகுராமனின் பெரியப்பா வந்து கூட்டிச்சென்று விடுவார். பெரியப்பா இருப்பது பாலவாக்கத்தில். ரகுராமன் பெற்றோர்களுடன் குடியிருப்பது நங்கநல்லூர். அதன்பிறகு பாட்டியும் தாத்தாவும் பெரியப்பா வீட்டில் ஒருமாதம் இருப்பார்கள்.

சரியாக ஒருமாதம் முடிந்ததும், அவனது அப்பா, பெரியப்பா வீட்டிற்குச் சென்று, தாத்தா பாட்டியை அழைத்துக்கொண்டு வருவார். இதேமாதிரி, அடுத்தமாதம் பெரியப்பா வருவார். ஒருநாள் தாமதமானாலும் அப்பா பெரியப்பாவுக்கு போன் செய்து வரவழைத்து விடுவார். அப்பா போன் செய்ய மறந்துவிட்டால், அம்மா அப்பாவை புடுங்கி எடுத்து விடுவாள்.

இது சிறுவன் ரகுராமனுக்கு புரியாத புதிராகவும் எரிச்சலாகவும் இருக்கும்.

காரணம், அவனுடைய அடுத்த வீட்டு நண்பன் டேவிட்டுக்கும் பெரியப்பாவும், இரண்டு சித்தப்பாக்களும் இருக்கின்றனர். ஆனால் டேவிட்டின் தாத்தாவும் பாட்டியும், அவன் வீட்டில்தான் எப்போதும் இருப்பார்கள். ஏதாவது விசேஷங்களின்போது எல்லோரும் அவன் வீட்டில் ஒன்று கூடுவார்கள். அவர்கள் வந்தால் ஒரே கூத்தும், கும்மாளமும், சிரிப்பும்தான்…

அதைப் பார்க்கும்போது, தன் வீட்டில் பெரியப்பாவும், அப்பாவும் சிரித்துப் பேசியதுகூட கிடையாது என்பதை நினைக்கையில் ரகுராமனுக்கு மிகுந்த ஏக்கமாக இருக்கும்.

தவிர, ரகுராமனின் அம்மா அவனுடைய தாத்தா, பாட்டியிடம் எப்போதும் சிடுசிடுவென இருப்பாள். அவர்களை தூக்கி எறிந்து பேசுவாள். பாத்திரங்களை ‘நங் நங்’ என்று வேண்டுமென்றே சப்திப்பாள்.

இதயெல்லாம் பார்த்துக்கொண்டு அவனது அப்பா பொறுமையாக இருப்பார்.

ஒருமுறை பெரியப்பா எல்டிஏ எடுத்துக்கொண்டு குடும்பத்துடன் காஷ்மீர் சென்றுவிட்டார். அதனால் அந்தமாதம் அவரால் தாத்தா பாட்டியை அழைத்துச் செல்ல பத்து நாட்கள் தாமதமாகிவிட்டது. அம்மா, அப்பாவை அந்தப் பத்து நாட்களும் நை நை என்று படுத்தி எடுத்துவிட்டாள். அதன்பிறகு பெரியப்பா அந்தப் பத்து நாட்களை ஈடுசெய்தார்.

தாத்தா பாட்டி வீட்டில் இல்லாத நாட்களில், ரகுராமன் அம்மாவின் முகம் எப்போதும் மலர்ந்து இருக்கும். சிரித்துக்கொண்டே இருப்பாள். காலை ஏழு மணியிலிருந்து டிவியின் சேனல்களை மாற்றி மாற்றி ஜோஸ்யம், ராசிபலன்கள் பார்த்துக் கொண்டிருப்பாள். மாலை மற்றும் இரவு நேரங்களில் வரிசையாக டிவியில் சீரியல்கள் பார்த்துக் கொண்டிருப்பாள்.

ரகுராமன் அந்த தினங்களில் பாவம் தானே குளித்து, யூனிபார்ம், ஷூ போட்டுக்கொண்டு பள்ளிக்கு ரெடியாக வேண்டும். பள்ளிவிட்டு வந்தால் அம்மா தின்பண்டங்கள் எதுவும் தரமாட்டாள். இரவுச் சாப்பாடும் பாட்டியின் கைவண்ணத்தில் இருக்காது என்பதால், ரசிக்காது.

அவனுக்கு எப்படா சீக்கிரம் அடுத்தமாதம் வரும், தாத்தா பாட்டி வருவார்கள் என்று பயங்கர ஏக்கமாக இருக்கும்.

வருடக்கணக்கில் இந்த நிலைமை தொடர்ந்தது….

ரகுராமனும் தற்போது எட்டாவது வந்துவிட்டான்.

அவனுக்கு அப்பாவும் பெரியப்பாவும், தாத்தா பாட்டிக்கு ஆகும் செலவை கணக்குப் பார்த்து பைசா பைசாவாக ஷேர் பண்ணிக் கொள்கிறார்கள் என்கிற உண்மை நன்கு புரிந்தது. ஒருநாள் தாமதித்தாலும் பெரியப்பாவும், அப்பாவும் முகம் சுளித்துக் கொள்கிறார்கள்…..அம்மா, தாத்தா பாட்டியை மதிப்பதேயில்லை என்கிற உண்மைகளும நன்கு உரைத்தது.

ஒருமுறை அவனது அம்மா குடும்ப விஷயமாக சொந்த ஊரான மதுரைக்கு ஒருவாரம் சென்றிருந்தாள். அந்த ஒருவாரத்துக்கு வேண்டிய புளிக்காய்ச்சல், பருப்புப்பொடி, வெத்தக்குழம்பை அம்மா தயார்செய்து வைத்துவிட்டுப் போனாள். அம்மா திரும்பும்வரை, அப்பா சுடச்சுட சாதம் மட்டும் வைத்தால் போதும்.

தாத்தாவும் பாட்டியும் அந்த தினங்களில் பெரியப்பா வீட்டில் இருந்தனர்.

அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை….

அப்பாவுக்கு நாக்கு செத்துவிட்டதால், தன்னுடன் ரகுராமனை நங்கநல்லூர் முருகன் இட்லி கடைக்கு அழைத்துச் சென்றார். இருவரும் விதம் விதமாக டிபன் வாங்கிச் சாப்பிட்டார்கள். சாப்பிடும்போது அப்பா ரகுராமனிடம் “நாம ஹோட்டலுக்கு வந்ததை அம்மாவிடம் சொல்லாதடா” என்றார்.

“சரிப்பா, நான் அம்மாகிட்ட எதுவும் சொல்லமாட்டேன்.”

“நல்லா படிடா….நீ பெரியவனானதும் என்னவாகப் போறே?”

“பெரிய்ய்ய கிரிக்கெட் ப்ளேயராக ஆவேன்பா ….வீராத்கோய்லி மாதிரி.”

அப்படிச் சொல்லிவிட்டு திடீரென எதோ ஒரு சீரியஸ் யோசனையில் ஆழ்ந்துவிட்டான்.

“என்னடா யோசனை?”

“இல்லப்பா… எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்டு…”

“என்னன்னு சொல்லுடா.”

“நான் உங்களுக்கு ஒரே பையன்…நான் பெரியவனானவுடனே உன்னையும் அம்மாவையும் மாதா மாதம் எங்கப்பா கொண்டுபோய் விடுவேன்? உனக்கு பெரியப்பா மாதிரி, எனக்குத்தான் யாருமே கிடையாதே?”

அப்பா பதில்சொல்லத் தெரியாது விக்கித்துப்போனார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *